தமிழகத்திலும் போலிகளின் “வியாபம்“ ஊழல் நடக்கிறதா?


தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் போலி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் எனும் அதிர்ச்சித் தகவல் வருகிறது! 
அதாவது வட மாநிலங்களில் போலி மருத்துவர்கள் பல்லாயிரக் கணக்கில் இருக்கக் காரணமான “வியாபம் “ ஊழல் போல,  இது தமிழகத்தின் “வியாபம்“ போலுள்ளது!

1991ஆம் ஆண்டு முதல் இந்தத் தில்லுமுல்லு நடந்துள்ளது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் முதலான மாவட்டங்களில் போலி ஆசிரியர்கள் பலர் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 4ஆம் தேதி இம்மாவட்டங்களில் நாற்பதுபேர் விடுப்பெடுத்தனர். அடுத்தநாள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிக்கு வரவில்லை! வேறுபலர் தலைமறைவாகி இருப்பதாகவும் கல்வித்துறையே பரபரப்பாகி இருக்கிறது!

தற்போது இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டு, மேலும் சிலரைக் காவல் துறை தேடி வருகிறது!

2001–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் வேலை கிடைத்தது.
  இதனால் தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதன்மூலம் வேலை பெற்றதும் தெரிய வந்தது.

      மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம்ஊழல் பற்றி நான் ஏற்கெனவே நமது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறேன், பார்க்க-

http://valarumkavithai.blogspot.com/2015/07/blog-post_20.html


கிட்டத்தட்ட அதுபோல வலைப்பின்னல் அளவிற்கு விஷயம் போகிறது!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு முனியப்பன், கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன் , செந்தில் ஆகிய 3பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலநூறுபேர் இதில் தலைமறைவாகியுள்ளது பரபரப்பாகி வருகிறது!

இவர்களைக் கைது செய்ய வேண்டியது அவசியம்.

இவர்களோடு, இதற்குத் துணைபோன அதிகாரிகள், விஷமிகள் என யாரையும் விட்டுவிடாமல் கைதுசெய்து விசாரிக்க வேண்டும்.

ஏனெனில், நாமக்கல் மற்றும் அதையொட்டி இருக்கும் மாவட்டங்கள் பலவும் போலி அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் 'கல்வி வியாபார ஸ்தல'மாகிப் பலஆண்டுகளாகி விட்டன! இவர்கள் மிகவும் துணிந்து இதுபோலும் குற்றங்களைச் செய்து, தப்பித்து விடலாம் என்று நம்புகிறார்கள்!

எல்லா அயோக்கியத் தனங்களுக்கும் ஆதரவாக நிற்கும் போலி அரசியல் வா(வியா)திகளைக் கண்டுபிடித்து அகற்றினால் அன்றிக் கல்வித்துறை மட்டுமல்ல, சமூகமே சாக்கடையாவதைத் தவிர்க்கமுடியாது!

ஒருகாலத்தில், தேசத்தொண்டுக்காகத் தனது சொத்துகளை மட்டுமின்றி வாழ்க்கையையே தியாகம் செய்த தலைவர்கள் அரசியலுக்கு வந்தார்கள், எதற்கும் அஞ்சாமல் சிறைக்கும் போனார்கள்! இன்று அத்தனை இழிவுகளைச் செய்துவிட்டு, கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சிரித்துக்கொண்டே காவல் வண்டியில் ஏறி கைகளை ஆட்டிக்கொண்டே போஸ் கொடுக்கிறார்கள்!

அன்று

சிறைக்குப் போனவர்கள்

மந்திரிகளானார்கள்!

இன்று

மந்திரியானவர்கள்

சிறைக்குப் போகிறார்கள்! என்று கவிஞர்கள் இதைக் கிண்டலடித்தும் இந்தப் போலி அரசியல் வாதிகளுக்குப் புத்தி வரவில்லை!

இவர்களை, மக்கள்தான் அடையாளம் கண்டு தன்னிடமுள்ள தேர்தல்எனும் வன்முறையற்ற ஆயுதத்தால் அவர்கள் மறுபடி எழாதபடி மரண அடி கொடுக்க வேண்டும்! 

இந்த தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும் எனும் பாரதியின் வாசகத்தை அசிங்கப் படுத்தும் நிகழ்ச்சிகள் வீதிகளில் -இந்த வியாதிகளுக்கு ஆதரவாக- அரங்கேறவே கூடாது!

 

தகவல், படங்களுக்கு நன்றி பாடசாலை, விகடன் இணையம். 

3 கருத்துகள்:

 1. அய்யோ கொடுமை...என்று தணியும் இந்த ஊழல் தீ....

  பதிலளிநீக்கு
 2. ஊழல் தீ... என்று அணையும்...
  அணையாத நெருப்பு என்றே நினைக்கிறேன்...
  கொடுமையிலும் கொடுமை ஐயா...

  பதிலளிநீக்கு
 3. அக்கறையுள்ளவர்கள் கவலைப்படவேண்டிய விஷயம்

  பதிலளிநீக்கு