முன்னுரையும் என்னுரையும்

கவிஞர் புதியமாதவி
நமது பழந்தமிழ் இலக்கியக் கருவூலமாம் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெண்புலவர்கள் 30 பேர். அவர்களிலும் அதிகமான 
பாடல்களை-59-எழுதியவர் ஔவையார்தான் என்பதில்
ஆச்சரியம் இருக்கமுடியாது. ஔவையார் எழுதியவற்றிலும் அதிகமாக இடம்பெற்றது புறப்பொருளே என்பதுதான் ஆச்சரியமானது மட்டுமல்லமகிழ்ச்சியானதும்கூட.
ஔவையார் எழுதிய புறநானூறு மட்டுமே 33பாடல்கள்!
 
அவரேஅதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே நிகழவிருந்த  போரைத் தடுத்துநிறுத்துகின்ற அளவுக்கு  சொல்வாக்கும்செல்வாக்கும் மிகுந்தவராய் இருந்திருக்கிறார் என்பதும்  குறிப்பிடத்தக்கதே.
அந்த அளவுக்கு வெளிப்படையான அரசியல் ஈடுபாடு கொண்டிருந்த  பிற்காலப் பெண்புலவர்கள் யாரையும்  காணமுடியவில்லை.

பக்தியிலும்,காதலிலும் அழியாப்புகழ்பெற்ற பெண்கள் தமிழிலும்
உண்டு.ஆயினும்ஜனநாயக அரசியல் மலர்வதும்-பெண்களின் அரசியல் ஈடுபாடும் ஒன்றுக்கொன்று  தொடர்புடையதாக இருந்ததால்ஒன்றை ஒன்று வளர்த்தெடுத்து இருபதாம் நூற்றாண்டில்தான் இரண்டுமே வளரமுடிந்தது.
ஔவையாரும் சரிஅதற்குப்பின் வந்த பெண்புலவர்களும் பெண்களுக்காகப் பாடியதில் முற்போக்குக் கருத்துக்கள்
மிகவும் குறைவே. இன்னும் சொன்னால்-இருபத்தோராம்
நூற்றாண்டுவரையிலும்-ஆண்புலவர்கள் பாடிய அளவுக்குக் கூட பெண்கள் பெண்ணுரிமைக் கருத்துகளைப் பாடிவிட வில்லை என்பதையும்  மறந்துவிடக்கூடாது.

"தையல் சொல் கேளேல்" என்றவர் ஔவை.
நல்லவேளையாக அந்தத் தையலின் அந்தச்சொல்லை மட்டும் கேளாமல்அதற்கு மாறாக-
 "
தையலை உயர்வு செய்" என்றவன் பாரதி. 

ஆயினும்பல பத்து நூற்றாண்டாகப் படைக்கப்பட்டுவரும் இலக்கியங்களைப்  படைத்தவர்கள் பெரும்பாலும் ஆண்களே என்பதால்மனிதசமூகத்திற்குச் சொல்வதாக அமைந்த  நியாயங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கான
நியாயங்களாகவே இருந்ததில் வியப்பில்லை –
இதற்கு வள்ளுவரும் விதிவிலக்கல்ல! (குறள் எண்கள்: 24,உடன் 130,135,169,191,205 மற்றும் 214 முதல் 220 முடியவுள்ள குறள்கள் மட்டுமல்ல பல அதிகாரங்களும் ஆண்களுக்காகவே எழுதப்பட்டது போலத்தான் தோன்றுகிறது)

முக்கியமாகஉலகப்புகழ் பெற்ற குறளான-
 "
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்" என்பதும், "இல்வாழ்க்கை"  அதிகாரம் முழுவதுமே இப்படி-ஆண்சார்ந்ததாகவே-இருப்பதும் வள்ளுவரின் பிழையல்லகாலத்தின் வாழ்க்கையை ஒட்டித்தானே பெரும்பாலான சிந்தனையும் இருக்கமுடியும்? (அந்தக்காலத்தையும் மீறி 'இருமனப்பெண்டிர்தொடர்பை இகழ்வதுதான்- குறள்920- குறளாரின் பெருமை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்)
எனவேதான்பெண்கள் தமக்கான உரிமைகளை வென்றெடுக்கத் தாமே எழுந்தனர். அதன்பிறகே உண்மையான பெண்ணுரிமைக் கருத்துக்கள் வலிமைபெற்றன என்பதில் ஆச்சரியமென்ன?

 
இந்த நூற்றாண்டுதந்த எழுச்சியில் பெண்ணுரிமையே பெருவெற்றி  பெற்றிருப்பதாக நான் கருதுகிறேன் (சரியான அளவிற்கு நடந்திருக்கிறதா எனில் அந்தக் குறைகளைத்தான் இன்றைய சமூகம் அனுபவிக்கிறது என்பேன்)  பெண்ணுரிமை பாடிய ஆண்குரல்களில் முதன்மையானது பாரதியின் குரல்:
 "
அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
 
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப" என்ற தொல்காப்பியனைக்
காலவெள்ளத்தில் நீந்திக்கடந்த நமது மகாகவி பாரதிதான்,
"
நாணமொன்றும் அச்சமொன்றும் நாய்களுக்கு வேண்டும்" என்றான். அந்த பாரதியின் அடுத்த கட்டமாகஇன்றைய கவிஞர் ஆண்டாள்  பிரியதர்ஷிணி-
 " 
நாணமொன்றும் அச்சமொன்றும் நாய்களுக்கும் வேண்டாம்" என்பதுதான் சிறப்பு!

 இதோஒருபெரும் பட்டியலே நீளும் அளவிற்கு பெண்களின்
உரிமைக்குரல்கள் உயர்ந்து வருவது பெருமகிழ்ச்சியாகவே இருக்கிறது.
  "
உலகெங்கும் பெண்கள் சுரண்டப்பட்டும்அடக்கப்பட்டும் வருகின்றார்கள்.பிற்போக்குத்தனமான சமூகக் கட்டுப்பாடுகளும்,அடிப்படை மதவாதங்களும் ஆண்மேலாதிக்கத்துடன் சேர்ந்து பெண்களுக்கே புத்திமதிகளை உதிர்த்து வருகின்றன" ("ஊடறு..." புலம்பெயர் பெண்களின் படைப்புத்தொகுப்பு-முன்னுரை) என்றிதனைத் தெளிவாகப் புரிந்துஎழுந்து வரும் பெண்களின் அண்மைக்காலப் படைப்புகள் வெகு சிறப்பாக வெளிப்படுவதைப் பார்த்து மகிழ்வோரில் நானும்ஒருவன்.

 இன்றைய இந்தியாவில்-தமிழகத்தில் பெண்களுக்கென்று 33%இட ஒதுக்கீடு பற்றிய பேச்சு தேசிய அளவில் நடைமுறைக்கு வரவேண்டியதும் முக்கியம்அதனை நடைமுறைப்படுத்திய தமிழகத்தின் பல உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பதுபோல-கணவன்மார்களின் பினாமிகளாகிவிடாமல் தாமே 'வையத்தலைமை ஏற்று'நடத்தப் பெண்களே முன்வரவேண்டியதும் முக்கியம். இலக்கியத்திலும்,  உலகக் கொடுமைகளின் நுனிமுனைக் கொழுந்தாகக் கிடக்கும் பெண்களின் பணிகள் அனைத்தையும் உற்சாகப்படுத்தவேண்டியது அந்தப் படைப்பாளியின் வீட்டினர்க்கு மட்டுமல்லநாட்டினர்க்கும் மிகுந்த பலனைத்தரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த வகையில்,
தமிழ்க் கவிதை வரிசையில்,
பெண்கவிஞர்களில் --
'
எழுத்துஇதழ்க் காலத்திலிருந்தே எழுதிவரும் மூத்தகவிஞர் மீனாட்சி,
மரபிலிருந்து புதுக்கவிதை-சிறுகதை-நாவல் என்று பலவகைப்பரிணாமம்காட்டிவரும் திலகவதி,
ஐக்கூக் கவிதைகளில் சாதனைகள் படைத்திருக்கும் மித்ரா,
எளிய-கூரிய நடையில் எல்லா வடிவங்களிலும் எழுதும் அ.வெண்ணிலா,புதிய'கணையாழிவரையிலும் தொடர்ந்துவரும் உமா மகேஸ்வரி,
'
சுயம்பேசும் கிளி'யாகத்  தொடரும் ஆண்டாள் பிரியதர்ஷிணி,
நகரத்திலிருந்த புதுக்கவிதையை கிராமத்திற்கு அழைத்துவந்த இளம்பிறைஆர்.நீலா,
'
கருவறை'யிலேயே கவிவாசனை பெற்றாலும் தன்வாசம் தனிவாசம் என உணர்த்திவரும் கனிமொழி,
வாழும் வள்ளியம்மையாகக் கவிதையிலும்-இயக்கமாக ஈடுபட்டுவரும் மாலதிமைத்ரி,
கவிதையிலேயே உத்திகளைச் சோதனை செய்துவரும் க்ருஷாங்கினி,
ஆணாதிக்கர்களுக்கு அதிர்ச்சியூட்டிவரும் நம்பிக்கை நட்சத்திரம் குட்டிரேவதி,
அழுத்தமான செய்திகளையும் அனாயாசமாகக் கவிதையாக்கிவரும் ப.கல்பனா,
தனது கவிச்சுவடுகளைக் 'காலச்சுவடு'களாக்கிவரும் சல்மா,
குழந்தைகளோடும் குடும்பம் தாண்டியும் 'செம்மலர்'களைப் படைத்துவரும் வர்த்தினி,
திரையிலும் பெண்ணால் 'வசீகர'மான கவிதைகளைத் தரமுடியும் என வந்திருக்கும் தாமரை,
ஆடவும் தெரியும்கவிதை பாடவும் தெரியும் எனும் திலகபாமா,
'
இலைகளுக்கும் இசையுண்'டென்று கண்டு,  திரைப்பட முயற்சிலிருக்கும் தேன்மொழி,
இன்னும் புலம்பெயர் கவிஞர்களான இறந்தும்-இருந்தும் தமிழ்க் கவிதையில் சாதனைகள் பலசெய்திருக்கும் செல்விசிவரமணிஆழியாள்ஜெயந்திசந்திரா, அவ்வை ரவீந்திரன்பாமதிதுர்க்காபிரதீபாசுமதிரூபன்அருட்கவிதாஅனார்எனத் தொடரும் இந்தத் தமிழ்ப் பெண்கவிஞர் பெரும்படையில் மிகப் பெரும்பாலோர் இளைய கவிஞர்களே என்பது மிகவும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

அந்த வகையில்மும்பைக்கவிஞர் புதியமாதவிபொங்கிப் பிரவகித்துப் பாடிவரும்- அரசியல்,சமூக இழிவுகளைச் சாடிவரும்-கவிதைகளை நான் பெரிதும் வரவேற்கிறேன்.

 புலம்பெயர் கவிஞர் தவிர்த்துமேற்கண்ட பெண் கவிஞர்களில் பலரும்கூட புதிய மாதவி அளவுக்கு அரசியல் பாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதே.

      தனது பிரச்சினைகளையே சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய பெண்கள்
மிகவும் குறைவு!
அதிலும்சமூகத்தின் பிரச்சினைகளைச் சரியாகப்புரிந்துகொள்ளக்கூடிய பெண்கள் மிகமிகவும் குறைவு!
சமூகத்தின் பிரச்சினைகளை அரசியலாகப் புரிந்துகொள்ளக்  கூடியபெண்கள் மிக மிகமிகவும்குறைவு!
அதையும் கலைஇலக்கியத்தில் சரியாகக் கொண்டுதரக்கூடிய  பெண்கள் மிகமிக மிகமிகவும் குறைவு!

 கவிஞர் புதிய மாதவி அந்த மிகமிக மிகமிகவும் குறைவான பகுதியின் -மிகவும் அரிதான-ஒரு தோழி.
 
சுமார் ஓராண்டுக்கு முன்புஇவரது முதல் கவிதைத் தொகுப்பான"சூரியப் பயணம்"பார்த்து,முதன் முறையாக ஒரு பெண்கவிஞரின் அரசியல்-சமூகக் கவிதைகளைப் பார்த்துஅசந்துபோனேன்.அவரைக் கடிதத்தின் வழியே தொடர்புகொண்டேன்.இன்றளவும் அந்த மின்அஞ்சல் (e-mail) தொடர்பு தொடர்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.
"
ஹே! ராம்..." இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.அடர்த்தியாக வந்திருக்கிறது.
 "
பணத்திற்காய் எழுதுகின்ற
  
பாடலில்லை - தமிழ்
  
இனத்திற்காய் எழுதுகின்றேன்
  
இதுவே என் எல்லை" - என்று தெளிவாய் வரையறுத்துக்கொண்ட இவரது கவிதைக்கோட்பாடுமுதற் கவிதை (என் முகவரி) யிலேயே நம்மை வரவேற்கிறது.

வள்ளுவன் வழியிலும்இளங்கோவின் வரியிலும் இரண்டாவது கவிதையை 'வான் மழைபோற்றுதும்என்று வழங்கும் கவிஞர்அதிலும் இறுதியாக-
 "
பூமாதேவியின்
 
ஆடையின் அழுக்கை
 
வெளுக்க வந்தவனே!
 
அந்தச் சலவைத் தண்ணீரில்
 
மாற்றுப் புடவை இல்லாத
 
எங்கள் மகளிரின் சேலையையும்
 
சேர்த்தே துவைத்துவிடு" - என்பது,சித்திரச் சோலையைப் பார்த்த பாரதிதாசனுக்கு,அதன் வேரில் 'எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோஎனும் சிந்தனை எழுந்ததையே நமக்கு நினைவூட்டுகிறது.

 
உலகம் காக்கும் காவல்தெய்வமாம்  'ஙப்பன்'முருகன்குடும்பத்தோடு உள்ளிருக்கும்  கோயிலுக்குவாசலில் பூட்டு இல்லாவிட்டால்அடுத்தநாள் காலையில் முருகனைமட்டுமே அனாதையாகக் கிடத்தியிருப்பான். ஏனெனில்வள்ளியை வாஷிங்டனுக்கும்தேவானையை அதைவிட தூரதேசத்திற்கும் கடத்தியிருப்பான் தூரதேசபக்தன்! அதுவும்,"எல்லாம் அவன்செயல்" என்று சொல்லியே கடத்தியிருப்பான்! இந்த எதார்த்தத்தைக் கவனித்த கவிஞர்-
 "
நான்கு முகங்கள்
 
எட்டுக் கைகள்
 
அசுரர்களைக் கொன்ற
 
ஆயுதபலங்கள்
 
கோட்டைகள் கொடிகள்
 
இத்தனை இருந்தும்
 
ஆண்டவனே உனக்கேன்
 
எங்கள் கருப்புப் பூனைகளின்
 
காவல்?"என்று கேட்கும் கேள்விக்குஆண்டவனோ ஆள்பவரோ பதில்சொல்லப் போவதில்லைபக்தர்கள் யோசித்தால் சரிதான். பகுத்தறிவுபாடும் வெகுசில பெண்களில் இவரும்ஒருவர் என்பதும் பாராட்டத் தக்கதே!

 
நட்பு ஒரு அழகான நெருப்பு.அதைப் புரிந்துகொண்டவர்களுக்கே அதன் பலம் புரியும்.மற்றவர்களுக்கோ அதன்மேலுள்ள பயம்தான் தெரியும்.புதுக்கோட்டையில் நாங்கள் நடத்திய 202கவிஞர்களின் மகாகவியரங்கில் அறிமுகமான  எங்கள்ஊர்ப் பள்ளிமாணவி-கிருத்திகாதேவி- நட்புப் பற்றி எழுதிய கவிதை  எல்லாரையும் கவர்ந்துவிட்டது:
 "
வேறிடத்தில்-
 
உண்மைபேச வேண்டியவர்களும்
 
ஊமைகளாயிருப்பார்கள்,
 
இங்குமட்டும்தான்-
 
ஊமைகளும்
 
உண்மை பேசுபவர்களாய்
 
இருப்பார்கள்" 

இதேபோலகவிஞர் புதியமாதவியின் நட்பும் 'நெல்லிக்கனியைநினைவூட்டுகிறது.
 "
நம் நட்பு-
 
ராக்கி கயிற்றையும்
 
மஞ்சள் கயிற்றையும் விட
 
மேலானது" என்று இவர் பாடும்போதுநண்பர்மேல் மட்டுமல்ல,இவரது கணவர் மேலும் புதியமரியாதை பிறப்பது உறுதி. 'சாகா வரம்தரும் நெல்லிக்கனியைத் தொலைத்தநட்புஎன்றும் சாகாது!

 
பெரும்பாலான கவிஞர்களைப் போலவேதொலைந்துபோனதற்கு ஏங்கும் 'நஸ்தால்ஜியாபாதிப்பு இந்தக் கவிஞருக்கும் இருக்கிறது. இவர் தனது தொலைந்துபோன கிராமத்தில்,
 "
பௌர்ணமித் தோட்டத்தில்
 
கிளியாந்தட்டு விளையாடும்
 
பச்சைக் கிளிகள்
 
பறந்துபோய்விட்டன"
 
கூடுவிட்டுக் கூடுபாயும் 'மந்திரம்தெரிந்தால்தான்இலக்கியமே படைக்கமுடியும் இல்லையா

 
ஆண் படைப்பாளி பெண்ணாகிபெண்துயரத்தை-ஏன் பிரசவ வலியைக்கூட-எழுதுவான்! குழந்தையாகி விளையாட்டுக் காட்டுவான். இளைஞன் கிழவராகி முதியோர் இல்லத்தின் வேதனையில் படிப்பவரை மூழ்கவைப்பான். குடும்பப்பெண் தன்னையே விலைமகளாக உணர்ந்து அந்தத் துயரத்தை அழுதுகொண்டே எழுதுவாள். இதெல்லாம்தான் படைப்பு நுட்பங்கள்!

 இந்த நுட்பம் புதியமாதவிக்குக் கைவந்திருப்பதால்தான்நிஜவாழ்வில்15 வயதுள்ள தன் மகளைப் பெரிய குடும்பத் தலைவியாக்கி,அவள் இவரது வயதான காலத்தில் ஒரு நாளாவது இவருடன் வந்து இருக்க மாட்டாளா என்று ஏங்கும் இனிய (முதிய?)கவிதையைத் தரமுடிந்திருகிறது! அல்லது தனது தாயின் இடத்தில் தன்னையே வைத்துப் பார்க்க முடிந்தாலும் இப்படிப் பாடலாம். எப்படியாயினும் கவிதைஉணர்வுக்கு காலபேதமில்லை என்பதைக் காட்டும் அற்புதக்கவிதை இது!
 "
உனக்காக வாழ்ந்தவளுக்கு
 
ஒரு நாளைத் தந்துவிடு
 
இது-
 
எனக்காக அல்ல,
 
மகளே உனக்காக!
 
உன் தாய்மைக்காக
 
நீ சேர்த்துவைக்கப்போகும் சொத்து!"

"சுதந்திரத்தை என்னால் தின்ன முடியாதுசோறு கொடு"என்று கோபக்காரக் கவிஞன் தணிகைச் செல்வன் கூவினான்.
"
என்னதந்தது இந்தச்சுதந்திரம்அப்பனின் திருவோட்டை அப்படியே மகனுக்குத் தந்தது" என்ற வைரமுத்துவும் அப்படியே!
அதே வழியில்சுதந்திரத்தாய் சும்மா தேர்வலம் வந்து என்னஆகப்போகிறது என்று கோபப் படுகிறார் புதியமாதவி :
 "
ஆகஸ்டுப் பதினைந்து-உன்
 
அலங்காரத் தேரோட்டம்
 
தேரோட்டம் மட்டும் காண
 
தேவி நீ சிலையல்ல
 
கோவில் சிலையல்ல - எங்கள்
 
குறைகேட்டு மறப்பதற்கு
 
குடும்பத்தலைவியடி -பாரதக்
 
குடும்பத்தின் தலைவியடி" 
-
பாரதத்தாய் ஆன பிறகும் பாரதக் குடும்பத்தின் தாயாகித்தாங்காமல்பழையபடியே ஊர்வலம்-தேர்வலம் என்றே சுற்றிக்கொண்டிருந்தால் குழந்தைக்குக் கோபம்வராதா என்ன?
பொங்கல்விழாக் கொண்டாடும்போது கூடமக்கள் ஒற்றுமையே மனதில்நிற்கும் கவியுள்ளம் கிடைத்தலரிது.
புதிய மாதவிக்கு அந்தக் கவியுள்ளம் கிடைத்திருக்கிறது. அதனால்தான்,
பொங்கலன்று பாடிய கவியரங்கக்கவிதை இப்படிப்போகிறது:
 "
ராமன் இருக்குமிடம் அயோத்தி என்பதால்
 
காட்டை நாடாக்கினார்கள் அன்று,
 
ராமன் வாழ்ந்த இடம் காடு என்பதால்
 
நாட்டையே காடாக்கினார்கள் இன்று" - என்பதும்,
 "
மனித நேயத்திற்கு
 
மாலையிடாத மதங்கள்
 
இனித்தேவையில்லை.
 
அந்த மதங்களுக்கு
 
வைப்போம் மலர் வளையம்" - என்பதும்மதத்துக்காக மக்களா / மக்களுக்காக மதங்களா என்பதில் தெளிவில்லாதவர்களை நோக்கி வீசப்படும் தீப்பொறிகளன்றி வேறென்ன?

 
அந்த மக்கள்ஒற்றுமையைச் சிதைத்த சாதி-மத வேற்றுமைகளால் இந்தமனிதன் சாதித்ததென்னஎன்றும் கேள்வியெழுப்புகிறார் கவிஞர்:
 "
என் தமிழினமே!
 
புலிகளை விரட்டிய
 
புறாநானூற்றுத் தமிழினமே!
 
இன்று நீ
 
எலிகளுக்குக் கூட
 
அஞ்சுவது ஏன்?"

  
பெண் அடையாளம் விரும்பாத சில பெண்கவிஞர்கள், 'காவ்யாவெளியிட்ட இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்பெண்கவிகளின் 'பறத்தல் அதன் சுதந்திரம்எனும் அருமையானதொகுப்பில்  தங்கள்கவிதைகளைக் சேர்க்க விரும்பவில்லையாம்! 'கவிஞர்களில் பெண்என்னஆணென்ன?' எனும் அவர்களின்கேள்வியில் நியாயம் இருந்தாலும்அத்தனை ஆதிக்கங்களும் கொடிகட்டிப் பறக்கும் இந்தச் சமூகத்தில் அந்த அளவுக்கு ஓங்கி நிற்கவோ ஒதுங்கிக்கொள்ளவோ வேண்டியதில்லை என்பது எனதுகருத்து.
 '
பெண் உரிமை என்பது ஆண்களுக்கு எதிரானதல்ல-சமமானதுஎன்று தெளிந்துபெண்ணுரிமை பாடும் ஆண்களைப் பற்றிய அவர்களது கருத்து என்னவாயிருக்கும் என்றெனக்குப் தெரியவில்லை. பெண்களே பாட வேண்டிய பெண்ணுரிமைக்கும்பெண்ணும் ஆணும் இணைந்து போராடிப் பெறவேண்டிய பெண்ணுரிமைக்கும் இன்னும் தேவை இருக்கத்தானே செய்கிறது

 
இதனை நன்குணர்ந்திருக்கும் புதியமாதவி,
 "
அவள்-
 
கண்களைப் பாடியது போதும்,
 
கருத்தினைப் பாடுங்கள்.
 
கூந்தலைப் பாடியது போதும்,
 
கொள்கையைப் பாடுங்கள்.
 
உடலைப் பாடியது போதும்,
 
உரிமையைப் படுங்கள்" என்று பாடுவதில் அர்த்த அழுத்தம் கனக்கிறது.
* '
ஹே! ராம்'-தலைப்புக்கவிதையில்தான் -கவிஞரின் சத்திய ஆவேசம் பொங்கி எழுந்துவிவாதித்துவென்றபிறகு நிதானப்பட்டுநியாயம்சொல்லி முடிகிறது! 

 "
ஹே! ராம்!-
 
உனது ஜனனம் ஏன்
 
சாபக்கேடானது?" என்று கோபமாகத் தொடங்கி,
 "
ஹே! ராம்!-
 
உன் ராம ராஜ்ஜியத்தில்
 
மனித தர்மம் ஏன்
 
வாலி வதையானது?" என்று தர்க்கரீதியாகத் தொடர்ந்து,
 "
எங்களுக்கு
 
இனி
 
அவதார புருஷர்கள்
 
தேவையில்லை" என்று நிதானமாகச் செல்வது மதுரை முடிந்துவந்த வஞ்சி போலத் தோன்றுகிறது.
 
இந்தக்கவிதையோடு தொகுப்பு முடிந்திருந்தால்முழுமையடைந்திருக்காது என்பதைப் புரிந்துகொண்டுஅடுத்து 'அல்லாகவிதையை இணைத்திருப்பது மிகச்சரியானது.
 "
ஏ! அல்லா!
 
எரிகின்ற
 
புகைவண்டிகளில்
 
இனி உன்
 
குரான் ஒலிக்கட்டும்!" என்பதும் மிகச்சரியான பார்வையே! 

'
நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன?' என்பது நம் கிராமத்துப் பழமொழி! வெறி பிடித்து சகமனிதனை வெட்டிக்கொல்லும் மனிதன்மனித உணர்வே இல்லாதவனாகிவிடும்போது, 'அவன் அந்தமதத்துக்காரன்', 'இவன் இந்தமதத்துக்காரன்என்பது எப்படிச்சரியாகும்? 'கோத்ரா'வும் தவறு, 'குஜராத்'தும்  தவறுதானேவெறிக்கு வெறி தீர்வாகுமெனில் நாம் வாழ்வது காடாகத்தானே இருக்கவேண்டும்?

 
இறுதியாக இன்குலாப்,சிற்பி பாணியில் ஒரு நீள்கவிதை...
'போராளியின் பயணம்' :
 
சிதம்பரம் பத்மினியை நினைவுபடுத்தும் ஒரு நெருப்புக்கவிதைஅது! இப்போதுஅதுபோன்ற கொடுமைகள் நடக்காத சமூகமாற்றத்திற்கான பெண்ணுரிமை இயக்கத்தின் தளபதியாக-இரண்டாம் திருமணமும் செய்துகொண்டு-பெண்ணுரிமைப் போராளியாகவே வாழ்ந்துவருவதை இந்த இடத்தில் ஒப்பிடத்தோன்றுகிறது.

 
இறுதியாகச் சிலவரிகள் :
 
கவிஞர்களுக்குத்தான் பெண்-ஆண்இளமை-மூப்புமும்பை-தமிழகம்முதலான பால்-பருவ-இட பேதங்கள் உண்டே தவிரகவிதைக்கு இல்லை!

புகழ்மிகுந்த பாரதிதாசன் எழுதியிருந்தும்பலரறியாத இரண்டுவரிக் கவிதையும்  உண்டு -
 '
இரவில் வாங்கிய இந்திய விடுதலை
 
என்று விடியுமோ யார்அறி குவரே?' எனும் இந்த வரிகளை அவர் இந்திய விடுதலை பிறந்த 15-08-1947 இரவில் எழுதியிருந்தார்
 
ஆனால்அதே தமிழ்இலக்கிய உலகில் அவ்வளவாக அறிமுகமில்லாத அரங்க நாதன் எனும் இளைஞன் -
 '
இரவில் வாங்கினோம்
 
விடியவேயில்லைஎன்று எழுதியபோதுஅதே உள்ளடக்கம் தமிழ் இலக்கிய வரலாற்றில் தன்னைத்தானே பொன்னெழுத்துக்களில் பொறித்துக்கொண்டது!

 
கவிதை - அது கவிதையாக இருக்குமெனில்யாருடைய சிபாரிசுமின்றித் தானே சிறகுகட்டிப் பறந்து மக்களிடம் சென்று சேர்ந்து விடும். என்ன... இன்றைய ஊடகச் செயற்கைஒளியில்அது சற்றே முன்பின்னாக நிகழலாம். ஆனால் அது சாத்தியம்தான் என்பது சத்தியம்தான்.

 
இன்னும் படைப்புக்கருவைத்தேர்ந்தெடுப்பதிலும்தமிழ்க்கவிதையுலகின் பல்வேறுவகைகளையும் புரிந்து சொல்லைக் கையாள்வதிலும் இன்னும் கவனம் செலுத்துவாரானால் நிச்சயமாக இவருக்கென்றொரு இடம் தமிழ் இலக்கியவரலாற்றில் இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.
இருக்கவேண்டுமென்று இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை - 622 004
------------------------------------------------------------------------- 

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருந்த கவிஞர் புதிய மாதவியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான  
''ஹே! ராம்'' நூலுக்கு நான் எழுதிய முன்னுரை
------------------------------------------------------------------------ 
விரைவில் வெளிவரவிருக்கும் எனது ஏழாவது நூலான, 
“முன்னுரையும் என்னுரையும்“ நூலில் இடம்பெறவுள்ள 
எனது முன்னுரைகளில் ஒன்று. 
------------------------------------------ 7 கருத்துகள்:

 1. பணத்துக்காக எழுதுகிறவர்களின் மத்தியில்
  தமிழ் இனத்திற்க்க எழுதுகின்றவரைப்
  போற்றுவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
 2. ஆழமான அறிமுகம்
  அருமையான உரை
  தம +

  பதிலளிநீக்கு
 3. மிகச் சாரியான மதிப்பீடுங்க அண்ணா

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்.

  புதிய மாதவி அவர்களின் தளத்தினைப் பார்த்துண்டு. கவிதைகளைப் படித்ததும் உண்டு. ஆயின் நீங்கள் இப்பதிவில் சுட்டிய கவிஞருள் பெரும்பாலானோரைப் படித்ததில்லை என்பதை விட அவர்கள் பெயர் போலும் அறியாதிருக்கிறேன் என்பது வெட்கத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டிய விடயம்.
  உங்கள் வாசிப்பின் பரப்பும் என் போதாமையும் வெளிப்படுத்திய பதிவு இது.

  ஒரு கவிஞரின் கவிதையை மதிப்பீடு செய்தலுக்கான சான்றுக் கட்டுரையாய் இக்கட்டுரையைத் தயக்கமின்றிக் கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

  “நாணமொன்றும் அச்சமொன்றும் நாய்களுக்கு வேண்டும்”

  எனத் தாங்கள் காட்டிய பாரதியின் மேற்கோளை,

  “ நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்”

  என்றே படித்த நினைவு.

  சரிபார்க்க வேண்டுகிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. பெண் புலவர்களையும் அடயாளப் படுத்தி அவர்கள் ஆற்றலையும் வெளிப்படுத்தும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோ !

  பதிலளிநீக்கு
 6. புதிய மாதவி அவர்களின் கவிதைகளை அறிமுகம் செய்ததற்கு நன்றி அண்ணா. பெண் புலவர்களைப் பட்டியலிட்டு சிறந்த கருத்துகளுடனான முன்னுரை! பகிர்விற்கு நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 7. புதியமாதவி இப்போதுதான் நாங்களும் அறிந்து வருகின்றோம். அவரைத் தொடர வேண்டும் என்று நினைத்திருந்த போது உங்களின் இந்த அறிமுகம்! அருமை அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு