தாலி-விவாதம் தொடங்கட்டும்...!

மதுக்கூர் இராமலிங்கம்

சர்வதேச மகளிர் தினத்தன்று 
`தாலி பெண்களை பெருமைப் படுத்துகிறதா? சிறுமைப்படுத்துகிறதா?’ என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சி 
விவாதம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. 
இதற்கான முன்னோட்டம் வெளியான நிலையில்
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 
ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை சேர்ந்தவர்கள் 
அந்த தொலைக்காட்சி நிலையத்திற்கு படையெடுத்தனர். 
வாசலில் நின்றிருந்த ஒளிப்பதிவாளரை அடித்து நொறுக்கியதோடு, விலை உயர்ந்தஒளிப்பதிவு சாதனத்தையும் நாசம் செய்தனர்.

     தாலி இந்துக்களின் அடையாளம் என்று கூறி இந்த விவாதத்தை நடத்தக்கூடாது என்று காலித்தனத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெண் செய்தியாளர் ஒருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதான் இவர்களின் அடையாளம்.அந்த விவாதம் ஒளிபரப்பாவதற்கு முன்பே மதவெறி, சாதிவெறி தலைக்கேறி ருத்ரதாண்டவம் ஆடி முடித்துள்ளனர். கருத்துரிமைக்கு எதிராக இந்த வலதுசாரி பிற்போக்கு கும்பல் தொடர்ந்து கட்டாரி வீசி வருகிறது.
அதன் தொடர்ச்சியே இது. 



அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தனது அறிக்கையில் பொருத்தமாக குறிப்பிட்டுள்ளது போல தாலி குறித்து விவாதிக்கவே கூடாது என்பதுதான் இவர்களது நிலை. விவாதித்தால் அதன் புனிதம் கெட்டுவிடுமாம். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவுஎன்ற வள்ளுவ நெறியே முற்போக்கு தமிழ் மரபு. அதன்படி தாலி குறித்து கொஞ்சம் விசாரிக்கலாம். தாக்குதல் நடத்திய மூடர்கள் நினைப்பது போல தாலி என்பது திருமணத்தின் போது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டுவது மட்டுமல்ல. தமிழ் இலக்கியங்களின் வழி சிந்தித்தால் தாலி என்பது ஒரு பொதுவான அணிகலனே ஆகும்.

     இன்னும் சொல்லப்போனால் பெண்களை விட ஆண்களோடு அதிகம் தொடர்பு டையதுதான் தாலி. பெற்றோர்கள் சிறுவர்களுக்கு ஐம்படைத் தாலி அணிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கான குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. சங்கு, சக்கரம், வால், வில், தண்டு என ஐந்துவிதமான படைக்கருவிகளை செய்து அதை ஒரு கயிற்றில் தொடுத்து ஐம்படைத் தாலி என்ற பெயரில் சிறுவர்களுக்கு அணிவிக்கும் பழக்கம் இருந்ததாக புறநானூறு 77ம் பாட்டின் 7ம் வரியிலும், அகநானூறு 54ம் பாட்டின் 18ம் வரியிலும், திணைமாலைநூற்றி ஐம்பதில் 66ம் பாட்டில் 3வது வரியிலும், மணிமேகலையின் மூன்றாம் காதையில் 138ம் வரியிலும், கலிங்கத்துப்பரணி யில் 244வது பாட்டிலும் கூறப்பட்டுள்ளது.

     ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த ஐம்படைத் தாலி அகற்றப்பட்டது. புறநானூறு 77வது பாட்டில் போர்க்களத்திற்கு வந்தவனைப் பார்த்து இவன் இன்னும் ஐம்படைத் தாலியை அகற்றாத சிறுவனாக இருக்கிறானே என்று கூறப்பட் டுள்ளது. ஆனால் இன்றைக்கு இந்தப்பழக்கம் வழக்கொழிந்துவிட்டது.தாலி என்கிற சொல்லே பனை ஓலை என்கிற வார்த்தையிலிருந்துதான் வந்திருக்கிறது. தாலமாகிய பனை ஓலையினால் செய்யப்பட்டதே தாலி. இன்னார் மகனுக்கு இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நாளில் இந்த நேரத்தில் கல்யாணம் செய்து கொள்வதாக பனை ஓலையில் எழுதி அதை மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக குறிப்புகள் உள்ளன. 

     இப்போதும் கூட முகூர்த்த ஓலைஎழுதுவது என்பது சில பகுதிகளில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் இப்போது தாளில்தான் எழுதப்படுகிறது. பழம்பெருமையை பாதுகாப்பதாக கூறிக்கொள்பவர்கள் இப்போது பனை ஓலையையா கட்டிக் கொள்கிறார்கள். பல திருமணங்களில் பொன்னில் தாலி செய்யப்படுவதில்லை. ஒரு விரலி மஞ்சளை கயிற்றில் கட்டுகிற பழக்கமும் சிலரிடம் உள்ளது.பழந்தமிழர் மரபில் தாலிகட்டும் பழக்கம் உண்டா என்று 1954ம் ஆண்டில் ஒரு பெரிய விவாதமே நடந்துள்ளது. இதைத் துவக்கி வைத்தவர் கவிஞர்கண்ணதாசன். இந்த விவாதத்தில் ம.பொ.சி. மட்டும்தான் பழங்காலத்திலேயே தமிழர்களிடம் தாலி கட்டும் பழக்கம் இருந்தது என்று கூறினார். வரலாற்று அறிஞர் அப்பாதுரையார், கி.பி.10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி குறித்த பேச்சேஇல்லை என்றும், பெரும் புலவர் மா.ராஜமாணிக்கனார் பழந்தமிழர்களிடம் தாலி என்ற வழக்கு இல்லவே இல்லை என்றும் உறுதிபடக் கூறினர்.

     தமிழ்நாட்டில் கிடைத்த தொல்பொருள்களில் தாலி இல்லவே இல்லை. சங்க இலக்கிய பாடல்களில் பெண்கள் கழுத்தில் கட்டும் தாலி குறித்தகுறிப்பு எதுவும் இல்லை. சிலப்பதிகாரத்தில்தான் இதற்கான குறிப்பு வருகிறது. சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடலில் மங்கல அணி என்கிற வார்த்தைவருகிறது. தாலி ஒருபுறமிருக்கட்டும் திருமண முறை காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மக்கள் ஒருகாலத்தில் இரவில்தான் திருமணம் செய்துவந்தனர். இன்னமும்கூட இந்த வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. பழங்குடி மக்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற திராவிட தொல்குடி மக்களிடையே தாலிகட்டும் பழக்கம் இப்போதும் கூட இல்லை.

     ஆனால் ஆர்எஸ்எஸ் கணக்குப்படி இவர்களும் இந்துக்கள்தான். நீலகிரி மாவட்டத்தில் வாழும் தொதவர், கோட்டர் இன மக்களிடையே தாலி கட்டும் பழக்கம் இல்லை. தெலுங்குபேசும் தொல்குடி மக்களான ஏட்டர், ஏனாதிகள், ஏறக்கொல்லர், மலையாளம் பேசும் தொல்குடி மக்களான செருமார், முக்குருவர், பலியர், அருணடர் போன்றோரிடத்தும், கன்னடம் பேசும் காப்பிலியர், கொரகர், காடுகுரும்பர், மொகயர் போன்ற மக்களிடமும் தாலிகட்டும் வழக்கம் இல்லை. தமிழ் மக்கள் ஒரு காலத்தில் திருமணம் கூட செய்துகொள்ளாமல் குடும்பமாக வாழ்ந்துள்ளனர். 
           “பொய்யும், வழுவும்தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்பஎன்பது தொல்காப்பிய சூத்திரம். இதன் பொருள் என்ன வென்றால், ஆணும், பெண்ணும் களவு அறத்தின்படி குடும்பமாக வாழ்ந்து வந்தனர். ஆடவர்கள் பெண்களை கைவிட்டு அந்தத் திருமணத்திற்கு சான்று ஏதுமில்லை என்று கூறிய நிலையில்தான் திருமணம் என்ற ஒரு ஏற்பாட்டை செய்தனர் என்பது இதன் எளிய பொருள். 
      கணவன் இறந்துவிட்டால் இளம் மனைவி வேறொருவரை திருமணம் செய்து கொள்வது இயல்பாகவே இருந்துவந்தது. வருணாச்சிரம ஆதிக்கம் கெட்டிப்பட்ட பிறகுதான் விதவைத் திருமணம் என்பது தடை செய்யப்பட்டு, இயல்பாக மறுதிருமணம் செய்து கொள்பவர்களை அறுத்துக்கட்டுபவர்கள் என்று இழிவுபடுத்தும் போக்கு தோன்றியது. தாலி மீது புனிதத்தை ஏற்றியதில் சில தமிழ்ச்சினிமாக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அது இன்றுவரை தொடர்கிறது.

      பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த சின்னத்தம்பிஎன்ற திரைப்படத்தில் கதாநாயகன், தூளியிலே ஆடவந்த வானத்து வெண்ணிலவே, ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே... என்றெல்லாம் பாட்டுக்கட்டி பாடுவான். ஆனால் அவனுக்கு தாலி என்றால் என்னவென்றே தெரியாதாம். கதாநாயகி நிர்ப்பந்தமாக அவன் மூலம் தாலிகட்டிக்கொள்ள அவன் அப்பாவியாக தனது தாயிடம் வந்து தாலிக்குவிளக்கம் கேட்பது போல அந்தப்படம் செல்லும். அறியாமல் தாலி கட்டிவிட்டால்கூட அவள் உனக்கு மனைவியாகி விட்டாள் என்பதாக அந்தப்படம் பேசும். கே.பாக்யராஜ் இயக்கத்தில் அந்த ஏழு நாட்கள்என்றொரு படம். காதலனிடமிருந்து காதலியைப் பிரித்து வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.

     கணவனே முன்வந்து காதலனுடன் காதலியை சேர்த்துவைக்க முயலும் போது, கணவன் கட்டிய தாலியை கழற்றிக் கொடுத்துவிட்டு வருமாறு காதலன் கூறுவான். அவள் தாலியைக் கழற்ற முயலும்போது வானம் இடி இடிக்க, பூமி கிடுகிடுக்க கடைசியில் விரும்பிய காதலனைவிட கணவன் கட்டிய கயிறே பெரிதென்று கதாநாயகி முடிவெடுப்பதாக அந்தப்படம் முடியும்.இராம.நாராயணன் இயக்கிய படம் ஒன்று. அதில் கதாநாயகி தினந்தோறும் பாம்புக்கு பால் ஊற்றுவாள். அவரது கணவனோ சாராயம் குடித்துவிட்டு மனைவியை அடித்து நொறுக்குவார். 

     இதை எப்படியோ தெரிந்துகொண்ட பாம்பு கணவனை கொத்த வரும். அப்போது மனைவி பால் கொண்டு வருவாள். குனியும் போது பாம்பு கண்ணில் கதாநாயகியின் தாலி தெரியும். உடனே யோசித்த பாம்பு தவறாக முடிவெடுத்துவிட்டோமே கணவனைக் கொன்று விட்டால் நம்முடைய பக்தை தாலியை இழந்துவிடுவாரே என்று நடுங்கி திரும்பச் சென்றுவிடும். இப்படி மனிதர்கள் மத்தியில் மட்டு மின்றி பாம்புக்கும் தாலியின் அருமையை உணர்த்தியிருப்பார் இயக்குநர். ஒரு படத்தில் கணவன் நீதிமன்றத்தில் விசாரணைக் கூண்டில் நிற்க மனைவி கோவிலில் தாலி வரம் கேட்டுவந்தேன் தாயம்மாஎன்று உருக்கமாக பாடுவார். கடைசியில் அம்பாளின் அருளாள் அவரது தாலி தப்பிக்கும். தற்போது பெங்களூர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையையும், தமிழகத்தில் ஆளும் கட்சியினர் நடத்திவரும் பல்வேறு வழிபாட்டையும் போட்டு இந்த இடத்தில் குழப்பிக்கொள்ளக்கூடாது. 

    அண்மையில் காலமான ஆர்.சி.சக்தி, எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய கதை ஒன்றை அடிப்படையாக வைத்துசிறைஎன்ற படத்தை எடுத்திருந்தார். கயவன் ஒருவனால் சீரழிக்கப்பட்ட பெண்ணை கணவன் ஒதுக்கி வைத்துவிடுவான். ஆனால் அந்தப்பெண்ணை சீரழித்தவன் மனம் திருந்தி கணவனோடு மனைவியை சேர்த்துவைக்க துடிப்பான். இதனிடையே அவனுக்கு கைகால்கள் விளங்காமல் போய்விடும். மனைவி நிரபராதி என்று அறிந்து கணவன் திரும்ப வரும்போது அந்தப்பெண்ணை சீரழித்தவனின் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருக்கும். அந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் என்னை அனாதையாக விட்டுவிட்டு ஓடிய உனக்கு தாலி கட்டிய மனைவியாக இருப்பதைவிட, என்னைக் காப்பாற்றிய அவனுக்கு விதவையாக இருந்துவிடுகிறேன் என்று அந்தப்பெண் தாலியை கழற்றி வீசுவாள். அந்தத் தாலி ஒரு துப்பாக்கியில் போய் விழும். 

    இப்படி அபூர்வமாக ஒன்றிரண்டு படங்கள்தான் வந்துள்ளன. புரோகிதர் வைத்து, மந்திரம் ஓதி தாலி கட்டாமல் நடைபெறும் திருமணங்கள் சட்டப்பூர்வமாக செல்லாது என்று 1952ல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர்கள் சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டவர்கள்தான். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் சட்டவிரோதமாக பிறந்தவைதான் என்பது அந்தத் தீர்ப்பின் சாரம். 1967ல் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது சுயமரியாதை திருமணம் சட்டப்பூர்வமாக செல்லும் என சட்டம் இயற்றினார். அந்த மசோதாவில் புரோகிதம் இல்லாமல் தாலி கட்டும் திருமணங்கள் செல்லும் என்று இருந்ததை, புரோகிதம் இல்லாமல் மட்டுமல்ல தாலி கட்டிக்கொள்ளாமலும் நடைபெறும் திருமணங்களும் செல்லத்தக்கவை என்று பெரியார் திருத்தம் கொடுத்தார். 

    தாலி பெண்களின் அடையாளம் என்று ஆர்எஸ்எஸ் வகையறா கூறுகிறது. ஒரு காலத்தில் வாலிபர்கள் புலி மற்றும் சிங்கத்தை வேட்டையாடி அவற்றின் பல்லை எடுத்து கோர்த்துதான் தாலி கட்டியுள்ளனர். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இதேபோன்று புலியை வேட்டையாடி அதன் பல்லை தாலியாக கட்டித்தான் திருமணம் செய்து கொள்வதற்கு இவர்கள் இப்போது கூறத்தாயாரா?

    உண்மையில் இவர்களுக்கு பெண்கள் மீது மரியாதை இல்லை. மாறாகமனுவின் பெயரால் பெண்களை கட்டிவைத்திருக்கும் முளைக்கயிறு அறுந்துவிடக்கூடாது என்பதுதான் இவர்களது பதைபதைப்பு.தாலிதான் பெண்களுக்கு வேலி என்று வாதிடும் இவர்களுக்காகவே 1960ம் ஆண்டிலேயே மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை ஒரு பாட்டு எழுதி வைத்திருக்கிறார் --
போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
     சேர்ந்து போட்டுக்கணும்- தாலி
போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
     சேர்ந்து போட்டுக்கணும்-ஒலகம்
புதுசா மாறும்போது,
      பழைய மொறையை மாத்திக்கணும்.
---------------------------------------------
இந்தக் கட்டுரைப் பொருள் எனக்கு நூறு விழுக்காடு ஒப்புதல் என்பதால் அப்படியே எடுத்து நம் வலையில் இடுகிறேன் நன்றி மதுக்கூர் நண்பா! - நா.முத்துநிலவன்.

நன்றி -
http://epaper.theekkathir.org/ 11-03-2015 பக்கம்-04.

33 கருத்துகள்:

  1. நானும் அப்படியே எற்றுக் கொள்கிறேன்! மதுக்கூர் இராமலிங்கத்திற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

      நீக்கு
  2. இந்தச் சமூகத்தின்
    விளிம்பு நிலை
    மக்களை தூண்டிவிடும்
    பிற்போக்குவாதிகளை
    ஆதரிக்கும்
    ஊடகமானது
    இப்போதேனும்
    உண்மை உணர வேண்டுமென்பது
    பாமர மக்களின்
    ஒருவனாக
    எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊடகங்களிலும் இருவேறு பார்வை இருக்கிறது நண்பர் சேது!
      ஊடகங்கள் இந்த சமூகத்தின் விளைவுதானே?
      நியூட்டனின் மூன்றாம் விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும்தானே?
      எதிர்ப்பாளர், எதிர்ப்பை எதிர்ப்போர் என இது தொடருமல்லவா?

      நீக்கு
  3. அய்யா வணக்கம்.

    “தமிழர்க்குத் தாலி உண்டா “ எனும் ஒரு நூல் மா. இராசமாணிக்கனார் எழுதியது என்று நினைக்கிறேன். அந்நூல் பழந்தமிழரிடையே இம்மரபு இல்லை என்றே சோல்லும்.

    பழந்தமிழர் திருமண வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் பாடலான அகநானூற்றின் 86 ஆம் பாடல்

    “உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
    பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
    தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
    மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
    கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
    கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
    கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
    உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
    பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
    முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,
    புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
    வால் இழை மகளிர் நால்வர் கூடி,
    'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
    பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என,
    நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
    பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
    வதுவை நல் மணம் கழிந்த“ து

    எனத் தமிழ்த்திருமணம் ஒன்றை நடத்திக் காட்டுகிறது.

    இதி்ல் தாலி இல்லை . அய்யர் இல்லை இன்றைய சடங்குகள் இல்லை.

    இதே போன்றதொரு சித்திரப்பை அகம் 136 ஆம் பாடலிலும் காணமுடியும்.

    ஆண்களுக்குத் தாலியும் பெண்டிற்குச் சிலம்பும் திருமணமத்தி்ன் பின் நீக்கப்பெற்றது என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

    அக்காலத்துப் பெண்கள் திருமணத்தின் பின்தான் பூச்சூடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

    வேற்றவர் மரபின் வித்துகள் நம் பாரம்பரியத்தைப் புரட்டிப் போட்டதை இன்றைய வழக்குகள் காட்டுகின்றன. அது சரியா தவறா என்கிற ஆராய்ச்சியையும் விவாதத்தையும் வரவேற்கலாம்.

    தமிழர் மரபல்ல எனவே இதனை எதிர்க்கிறோம் என்ற அளவில் அவர்தம் மாற்றுக் கருத்துகளை முன் வைக்கட்டும்.
    பதில் சொல்வோம்.
    உண்மைதான் எனின் ஒத்துக் கொள்வோம்.

    அதைவிடுத்துத் தமிழ்க்காவலர்களாகத் தம்மைச் சித்தரித்து அதைக் காப்பதாகக் கூறி இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது, கருத்துக் கூறும் அளவிற்காவது முன்னேற தமிழைப் படிப்பதுதான்.

    தங்களின் சமூகப்பார்வை அருமை அய்யா!

    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் விஜூ, கூடுதல் இலக்கியத் தகவல்களோடு தாங்கள் முடிவுரைத்த“ தமிழர் மரபல்ல எனவே இதனை எதிர்க்கிறோம் என்ற அளவில் அவர்தம் மாற்றுக் கருத்துகளை முன் வைக்கட்டும்.
      பதில் சொல்வோம். உண்மைதான் எனின் ஒத்துக் கொள்வோம்.“ என்பதுதான் என் முடிவான கருத்தும். மாற்றுக்கருத்துக்கு மதிப்பே தராத அராஜகம்தான் இன்றைய சிக்கல். நன்றி விஜூ.

      நீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி, பெயரைச் சொல்லி கருத்திட்டிருந்தால் அதுதான் சூப்பராக இருந்திருக்கும். ஏன் இப்படி நண்பரே? எனினும் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா.
    திறனாய்வு மிக்க பதிவு.. அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    எனக்கு ஓரு சந்தேகம் சங்ககாலத்தில் இந்த தாலி கட்டும் பழக்கம் இருந்ததா?
    இது பற்றிய விளக்கத்தை தாருங்கள் ஐயா. தாங்கள் சொல்வது போல சிலப்பதிகாரத்தில் இருந்துதான் ஆரம்பம் என்று கொள்ள முடியும் த.ம 4 அருமையான விளக்கம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு, நண்பர் விஜூவின் பின்னூட்டத்தையும் ஆழ்ந்து கவனித்தால் இந்த ஐயம் தீரும். நன்றி

      நீக்கு
  6. தங்களது பரிந்துரையையும் சொல்லியிருந்தால் சிறப்பான வாதமாக இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூறு விழுக்காடு ஒப்புதல் என்றபிறகு தனிக்கருத்து எதற்கு அய்யா?

      நீக்கு
  7. வணக்கம் !
    சில உண்மைகள் கசப்பானதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவைதான் அந்த வகையில் இந்தப் பகிர்வுக்கு நானும் தலை வணங்குகின்றேன் ஐய்யா !.காலத்தின் கட்டளையைப் பாருங்கள் எந்தத் தாலி 24 மணி நேரமும் கழுத்தில் தொங்கிக்கொண்டே இருந்தால் கணவனின் உயிருக்குக் காவலாய் இருக்கும் என்று எண்ணினார்களோ அதே தாலியை தங்கத்தில் செய்தார்கள் பின் கள்வருக்குப் பயந்தும் வங்கிகளில் வைத்து விட்டு அவ்வப் போது தேவை கருதி போடுவதும் வைப்பதும் போடுவதும் வைப்பதுமாக இருக்கின்றார்கள் காலப் போக்கில் இதுவும் கடந்து போகும் என்பதே உண்மை ஆதலால் சிறப்பான இவ் ஆக்கத்தினைப் படைத்தவருகும் அதைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி. தங்களைப் போலும் அறிவார்ந்த பெண்கள் கருத்துச் சொல்வதை நான் மிகவும் எதிர்பார்த்தேன். தங்களின் நியாயமான கருத்தை நானும் ஏற்கிறேன். மனசில் கணவர் மீதான மரியாதையையும் சமூக மரபுகளையும் சுமந்து திரிபவர் பெண்டிரே அவர்களின் கருத்தை அறிவது முக்கியம் என்பதால் தொலைக்காட்சியில் முக்கியத்துவம் எதிர்பார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சகிப்புத் தன்மையில்லாத சிலர் ஏற்படுத்தும் சிக்கல் மீண்டும் மீண்டும் சமூகத்தைப் பின்னுக்கு இழுக்கிறது. நான் தாலியில் நம்பிக்கை இல்லாதவன்தான். ஆயினும் என் குடும்பத்தின் கருத்தறிந்து என் மனைவிக்குத் தாலி கட்டத்தான் செய்தேன். அதனால் நான் பிற்போக்கானவனும் அல்லன், தாலி கட்டாத வாழ்வினர் அனைவரும் சரியாக வாழ்வதும் இல்லை. பிரபலமான பல இணையர் இப்போது பிரிந்திருப்பதற்குப் பட்டியலே போடலாம். எனவே, இதை பெண்களின் முடிவுக்கு விடுவதுதான் ஆண்களுக்கு மரியாதை என்பதே என் கருத்து. சகோதரிக்கு நன்றியும் அன்பும்

      நீக்கு
  8. தங்களின் அன்பிற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  9. ///போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
    சேர்ந்து போட்டுக்கணும்- தாலி
    போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
    சேர்ந்து போட்டுக்கணும்-ஒலகம்
    புதுசா மாறும்போது,
    பழைய மொறையை மாத்திக்கணும்.’///
    பட்டக்கோட்டையாரின் பாடல் வரிகள்
    கண்டு மலைத்தேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  10. ஐயா: தற்போது தாலி அல்லது திருமாங்கல்யம் (தங்கத்தில் செய்து போட்டுக்கொள்கிறார்கள்) எல்லாம் பெண்கள் சம்மந்தப்பட்ட விசயம்.

    இந்த ஊரில் மோதிரம் ஒண்ணைப் போட்டுக்கிறாங்க.. ஆண்களும் பெண்களும். அதாவது எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுனு மற்ற பெண் ஆண்களுக்கு சொல்வதற்காக செய்றாங்கலாம். அதேபோல்தான் தாலியும். வேணா தமிழர் மரபுப்படி ஆம்பளைங்க நீங்களும் தாலி ஒண்ணைக் கட்டிக்கலாம். அந்த வகையில் ஆணும் பெண்ணும் சமம்னு ஆக்க இந்த ஆண்கள் தாலி உதவும். ஆனால் அது போல் ஆம்பளைங்க எவனும் செய்யப் போவதில்லை! அப்படி எவனாவது செய்தால் கிறுப்பயனு தான் நீங்களே அப்படி செய்பவனைச் சொல்லுவீங்க. ஏன் என்றால் அப்படி ஒரு "பழக்க வழக்கம்" நம்மிடம் இல்லை. பெண்கள் ஏன் தாலி கட்டுறாங்கனா, அப்படி ஒரு பழக்க வழக்கம் நம்மிடம் தொடர்ந்து வந்துள்ளது. இது ஒண்ணும், குடிக்கிற பழக்க வழக்கமோ, இல்லைனா புகைபிடிக்கிற பழக்கவழக்கமோ இல்லை. அதனால் இது ரொம்ப "கெட்ட பழக்க வழக்கம்"னு தூக்கி எறியவும் முடியாது. எனக்குத் தெரிய தமிழ் இஸ்லாமியர், தமிழ் கிரிஷ்டியன்கள்கூட தாலி கட்டிக்கிறாங்க.

    சரி, பெண்கள் வேணும்னா கட்டிக்கிறாங்க இல்லைனா கழட்டி வச்சுட்டுப் போறாங்க. இதில் ஏன் ஆர் எஸ் எஸ் ஆம்பளைங்களும், பகுத்தறிவாளர் என்று நினைத்துக்கொண்டு பேசும் ஆம்பளைங்களும் அடிச்சுக்கிறீங்க?


    அவன் இந்து அடையாளம்னு சொன்னால் உடனே நம்ம தமிழர் அடையாளம்னு என்னத்தையாவது விதண்டாவாதம் பேச வேண்டியது..

    அவன் கான் படம் பார்க்காதீங்கனா.. உடனே ஹிந்தி தெரியுதோ இல்லையோ "கான்" படம் எல்லாம் உலகத்தரம் வாய்ந்ததுனு நம்ம சொல்லியே ஆகணும். இல்லையா? எனக்கு ஹிந்தி தெரியாது. அதனால "கான்" படமெல்லாம் பார்ப்பதில்லை. "கான்" படம் பாக்காதேனு ஒரு பண்டாரம் சொன்னால், உடனே நான் ஹிந்தி கத்துக்கிட்டு கான் படம் பார்க்க கிளம்பிடணுமா என்ன? ரத்தக் கண்ணீர்ல சொன்னதைவிட எதுவும் புதுசா பி கே ல சொல்லப்போவதில்லை. நான் எதுக்கு எனக்குத்தெரியாத ஹிந்தில வந்த பி கே யைப் பார்க்கணும்? ஒரு பண்டாரம் ஏதோ சொல்லிப்புட்டானு நான் அதுக்கு எதிரா ஏதாவது செஞ்சே ஆகணும்னா???

    என்ன்னுடைய தாயார் இன்னும் திருமாங்கலயம் ஒண்ணு அணிந்து இருக்காங்க. தந்தையார் பகுத்தறிவுவாதம் பேசுபவர்தான். இந்தாலும் இதுதான் நம்ம ட்ரடிஷன் என்று இதல் அவர் தலையிடுவது இல்லை. நானும்தான். அம்மாக்குப் பிடிக்கிது அணிந்துகொள்றாங்க. இதே நிலைப்பாடுதான் இங்கே வாய்கிழியப் பேசும் பலருக்கும். எங்கம்மாட்டப்போயி தாலியெல்லாம் தேவையில்லைனு நான் சொல்லப் ப்போவதில்லை. அதேபோல்தான் இங்கே மேடையேறிப் பேசும் வீரர்கள் நிலையும். ஆனால் இது தமிழர் மரபு இல்லை, மண்ணாங்கட்டியில்லைனு ஊரில் உள்ள பெண்கள் தாலியை கழட்டி எறியணும்னு எதையாவது சொல்லிக்கிட்டு அலைய வேண்டியது...

    நீங்க அடிக்கடி பேண்ட்ஸ் ஷர்ட் டெல்லாம் போட்டுக்கொண்டு திரிகிறீங்க. அதென்ன தமிழர் அடையாளமா? இல்லை தமிழர்களின் மரபா?? என்ன எழவுக்கு அதைப் போட்டுக்கிட்டு திரிகிறீங்கனு தெரியலை. தாலியை அப்புறம் பார்ப்போம் நம்ம தமிழர் அடையாளம்னு அடிச்சுக்கொள்ளும் ஆண்கள் நாளைக்கே உங்க பேன்ட்ஸ் ஷர்ட்டை, கோட், சூட்டை எல்லாம் எரிச்சுடுங்களேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சரி, பெண்கள் வேணும்னா கட்டிக்கிறாங்க இல்லைனா கழட்டி வச்சுட்டுப் போறாங்க. //
      இது அவ்வளவு எளிதானது இல்லை வருண். அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதையும் அதன் பின் இருக்கும் ஆதிக்க மனபாவத்தையும் பார்க்க வேண்டும். அவரவர் விருப்பத்திற்கு பொதுவாக அனுமதிப்பதில்லை என்பதே உண்மை. பெண்ணின் விருப்பம் இல்லாமல் கட்டாயமாக ஒருவன் தாலி கட்டிவிட்டால் அவள் அவன் மனைவியாக வாழ வேண்டுமா? நீங்கள் தேவையில்லை, கழட்டி எறிந்துவிட்டுப் போகலாம் என்று சொல்வீர்கள், ஆனால் அப்படி விடுகிறார்களா? இல்லை தாலி செண்டிமெண்ட் பேசி அப்பெண்ணைப் பாழும் கிணற்றில் தள்ளுகிறார்களா? இப்படிப்பட்ட செண்டிமெண்ட் அடக்குமுறைகள் இல்லாமல் அவரவர் விருப்பத்திற்கு இருந்தால் பிரச்சினையில்லை.

      நீக்கு
  11. ''சரி, பெண்கள் வேணும்னா கட்டிக்கிறாங்க இல்லைனா கழட்டி வச்சுட்டுப் போறாங்க. இதில் ஏன் ஆர் எஸ் எஸ் ஆம்பளைங்களும், பகுத்தறிவாளர் என்று நினைத்துக்கொண்டு பேசும் ஆம்பளைங்களும் அடிச்சுக்கிறீங்க?''
    வலுச்சண்டைக்குப் போவதும், வந்த சண்டையை விடாதவரும் ஒன்றுதான் எனும் உங்கள் கருத்தில் விவாதம் இருப்பதாகத் தெரியவில்லை. வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்துக்கு? அவர்களின் பிடிவாதம்தான்.. நிற்க. பெண்களின் தாலி, ஆடையைப் பற்றி ஆண்கள் பேசுவதுதான் அரசியல். அதை எதிர்த்தும் பேசாதே என்பதும்தான்... அடையாளம் பற்றிய குழப்பம் எனக்கில்லை நண்பா. எல்லாம் கலப்படம் தான். மதுரை முனியாண்டிவிலாஸ் மாதிரி - கலப்படமற்ற - ஒரிஜினல் என்று எந்தச் சாதியும் இங்கே கிடையாது என்பதே என் கருத்து. சாதகம் பார்த்துத் தாலிகட்டித் திருமணம் செய்த கிறித்துவ, இசுலாமிய நண்பர்கள் எனக்கும் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்துத்தான் இந்த விவாதம். நன்றி

    பதிலளிநீக்கு
  12. ஐயா இந்துக்கள் தாலி கட்டிக் கொள்ள வேண்டும் என்றால் கேரளத்து மக்களிலும் இந்துக்கள் தாலி கட்டிக்கொள்வதில்லை. அவர்கள் கலாச்சாரத்தில் தாலி என்றில்லை. தாலி சென்டிமென்ட் என்பது ஒரு கலாச்சார அடையாளமே அல்லாமல் அதுவும் இடையில் வந்த ஒன்றே. ஆதிகால மனிதனிடம் இல்லை. பின்னர் நாகரீகம் வளர வளர ஏற்பட்ட ஒன்றே. அதுவும் பெண்கள் மணமானவர்கள் என்ற ஒரு அடையாளத்திற்காக. ஆண்களும் மெட்டி அணியும் பழக்கம் இருந்தது அவர்களும் நீங்கள் சொல்லி இருப்பது போல் தாலி அணியும் பழக்கம் இருந்தது. ஆனால் நாளடைவில் விட்டுப் போனது. இப்போதும் கூட பெண்கள் தாலியைக் கழட்டி வைப்பது உண்டே....பலர் அணிவது கூட இல்லை...நாகரீகம் வளர வளர அதுவும் மறைந்து போகலாம் இப்போதே பலர் அதை மறைத்தோ இல்லை அணியாமலோ இருப்பது போல்....இது அவர்வர் விருப்பம் அவ்வளவே

    நல்ல பதிவு ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நாகரீகம் வளர வளர அதுவும் மறைந்து போகலாம் இப்போதே பலர் அதை மறைத்தோ இல்லை அணியாமலோ இருப்பது போல்....இது அவர்வர் விருப்பம் அவ்வளவே ' - இதுதான் சரியான கருத்து. என் கருத்தும் இதுவே. நன்றி மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  13. விஜூ ஐயா கருத்துக்கள் மேலும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  14. மிக நேர்த்தியான பதிவு.
    பெண்களைப் போல் ஆண்களும் தாலி கட்டிக்கொள்ளலாம் என்று சிலர் கூறுகிறார்கள். மெட்டி அணிவது ஆணுக்கான திருமண அடையாளம். அதையும் கூட பெண்ணுக்கே கொடுத்துவிட்டு 'மைனராக' ஊர்சுற்றுவதில்தானே ஆணுக்கு மகிழ்ச்சி!
    என் நண்பர் சுகுமார் வனவிலங்குகளை புகைப் படம் எடுப்பதில் வல்லவர். அவரது கால் விரலில் எப்போதும் மெட்டி அணிந்திருப்பார். இது தமிழரின் திருமண அடையாளம் என்பார்.
    பெண்ணுக்கு மட்டும் மீண்டும் மீண்டும் பாரம்பரியத்தை போதிக்கும் ஆண்களில் எத்தனை பேர் பாரம்பரியமான மெட்டியை காலில் அணிந்து கொள்ள தயாராக இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்குதான் ஆணாதிக்கம் நிலைபெறுகிறது. அதைத்தான் மாற்ற வேண்டும். அதற்குத்தான் இந்த விவாதம், நன்றி நண்பரே.

      நீக்கு
  15. இன்று காலை பால் வாங்க செல்லும்போது யதேச்சையாக திரு, திருமதி பற்றி சிந்தித்த்துக் கொண்டிருந்தேன். பதிவை இப்போதுதான் படிக்கிறேன். பெண்களுக்கு திருமணம் ஆனதற்கு அடையாளமாக திருமதி என்று எழுதுகிறோம். ஆண்களுக்கு திருமணத்திற்கு முன்பும் பின்பும் 'திரு' தான். ஆங்கிலேயர்களும் அப்படித்தான். பெண்ணுக்கு மட்டும் மிஸ், மனத்திற்குப் பின் மிசஸ் .
    ஆண்களுக்கு திருமணத்திற்கு பிறகே திரு பயன்படுத்தவேண்டும் . திருமணம் செய்துகொள்ளாமல் எந்த வயது வரை இருந்தாலும் செல்வன் என்றே குறிப்பிடவேண்டும். இப்படி ஒரு சட்டம் போட்டால் என்ன ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
    முந்தைய தலை முறையினரை தாலி பற்றிய எதிர் கருத்தை ஏற்றுக்கொள்ள வைப்பது இயலாத காரியம். இவையெல்லாம் நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை காலப் போக்கில் தானாக மாறிவிடும் . பெண்களின் கல்வி அறிவு மற்றும் உலக மயமாக்கல் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில தானாக மாறுவதும் உண்டு. நாமாக முயன்ற மாற்றவேண்டிய அவசியத்தைத்தான் இந்த விவாதம் முன்வைக்கிறது. நன்றி முரளி.

      நீக்கு
    2. முரளிதரன்!

      ஆங்கிலேயப்பெண்கள் தாங்களும் த‌ங்கள் மண அடையாளத்தைக் காட்ட வேண்டியதில்லை என்று ஆங்கிலபரிபாசையை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். மணமானால் MRS , மணமாகவில்லையென்றால் Miss.மணமானவளா இல்லையா என்பதைத் தெரிவிக்க விரும்பாப்பெண்களுக்கு MS மூன்றாவதை Mez என்று உச்சரிக்கவேண்டும்.

      நீக்கு
  16. பகிர்விற்கு நன்றி அண்ணா. நானும் நூறு விழுக்காடு ஒப்புதல் பதிகிறேன். தாலியை வைத்து படங்கள் செய்த காமெடிக்கு அளவே இல்லை.
    தாலி தங்கத்தில் செய்யவேண்டும், அதுவும் இத்தனைப் பவுனில் செய்ய வேண்டும், இந்த டிசைனில் செய்ய வேண்டும் என்று எத்தனை எத்தனை பிரச்சினைகள்!! உங்களுக்குத் தெரியுமா, தங்கத்தில் ஒரு தாலிச்செயின், கருகமணியில் ஒரு தாலிச் செயின், வயிரத்தாலி என்று வேறு வாங்குகிறார்கள்...அது ஒரு ஆபரணமே அன்றி அதில் கணவனின் உயிர் இருந்தால், உயிரைப் பிரித்துப் பிரித்து வைக்கிறார்களோ?
    இங்கு வந்துவாழும் இந்தியப் பெண்கள் பெரும்பாலும் தாலி அணிவதில்லை, முக்கியமாக வேலைக்குச் செல்லும் பெண்கள். இது ஒருபுறமிருக்க, விவாதம் என்றால் எதற்கு அத்துமீற வேண்டும்? தங்கள் விவாதத்தை முன்வைக்க வேண்டியதுதானே..நம் நாடு எங்கு செல்கிறதோ தெரியவில்லை அண்ணா ...

    பதிலளிநீக்கு
  17. முத்து நிலவன் சார்

    நமது தமிழ்க் கதைகளும் சினிமாக்களும் சீரியல்களும் தாலி பற்றிய வலுவான சிந்தனையை சிறு வயதிலிருந்தே நம்முள் விதைத்து வைத்து விட்டன . பெண்களை அடிமைப்படுத்தும் குறியீடுகளில் ஒன்றாக தாலியையும் ஆண் மேலாதிக்க வர்க்கம் உருவாக்கி வந்திருக்கிறது . நமது தந்தையார் காலத்தில் புனிதமாக கருதப்பட்டது. நமது காலத்தில் புனிதமா இல்லையா என்ற இரண்டுங்கெட்டான் நிலை . பிள்ளைகள் காலத்தில் நிச்சயம் புனிதம் என்பது கேள்விக் குறியாக மாறும் . தாலி என்ற குறியீடு எப்போது உருவானதோ தெரியாது. ஆனால் வருங்காலத்தில் மெல்ல அது மறைந்து விடும் . இப்போதுள்ள பெண்களின் விழிப்புணர்வு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. http://viyaasan.blogspot.ca/2015/04/blog-post_19.html

    பதிலளிநீக்கு