செவ்வாய், 1 அக்டோபர், 2013

 கல்லூரியில் படித்த காலத்திலேயே பேச எழுத இலக்கியஇயக்கமாக இயங்க ஆரம்பித்துவிட்டேன் என்றாலும், உலகம் புரிந்து, நம் சமூக நிலையுணர்ந்து எழுதியதும் பேசியதும் 1990களுக்குப் பிறகுதான் என்பது நானறிந்த உண்மை.


அப்படி கவிபாடித் திரிந்து(?)வந்த என்னை முதன்முதலாக வெளிமாவட்டத்துக்கு –புதுக்கோட்டைக் கவிஞர்களையே 80களின் இறுதியில் அழைத்து என்தலைமையில் கவியரங்கம் நடத்தச்சொல்லி அழைத்தவர் திருநெல்வேலி தமுஎச மாவட்டச் செயலராக இருந்த –இன்றைய பிரபல எழுத்தாளரும் தமுஎகசவின் மாநிலத் தலைவருமான ச.தமிழ்ச்செல்வன் (அப்பவே எங்களின்  குழுவிற்கு ரூ.2000 தந்ததாக நினைவு!) அங்குபோய்க் கவிபாடியதை விட, அங்கிருந்து கற்றுக் கொண்டு வந்த்துதான் எனக்குள் பெரிய மாற்றங்களை நிகழ்த்தியது என்பதும் உண்மை உண்மை!

திருநெல்வேலித் தமுஎச குழு அப்படி என்னைக் கவர்ந்த காரணம், எனக்குள் இருந்த கவிதை, பேச்சு, பாடல், நாடகம், அமைப்பு என அனைத்திற்கும் அங்கே பெருந்தீனி கிடைத்ததுதான்!
கரிசல் கிருஷ்ணசாமி-கோவிந்தன் குழுவின் மண்மணக்கும் பாடல்கள், சிருஷ்டி கலைக்குழுவின் எதார்த்த நாடகங்கள், பழகும் முறையில் இவ்வளவு தோழமையா என்று வியக்க வைத்த தமிழ், அப்பண்ஸ், உதய், கிருஷி என எல்லாரும் அப்போது திருநெல்வேலியிலிருந்துதான் எனக்கு –அவர்களுக்கே தெரியாமல்- கற்றுக் கொடுத்தார்கள்! அதன்பிறகு சிருஷ்டி கலைக்குழுவை புதுக்கோட்டைக்கு அழைத்து நாலைந்து ஊர்களில் நாடகம் போட்டோம். கரிசல் கிருஷ்ணசாமி மற்றும் முகவை கே.ஏ.குணசேகரனை அழைத்து ஊர் ஊராகப் பாடவைத்தோம். பேச்சாளர் பா.கிருஷ்ணகுமாரை அழைத்து மாவட்டம் முழுவதும் பேச வைத்தோம்! நாங்களும் நாடகம் மற்றும்  பாடல் குழுக்களை ஊர்ஊராகச் சென்று உருவாக்கினோம்...

அந்த நெல்லைச் சீமையின் இலக்கிய மணம் பாரதியில் தொடங்கியது...திகசி, கி.ரா., வண்ணதாசன், கோணங்கி எனத் தொடர்ந்தது ஒரு பக்கமிருக்க ச.தமிழ்ச்செல்வன், உதயசங்கர், அப்பணசாமி, நாறும்பூநாதன் எழுத்துகளிலும், சார்லி முதலான நடிப்புக் கலைஞர்கள், கரிசல் கிருஷ்ணசாமி திருவுடையான் முதலான இசைக்கலைஞர்கள் பால்வண்ணம், கிருஷி முதலான சிறந்த இயக்க அமைப்பாளர்கள் என இன்றும் தொடர்வதுதான் இதை நான் எழுதக்காரணம்.

சும்மா வெட்டியா அரட்டைக்காக இவர்கள் எழுதுவதில்லை....
எழுதினா இதுமாதிரி எழுதணும் என்று 
சொல்லாமல் சொல்லித்தரும் எழுத்து இவர்களுடையது...

இப்பவும் இணைய தளங்களில் விடாமல் இயங்கும் இவர்களிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டது இவர்களுக்கே தெரியாது. (தெரிந்தால் என்னத்த... கத்துக்கிட்ட மாதிரி தெரியலயே என்று என்னைக் கிண்டலடிப்பார்களோ என்றுதான்) அவர்களிடமே இதுவரை சொன்னதில்லை!

சுஜாதாவின் அம்பலம் இணைய இதழ் தொடங்கிய சிறிது காலத்திலிருந்து அதில் தனது இணையப் பயணத்தைத் தொடங்கிய எழுத்தாளர் அப்பணசாமி இன்றும் அருமையாக எழுதிவருகிறார். நமது இணைய எழுத்தாள நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டும் -(அருகிலுள்ளபடம்)  http://appanasamy.blogspot.in/

எட்டு சிறுகதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், ஒரு குழந்தைப் பாடல்தொகுப்பு,  எட்டு மொழிபெயர்ப்பு நூலகள் என, இன்றும் எதார்த்த எழுத்துலகில் கம்பீர நடை போட்டுவரும்  (மேலே முதலில் இருக்கும் படத்தில் உள்ள) எழுத்தாளர் உதயசங்கர் வியப்பூட்டுகிறார் - http://udhayasankarwriter.blogspot.in/

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் (நடுவில் இருக்கும் படம்) தனது வலைப்பக்கத்தில் எழுதி ஓராண்டு ஆகப்போகிறதே என்பதுதான் எனது வருத்தம்... எழுத்தாளர்சங்க -இயக்க- வேலைகள் இருக்கலாம் ஆனால் அதனால் எழுதாமல் இருப்பது சரியல்லவே? ஏனெனில், உலகமானது - எழுத்தாளர் சங்கத்தை விடவும் பெரியது தோழரே! 
                     --------------------- 
எழுதினா இவங்க மாதிரி எழுதணும்... என்பதுதான்
இந்தவாரம்
நமது வலை நண்பர்களுக்கு நான் சொல்லும் செய்தி.

10 கருத்துகள்:

 1. இவர்களிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டது இவர்களுக்கே தெரியாது. //உங்களின் தன்னடக்கம் புரிகிறது

  பதிலளிநீக்கு
 2. உண்ட சோற்றுக்கு இரண்டகம் விளைக்கின்ற இந்நாளில், ஏகலைவனாக இருந்து மற்றவர்களின் புகழ் பாடுகிறீர்களே! வாழ்த்துக்கள். எவ்வளவோ கவனமாகப் படித்தாலும் சில நல்ல வலைப்பூக்கள் நம் கண்ணில் படாமல் தவறிவிடுவதுண்டு. உங்கள் நினைவூட்டல் பயனுள்ளது. அப்பணசாமி அவர்களைப் பற்றி இப்போது தான் அறிந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. சிறந்த எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் ஐயா. நன்றி இருவரையும் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. உங்களின் பாராட்டும் குணத்தை மிகவும் பாராட்டுகிறேன் ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான எழுத்தாளர்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிங்க.. நாங்களும் அவர்களை தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
 6. இவர்களைப் போல எழுத வேண்டும்! என்று சிறப்பித்து பாராட்டியமை நன்று! முயற்சிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 7. நல்ல எழுத்தாளர்களை அறிமுகம் செய்ததற்கும், மனம் திருந்த பதிவிற்கும் நன்றீங்க அய்யா.எழுத்தாளர் தமிழ்செல்வன் அய்யா அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் எனும் தங்களது வேண்டுகோளே எனது விருப்பம். ஏற்றி விட்டவர்களை எட்டி உதைக்கும் இக்காலத்தில் தனது ஏற்றத்திற்கு ஒரு வகையில் துணை புரிந்தவர்களை மறவாத தங்கள் குணம் வியக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 8. சிறந்த எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள்...

  திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் நான் கல்லூரியில் படிக்கும் போது தேவகோட்டை கலை இலக்கியப் பெருமன்ற விழாவுக்கு வந்ததாக ஞாபகம்...

  பதிலளிநீக்கு
 9. முன்னத்தி ஏர்களாய் இருக்கிற பலரில் இன்றும் முன்னானவர்களாய். தமிழ்ச்செல்வன்,உதயசங்கர்,கிருஷி இன்னும், இன்னுமானவகளை இந்த இலக்கியப்பரப்பு மறக்காது என்றென்றுமாய்/ நல்ல பதிவு வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 10. கட்டைவிரலைக் காணிக்கை கேட்காத துரோணாச்சாரியார்களை மானசீகமாகக் கொண்டு இலக்கிய ஏணியில் ஏறிக் கொண்டிருக்கும் ஏகலைவனாக.....

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...