இன்று விநோதினி நினைவு நாள்
விநோதினி அநியாயச் சாவு – நெஞ்சில் ஒரு முள்!
தினமும் காலையில் பத்திரிகை படிக்கத்தான் செய்கிறோம்.
13-02-3013 இன்றைய செய்தி ஒன்று ரொம்ப பாதித்துவிட்டது.
ஆண் உலகில் பெண் ஒரு “துய்க்கப்படு பொருளாகவே ”பார்க்கப்படுவதன் விளைவாக எத்தனை எத்தனைப் பெண்கள் யுகம் யுகமாகப் பாதிக்கப் படுகிறார்கள்! அவளுக்கும் உயிர் உண்டு, அவளுக்கும் உணர்வு உண்டு அவளும் நம்மைப்போல் ஒரு மனித இனம்தான் என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாத ஆண்களால் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண் இனம் இப்படி அமில வீச்சாலும், பாலியல் வன்கொடுமையாலும் அழியப் போகிறதோ தெரியவில்லையே!
காரைக்காலைச் சேர்ந்த அந்தப் பெண் பொறியியல் படித்துவிட்டு, குடும்ப வருமானத்திற்காகவே வேலைக்கும் போய்கொண்டு, காதலை நினைக்காமல் இருந்தபெண்ணை சுரேஷ் என்னும் நாய் தன்னைக் காதலிக்க வற்புறுத்த,
அடித்துப் பழுக்க வைக்க அதுவொன்றும் இரும்பல்லடா இதயம்! காதல் என்பது தானாகப் பூக்கும் காட்டுப்பூ என்பதை அந்த நாய்க்கு எப்படி விளக்க முடியும்? நக்குற நாய்க்கு செக்குத் தெரியுமா, சிவலிங்கம் தெரியுமா?
சுரேஷ் –நம்சமூகத்தால்தானே உருவாக்கப் பட்டிருக்கிறான்!
பெண்ணுரிமையை சொல்லித்தராத கல்வி முறை...
பெண் உணர்வுகளை மதிக்கக் கற்றுத்தராத குடும்ப அமைப்பு...
பெண் “ஆண் அனுபவிப்பதற்கான ஒரு பண்டம்” என்றே
பாடி ஆடும் நமது திரைப்படங்கள்...
பெண் ஆணின் கொடுமைகளைச் சகித்துக்கொண்டும், அதோடு
அவனுக்காகவே , அழுதுகொண்டும் வாழவேண்டியவள் என்றே
மீண்டும் மீண்டும் சொல்லி அழும் தொ.கா.தொடர்கள்...
“பானமடி நீ எனக்கு- பாண்டமடி நான் உனக்கு“ எனப் பாடிய பாரதி உட்பட “ஆர்லிக்ஸா மாறிவிட நா ரெடி, என்னை அப்படியே சாப்பிட நீ ரெடியா?” என்று பெண்ணே கேட்பதாக எழுதும் திரைப்படக் கவிக் கிறுக்கன்கள்..
எல்லாவற்றுக்கும் மேலாக --
“அரசியல்ல
இதெல்லாம்
சகஜமப்பா“என்பதாக எடுத்துக்கொள்ளும் ஆணாதிக்க அரசியல் என எத்தனை புறக்காரணிகள்... எல்லாம் எழுதி என்ன? என்னென்ன கனவுகளோடு வாழ்க்கைக் கணக்குகளைப் போட்டு வைத்திருந்தாளோ... எல்லாம் ஒரு அமிலவீச்சில் நாசமாகி விட்டதே!
டெல்லிப் பெண் சாவும் கொடுமையானதுதான் ஆனால், அதற்குச் சற்றும் குறையாத கொடுமையை 3 மாதமாக அனுபவித்தும் இறந்து போன விநோதினியின் அநியாய மரணம் தந்த புண் ஆறவே ஆறாது...
அதற்குத்தந்த முக்கியத்துவத்தை நமது ஊடகங்கள் இதற்கும் தந்திருந்தால் ஒரு வேளை நிதி சேர்ந்து விநோதினியைக் காப்பாற்றியிருக்கலாமோ என ஒருபக்கம் பெருமூச்சு வருவதைத் தவிர்க்க முடியவில்லையே!
முவ அவர்கள் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு “நெஞ்சில் ஒரு முள்” அதுதான் இந்த நேரத்தில் நெஞ்சில் குத்துகிறது.
--------------------------------------------------
(இது நமது 13-02-2013 தேதியிட்ட பதிவின் மீள் பதிவே இது
சில நல்ல செய்திகளை மட்டுமல்ல, கெட்ட செய்திகளையும் மறக்காமல் இருப்பது சமூகத்திற்கு நல்லது என்பதால...
இன்றைய (12-02-2015) தீக்கதிர் நாளிதழில், விநோதினியின் தந்தை, காரைக்கால் திரு. வி.ஜெயபாலன் விநோதினிக்கான இரண்டாமாண்டு அஞ்சலிச் செய்தி கொடுத்திருக்கிறார். தன் மகளுக்காகப் பெரும் போராட்டத்தை இடைவிடாது நடத்திய அந்த நல்ல உள்ளத்தின் துக்கத்தை நாமும் பகிர்ந்துகொள்வோம்-நா.மு.)
ஆம் ஐயா. கெட்டதையும் மறக்கக்கூடாது .நான் என் முக நூலில் பகிர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி எழில்.
நீக்குஆனால் இன்று தேதி 12
பதிலளிநீக்குஆம் சகோதரி. கடந்த 12-2-2013 அன்றுதான் அவர் இறந்தார். 13அம் தேதி செய்தித்தாளில் வந்தது.
நீக்குஇந்தப் புழுவை பெற்ற சொறி நாய்களுக்கு தான் (ஆயுள்) தண்டனை தர வேண்டும்...
பதிலளிநீக்குதண்டனை விவரம தெரியவில்லையே அய்யா.
நீக்குகோர்ட்டுக்குப் போனா ஜெயிச்சவன் தோத்த மாதிரி, தோத்தவன் செத்த மாதிரி..என்று சும்மாவா சொன்னார்கள்..பார்க்கலாம்.
பொதுப் பார்வையில் ஆண்களால் பெண்களுக்கு கிடைக்கும் அவமரியாதை, சங்கடங்கள், பாலியல் ரீதியான தொந்தரவுகள், வக்கிர எண்ணங்கள் என்று எண்ணிக்கையில் அடங்கா நிலையில் இருந்தாலும் தாங்கள் வாழும் இடங்களில் உள்ள சூழ்நிலையை, சுற்றியுள்ள மனிதர்களின் எண்ணங்களை வைத்து தங்களை மாற்றிக் கொண்டால் அவர்களுக்கு உருவாகும் பல பிரச்சனைகளில் இருந்து அவர்களால் தங்களை மீட்க முடியும்.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் அய்யா. ஆனால், விவரங்கள் தெரியாமலே பலரும், தெரிந்தே “இளங்கன்று பயமறியாது“ என்று சிலருமாகப் பிரச்சினைகளை விலைகொடுத்து வாங்கி விழுகிறார்களே.. அதுதானே சமூகப்பிரச்சினை! தங்களின் உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
நீக்குஈராண்டுகளுக்கு முன்னிட்ட பதிவை நான் படித்ததில்லை. ஆனால் விநோதினியைப்பற்றிய பதிவுகளில் நான் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஅதன் சாராம்சம் உங்களுக்கு:
விநோதினியின் மரணம் பெண்ணைப்பெற்ற அனைவருக்கும் ஒரு பாடம்.
1. சிறுவயதிலிருந்தே எங்கள் பெண்ணை உனக்குத்தான் என்ற சிந்தனையை (பதினாறு வயதினிலே படத்தில் சப்பாணியிடம் அவன் ஆத்தா அடிக்கடி சொல்வது: மயிலு உனக்குத்தான்). வளர்ப்பீர்களாயின், அவன் அவளை நினைத்தே வளர்வான். வாழ்வான். அது தப்பென்றில்லை. ஆனால் காலம் மாறும் அவள் அவனெட்டா சமூக நிலைக்குச் சென்றுவிட நேரும். அல்லது அவள் பெரியவளான போது இவன தனக்கு நிகரானவன் என நினைக்க மன்மில்லாமல் போகலாம் (பெண்கள் ஸ்டேடஸ் அதிகம் பார்ப்பார்கள் எவன் கணவனாக வேண்டுமென்பதில்.) மேலே சொன்ன படத்தில் மயிலு ஒரு கிராமத்துப்பெண்ணானாலும், ஒரு மருத்துவரின் நகர நாகரிக வாழ்க்கையில்தானே மையல் கொள்கிறாள்?
2. பின் பெரியவாளான பின், தன் மகளுக்கு அவனைப்பிடிக்கவில்லையென்றால், அவனிடம் மெல்ல மெல்ல உறவைத்துண்டிக்கவேண்டும்.
3. விநோதினியின் பெற்றோர் வாழ்க்கை நிலையில் கீழ்த்தட்டில் உள்ளவர்கள். கட்டிடத்தொழிலாளிகள். எனவே தங்கள் வாழ்க்கை நிலையிலிருந்து, மிகத்தெரிந்த ஒருவனை அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோக, விநோதினி சிறுமியாக இருந்த காலத்திலிருந்து அவளிடம் பழக விட்டார்கள். விநோதினியின் சமூக நிலை உயர்ந்தது. அவன் நிலை அப்படியேதான் இருந்தது. இந்நிலை மாற்றத்தை உணராமல், அவனை தொடர்ந்து வீட்டிற்கு வர அனுமதித்தார்கள். இலவு காத்த கிளியாக ஒரு நான் விநோதினியின் மனம் மாறுமென காத்திருந்தான். மாறவில்லை. கட்டாயப்படுத்தினான். பின் இந்நிலையில் அவன் தனக்குகிடைக்காதவொன்று மாற்றானுக்குச் செல்லக்கூடாதென்று அழித்தான். இப்படிப்பட்ட கொலைகள் அடிக்கடி நடப்பவை.
இது நியாயப்படுத்த எழுதுவதன்று. எதுவும் தானே முளைக்காது எனபதைச்சொல்லி, அதை முளைவிட வைப்பதெது என்று கண்டிபிடிக்க வேண்டும்.,நோய் நாடி நோய் முதல் நாடி....
செகப்பிரியரின் ஒத்தெல்லோவைப் படித்திருக்கலாம். அதில் வரும் வில்லன் இயாகோ. அவன் குணத்தை ஆராயும் விமர்சகர்கள், அவன் டெஸ்டிமோனாவை அழிக்க நினைத்ததற்கு கரணியங்களே இல்லையென்றார்கள். Motiveless malignity என்று அடித்துச்சொன்னார்கள். ஆனால், இன்று விமர்சகர்கள் உண்டு என்கிறார்கள். ஒரு வெள்ளைக்காரப்பெண், அதுவும் உயர் குலத்துப்பெண், அவ்வெள்ளையினத்தைச்சேர்ந்த தனக்கு, தானும் அக்குலத்தைச்சேர்ந்தவனாதால், தனக்கே மனைவியாக வரவேண்டும்; இல்லாவிட்டாலும் கூட, தன்னைப்போன்ற வெள்ளையனுக்கே வரவேண்டும். ஆனால், அவன் ஒரு கருப்பனை, அதிலும் அடிமையாக வந்தேறியவனை (ஒத்தெல்லோவை) அல்லவா விரும்புகிறாள் என்ற ரேசிசமே அவன் வில்லத்தனக்கு காரணம் என்கிறார்கள்.
எதார்த்தங்களை எதிர்நோக்க வேண்டும். சுரேஷ் மட்டுமன்று, அனைத்து ஆண்களும் பெண்ணை தன்னை விட உயர்வாக நினைப்பதில்லை. எந்நிலைக்குச் சென்றாலும் ஒருக்காலத்தில் தன்னிடம் பழகி வந்தவள்; அவள் மாறக்கூடாதென்று நினைப்பு வில்லத்தனத்தில் முடிந்துவிடும்.
வீநோதினியின் பெற்றோர் தடுத்திருக்க முடியும்:
1. நிலைமை மாறியவிடம் அவனை விட்டு வெகுதூரம் விலகியிருக்க வேண்டும்.
2. அல்லது அவனிடம் பக்குவாக மனத்தை தேர்த்தி, தாமாகவோ, பிறர்மூலமாக சொல்லி, இது பொருந்தாக்காமம் எனச்சொல்லியிருக்கவேண்டும். ஒரு உளவியாலாளர் வெற்றிகரமாகச் செய்ய முடியும்.
3. அல்லது தன் மகளின் விருப்பத்தைப் பெற்றிருக்க வேண்டும். முடியாவிட்டால், முதலில் சொன்ன விலகியிருத்தலைச்செய்ய வேண்டும். தன் மகளுடன் சென்னை வாசத்துக்குச் சென்றிருக்க வேண்டும்.
ஆக, விநோதினியின் மரணத்துக்கு அவர் பெற்றோரும் ஒருவகையில் காரணமே. அவரின் தாய் சில்லாண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.
இக்கதையின் பாடத்தை நீங்கள் எடுத்துச்சொல்லியிருக்க வேண்டும். வரப்போகும் மரணங்கள் தடுக்கப்படவேண்டும்.
இக்கட்டத்தில், சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் ஓட ஓட ஒரு பெண்ணை விரட்டி துண்டுதுண்டுகளாக வெட்டி அனைவரும் பார்க்க பட்ட பகலில் கொன்றான். அக்கதையும் இதே. அவனும் அவள் குடும்பத்தினரும் ஒரே ஊர்க்காரர்கள். சென்னையில் அவர்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்து அவர்கள் பெண்ணோடு பழக விட்டுவிட்டு, பின்னர் அவன் தம் பெண்ணுக்கு பொருத்தமானவனில்லை என்று விரட்டிவிட அவன் கொன்றுவிட்டான். ஏன் பழக விட்டீர்கள்? பழகுபவன் எல்லோரும் சொன்னால் விலகிவிடும் பக்குவமுடையவனாக இருப்பான் என நினைக்கலாமா?
avanukkenna veesivittan andha malarodu serthu num manathum allava innum erinthu kondey irukkirathu
பதிலளிநீக்குமகளுக்காகப் பெரும் போராட்டத்தை இடைவிடாது நடத்திய அந்த நல்ல உள்ளத்தின் துக்கத்தை நாமும் பகிர்ந்துகொள்வோம்
பதிலளிநீக்குதம +1
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
மனம் கனத்து விட்டது ஐயா... தேடி பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா த .ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆம்... வெட்கப்பட வேண்டியது ஆண் சமூகம்...
பதிலளிநீக்குஇதையெல்லாம் மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்...
வினோதினியை நினைவில் நிறுத்துவோம்...
இப்போது நினைத்தாலும் மனம் கலங்குகிறது.
பதிலளிநீக்குபெண்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.100 % சதவீத நம்பிக்கை வைக்கக் கூடாது எப்படிப் பட்ட நல்லவனாக இருந்தாலும்.பள்ளிகளில் பெண்களுக்கு இது சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அதே சமயத்தில் ஒட்டு மொத்த ஆணினத்தின்மீதான வெறுப்பை தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது
மலரன்பன் சிந்திக்கவேண்டிய கருத்துக்களைத்தான் சொலி இருக்கிறார் என்றாலும் இவ்வளவு யோசித்தா நட்பும் உறவும் பாராட்ட முடியும்
சமூக அவலம் பகிரும் ஆழமான கட்டுரை அய்யா!
பதிலளிநீக்குவினோதினி நிச்சயம் மறக்க இயலா பிம்பம் தான்!