மே-தை மாதமே!

(மே தின வாழ்த்துக் கவிதை)


எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு,
         
எட்டுமணி நேர உறக்கம் - இதை
கெட்டமன மூலதன வர்க்கமே! தருகஎனக்
         
கேட்டெழுந்த போரின் தொடக்கம்             (1)


வேர்வையில் நனைந்த உடல், வேதனை சுமந்த மனம்
         
வீதியில் வெடித்த முழக்கம் - அந்த
ஊர்வலம் உழைக்கும் வர்க்கம் கேவலக் கடல்கடக்க
         
ஓங்கு கலங்கரை விளக்கம்.                         (2)

மேதினி முழுதும்இந்த மேதினம் நினைவில் எழும்
         
மெய்சிலிர்த்துக் கைஉயர்த்து மே! – தமிழ்
மாதத்தில் உழவனுக்கும் ஓர்திங்கள் நினைவில் எழும்
         
மாதம்உண்டு தை-மாத மே!                           (3)

சேற்றிலே கிடந்துழன்று நாற்றிலே உடன்துயின்று
         
காற்றிலே உயிர் வளர்த்தவன் - புதிய
ஏற்றத்தை அவன்கரத்தில் மாற்றத்தை அவன்கருத்தில்
         
என்று, 'தை'யை மாற்றிவரும் மே!            (4)

ரெண்டு காலிலே நடந்துசென்றுநாம் சமர்புரிந்து
         
வென்றுமீள மே உணர்த்து மே!அன்று
குண்டு போட்டழிக்க வந்த கூட்டமே நடுங்க ரத்தக்
         
கொடியெடுத்த தை,உணர்த்து மே!            (5)

முன்புபோல அல்ல இன்று,’மூண்டெழுந்த போர்கள் வென்று
         
முன்நடக்கும் மே முழங்கு மே! – அந்த
நன்மையை உணர்ந்து மே-தை ரெண்டையும் இணைத்தெழுப்ப
         
நமதுவர்க்கப் போர்தொடங்கு மே!            (6)

பாரதத்து வர்க்கசமர்த் தேரினை நடத்தவரும்
         
படைவியூக மே! தை-மாதமே! – ‘இந்த
ஈரெழுத்து நமதுநாட்டுப் போரெழுத்துஎன்றஞானம்
         
ஈந்தமாதம்மேதைமாத மே!           (7)
------------------------------------------------------- 
உழவனுக்கு அரிவாள்,
தொழிலாளிக்குச் சுத்தியல்
என்பதால்தான்
செங்கொடியில் இரண்டும்
இணைந்து எழுகின்றன!
மேஉலகத் தொழிலாளர் தினம்,
தைதமிழ் உழவர் தினம்.
தொழிலாளரும் உழவரும் இணைந்து நடக்கவேண்டும். (இதைரெண்டுகாலில்நடப்பது என்பார் சீனத் தலைவர் மாசே துங்) இந்தியச் சூழலில், அப்படி நடந்தால்தான் 
இந்திய-தமிழ்ச் சமூக மாற்றம்
சாத்தியமாகும் என்பதே சத்தியமாகும்.

அந்த நோக்கில் இந்தக் கவிதை...
எனதுபுதிய மரபுகள்தொகுப்பிலிருந்து...
கவிதை பழசுதான்... ஆனால்
நிலைமை பழசைவிடப் பழசாக இருக்கும் போது...
உழைப்பாளர் பிரச்சினைகள்
புதுசைவிடப் புதுசாக
வந்துகொண்டே இருப்பதனால்...
இம் மறுபதிவு

----------------------------------------------------------------------------- 

7 கருத்துகள்:

  1. இன்னமும் பழசாகி பழுதாகிப் போகும் போல...

    பதிலளிநீக்கு
  2. மே தை இரண்டையும் கவிதையில் இணைத்த மேதை எங்கள்
    முத்து நிலவன் ஐயாவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. பாட்டாளிகள் தின கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  4. மேதினி சிறக்க மே தினத்தில் சபதம் ஏற்போம்.கவிஞருக்கும் மே தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. இதுவா பழம் கவிதை நண்பரே? என்றும் பழசாகாத கருத்தல்லவா இக்கவிதையின் உட்பொருள்?

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  6. மே என்று முடியும் வரிகள் அருமை

    பதிலளிநீக்கு
  7. அய்யா நற்கருத்து! மே-தை மாதமே!👏👏🙏

    பதிலளிநீக்கு