இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்தவர் நம்மாழ்வார்

இயற்கை வேளாண் விஞ்ஞானி
கோ.நமமாழ்வார்

(உருவமே நமது தேசியக்கொடி!
காவித்  தலைப்பாகை,
வெள்ளைத்  தாடி,
பச்சைத்  துண்டு!
அவரது முகமே தர்மச்சக்கரம்!)
(நாளிதழ்களில் வெளிவந்த செய்தி - நா.மு.)

புதுக்கோட்டை, டிச.31. இயற்கையை நேசிக்கவும்,  சுவாசிக்கவும் நமக்குக் கற்றுக்  கொடுத்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் தான்  என்றார் கவிஞர் நா. முத்துநிலவன்.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் இயற்கை நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் கோ. நம்மாழ்வார் நினைவு நாளை யொட்டி செவ்வாய்க் கிழமை நடந்த “இயற்கையோடு வாழ்வோம்“ என்னும் முழுநாள் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று தனது நிறைவுரையில் மேலும் அவர் பேசியது :
இன்றைய தலைமுறை நமது பாரம்பரியப் பண்பாட்டு வேரில் தனக்குத்தானே வெந்நீர் ஊற்றிக்கொண்டும் அதையே பெருமையாகப் பேசிக்கொண்டும் திரிவதை எதிர்த்தவர் நம்மாழ்வார்.
வேளாண் அறிவியலில் பட்டம்பெற்று, வேளாண் துறையில் சில ஆண்டுகளே பணியாற்றியபோதுதான் நமது வேளாண்மை எந்த அளவிற்கு நவீனம் என்ற பெயரில் அழிக்கப்படுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்து, அத்துறை அலுவலில் இருந்து வெளியில் வந்தார். வந்தவர் படித்தவர்கள் பலபேர் இருப்பதைப் போல சும்மா இருந்துவிடவில்லை...  வேதி உரங்கள் என்னும் பெயரில் இந்த நவீன விஷத்தை நம் தாய்மண்ணில் கலப்பதை எதிர்த்தும், இயற்கை வேளாண்மை என்னும் நமது பாரம்பரிய விவசாய முறைகளைப் பிரசாரம் செய்துமே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததை நாம் அறிவோம். 75-ம் வயதில்கூட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தின் மீத்தேன் எரிவாயுத் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போதே அவர் காலமானதுதான் இன்றைய இளைய சமூகத்திற்கு அவர் தரும் வாழ்நாள் செய்தி.
“வாழ்ந்தால் வாழைபோல் வாழ வேண்டும், வீழ்ந்தால் விதைபோல விழ வேண்டும்“ என்பதே அவர் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம்.
தாய்மண்ணே வணக்கம்,  உழவுக்கும் உண்டு வரலாறு,  நெல்லைக் காப்போம்,  எந்நாடுடைய இயற்கையே போற்றி,  நோயைக் கொண்டாடுவோம்  முதலான அவரது நூல்கள் நம் மண்டையில் அடிக்கும் மண்வளச் செய்திகளைக் கொண்ட கதை நூல்கள் அல்ல, அடுத்த தலைமுறைக்கான விதை நூல்கள்.
கோலா போலும் கண்ணுக்குத் தெரிந்த விஷத்தையே வெளிப்படையாகப் பிரசாரம் செய்யும் நம் நாட்டில், கண்ணுக்குத் தெரியாத கனிகளைக்கூட விஷமாய் மாற்றி, வயிற்றுக்கும் வாழ்வுக்கும் உலைவைக்கும் செயற்கைமுறைப் பயிர்களுக்கு அவர்தான் மாற்றுவழி சொன்னார். ஆனால், பன்னாட்டு மூலதனக் கும்பினிகள் விளம்பரத் தொகைக்கே அதிகம் செலவிட்டு, பொய்யை விதைத்து பணத்தை அறுவடை செய்வதை நாம் அறிய வேண்டுவதே அவரது கனவு.
அவரது நடைப்பயணங்கள் நாடெங்கும் விழிப்புணர்வை விதைத்தன.  1998- ல் கன்னியாகுமரி முதல் சென்னைவரை சுதேசப் பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்தைத் தமிழக மக்களுக்கு உணர்த்த, தனது முதல் நடைப்பயணத்தை மேற்கொண்டார். பின்னர் 2000 -ல் அங்கக வேளாண்மைக்காக ஈரோடு மாவட்டத்தில் 25 நாள்கள் பிரசார பயணம் மேற்கொண்டார். 2003-ல் பூம்புகார் முதல் கல்லணைவரை கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து 25 நாள்கள் நடைப்பயணம் சென்றார்.
கடைசியாக மீத்தேன் எரிவாயு எடுப்பது நமது நஞ்சை வளம் கொழித்த நமது தஞ்சை மண்ணில் நஞ்சைக் கலக்கும் என்னும் பிரசாரத்திற்காகவே தனது இறுதி பிரசாரத்தின்போது அவர் உயிர் துறந்தார். அந்த வகையில் காந்தியின் நவகாளி யாத்திரையைவிட உயர்ந்தது நம்மாழ்வாரின் இயற்கை வேளாண் பிரசாரம். இதை நமது தலைமுறையாவது புரிந்துகொண்டு செயல்படாவிட்டால் அடுத்த தலைமுறை நம்மைச் சபிக்கும். அவரது வாழ்க்கையே நமக்கு எச்சரிக்கை என்றார் முத்துநிலவன்.
முன்னதாக, காலையில் நடைபெற்ற பிரசார இயக்கத்தை மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் சீனு. சின்னப்பா தொடக்கி வைத்தார். இதையொட்டி பொதுமக்களுக்கு இயற்கை உணவு வகைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இயற்கை உணவு ஆர்வலர்கள் சண்முகபழனியப்பன், மருத்துவர் எஸ். ராமதாஸ்,  பாபு.ராஜேந்திரன், ராம. தீர்த்தார், சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
------------------------------------------------------------
நன்றி - தினமணி நாளிதழ்-31-12-2014 திருச்சிப்பதிப்பு
செய்தியாளர் திரு மோகன்ராம் அவர்கள். இதன் சுருக்கத்தை வெளியிட்டிருக்கும் தமிழ்-இந்து நாளிதழுக்கும் அதன் செய்தியாளர் திரு சுரேஷ் அவர்களுக்கும்
02-01-2015 நாளிட்ட “தினமலர்” திருச்சி பதிப்பில் வெளியிட்ட தினமலர் நாளிதழ் நண்பர்களுக்கும் எனது நன்றி.


By DN, புதுக்கோட்டை,
First Published : 
31 December-2014 02:39AM IST

----------------------------------- 

முக்கியமான பின்குறிப்பு - எந்தவித எதிர்பார்ப்பும்  இன்றி இயற்கையை நேசித்த நம்மாழ்வாரின் மீது கொண்ட பற்றின் காரணமாக மட்டுமே பலபாடுபட்டு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திய இயற்கை நலவாழ்வுச் சங்கநண்பர்கள் மணிகண்டன்,பழ.குமரேசன், தா.பாண்டியன், பழ.மணிகண்டன் ஆகிய இளைஞர்கள் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள்.

இவர்களைப் போலவே, அழைப்பிதழில் பெயர் போடாமலே வந்து கலந்து வாழ்த்திப் பேசிய தோழர்கள் மா.சின்னத்துரை(சிபிஎம்-மாவ.செ), ஜெயசீலன்(நாம்தமிழர்-மாவ.செ.), மற்றும் கிராமியப் பாடகர் சத்திய பாலன் ஆகியோரும் மிகுந்த பாராட்டுக்குரியோர்.
--------------------------------------- 

17 கருத்துகள்:

  1. மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. நம்மாழ்வாருக்கு என்னுடைய அஞ்சலிகளும்.

    பதிலளிநீக்கு
  2. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் தொண்டு போற்றுதலுக்கு உரியது! விழா பகிர்வுக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. அண்ணா
    நெகிழ்ச்சியான பதிவு!! அதிலும் படத்துக்கு கீழே நீங்க கொடுத்திருக்கிற caption !!! சான்சே இல்ல:))) அவ்ளோ சூப்பர்!! பயனுள்ள மற்றொரு பதிவு படித்த திருப்தி ...மிக்க நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  4. இயற்கையை பாழ்படுத்தாமல் நேசிப்பதே நம்மாழ்வாருக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

    பதிலளிநீக்கு
  5. எந்நாடுடைய இயற்கையே போற்றி! போற்றி! நம்மாழ்வார் தொண்டை விழாவாக்கிய நலவாழ்வு சங்கத்திற்கு எனது பாராட்டுதலும்.

    பதிலளிநீக்கு
  6. அய்யா வணக்கம்!
    நம்மாழ்வாரின் பேச்சைக் கேட்டிருக்கிறேன்.
    நம்முடைய பாரம்பரிய இயற்கை விவசாயம் எப்படி அழிக்கப்பட்டு இன்று உழவன் எப்படியெல்லாம் வீணடிக்கப்பட்டான் என்பதன் வேதனை அவரது குரலில் எப்போதும் ஒலிக்கும்.
    எல்லாம் இருந்தவரை ஒன்றும் இல்லாதவனாக்கும் நவீன அறிவியலால் நாம் அடைந்தது என்ன என்று கேட்கும் அவர் குரலை ஆமோதித்தவர்களுள் நானும் ஒருவன்.
    ரேச்சல் கார்சன் என்பாரின் சைலன்ட் ஸ்பிரிங் ( Silent Spring ) எனும் நூலில் இருந்து பூச்சிக் கொல்லிகள் எவ்வாறு இயற்கைச் சீரழிவிற்குக் காரணமாயிற்று என்பதை அவர் விளக்கும் போது நாம் எப்போது அந்த விழிப்புணர்வினை அடையப்போகிறோம் என்று தோன்றும்.
    சமூகத்திற்காக உழைத்த ஒருவரை அவர் இறந்த பின்னும் மறந்திடாமல், நினைவு கூரும் இயற்கை நல்வாழ்வு சங்கத்தாரின் பணியும், அதை யாவரும் அறியத்தந்த தங்களின் செயலும் போற்றற்குரியன.
    ஆழமான பொருளைக் கூட எளிமையாகப் பேச்சுத் தமிழில் சொல்ல முடியும் என்பதை என்பதை உணரச்செய்த ஒரு ஆளுமையை அவரின் நினைவு நாளில் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  7. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    தம 4

    பதிலளிநீக்கு
  8. அருமையான மனிதர் பற்றிய மிகவும் அழகான ஒரு பதிவு!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  9. அண்ணா, தங்களுக்கும் , அண்ணிக்கும், லட்சியா விற்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான பகிர்வு ஐயா...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கும் அண்ணி, லட்சியாவிற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா

    பதிவை இன்னும் படிக்கவில்லை,,,மீண்டும் வருவேன் :)

    பதிலளிநீக்கு
  14. அருமையான பதிவு....

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. அன்புள்ள ஐயா,

    வணக்கம். மதிப்புமிகு நம்மாழ்வார் அவர்கள் என்றைக்கும் நம் மரியாதைக்கும் மாண்பிற்கும் உரியவர். அவர் என்றைக்கும் மறையமாட்டார். இயற்கையை நேசிக்கும் உள்ளங்களில் அவர் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அதே உணர்வில் இருந்து உங்கள் கட்டுரையை வெளியிட்ட இதழ்களுக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு!

    பகிர்வுக்கு நன்றி...

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. சிறந்த மனிதர் நம்மாழ்வார் அவர்கள்..அவர்களின் நினைவு நாளில் பின்குறிப்பில் குறிப்பிட்டிருப்பது போல எந்த எதிர்பார்ப்புமின்றி நடத்திய 'இயற்கை நல்வாழ்வு சங்க' நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!
    உங்கள் பேச்சு எப்பொழுதும் போல அருமை அண்ணா..அவர் வாழ்வே நமக்கு எச்சரிக்கைதான்..

    பதிலளிநீக்கு