கவிதைகளில் “கெட்டவார்த்தை“ வரலாமா?

கவிஞர் ஜெயபாஸ்கரன், சென்னை

சென்னையில் நடந்த கவிஞர் ஜெயபாஸ்கரன் கவிதைகள் முதல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் சுவையான விவாதம் ஒன்று நடந்தது.
நந்தன்வழிதிங்களிதழ் ஆசிரியர் நா.அருணாசலம் தலைமையில், கவிஞர் கனிமொழி புத்தகத்தை வெளியிட்டுப் பேச,  வீ.கே.டி.பாலன் முதல்படி பெற்று உரையாற்றினார். சு.ப.அறவாணன், திலகவதி, வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மணிமுடி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். நானும் திருப்பூர் கிருஷ்ணனும் நூல் திறனாய்வு செய்து பேசினோம்.
          முதலில் பேசிய நான் - கவிதையெனில் முதலில் புரியவேண்டும். பாரதி அப்படித்தான் எளிய பதம். எளிய சொற்கள். பொதுமக்கள் விரும்பக்கூடிய மெட்டு -இவற்றால் ஆகிய காவியம் ஒன்றை செய்து தருகிறவன் தமிழன்னைக்குப் புதிய அணிகலன் சூட்டியவனாகிறான்’, என்று பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையிலேயே பிரகடனப்படுத்திவிடுகிறான்.
ஜெயபாஸ்கரன் கவிதைகளின் வலிமையே அதன் எளிமைதான்..”  என்று பேசியதோடு சில கவிஞர்கள் எந்த அளவிற்குப் புரியவில்லையோ அந்த அளவிற்கு உயர்ந்த கவிதைஎன்பதாக நினைத்துக் கொண்டுவிடுகிறார்கள், என்றும் கூறினேன். கவிஞர் மகுடேசுவரன் இப்படித்தான்.
            அது அதுவாகவும்         
            இது இதுவாகவும்               இருந்தது        
            பிறகு             
           அது இதுவாகவும்          
           இது அதுவாகவும்               மாறின.        
           இப்போது          
           அதது அததுவாக         
           இதிது இதிதுவாக..என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார் என்று சொன்னேன். எனது பேச்சின் ஒரு பகுதிதான் இது.

          ஆனால்,  அடுத்துப் பேசிய திருப்பூர் கிருஷ்ணன் - தனக்குப் புரியவில்லை என்பதற்காக கவிதையில் ஒன்றுமில்லை என்று சொல்லிவிடக்கூடாது. புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்என்று பேசிவிட்டு ஜெயபாஸ்கரனின் கவிதைகளைப் பாராட்டிய கையோடு தொகுப்பில் உள்ள மயில்என்னும் கவிதையின் இறுதியாக
                   ‘மயில்களைப் பார்க்கும் போது மட்டுமின்றி      
                    போய்ப்பார்க்கும் போதும்        
                    சொல்லியாக வேண்டியிருக்கிறது.     
                    மயிலேமயிலே….நீ         
                    எந்த மயிரானுக்கும்         
                    இறகு போடாதே
 --என்றுவரும் வரிகளை இன்னும் கொஞ்சம் மறைமுகமாகச் சொல்லியிருக்கலாம். கவிதையில் இது போன்ற சொற்களைக் கையாளும் போது இன்னும் யோசிக்கவேண்டும் எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவடுவது நல்லதல்லஎன்று பேசினார். பகா ஈகாரம்-பவ்வீஎன்றெல்லாம் ஓரெழுத்து வார்த்ததையைச் சொல்வதுமாதிரி இலைமறை காயாகச் சொல்ல வேண்டும்..என்றார்.
             பிறகு பேசியவர்கள் இதுபற்றி நிறையப் பேசினார்கள் அப்போது இதுபற்றி நான் சொல்ல நினைத்ததை அங்கேயே சொல்ல முடியாதவாறு நான் முதலிலேயே பேசி விட்டதால், இப்போது அந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.இது பற்றிக் கவிஞர்கள் மட்டுமல்ல அனைவருமே கருத்துக்கூறலாம்.

            சொல்லில் வழக்குச்சொல்லே முக்கியத்துவம் மிகுந்தது. வழக்கு மாற மாற இலக்கணமே மாறவேண்டும். தொல்காப்பியரும்…        
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடித்தான் இலக்கணம் படைத்ததாகப் பாயிரத்தில் பாடுவார் பனம்பாரனார்.
அப்படித்தான் தமிழ் இலக்கணத்தில் அதே வழக்கை இயல்பு வழக்கு. தகுதி வழக்குஎன இரண்டு பிரிவாக்கினர் பின்வந்த நன்னூல் இலக்கணத்தார். அதற்கு என்ன பொருளெனில். இயல்பு வழக்குஅப்படியே இயல்பான (உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்றவாறு) உயர்வான வழக்கு.
 தகுதி வழக்குத்தான் கொஞ்சம் தகராறு. சபையில் - இலக்கியத்திலும் கூட-சொல்லத்தகாதசொற்களை தகுதிப்படுத்தி (அல்லது மறைத்து-பூசி மெழுகி) சொல்வது.

  ‘பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும்போது மருவாதிஇல்லாம பேசப்படாதுஎனும் உள்ளடக்கம் தான் இது. இதனைச் சிலவகையாகப் பிரித்தனர் பெரியோர்’ –

அதாவது – ‘இடக்கர்அடக்கல்’ (இடக்கான தகுதியற்ற சொற்களை மாற்றிப்பேசுவது). ‘ஆய் வருதும்மா’- ன்னு சொல்லக்கூடாது. ஆனா -டூபாத்ரூம் வருதுன்னு சொல்லலாம்! (இங்கிலீஷ்னா நாகரிகம்!)

 ‘மங்கலம்’ (அமங்கலமான சொற்களை மங்கலமாக மாற்றிப் பேசுவது) ஆடிப்பெருக்கில் தாலிசுருக்குவதை தாலி பெருக்கிப் போடுவதுஎன்பது. இதில் ஒன்றும் நமக்குத் தடையில்லை.
அடிப்படையில் பார்த்தால் தகுதியற்றசொற்களை நீர்தெளித்துதகுதிப்படுத்துவதுதான் இதன் உள்ளடக்கமும் .அது-தகுதிப் படுத்துவல்ல. இருக்கும் வேற்றுமைக்கு எதிரான கோபத்தை சமாதானப்படுத்துவது- ஏற்கச்செய்வது வேற்றுமையை விட்டு விடாமல் போற்றிப் பாதுகாப்பாதேதான்!

தகுதியற்ற சொல்என்றோ தகுதியற்ற மனிதன்என்றோ இயல்பில் யாரும் எதுவுமில்லை. சொல்லப்படும் சூழல்-நோக்கம்தான் சொல்லின் பொருளை வெளிப்படுத்தும்.

 ‘மயிர்எனும் சொல்லை வள்ளுவர்  உவமையாக்கியிருக்கிறார் மயிர்நீப்பின்...”(குறள் 969). ஒன்றும் அசிங்கமாயில்லையே!

 கவிஞர் அறிவுமதியும்.-
பறையர், படையாட்சி, தேவர், செட்டியார்,                  
 நாடார், பிள்ளை….மசுரு
 ஒரே முருகன், ---எனும் போது ஒரே சாமியக் கும்பிட்டும் இன்னும் சாதிச்சனியன் ஒழியலையே எனும் எரிச்சல் நமக்குள் ஏற்படுவதைச் சரியாகத்தானே வார்த்தைப் படுத்தியிருக்கிறார்?!

         கவிஞர் இன்குலாப் அதையே எரிச்சலாக அல்ல ஆவேசமாகவே பயன்படுத்துகிறார்-
     ‘சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே-உங்க                                  சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணைய ஊத்துதே                      எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க                             எரியும்போது எவன் மசுரப் புடுங்கப்போனீங்க --என முனைவர் கரு.அழ.குணசேகரனின் ஆவேசக் குரலில் தெறிக்கும் கோபம், தலித்துகளின் தர்மாவேசமன்றி அசிங்கமாஅதுஅடிபட்டுக் கத்துபவனை இலக்கணத்தோடு கத்தச்சொல்லி எந்தப் பெரும் மேதாவியும் கட்டளையிட முடியாதே! அப்படித்தான் தலித்திய இலக்கியங்கள்! பட்டவர்களுக்குத்தான் தெரியும் அந்த வலி! (தலித்தோழர்கள், மற்றவர்கள் எப்படித்தான் எழுதினாலும் அதை தலித்தியமாக ஒத்துக்கொள்வதில்லை என்பது தனீ விவாதம்!)

தலித்தியக் கவிதைகளில் புகழ்பெற்ற ஆதவன் தீட்சண்யா இதை அப்பட்டமாக உரித்துத் தொங்க விடுவார். பாருங்கள் - 
      “மழைக்காலமும் பனிக்காலமும்
       சுகமானதோ, மயிரானே?
       மழை உனக்கு சன்னலுக்கு வெளியேதான் பெய்யுது!
       ஆனா எங்களுக்கு?
       எங்க பொழப்பு மேலயே!”

ஆனால்,  பறையருக்கும் இங்கு தீயப்         
                     புலையருக்கும் விடுதலை
  --எனும் பாரதி வரிகளைக் கேட்டு மிரண்டு, “சாதிப் பெயரா இருக்கே! கொஞ்சம் மாத்திக்க முடியுமா?”  என்று கேட்ட வானொலி அதிகாரிகளிடம் பாரதியைக் கூட்டி வந்தா மாற்ற முடியும்அவன் இந்த வரிகளைத்தான் மாற்றித்தருவானா?  (உண்மையில் நடந்த கேவலமான நிகழ்வு இது!)
    
                “பறைச்சி யாவ தேதடா பார்ப்
               பனத்தி யாவ தேதடா          
         இறைச்சி தோல் எலும்பிலே             
                             இலக்க மிட்டு இருக்குதோ
--- எனும் சித்தர் பாடலில் கூட சாதிப்பெயர்கள் வரத்தான் செய்கின்றன. அது இழிவுபடுத்த அல்ல-இடித்துரைக்க.

                 அசிங்கத்துக்கும் ஆபாசத்துக்கும் வேறுபாடு நிறைய உண்டு முன்னது அருவெறுப்பூட்டுவதுபின்னது - இன்னது என்றறியாமலே தவறு செய்யத தூண்டுவது திரைப்பட வணிக படைப்பாளிகள் இரண்டையும் குழப்புவதில் தெளிவானவர்கள்அதனால்தான் உடல்உறுப்புக்கூட ஆபாசமாக நமது சமூகத்தில் அறியப்பட்டுள்ளது.

        இரண்டு பொருள்பட எழுதிய   நரைப்புலவர் தேவலாம் எனும் அளவில் இன்றைய திரைப்புலவர் ஒரேபொருளில்தான் உறுப்புகளைப் பற்றியும் பொறுப்பின்றி எழுதுகிறார்களே!

         மறை உறுப்புகளின் பெயர்களைக் கூட ஒடுக்கப் பட்டவர்களின் ஆவேசத்தைப் பாடப் பயன்படுத்த முடியுமா?
 முடியும் என்றெழுதிய கவிகளும் உண்டு.
        வேதம் படிக்க           
        கண்வேண்டும் வாய்வேண்டும் 
        ஆண்குறி எதற்கு? --எனும் நீலமணியின் கேள்வியில் தெறிப்பது ஆபாசமா, ஆவேசமா?

                 பெண்ணிய வளர்ச்சியில் பாடவந்தபெண் கவிஞர்கள் இந்த உறுப்பு சமாச்சாரங்களையெல்லாம் நொறுக்கி யெறிகிறார்கள் தனது கவிதைத் தொகுப்புக்கே “முலைகள்“ என்று பெயர் வைத்து அதிர்ச்சியூட்டிய கவிஞர் குட்டிரேவதி அதற்குத் தந்திருக்கும் விளக்கத்தைக் கவிஞர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும், அவ்வளவு உருக்கம், பொருத்தம்.

                அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த 
                நிச்சமும் பெண்பாற்கு உரிய. -எனும்    பழம்பஞ்சாங்கக் கருத்தைக் கிழித்தெறிந்து --       
                 ‘மரப்பாச்சி பொம்மைக்கும்
                  மாராப்பு போட்டுவைத்த  
                  பண்பட்ட தேசமிது,          
                  இன்று அரைகுறைதான் அழகாம்!                
                  இடையைக்கூர்ந்து          
                 தொடையை ஆய்ந்து         
                 கசாப்புக் கடைகட்டும்         
                 ஐஎம்எப்  கலாச்சாரம் !         
                 எல்லா நாயும்          
                 காலைத் தூக்க                
                 எம் தேசமென்ன              
                 தெருவோர நடுகல்லா?’ --எனும் கவிஞர் ஆர்.நீலாவின் கோபத்தில் ஆபாசம்ஆவேசமாகிறதே!

இவற்றையெல்லாம்விடவும், ‘பெண்கள் இப்படிப்பாடலாமாஎன்று சிலர் அதிர்ச்சியடையும் விதத்தில் பாடுகிறார்கள் இன்றைய தமிழ்ப்பெண்கவிகள் (க்ருஷாங்கினி-மாலதிமைத்ரி தொகுத்த 20ஆம் நூற்றாண்டுப் பெண் கவிகளின் - பறத்தல் அதன் சுதந்திரம்’ – காவ்யா வெளியீடு பார்க்க)

                   பெண்பார்க்கும் படலத்தில் பெண்ணின் சம்மதம் கேட்கப்படுவதில்லை யெனும் புலம்பல் ஒருபக்கம் தொடரும் போதே திருமணம் பற்றிய மாற்றுப் பார்வையுடன்
                  ‘…உன்னிடமிருந்து                                    
                    கலங்கலானதே எனினும்                      
                    சிறிதளவு அன்பைப் பெற            
                    எல்லா அறிதல்களுடனும்            
                   விரிகிறதென் யோனி -எனும் சல்மாவின் கவிதையில் தான் எத்தனை யுகமான பெண்களின் ஆழ்மன ஆதங்கம்!

குட்டி ரேவதியின்
                  ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்        
                  சிசுகண்ட அதிர்வில்               
                 குருதியின் பாலையும் சாறெடுக்கின்றனஎனும் முலைகவிதை, எந்த உறுத்தலும் இன்றி இயல்பாகவே உள்ளதே!.

              அதைச்செய்யாதே இதைச்செய்யாதே“ எனும் பழைய கட்டுப்பாடுகள் கவிஞர் - கலைஞர்களிடம் வேண்டியதில்லை என்பதே எனது கருத்து.

               சொல்வலிமை தெரிந்தவர்தானே கவிஞராக முடியும்?
புண்ணைக்கீறும்போது நிணமும் சீழும் வரத்தான் செய்யும். மருந்து போட்டு ஆற்றுவதே நோக்கமெனில் அது தவறாகப் படாது. நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் இதை அறிவாராக.

               வாய்மொழிவழக்கு சொலவடை பழமொழிகளில் இந்த உழைக்கும் மக்களின் “கெட்ட வார்த்தை“ ஏராளமாக வருவதையும் பார்த்தால் அதில்தான் நமது மக்களின் ஆசை-கோபம்-எரிச்சல்-ஆற்றாமை-மகிழ்ச்சி உட்பட வாழ்க்கை வரலாறே தெரியும்.

                அந்த பாணியிலான சொலவடையோடு இந்த விவாதத்தை முடிப்போமா?
        அயோத்தியிலோ கோத்ராவிலோ குஜராத்திலோ காட்டு மிராண்டித்தனம் செய்யும் ஒருவனை எந்த மதம் என்றா கேட்பீர்? அல்லது காந்தியைக் கொன்றவனை இந்து என்று முகம் சுளிப்பீரா?
 அவன் மனிதனே கிடையாது! அவனுக்கு மதம் வேறா?
                 “நக்குற நாய்க்கு           
        செக்கு என்ன? சிவலிங்கம் என்ன?!!”        
என்றுதான் சொல்ல முடியும். 
         என்ன நாஞ் சொல்றது சரிதானுங்களே-?
-------------------------------------------------------------------------------------  
 (ஜெயபாஸ்கரன் கவிதைகள் முதல் தொகுப்பு வெளியீட்டு விழாவில் நான் பேசியதும், பேசஇயலாது போனதும். பின்னர் நந்தன்வழிமாதஇதழில் கட்டுரையாக வெளிவந்தது)

20 கருத்துகள்:

  1. பூவின் மணத்திலும் மூத்திரத்தின் நாற்றத்திலும் கவிதை பிறக்கும் என்ற பாப்லோ நெருடாவின் வரிகள் நினைவுக்கு வருகிறது ,நெருப்பென்றால் வாய் வெந்துடுமா?கவிதையில் ஏதுவார்த்தை வேற்றுமை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெருடாவின் வரிகள் நெருப்புக்கு நிகரானவை. தூய்மை! அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி பகவான்ஜீ!

      நீக்கு
  2. கலா மாஸ்டர் சொல்வார் என மிமிக்ரி ஆர்டிஸ்ட் சொல்வார்களே
    அந்த பாணியில் சொல்வதென்றால் ,கிழி ,கிழி,கிழி
    சமுதாயத்தின் பிற்போக்கு சிந்தனைகளை கிழித்துத்தொங்கவிட்டுவிட்டீர்கள் ! அண்ணா பெரும்பாலும் இவர்கள் பயன்படுத்தும் கழுதை மேல் ஏற்றுவது ,துடைப்பத்தால் அடித்தல் எல்லாம் அந்த சாதிகுறியீட்டுப்பொருள்களை, மட்டமானதாக காட்டும் எண்ணம் என்பார் ஞாநி. பிற்போக்குத்தனங்கள் ஒழியத்தான் வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் பயன்படுத்தும் பலநூறு சொற்கள் நமது கேடுகெட்ட சாதிய மதச்சார்பு அமைப்பின் பிரதிபலிப்புகள், அதை ஒருமுறை தனியாக எழுதணும்பா... தும்மும்போதும், உயிர்போக இருமும் போதும்கூட மதச்சார்பை வெளிப்படுத்தும் நாம்தான் சொற்களைக் குற்றம் சுமத்தித் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறோம்! இலக்கணமே இப்படி!

      நீக்கு
  3. தாங்கள் சொல்வது சரியாகத்தான் படுகிறது ஐயா

    பதிலளிநீக்கு
  4. ஆவேசத்தை வெளிப்படுத்தும்போது சரியாக இருக்கலாம், அதையே மலிவான சுய விளம்பரத்திற்குப் பயன்படுத்தும் போக்குதானே நீங்கள் சொன்ன பல கவிஞர்களிடத்திலும் இருக்கிறது? நாகரிகமான சொற்களைக்கொண்டு எழுதி ஜெயிக்க முடியாதவர்கள், இம்மாதிரி 'உறுப்பு' எழுத்துகளில் முகம்புதைத்துக்கொள்வதும் நடந்துகொண்டுதானே இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்வது உண்மைதான் அய்யா. என்ன நோக்கத்தில் சொல்லப்படுகிறது என்பதை வைத்துத்தான் சொல்லுக்கான பொருளே அன்றி டிக்ஷ்னரியில் இருப்பதல்ல, என்பதுதான் என் கருத்தும். சரியானவற்றை அடையாளம் காணவேண்டும்.

      நீக்கு
  5. கோபத்தைக் கட்டுப்படுத்தினால் எல்லாம் சரியாகிப் "போய்" விடும்...

    பல எடுத்துக்காட்டுக்கள்... விளக்கங்களுக்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் சிக்கலே! அடக்க அடக்கத் திமிறுவதுதானே இயல்பு. கோபமே தவறு என்பதும் மழுங்கட்டியாக்கிவிடும். அதனால் எப்பவும் திருப்பாச்சி அருவாளொடும் திரியக்கூடாதுதான். எண்ணித் துணிக என்பதே என் கருத்து. நோக்கமே முக்கியம்.

      நீக்கு
  6. நீங்கள் சுட்டிக் காட்டிய மகுடேஸ்வரன் கவிதை , கவிதை மாதிரி தெரியவில்லை. சாமார்த்தியமான வார்த்தை ஜாலமாகத்தான் தெரிகிறது,
    நன்கு ஆய்ந்திருக்கிறீர்கள்.ஐயா
    கவிதை சூழலுக்கு கட்டாயம் தேவை எனில் பயன் படுத்துவதில் தவறில்லை. ஆனால் இதற்கு கிடைக்கும் அங்கீகாரம் இது போன்ற வார்த்தைகளை வலியப் பயன்படுத்தும் சூழலுக்கு இட்டு செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு .
    அன்றாட வாழ்க்கையில் ஒரு சில உறுப்புகளின் பெயர்களை நாம் வெளிப்படையாக சொல்வதில்லை. உதாரணத்திற்கு ஒண்ணுக்கு [போற இடத்தில வலிக்குது என்போம். உரை நடையில் கூட கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதிலை . இவை மாறும்போது தானாகவே கவிதை மற்றும் உரை நடையில் இத்தகைய வார்த்தைகள் இடம் பெறக கூடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”கவிதைச் சூழலுக்குக் கட்டாயம் தேவை எனில் பயன் படுத்துவதில் தவறில்லை. ஆனால் இதற்கு கிடைக்கும் அங்கீகாரம் இது போன்ற வார்த்தைகளை வலியப் பயன் படுத்தும் சூழலுக்கு இட்டுசெல்லக்கூடிய வாய்ப்பு உண்டு” சரியாகச் சொன்னீர்கள் முரளி. அதைக் காண்பதுதான் அரிது ஆனால்,முடியாததல்ல.நல்ல உதாரணம் சொன்னீர்கள். நன்றி

      நீக்கு
  7. வார்த்தையில் என்ன இருக்கிறது..சொல்லப்படும் நோக்கம் தானே முக்கியம்?
    மட்டம்தட்டவோ, இழிவுபடுத்தவோ சொல்லப்படும் எந்த சொல்லும் நன்றன்று..நல்லதொரு நோக்கத்திற்கு சொல்லப்படும் எந்தவொரு சொல்லும் நன்றே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் சகோதரீ. கவிதைபோலச் சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள். (இத இத இதத்தான் நான் பெரீய கட்டுரையாக நீட்டிவிட்டேனோ?) நன்றி நன்றி

      நீக்கு
  8. வணக்கம் ஐயா
    தங்கள் மேற்கோள்கள் கருத்துக்கு வலு சேர்க்கிறது. அடிமைப்பட்ட வம்சத்திற்காக குரல் கொடுக்கும் கவிஞன் அவனது சூழலில் சீற்றம் கொண்டு கெட்ட வார்த்தைகளை பிரசவிப்பது தவறல்ல என்றே படிகிறது எனக்கு. இருப்பினும் மற்றவர்கள் கவனிப்பதற்காக பயன்படுத்தும் சூழல் இருப்பதாக நண்பர்கள் கூறுவதையும் கவனிக்க வேண்டும். நசுக்கப்படுவர்களின் பிரதிநிதியாய் குரல் கொடுக்கும் ஒரு கவிஞனின் கெட்ட வார்த்தை உண்மையில் கெட்ட வார்த்தையல்ல வேதனையின் ஒட்டுமொத்தக் குரல் என்பதை தங்கள் மூலம் உணர முடிந்தது மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”மற்றவர்கள் கவனிப்பதற்காக பயன்படுத்தும் சூழல் இருப்பதாக நண்பர்கள் கூறுவதையும் கவனிக்க வேண்டும்” இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை பாண்டியன். ஒடுக்கப்படுவோரின் குரலின் நியாயம் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து. நன்றி

      நீக்கு
  9. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சார்பாளனாய் குரல் கொடுக்கும்
    புரட்சிக் கவிஞனது வார்த்தைகளில் ஏது கெட்ட வார்த்தை ?..
    எல்லாம் "வலிகளின் உச்சம் "என்பதே உண்மை ஐயா தங்களின்
    கருத்தையே நானும் வரவேற்கின்றேன் .பகிர்வுக்கு மிக்க நன்றி
    வாழ்த்துக்கள் ஐயா .

    பதிலளிநீக்கு
  10. அருமையான அலசல் ,விளக்கம்
    அற்புதமானப் பேச்சைக் கேட்க முடியாது போன
    எம்போன்றோருக்காக அதனைப் பதிவாக்கி
    அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  11. கெட்ட வார்த்தைகள் என கருதப்படுபவைகள் மூலமே உயிர்கள் பிறக்கின்றன.ஆமா இந்த கெட்ட வார்த்தை அகராதியைக் கண்டுபிடித்தது யார்.....எது கெட்ட வார்த்தை?ஏன்?எப்படி?கேட்கனுமே.சாட்டையடி தோழர்.

    பதிலளிநீக்கு