ர, ழ எழுத்துகள், எண்களை எழுதும் முறை (தமிழ் இனிது -13,14)

 தமிழ் இனிது-13 

(இந்து தமிழ்-29-8-2023)

இன்றைய தமிழில் ர, ழ எழுத்துகள் சிதைந்து வருகின்றன! ர எழுத்தின் வரி வடிவமும்,  ழ   எழுத்தின்   ஒலி வடிவமும்   ஆபத்தில்   உள்ளன! 

ர எழுத்து, கணினி அச்சில் படாத பாடு படுகிறது. அரசு ஏற்பு பெற்ற  “செந்தமிழ்”  உள்ளிட்ட   சில எழுத்துருக்களில்  ர  தனது   துணைக்   காலின்கீழ்  ஒரு கோடு  எனும்  சரியான  வடிவத்தில்   இல்லை!   துணைக்காலாக மட்டுமே உள்ளது! தொலைக்காட்சிச் செய்தி எழுத்துகளை, இனி கவனித்துப் பாருங்களேன்..  கடைசி எழுத்து,   துணைக்கால்   போட்டு, புள்ளி வைத்திருக்கும்.

ஒருங்குறி (யுனிக்கோடு) எழுத்துருவில் இது சரியாகவே இருப்பதால் இன்னும் உயிர் இருக்கிறது. அச்சகங்களில் பெரும்பாலும் “செந்தமிழ்” எழுத்துருவே பயன்பாட்டில் இருப்பதால், கண்ணில் படும் இடங்களில் எல்லாம் ர எழுத்து, துணைக் காலாகவே தெரிகிறது.  தற்போது  பாடநூல்களில்  மாற்றி விட்டாலும் வினாத் தாள்களில் தொடர்கிறது! இணைப்பில் உள்ள படங்களைப்  பாருங்கள் ---- சரி இதை என்னதான் செய்வது?

இதை நிலையாகச் சரி செய்ய  ஓர் எளிய வழி உள்ளது -

ஒருங்குறி எழுத்துகளை மட்டுமே பயன்படுத்த அரசாணை வெளியிட வேண்டும்.  ஏற்கெனவே ஒரு தலைமுறை –பாடநூல், இதழ்கள்,  நூல்கள்,  செய்தித்தாள்கள் உள்ளிட்ட - அச்சு வடிவங்களில் தவறாகப்  பழகியதை  மாற்ற முயல்வது,  தமிழ்  எழுத்து  வடிவைக்  காக்கும்  பணியாகும்.

ழ எழுத்து, உச்சரிப்பில் பலபாடு படுவது ஊர்அறிந்த ரகசியம்! மிகப் பெரிய பேச்சாளர், தமிழறிஞர், எழுத்தாளர், அரசியல் தலைவர்களும் கூட இதில் கவனம் செலுத்துவதில்லை!

ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்க வந்தவர், “நான் தமிளை   எப்படி பிளையில்லாமல் பேசுவது, எளுதுவது எனும் தலைப்பில் ஆய்வு செய்கிறேன்” என்றார். இது மிகையல்ல, நடந்த நிகழ்ச்சி!  ஏற்கெனவே எனது “இலக்கணம் இனிது” நூலிலும் பதிவு செய்திருக்கிறேன்.

தமிழ் – மொழியின் சிறப்புகளில் ஒன்று, தமிழ் எனும் சொல் அமைப்பு! வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று ஒலி வடிவமும் கொண்டது. அதோடு, குறிகளற்ற எழுத்து, குறி கொண்ட எழுத்து, மெய்யெழுத்து என, வரி வடிவத்திலும் நுட்பம் காட்டி நிற்பது.

மிகச் சிலரே இந்த எழுத்தின் தனிச் சிறப்பை அறிந்து அழுத்தம் திருத்தமாக –தமிழின் உயர்வறிந்து- சரியாக உச்சரிக்கிறார்கள்.  இதை,  பள்ளி  வகுப்பிலிருந்து,  மேடைப் பேச்சு,  ஒலிப்பதிவுக் கூடங்களில்  மட்டுமின்றி  அச்சிலும்  கண்காணிப்பது  அவசியம்.  இல்லாவிடில்   அடுத்த தலைமுறையில் “தமிள் வலர்வதை” தவிர்க்க முடியாது!

தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் அமைப்புகள் வழியாக, இவ்வாறான தமிழ் அழிக்கும்  பிழைகளைச் சரி செய்யலாம். செய்தருள்க அரசே!

-----------------------------------------------------------------------------------------  


(நன்றி - இந்து தமிழ் - 29-8-2023)
------------------------------------------------ 

தமிழ்இனிது (14)

எண்களை எழுதும் முறை சரியா?

எண்களை  1, 2 என எண்களாகவே  எழுதும்போது வராத சிக்கல், ஒன்று இரண்டு என எழுத்தில் எழுதும்போது சிலருக்கு வந்துவிடுகிறது. அதிலும் 10-பத்து, 11-பதினொன்று வரை வராத   குழப்பம், 12,13 எண்களை எழுத்தில் எழுதும் போது ‘பனிரெண்டா பன்னிரண்டா?’ ‘பதிமூன்றா, பதின்மூன்றா?’ என சந்தேகம் வந்து விடுகிறது! குழப்பமே இல்லாமல் தவறாக எழுதுவதை விட, குழப்பம் நல்லதுதான்.

பனிரெண்டு என்பது தவறு பத்து+இரண்டு பன்னிரண்டு என்று எழுதுவதே சரி. இதேபோல பதிமூன்று என்பதும் தவறு. பத்து+மூன்று பதின்மூன்று என்பதே சரி.

இதேபோல எண் 23,  இருபத்தி மூன்று என்று எழுதுவது தவறு. இருபத்து மூன்று என்பதே சரி. இவ்வாறே இவை போன்ற 33, 44, 55, போன்ற எண்களையும்  எழுதுக. 

“எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபு” -எந்தப் பொருளை, எந்தச் சொல்லால் எவ்வாறு உயர்ந்தோர் சொன்னார்களோ  அவ்வாறே நாமும் சொல்வதே மரபு” என்று இதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்! (நன்னூல்-பொதுவியல்-37)

முன்னூறா முந்நூறா? முன்னூறு என்பது முன் நூறு என்றாகி,  முந்திய நூறு என்று பொருள் தரும். எனவே, மூன்று நூறு எனப் பொருள் தரக்கூடிய முந்நூறு என்பதே சரி.  

நான்கு +நூறு – நால் நூறு – நானூறு என்பதே சரி. நாநூறு என்பது தவறாகும்.

ஐந்து+ நூறு ஐந்நூறு என்றே வரும். ஐநூறு என்றும் எழுதுகிறார்கள். செய்ந்நன்றி என்பதை, செய்நன்றி என்றே இக்கால வழக்கில் எழுதுவது போல, பொருள் மாறாத வகையில் இதை ஏற்கலாம் என்பதே என் கருத்து. அதற்காக எட்டு நூறு எண்ணூறு என்பதை என்னூறு என்பது எழுத்துப் பிழையுடன் கருத்துப் பிழையும் சேர்ந்துவிடும்.

ஒன்பது+நூறு தொள்ளாயிரம் இதை தொல்லாயிரம் என்று எழுதுவது தவறு. (ஒன்பது+நூறு தொண்ணூறு ஒன்பது+ஆயிரம் தொள்ளாயிரம் என்றுதான் பழைய மரபு இருந்தது – அது தனிப்பெரும் ஆய்வு). இன்றைய வழக்கு தொள்ளாயிரம் என்பதே.

எண்கள் அனைத்தும் அஃறிணைப் பொருளில் வரும். எனவே 20ஆடுகள், 30மாடுகள் என்பன போல, 5பேர், 10பேர், 100பேர் என மனிதர்களைக் குறிப்பது தவறு . ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர், இருபதின்மர், முப்பதின்மர், நூற்றுவர், ஆயிரவர் என்னும் வழக்கே சரியானது

ஆயினும், 15,752பேரை எழுத நேரும்போது, “பதினையாயிரத்து எழுநூற்று ஐம்பத்திருவர்” என நீளும். இதனால் இயல்பாக எழுதும் வேகம் குறைவது நல்லதல்ல.

தமிழ் எண்கள் தனித்தனியே சுருக்கமாகவும் கூட்டெழுத்தாகவும் புழக்கத்தில் இருந்ததை இப்போது இழந்துவிட்டோம். அதை மீட்டல் எளிதல்ல. எனவே 50பேர் 100பேர் என்று எழுதுவதை ஏற்கலாம் என்பதே எனது கருத்து.

மூன்று சுழி என்பதைப் பேச்சு வழக்கில் மூணுசுழி என்றும், ஒன்றாம் வகுப்பு என்பதை ஒண்ணாம் வகுப்பு என்றும் எழுதப் பழகிவிட்டோம். மூன்று-மூனு, ஒன்று-ஒன்னு என்றுதான் பேச்சு வழக்கில் வரும். இந்த இரண்டு சுழிகள் எப்படியோ மூன்று சுழிகளாகிவிட்டன! “இரண்டு“ எனும் சொல்லில் மூன்றுசுழி! “மூன்று” எனும் சொல்லில் இரண்டுசுழி! – இதுதான் இனிய தமிழ் விளையாட்டு!

பேச்சு வழக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் சட்டம் இயற்ற முடியாது, எனினும் நமது எழுத்து மரபாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு! இளைஞர்களின் மொழியில் “செம்மை, சிறப்பு” (சூப்பர்?) என்பதை “செம” என்பதும் நன்றாகத்தானே இருக்கிறது!

----------------------------------------------------------------------------------- 


(நன்றி - தமிழ் இந்து - 05-9-2023)

-------------------------------------------------------------------------------- 

 

தமிழ் இனிது (12) மருவியது மரூஉ (11)வேண்டா சொல் வேண்டாம்

நன்றி - தமிழ் இந்து -நாளிதழ் 

செவ்வாய் - திசைகாட்டி பகுதி

---------------------------------------------------------- 

தமிழ் இனிது (கட்டுரை -12) 

அதெப்படி மருவி வருகிறது?

நா.முத்துநிலவன் 

(15-8-2023 தமிழ்இந்து)

பிற்காலச் சோழர்கள் பரகேசரி ராஜகேசரி  என்றும், பாண்டியர்கள் ஜடாவர்மன், மாறவர்மன் என்றும் முன்னோர் பெயரில் பட்டம் சூட்டிக் கொண்ட வரலாறு தமிழ்நாட்டில் உண்டு. செட்டிநாட்டுப் பெரியோர் உள்ளிட்ட தமிழர் சிலரிடம் இவ்வழக்கம் இன்றும் உள்ளது. இதில் தந்தைவழிப் பெயர்கள்தான் இருக்கும். தாய்வழிச் சமூகத்தை மாற்றி, தந்தைவழிச் சமூகமாக நிலைநிறுத்திய ஆணரசியலும் இதிலுள்ளது.

இந்த வகையில் வந்ததுதான் தாத்தா பெயரைப் பெயரனுக்கும், அரிதாகப் பாட்டி பெயரைப் பெயர்த்திக்கும் வைக்கும் வழக்கம். பெயரைத் தாங்கியவன்/ள் என்று பொருள். பெயரோடு, ‘முன்னோர் பெருமையைத் தாங்கிய’ எனும் உட்பொருளும் உண்டு!

பேச்சுவழக்கில் பெயரன் பேரன் ஆனான்.  இதை இலக்கணத்தில் “மரூஉ” என்பர்.  பேச்சு வழக்கில் மருவி –மாறி- ஒலிப்பதே மரூஉ.   

இரு குறில் எழுத்துகளின் ஓசை, ஒரு நெடில் ஓசைக்குச் சமம். அ+அ=ஆ, இ+இ=ஈ முதலான இன எழுத்துகளின் தோற்றத்தை இந்த வழக்கில் வரும் ‘மரூஉ’ உணர்த்தி நிற்பது, தனி ஆய்வுக்குரியது.

 “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” (பெயரியல்-640) தொல்காப்பிய இலக்கணத்தின்படி, சொற்கள் மருவியதற்கும் வரலாறு இருக்கலாம்!  ஆய்வதும் புதிய பொருள்காண்பதும் ஆய்வாளர் கடன்.

பெயர்த்து – பேத்து  “பேத்துருவேன்“

வெயர்த்து – வேர்த்து  “வேர்த்து விறுவிறுத்து“

மிகுதி – மீதி  எஞ்சி நிற்பது

பகுதி – பாதி. பாதியை அரை என்பதே எழுத்து வழக்கு. அரையை,   -இடுப்பு எனும் பொருளில்- “புலித்தோலை அரைக்கசைத்து” என்கிறது சுந்தரர் தேவாரம். உடலின் கால் பகுதியைக் கால் என்றதும், உடலின் நடுவில் இடையில் உள்ள இடுப்பை அரை என்றதும் தமிழ் நுட்பம்!

இந்தப் பாதிப்பில், குறிலும் ஒற்றும் சேர்ந்து  நெடிலாவதும் உண்டு!

செய்தி – சேதி – “அப்பறம், வேறென்ன சேதி?“

பொழுது- போது, போழ்து. பொழுது சாயும் காலம் -சாய்ங்காலம், பொழுது சாயும்-நேரம் -சாயந்தரம் என்பன வழக்கு. இரவு, பகலைச் சந்திக்கும் விடிகாலைப் பொழுதே சந்தி, பகல் முடியும்  காலமே  அந்தி. “இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுது”-வைரமுத்து இப்போது-இப்பொழுது என்பன எழுத்து, இப்ப-என்பது வழக்கான மரூஉ.

உறவுப் பெயர்களில் மரூஉ

புதிதாக மணமாகி வந்தவள், ‘கணவரின் உடன்பிறந்தாளை எப்படி அழைப்பது?’ என்று விழிக்கிறாள், அதற்கு, ‘நாத்தூண் நங்கை’ என எடுத்துக் கொடுக்கிறார்,  இளங்கோவடிகள்! (சிலப்பதிகாரம்-கொலைக்களக் காதை- வரி-19) இதுவே பிறகு ‘நாத்தனார்’ என மருவியிருக்கலாம். இதிலும் ஒரு நுட்பம், நாற்று - இளம் பயிரை- பிடுங்கி வேறு வயலில் நடுவது வழக்கம். “இந்த வீட்டில் பிறந்து, வேறொரு வீட்டில் வாழப்போகும் பெண்” எனும் பொருளில் நாற்று-அன்னாள் –நாத்து-அன்னாள்– நாத்தனாள் - நாத்தனார் ! தமிழ் இனிக்கிறதல்லவா?

இதற்கு இணையான மற்றொரு சொல் ‘கொழுந்தியாள்’. ‘இவள், இந்த வீட்டில் துளிர்விட்ட கொழுந்து அன்னாள் -கொழுந்தனாள், கொழுந்தியாள்- மற்றொரு வீட்டிற்குப் போய்  வாழ்ந்து, பிள்ளைக் கனி தருவாள்’ எனும் பொருள்தான் எவ்வளவு சிறப்பு! ஆங்கில உறவுப் பெயர்கள் -in-law என்றே வருவதை ஒப்பிட்டு, சொல்லின் வரலாறு, தமிழ்ச் சமூக வரலாற்றைச்  சொல்வதைத் தனியே ஆய்வு செய்யலாம்.

-------------------------------------------------------------- 

                                        (நன்றி – தமிழ் இந்து – நாளிதழ் – 22-8-2023)
                                  ------------------------------------------------------------------------ 

தமிழ் இனிது - கட்டுரை - 11 - நா.முத்துநிலவன்

( தமிழ் இந்து -15-8-2023 )

வேண்டா சொல் வேண்டாம்! 

அருகில் – அருகாமையில்

            அருகில் என்பதே சரியான சொல். அருகண்மை எனும் ஒருபொருட் பன்மொழி, திரிந்து அருகாமை ஆகிவிட்டது, ஆனால் இது அருகு எனும் சொல்லுக்கு எதிரான பொருளையே தருகிறது. வழக்கில் உள்ளது என்பதாலேயே, சரியான சொல்லை விட்டுவிட்டு, நாம் தூரத்தில் நிற்க வேண்டாம்!  ‘அருகில்’ எனும் சொல்லையே  புழங்குவோமே!

எத்தனை – எத்துணை

எத்தனை – எண்ணைக் குறிக்கும். ”எத்தனை வயது?” எத்துணை – அளவைக் குறிக்கும். “எத்துணை வெள்ளம்?  “எத்துணையும் பேதமுறாது” -திருவருட்பா-5298. ஆனால், கால- வெள்ளத்தையே நுணுகி எண்ணும் இக்காலத்தில் “எத்துணை” எனும் சொல் வழக்கிழந்தது. “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” எனும் பட்டுக் கோட்டையார் தொடங்கி, “எத்தனை பேர் கூடி இழுத்தும் என்ன? சேரிக்குள் வரவில்லை தேர்” எனும் செ.ஆடலரசன் வரை,”எத்தனை“ என்பதே வழக்கில் உள்ளது.

எல்லாரும் - எல்லோரும் - எல்லீரும்

வள்ளுவர் “எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” என்கிறார்(125), கம்பர், “எல்லாரும்” என்கிறார் ( கம்ப ராமாயணம்-பால-நகரப் படலம்-167), இவ்வாறு முன்னரே, “எல்லாரும்” ”எல்லோரும்” இரண்டு வழக்கும் இருந்ததை, “ஆ ஓ ஆகலும் செய்யளில் உரித்தே”  (தொல்-680) என ஏற்கச் சொன்னார் தொல்காப்பியர்.  இப்போதும் இலக்கிய வழக்கில் இவ்விரண்டு சொற்களையுமே பாரதி பயன்படுத்தி எழுதியிருக்கிறார்.

‘எல்லாரும்’ எனும் சொல்லே மக்கள் வழக்கில் இப்போது உள்ளது.  ‘எல்லீர்’ எனும் சொல், பழந்தமிழில் இருந்ததாகத் தெரிகிறது.

கட்டிடம் – கட்டடம்

          “கட்டிடத் திறப்பு விழா” என்பது தவறு. கட்டும் இடமே கட்டிடம்-மனை(Plot/Site). கட்டி முடிக்கப்பட்டது கட்டடம் (Flat/Building). கட்டு-அடம்- அடுத்து-அடுக்கிக் கட்டுவது.   Apartment என்பதை, “அடுக்ககம்” எனலாம்.

நம்மைப் பொறுத்ததா?-யாரைப் பொருத்தது?

பொருத்திப் பார்ப்பது பொருத்தம். திருமணத்தில் பொருத்தம் பார்க்கிறோம். பொறுத்தம் என தமிழ்ச்சொல் ஏதும் இல்லை. ஆனால், ”கொஞ்ச காலம் பொறுத்துச் செய்யலாம்” என்பதற்கு, “காலம் தாழ்த்தி பொறுமையாகச் செய்யலாம்“ என்பது பொருள். ஆனால், “இதற்கு நான் பொறுப்பல்ல” என்பது, பொறுப்புத் துறப்பு. இரண்டு சொற்களும் வேறு வேறு ஒப்பீட்டுப் பொருளில் ஒன்று போல வழக்கில் உள்ளன என்றே புரிந்து கொள்ள வேண்டும். இலக்கணத்தில் பொருத்தமே பொருத்தம்!  ஆக சொல் மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சி நம் அனைவரையும் பொருத்ததே!

இரண்டு மாதிரியும் புழக்கத்தில் உள்ள சொற்கள் சில -

வெயில் – வெய்யில் : வெப்பத்தின் காரணமாக வருவது வெயில். குறளும் “என்பில் அதனை, வெயில்போல” என்றே சொல்கிறது (குறள்-77). “மாலை வெயில் மயக்கத்திலே மயங்கிடலாமோ?” என்றுதான் கேட்கிறார் பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம்.

ஆனால் “வெய்யிற் கேற்ற நிழலுண்டு” என்கிறார் கவிமணி தேசிக வினாயகர்.  “வெய்யில்” எனும் பெயரில் நல்ல கவிஞர் ஒருவரும் எழுதி வருகிறார்.  பேச்சில் வெய்யில் அடிப்பதாகத் தான் சொல்கிறோம்.

வேண்டா- வேண்டாம் : “வேண்டா” என்பதே இலக்கண வழக்கு (குறள்-37). இச்சொல் இப்போது, “வேண்டாம்”என்றே எழுத்திலும் பேச்சிலும் புழங்கி வருகிறது. இனி, ‘வேண்டா’ இலக்கணத்தைத் தெரிந்து கொண்டாலும், யாரும் அப்படி எழுதுதல் வேண்டாம் அல்லவா? “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” உலகநாதரின் உலகநீதி.

--------------------------------------------------

இதில் கடைசி வரியை உலகநாதரின் உலக நீதி என்பதே சரியானது. இதைத் தவறுதலாக நான், ஔவையார் என்று எழுதிவிட்டதைச் சுட்டிக்காட்டிய நண்பர் வடுவூர் சிவ.முரளி அவர்களுக்கு நன்றி.


--------------------------------------------------------------------------