தமிழ்த்
தொலைக்காட்சிகளில் அடிக்கடி தென்படும் பேச்சாளர், 34ஆண்டு அரசுப் பள்ளித்
தமிழாசிரியராயிருந்த கல்வியாளர், அறிவொளி இயக்கத்தின் மாவட்டத் தலைவர்களில்
ஒருவர், அதற்கான நாடகங்களுக்காக 500 கலைஞர்களுக்குப் பயிற்சியளித்த நாடகர், இனிய பாடலாசிரியர்,
எடுப்பான பாடகர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா சங்கத்தை மாவட்டத்தில் விதைத்து
வளர்த்த இயக்கத்தலைவர், தேர்ந்தஓவியர், “கம்பன்தமிழும் கணினித் தமிழும்” “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே”
முதலிய 6 நூல்களின் ஆசிரியர், இணையத் தமிழுலகில் புகழ்பெற்ற எழுத்தாளராகி,
அண்மையில் மாநில அளவிலான “வலைப்பதிவர் திருவிழா“வைச் சிறப்பாக நடத்திய “கணினித்
தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர்“ என, பன்முக அனுபவத் தழும்புகளைக் கொண்டவர்,
புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துநிலவன்.
இணையத்தில் எழுத்தாளர்கள்
செய்ய வேண்டியவற்றை வலைப்பதிவர் திருவிழா நடத்திய முத்துநிலவனிடம், “புதிய
புத்தகம் பேசுது” இதழுக்காக நேர்காணல்
செய்தோம்.
இதோ
நேர்காணல்:-
இணையத் தமிழால் இணைவோம்!
இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது?
ஈராயிரம்
ஆண்டுகளின் முன்னே, ஐந்து நிலத்தில் கிடந்த தமிழ் இப்போது அனைத்துக் கண்டங்களிலும்
வளர்ந்து வருகிறது. ஏசுபேசிய ஈபுரு மொழியும், புத்தர் பேசிய பாலிமொழியும், தொன்மை நாகரிகத்தில்
தமிழைப்போலவே கொடிகட்டிப் பறந்த கிரேக்க மொழியும் இப்போது அருகிவிட்டன. ஆனால் இன்றும்,
அறிவியல் வளர்ச்சியின் நுனிமுனைக் கொழுந்தான கணினிப் பயன்பாட்டிலும் தமிழ்மொழி வளர்ந்துகொண்டே
வருகிறது.
தொல்காப்பியரின் சங்கப் பலகையில் இருந்த தமிழ்
என்பதைவிடவும், பில்கேட்சின் சன்னல் (விண்டோஸ்) பலகையிலும் இருக்கும் தமிழ் என்பதே
அதன் உண்மையான பெருமை! உலகத்தமிழர்களை
எளிதாக இணைப்பது மட்டுமல்ல, தமிழின் அத்தனை இலக்கியங்களையும் பழந்தமிழிலிருந்து
இப்போதைய இளைய எழுத்தாளர்கள் வரை எழுதிய அனைத்தையும் தனிப்பட்ட ஆர்வலர்களும்
தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக்
கல்விக்கழகமும் இணையத்தில் ஏற்றி வருகிறார்கள். பெரும்பாலான நூல்களைப் படிக்கவும்,
வாங்கவும் இணையம் உதவுகிறது!
கணினித்தமிழ்ப்
பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடக்கின்றன. எழுத்தாளர்கள் இதைப் பயன்படுத்தி இணையத்
தமிழைப் பயன்கொள்ள முன்வரவேண்டும். புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கத்தின்
சார்பாக இரண்டுமுறை இணையத் தமிழ்ப்பயிற்சியை நடத்தி யிருக்கிறோம். தமிழ்நாடு அரசு
நிறுவனமான தமிழ் இணையக் கல்விக் கழகம், கல்லூரிகள் தோறும் “கணினித்தமிழ்ப்
பேரவை“களை உருவாக்கி, இளைய மாணவர்களை இணையத் தமிழின்பால் ஈர்த்துவருகிறது.
கண்ணிருந்தால் பார்க்கலாம் என்பது போல, கணினி அறிவு இருந்தால் இவற்றைப்
பயன்படுத்தலாம். கூடுதலான இரு கண்களாய் இவை விளங்குகின்றன
பல்துறை
வளர்ச்சி பற்றிய பலப்பல செய்திகள் தமிழில் பகிரப்படுகின்றன. இலக்கியம் மட்டுமின்றி
பல்வேறு துறைசார் தமிழ்நூல்களைத் தேடித் தரவும் இணையம் உதவுகிறது. அந்த அளவிற்குத்
தமிழ்ப்பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இணைய இதழ்கள் (Web-Magazenes), வலைப்பக்கங்கள்(TamilBlogs), முகநூல்(FaceBook), சுட்டுரை (Twitter), மற்றும் காணொளி(YouTube) இவற்றில் இணையத் தமிழ்வளர்ச்சியைக் கண்கூடாகக்
காணலாம். மற்றும் செயலிகள் (Apps) வழியாக நமது செல்பேசி(CellPhone)களிலும் கட்செவி(Whatsaap) போலும் புதிய
தமிழ்க் கதவுகள் திறந்து வருகின்றன. பாரதியார் கவிதைகளை, திருக்குறளை,
தமிழ்இதழ்களை, விரும்பும் நூல்களை அல்லது வேறுபல துறைசார் தகவல்களைக் கூட நமது
மடிக்கணினியிலோ, செல்பேசியிலோ இப்போது படித்துக்கொண்டே பயணிக் கலாம்! நமதுதமிழ் வளர்ந்து கொண்டே தான் வருகிறது,
வலைப்பூ என்றால் என்ன? அதுபற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?
கணினியில்
ஜி.மெயில் மின்னஞ்சல் வைத்திருப்போர் அனைவர்க்கும் ஓர் -அளவற்ற- பக்கத்தை கூகுள் நிறுவனம் இலவசமாக
வழங்குகிறது. இதை எழுத்தாளர்கள் தன் சொந்தப் பத்திரிகை போலவே பயன்படுத்தலாம்.
எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் பொருத்தமான படங்களையும் கூகுளிலிருந்தே இலவசமாகப்
பயன்படுத்திக் கொள்ளலாம். கவிதை, கட்டுரை, துணுக்கு, நகைச்சுவை, சமையல் குறிப்பு,
அறிவியல் குறிப்பு, பயண அனுபவம், திரைப்பட-சமூக-அரசியல் விமர்சனம் எதையும்
எழுதலாம். வலைத் திரட்டிகளில் இணைத்துவிட்டால் உலகம் முழுவதும் உள்ள கணினிவழித்
தொடர்புகளால் நண்பர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். விமர்சனம் விவாதம் நடத்தலாம்.
இந்த வலைப்பூக்கள் இளைய படைப்பாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
பிரபலமான எழுத்தாளர்கள் எஸ்.ரா, ஜெயமோகன், வைரமுத்து, உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா
போன்றோர் கூட வலைப்பக்கங்களில் எழுதுகிறார்கள். அவர்தம் படைப்புகளை நாம் படிக்க
முடிவதோடு, நம் படைப்புகளை உலகறியத் தரவும் நட்புடன் படைப்பை வளர்க்கவும் வாய்ப்பு
வாசல் திறக்கிறது. இந்த வகையில் உலகம் முழுவதும் சுமார் 15,000பேர் தமிழில்
வலைப்பூக்கள் வைத்திருப்பதாக “நாவி“,“வாணி“ முதலான எழுத்து/சந்திப்பிழை
திருத்தி கண்டுதந்த இளைய கணித்தமிழர் திரு “நீச்சல்காரன்” (எ) ராஜாராமன்
சொல்கிறார். எனினும் தொடர்ந்து எழுதுவோர் எப்படியும் ஆயிரம் பேராவது இருப்பார்கள்,
இவற்றைப் படிப்பவர்கள் பல்லாயிரம் பேர் என்பது நிச்சயம்!
கருத்து வாகனமாகப் பயன்படும் வலைப்பூக்கள் மூலம்
வெளிப்படும் கருத்துகளும், நிகழ்வுகளும், தகவல்களும் நம்பகத்தன்மை உள்ளவையா? இதை
எப்படி அறிவது?
அச்சு
ஊடகத் தகவல்கள் எவ்வளவு நம்பகத்தன்மை உள்ளன என்று யாரறிவார்? அதை நம்பினால்
இதையும் நம்பத்தான் வேண்டும். “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்“ குற்ளைத்தான்
இங்கும் நினைக்க வேண்டியுள்ளது. ஆனால், “அனானி“ எனப்படும் “முகம்காட்டாத“ எவர்
எழுதுவதையும் நம்ப வேண்டியதில்லைதான். அதே நேரம் நல்ல நோக்கத்துடன் –அரசியல்
விமர்சனங்களை எழுதுவோர் முகம் காட்டினால் வரும் ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு-
நேர்மையாக எழுதுவோர், ஆதாரத்துடன் சரியாகவே எழுதுவதும் உண்டு.
வலையுலகில்,
“மதுரைத் தமிழன்“ என்பவர் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர், எனினும் அமெரிக்காவில்
இருந்துகொண்டு, புனைபெயரில் எழுதும் இவரின் உண்மைப் பெயரை அறியாத போதிலும், இவரின்
படைப்புகள் லட்சக்கணக்கான வாசகர்களால் தினமும் படிக்கப்படுவதே இதற்குச்
சான்றாகும். “எப்பொருள் எத்தன்மைத் தாயினும்“ மீண்டும் குறளைத்தான் உதாரணம் காட்ட
வேண்டியுள்ளது. ஆமா, திருவள்ளுவரின் படம் கற்பனையாக, பாரதிதாசன்
கேட்டுக்கொண்டதற்கிணங்க திரு பாஷ்யம் அவர்கள் வரைந்து தந்தது தானே? அழகான முருகன்
முகம்கூட காலஞ்சென்ற எங்கள் ஊர் ஓவியர் திரு ராஜா தனது கற்பனையில் வரைந்தது தானே?
இதை எப்படி உண்மையாகவே ஏற்றுக் கொண்டனர் நம் தமிழர்கள்? எனவே அவரவர் தான் அதன்
உண்மைத் தன்மையை உய்த்துணர வேண்டும்.
இளைய வரவான வலைப்பூக்களில் எழுதுவோர் எத்தகையோராக
இருக்கின்றனர், உண்மையில் அவர்களின் நோக்கும் போக்கும்தான் என்ன?
எழுதுகிறார்கள்...எழுதித்
தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்! புதுவெள்ளம் வரும்போது வரும் நுங்கும்-நுரையும், குப்பையும்-தூசியும்
போலவே இன்றைய இணையத் தமிழ்உலகும் சேறும் சகதியுமாய்த்தான் இருக்கிறது! இந்த வெள்ளத்தில்
பிணங்களே அதிகம் மிதக்கின்றன என்பதையும் பூடகமாகப் புரிந்துகொள்ள வேண்டும்! தெளிவுபெறக்
கொஞ்சம் காத்திருக்க வேண்டும், அல்லது சிரமம் பாராமல் பிணங்களை ஒதுக்கிக்கொண்டு,
நீராழத்திற்கு நீந்தத் தெரிய வேண்டும். எந்த நோக்கமும் இல்லாதவர்கள்தான்
மிகஅதிகமாக எழுதுகிறார்கள் அல்லது இதில் பொழுது போக்குகிறார்கள்! சதை வியாபாரிகளே
அதிகமாகத் திரியும் சாத்தியமானதும் இதனால்தான். ஆயினும் இந்த நிலை தற்போது
மாறிக்கொண்டு வருகிறது!
ஆமாம்!
எழுதத் தெரிந்தும் வெளியிட வாய்ப்பில்லாத படைப்பாளிகள் பற்பலரின் இனிய
நந்தவனமாகவும் இப்போதுதான் இணைய உலகம் மாறிக்கொண்டு வருகிறது. கடந்த வெகுசில
ஆண்டுகளாக -சுமார் பத்தாண்டுகளுக்கு உள்ளாகத்தான்- இந்த வரவு நல்வரவாகி வருகிறது!
இரண்டாயிரம்
ஆண்டுகளாக வெகுசிலருக்கே உரித்தாயிருந்த பாறைகள், செப்பேடுகள், துணிச்சீலைகள்
மற்றும் பனைஓலைகளில் கிடந்த தமிழும்-படிப்பும், கடந்த நூறாண்டில்தான் அச்சுஎந்திரவழியே நூலாகி உலகை
வலம் வருகிறது. அதன் காரணமாகவே அதிகம்பேர் படிக்கவும் அதனாலேயே அதிகம் பேர்
எழுதவும் இப்போது வாய்த்திருக்கிறது. இது ஒரு மாபெரும் சமூக உடைப்பு! உலக
அரசியல்-சமூக முன்னேற்றமும் இதற்கொரு காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்றைய கணினித் தமிழுக்கு வயதே இருபதுக் குள்தான்! இந்த
வலைப்பூவின் வயதோ இன்னும் ஐந்து வருடம் கம்மி! கணினித்தமிழின் புதிய வரவான வலைப்பூ
இரண்டாயிரத்தின் பின் முதல் ஐந்தாண்டு களில்தான் பயன்பாட்டுக்கு வந்தது. இப்போதோ
அசுர வளர்ச்சி! உலகக் கணினிகள் அனைத்திலும்
தரவிரக்கமின்றியே கிடைக்கக் கூடிய எழுத்துருவாக “யூனிகோடு“ வந்த பின்னரே இது
சாத்தியமானது என்பதும் முக்கியக் காரணம். கடந்த ஐந்தாண்டுக்கும் குறைவான
காலத்தில் –ஆண்ட்ராய்டுள்ள- செல்பேசியிலேயே
இந்த எழுத்துரு கிடைப்பதால், இது இன்னும் பரவலாயிற்று.
இப்போது தமிழ்மொழி, முன் எப்போதையும் விட ஜனநாயக மாகியிருக்கிறது என்றே
சொல்லவேண்டும்! யார் வேண்டுமானாலும்
என்ன வேண்டு மானாலும் எழுதலாம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளில் முன்எப்போதும்
கிடைத்திராத சுதந்திரம்! இதுதான் இதில்
முக்கியமான செய்தி! பாறையிலிருந்து தாள்வரை எழுதி அடுத்தவர் அறியத்
தருவது –நூலாக்கம் செய்வது வரை- செலவும் செல்வாக்கும் சார்ந்த விஷயமாகவே இருந்தது போக,
முதன்முறையாகச் செலவில்லாமல் தனது படைப்புகளை உலகறியத் தரமுடியும், அதிலும் தன்னை
அறிவித்துக் கொள்ளாமலே எதை வேண்டுமானாலும் சொல்ல முடியும் எனும் சுதந்திரத்துடனும்
மறுபக்கம் சொறித் தனத்துடனும் இருக்கிறது இணையம்!
எனவே,
இப்போது எழுதுவோர் அனைவரும் பொறுப்பாக எழுதுகிறார்கள் என்று சொல்ல முடியவில்லை.
பொறுப்பானவர்களும் எழுத வந்திருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி. இந்த எண்ணிக்கை வரவர
அதிகரித்து வருவதும் குறிப்பிடத் தக்கது. இதனை வளர்த்தெடுக்க நல்ல எழுத்தாளர்கள்
அதிகம்பேர் இணையத்தில் எழுத வரவேண்டும். இதற்காகவே நாங்கள் “வலைப்பதிவர்
திருவிழா-2015“ நிகழ்வைப் புதுக்கோட்டையில் நடத்தினோம்.
புதுக்கோட்டையில் நடந்த “வலைப்பதிவர் திருவிழா- 2015“
பற்றிச் சொல்லுங்களேன்?
பத்தாண்டுகளாக இணையத் தமிழால் இணைந்திருக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கென்று
அமைப்பு ஏதுமில்லை. என்றாலும், கடந்த 5ஆண்டாக ஆண்டுதோறும் எங்காவது சந்திப்பதை
வழக்கமாக்கியிருக்கிறோம். முதலில் மாவட்டஅளவில் ஈரோட்டில் இது தொடங்கியபோதே மற்ற
மாவட்ட நண்பர்கள் சிலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளும் சென்னையில்
“பதிவர் சந்திப்பு“ நடந்தபோது மாநிலம் முழுவதிலும் இருந்து வலைப்பதிவர்கள் வரத்
தொடங்கினர். அப்படித்தான் 2011இல் வலையில் எழுதத் தொடங்கிய நான் 2013இல் சென்னை
வலைப்பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டேன். இதற்கிடையில், 2012-14ஆம் ஆண்டுகளில்
புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த தமிழறிஞர் முனைவர் நா.அருள் முருகன்
அவர்களின் வழிகாட்டுதலில் “கணினித் தமிழ்ச்சங்கம்“ தொடங்கினோம். தமிழாசிரியர்
கழகத் துணையோடு “இணையத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள்“ நடத்தியதில், சுமார் 50பேர்
வலைப்பக்கம் தொடங்கி எழுதத் தொடங்கினார்கள். 2014இல் மதுரையில் நடந்த “வலைப்பதிவர்
சந்திப்பு“ நிகழ்வக்கு, ஒரு மூடுந்து (வேன்) பிடித்து 25பேருக்கு மேல் போய் இறங்கினோம். அந்தச்
சந்திப்பின் நிறைவில் அடுத்த சந்திப்பைப் புதுக்கோட்டையில் நடத்த வேண்டினர்.
இப்படித்தான் புதுக்கோட்டையில் “பதிவர் திருவிழா-2015“ நடத்த முடிவானது.
புதுக்கோட்டைக் கணினித்
தமிழ்ச்சங்க ஒருங்கிணைப் பாளரான நான் பதிவர் சந்திப்பில் பல புதிய திட்டங்களை
முன்வைத்தேன். அதன்படி, தமிழ்வலைப்பதிவுகளில் முன்னோடிகளான சிலரைப் பாராட்ட
நினைத்தோம். வலைப்பக்கத் தொழில்நுட்ப முன்னோடியான திண்டுக்கல் திரு பொன்.தனபாலன்
அவர்களையும், புதுக்கோட்டையில் நடந்த இணையத் தமிழ்ப்பயிற்சி வகுப்பில் தமிழ்
விக்கிப்பீடியாவில் எழுதப் பயிற்சிபெற்று, ஈராண்டுக்குள் 250படைப்புகளைத் தந்த
தஞ்சை முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களையும் பாராட்ட முடிவுசெய்தோம். அதற்குத் தகுதியானவர்களை
அழைக்க எண்ணி, தமிழ்நாடு அரசின் இணையப் பல்கலைக் கழகத்தை அணுக நண்பர்
“நீச்சல்காரன்“ உதவினார். புதிய பெயரோடும், புதிய செயல் திட்டங்களோடும் திகழ்ந்த
“தமிழ்இணையக் கல்விக்கழக“இயக்குநர் திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களை நேரில்சந்தித்து அழைத்தோம்.
வலைப்பக்கங்களில்
எழுதுவோர்க்கு மின்தமிழ்-இலக்கியப் போட்டிகளை அறிவித்து, பரிசுத்தொகை ரூ.50,000தர த.இ.க. ஏற்றுக்
கொண்டது. தமிழ்க்கணினியில் பல்துறை வளர்ச்சி, சுற்றுச்சூழல், பெண்ணியம் ஆகிய
கட்டுரைப் போட்டிகள், மரபுக்கவிதை, புதுக்கவிதைப் போட்டிகள் என போட்டிகளை அறிவித்தோம்.
ஒவ்வொரு வகைக்கும் மூன்று ரொக்கப்பரிசு ரூ.10,000வீதம் ஐவகைப் போட்டிகளை
நடத்தினோம். நூற்றுக்கணக்கில் படைப்புகள் வந்து குவிந்தன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து,
ஃபிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அரபுநாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என,
பல்வேறு வெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களும் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றனர்.
காரைக்குடி
அழகப்பர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா, விக்கி மீடியாவின்
இந்தியத் திட்ட இயக்குநர் அ.இரவிசங்கர், த.இ.க. உதவி இயக்குநர் முனைவர்
மா.தமிழ்ப்பரிதி, பிரபல எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர் –தற்போதைய கோவை மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்- முனைவர் நா.அருள்முருகன் தொடக்க வுரையாற்ற, மாவட்டங்களிலிருந்தும், மாநிலம்
கடந்து ஏராளமான தமிழ்வலைப்பதிவர் வந்து கலந்து கொண்டனர். தில்லி, மும்பை, பெங்களுரு,
பாலக்காடு, ஐதராபாத், திருப்பதி உள்ளிட்ட வெளி மாநிலப்பதிவர் மட்டுமின்றி
அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு தமிழ்ப்பதிவரும் உண்டு!
அந்த
விழாவில் “உலகத் தமிழ்வலைப் பதிவர் கையேடு“ வெளியிடப்பட்டது. தமிழிசைப்பாடல்கள், பதிவர்கவிதை
ஓவியக்காட்சி, விருதுகள் பரிசுகள் வழங்கல் மற்றும் பதிவர் நூல்கள் வெளியீடு, விற்பனை,
புத்தகக் கண்காட்சி எனப் பலவகையிலும் வலைப்பக்க எழுத்தாளர்களின் உற்சாகம்
கரைபுரண்டோடி உண்மையிலேயே அது “வலைப்பதிவர் திருவிழா“வாகவே நடந்தது. நேரலையில்
22க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிவர்கள் –அவர்களுக்கு நள்ளிரவான போதிலும்-
பார்த்து மகிழ்ந்து பாராட்டி அக்டோபர்-11இல் நடந்த விழாவைப் பற்றி இன்று வரை
“பதிவர் திருவிழாவுக்குப் போய்வந்தேன்“ என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் தமது
வலைப்பக்கங்களில் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.
இணையதள கருத்துப் பரிமாற்றங்களினால் தொகுக்கப்பட்ட நூல்கள்
எவை? அவற்றிற்கான வரவேற்பு எவ்விதம் உள்ளது?
2012-சென்னை
பதிவர் சந்திப்பிலேயே நூல்வெளியீடும் தொடங்கிவிட்டது. கவிஞர் தென்றல் சசிகலாவின்
“தென்றலின் பக்கங்கள்“ எனும் கவிதைத் தொகுப்பே இந்தவகையில் வெளிவந்த
முதல்தொகுப்பு. அடுத்தடுத்த சந்திப்புகளில், தமது வலைப்பக்கங்களில் எழுதிய கட்டுரை
கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் வழக்கம் தொடர்கிறது. கரந்தை ஜெயக்குமார், புதுகை
மு.கீதா, தற்போது அமெரிக்காவிலிருக்கும் தேன்மதுரத் தமிழ் கிரேஸ், மலேசியக்கவிஞர்
தவரூபன் என பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இவ்வாறு வெளிவந்துள்ளன. இதற்குப் பரவலான
வாசகர் அறிமுகமும் கிடைக்கிறது. எனது நூலின் தலைப்புக்கட்டுரையான “முதல்மதிப்பெண்
எடுக்க வேண்டாம் மகளே“கூட என் வலைப்பக்கத்தில் கிடைத்த பின்னூட்டங்களுக்குப்
பின்னரே தொகுப்பாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இணையப் பல்கலைக்கழகம் தமிழக அரசால் இயங்குகிறது. இது வலைப்பக்க
எழுத்தாளர்க்கு எந்த அளவுக்கு உதவமுடியும் என்று நினைக்கிறீர்கள்?
வலைப்பதிவர்களுக்கு தஇக இரண்டு வகையில் உதவமுடியும் என்று
நினைக்கிறேன். பதிவர் சந்திப்பில் த.இ.க.கலந்துகொண்டது இதுவே முதன்முறை. இதனால்,
வலைப்பதிவர்கள் உற்சாகமடைந் திருப்பதுடன்,
பெருமைக்குரிய அங்கீகாரமாகவும் கருதுகிறார்கள். போட்டிகளில் மட்டுமின்றி
அவ்வப்போது இணையத் தமிழ்ப் பயிற்சி
வகுப்புகளையும் த.இ.க. தரவேண்டிக் கேட்கிறார்கள். அதனைத் திட்டமிட்டு மாவட்ட
வாரியாகவும், கல்லூரி மாணவரிடையேயும் நடத்திவரும் த.இ.க. இதனைத் தொடரும் என்று
நம்புகிறேன். அதோடு, பதிவர் அல்லாத எழுத்தாளர்களும் இணையத் தமிழில் இணைய வேண்டும்.
25பேர் முதல் 100பேர் வரை சேர்ந்து “கணினித் தமிழ்ச்சங்கம்“ அமைத்துக் கொண்டு, அழைத்தால்
எந்த ஊருக்கும் வந்து பயிற்சி தர த.இ.க. தயாராக இருப்பதாகவே தெரிகிறது. இதை நமது
எழுத்தாளர்கள்தான் பயன்படுத்த முன்வரவேண்டும்.
இரண்டாவது,
அச்சிடப்பட்ட நூல்களை மின்னூலாக மாற்ற த.இ.க.திட்டமிட்டுள்ளது. இப்படி ஐந்து
லட்சம் நூல்கள் வரை மின்னூல் வடிவில் மாற்றும் திட்டமும் த.இ.க.விடம் உள்ளது. நமது
எழுத்தாளர்கள் த.இ.க. உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்களைத் தொடர்பு
கொண்டு தமது நூல்களை இந்த மின்னூல் திட்டத்திற்குத் தரலாம். படைப்பிலக்கியம்
மட்டுமின்றி, பொறியியல், மருத்துவம் போலும் பிறதுறை நூல்களையும் மின்னூலாக்கிவிட்டால்
யார்வேண்டுமானாலும் படித்துப் பயனடைய உதவும்.
இன்றைய எழுத்தாளர்க்கு இணையத் தமிழ் குறித்து நீங்கள் சொல்ல
விரும்புவதென்ன? எழுத்தாளர்களுக்குப் படைப்பு
நுட்பமிருந்தால்தான் வெற்றிபெற முடியும் என்பது எல்லாரும் அறிந்ததுதான், ஆனால்
இன்றைய அறிவியல் உலகில் படைப்பு நுட்பத்துடன் தொழில்நுட்பத்தோடு வெளிவரும்
படைப்புகள் மட்டுமே விரைவில் மக்களைச் சென்றடையும் என்பதைத்தான் சொல்ல
விரும்புகிறேன். தேர்ந்தெடுக்கும் ஊடகம் வளரும் தொழில்நுட்பத்தின் உச்சமாக
இருப்பது நல்லது. தினமும் அரைமணி நேரம் ஒதுக்கி உட்கார்ந்தால் எந்த வயதிலும் யார்
வேண்டுமானாலும் இணையத் தமிழைக் கற்றுக் கொள்ளலாம். எந்த வகுப்புக்கும் போகாமலே
50வயதுக்கு மேல் முயன்று கணினி கற்றுக் கொண்ட நான், பத்தாண்டுகளில் அதுபற்றி
வகுப்பெடுக்கும் அளவிற்கு வந்திருக்கிறேன். ஒன்று மட்டும் நிச்சயம்- இன்றைக்கு எழுதப்படிக்கத் தெரிந்தவர்க்கும் தெரியாதவர்க்குமான
வித்தியாசம், கணினி தெரிந்தவர்க்கும் தெரியாதவர்க்கு மானதாக மாறும் காலம்
வெகுதூரத்தில் இல்லை என்பதை சமூகஆர்வலர்கள் குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்கள்
கவனத்தில் கொள்ள வேண்டும். இது காலத்தின் தேவை.
-----------------------------------
(நன்றி “புதிய புத்தகம்பேசுது” மாதஇதழ் டிசம்பர்,2015)
-இந்த இதழ் பற்றி-
தமிழில் அவ்வப்போது வெளியாகும்
நூல்களைப் பற்றிய செய்திகளடங்கிய மாதஇதழ்
“பாரதி புத்தகாலயம்“ சார்பாக வெளிவருகிறது
ஆசிரியர் திரு நாகராஜன்
செல்பேசி எண்-9444960935
--------------------------------
தொடர்புக்கு - thamizhbooks @gmail.com
---------------------------------------------------------
http://maattru.com/category/puthiya-puthagam-pesuthu/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக