சூப்பர் சிங்கர் திவாகர்தான்!

சூப்பர் சிங்கர் இறுதிப்போட்டியில் பாடிய அற்புதப் பாடக இளைஞர்கள்
இடமிருந்து சையது, பார்வதி, நடுவில் திவாகர், சோனியா, சரத்
விஜய் தொலைக்காட்சியில் நான் மிகவும் ரசித்துப் பார்ப்பது  கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியை அடுத்து, சூப்பர் சிங்கர் தான். (நமக்குப் பாடவருதோ இல்லையோ நல்லாப் பாடுறவங்க நல்லாவே பாடும்போது ரசிப்போம்ல?)


முந்திய (சீசன் 3) போட்டியின் இறுதியில் சிறுமி யாழினியும் திருச்சிச் சிறுவன் அஜீத்தும் கலக்கியெடுத்ததைப் பார்த்தவர்கள் அதை, அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாதில்லையா?

தமிழ்நாட்டின் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ரசிக்கும் நிகழ்ச்சிகளைக்  கேட்டால், விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்சிங்கர்  அதில் நிச்சயம் இருக்கும். (என்ன..? சில நேரம் அந்த காம்பியரிங் என்னும் பெயரில் ஆகாஷூம் அந்த உயரமான பெண்ணும் அடிக்கும் லூட்டியைத் தாங்கிக்கொள்ள வேண்டும்.... அடாடா... மொக்கை ஜோடிப்பா...)

நடுவர்களாக வந்தவர்கள் மிகச்சிறந்த கருத்துகளைச் சொல்லி அனேகமாக நாம் நினைத்தவர்களையே தேர்வு செய்து வந்தார்கள்.
அவர்களுக்கும் நம் பாராட்டுகளைச் சொல்லவேண்டும்.

வெளியேறியவர்கள் அழுததையும், அவர்களின் தாய்க்குலம் அழுததையும் அளவுக்கு மீறிக் காட்டி நம் பொறுமையைச் சோதித்ததும் நடந்தது. அனந்து சாரின் பயிற்சியை எல்லாரும் நன்றியுடன் பாராட்டினார்கள். 

இன்று பிப்ரவரி ஒன்றாம் தேதி இறுதிப்போட்டி
இறுதிப் போட்டியில் ஐந்துபேர் அருமையாகப் பாடினார்கள்.

நம்ம வேல்முருகன் தானே எழுதி, பாடி வரவேற்றதும் நல்லாத்தான் இருந்துச்சு! இடம் தங்கக் கடற்கரைபோல் தெரிந்தது.

சின்னத்திரை மற்றும் இசைப் பிரபலங்களின் கூட்டம்.. 
எதிரில் இசைரசிகர்களின் பெருங்ங்ங்ங்ங்கூட்டம்...

முதலில் சோனியா வந்தார் நன்றாகத்தான் பாடினார். ஆனாலும் குரலில் அழுத்தம் போதவில்லை போலத் தோன்றியது...

அடுத்து, சையது பாய்ஸ் படத்துப் பாடலைப் பாடினார்.. அவரும் அப்படியே... 

அடுத்து வந்த திவாகர் பழைய (பலேபாண்டியா படத்தில்) நீயே உனக்கு என்றும் நிகரானவன்” எனும் இருவர் பாடும் பாட்டை எம்ஆர்.ராதா சிவாஜி இருவரின் சேட்டைகளோடு அப்படியே தன் குரலில் கொண்டுவந்து- பாடப்பாட அரங்கமே அதிர்ந்து போனது... 

இன்னும் இரண்டுபேர் மீதமிருக்கும்போதே                 இசைக்குயில் ஜானகியம்மா தன்னியல்பில் மேடையேறி திவாகரைக் கட்டித் தழுவி உச்சிமோந்து, நெற்றியில் முத்தமிட்டு, ஆயிரம் ரூபாயைத் தந்து வாழ்த்தியபோது அவரே கிட்டத்தட்ட உணர்ச்சிவசப் பட்டு அழும் நிலைமைக்கு வந்திருந்தும்,  அழுதுவிடாமல், பல முறை ஜானகியம்மா காலில் விழுந்து விழுந்து நன்றிதெரிவித்தார். 

பிறகு திவாகர் சொல்லும்போது, சூப்பர் சிங்கர் விருது ஒருபக்கம் இருக்கட்டும், ஜானகியம்மா பாராட்டித் தந்த பரிசும் அன்பு முத்தமும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன்” என்றார். அப்போதே வென்றுவிட்டார்!

அதன்பிறகு பாடவந்த பார்வதியும், சரத்தும்நன்றாகத்தான் பாடினார். ஆனாலும் புயலில் தப்பிய படகுபோல...

யாருக்குப் பரிசு என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும். ஆனால், இசை மேதைகள், மக்கள் ஆரவாரம், ஜானகியம்மாவின் தன்னெழுச்சியான மகிழ்ச்சி ஆகியவற்றைப் பார்க்கும்போது...

திவாகர்தான் இந்தமுறை 
சூப்பர் சிங்கர். 

அவரின் வெற்றிக்குச் சிலகாரணங்கள் உண்டு –
1.     தன்குரல் இயல்புக்கேற்ற பாடலைத் தேர்வு செய்தது.
2.     (நடுவராக ஜானகியம்மா வருவார் என்று தெரிந்தோ தெரியாமலோ) பழைய நல்ல பாடலைத் தேர்வுசெய்தது
3.     அதில், எதிரிலிருக்கும் ரசிகர்கள் ரசிக்கும் “எவர்கிரீன்” ஜதி,சுரங்களைச் சரியாகப் பாடி ரசிக்க வைத்தது.
4.     இருவர் பாடலை ஒருவரே பாடி வியக்க வைத்தது.

திவாகரைப் பாராட்டும் ஜானகியம்மா
படம் நன்றி - http://ramaniecuvellore.blogspot.in/ 
இதோ... நமது முடிவை அறிவித்தே விட்டார் ஜானகியம்மா...!
   'எங்கிருந்தாலும் இளைஞர் திறமை வாழ்க' என 
              நாமும் வாழ்த்துவோம்!
-------------------------------------------------- 
-- நன்றி --
வாசகர்களால் இன்று பார்வையிடப்பட்ட இடுகைகளில் தமிழ்மணத்தில் முதலிடமும்
 தமிழ்வெளியில் இரண்டாமிடமும் 
இந்த நம் பதிவுக்குக் கிடைத்துள்ளது.  
நன்றி நண்பர்களே!
(02-02-2014 - இரவு 11மணி)

-- நன்றி -- 
 http://tamilmanam.net/  
&
http://tamilveli.com/
---------------------------------------------------------------------------- 

23 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  தங்களின் கருத்துகணிப்பு போல மலேசியாவில் பல தமிழர்கள் மனங்களை திவாகர் வென்றுள்ளார்... நான் வேலைசெய்யும் தொழில் பேட்டையில் சுமார் 4000 பேர் வேலை செய்கிறார்கள் அவர்களின் வாக்கும் திவாகர்ருக்குத்தான்... சங்கீதம் முறையாக படிக்கா விட்டாலும் கேள்வி ஞானம் ஒன்றை வைத்து... அவர் வெல்வார் என்பது உறுதி ஐயா.. எனது வாக்கும் திவர்கருக்குத்தான்...ஐயா.... திவாகர் பாடும் போது.. மேடை அதிர்ந்தது.....
  தமிழகத்தின் தங்க குரல் அல்லவா.....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று ஞாயிறு முகூர்த்த நாள். ஏகப்பட்ட திருமணங்கள். சென்று வந்த திருமணத்தில் நண்பர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டுப் பெண்களின் பேச்சும் இன்று முழுவதும் திவாகரைப் பற்றித்தான் இருந்தது... ஒரே நாளில் உச்சம் தொட்டுவிட்டார். திறமை தந்த வெற்றி நன்றி ரூபன். ஆமா... உங்கள் நண்பரின் திருமணம் நெருங்கி வருகிறது. நீங்கள்..?

   நீக்கு
 2. இந்த முறை சரியான போட்டி இல்லை என்று நினைக்கத் தோன்றி விட்டது... "இந்தப் பாடல் மிகவும் சிரமம் அச்சே... எப்படி இரு குரலில் பாடுவார்" என்று நினைத்திருந்தேன்... யப்பா...! அட்டகாசம்...!

  நீங்கள் சொல்வது போல்... "அப்போதே வென்றுவிட்டார்..." முடிவில் எல்லோரிடமும் போட்டியை பற்றி கேட்ட போது, அவர் சொன்ன காரணமும், பணிவான பேச்சும் மேலும் அவர் மீது இருந்த மதிப்பை மேலும் கூட்டியது... திவாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் அய்யா... சோனியாவும் சையதும் நன்றாகத்தான் பாடினார்கள். என்றாலும்... நீங்கள் சொன்னது போலப் போட்டி ஒன்றும் கடுமையாகத் தோன்றவில்லை. கடந்த முறை யாழினி அஜீத், அந்த கருவாப்பையன் மூவருமே கச்சைகட்டி நின்றாற் போல இந்த முறை தோன்றவில்லை. திவாகர் அன்னபோஸ்ட்

   நீக்கு
 3. மனம் சஞ்சலப் படும் போதோ இல்லை சந்தோசமாக இருக்கும் போதோ, அடிக்கடி கேட்கும் அற்புதமான பாடல்... பாட்டின் முடிவில் சந்தோசமும், சிரிப்பும் உண்டு... இந்தப் பாடலுக்காக ஒரு பதிவை எழுத வேண்டும் என்று எப்போதும் நினைத்ததுண்டு... எழுதியும் விட்டேன்...

  ஐயா நீங்கள் படித்து இருப்பீர்களோ தெரியவில்லை... இதோ இணைப்பு :

  தலைப்பு : நீயே உனக்கு என்றும் நிகரானவன்

  இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Success-is-our-choice.html

  நேரம் கிடைக்கும் போது வாசித்து கருத்திட வேண்டுகிறேன்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான பதிவு அய்யா... ஆனால் பாடல் தொடர்ந்து கேட்காமல் விட்டுவிட்டு வருகிறதே (என் வலைவேகம் போதாதோ?) நீங்கள் ரசனைக்காரர்தான் ! நன்றி நன்றி.

   நீக்கு
 4. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு மற்றொரு சான்று திவாகர்,இதனை சிறு வயதில் அவர் பெற்றிருக்கும் வெற்றிக்கான முயற்சியும் ,பயிற்சியும் சாதாரணமாக தெரியவில்லை. திவா விற்கு ஹாட்ஸ் அஃப்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்தனைக்கும் அவர் இசையை முறையாகப் பயின்றவரல்ல என்று சொல்கிறார்கள் (நம்மைப் போலவே! நமக்கு அவரைப் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?) எல்லாம் முயற்சியும் பயிற்சியும்தான்... நன்றிம்மா.

   நீக்கு
 5. திறமையுள்ளவன் நிச்சயமாக வெற்றியடைவான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லையா பின்னே? எல்லாம் நியூட்டனின் மூன்றாம் விதிதான். நன்றி கவியாழியாரே, (நம் யோசனை லைவில் இருக்கட்டும்)

   நீக்கு
 6. பதில்கள்
  1. கவலை வேண்டாம் கவிஞரே, மீண்டும் மீண்டும் வரும். விளம்பர வருமானத்தை அவர்கள் விடமாட்டார்கள்.

   நீக்கு
 7. சிறுவர்கள் பாடும்வரை சிறப்பாகச் சென்றுகொண்டிருந்த நிகழ்ச்சி. அடல்ட்ஸ் வந்த பிறகு பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

  முழுக்க முழுக்க மக்களை முட்டாளாக்கிப் பிழைக்கும் வியாபார தந்திரம்தான் இதில் தெரிகிறது. அனந்த வைத்தியநாதன் ஒவ்வொரு உடையுடனும் தினமும் வந்து போனதின் காரணம் என்னவோ.

  எனது வெளிப்படையான் கருத்து தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோறுகிறேன்.

  கோபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுவர்கள் பெரியவர்கள் வித்தியாசமெல்லாம் நமக்குத்தான் அவர்களுக்கு டிஆர்பி ரேட் வித்தியாசம்தான். வியாபாரத்திலும் சில-தவிர்க்க இயலாத- நல்லவியாபாரம் இருக்கிறதல்லவா? (ஆங்கில வழிக்கல்வி, தமிழ்வழிக்கல்வி இரண்டையுமே நடத்தும் தனியார் வியாபாரக் கல்விக்கூடங்களில் எதை நல்ல வியாபாரம் என்போம்? அதுபோலத்தான் இதுவும்) மற்றபடி நிகழ்ச்சி சிறப்பாகவே இருந்தது.. மாற்றுக்கருத்தால் மனம் புண்படுகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை, சரியான கருத்து பண்படுகிறதா இல்லையா என்பது முக்கியம் நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே!
  நானும் பார்த்து ரசித்தேன் அமர்களப் படுத்தியது திவாகரின் பாடல்.திவாகரை நினைத்தால் ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. அவரின் நம்பிக்கையும் விடா முயற்சியும் தான் வென்றது. ஜானகி அம்மாவின் பாராட்டும் பரிசும் தான் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
  நன்றி வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோதரி. உடனடியாக மேடையேறி, உச்சிமோந்து , முத்தமிட்டு, ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, ஆசிமொழி வழங்கி... மேன்மக்கள் மேன்மக்களே! அந்தப் பெருந்தன்மையை ஈகோவை ஒழித்த உயர்கலைஞர்கள் சிலரிடம் கண்டிருக்கிறேன். எஸ்பிபி, கமல், என வெகுசிலரிடம் தங்கள் கருத்துகள் உண்மை. நன்றி சகோதரீ.

   நீக்கு
 9. சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்து விடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். பெரும்பாலும் மலையாளப் பாடகர்களே வெற்றி வாகை சூடுவது வழக்கம். மாறாக திவாகர் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. பலே பாண்டியா பாடலை மிக அற்புதமாக பாடினார் .
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தமுறை திவாகர் ஏகப்பட்ட மதிப்பெண் இடைவெளியில் அல்லவா வென்றிருக்கிறார். முன்போல ஓரிரு மதிப்பெண் என்றால் சந்தேகம் வந்திருக்கலாம். இப்ப சுமார் 20விழுக்காடு வித்தியாசத்திலல்லவா வென்றிருக்க வேண்டும் (மதிப்பெண் தெரியவிலலை என் கருத்தில் சொல்கிறேன்) நன்றி முரளி.

   நீக்கு
 10. திவா.. நம்பிக்கை நட்சத்திரம் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. சிறந்த திறனாய்வுக் கருத்தை வரவேற்கிறேன்.

  தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா வணக்கம். நான் அவசரப்பட்டு முன்பின் தெரியாத வலைகளுக்குள் நுழைவதிலலை. உங்கள் மேல் நம்பிக்கை வைத்து நீங்கள் தந்த http://thamizha.2ya.com வலைக்குள் நுழைந்தால் அதற்குள் http://my.monsterindia.com/ என்றொரு தளம் திறக்கிறதே! எனது மின்னஞ்சலுக்கு விவரம் தரவேண்டுகிறேன் - muthunilavanpdk@gmail.com

   நீக்கு
 12. ஆனால் நடுவர்கள் தேர்ந்தெடுத்தது சையது என்று அறிவித்தார்கள்!
  மக்கள் மனங்களை வென்றவர் திவாகர் தான். இசை படிக்காதவர்களும் இசையை ஆளலாம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. கடைசியில், நான் இசையை முறையாகப் பயின்று இந்த துறையில் என்னாலும் நிலைத்திருக்க முடியும் என்று காட்டுவேன் என சொன்ன போது மிகவும் சந்தோசமாக இருந்தது.

  இதுவரை வெற்றியாளர்களை எப்படித்தேர்ந்தெடுத்தனரோ? இந்தமுறை சரியாகவே தேர்ந்தெடுத்தனர்..

  திவாகருக்கு என்னுடைய வாழ்த்துகள்! அருமையான பதிவு ஐயா! எனக்குத்தான் கால தாமதமாகவே இறுதிப்போட்டியையும், உங்கள் பதிவையும்! பார்க்க முடிந்தது.

  பதிலளிநீக்கு