தமிழில் நாகரெத்தினம் (ஆங்கிலத்தில் - Ruby!) |
ஒன்றும் பயப்பட வேண்டாம். உண்மை
சுடத்தான் செய்யும்.
நம்ம ஊர்லதான், “பாம்பு னு சொன்னாலே
அது காதுல விழுந்து, நெசமாவே வந்துரும்“ என்று நம்புகிறவர்கள் நம்முடன் இருக்கிறார்கள்!
இதனால்..“வசம்பு“ எனும் மருந்தைக் கூட மாலை, இரவு நேரங்களில் சொல்ல முடியாமல்
“பேர்சொல்லான்“ என்று சொல்கிற பழக்கம் இருப்பதைக் கேள்விப்பட்டபோது எனக்குச்
சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் விழித்திருக்கிறேன்.
“பாம்புக்குப் பாம்பு னு நாமதான் பேர்
வச்சிருக்கிறமோ தவிர, பாம்புக்குப் பாம்பு னு பேர் வச்சிருக்கிறது அந்தப் பாம்புக்கே
தெரியாது“ என்று என் நண்பன் மதுக்கூர் இராமலிங்கம் மேடையில் சொல்ல! கூட்டமே விழுந்து புரண்டு சிரிக்கும்!
பாம்புக்கு, தொடுதல்(ஊறு), சுவைத்தல்(நாக்கு),
மோத்தல்(மூக்கு), பார்த்தல்(கண்) என 4அறிவுமட்டுமே உண்டு! ஐந்தாவது அறிவான ஓசைக்குக்
காரணமான காது எனும் உறுப்பே இல்லை! (அதனால்தான் கண்ணே செவியாகக் கொண்டிருக்கும் பாம்பை “கட்செவி“என்று தமிழ்இலக்கியம் சொல்கிறது. இப்ப நம்ம “வாட்ஸாப்“பை ஏன் கட்செவின்னு சொல்றாங்களோ தெரியல..) ஆக காதுகேட்க வாய்ப்பே இல்லாத பாம்பு, பாம்பு
என்றவுடனே வந்துவிடும் என்று நம்பும் பாமரர் பலகோடிப்பேர் வாழும் நாட்டில்தான்
நாமும் “அறிவாளிகள் போல்“ இப்போதும் வாழ்கிறோம் என்று நினைத்தால் வெட்கமாகத்தான்
இருக்கிறது.
ஆனால் தமிழ்த்திரையுலகில்தான் பாம்பை
வைத்து என்னென்ன கதை! தேவரின் “வெள்ளிக்கிழமை விரதம்“ படத்தில் அந்தப் பாம்பு
தட்டச்சு செய்யும்! (ஏழாவது அறிவு!) கதாநாயகியைக் காப்பாற்றும்! கதாநாயகர்கள்
இதுபோலும் படங்களில் வில்லனாக இருப்பார்கள்! ஏன் னா.. பாம்புதானே கதாநாயகன்!
அப்பறம் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அது
இதுன்னு புராணக் கதைகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமே இல்ல! நாகம் ரெத்தினம் கக்கும்,
என்றும் நாகம் பழிவாங்கும் என்றும், கதைகள் அதை ஒட்டிய நம்
தமிழ்த்திரைப்படங்களுக்கும் அளவே இல்லை!
(எங்க அப்பா பேர் நாகரெத்தினம்! இந்தப் பெயரை ஆணுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் வைக்கும் பழக்கம் உண்டு! அவ்ளோ பயம்-பக்தி-வழிாபாடாக வந்திருக்கிறதுன்னா பாருங்களேன்!)
இன்றும் பாம்பு-கருடன் விளையாட்டு,
பாம்பை வைத்து பாம்பாட்டி படம் எடுக்க வைக்கும் வித்தை காட்டுவதைப் பார்க்க
அவ்வளவு கூட்டம் கூடுகிறது! பாம்புதான் படம் எடுக்ககும் என்பதில்லை என்றுதான்,
பாம்பை வைத்தே தமிழன் –இதில் நம் சகோதரத் தெலுங்கன், கன்னடன், மலையாளி எல்லாரும்
சகோதரர்களும் தான்!- படங்களை எடுத்துக் கல்லா கட்டியிருக்கிறார்கள்! இதில் தமிழர்களை
விடவும் தெலுங்குச் சகோதரர்கள் மிக அதிகம்!)
இதனாலேயே வெளிநாடுகளில், இந்தியாவைப்
பற்றிய இமேஜ் என்ன என்று கேட்டால் பாம்பாட்டிகள் வாழும் நாடு என்கின்றனர்.. என்ன
கேவலம் பாருங்கள்! இத்தனைக்கும் பர்மா, ஆப்பிரிக்கா, தாய்லாந்து முதலான பலநாடுகளிலும் இந்தப் பாம்பு வழிபாடு பழக்கம் ஆதிகாலத்திலிருந்தே இருக்கத்தான் செய்கிறது!)
அறிவுகளின் வகைகள் பற்றிய விரிவான தொல்காப்பிய
விளக்கத்தை நம் நண்பர் திரு குணசீலனின் கட்டுரையில் பார்க்கலாம் -http://www.tamilauthors.com/01/21.html)
சரி செய்திக்கு வருவோம் –
“பாம்பு வந்துருச்சு”என்று யாராவது சொல்லும்போது, “பாம்பு
எங்கய்யா வந்துச்சசு? அது இருந்த இடத்த ஆக்கிரமிச்சி
நீ வீட்டக் கட்டியிருக்கே, அது தன்னோட இடத்தை உரிமையோட பார்க்க வந்தா என்னமோ அது
வந்து ஆக்கிரமிச்ச மாதிரியில்ல பேசுற..அநியாயம்யா இது!?” என்று எங்கள் கவிஞர் கந்தர்வன்
சொல்லும்போது முதலில் சிரித்து, பிறகு அதிர்ந்திருக்கிறேன் உண்மைதானே? அது அதோட
இடத்தைப் பார்க்க வந்தது என்பது தானே உண்மை? நாமதான் அதை விரட்டியிருக்கிறோம்! ஆனா
இப்ப வந்திருச்சி னு கத்துறோம்! இது எப்டி இருக்கு?
இதுமாதிரித்தான்...
“வெள்ளம் வந்திருச்சீ!” என்பதும் எனக்குப் படுகிறது-
ஏற்கெனவே பள்ளமாக, குளமாக, ஏரியாக,
நீர்நிலையாக இருந்த இடங்களை –அது மனிதர்களுக்காக இயற்கை வைத்திருந்த நீர்த்தேக்கம்
என்பதை மறந்த மனிதர்கள்- இரக்கமற்ற மனிதர்கள், அந்த இடத்தைத் தான் ஆக்கிரமித்து,
குடியிருப்புகளைக் கட்டிக் குடியிருப்பதைக் கண்ட வெள்ளம் தன் இடத்தைப் பார்க்க –வேறுவழியெல்லாம்
சுற்றிக்கொண்டு போக வழிதெரியாமல், பழைய தனது இடத்தைப் பார்க்க – வந்திருக்கிறது!
நாம “வெள்ளம் வந்திருச்சி”னு கத்துறோம்!
இயற்கையை எதிர்த்து மனிதன் வாழ
முடியாது.
இயற்கையோடு ஒட்டி அது சொல்கேட்டு
வாழ்ந்தால் அது ஏராளமான செல்வங்களைக் கொட்டித் தந்துகொண்டேதான் இருக்கிறது,
நாம்தான் “மைதாஸ்“ மாதரி பேராசையோடு அதைத் தொந்தரவு செய்தால் அது வேலையைக்
காட்டும்!
அதுதான், வெள்ளம், வறட்சி, பூகம்பம்,
தீப்பிடித்தல், சுனாமி எனும் ஊழி என எல்லாமும்..
“ஆசை ஆசை சொக்கா! ஆயிரம் பொன்னாச்சே!” எனும் ஏபி நாகராஜனின் நாகேஷ் வசனமும்..(இவற்றிலும் நாகம் தான்!)
“ஆசை ஆசை சொக்கா! ஆயிரம் பொன்னாச்சே!” எனும் ஏபி நாகராஜனின் நாகேஷ் வசனமும்..(இவற்றிலும் நாகம் தான்!)
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்“
எனும் வள்ளுவனும்,“ஒவ்வொரு விளைவுக்கும் சமமான எதிர்விளைவுஉண்டு“
எனும் நியூட்டனும் சந்திக்கும் இடம் இதுதான்!
என்ன சரியா?
--------------------------------------
வள்ளுவனும் நீயூட்டனும் அவர்களோட முத்துநிலவன் அவர்கள் சொல்வது சரிதான்
பதிலளிநீக்குஅய்யா... இது வஞ்சப் புகழ்ச்சி தானே? ஏ...ன்?
நீக்குநல்லாத்தானே போயிட்டருக்கு?
எனினும் வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி நண்பா
பாம்புக்கதையென நினைத்து படித்தால் ..வெள்ளத்தில் கொண்டுபோய் விடுகிறது...
பதிலளிநீக்குஇதுதான் நீங்கள்...ஆயிரம் பெரியார் வந்தாலும்.....என்ன செய்ய?
என் மழை பற்றிய பதிவுகளை பத்திரப்படுத்தி வைக்கிறேன்...எதிர்காலத்திலும் தேவைப்படும்..
அய்யா..இதை உங்களிடம் முன்னரே எதிர் பார்த்தேன்...ஆனாலும் என்ன லேட்டா வந்தாலும்.....
ஆயிரத்து ஓராவது பெரியார்கள் இப்படிச் சொல்லக்கூடாது தம்பீ!
நீக்குஇருந்தாலும் அஞ்சாம் தேதி வலைச்சித்தரைப் பார்க்கும்போது கேட்போம்..
அடே டே ரூபி தான் நாகரத்தினமா?இன்றைக்கு தான் தெரிந்துகொண்டேன். மற்றும் தோழர் மதுக்கூர் அவர்களுக்கு எங்கள் அன்பினை தெரிவியுங்கள்.
பதிலளிநீக்குபாம்பு வாழும் இடத்தில வீடை கட்டி வாழ நினைத்தால் பாம்பு அல்லாமல் பம்பரமா வரும்?
விழாக்களின் இடையில் கிடைத்த நேரத்தில் பேசும்போது, ஏற்கெனவே, வலைப்பக்க விழாப் பற்றி விலாவாரியாக அவனிடம் பேசியபோதே உங்களைப் பற்றிச் சொல்லிவிட்டேன்.
நீக்கு(இதுதானே நம்ம நல்ல பழக்கமும், கெட்ட பழக்கமும்?) கடைசிவரியில் நிக்கிறீங்க விசு! தமிழ்நாட்டில் முன்பே அறிமுகம்தான் என்றாலும் இப்போ முன்னிலும் பேசப்படுகிறீர்கள் நண்பா! தொடர்ந்து படர்ந்து பரவி வளர வாழ்த்துகள்.. நன்றி
மென்மையாக ஆரம்பித்து பொட்டில் அடித்தார் போல் முடித்திருக்கிறீர்கள் ஐயா... அறிவின் வகையையும் தெரிந்து கொண்டேன்... நியூட்டன் விதி போல் வாழ்க்கை விதிக்கும் எதிர்வினை உண்டு. இன்னும் வடகிழக்கு பருவம்ழையே முடியவில்லை. டிசம்பர் வேறு இருக்கிறது...? பார்க்கலாம், இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என....
பதிலளிநீக்குமுதல்வரி சரிதான். அதுதானே நம் பாணி! நன்றி நண்பா
நீக்குசரி தான்... சரியே தான்...
பதிலளிநீக்குவரும் ஐந்தாம் தேதி சந்திப்போம். (ஜிடிஎன் பொறியியல் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழாவிற்கு அய்யா தமிழ்ப்பரிதி அழைத்திருக்கிறாரா? சொன்னார். சந்திப்போம்)
நீக்குமேலே பாருங்கள்... இதுவரை உங்களையும் சேர்த்து, ஐந்து நண்பர்களின் பத்துக் கருத்துகள் பதிவாகியும் ஒரு த.ம.வாக்கும் சேரல.. நீங்க எப்படிய்யா ஒரே பதிவுக்கு ஒரே நாளில் 20,30 வாக்கு வாங்கிடுறீங்க..சரி ...நீங்க வலைச்சித்தர் அல்லவா?)
நீக்குதமிழ்மணத்தில் இணைக்கும் போது மின்வெட்டு... இப்போது இணைத்து வாக்கும் அளித்து விட்டேன்...
நீக்குமுக்கிய குறிப்பு : நீங்களே பதிவை வெளியிட்ட பின் தமிழ்மணத்தில் இணைத்து தங்களின் வாக்கும் முதலில் அளித்து விடவும்...
பாம்புகளை விரட்டிப்புட்டு ,பள்ளங்களை நிரவிக்காட்டி மனைக்கட்டுகளா வித்துப் பணம் பண்ணுனவனுகளை நொந்துக்கிறதா? பங்குலபாதி வாங்கிக்கிட்டுப் பட்டாப் போட்டுக் கொடுத்தவங்களை நொந்துக்கிறதா?
பதிலளிநீக்குபாம்பையும் வெள்ளத்தையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இந்தப்பட்டியலில் யானை, புலி, சிங்கம், சிறுத்தை என நீண்ட பட்டியல் இருக்கிறது. அவைகளின் வழமையான வழித்தடங்களை மறித்து கான் கிரீட்டுகளை நிரப்பி விட்டால் அந்த விலங்குகள் என்னதான் செய்யும்? வெள்ளியங்கிரி மலை போல் இன்னும் எத்தனை இயற்கை சேதாரங்கள். சென்னையில் பொத்தேரி, போரூர், கூவம் , அடையாறு, பள்ளி கரணை ,வேளச்சேரி எல்லாவற்றுக்கும் மேலாக மௌலிவாக்கம் என இயற்கை நீர் நிலைகள் கணக்கின்றி கொள்ளையடித்ததன் விளைவு ...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குமுற்பகல் செய்தோம்
பதிலளிநீக்குபிற்பகலில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்
தம +1
எல்லாம் பாம்பு ,யானை வாழ்ந்த இடம் என்றால் மனிதன் வாழ்ந்த இடம்தான் எது ?அந்த இடம் ,இன்றைய உலக ஜனத்தொகை முழுவதையும் தாங்குமா :)
பதிலளிநீக்குஆங்... இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். இதற்குத் தனி ஒரு பதிவே போடவேண்டும். போடுவேன் பொறுத்திருங்கள் நன்றி பகவானே!
நீக்குஉண்மையே.. ஐயா.. இயற்கை அளித்திருக்கும் கொடைகளை அவற்றின் மகத்துவம் புரியாமல் அழித்துக்கொண்டிருக்கிறோம்.. நாமும் அழிந்துகொண்டிருக்கிறோம்.. சிந்திக்கவைத்த கருத்துப்பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குசரிதான் அண்ணா..
பதிலளிநீக்குவெள்ளம் வந்தது, ஊருக்குள் நுழைந்த யானை அட்டகாசம், சிறுத்தை பயம் என்று நாம் காட்டிற்குள் நுழைந்ததை மறந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் என் மனதில் எழும் கேள்விதான் இது. அது எப்படி மனிதன் மறக்கிறான் என்று!
அதோடு நம்மளதான் முள் குத்தும், கல் தட்டிவிடும்....
ஆமாம் அண்ணா .இயற்கைக்கு முன் நாம் ஒன்றுமேயில்லை .அதற்குள் நீயா நானா என்று போட்டி வேறு .
பதிலளிநீக்குஎவ்வளவு தான் விஞ்ஞான தொழில் நுட்பம் வளர்ந்திருந்தாலும் இயற்கைக்கு முன் மனிதன் தோற்றே போகிறான். இயற்கையோடியைந்து வாழ்ந்தால் கோடி நன்மை என்று மனிதன் உணர வேண்டிய தருணமிது. சிந்திக்க வைக்கும் பதிவுக்கு நன்றி அண்ணா.
பதிலளிநீக்கு