கற்றுத்தருவதில் வீடுபாதி,சமூகம் மீதி -தினமணிச் செய்தி

இளையோர் விழாவில் நா.முத்துநிலவன் பேச்சு!
மேடையில் விழாத்தலைவர் ராஜ்குமார், நேருயுவக்கேந்திரா சதாசிவம், 
பாவலர் பொன்.கருப்பையா உள்ளிட்டோர் உள்ளனர். 
கவிஞர்நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றுகிறார்.
புதுக்கோட்டை-பிப்23.
   தாய்தந்தை ஆசிரியர் ஆகியோர் கற்றுத்தருவது பாதியென்றால், மீதியைக் கற்றுத்தருவது இந்தச்சமூகம்தான் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கவிஞர் நா.முத்துநிலவன்.
      புதுக்கோட்டையில் நடந்த இந்திய அரசின் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் நேரு யுவக்கேந்திராவின் மாவட்ட இளையோர் ஆண்டுவிழாக் கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய அவர் மேலும் பேசியதாவது
    இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் பள்ளியில-கல்லூரியில் மதிப்பெண் பெறுவதுதான் அறிவு என்று நினைக்கக் கூடாது. அம்மா அப்பா ஆசிரியர் ஆகியோர் கற்றுத்தருவது பாதிதான். மீதியை இநதச் சமூகம்தான் கற்றுத்தருகிறது. சமூகத்தின் ஊடகங்கள், கூடப்பழகும் நண்பர்கள், சமூகஅனுபவம் ஆகியவை கற்றுத்தருவதுதான் வாழ்நாள் முழுவதும் வரும். தினசரி செய்தித்தாள் படிக்காமல், பொதுஅறிவு நூல்கள் படித்தால் எந்தத் தேர்விலும் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வெற்றிபெற முடியாது! மாறாக செய்தித்தாள்களையும், தொலைக்காட்சி-திரைப்பட-இணைய நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து “கற்று“க் கொண்டவர்கள்தான் வாழ்வில் வெற்றியடைந்திருக்கிறார்கள். நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புதல் போலும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அறிவை எந்தப் பள்ளியும் கற்றுத்தருவதில்லை. எல்லாவற்றையும் கல்லூரிகளும்கூடக் கற்றுத்தந்துவிட முடியாது.
   இன்றைய இளைஞர்கள் சிலர், “கருப்பாகப் பிறந்துவிட்டோமே!“ என்றும், இளம்பெண்கள் பலர் “நான் அழகாக இல்லையே“ என்றும் தாழ்வுமனப்பான்மையுடன் தன்னைக் குறுக்கிக் கொள்கிறார்கள். உண்மை என்னவென்றால், கருப்புதான் இந்த இந்திய-தமிழ் மண்ணின் நிறம். ஐஸ்வர்யா ராயின் அழகு வாழ்நாள் முழுவதும் வராது. ஆனால், ஒரு பெண் இறந்ததற்காக இந்த உலகே கண்ணீர்விட்டு அழும்படி வாழ்ந்து விட்டுப் போனாரே அவர்தான் – அன்னை தெரஸாதான்- உலகின் நிரந்தரமான பேரழகி.
    இன்றைய இளைஞர்களின் வேகமும், அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைக் கையாளும் திறனும் வியக்கத்தக்க அளவிற்கு வளர்ந்துள்ளது! ஆனால், தேசவிடுதலை போராட்டம் நடந்தபோது இருந்த சாதி-மத ஒற்றுமை இப்போது குறைந்துகொண்டே வருவதை அச்சத்துடன் கவனிக்க வேண்டும். “சாதி-மதங்களைப் பாரோம்“ என்று நம் பாரதி தேசவிடுதலைப் போருக்காக எழுதவில்லை. அது, என்றும் நம்மை வழிநடத்தக் கூடிய உயர்ந்த சிந்தனை! சாதியற்ற மதச்சண்டையற்ற இந்தியாவை உருவாக்கத்தான் உயர்தலைவர்கள் எல்லாரும் உழைத்தார்கள். குறுகிய எல்லைகளுக்குள் இளைஞரின் சக்தி வீணாகிவிடக் கூடாது. எந்தப் படிப்புப் படித்தாலும், அதில் மிகுந்த கவனத்துடன் படித்து, சொந்தத் திறமைகளை வளர்த்துக்கொண்டால் வேலைவாய்ப்பும் எளிதாகும். வேலைக்குப் பிறகும் சமூக உணர்வோடு வாழ்பவர்களைத்தான் இந்தச் சமூகம் மதிக்கிறது என்னும் உண்மையை புரிந்துகொண்டு மொழியால் தமிழனாக நாட்டால் இந்தியனாக உணர்வால் உலக மனிதனாக வாழ இளைஞர்கள் முன்வரவேண்டும்
      இவ்வாறு, கவிஞர் நா.முத்துநிலவன் பேசினார்.
 விழாவிற்கு, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் இரா.ராஜ்குமார் தலைமையேற்றார். புதுக் கோட்டைசட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.கார்த்திக் தொண்டமான், கைவினைப் பொருள் கண்காட்சியைத் திறந்து வைத்து, மாவட்டச் சிறந்த இளைஞர்மன்றங்களுக்கு விருது களையும் விளையாட்டு உபகர ணங்களையும் வழங்கினார்.
தொடர்ந்து நடந்த  விழாவில் அன்னவாசல் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் வி.இராமசாமி, தொழிலதிபர் எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார், பி.குமார், பழனிச்சாமி, ஆரோக்கிய சாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கருத்தரங்கில், மரகதவள்ளி அறக்கட்டளை நிர்வாகி பாவலர் பொன்.கருப்பையா, அறிவியல் இயக்க மாநிலப் பொருளாளர் லெ.பிரபாகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
      முன்னதாக, மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் க.சதாசிவன் வரவேற்க கணக்காளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். மாவட்டம் முழுவதுமிருந்து இருபத்தைந்து இளைஞர் மன்றகளைச் சேர்ந்த சுமார் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்-இளம்பெண்கள் வந்து கலந்துகொண்டனர்.
------------------------------------------------------------------- 
செய்தி வெளியீட்டுக்கு நன்றி தினமணி-நாளிதழ்-23-02-2014 (திருச்சிப்பதிப்ப), புதுக்கோட்டைச்செய்திகள்- பக்கம்-2 செய்தியாளர்திரு மோகன்ராம்.

25 கருத்துகள்:

 1. //ஒரு பெண் இறந்ததற்காக இந்த உலகே கண்ணீர்விட்டு அழும்படி வாழ்ந்து விட்டுப் போனாரே அவர்தான் – அன்னை தெரஸாதான்- உலகின் நிரந்தரமான பேரழகி.///
  உடலின் அழகு நிரந்தரமல்ல
  உள்ளத்து அழகே நிரந்தரம்
  அருமையாகச் சொன்னீர்கள் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. 19-02-2014 தஞ்சைப் புத்தகக் காட்சி நிகழ்ச்சியில் நம் சந்திப்பு மறக்க முடியாததாக உள்ளது. வீட்டில் தந்தையார் உள்ளிட்ட அனைவர்க்கும் என் வணக்கத்தைத் தெரிவியுங்கள்.

   நீக்கு
 2. நல்ல நிகழ்வு,
  அருமையான உரை...
  தொடரட்டும் உங்கள் பயணம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்டித்தான் போயிட்டே இருக்கோம்... பல செய்திகள் செய்தித்தாளில் வருவதிலலை... வந்தவரை மகிழ்ச்சி. கடந்தவாரம் மட்டுமே் 6கல்லூரி மற்றும் பொது நிகழ்ச்சிகள்! இதில் தினமணியிலும், தமிழ் இந்துவிலுமாக இரண்டு நிகழ்ச்சிகளே இன்று வெளிவந்துள்ளன.. உடலில் சக்தியுள்ள வரை ஓடுவோம்...

   நீக்கு

 3. கற்றுத்தருவதில்
  வீடுபாதி, சமூகம் மீதி
  ஆமாம்,
  நல்ல மனிதரை ஆக்குவதில்
  வீடும் சமூகமும்
  முக்கிய பங்கெடுக்கிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளி-கல்லூரியில் படிப்பதுதான் கல்வியென்று பலரும் தவறாக நினைப்பதும், அதன்பிறகு படிப்பதையே நிறுத்திவிடுவதும்தான் எனது இந்தக் கருத்திற்கான அடித்தளம். நன்றி அய்யா.

   நீக்கு
 4. மிக அருமை ஐயா! நச்சுனு பேசியிருக்கீங்க..கண்டிப்பாகச் சில இளைஞர்கள் மனதிலாவது தாக்கம் ஏற்பத்தியிருக்கும் என்று நம்புகிறேன். பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிகமில்லைம்மா... அந்த சுமார் 200பேரில் இரண்டுபேராவது எடுத்துக்கொண்டால்... அதுவே என் எதிர்பார்ப்பு. கேட்டவரில் ஒரு பதின்வயதுச் சிறுமி ஓடிவந்து என் கையைப் பிடித்துக் குலுக்கி “சூப்பராப் பேசினீங்க சார்... ஒரே ஜோக்கா... எனக்குச் சிரிச்சிச்சிரிச்சு வயிறு வலிச்சுப்போச்சு“ன்னு சொல்ல... அவளது அம்மா அவசரமா குறுக்கிட்டு யே... “அவ்வளவும் சிந்தனைடீ அவர்ட்ட போயி ஜோக்குங்கிற“ என்று அதட்ட அதனால என்னம்மா ஜோக்கா ரசிச்சு சிந்தனைய ஏத்துக்கிட்டா ல்ல? என்று நான் சமாதானப் படுத்த... அதுவே பெரிய ஜோக் ஆகிவிட்டது.

   நீக்கு
 5. படித்து முடித்து டிகிரி எடுத்தால் எல்லாம் தெரியும் என்று நினைப்பார்கள் .எகிறுவார்கள். அது ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது.
  வாழ்க்கை பாடம் வேறு என்பது தெரிவதில்லை.போகப்போக புரியும்
  உண்மை தான் அழகாக சொல்லியுள்ளீர்கள் நன்றி ! வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிப்பே முடிந்துவிடடதாக அல்லவா நினைக்கிறார்கள்? அதுதான் மிகப்பலரும் உலகம் கற்றுத்தரும் பாடத்தில் தோல்வியடைந்து திண்டாடுகின்றார்கள்! கருத்துக்கு நன்றி சகோதரி.

   நீக்கு
 6. நிரந்தரமான பேரழகி அழகு அருமை ஐயா...

  தொகுத்து வழங்கியமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்குச் சொலலாததை உங்களிடம் ரகசியமாச் சொல்றேன்... உலகப்பேரழகன் நெல்சன் மண்டேலா! நன்றி அய்யா

   நீக்கு
 7. அருமையான நிகழ்வு
  அருமையான பகிர்வு
  நம் இளைஞர்களுக்கு போது எதிரி இல்லை என்பதை விட எதை எதிர்க்கவேண்டும் எனும் புரிதல் இல்லையோ ? என்றே தோன்றுகிறது அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சினிமாவில்தான் ஒரே ஒரு எதிரி ஒழிந்ததும் கதாநாயகனும் கதா நாயகியும் லல்லல்லா னு பாடிக்கிட்டே வர்ரது... நிஜவாழ்வில் எத்தனை எத்தனை வில்லன்கள்... இல்லயாப்பா?

   நீக்கு
 8. தாங்கள் கூறுவதுபோல் கற்றுத்தருவதில் வீடு பாதி சமூகம் பாதி என்பது உண்மையே. கற்றுக்கொள்ளும் விதம் ஒழுங்காக இருக்கும் நிலையில் வாழ்வில் சிறந்த தாக்கத்தைக் காணமுடியும். அதற்காக மனதை ஒருமித்து நடத்திச் சென்று வெற்றி பெறவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த இடத்திலும், சின்னக் குழந்தையிடம் கூடக் கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் என் கருத்து ஐயா! நன்றி. 19-02 தங்ளைச் சந்தித்தது, மிக்க மகிழ்வைத் தந்தது ஐயா!

   நீக்கு
 9. ///அம்மா, அப்பா, ஆசிரியர் - ஆகியோர் கற்றுத்தருவது பாதிதான். மீதியை இநதச் சமூகம்தான் கற்றுத்தருகிறது. சமூகத்தின் ஊடகங்கள், கூடப் பழகும் நண்பர்கள் ஆகியவர்களிடமிருந்து கற்றுக் கொள்பவை தான் வாழ்நாள் முழுவதும் கூட வரும்.///

  உண்மையின் விளக்கம். அனைவர் நெஞ்சிலும் பசுமரத்தாணி போலப் பதிய வேண்டும். நல்ல பதிவினுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளிப் படிப்பை விடவும் வலிமையானது அனுபவப் படிப்பு. இரண்டையும் கற்றவர்கள் வெற்றிபெறுகிறார்கள். சரிதானா அய்யா?

   நீக்கு
 10. நல்லதொரு பகிர்வு! உலகப் பேரழகி அன்னை தெரசா என்பது நிஜம்! அருமை!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 11. அழகென்பது அகம் என்று அழகாய் சொன்னீர்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எனது சொந்த சிந்தனை என்பதைவிட,
   “குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
   மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
   நல்லம்யாம் என்னும் நடுஒரீஇ அல்லாத
   கல்வி அழகே அழகு“ எனும் நம் ஔவைக்கிழவியின் கருத்தின் உரு மாற்றம்தான். பாட்டியிடமிருந்து பேரன் எடுத்துக் கொள்ளலாம்ல? எடுத்துக்கொண்டேன். நன்றி சகோதரீ.

   நீக்கு
 12. ஐயாவிற்கு வணக்கம்
  சமூகத்தின் மீதான தங்களின் பார்வையை இப்பதிவு அழகாக இயம்பியுள்ளது ஐயா. பாட புத்தகம் கற்றுத்தருவதை விட அனுபவமும் சமூகமும் கற்றுத்தருவது நிலைக்கும் என்பது அவ்வளவு உண்மை. இக்கால இளைஞர்களுக்கு தேவையான அற்புதமான பேச்சு என்னையும் ரசிக்க வைத்தது. இப்பதிவை முன்பே படித்து விட்டேன். இருப்பினும் இம்முறையும் தாமதமாக கருத்திடுகிறேன். பகிர்வுக்கு நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 13. அருமையான பேச்சு...
  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 14. மீடியாவில் இருக்கிறது ஏராளமாக நாம் கற்றுக்கொள்ளவேண்டும் தாராளமாகஎன்பதற்கும், அகத்தின்அழகையும் அழகாய்சொன்னீர்கள் ஐயா.

  பதிலளிநீக்கு