எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்!

தினமணி தலையங்கப்பக்கத்தில் வெளிவந்த எனது கட்டுரை
--நா.முத்துநிலவன்--
   எழுதுபவர்கள் மூன்று வகையினர் முதல் வகையினர் மிகப் பெரும்பான்மையோர்-கணக்கெழுதுபவர் அல்லது கடிதம் எழுதுபவர். இவர்களது எழுத்தால் சமுதாயம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதி;லை.
ஆதனால் ஏற்படும் லாப நட்டம் இவர்களையே சார்ந்தது.
   இரண்டாம் வகையினர்-மிகச் சிறுபான்மையோர் தம் அளவில் ஆத்ம திருப்திக்காக எழுதி வெளிப்படுத்தாமலே விட்டு விடுவோர். ;டைரி எழுத்தாளர் போன்ற இவர்களாலும் மற்றவர்களுக்குப் பாதிப்பில்லை.
   மூன்றாம் வகையினர்தாம் முக்கியமானவர்கள். இலக்கியமாகவோ தொழிலாகவோ இருப்பது இந்த வகை எழுத்துத்தான். இவ்விரண்டுமே அவர்களுடைய அளவில் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் பேசப்படுவதாகவும் பின்பற்றப் படுவதாகவும் இருப்பதால் இந்த வகை எழுத்துத்தான் கவனம் மிகுந்ததாகவும் அமைகிறது.
   அதுவும் அழகான கலைநயத்தோடு கூடிய கதையாக நாவலாக கவிதையாக துணுக்காக ஜோக் ஆக எழுதக் கைவந்தவர்கள் எப்படியும் அடுத்தவரை பாதிக்காமல் விடுவதில்லை. அவர்கள் கவனமாக எழுதுகிறார்களோ இல்லையோ அவர் தம் எழுத்துகளில் சமுதாயம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
   எழுத்தாளனுக்கு என்ன சமூகப் பொறுப்பு?  ‘அது என் தொழில்’ அவரவர் தொழிலை அவரவரும் ஒழுக்கமாக பார்ப்பது தானே சரி ‘‘எனக்குக் காசு வருகிறது எழுதுகிறேன். இதில் என்ன சமூகப் பொறுப்பு?” என்று ஒருவர் கேட்கக் கூடும். 
  “வையகம் காப்பவரேனும் - சிறு 
  வாழைப்பழக் கடை வைப்பரேனும்…” எந்த ஒரு தனி மனிதனுக்கும் கூட சமூகப் பொறுப்பு உண்டு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எழுத்தைத் தொழிலாகக் கொண்டவனுக்குப் பல மடங்குப் பொறுப்புண்டு என்பது தான் உண்மை.
  பேனா விற்பவனுக்கும் பேனாவைப்         பயன்படுத்துவோனுக்குமான வேறுபாட்டை மறைத்துவிடலாகாது.மோசமான எழுத்து மக்கள் மனத்தில் நிலைத்து நிற்காது விரைவில்  மறந்து மறைந்து போகும் என்பது உண்மைதான் என்றாலும் பல நூறு ஆண்டுகளாகக் கட்டிக் காத்துவந்த மரபுகளை உடைத்து நல்ல வளர்ச்சியைப் குழப்பி சமூக மாற்றங்களைத் தள்ளிப் போடும் சக்தி மோசமான பிற்போக்கான எழுத்து என்னும் கலைத்தன்மையால் வெற்றிபெறக்கூடிய எழுத்துக்கும் உண்டு என்பது தானே நமது கவலை.
    வார மாத இதழ்கள் இலக்கியப் பகுதியுடன் வந்தால் இரண்டொரு சிறுகதை நிச்சயம் உண்டு. தமிழின் வார-இருவார-மாத இதழ்களில் மாதாமாதமும் சுமார் 200சிறுகதைகள் வருகின்றன. இதிலும் மர்மக்கதை துப்பறியும் கதை 'ஃபிக்ஷன்" கதை போன்றவற்றை விட்டுவிட்டாலும் சமூகக் கதைகள் சுமார்100 வரும் இதில் எத்தனை கதைகள் நம் நெஞசில் பலகாலம் நிற்கக் கூடியனவாக இருக்கின்றன?
   ஒரு நாற்காலியைச் செய்யும் தச்சுத் தொழிலாளி அதற்கான தேவையும் அழகும் பொருந்திவரும்படி செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் உழைப்பும் சிந்தனையும் கூட சில கதாசிரியர்கள் எடுத்துக் கொள்வதி;ல்லையே! நோயைத் தீர்க்காத மருந்து என்பதை விடவும் நோயை வளர்த்து விடும் மருந்தைக் கொடுத்து விடுவதுபோல ஏற்கெனவே இருக்கும் சமூகச் சிக்கலை மேலும் சிக்கலாக்கும் கதாசிரியர்கள் போலி மருத்துவர்களின் ரகத்தை விடவும் ஆபத்தானவர்கள். வாரஇதழ் ஒன்றில் ஒரு கதை--
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் பாடத்தை ஆசிரியர் நடத்த மறுத்து வேலையை விட்டே போய்விடுகிறார் ஏனெனில் மாணவனிடம் பள்ளியில் சேரும்போதே சாதியைக் கேட்டுக் கொண்டு சாதிகள் இல்லை  என்று பொய் சொல்ல அவரால் முடியாதாம்.
    சமத்துவ உணர்வு சரிதான். தராசு எடைக்குறைவைப் ‘பார்த்து’ சரி செய்யும் நோக்கத்தையே இந்த ஆசிரியர் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதும் அதை எழுதிப் பிரசாரம் செய்வதும்… என்ன பொறுப்பற்ற தன்மை இது?
இதே போல நாவலிலும் தொடர்கதையிலும் உண்டு.
    பெரும்பாலான தொடர்கதைகள் காதல் எனும் பெயரில் வரும் சதைக் கதைகள்தான் ஒரு பெண்ணை ஒருவன் பலபாடு பட்டுக் காதலித்து>வெற்றி கொள்வதில் பல கதைகள் முடிந்து போகும். உண்மையில் வாழ்க்கை அதன் பிறகுதான் தொடங்கும் என்பதையே இவரகள் மறைத்து விடுவது ஒரு பக்கம் எனில் மறு பக்கம் குழப்படி வேலைகள்.
   இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு வரலாற்றுக் கொடுமையை திசைதிருப்பி நாவல் எழுதி பரிசும் பெற்ற கூத்துகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு. இப்போதும் உண்டு. கவிஞர் வைரமுத்து சொல்வது போல ‘காலத்தின் விமர்சனம் இவர்களின் பிணங்களைக் கூட தோண்டி எடுத்து வந்து தூக்கில் போடும’;  என்பது மட்டும் நிச்சயம். வேறென்ன சொல்ல!
   அற்புதமான கலைத்தன்மையோடும் சமூகப் பொறுப்போடும் ஆரம்பத்தில் அறியப்பட்ட கவிஞர் வைரமுத்துகூட விடலைக் குரல் பாட்டுக்காக ‘சமூகப் பிரச்சனைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே டேக் இட் ஈஸி’ என்பது நியாயம்தானா? அதுவும் அவரது ‘சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை ப+மி போராடும் வரை மனிதன்’ எனும் உன்னதக் கவிதை ஒரு சிலருக்கே தெரிந்திருக்க இந்த ‘ஈஸிபாலிஸி’ பாடல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் தெரிந்த குஞ்சு குளுவானுக்கும் போய்ச் சேரக்கூடிய ‘மீடியா’ வில் போய்ச்சேர்ந்து விட்டதே! ‘அது திருப்திக்கு இது தொழிலுக்கு’  என்று அவர் கூறினாலும் எத்தனை ‘ஈஸி கோயிங்’ இளசுகள் அவரே சொன்ன போராடும் வரை மனிதன் என்பதைப் புறந்தள்ளி விட்டார்கள் என்பது அவருக்கும் நமக்கும் கவலை கருவது அல்லவா?
  ‘தரைமேல் பிறக்க வைத்தான் -எங்களை
  தண்ணீரில் பிழைக்க வைத்தான்
  கரைமேல் இருக்க வைத்தான் -பெண்களை
  கண்ணீரில் குளிக்க வைத்தான்’ -- என்று மீனவர்களின் மிகுந்த பிரச்சனைகளை ‘கருக்’ கென்று தைக்ககும்படி வளமான தமிழில் சொல்லத் தெரிந்த வாலி ‘எப்படி… எப்படி…’ என்று எப்படி எழுதலாம்?’ அந்த ‘அவதார புருஷ’னின் எழுத்தில் இப்படி அவமரியாதை வரலாமா?
‘கேட்கிறார்கள் கொடுக்கிறேன் என்பதற்கு இது என்ன அவர்கள் வீட்டுப் பழைய குழம்பா? எழுத்து! எரிமலைக் குழம்பல்லவா?
    வள்ளுவர் சொன்னபடி ‘கசடறக் கற்று’முடித்து வேலை வாய்ப்பக வாசலில் ‘அதற்குத் தக நிற்கும்’ இளையவர்களாகட்டும் வீடு உண்டு குழந்தைகள் உண்டு என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டும் நடுத்தர வர்க்கத்தினராகட்டும் கைகளில் ஏந்திக் கிடப்பது வார-மாத நாவல் இலக்கியங்களைத்தான்.
   லட்சக்கணக்கில் உற்பத்தியாகி ஒரு வாரம் கடைக் கம்பிகளில் தொங்கி அடுத்த வாரமே பழைய புத்தகக் கடைக்கு அடிமாட்டு விலைக்கு வந்தாலும் கூட அந்தக் குறுகிய காலத்தில் அவற்றால் ஏற்படும் காலக் கொலையும் கனவுத்திருட்டுகளும் மிக  அதிகம் 
பினாமி  எழுத்தாளர்களை கூலிக்கு வைத்து கொண்டு குப்பைகளையே கிளறிக்கிளறி எழுதி அட்டை மாற்றி ஊர் மாற்றி பேர் மாற்றி ஒரே கதையை ஒன்பது முறை இவர்கள் விற்பதும் எழுத்தாமோ?  ‘நாவல்’ எனும் பெயரில் நாலைந்து ரூபாயில் இவர்கள் தருவது நாசத்தை அல்லவா? இவர்களின் கதைக்கருவே திருட்டு கொலை எனில் இவர்கள் செய்வதும் அதுதானே? கதைத் திருட்டும் கலாச்சாரக் கொலையும்!
    ‘நில் கவனி  கொல்’ ‘டெட்மார்னிங்’ “மை டியர் மர்டரர்’ என்பன போன்ற ‘ரெண்டுங்கெட்டான்’ தமிழில் எழுதும் இவர்களுக்கும் எழுத்தாளர் எனும் மதிப்பும் மரியாதையும் கிடைப்பது தமிழர்கள் விஞ்ஞானத் தவமிருந்து பெற்ற  சாபமின்றி வேறென்ன?
    ‘டிட் பிட்ஸ்’ எனும் நொறுக்குத்தீனி இலக்கிய வகை சத்தமில்லாமல் தமிழிலும் பிரபலமடைந்து வருகிறது. இதில் அரிய தகவலாகவோ உலக அறிவுச் செய்திகளாகவோ வருவன உண்மையில் பயன்மிகுந்தவைதாம். பெரும்பாலானவர்கள் வார இருவார இதழ்களில் முதலில் இவற்றைப் படிப்பதும் இவற்றின் சுவைப்பயன் கருதித்தான்.
   ஆனால் பெரும்பாலான துணுக்குகள் சினிமா அல்லது அரசியல் பிரமுகர்களின் தனிவாழ்க்கையில் மூக்கை நுழைத்து எடுத்துச் சிந்தும் செய்திகளாகவே இருப்பது என்ன சிந்தனையோ? ‘அந்த நடிகையின் காலை டிபன் ஒரேஓரு இட்லிதானாம்’ ஏன்? சட்னிகூட கிடைக்க வில்லையாமா? ‘இந்த’ அமைச்சரின் சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்குமான தகராறில் இவர் இந்த நடிகையை முன்றாவது வீடாக்கிவிட்டாராம்’ என்பன போலும் துணுக்குகள் ரொம்ப அவசியம் பாருங்கள்?
   இதில்‘கிசுகிசு ;இன்னும் கேவலமானது உண்மையில் சம்பந்தப்பட்டவர்களையும் படிப்பவரையும் ‘கிச்சு கிச்சு’ மூட்டும் வேலையின்றி அடுத்த வீட்டுக்காரர்களையும் பற்றிக்கூட நல்ல விஷயங்களை விட்டுவிட்டு வேறு மாதிரி விஷயங்களையே பேசிப்பேசி அதில் ஒரு ருசி காணும் ‘வக்ர’ உணர்வுக்குத் தீனி போடும் மகத்தான இலக்கியப் பணி இது! கிசுகிசுக்களில் பெரும்பாலும் உண்மை இருக்காது என்பது எழுதுபவர்க்கும் படிப்பவர்க்கும் கூடப் பெரும்பாலும் தெரிந்ததுதான். என்றாலும் அதை ஒருவர் எழுத பலரும் படித்து அடுத்தவரிடம் எடுத்துச் சொல்ல… என்ன ஒருரசனை வளர்ச்சி! அடடா!
   சிரிக்கக் கூடியவர்கள் ஆரோக்கியமானவர்கள். உடலும் அறிவும் ஆரோக்கியமாயிருப்பதன் அடையாளமே நல்ல நகைச்சுவைக்கு உடனடியாகச் சிரித்துவிடுவதுதான். அப்புறமாகச் சிரிப்பது ஆபத்தானது! சிரிக்காமலே இருப்பது சிக்கலானது. உயர்ந்த ரசனையோடு சிரிக்கும்படியாக எழுதவும் பேசவும் கூடியவர்கள் பாக்கியவான்கள் எனக்குத் தெரிந்து உ.ராஜாஜி போல உடல்நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளான நிலையிலும் தொடர்ந்து சமூகப் பொறுப்பு மிகுந்த நகைச்சுவைத் துணுக்குகளை எழுதக் கூடியவர்களும் இருக்கிறார்கள் 
    ஆனால் பெரும்பாலான ஜோக் எழுத்தாளர்களின் ஊற்றுக்கண்ணே வீட்டில் அடிமைப்பட்டிருக்கும் ஆண் ஆபீஸில் தூங்கும் ஊழியர்கள் ஜொள்ளு விட மட்டுமே தெரிந்த இளைய சமூகம்- இவைதான். இதில் உண்மை நகைச்சுவை என்னவெனில் நடைமுறையில் இது பெரும்பாலும் தலைகீழாக இருப்பதுதான்.
இதில் யு கிளாஸ் சிரிப்பு அக்கரைப் பச்சை சிரிப்பு நீலம் பச்சை ஜோக்குகள் ‘படிக்கக் கூடாத ஜோக்குகள்’ வேறு ‘அதான் படிக்கக் கூடாதுல்ல அப்புறம் ஏன் போடுற?’ன்னு யாரும் கேட்கிறதில்லை இதுவும் ஒர் அடையாளமாம்!

‘எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்’

என்றாயே பாரதீ! 
நீ வளர்த்த நெருப்புத் தமிழில் எச்சில் உமிழும் எழுத்தாளர்களை 
நீ என்ன சொல்வாயோ? தெரியாது. எழுதினவன் இன்று ஏட்டைக் கெடுத்தான் நாளை நாட்டைக் கெடுத்தான் என்பதைப் புரிந்து கொண்டால் மனச்சாட்சி உள்ளவர்கள் மனம்மாறக் கூடும். இல்லையேல் மக்கள் மாற்றுவார்கள். மக்கள் என்றுமே அசிங்க விரும்பிகள் அல்லரே? பொறுப்பான பத்திரிக்கையாளர்களும் இதைப் புரிந்துதான் எதை வெளிப்படுவது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள் எழுதுவது எல்லாமே எழுத்தல்ல. எழுப்புவதே சிறந்த எழுத்து. இதை உணர்ந்தவனே சிறந்த எழுத்தாளன்.
(jpdkzpapy; ntspte;j vdJ Kjy; fl;Liu-12-10-1995)


30 கருத்துகள்:

 1. எழுப்பவேண்டும் அண்ணா...
  அருமையான பொறுப்பான வலிகாட்டுதல்...
  நன்றி...

  பதிலளிநீக்கு
 2. கரைமேல் பிறக்கவைத்தான் ... நீங்கள் பயன்படுத்திய இடம் என் கண்ணீரை வரவழைத்து விட்டது...
  எழுப்பியிருக்கிறது...என்னை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பாடலை உணர்ந்து பாடும் சூழல் இருந்தால் நான் அழுதே பாடுவேன். கேட்பவர்களும் (இவ்வளவு கேவலமாப் பாடுறானேன்னு) அழுவார்கள்.

   நீக்கு
 3. பேனா, தச்சுத் தொழிலாளி விளக்கம், கிசுகிசு எனக் கட்டுரை மிகவும் அருமை...

  பணம் அற்புதமான மனிதரைக் கூட மாற்ற வல்லது...! ஆனால் வாலி அவர்கள் பல மேடைகளில் இதைச் சொல்லி உள்ளார்... அதுவரையில் சந்தோசம்...!

  1995...!!! அளவாகக் கொந்தளித்த அனைத்தும் இதுவரை எதுவும் மாறவில்லை... அதிகம் தான் ஆயிருக்கிறது என்பதும் உண்மை...!

  நேரத்தை இதற்கென ஒதுக்கி, தங்களின் பழைய பகிர்வுகளையும் வாசிக்க வேண்டும் என்றிருக்கிறேன்...

  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா.. என் பழைய பதிவுகளில் அதிகம் பேர் கவனிக்காதவற்றை இப்போது எடுத்து மறுபதிவு செய்கிறேன்.(தமிழ்மணம், தமிழ்வெளியில் இணைப்பதை தம்பி கஸ்தூரியும் நீங்களும் சொல்லித் தந்த பிறகுதானே இணைக்கக் கற்றுக்கொண்டேன் இண்ட்லி தேன்கூடு மற்றும் வேறு திரட்டிகளில் இணைக்கத்தான் நீங்கள் சொல்லித்தரலயே?) அதுகளப் போயி நீங்க படிச்சுட்டா எனது மறுபதிவுக்கு ஆப்புத்தானா?! சரிசரி சும்மா சொன்னேன் நலலா படிங்க சாமி!

   நீக்கு
 4. ஆதங்கமும் கோவமும் நன்றாக தெறிகிறது குறைந்த பட்சம் இதை படிப்பவர்களில் பாதிபேராவது திருந்தினால் நல்லதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் எதிர்பார்ப்பு 5விழுக்காட்டினராவது இந்தக் கோணத்திலும் பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். திருந்துவது என்னும் பெரிய வார்த்தை சரியல்ல. த ங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

   நீக்கு
 5. வணக்கம்
  ஐயா.
  தங்களின் கட்டுரை தினமணியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  நல்ல மொழி நடையில் நல்ல கருத்துகளையும் பல எடுத்துக்காட்டுக்ளையும் கொண்டுள்ளது..

  எழுதினவன் இன்று ஏட்டைக் கெடுத்தான் நாளை நாட்டைக் கெடுத்தான் .... இதை விட வேறு என்னதான் சொல்ல முடியும்.... தங்களின் கட்டுரை என்னையும் ஒரு கனம் சிந்திக்க வைத்தது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினமணியில் சுமார் 30கட்டுரைகள் வந்திருக்கும். அவற்றை எல்லாம் தொகுத்துத் தனி நூலாக்கும் முயற்சியில் இருக்கிறேன். மே மாதப் பணி ஓய்வுக்குப் பின் வேறு வேலை?

   நீக்கு
 6. நல்லதொரு பகிர்வு ஐயா!! ஒரு படைப்பாளி எப்படி இருக்க வேண்டும்,படைப்பாளியின் படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை சுருக் என்று சொல்லி உள்ளீர்க்ள்! அதாவது உறைக்கும் படி!

  //நோயைத் தீர்க்காத மருந்து என்பதை விடவும் நோயை வளர்த்து விடும் மருந்தைக் கொடுத்து விடுவதுபோல ஏற்கெனவே இருக்கும் சமூகச் சிக்கலை மேலும் சிக்கலாக்கும் கதாசிரியர்கள் போலி மருத்துவர்களின் ரகத்தை விடவும் ஆபத்தானவர்கள்//

  பகிர்வுக்கு நன்றி! .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருத்துவர் தவறுசெய்தால் ஒருமனிதனை ஆறடியில் புதைத்து விடுவார்கள், வழக்குரைஞர் தவறுசெய்தால் ஆறடியில் தொங்க விடுவார்கள் என்பார்கள். ஆசிரியரும் எழுத்தாளரும் தவறு செய்தால் ஒரு தலைமுறையையே தாழ்த்திவிடுவார்கள் நன்றி

   நீக்கு
 7. துணுக்குகள் பயனுள்ளவையாக இருப்பது ஒரு சில புத்தகங்களில் தான். பெரும்பாலான துணுக்குகள் இப்படி அடுத்தவர் அறைகளை எட்டிபார்ப்பதாவே இருக்கின்றன. நேரில் கூட புறம்பேசுபவர்களை கண்டால் பற்றிகொண்டுவரும் எனக்கு. அண்ணா ஒரு விஷயம் தெரியுமா நள்ளிரவுவரை இப்படியான மர்ம கதைகள் படிப்பதென்றால் (நில், கவனி, கொல்) எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் ராஜேந்திரகுமார். ரத்தம் உறைந்துவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பள்ளிக்காலத்தில் அதில்தான் தொடங்கினேன் சங்கர்லால் கணேஷ்வசந்த் என்று தொடங்கி சாண்டில்யன், கல்கி, என்று பள்ளியை “போதாமை”யோடு முடித்து, கல்லூரிக்காலத்தில் புபி,ஜேகே என்று “போதாமை”யோடு தொடர்ந்து போனேன்... அது பழந்தமிழிலிருந்து நவீன இலக்கியம் வரை படிக்கத் தூண்டி இப்ப இப்பிடி ஆயிட்டேன்...

   நீக்கு
 8. உங்கள் உள்ளக் கொந்தளிப்பு நியாயமானதே! நாகரீக முறையில்
  எழுதப்பட்டுள்ள நடைக் கண்டு பெருமிதம் அடைகிறேன்! நன்றி முத்து!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா வணக்கம். தங்கள் வருகையும் வாழ்த்தும் எனக்கு விருது பெற்ற மகிழ்ச்சியைத் தருகின்றன அய்யா. மிக்க நன்றி. 1980களின் நடுவில் நாடுமுழுவதும் சுழன்று எங்களிடத்தில் நீங்கள் பற்றவைத்த கொந்தளிப்புத்தான் அய்யா..

   நீக்கு
 9. "ஆரோக்கியமானவர்கள். உடலும் அறிவும் ஆரோக்கியமாயிருப்பதன் அடையாளமே நல்ல நகைச்சுவைக்கு உடனடியாகச் சிரித்துவிடுவதுதான்"

  உண்மைதான் ஐயா... எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பதிவு ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடனடியாகச் சிரிப்பவர்கள் பற்றிய உண்மை அது! சிரிக்க வைப்பவர்கள் ஆழ்ந்த சோகத்தின் அனுபவத்தில்தான் அதைச் செய்ய முடியும். சிரிக்கச் சிரிக்கப் பேசுவோர், நடிப்போரின் அனுபவமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். பலலாயிரக் கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தை 3மணிநேரம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மதுரை நன்மாறனிடமும் என்னிடமும் இயக்குநர் பாரதி ராஜா மேடையிலேயே சொன்னது இது (1995-திண்டுக்கல்)

   நீக்கு
 10. பயனுள்ள திறனாய்வு
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா (தங்களின் திரட்டியில் இணைய எனக்குரிய வழியை எனது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன் அய்யா, muthunilavanpdk@gmail.com)

   நீக்கு
 11. எழுத்துக்கள் எவ்வாறு அமையவேண்டும், எழுதுபவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான ஒரு இலக்கணமாக பல செய்திகளைக் கொண்டு அமைந்துள்ள கட்டுரை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. தங்களின் எழுத்துகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். தொடருங்கள் அய்யா. நன்றி வணக்கம்.

   நீக்கு
 12. எழுதுவது மட்டும் அல்ல.பேசுவதும் அந்த சட்டத்திற்கு உட்பட்டதுதான்.உங்கள் பட்டிமன்ற பேச்சை நான் விமர்சனம் செய்தது அதன் அடிப்படையில்தான்.இப்போதாவது என் விமர்சனம் சரி என்று உங்கள் ஆதரவாளர்கள்(திண்டுகல் தனபால் போன்ற) ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொன்ன விமர்சனங்களின்படி எனது பேச்சில் நீங்கள் கண்ட குறையைச் சொன்னால் திருத்திக்கொள்கிறேன். இதில் ஆதரவாளர்களைச் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். எனது நண்பர்களும் சரி, நானும் சரி. நல்ல கருத்துகளை எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வோம், தவறானவற்றை எங்கிருந்தும் தடுத்துச் சொல்வோம். நீங்கள் தாராளமாகச் சொல்லலாம் நண்பர் அருள்மொழி அவர்களே

   நீக்கு
 13. ஒரு படைப்பாளி என்பவன் சமூகத்திற்கு பயன்படும் வண்ணம் தமது பொறுப்புணர்ந்து செயல்பட்டு ஆக்கங்களைத் தந்தால் தனது எண்ணங்கள் மட்டுமல்ல தான் சார்ந்த சமூகமும் மேம்படும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக அமைந்த அழகான கட்டுரை ஐயா. தாங்கள் கூறிய அனைத்திற்கும் உடன்படுகிறேன், பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதிப் பல்லாண்டுகளாகியும் இன்னமும் இதன் தேவை இருப்பதே வருத்தத்திற்குரியதுதான். என்றாலும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது... நன்றி பாண்டியன்

   நீக்கு
 14. ஐயா தங்களின் ஆதங்கமும் கோபமும் கட்டுரை முழுவதும் தெரிகிறது.

  ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் மிகச் சிறப்பான கட்டுரை.

  பதிலளிநீக்கு
 15. //எழுதுவது எல்லாமே எழுத்தல்ல. எழுப்புவதே சிறந்த எழுத்து. இதை உணர்ந்தவனே சிறந்த எழுத்தாளன்.//
  அருமையாகச் சொன்னீர்கள் ஐயா
  பகிர்வுக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு (இதே) வரிகளை நான் தெரிவுசெய்து கொண்டு கீழே வந்தால் சகோ.ஜெயக்குமார் அவர்கள் அதே வரிகளைக் குறிப்பிட்டிருக்கிறார்..அதனால் என் கருத்தும் இங்கேயே..எழுப்பும் எழுத்தாளர் பலர் எழும்ப வேண்டும்..பணத்திற்காக எதை வேண்டுமானாலும் எழுதலாமா? உண்மையைச் சொல்லனும்னா, சூப்பர் சிங்கரில் நண்டும் சிண்டும் 'சில' பாடல்களைப் பாடுவது இருக்கிறதே...அவர்களையாவது விட்டுவைக்கலாமே..பிரபலமான தொலைக்காட்சியில் ...பணம் படுத்தும் பாடு இப்படியா இருக்க வேண்டும்?? அவர்கள்தான் அப்படி என்றால் பெற்றோர் என்ன நினைத்துப் பாடவைக்கிறார்கள்?!!
   பாரதியார் பாடல் சுற்று, பாரதிதாசன் பாடல் சுற்று என்றெல்லாம் வைக்கலாமே...தொலைக்காட்சியே கதி என்று இருக்கும் சிலர் காதில் ஏறுமே..
   முடிந்த இடங்களில் சொல்லுங்கள் ஐயா! நல்லதொரு கட்டுரைக்கு நன்றி!

   நீக்கு
 16. பழசு பழசுதான் ,ருசி மாறாமல் இன்னும் இருக்கிறதே !

  பதிலளிநீக்கு