இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்? -– எமது போராட்ட விளக்கம்


இந்தியும் தமிழும்... 
தமிழின் வயது யாருக்கும் தெரியாது! ஏனெனில், “இவள் என்றுபிறந்தனள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்!” 5,000ஆண்டுகளுக்கும் மேலானது என்பதை ஊரறியும், உலகறியும் மொகலாய அரசன் கோரிமுகமது இந்தியாவின் வடமேற்கு பகுதிகளைக் கைப்பற்றி, அங்குத் தமது ஆட்சியை நிலைநாட்ட தில்லியை மையமாகக் கொண்டு ஆளத் தொடங்கியபோது உருதுமொழியுடன் பிராகிருதம் கலந்துபேசிய மக்களிடம் உருவான கலப்பு மொழியே இந்தி மொழி. இதன் காலம் கி.பி.850!  


இந்தி இந்துக்களின் புனித மொழி இந்துக்கள் பேச என்ன தயக்கம்? 
உருதுக்கும் இந்திக்கும் பெரிய வித்தியாசமில்லை! கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான். ஒரே வேறுபாடு , இந்தியின் எழுத்து முறை 'தேவநாகரி', உருது மொழியின் எழுத்து முறை அரபி மற்றும் பாரசீக எழுத்து முறை, அவ்வளவே! ஆக, இந்தி இந்துக்களின் புனித மொழியோ பெரும்பான்மை மொழியோ அல்ல! 

இந்தியை வெளிநாட்டிலுள்ள இந்தியர்கள் எல்லாம் பேசுகிறார்களே நாம் ஏன் தயங்க வேண்டும்?  
இந்தியும், உருதும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதால் பாகிஸ்தானில், வளைகுடா நாடுகளில், சவுதியில் ஆப்கானிஸ்தானில் பேசப்படுகிறது. வளைகுடா நாடுகளில், இந்தியாவின் வடமாநிலங்களில் இருந்து வேலைக்கு வரும் வட இந்தியரை வேலை வாங்கவே இந்தி பெரிதும் பேசப்படுகிறது என்பதே உண்மை

இந்திமொழி  இந்தியா முழுவதும் பேசப்படுகிறதே!
இது பச்சைப் பொய்-
இந்திமொழி, இந்தியாவின் பெரும்பாலான மாநில மக்களின் தாய்மொழியாக இல்லை என்பதே உண்மை! தமிழ்நாடு புதுச்சேரியில் தமிழ்போல, கேரளத்தில் மலையாளம், ஆந்திரா,தெலுங்கானாவில் தெலுகு, கர்நாடகாவில் கன்னடம் போல, மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, பீகாரி, வங்கம், ஒடிசி, காஷ்மீரி, கொங்கனி, சிந்தி, என மொழிவழி மாநிலங்கள் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மாநிலப் பிரிவுகளின் அடிப்படையாயின

இப் பிரிவுகளைத் தவிர மேலும் பல மொழிப்பிரிவுகள் சேர்ந்த கூட்டுக் கலவை தான் இந்திமொழி!  வடமாநிலங்களின் சில நகரங்களில் மட்டுமே  சிலபிரிவு இந்தி பேசப்படுகிறது. மற்ற பகுதிகளில் பல உட்பிரிவு இந்தி மொழிகள் தான் பேசப்படுகிறது
நிலைமை இவ்வாறு இருக்க  இந்தியா முழுவதும் உள்ள பலமொழி பேசும் பலதேசியஇன மக்களை இணைக்கும் பாலமாக இந்தியைப் பேசுவதும் எழுதுவதும் சமக்காளத்தில் வடிகட்டிய பொய்யே அன்றி வேறில்லை!

பலபிரிவுகளைச் சேர்த்தாலும் தாய்மொழியாக இல்லாதபோதிலும் அதிகபட்சம் 40விழுக்காடு மக்களே பேசும் இந்தி மொழியை எஞ்சியுள்ள 60விழுக்காடு மக்களையும் ஏற்கச்சொல்லி வற்புறுத்துவது வன்முறையல்லவா? ஒவ்வொன்றும் 6கோடிக்கும் அதிகமானோரால் பேசப்படும் வங்க, மராட்டி, தெலுங்கு, தமிழ் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இந்தியர் இல்லை என்கிறீர்களா

அல்லது மொத்தமாக சுமார் 75கோடிப் பேருக்கும் அதிகமானோரின் தாய்மொழியாக இல்லாத இந்தியை அவர்கள் எல்லாம்தாய்மொழியை விட முக்கியத்துவம் தந்து - ஏற்கவேண்டும் என்பது என்ன நியாயம்? வங்கத்தில் குஜராத்தில் பஞ்சாபில் காஷ்மீரில் திரிபுரா மலைக்காட்டில் உள்ள கிராமத்து மக்கள் இந்தியைப் படித்தே ஆக வேண்டிய அவசியமென்ன வந்தது? அவரவர் தாய்மொழியிலேயே உயர்கல்வி வரை தருவதுதானே நல்லரசின் கடமை? திணிப்பது வெறுப்பையும் எதிர்ப்பையும்தான் வளர்க்கும் என்பது இந்திய வரலாறு தெரிந்தோர்க்குத் தெரியாதா என்ன?

மைல்கற்களில், ஏடிஎம், வங்கி, தொடர்வண்டி ரசீதுகளில், கிராமப் பஞ்சாயத்துக்கு வரும் அரசு ஆணைக் குறிப்புகளில், பள்ளி கல்லூரி- வேலைவாய்ப்புத் தேர்வுகளில் அவரவர் தாய்மொழியன்றி இந்தியைத் திணிப்பது நம்அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானதல்லவா?!

தலைவலித் தைல விளம்பரத்தில் தாய்மொழியில் விளம்பரம் செய்ய முடியும்போது, நாடாளுமன்ற அரசு விவாதங்களை அவரவர் தாய்மொழியில் நிகழ்த்தி, உரியவர் அனைவர்க்கும் மொழிபெயர்ப்பைத் தராமல், அனைவரின் மேலும் இந்தியைத் திணிப்பது ஏன் என்று கேட்கிறோம்

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, சுகாதாரத் துறைகளை அவசரநிலைக்காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றினார்கள், இப்போது அறிவிக்கப்படாமலே இவற்றை மத்திய அரசின் கீழ்க் கொண்டு போகிறார்கள்! நீட் நுழைவுத்தேர்வு இதைப் பச்சையாகக் காட்டுகிறது. அகில இந்திய நீட் நுழைவுத் தேர்வுக்கு சிபிஎஸ்சி படிப்பு அவசியமாம், சிபிஎஸ்சியில் இந்தி அவசியமாம் என்பது மறைமுக இந்தித் திணிப்பன்றி வேறென்ன? A=B, B=C, எனில் A=C என்பதுமுட்டாளுக்கும் புரியுமே?

நாங்கள் இந்திமொழியை எதிர்க்கவில்லை! அது அவரவர் விருப்பம்! ஆனால் ஒரு அரசே திட்டமிட்டு, தாய்மொழிக்கெதிராக, இந்தியைத் திணிப்பதை ஏற்கமுடியாது!

1963 இந்தி எதிர்ப்புப் போரின் முடிவில் நேருவும், 1965இல் சாஸ்திரியும் தந்தஇந்தி பேசாத மாநிலங்களில் அவர்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கும்என்ற வாக்குறுதியை இப்போதைய மத்திய அரசு பட்டவர்த்தமனமாகவும், அராஜகமாகவும் மீறுவது ஏன்?

அடிப்படை வாதிகளின் இந்துத்துவாவுக்கு நெருக்கமானது, இந்தியா முழுவதும் ஒரே விளம்பரத்தில் ஏகபோகப் பொருள்களை விற்பனை செய்ய ஏற்றது என்பதற்கா கத்தானேகார்ப்பரேட்+காவிகளின் கூட்டணித் தந்திரத்தின் அடிப்படைதானேஏக இந்தியாஎனும் இந்தித் திணிப்புத் தந்திர உத்தி?

இந்தியை நாங்கள் வெறுக்கவில்லை, ஆனால் திணிக்கும் முயற்சியை ஏற்கமுடியாது என்கிறோம் எங்கள் தாய்மொழியை விட இந்தி அவசியமில்லை என்கிறோம்இந்தியை ஏற்று அடிமையாக இருஎன்கிறார்கள்! அது முடியாதென்கிறோம்! இது நியாயமா இல்லையா என மக்களே முடிவெடுப்பீர்!

இந்தித் திணிப்புக்கு எதிராக, எம்தமிழ் மக்களே! ஆர்த்தெழுவீர்! இன்று 1930களின், 1960களின் நிலை இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, இன்றைய நிலைமைக்கேற்ப நாமே முடிவெடுப்போம் வாரீர்

முடியழகின் சிறப்பை
மொட்டைத்தலைக்காரியிடம் கேட்கவேண்டிய அவலநிலை,  
ஆறடிக்கூந்தலை அள்ளிமுடியும் பெண்ணுக்கு 
அவசியமில்லை என்கிறோம்!

செந்தமிழே உயிரே நறுந்தேனே
      செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்தேவிடும் என்றன் வாழ்வும்
      நன்னிலை உனக்கெனில் எனக்கும்தானே?“ – பாரதிதாசன்


என்னை எழுத வைத்தமைக்கு நன்றி-  
பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் துண்டறிக்கைக்காக
என்னை இவ்வறிக்கையைத் தயாரிக்கக் கேட்டுக்கொண்ட
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 
மாநிலத் துணைப்பொதுச் செயலாளர்
கவிஞர் இலட்சுமிகாந்தன், சாத்தூர்.
அழகிய பதாகைத் தயாரிப்புக்கு நன்றி-
கருப்பு கருணா, திருவண்ணாமலை
மாநிலத் துணைப்பொதுச் செயலர், தமுஎகச
------------------------------------------------------------------

12 கருத்துகள்:

  1. "கடமை என்ன...?" என்பது நல்லரசு என்றால் அறியும், தெரியும், புரியும்... ஆனால் இப்போது உள்ள அரசு : //மொட்டைத்தலைக்காரியிடம் கேட்கவேண்டிய அவலநிலை //

    பதிலளிநீக்கு
  2. இந்தி திணிப்பு
    முறியடிக்கப்பட்டே ஆக வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  3. மொத்தத்தில் மத்தியில் ஆள்பவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கின்றது ஏதாவது ஒரு சர்ச்சையோடு காலத்தைக் கடத்தவேண்டும் என்பதே இலக்கு.

    த.ம.

    பதிலளிநீக்கு
  4. நான் இந்தக் கருத்தோடு ஒத்துப் போக மாட்டேன். ஆங்கிலத்தை லகுவாக எல்லோரும் பயன்படுத்துகிறோம். அது தமிழ் மொழியில் பல வகைகளில் கலந்து விட்டது. அமெரிக்கா போகும் தமிழனுக்கு ஆங்கிலத்தில் புலமை இல்லாவிடில் அனுமதி இல்லை.

    மத்திய அரசு என்று ஒன்று இருக்கும் வரை, அதன் கீழ் நாம் இருக்கும் வரை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது வெறும் நாடகமே. அடுத்த தலைமுறையினருக்கு தவறான வழி காட்டுதலே ஆகும்.

    பதிலளிநீக்கு
  5. இந்தியை எதிர்ப்பதற்கும், இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் பலபேருக்கு புரிவதில்லை. இந்த துண்டறிக்கையில் இதனை நன்கு தெளிவுபடுத்தி சொல்லியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள், இதிலுள்ள கருத்துக்கள் சரி என நினைப்பவர்கள் அனைவருமே வெறுமே படித்துவிட்டுக் கடந்து செல்லாமல்,மேலே உள்ள தமிழ்மணம் வாக்குப்பட்டையில் வாக்களித்தும், கட்டுரையை முழுவதுமாக நகலெடுத்து அவரவர் வாட்சப் குழுக்களில் பகிர்ந்தும் கூடிய வரை பெரும்பாலானோர் சிந்தனைக்கு இக்கருத்துக்கள் சென்று சேர வழிவகுக்க வேண்டும்! நாட்டுப்பற்று, தனிதனித முன்னேற்றம் எனும் பெயர்களில் வலியுறுத்தப்படுவதால் காவிக் கும்பலின் இந்தித் திணிப்பு, மருத்துவப் பொது நுழைவுத்தேர்வு முதலான முயற்சிகள் பெரும்பான்மை இளைஞர்கள் இடையில் நன்மை அளிக்கும் திட்டங்களாகவே பார்க்கப்படுகின்றன. அதை முறியடிக்க இத்தகைய தெள்ளத் தெளிவான கருத்துக்கள் அவர்கள் பார்வைக்குச் சென்று சேர வேண்டியது இன்றியமையாதது!

    பதிலளிநீக்கு
  7. அழும் குழந்தைக்கு லாலிபாப் வாங்கித்தந்தால் அதன் கவனம் மாறி மிட்டாய் மீது சென்றுவிடும். அதுபோல தேவையற்ற கொள்கைகளை புகுத்துவது ஒரு தந்திரம். தொழில்துறையில், விவசாயத்துறையில், உற்பத்தியை மேம்படுத்த எவ்வித திட்டமோ முயற்சியோ நடைபெறாமல் வாங்கும் லரிப்பணம் எங்கு செல்கிறது என்ற கேள்வி யார் மனதிலும் எழாதபடி கவணமாக திசைதிருப்ப படுகிறது. நாம் அழுத்தும் பிரச்னைகளை விட்டுவிட்டார்கள். நாம்திணிக்கப்படும் பிரச்னைகளின்மேல் கவணம் செலுத்துவதால் ஆட்சியாளர்கள் நிம்மதியாக தொல்னலைதராத மக்களை ஏமாற்ற முடிகிறது. இதுபோன்று பல தேவையற்ற திட்டங்களால் தொடர்ந்து நம்மை தாக்குகிறார்கள். நாமும் மவுனியாய் மயங்கி கிடக்கிறோம். இரண்டு விதத்திலும் அவர்களே ஜெயிக்கிறார்கள். பல இலட்சம்கோடி வரிப்பணம். இரண்டு,நம்மை அவர்கள் மொழி,மத ஜாதி வெறிக்கு அடிமையாக்குவது. நம் அடையாளத்தை முழுவதும் அழிப்பது

    பதிலளிநீக்கு
  8. பிஜேபி அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து ஒற்றுமையுடன் போராடுவோம் தோழரே !!

    M. செய்யது
    துபாய்

    பதிலளிநீக்கு
  9. இந்த திணிப்பால்,நம் மக்களிடம் இருந்து இவர்கள் விலகியே போகிறார்கள் என்பது உண்மை !அதுவே நல்லதும்கூட !

    பதிலளிநீக்கு
  10. இந்தித் திணிப்பா
    எந்தன் மொழியை அழிக்கவா?

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள ஐயா.

    வணக்கம். மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். எளிமையாகவும் உணர்த்தப்பட்டுள்ளது. தமிழில் பேசுவோருக்கும் படிபோருக்கும் அதிக சலுகையும் மதிப்பும் கல்வி மற்றும் பணிநிலைகளில் அதிக முன்னுரிமையும் அளிக்கப்படும் நிலை அரசின் ஆணையாக வெளிவரவேண்டும். மாநிலத்தின் சுதந்திர வெளிக்கு மத்திய அரசு வேலியிடுவதை அதுவும் அடிப்படையிலான தாய்மொழிக்கு எதிரான வேலியிடுவதை ஒருபோதும் அனுமதிக்கவியலாது. தாங்கள் குறிப்பிட்டதுபோல இந்திக்கு எதிரியல்ல நாம். ஆனால் அதன் திணிப்பு எதிர்ப்புக்குரியது.

    பதிலளிநீக்கு