பெண்ணால் முடியும் என்று காட்டிய முண்ணாறு பெண்கள்!

குளுமை நகரமாக அறியப்படும் மூணாறு -இதனை கேரளாவில் முண்ணாறு என்றும் சொல்வதுண்டு! இந்தக் குளுமையான நகரில் இப்படியொரு சூடான போராட்டத்தை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல, ‘ எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் ஒன்றுமறியாப் பெண்கள்எனக் கருதப்பட்ட அவர்கள் வீதிக்கு வருவார்கள் என்பதையும் பிடிவாதமாய்ப் போராடி வெற்றியும் பெறுவார்கள் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தொடர்ச்சியாக 9 நாட்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துவிட்டது நகரமே!

மூணாறு, தேவிகுளம்  பகுதி தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாகப்  பணிபுரியும் பெண்கள் அனைவரும் போராட்டக் களத்தில். ‘படிப்பறிவில்லாத தமிழ்ப் பெண்கள்தானே, வீட்டுப் பொறுப்புகளை விட்டு இவர்கள் எப்படிப் போராட முடியும்என நினைத்தவர்கள் எல்லாம் வாயடைத்துப் போனார்கள். மூணாறு - மதுரை நெடுஞ்சாலையில் 5000 பெண் தொழிலாளர்கள் அமர்ந்த அந்தக் கோலத்தை இந்தியா இதுவரை கண்டதில்லை!

மூணாறு சுற்றுவட்டாரத்தில்  இருக்கும்  பெரிய தேயிலை எஸ்டேட்களான கண்ணன் தேவன், ஹாரிசன் மலையாளம்  மற்றும் சிறு  தேயிலைத்   தோட்டங்களில்  நிரந்தரத் தொழிலாளர்களாகவும், முறைசாராத்  தொழிலாளர்களாகவும் சுமார் ஒரு  லட்சம் ஆண், பெண்கள்  பல தலைமுறைகளாக வேலை செய்து வருகிறார்கள். ( தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாலா எடுத்த பரதேசி நினைவுக்கு வருகிறதா? அதுவே எரியும் பனிக்காடு எனும் தேயிலைத் தொழில் பற்றிய நாவல்தானே) 

இவர்களுக்கு  இன்றையஒரு நாள்சம்பளம் 175 முதல் 231 ரூபாய். பல தலைமுறைகளாக    இவர்கள் வசிப்பது கோழிக் கூண்டு  மாதிரியான  வீடுகளில். குதிரை லாயம் போல வரிசையாக தடுப்புகள் அமைக்கப்பட்ட ஷெட் போன்ற நீளக் கொட்டடியில் ஒற்றை அறைதான் ஒரு குடும்பத்துக்கு வீடு. நல்லது - கெட்டது, தாம்பத்யம், சமையல், குளியல்   எல்லாம்  அதற்குள்தான். ஏறக்குறைய கொத்தடிமைகள்வறுமை, நோய் நொடி இவர்களின்  நிழல். நல்ல கல்விக்கான வசதியோ, மருத்துவ உதவியோ இவர்களுக்கு எட்டாக்கனி. 

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள்தான் இவர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவை. அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடந்து சம்பளம் சிறிதளவு உயரும்; போனஸ் எவ்வளவு என தீர்மானிக்கப்படும். தொழிற்சங்கத் தலைவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு தொழிலாளர்கள் நடப்பார்கள். ‘இது சரியா? இது நியாயமா?’ என எப்போதும் உரிமைக்குரல் எழுப்பியதில்லை. ஆனால் இம்முறை பெண்கள் கொந்தளித்துவிட்டார்கள்.   

 ‘‘
பலமுறை முறையிட்டும், தினச் சம்பளம் கூட்டப்படவில்லை. தொழிற்சங்கங்களும்  தேயிலைத் தோட்ட நிர்வாகத்திடம் பேச்சு நடத்துகிறோம்  என்று  நாட்களைக் கடத்திக்கொண்டு இருந்தார்கள்.   இன்றைய  சூழ்நிலையில் யார் தினக் கூலியாக 231 ரூபாய்  வாங்குகிறார்கள்? இனி ஆண்களையும் அவர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கங்களையும் அதை நடத்தும் அரசியல்வாதிகளையும் நம்பிப் பயனில்லை. அதனால்தான் பெண்கள் நாங்களே இறங்கிவிட்டோம்!’’ என்கிறார் லிஸ்ஸி சன்னி. இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் முக்கியமான பெண்மணி.

இந்தப் பகுதி பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்ப் பெண்கள்தான். அதுவும் தலித் பெண்கள். தாழ்த்தப்பட்ட கேரளப் பெண்களும் ஓரளவு உண்டு. லிஸ்ஸி கேரளத்தவர். அவரோடு களத்தில் கை கோர்த்து நிற்கும் கோமதி அகஸ்டின்இந்திராணி மணிகண்டன் இருவரும் தமிழ்ப்பெண்கள்.

‘‘
நாங்கள் தினமும் 10 மணி நேரம் கால் கடுக்க நின்றுகொண்டு தேயிலைக் கொழுந்துகளைப் பறிக்கிறோம். வெயில், மழை, கொட்டும் பனி, காட்டு விலங்குகள், ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்... இவற்றைப் பொருட்படுத்தாமல் வேலை செய்கிறோம். கரணம் தப்பினால் மரணம்.   21 கிலோ  கொழுந்து  பறித்தால்தான் 231 ரூபாய் கூலியாகக் கிடைக்கும். 

அதிகமாகக்  கொழுந்து பறித்தால் ஊக்கப் பணம் தருகிறோம் என்பார்கள். ஆனால், அது வெறும் கண்
துடைப்பு. எடை போடும்போது, ‘அது தரமில்லாததுஎன்பார்கள். நாங்களும் மனிதர்கள்தானே?’’ எனத் தங்கள் இன்னல்களை அடுக்குகிறார் கோமதி.
இதற்கெல்லாம் ஆண் தொழிலாளர்கள் எதிர்ப்புக் குரல் காட்டினால்மது  வழங்கி   ஆஃப்  செய்து விடுவார்களாம்பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பெண்  தொழிலாளர்கள்  பொங்கி எழுந்தார்கள்குடும்பத்துடன்   வீதிகளில் இறங்கினார்கள். ‘‘இருபது சதவீதம் போனஸ்... தினக்கூலி 500 ரூபாய் வேண்டும்...’’ என்று கோஷம் உயர்ந்தது.    

சுற்றுலா நகரமான மூணாறு ஸ்தம்பித்ததால் நேரடியாக கேரள அரசின் கவனம் திரும்பியது. போராட்டம் பெரிதாவதைப் பார்த்ததும் ஆதரவு தர வந்தார்கள் கேரள அரசியல்வாதிகள். ‘ஆணியே பிடுக்க வேணாம்என அவர்களை விரட்டி அடித்துஅதிர்ச்சி கொடுத்தார்கள் இந்தப் பெண்கள். அவர்கள் தங்களோடு இணைந்து அமர அனுமதித்த ஒரே அரசியல் தலைவர், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்

இந்தப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே போனதால், இதை ஆதரிப்பதைத் தவிர அரசியல்வாதிகளுக்கு வேறு வழியில்லை. ஒரு கட்டத்தில் தேயிலைத் தோட்ட நிர்வாகங்களும் இறங்கி வந்தன. 

இருபது சதவீத  போனஸ்  தர நிர்வாகம் ஒப்புக்கொண்டதுஎன்ற அறிவிப்பு  வெளியானதும்தான் இந்த ஒன்பது நாள் போராட்டம் நிறுத்தப்பட்டது. தினக் கூலி  கூட்டுவது குறித்து  பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ‘‘தொடக்கத்தில் இந்தப் போராட்டத்திற்குப்  பின்னணியில் தமிழ்த்  தீவிரவாத அமைப்புகள்  உள்ளன என்று புகார் கூறினார்கள். ‘பெண்கள் என்ன போராடிவிடப் போகிறார்கள் என அசட்டை செய்தார்கள். அது எதுவும் பலிக்கவில்லை. போன வருஷம் 19 சதவீதம் தந்த  போனஸை இந்த வருடம்  குறைந்தபட்ச அளவான 8.33 சதவீதமாகக்  குறைத்தார்கள்.

 
அதை எதிர்த்துதான்  போராட்டத்தில்  இறங்கினோம். போனஸ் குறைந்ததற்கு காரணம் கேட்டால் நஷ்டம் என்றார்கள். லாபத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். ஆனால், நஷ்டம் கிடையாது. அடிமைகள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள், ஒருவேளையாவது நல்ல உணவு  உண்ண வேண்டாமா? பண்டிகைக்கு நல்ல துணிமணி  உடுத்த வேண்டாமா? பிள்ளைகளைப்  படிக்க வைக்க வேண்டாமா? இந்த 231 ரூபாயில் இதெல்லாம் எப்படி முடியும்?’’ எனக் கேட்கிற லிஸ்ஸி, கூலி உயர்வுக்காகவும் தீர்க்கமாகப் போராடும் தீர்மானத்தோடு இருக்கிறார். 
‘‘நஷ்டம் வரும் என்று நினைத்தால் நிர்வாகத்தை எங்கள் கையில் கொடுங்கள். தினக் கூலி 500 ரூபாய் கொடுத்துஉற்பத்தியை  அதிகரித்து  லாபத்தை கூட்டிக் காண்பிக்கிறோம்!’’ என சவால் விடும் தெளிவும் துணிச்சலும் இருக்கிறது இவர்களிடம்.
இந்த போனஸ்  வெற்றியைத் தொடர்ந்துகேரளத்தின்  வயநாடு  தேயிலைத் தோட்டத்  தொழிலாளிகளும்  மூணாறு  ரக  போராட்டத்தைத் தொடங்கலாமா  என்று யோசித்து வருகிறார்களாம். 

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் எனக் காட்டியிருக்கிறார்கள் இவர்கள்!
இனி ஆண்களையும் அவர்கள்  சார்ந்திருக்கும் தொழிற்சங்கங்களையும் அதை நடத்தும் அரசியல் வாதிகளையும்  நம்பிப் பயனில்லை. அதனால்தான் பெண்கள் நாங்களே இறங்கிவிட்டோம்! எனும் இவர்கள் குரல் உலகம் முழுவதும் பற்றிப் படரட்டும், உலகம் சமமாகட்டும்! பெண்கள் வெற்றி பெற்ற உள்ளாட்சி இடங்களில் கூட கணவனோ, தகப்பனோ, மாமனோ நாட்டாமை செய்யும் தமிழக நிலையும் மாறட்டும்!

தகவல்களுக்கு நன்றி - http://kungumam.co.in/
 ---------------------------------------------------------- 

4 கருத்துகள்:

 1. தமிழகத்தில் இவ்வாறு நடப்பது சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை. அவர்களுடைய மனத்திண்மை பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
 2. பெண்கள் நினைத்தால் உலகையே
  தங்கள் கைகளில் அடக்கி விடுவார்கள்.
  ஆனால் பெண்களின் திறமைகளை
  வீட்டில் அறையோடே அடக்கி விடுகிறார்கள்...

  பதிலளிநீக்கு
 3. போராட்டத்தைமுன்னேடுத்த சாதனைப் பெண்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நீதி உறங்காது

  பதிலளிநீக்கு
 4. உரிமைக்காகப் போராடிய அப்பெண்களுக்குப் பாராட்டுகள். போராடித் தான் உரிமையை நிலை நாட்ட வேண்டியிருக்கிறது. இந்நிலை என்று மாறுமோ....

  பதிலளிநீக்கு