பாவலர் ஓம் முத்துமாரி காலமானார்

பிரபலமான கிழவி வேடத்தில்
பாவலர் ஓம்முத்துமாரி
“என்னம்மா தேவி ஜக்கம்மா - உலகம் தலைகீழாத் தொங்குதே ஞாயமா? - இப்ப
சின்னஞ்சிறுசெல்லாம்
சிகிரெட்டுப் புடிக்குது
சித்தப்பன் மார்கிட்ட தீப்பெட்டி கேக்குது! - என்னம்மா தேவி ஜக்கம்மா”
என்னும் கிராமியப் பாடல் எங்கேயாவது உங்கள் காதுகளில் விழுந்திருக்கலாம். பலரையும் கவனிக்க வைத்த பாடல் அது.

தமிழகத்துக் கிராமியக் கலையன்பர்கள் எல்லாம் பாவலர் ஓம் முத்துமாரி என்று மிகுந்த அன்போடும் மரியாதையோடும் அழைத்த அந்தக் கிராமத்துக் குயில் இன்று நம்மை விட்டுப் பறந்து போய்விட்டது. அவருக்கு நமது வீரவணக்கம்!

80வயதுக்கும் மேலாகிவிட்ட அவர் இறுதிவரை தன்குழுவினரோடும் கரகரக் குரலோடும் தமிழ்நாட்டின் ஏராளமான பல்லாயிரக்கணக்கான மேடைகளில் எல்லாம் முழங்கியவர். கலைஇரவு நிகழ்ச்சிகள் அவரால் களைகட்டிவிடும்!



''நெல்லை சங்கரன்கோவில் அருகில் இருக்கும் திருவேங்கடம் அவரது ஊர். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், அவர் நம் மேடைகளில் துள்ளிக் குதித்து ஆடிப் பாடி நம் மக்களை மகிழ்ச்சிப் படுத்தியவர், அவர் இப்போது தன் ஊரில் நடக்கும் நிகழ்ச்சியில் உங்களைப் பேச அழைக்கிறார் வரமுடியுமா?" என்று ஒருநாள் அழைத்தார், கரிசல் கிருஷ்ணசாமிக்கு வாசித்த அற்புதத் தபலாக் கலைஞரும் பாடகருமான கரிசல் திருவுடையான்

திருவுடையானே தனது கம்பீரக் குரலில் பாடிக்கொண்டு தபலா வாசிக்க, அதைக்கேட்ட திரைஇயக்குநர் ரா. பார்த்திபன் தனது படவிழா ஒன்றிற்கு அவரை அழைத்துப்பாடச் சொன்னது தனிக்கதை!  அவரே அழைத்தபோது இருபெரும் கலைஞர்களின் விருப்பத்தைத் தட்டமுடியாமல் அவர்கள் ஊருக்குப் போய் பாவலர் எதிரில் இருந்து கேட்டு ரசிக்க நான் பேசிவிட்டு வந்து 10ஆண்டுகள் இருக்கலாம்...   மறக்கமுடியாத நிகழ்ச்சி அது!

அவரது பெண்வேடம் ஊரெல்லாம் பிரபலம்...  முதலில் பார்க்கும் யாரும் அவரைப் பெண் என்றே -ஒரு கிராமியக் கிழவிஎன்றே- நம்பி விடுவார்கள் அந்த அளவிற்கு ஈடுபாடாக மேடையை ஆளும் அற்புதமான குழு அவரது!

பாடல்களில் கிராமியச் சொற்கள் மட்டுமல்ல, கூர்மையான அரசியல் விமர்சனமும், நக்கல் நையாண்டியும் புகுந்து விளையாடும்.
கேட்கும் கூட்டம் சிரித்து உருண்டு போவதுடன்,
பகுத்தறிவுச் சிந்தனைகளையும் ரசிக்கும். அதுதான் அவரது சிறப்பு

பாம்படத்தைக் காதில் மாட்டிக்கொண்டு, பார்த்துக் கொண்டிருக்கும் இளவட்டங்களைப் பார்த்து மாராப்பை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டு கண்ணடித்துக் கொண்டு அவர் பண்ணும் ரவுசு அடடா!

அவரது பாடல், நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்து நூலாக்க வேண்டும் என்னும் அந்தக் கலைஞனின் ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை என்னும் கவலை எனக்கு இப்போதும் உண்டு.

தமிழக அரசின் கலைமாமணி விருது,  தமுஎகச வின் கிராமியமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.

அவரைப்பற்றிய  திரு சே.குமார்  அவர்களின் வலைப்பதிவை நீங்கள் அவசியம் படிக்க மட்டுமல்ல, அவரது நிகழ்ச்சி ஒன்றை விடியோப் பதிவாகவும் பார்க்க அன்புடன்  நம் நண்பர்களை அழைக்கிறேன்.

http://vayalaan.blogspot.com/2013/11/blog-post_18.html

நன்றி நண்பர் சே.குமார் அவர்களே!  தொலைதூரத்தில் இருந்துகொண்டு அந்தக் கிராமியக் குயிலை நினைத்துக் கொள்கிறீர்களே இதுதான் நம பாவலர் ஓம் முத்துமாரியின் உண்மையான சொத்து!      நீங்கள் வாழ்க!

8 கருத்துகள்:

  1. எனது பதிவினைப் பற்றி தாங்கள் சொல்லியதற்கு நன்றி ஐயா...
    ஒரு கிராமியக் கலைஞனின் மறைவை நினைவிலாவது கொள்வோமே என்று எழுதியதுதான் அந்தப் பகிர்வு... நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அய்யா
    பாவலர் ஓம் முத்துமாரி அவர்களின் மறைவு கிராமிய கலைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஒப்பற்ற அவரது கலைப்பணி மக்கள் நெஞ்சங்களை விட்டு அகலாது. அவரை நினைவு கூர்ந்த தங்களுக்கும் சே.குமார் அவா்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  5. அய்யா வணக்கம்
    கிராமியக் கலைஞர் பாவலர் கலைமாமணி ஓம் முத்துமாரி .,இவர் ஒரு சகாப்தம் .தனது குரலில் நாம் சிந்திக்கவே முடியாத எல்லை வரை நம்மை இட்டுச்செல்பவர். .மிகஎளிமையானசொற்கள் மிகவும் உயர் சிந்தனை .இவர் இப்போது இல்லை மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் எனப் பல்வேறு இயக்க மேடைகளில் மக்கள் கலைஞனாக பரிணமித்தார்...இவரது கலைநிகழ்ச்சியை தற்செயலாய் கடந்து போகையில் கேட்டேன் .என்னைக்கடக்கவிடாமல் கட்டிநிற்கவைத்தநிகழ்வது ,இந்தக்குரலை வைத்துக்கொண்டுஎப்படி என்னைக்கட்டிப்போட்டார் இன்று வரை வியக்கிறேன் . அவரின் இழப்பு ஈடுசெய்யமுடியாத இழப்பே .அவரின் நிகழ்வுகளையும் ,நினைவுகளையும்நினைவுகூர்ந்த தங்களுக்கும் ,தோழர் சே.குமார் அவர்களுக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  6. முத்துமாரி அவர்கள் பற்றி அதிகம் அறியாமல் இருந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன். இவர்களைப் போன்றவர்களால்தான் கிராமியக் கலைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன நன்றி ஐயா! சே.குமாரின் பதிவையும் கண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான புகழஞ்சலி ....
    உயிருடன் இருக்கும் இவர்போன்ற வித்தகர்களை அருள் கூர்ந்து அறிமுகம் செய்க...

    பதிலளிநீக்கு
  8. கருத்துரைத்த நண்பர்கள் கவியாழி, அ.பா., டிடி, சுந்தரம், முரளி, மது ஆகியோர்க்கு நன்றி. மற்றும் நண்பர் திரு சே.குமார் அவர்களுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி நண்பர்களே!

    பதிலளிநீக்கு