படிக்க வேண்டிய இலக்கிய இதழ்கள்..(1)

அண்மையில் நான் எழுதிய எழுத்தாளர்க்கு அவசியமான சில குறிப்புகள்பதிவில் எழுதியிருக்க வேண்டிய நல்ல இதழ்களைப் பற்றிய அறிமுகம் தனித்தொடராக வரவேண்டும் என்பதால் அப்போது விவரித்து எழுதவில்லை. அந்த வரிசை இப்போது..
கவிதை ரசனையும், 
இலக்கிய விவரங்களும் ததும்பும் இதழ்! 

 ஆசிரியர் குழு அறிவிப்பின் முகப்பிலேயே ஞானாசிரியர்- சி.சுப்பிரமணிய பாரதிஎன்பதையும், இதழ்ப்பெயர் மகாகவிதை என்பதையும் பாரதியின், கையெழுத்திலேயே வெளியிட்டும் பாரதியின் மேல்கொண்ட பற்றை வெளிப்படுத்தும் இதழாசிரியர்ளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
(தனித்தமிழ் அன்பர்களுக்குக் கோபம் வரலாம். சிலவற்றில் நம் பழமை பேணும் பண்பை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை என்பதே என் கருத்தும்)

உள்ளே நுழைந்தால், இதழின் பெயர்ப் பொருத்தத்தைச் சொல்லாமல் சொல்லும் விதம் கவிதைகள் தமிழிலும் மொழிபெயர்ப்பிலுமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவ்வளவும் அருமையான உள்ளடக்கம் கொண்டவை. மரபுக் கவிதையின் பக்கமும் கொஞ்சம் கண்பாவுதல் அவசியம்தான். ஆனால், மரபில் எழுதுவோர் இன்றைய உலகிற்குத் தேவையானவற்றை பாரதி சொல்வது போல எளிய பதம், எளிய சொற்கள், பொதுமக்கள் விரும்பக் கூடிய மெட்டில்எழுதுவதில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். (வெற்று மரபு மொழிக்குச் சுமைதானே?)

காலமும் கணக்கும் நீத்த காரணியாகத்தான் இன்னும் இருக்கிறது கவிதைஎனும் தலையங்கத் தொடக்கமும் மரபின் புதிய தொடர்ச்சியாகவே உள்ளது.

ஆழ்ந்த பொருட் செறிவு மிக்க கட்டுரைகள், அனைவரும் படிக்கக் கூடிய எளிய நடையில் வந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை இதழ்க் கட்டுரைகளில் உணர முடிகிறது

பாரதி பற்றிய ம.பொ.சி.யின் கட்டுரை, “பாவேந்தரின் அமுதப் பாடல்கள்என கவிஞர் சிற்பியின் தொடர் கட்டுரை 1970களின் எழுத்து“  இதழ் தொடங்கி இன்றும் இயங்கிவரும் இரா.மீனாட்சி அம்மா அவர்களின் ரோம்நகரில் ஒரு கவிதை வேள்விபயணக் கவிதை அனுபவக் கட்டுரை, முனைவர் கிருங்கை சேதுபதியின், “காரைக்குடியில் பாரதியார்தொடர் கட்டுரை   தமிழ்க்கவிதை வரலாற்றில் ம(றை)றக்க முடியாத வானம்பாடிகள் பற்றிய செங்கதிர்த்  தேவன் கட்டுரை என அரிய கட்டுரைகள் பல இதழை அலங்கரிக்கின்றன.
அடுத்த பாராட்டுக்குரிய பகுதி நூல்அறிமுகம் எனும் துறைமுகம்பகுதியும் விமர்சனப்பகுதியும் விரிவான பக்கங்களில் வந்திருப்பது எழுத்தாளர்களை உற்சாகப் படுத்துவதும், வாசகர்களை வசப்படுத்துவதுமாக உள்ளது.

இந்த டிசம்பர்,2014- இதழில் மட்டும் ந.பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி“, பா.கிருஷ்ணனின் சுவடுகள் நெய்த பாதை“, இரா.தமிழரசியின் குடையாய் விரியும் கவனம்”, ப.தியாகுவின் எலிக் குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை“, இலண்டன் புதுயுகனின் மடித்து வைத்த வானம்சிறந்த நூல்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

புதியதலைமுறை ஆசிரியர் மாலன் அவர்களின் கயல் பருகிய கடல்“, சென்னைப் பல்கலைப் பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களின் பாரதியியல் கவனம் பெறாத உண்மைகள்நூல்களுக்கான விரிவான மதிப்புரைகள் நூலாசிரியர்களின் கருத்தாழத்தை மட்டுமல்லாமல் முறையே மதிப்புரை எழுதிய இரா.குறிஞ்சி வேந்தன், சாந்தாதேவி ஆகியோரின் படிப்பாழத்தையும் காட்டுவதாக உள்ளது. இப்படித்தான் இருக்க வேண்டும் மதிப்புரைகள்!

தமிழின் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் சில, படிப்பவரைச் சோதிப்பதாக அமைந்து, பிறமொழி இலக்கிய அறிமுகமே வேண்டாம் என்று நல்ல படிப்பாளிகளே நினைக்கு மளவுக்குக் கொண்டு விட்டதே அதிகம்! ஆனால், இவ்விதழில் சிரியக் கவிஞர் மரம் அல் மஷ்ரி பற்றி மும்பைக்கவிஞர் புதியமாதவி அமெரிக்கக் கருப்பினப் பெண்கவிஞர் மாயா அஞ்செலோபற்றி மதுரைமகள் இருவரும் எழுதியதைப் படித்த பிறகு அந்தக் கருத்து மாறுகிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் மொழிபெயர்ப்பும் அறிமுகமும்!

அந்த வகையில் புதிய மாதவி மொழிபெயர்த்த 'மஷ்ரி' கவிதையின் ஒருதுளி-
அகதிகள் முகாமின் நடைபாதையில்,
அல்லது கல்லறைகளில்
எல்லாக் குழந்தைகளையும் போல
விடுதலையின் குழந்தைகளும்
காத்திருக்கிறார்கள்,
தங்கள் தாய்மார்களுக்காக  

அமெரிக்காவில் (மேரிலாண்டில்) வசித்துவரும் குருப்ரசாத் வெங்கடேசன் எழுதிய தமிழ்க்கவிதையின் சில வரிகள்
அப்பா
நான் வளர்ந்து நிக்கிறேன்,
நீ வளைஞ்சு நிக்கிற.
இல்ல,
நீ வளைஞ்சு நிக்கிற
அதுனால நான்
வளர்ந்து நிக்கிறேன்...
.. . .. . . .
நீ பிரம்பு எடுத்தெ
இந்த மூங்கில்
புல்லாங்குழலா ஆச்சு
இரவுல
அந்த வானம் உடுத்துற
கருப்புச் சட்டையில
சின்னச்சின்ன நட்சத்திரம் மாதிரி
உன் வெள்ளைப் பனியனில்
எத்தனை ஓட்டை இருக்கும்?!“

மற்றும் தமிழின் புகழ்பெற்ற கவிஞர்களான 
ம.லெ.தங்கப்பா, ரவிசுப்பிரமணியன், திலகபாமா, பூ.அரவிந்தன் முதலானோர் கவிதைகள்...

எனக்கு, இவ்விதழில் 
இன்னும் வேண்டும் என்று தோன்றும் தேவைகள்-
சமகால இலக்கியக் கட்டுரைகள் அதிகம் வேண்டும்,
சிறுகதை, இலக்கிய விவாதங்கள் இடம்பெற வேண்டும்.
ஊடக கலை-இலக்கியங்கள் பற்றிய விமர்சனம் வேண்டும்,
தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத் தொடர் வேண்டும்.
தமிழ்ச்சிற்றிதழ்கள் பற்றிய அறிமுகத் தொடர் வேண்டும்.

இந்த வேண்டும்களைத் தாண்டியும் இலக்கிய ஆர்வமுள்ள எல்லாரும் இந்த இதழைத் தொடர்ந்து வாங்கிப் படிக்கவும் வேண்டும் என்பதே என்வேண்டுகோள்!

காலாண்டுக்கு ஓரிதழ் எனும் கணக்கில், ஆண்டுக்கு நான்கு இதழாக வரும் இந்த மகாகவிதை- 
தனி இதழ் விலை ரூ.30 என்ற போதிலும் ஆண்டுச் சந்தா எதுவும் போடப்படவில்லை! (தனிச்சுற்றுக்கு மட்டும் என்பதால் நன்கொடை பெற்றுக்கொள்ள மட்டுமே விதிகள் அனுமதிப்பதால்)
முகவரி 
“மகாகவிதை“ இலக்கியஇதழ்,
321, 3ஆவது முதன்மைச் சாலை,
மகாவீர் நகர், புதுச் சேரி  605008
மின்னஞ்சல்  mahaakavithai@gmail.com

பி.கு.1-இந்தத் தொடரில் நல்ல சில தமிழிலக்கிய இதழ்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துவேன்.
பி.கு.2-நன்கொடை விவரம் கேட்டும் இதழைத் தொடர்ந்து அனுப்பும்படியும் நான் மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.
அப்ப நீங்க..?  
-------------------------------------------------------- 

8 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    இதழ்பற்றி மிக தெளிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்... தொடருகிறேன். த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. குருப்ரசாத் வெங்கடேசன் அவர்கள் கலங்க வைத்து விட்டார்...

    தகவலுக்கும், விளக்கங்களுக்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  3. மிக நல்ல சிற்றிதழ். அவசியமான அறிமுகம்

    பதிலளிநீக்கு
  4. தரமான இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினை அறிமுகப்படுத்தினீர்கள் - நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நல்ல இலக்கிய இதழை அறிமுகப்படுத்துவது அவசியமானதொன்று. பயனுள்ள தொடருக்கு மிகவும் நன்றி ஐயா! எங்கள் புதுவையில் இது வெளியாவது நீங்கள் சொல்லித் தான் தெரிந்தது!

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு இதழ் அறிமுகம்! நன்றி!

    பதிலளிநீக்கு