எங்கள் கிராமத்து ஞான பீடம்!



பள்ளிக்குழந்தைகளின் பரிதவிப்பு!

‘நேர்நில்’ சொல்லியும்
நிமிர்ந்து பறக்க
சக்தியற்று –
தர்மசக்கரத்தை மறைத்து
தேசியக்கொடி
தரைபார்க்க,
மாணவர் ஊர்வலம்
மரத்தடிக்குச் செல்லும்.



எண்பத்தேழு
பெயர் சொல்லி
வருகை பதிவதற்குள்
இவர் ஓர் ஆசிரியர்... பாவம்!
அவசரப்பட்டு
மணி அடித்துவிடும்.
-அடுத்தவகுப்பு தொடங்கும்

பெரியாரைப் பற்றிய
உரைநடைக்கு முன்
கடவுள் வாழ்த்தோடு
செய்யுள் தொடங்கும்.

உலகப்படத்தில்
பாற்கடலைத் தேடும்
இலக்கியம்.

ஆண்டவனைக்
காப்பாற்றும்
அறிவியல்

ஆள்பரைக்
காப்பாற்றும்
வரலாறு.

கடன் வாங்க
சொல்லித் தரும்
கணக்கு

வறுமைக் கோடுகளைக்
கண்டு கொள்ளாமல்,
வடஅட்சக் கோடுகளில்
வளையும் புவியியல்.

அச்செழுத்துக்களை
மேய்ந்து மேய்ந்து,
அஜீரணத்தில் மாணவர்கள்

உபகரணம் இல்லாமலே
‘மைமிங்’கில் நடக்கும்
செய்முறை வகுப்பு.

அவசரத்தில் -
தின்றதை வாந்தி எடுக்கும்
தேர்வுகள்.

வீட்டுக் கவலையோடு
வகுப்பில் சிரிக்கும்
ஆசிரியர்கள்

பத்தாண்டு முன்னே
படித்த மாணவன்
எம்.எல்.ஏ. ஆனார்
‘கோரிக்கை ஏதுமுண்டா
கூறுங்கள்’ என்றார்.
ஆசிரியர்-
‘பர்மனெண்ட் பண்ணப்
அழுது புலம்பும் நர்சரிப் பூ!
பரிந்துரைக்க’ வேண்டினர்

முப்பதாண்டுகளாய்
‘ஒண்ணாம்ப்பு’ நடத்தும்
முத்துசாமி வாத்தியார்,
‘மூணாம்ப்பு’ போக
‘பதவி உயர்வு’ கேட்டதும்
முகம் வெளிறிப் போனார்
முன்னாள் மாணவர்!

திறந்த உலகம்தான்
சிறந்த படிப்பாம்!
எங்கள் பள்ளிக்கு
கதவே கிடையாது –
கட்டடம் இருந்தால் தானே

“எங்கள் பள்ளி
நல்ல பள்ளி!
கட்டடம் இரண்டு,
பூங்கா ஒன்று!”
- நடத்துவார் ஆசிரியர்,
“எங்கே சார் இருக்குது”
- எறும்பு கடித்த
மரத்தடி மாணவன்
எழுந்து கேட்பான்.
“புத்தகத்தைப் பார்ரா”
- போடுவார் ஆசிரியர்

போதி மரத்தடியில்
புத்தருக்கு ஞானம்!
புளிய மரத்தடியில்
மாணவர்க்குப் பாடம்!

இதுவே –
எங்கள் கிராமத்து
ஞான பீடம்!
--------------------------------------
(1986 - “ஜாக்டீ” ஆசிரியர்-அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தின் போது சிறையில் நடந்த கவியரங்கத் தலைமைக் கவிதையாக எழுதி, பின்னர் கடைசிப்பக்கத்தில் 
- முழுப்பக்கக் கவிதையாக --  வெளியிட்ட “கல்கி” வார இதழுக்கு நன்றி.
இதன் பின் வெளிவந்த எனது “புதிய மரபுகள்” தொகுப்பில் இடம்பெற்றது.

கடந்த 25வருடங்களில், இப்போது, SSA. RMSA சமச்சீர்க்கல்வி எல்லாம் வந்தபிறகு, பள்ளிகளின் உள்கட்டமைப்பும், பாடத்திட்டங்களும் மாறியிருக்கின்றன...  
என்றாலும், நாம் நினைக்கும் கனவுப்பள்ளிக்கு 
இன்னும் வெகுதூரம் போகவேண்டும்! 
சரி..வாங்க நடப்போம்...)

7 கருத்துகள்:

  1. காலங்கள் ஆனாலும் கோலங்கள் மாறாத நிலைதான். மாற்றம் வரும்வரை தொடரட்டும் நம் கருத்துக் கவிதைக் கணைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுவமா? என்னத்தையாவது செஞ்சிக்கிட்டே இருப்பம்ல? நன்றி அய்யா.

      நீக்கு
  2. பெரியாரைப் பற்றிய
    உரைநடைக்கு முன்
    கடவுள் வாழ்த்தோடு
    செய்யுள் தொடங்கும்.
    ஹா.. ஹா....மாறத்தான் வேண்டும் யாவும்.
    நீங்க முன்னபோங்க அண்ணா
    நாங்க follow பண்றோம் !!

    பதிலளிநீக்கு
  3. என்றாவது ஒருநாள் நடந்தே தீரும் எனும் நம்பிக்கையோடு பயணத்தை தொடருவோம்... அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. “உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனை செய்வோம் - வீணில்
    உண்டுகளித்திருப்போரை வந்தனை செய்வோம்” அண்ணா,ரமணி சார் பதிவில் நீங்கள் இட்ட கருத்து.அட்டகாசமான ரீமேக் !?

    பதிலளிநீக்கு