அவன் போய்விட்டான், அவன் கவிதையும் குடும்பமும் வாழட்டும்!



எங்கிருந்தோ வந்தான்,
இரண்டாண்டுக்கும் குறைவாகவே எங்களோடு இருந்தான்,
இருந்தவரை வீதி கலை-இலக்கியக் களத்தோடும்
புதுகை கணினித் தமிழ்ச்சங்கத்தோடும்,
முழுநிலா முற்றத்தோடும் இரண்டறக் கலந்திருந்தான்..
ஒரு முழுநிலா நாளில் சொல்லாமலே போய்விட்டான்!
கவிதையிலும் கல்வியிலும் அன்பு கலந்து வாழ்ந்த வைகறை,
26ஆவது வீதிக் கூட்டத்தை எடுத்து நடத்திய இரண்டொரு நாள்,
கழித்து, எங்களையெல்லாம் விட்டு திடீரென்று போய் விட்டான்!

17-04-2016 அவன் எடுத்து நடத்திய வீதி-26 நிகழ்வு!
20-04-2016 அன்று மருத்துவ மனையில் சேர்ந்து
21-04-2016 இல் போய்விட்டான்!
35வயதுதான்!
மூன்றரை வயது கைக்குழந்தை ஜெய்சன்,
அவனன்பின் துணைவி, எங்கள் சகோதரி ரோஸ்லின்
அவனை மறக்க முடியாமல் துவண்டுகிடக்கும் “வீதி“ நட்பு!
பிரிவில் தாளாமல் செயலற்ற கணினித் தமிழ்ச்சங்கம்!
அவனில்லாமல் இருண்டுகிடக்கும் முழுநிலா முற்றம்!
முழுநில முற்றத்தில்...03-05-2015... வைகறையுடன்
நானும் பாவலர் பொன்.க.வும். 
புதுக்கோட்டைப் பதிவர் திருவிழாவின் போது, எங்களின் அறிக்கை அனைத்தும் இப்படித்தான் முடியும்…
“இன்னும் சந்தேகங்கள் இருக்கிறதா..?                                          முன்னதாகவே எங்களை அழைக்கலாம்...”
அதில் தரப்பட்ட முதல் வரிசையில் அவன் அலைபேசி எண் இருக்கும். வலைப்பதிவர் கையேட்டை இறுதிப்படுத்த இரவு பகலாக வைகறையும் ஸ்ரீமலையும் கார்த்திநண்பர்களும் பாடுபட்டதை நாங்கள் மட்டுமே அறிவோம் ஆனால், வெளியூர் நண்பர்கள் வரும்போது தங்கும் விடுதிக்குத் தொடர்புகொள்ளத் தந்த செல்பேசி எண்களால் அனைவருமே அறிந்திருப்பர் 
அவன் பெயர்தானே முதலில் இருந்தது!
வைகறை             மு.கீதா      மீரா.செல்வக்குமார்         
          9688417714         9659247363             8870394188   என்று இருந்ததை வெளியூரிலிருந்து வந்த யாரும் மறந்திருக்க முடியாது..



வைகறையின் “நந்தலாலா“ இணைய இதழைத் தொடங்கி வைக்கிறார் விக்கிப்பீடியா இந்தியத் திட்ட இயக்குநர் திரு இரவிசங்கர். 
அருகில் வைகறை நண்பர்கள் கவிஞர்கள் யாழி,  பூபாலன் 


பதிவர் விழாவில் திரு இரவிசங்கர் அவர்களுக்கு
நினைவுப்பரிசளிக்கிறார் கவிஞர் வைகறை
பதிவர் விழாவை நடத்தக் கூடி ஆலோசித்த முதல் சந்திப்பு முதற்கொண்டு, விழாமுடிந்து நன்றி தெரிவித்த கூட்டம்வரை சுமார் நான்குமாத காலமாக அவனது அசராத உழைப்பு எங்கள் அனைவரையும் அசரவைத்தது என்பது சற்றும் மிகையல்ல! எல்லாவற்றுக்கும் மேலாக, பதிவர் அனைவர்க்கும் வண்ணத் தாள் ஒட்டித்தந்த சுமார் 300 நூல்கள் முழுவதிலும் வைகறையின் வேர்வையும் ஒட்டியிருந்திருக்கும் அது வைகறையின் யோசனை!
வருவோர்க்கு ஒரு வாசமலருடன் சேர்த்து, வண்ணத்தாள் சுற்றி நூலை அன்பளிப்பாக வழங்கவேண்டும் என்று தமது நண்பர் பலரிடமும் அவரே கேட்டு வாங்கிய நூல்கள் அதில் பற்பல!
விழா முடிந்து, எனது வலைப்பதிவில் நன்றி தெரிவிக்கும்போது…
விழாவின் வெற்றியில் வேர்வை சிந்தியவர்கள் …
”…திருச்சிமாவட்டம் முழுவதும் அலைந்து விழாவின் உணவில் ருசிக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்த இரா.ஜெயலட்சுமி போலவும், நேரலை நிகழ்வுக்காக உழைத்த UK Infotech  தம்பிகள், வழிகாட்டிய மது கஸ்தூரிரெங்கன், கையேட்டுக்காக வேர்வை சிந்திய ஸ்ரீமலையப்பன், நாக.பாலாஜி உள்ளிட்டவிதை-கலாம்தம்பிகள் முகுந்தன்,காசி பாண்டி, இரவு-பகல் பாராமல் உழைத்த விஞர்கள் வைகறை, மீரா.செல்வக்குமார், பாவலர் பொன்., தமிழாசிரியர்கள் கு..திருப்பதிகுருமகா.சுந்தர் மற்றும் விளம்பரம் வாங்க, நிதி திரட்ட விழாவன்று  அத்தனை நிகழ்வின் துளிகளிலும் தமது வேர்வைத் துளிகளை இழைத்து விழாவை மணக்கச் செய்த மாலதி ரேவதி, வேணி, சுமதி, நாகநாதன், சோலச்சிதிருமதி(ரோஸ்லின்)வைகறை, தமிழ்அமிர்தா (அவர்தம் குழந்தைகள்) இன்ஃபோடெக் லீலா, புனிதா, உள்ளிட்ட நம் சகோதர - சகோதரிகளின் அன்பின் விளைவே இந்த விழா!” --- என்று எழுதியது இன்றும் என்பதிவில் மட்டுமல்ல நினைவிலும் உள்ளது…
“வீதி-27” வைகறைக்கான அஞ்சலிக் கூட்டத்தில்
திருச்சி அய்யா தமிழ் இளங்கோ இரங்கல் உரை
அழைப்பிதழ் தயாரிக்கும்போது ஒருமுறை என்னை அழைத்து, (என் மூத்த மகள் வயதே, வைகறைக்கு என்பதால் மிகுந்த மரியாதை கலந்த அன்புடன் தயங்கித் தயங்கியே பேசுவார்) “ஐயா, இந்த விழா முடிஞ்சதும் நம்ம நந்தலாலா இணைய இதழை வெளியிடணும்யா“ என்றார்! ”ஏன் வைகறை? இந்த விழாவிலேயே வெளியிடலாமே?” என்றேன். மிகுந்த மகிழ்ச்சி ஆனால் தயங்கி, “இல்லங்கய்யா.. நூல் வெளியிட 5000 ரூபாய் நாமதான் போட்டிருக்கோம்.. அவ்ளோ பணம்..?” என்று இழுத்த போது நான் கோவப்பட்டேன் – “என்ன வைகறை? இரவு பகலாக நீங்கள் உழைக்கிறீர்கள்.. உங்கள் இதழை வெளியிடக் காசு யார் கேட்கப்போகிறார்கள்?“ என்று அதட்டிவிட்டு அதை உடனடியாக அழைப்பிதழில் சேர்க்கச் சொன்னதோடு, விக்கிப்பீடியாவின் திரு இரவிசங்கர் அவர்களைக் கொண்டு வெளியிடவும் செய்தோம்! 

அதுபோலவே, “வலைப்பதிவர் கையேடு-2015” நூலில் அந்த இணைய இதழுக்கு ஒருபக்க விளம்பரத்தையும் சேர்த்தோம்!
அன்பை ஒரு சிறு சிரிப்போடும், உழைப்போடும் தந்த அந்த வைகறை எங்களை அழவைத்துப் போய்விட்டான்!

கணையம் செயலிழந்ததை அறியாமல் வெறும் வயிற்றுவலி என்று எண்ணி முற்றிய நிலையில்… மருத்துவ மனையில் சேர்ந்ததைக் கூட வேறு யாருக்குமே தெரிவிக்காமல், இறந்த செய்தி மட்டுமே எங்களை இடியாய் வந்து தாக்கியது!

விழாவில் பிரபல பதிவர் வேலூர் இராமன் பேச,
விழாக்குழு மகா.சுந்தரிடம் அடுத்து அழைக்க வேண்டிய
பதிவர் பட்டியலைத் தந்து விவாதிக்கிறார் வைகறை.
பின்னணியில் பிரபல பதிவர் தி.ந.முரளிதரன்
கடந்த 04-05-2016 அன்று திரண்ட “வீதி“ நண்பர்கள்
சில தீர்மானங்களை நிறைவேற்றினோம் –
(1)   வைகறையின் துணைவியார் ரோஸ்லின் ஆசிரியப் பயிற்சி அவருக்கு அரசுப்பணி பெற வீதி நண்பர்கள் முன்னெடுப்பது.
(2)   வைகறையின் மூன்றரைவயதுக் குழந்தை ஜெய்சன் படிப்புக்கு ஏற்பாடு செய்வது, அவன் பெயரில் நிதி திரட்டி ஒரு நல்ல தொகையை வரும் ஆக.15க்குள்  நிரந்தர வைப்பில் இடுவது.
(3)   35வயது இளங்கவிஞர் ஒருவர்க்கு “வைகறை நினைவு இளங்கவிஞர் விருது” ஒன்றை ஆண்டுதோறும் வழங்குவது.
(4)   வைகறையைப் பற்றிய குறும்படம் ஒன்றைத் தயாரிப்பது
(5)   நிதி திரட்ட –தற்காலிகமாக- புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க வங்கிக் கணக்கையே பயன் படுத்திக்கொள்வது. அதில் நா.முத்து பாஸ்கரன் & பொன்.கருப்பையா இருவர் பெயரில் உள்ள -இணைந்த கணக்கில்- தொகை தந்துதவ நம் அனைத்து நண்பர்களிடமும் வேண்டுகோள் விடுப்பது.
இருகை கூப்பி வேண்டுகிறோம்!
எங்கள் வைகறை ஆயுள்காப்பீடு உள்ளிட்ட எந்தச் சேமிப்பும் இல்லாமலே போய்விட்டான், நாங்கள்தான் அவன் சேமிப்பு! பணிக்காலக் குறைவால் குடும்பஓய்வூதியமும் கிடையாது! எனவே நாம்தான் அவனது குழந்தையை வளர்க்க வேண்டும்! அந்தச் சகோதரிக்கு நாம்தான் துணைநிற்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டான் வைகறை!
வலைப்பதிவர் திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வீதி விழாவில்
பதிவர் விழாச் சீருடையில் வைகறை
கைகொடுங்கள் நண்பர்களே! (இந்த நிதி சேர்ப்பின் காரணமாக இந்த ஆண்டு நடத்த இருந்த கணினித் தமிழ்ச்சங்க விழாவை ரத்து செய்கிறோம், அடுத்த ஆண்டு நடத்திக்கொள்வோம் என்று தீர்மானித்து விட்டோம். இதுதான் இப்போது முதற்கடமை!)

நன்கொடை தருவோர் கவனத்திற்கு-
வங்கிக் கணக்கு விவரம்
- 
First Name             : MUTHU BASKARAN
Display Name        : Muthu Baskaran N and Karuppiah Pon
Bank                      : STATE BANK OF INDIA
Branch                   : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code          : 16320
IFSC Code              : SBIN0016320
CIF No.                   : 80731458645
(இந்த வங்கிக் கணக்கு கணினித்தமிழ்ச்சங்க நண்பர்களின் ஆலோசனைப்படி, “நல்லாசிரியர்திரு பொன். அவர்கள் உள்ளிட்ட இருவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.    ஆயினும் ஒருவர் பெயர் குறிப்பிட்டாலே போதுமானது)
உடனடியாக வந்த தொகை விவரம் வருமாறு –
 1] நா.முத்து நிலவன்                                          -ரூ10,000
 2]
மு.கீதா                                                                 -ரூ 10,000
3]
பேராசிரியர் துரைப்பாண்டியன்                 -ரூ10,000
 [
பாரத் மெட்ரிக் பள்ளி]
4]
கவிஞர் திருமிகு ஆர்எம்வி.கதிரேசன்  -ரூ 6,000
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் புதுகை
 [
முதல் தவணையாக]
 5]
கவிஞர் சோலச்சி                                             -ரூ5,000
6]
ஆக்ஸ்போர்டு திருமிகு சுரேஷ்                  -ரூ5,000
 7]
தமிழாசிரியர் கழகம் புதுகை                       -ரூ5,000
   [
முதல் தவணையாக]
 8]
கவிஞர் மாலதி                                                   -ரூ5,000
 9]
கவிஞர் மணிகண்டன்                                    -ரூ1,000
 10]
கவிஞர் மீனாட்சி சுந்தரம்                             -ரூ1,000
 11]
புலவர் ஜெயா                                                     -ரூ 500
12]
கவிஞர் நெப்போலியன் சிங்கப்பூர்.          -ரூ5,000
13) திருமிகு அரசன் ,சென்னை.                  -ரூ.1000                                                                                                                                         -------------------------
           (
நாள் 06.5.2016 வரை)                              ரூ 64,500    

இத்தொகை 06-05-2016 அன்று 
வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டது.

தொகை சேரச்சேர, பின்வரும் தளத்தில் தொகைதந்தோர் விவரம் வெளிப்படையாக வெளியிடப்பட்டு வருகிறது. இதில் உங்கள் பெயரும் இடம்பெற “வீதி” உரிமையுடன் வேண்டுகிறது



புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ச்சங்கம் மற்றும் “வீதி” -கலை இலக்கியக் களத்தோடு இணைந்து பணியாற்றிவரும் “விதைக்கலாம்“ எனும் இளைய சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு மூ.25,000 என நண்பர்கள் மது.கஸ்தூரியும் ஸ்ரீமலையப்பனும் தெரிவித்து நெகிழ்ந்திருக்கிறார்கள். இந்நெகிழ்வு மற்ற நம் நண்பர்களிடமும் -தங்கம் மூர்த்தி சொன்னதுபோல “ஈரம்காயாமல் இருக்கிறது” ஆகஸ்டு-15க்குள் ரூ.5லட்சம் நிதி சேர்க்க வேண்டும்!
தொகை பெரிதல்ல, வைகறை நம்மேல் வைத்த அன்பே பெரிது!
வைகறை ஜெய்க்குட்டி
இதுதொடர்பான தகவல் தரவும் பெறவும் -
vaigaraifamilyfund@gmail.com  தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இது தொடர்பான தகவல்கள் பார்க்க -
1. மு.கீதாவின் வலைப்பக்கம்                  -
2. மது கஸ்தூரிரெங்கன் வலைப்பக்கம் –
3. திருமிகு தமிழ்இளங்கோ அய்யா அவர்களின் வலைப்பக்கம் –
4. திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வலைப்பக்கம் –
வைகறையின் நினைவைப் பகிர்வோரின் பக்கங்களை “வீதி” இணையப் பக்கத்தில் பகிர்வதோடு, நிதி பற்றிய விவரங்களும் அதில் தொடர்ச்சியாக வெளியிடப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த கவிஞர் தங்கம்மூர்த்தி வைகறையின் துணைவியார்க்குப் பணிவாய்ப்பைப் பெற மற்றும் குழந்தையின் கல்விக்குத் துணைநிற்க உறுதி தந்திருக்கிறார்..இவர் சொன்னால் செய்யக்கூடியவர்.

வரும் ஆகஸ்டு-15க்குள் இந்த நிதி முழுவதும் குழந்தை ஜெய்சன் பெயரில் நிரந்தர வைப்புநிதியாக எடுத்து, கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் கையால் சகோதரி ரோஸ்லின் வசம் வழங்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

வீதி விழாவில் கவிஞர் ராசி.பன்னீர்செல்வன் முன்வைத்த “35வயதுக்கு உட்பட்ட இளைய கவிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கவிஞர் வைகறை நினைவு விருது” வழங்க வேண்டும் எனும் யோசனை அனைவராலும் மறுப்பின்றி ஏற்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

உங்கள் பங்களிப்பு ரூ.500ஆயினும், பத்தாயிரம் எனினும் நெகிழ்வுடன் ஏற்கப்படுவதோடு நேர்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் வெளியிடப்படும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தீர்மானங்கள் நிறைவேறினால், கவிஞர் வைகறயின் குடும்பம் நிறைவாக வாழும் என்பது மட்டுமல்லாமல், கவிஞர் வைகறையின் நினைவும் நம்மோடு வாழும் என்பதால் உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
இதை மற்ற நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.

நன்றி வணக்கம்.
--அன்புடன்  
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர்
கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை மற்றும்
“வீதி” –கலை இலக்கியக் கள நண்பர்கள், புதுகை.

12 கருத்துகள்:

  1. அன்புள்ள அய்யா,

    கவிஞர் வைகறையின் மறைவும் அவரைப் பற்றிய பல தகவல்களை அறிகின்ற பொழுது நெஞ்சம் கனக்கிறது. அன்னாரின் குடும்பத்திற்கும் செல்வன் ஜெய்சனுக்கும் புதுகை வலை உறவுகள் ஆறுதலாக இருப்பதை அறிந்து பெருமைப் படுகிறேன்.

    ‘சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
    நில்லென்று கூறி நிறுத்தி வழி போனானே
    நின்றது போல் நின்றான் நெடுந்தூரம் பறந்தான்
    நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
    மணம் பெறுமோ வாழ்வே...!’

    கவிஞர் வைகறையின் நினைவைப் போற்ற புதுகை உறவுகள் எடுக்கும் அனைத்து முயற்சியும் வெற்றி அடையும்.

    கவிஞர் வைகறையின் குடும்பத்திற்குப் புதுகை செய்யும் நன்றி என்றும் வாழும்...!

    நேசக்கரம் நீட்டிய உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    த.ம. 1

    பதிலளிநீக்கு
  2. வைகறை என்னும் அற்புதக் கவிக்கு உதவுதல் நம் கடமை ஐயா
    எனது தொகையினை இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கின்றேன்
    தங்களின் முயற்சி வெல்லட்டும்

    பதிலளிநீக்கு
  3. முன்னரே நான் உங்களிடம் தெரிவித்ததைப்போல உங்களுடன் நானும் சேர்ந்துகொள்கிறேன். விரைவில் தொகையை அனுப்பிவைப்பேன்.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் முயற்சி வெல்லட்டும்... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியர் அவர்களுக்கு! உருக்கமான பதிவு. என்னால் இயன்ற ரூபாய் இரண்டாயிரத்தை மேலே சொன்ன வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல நட்புக்களை சம்பாதித்த வைகறை நோய்தனையும் சம்பாதித்து விரைவில் நம்மை விட்டு பிரிந்திருக்க வேண்டாம்! நேரில் சந்திக்காதிருந்தபோதும் ஏதோ ஓர் உணர்வு என்னை வாட்டுகின்றது! விரைவில் எனது பங்களிப்பு வந்து சேரும் ஐயா! வைகறையின் கனவுகளை விடியலாக்குவோம்!

    பதிலளிநீக்கு
  7. மனத்தைக் கனக்க வைத்த பதிவு. வைகறையின் துணைவியார்க்கு அரசுப்பணி வாங்கித் தருவது போன்ற உன்னத செயல் வேறொன்றில்லை. சகோதரியைச் சொந்தக்காலில் நிற்க வைக்க முயற்சி மேற்கொள்ளும் நல்ல உள்ளங்களை வாழ்த்தி வணங்குகிறேன். குழந்தையின் நலனுக்கு விரைவில் என்னாலான பங்கை அனுப்புவேன். வைகறை எழுதிய கவிதை நூல்கள் எங்குக் கிடைக்கும் என்ற விபரத்தோடு அவற்றின் விலையையும் தெரிவித்தால் வாங்கிக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  8. உள்ளம் உருகுகிறது தோழர். நிச்சயம் நானும் உடன் நிற்பேன்

    பதிலளிநீக்கு
  9. மனதை கனக்க வைத்த பதிவு!
    கூடிய விரைவில் என்னுடைய பங்களிப்பையும் அனுப்பி வைக்கிறேன்.!

    பதிலளிநீக்கு
  10. வீதி உரிமையுடன் வேண்டியதை வங்கிக்கு சென்று செய்து விட்டேன் அய்யா !

    பதிலளிநீக்கு
  11. மனம் கனக்க வைத்த பகிர்வு. நான் அவரைச் சந்தித்தது ஒரே முறை தான் என்றாலும் மனதை விட்டு நீங்காதவர்.

    புதுகை நண்பர்களின் இந்த நல்ல முயற்சி வெற்றி பெறட்டும்.....

    பதிலளிநீக்கு
  12. தம்பி ! உங்கள்பதிவு கண்டு உள்ளம் துவண்டு போனது! வைகறை குடும்பத்திற்கு என இரங்கலைத் தெரிவிக்க வேணுடுகிறேன்!நிதியளிப்புக்கு என் பங்காக பணம் ஆயிரம் இன்றே அன்புகிறேன்!

    பதிலளிநீக்கு