ஓடிக்கொண்டே இருப்போம்!
22-02-2011
அன்று தொடங்கிய
எனது ஒன்பதாண்டு
இணையத் தமிழ்ப் பயணத்தில்
இப்போது,
848 பதிவுகள்
11,744 பின்னூட்டங்கள்
508 பின்தொடர் நண்பர்கள்
உடன், இப்போது
எட்டுலட்சத்தைக் கடந்த
பக்கப் பார்வைகளைத்
தந்தமைக்கு நன்றி
(இதை
எழுதுவதற்குள் -இரண்டு நாளைக்குள்-
மேலும் எழுநூறைத் தாண்டி ஓடுகின்றது!)
பக்தி-ஆன்மீகம்-சோதிடம்-சாப்பாடு-பொழுதுபோக்குப் பற்றி
நான் எழுதியதே இல்லை,
இனி எழுதவும் போவதில்லை!
------------------------------------------------------------
சமூக முன்னேற்றத்திற்கான
எதையும் எளிமையாக
எழுதுவேன்!
இதுவே எனது பாணியும் பணியுமாகும்!
------------------------------------------------------------
ஐயா அருள்முருகன் போல அரிதானவற்றை எழுதவும்,
மதுரை செந்தில்குமார் போல
அருஞ்செய்திகளை எழுதவும்,
தில்லி வெங்கட் நாகராஜ்போல
பயணக்குறிப்பு எழுதவும்,
அமெரிக்க விசு, ஆல்ஃபி போல
நகைச்சுவை எழுதவும்,
திண்டுக்கல் தனபாலன் போல குறள்,இசை தந்து எழுதவும்,
சென்னை முரளிதரன் போல
எளிமையாக எழுதவும்,
சகோ.துளசி,கீதா,
KSRவைசாலிபோல இணைந்தெழுதவும்,
திருச்சி விஜூ, சென்னைப் புலவர் போல மரபு
எழுதவும்,
வேலூர்இராமன், காவிரிமைந்தன்போல
அரசியல்எழுதவும்,
புதுகை கஸ்தூரி, ஸ்ரீமலை போல ஆங்கிலம் எழுதவும்
மும்பைபுதியமாதவி, புதுகைமு.கீதாபோல
பெண்ணியம்எழுதவும்,
யு.எஸ்.மதுரைத்தமிழன் போல
கிண்டலாக எழுதவும்,
மதுரை முனைவர் வா.நேரு போல பகுத்தறிவு எழுதவும்,
புதுகை மைதிலி, செல்வா போல
புதுக்கவிதை எழுதவும்,
அட்லாண்டா கிரேஸ் போல
மொழியாக்கமாக எழுதவும்,
கனடா பாரதிதாசன் போல
இலக்கணம் எழுதவும்,
துபை பரிவை சே.குமார்
போல சிறுகதையாக எழுதவும்,
தஞ்சை ஜம்புலிங்கம் ஐயா போல களஆய்வுகளை
எழுதவும்,
கரந்தை ஜெயக்குமார் போல நாடகபாணிஎழுதவும்
காரைக்குடி தேனம்மை போல
தொடர்ச்சியாக எழுதவும்,
செங்கை நீச்சல்காரன் போல கணிமை எழுதவும்
எனக்கும் ஆசைதான்…
ஆனால்… என்ன செய்ய?
நமக்கு அப்படியெல்லாம் வந்தால்தானே எழுத
முடியும்?
(என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்’றோம்?
நமக்கும் இதெல்லாம் எழுத வரணும்ல?)
ஆனால், சங்கஇலக்கியம்
தொடங்கிச்
சமகால இலக்கியம் வரை, மேற்காணும்
இவர்அனைவரிடமிருந்தும் கற்றுக்கொண்டு
எழுத, விடாமல் முயற்சி
செய்துகொண்டே இருக்கிறேன்…!
----------------------------------------------
நம்மோடு பயணித்த நண்பர்களில்,
புதுக்கோட்டைத் தோழர்கள் வைகறை, குருநாதசுந்தரம்,
திருச்சி நண்பர் தமிழ்இளங்கோ
மதுரை சீனுஅய்யா
ஆகிய இனியவரை இழந்தது
மறக்கமுடியாத பெருந்துயரம்!
----------------------------------------------------
இதில் “சிலரின் படைப்புகள்
தரமாக இருந்தும் பார்வையாளர் எண்ணிக்கை இவர்களுக்கு ஏன் அதிகரிக்கவில்லை?” என்று நான்
அவ்வப்போது குழப்பமும் கவலையும் அடைவதுண்டு!
சோதிடம், ஆன்மீகம், சினிமா, ஜோக்குகளை
மட்டுமே வெளியிடும் சிலரின் பார்வையாளர் எண்ணிக்கை எகிறுவதைப் பார்க்க
இந்தச் சமூகத்தின் மனநிலை பற்றி
வருத்தப்படுவதும் உண்டு!
தமிழ்மணத்தை இப்போது பார்க்க முடிவதில்லை
என்பது பெருந்துயரம்
இனித் தொடர்ந்து எழுதுவேன்... வேறு வழி?
என்றாலும், எனது பதிவு இடப்படும் நாளில் சுமார் 500 பக்கங்களும், மற்றநாள்களில் சுமார் 250பக்கங்களும்
பார்க்கப்படுவது ஒன்றும் சிறிய செய்தியல்ல! சிறப்புப் பதிவெனில் ஒரேநாளில் 2000 பக்கம்
வரையும் பார்க்கப் படுவதுதான் எனக்கே நம்பிக்கையோடு வியப்பளிக்கிறது!
(தமிழுக்கு விளம்பர உதவி வந்துவிட்டதாக
அறிகிறேன்.
ஆனால், அதில் வரும் ரம்மி போலும் ராஸ்கல்
விளம்பரங்களைத் தவிர்த்து உரியவற்றை மட்டும் பெற முடியுமா கஸ்தூரி?)
“சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல
தமிழ்
வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்றப்
பாதி
துலங்குதல் இல்லை”
– பாரதி தாசன்.
--------------------------------------------------
(பி.கு.
என் நெடுங்கால இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.
ஏன்
மன்னிப்புக் கோருகிறேன் என்பதை என் புதிய நண்பர்கள் பழைய நண்பர்களிடம் கேட்டு
எனக்கும் சொல்லவும்!)
---------------------
சரி
இப்போது நாளை மறுநாள்
(வரும் வெள்ளியன்று)
26-6-2020 காலை 10.30மணிக்கு
ஒரு நேரலை உரை!
கலந்துகொள்ள அவசியம் வருக!
கருத்துகளை
இப்பதிவின் பின்னூட்டத்திலும் தருக!!