“நக்குற நாய்க்கு செக்கு என்ன? சிவலிங்கம் என்ன?“

கற்பழிப்புக்குக் காரணம் பெண்களின் ஆடைகள்தானாம்! - பிரேசில் நாட்டுக் கண்டுபிடிப்பு!  
அட முட்டாள்களே!
ஒரு வலைப்பக்கதில் இந்தச் செய்தி பார்த்து, சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் தலையில் அடித்துக் கொண்டேன்.
'கற்பழிப்புகள் நடக்கக் காரணம் பெண்கள் அணியும் ஆடைகள்தான்' என்று பிரேசில் நாட்டில் நடந்த கருத்தாய்வுக் கணிப்பு கூறியதாம்!
ஓரிருவர் அல்ல பலரும் பலமுறை சொல்லியிருப்பதுதான் இது!

இதையே நம்நாட்டில் எத்தனை மேதாவிகள் ஏற்கெனவே சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார்கள் என்பதுதான் நமக்குத் தெரியுமே!
உலகம் முழுவதும் பெண்ணடிமைத்தனம் இப்படித்தான் இருக்கிறது!

நல்லவேளையாக –
அந்த நாட்டுப் பெண்கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும், அதற்கு நல்ல மனம் கொண்ட ஆண்களும் ஆதரவு தருவதாகவும் வந்திருக்கும் செய்தி ஆறுதல்தருகிறது.

ஆண்கள் மேல்சாதிக்கண்ணோட்டத்தில் பெண்களை நடத்துவது, 
சாதி வேறுபாடு இல்லாத நாடுகளிலும் இப்போதும் இருப்பதுதானே?

பெரியாரிடம் ஒருவன் கேட்டானாம் –
“அய்யா, திருநீறு பூசுறத நீங்க முட்டாள்தனம்னு சொல்றீங்க... ஆனா, பழனி சித்தனாதன் திருநீறு டப்பா, டன்டன்னா அமெரிக்கா இங்கிலாந்து உள்பட எத்தன வெளிநாட்டுக்குப் போகுது தெரியுமா?
அதுக்குப் பெரியார் சொன்னாராம்,
“அட முட்டாப் பயலே, முட்டாப்பயலுக இந்தியாவுல மட்டும்தான் இருக்காய்ங்கெ னு உனக்கு யார்ரா சொன்னது?” 

 பிரேசில் என்ன அமெரிக்காவே சொன்னாலும், நம்ம பாட்டன் வள்ளுவன் சொன்னதுதான்...“எப்பொருள் யார்யார்வாயக் கேட்பினும்...”  சரிதானே?

ஆடை அழகாக இருக்கும் எல்லையைத் தாண்டி, “என்ன இந்தப் பொண்ணு இப்படிப் போகுது?னு கேட்கும் அளவிற்கு இருக்கக் கூடாதுதான். ஆனால் அதை யார் நிர்ணயிப்பது?

தன் விளையாட்டு வசதிக்காக குட்டைப்பாவாடை அணிந்தாடிய சானியா மிர்சாவின் மேல் ஆபாச வர்ணத்தைப் பூசியதே ஒரு கும்பல்? அதை எப்படிக் கட்டுப்படுத்துவீர்கள்?

ஆபாசம் என்பது உடையில் மட்டுமல்ல, பார்க்கும் கண்ணோட்டத்திலும் உண்டல்லோ? குழந்தைக்குப் பாலூட்டும் பெண்ணின் மார்பை முறைத்துப் பார்ப்பவன் தன்தாயிடம் பால்குடித்தவன் தானே?
பிணமாய்க் கிடக்கும் பெண்ணைப் பாலியல்வன்கொடுமை செய்பவனை (ஏதில் பிணம் தழீஇ –குறள்-913)  எந்த உயிரினத்தில் சேர்ப்பது?

சிறுமிக்கு பாலியல் தொல்லை – தினகரன் செய்தி http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=81470 – இதுபோல எத்தனை எத்தனை செய்திகள்!
“நக்குற நாய்க்கு செக்கு என்ன? சிவலிங்கம் என்ன?“னு நம்ம கிராமத்துக் கிழவிகள் சொல்ற சொலவடைக்காவது இவர்களுக்கு அர்த்தம் தெரியுமா?

சரியய்யா... பிரேசில் நாட்டுப் பேரறிவாளிகள் சொல்வதில் உண்மையிருப்பதாகவே (ஒரு வாதத்திற்காக) வைத்துக் கொள்வோம்! அப்படியெனில்... 
இன்ன பால் என்றே தன்னை அறியாத 3வயதுப் பெண் குழந்தையும், இன்னபால் என்றே தன்னை உணராத 70வயதுக் கிழவியும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை என்ன காரணத்தினால் என்பீர்? 

சொல்லுங்கய்யா... சொல்லுங்க!

பிரேசில் கருத்துக் கணிப்புத் தகவலுக்கு நன்றி - http://ulavan.wordpress.com/2014/03/31/
------------ இந்த வாரச் சிந்தனை –நா.மு.- 31-03-2014. --------- 
ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாம். அது மற்ற நாளெல்லாம் புத்திசாலிகளாக இருப்பவர்க்குத் தானே? என்று நான் கொண்டாடுறதில்லிங்கோ! ---- 

22 கருத்துகள்:

  1. மனிதராய்ப் பார்க்க வேண்டியதுதானே..ஆடை எதற்குப் பார்க்கவேண்டும்? உருப்படாத மாக்கள்!! ஆடை பற்றி பேசினாலே செம கோவம் வருது ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றிலும் தான் மாறிக்கொண்டு, அதேபோல் மாறிவரும் பெண்ணை மாறக்கூடாது என்று அறிவுரைவேறு!
      படிக்காத விவசாயி பேண்ட் போட்டுக்கொண்டு, படித்த பெண் புடவைதான் கட்டவேண்டும் என்னும் பொருளில் “இப்படித்தான் இருக்கவேணும் பொம்பள“என்பது பழம்பழசு, “செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலஉடுத்த தயங்குறியே?”என்பது புதுப்பழசு!

      நீக்கு
  2. பிரேசிலில் சொன்னவர்களின் கண்ணோட்டம் அப்படித்தான் இருப்பதால் சொல்லி உள்ளார்கள்...

    அவர்களை ஏதேனும் விலங்கு பெயரை திட்டினால், அதன் விலங்கிற்கு கேவலம் என்பதால் _________

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நக்குற நாயி, எண்ணெய்ப் பிசுக்கு இருக்குற இடத்த எல்லாம் விழுந்து விழுந்து நக்குமாம் அது பூசை அறை என்றோ, கழிவறை என்றோ பார்ப்பதில்லையாம்... அதுதான்..

      நீக்கு
  3. ஆபாசம் என்பது உடையில் அல்ல
    பார்ப்போர் மனதில் அல்லவா இருக்கிறது.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழைப் பெண்ணின் மேலாடைக் கிழிசலில் சதை தெரிந்தால் (அதை எழுதினால்) பிற்போக்கு, அதில் அந்தப் பெண்ணின் ஏழ்மையை மட்டும் பார்க்க முடிந்தால் அதுதான் முற்போக்கு என்று நாங்கள் சொல்வதுண்டு அய்யா. இதையே பக்தர்கள் “கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்“என்பர்

      நீக்கு
  4. //ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாம். அது மற்ற நாளெல்லாம் புத்திசாலிகளாக இருப்பவர்க்குத் தானே? என்று நான் கொண்டாடுறதில்லிங்கோ! ---- //புத்திசாலிகளால் தான் ஜோக் சொல்ல முடியும்னு நிரூபிச்சுடீங்க :)))
    சரி அவங்களோட அம்மாவோ, சகோதரிகளோ அப்டி உடுத்திருந்தாலும் அது பொருந்துமா? பார்வை என்பது கண்களில் இல்லை கண்ணோட்டத்தில் தானே இருக்கிறது அண்ணா! அருமையான வாதம் அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்திசாலிகளால்தான் ஜோக் சொல்ல முடியும் என்றில்லை, நானும் சொல்வேனாக்கும் என்றுதான் நிருபித்திருக்கிறேன்பா!
      “கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்?”-குறள் சரியா?

      நீக்கு
  5. இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும், பெண் பாலியல் கொடுமைகளுக்கு காரணம், அவர்கள் ஆடைகளே என்று தான் சொல்லுவார்கள்,உலகமெங்கிலும்... #கசப்பானான உண்மைகள்.

    நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால், இ்ன்னும் ஐம்பது யுகத்துக்கும் இப்படித்தான் இருக்கும் விமல்! அதனால்தான் நீங்கள் நான் நம் குடும்பத்தினர், நட்புலகம் எல்லாம் சேர்ந்தால் ஐம்பது ஆண்டென்ன ஐந்தே ஆண்டுக்குள் கூட மாற்றலாமில்ல?

      நீக்கு
  6. பொறுங்கள் இப்போது தான் வெளியில் சொல்லவே ஆரம்பித்துள்ளோம். நாளில் பெண்கள் எழுவோம்.அப்போது பழைய பஞ்சாங்கம் எல்லாம் எங்கள் காலில்விழும் காலம் விரைவில். கல்வியுடன் கத்தியும் சுமப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பஞ்சாங்கம் உங்கள் காலில் விழுந்து கால்களை அழுக்காக்கிவிடும் கவிஞரே! உடனடியாக கிழித்து எறியுங்கள்! கல்வி சரி... கத்தி? ரெட்டைக்குழல் துப்பாக்கிதான் சரி. ஒருகுழல் பெண்கை, மறுகுழல் பெண்களைப் புரிந்துகொள்ளும் ஆண்கை

      நீக்கு
  7. உடைதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுதான்! நல்ல பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஐயா
    படித்ததும் எனக்கும் பிரேசில் நாட்டு மேதைகளைப் பார்த்து உண்மையில் சுய நினைவோடு தான் பேசீறீங்களானு கேட்கத் தோனுது. தவறு செய்பவர்கள் தன்மீதான தவறை மறைப்பதற்கு தேடும் அல்ப காரணங்களில் இதுவும் ஒன்று. பெண்கள் விழிப்போடு நடமாடும் காலம் விரைந்து வருகிறது என்பதும் உண்மை தான். பெண்கள் மீதான மதிப்பிற்கும் இந்த செய்திக்கான தங்கள் ஆதங்கத்திற்கும் நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'தவறு செய்பவர்கள் தன்மீதான தவறை மறைப்பதற்கு தேடும் அல்ப காரணங்களில் இதுவும் ஒன்று' - சரியாகச் சொன்னீர்கள் பாண்டியன் இதுதான் உண்மை. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  9. ஆமாம் ஐயா! நானும் நாழிதளில் பார்த்து மிகவும் கோபமுற்றேன். மிகவும் சரியான பதிலடி ஐயா! பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது அவர்களின் எண்ணமும் செயலும்...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது அவர்களின் எண்ணமும் செயலும் - நன்றி ஜெயசீலன் (நீங்கள் புதுக்கோட்டையிலா இருக்கிறீர்கள்? அப்படியானால் நாம் நேரிலும் சந்திக்கலாமே? எனது எண்-9443193293)

      நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. இம்மாதிரி குற்றங்களுக்கு சட்டம் மட்டும் கடுமையாக இருந்துவிட்டால், இந்த மாதிரியான காரணங்களை சொல்லுவார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரியான குற்றங்கள் குறையத் தற்காலிக வழி கடுமையான சட்டங்கள், இரண்டாவது மற்றும் நிரந்தரத் தீர்வு, பெண்களையும், மாற்றுச்சாதியினரை(?)யும் மனிதராக நினைக்கும் ஒரு சமூகச் சூழலை உருவாக்குவது.

      நீக்கு
  12. 'நச்' ன்னு நெத்தியடி!

    ஆதிகாலத்துலே பெண்கள் உடை எப்படி இருந்திருக்குமுன்னு கோவில்களில் சிற்பங்கள் மூலமாத் தெரியவருதே........... இப்பவும் அதே போல் உடை அணிஞ்சுருந்தால்......... கலாச்சாரக் காவலர்கள் என்ன சொல்லி இருப்பாங்க????

    பதிலளிநீக்கு