இன்றைய புதுமை எல்லாவற்றுக்கும் சிறிதளவேனும்
ஒரு மூலம் இருக்கும். சிந்தனையோ செயலோ, பொருளோ அடுத்தடுத்துத் தொடர்வதுதான்
பரிணாமம்! இன்றைய பழமை நேற்றைய புதுமை, இன்றைய புதுமை நாளை பழசாகிவிடும்! முந்திய பழமையின்
நல்லனவற்றை நாடி எடுத்துக் கொள்வதும் சொல்வதும்
அடுத்து வரும் புதுமையை
வளர்ப்போரின் அரிய கடமையாகும்.
ஆய்வுகள், நாட்டு வரலாற்றை அறிவதில் மட்டுமல்ல,
நம் வீட்டு வரலாற்றை அறிவதிலும் கொண்டுபோய் விட்டால் நல்லதுதான்! இந்த
முன்கதைகளில் –நம் தாத்தாக்களின் கதைகளில்- நம் பாசத்திற்குரிய “பாட்டிகள்“
தாமாய்ச் சேர்த்தது என்ன? தெரிந்தோ தெரியாமலேர் நீக்கியது என்ன? என்று, தெரிந்து
பயன்கொள்ள, நமக்கும் சாமர்த்தியம் வேண்டும் அப்போதுதான் நாளைய வெற்றி நம்
வசமாகும்.
நீண்ட
நெடிய பாரம்பரியமுள்ள நம் தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சி, சங்கிலியாகக் கோக்க
முடியாமல் கிடக்கிறது. அறுபட்ட கண்ணிகளின் அழகே நம்மை மட்டுமின்றி உலகையும்
ஈர்க்கிறதெனில் நம் கடமை பெரிதாகிறது! அதன் சிறு முயற்சியாக, கிடைத்த கண்ணிகளை
வரிசைப்படுத்திப் பார்க்கும் முயற்சியே இன்றைய வரலாற்றுத் தேவை! தவறுகள் நிகழலாம்.
முயல்வதில் தவறில்லையே!