திருக்குறளில் தளைப்பிழை இல்லை, பாடபேதம் உண்டு! - நா.முத்துநிலவன்

   
நமது வலையின் “திருக்குறளில் தளைப்பிழையா?“ எனும் நம் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களின் ஆழத்தை ஒட்டி, திருக்குறளில் இலக்கண ஆய்வு ஒன்றைச் சிறிதளவு மேற்கொள்ள வேண்டியதாகி விட்டது. அறிதோறும் நம் அறியாமை கண்டு!
இது பற்றித் தமிழறிஞர் பலரும் எழுதியிருக்கலாம். அனேகமாகத் தமிழிலக்கிய ஆய்வுகளிலும் புதியஉரை வரவுகளிலும் முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டே வருபவர் நம் வள்ளுவர்தான் என்பதால் “இது ஒன்றும் புதிதல்ல“ என்று நினைக்கவேண்டியதில்லை.அவரே சொல்வதுபோல“எப்பொருள் யார்யார்வாய்..“தான்!
நாமும் தொடர்நது ஆய்வு செய்வது, திருக்குறளைப் பெருமைப் படுத்த அல்ல. நம்மால் ஒன்றும் திருக்குறளுக்குப் புதிய பெருமை வரப் போவதில்லை. நமக்குப் புதியசெய்தி கிடைக்கும் என்றே நமது முயற்சியைத் திருவினையாகத் தொடர்வோம்!
இந்த ஆவலைத் தூண்டிய நமது புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் நல்ல தமிழறிஞருமான முனைவர் நா.அருள்முருகன் அவர்களுக்கு மனசுக்குள் நன்றி சொல்லிக்கொண்டே  இரண்டுநாள் குறட்பயணம் மேற்கொண்டேன்!
 1330குறட்பாக்களையும் பார்த்து, எங்கெல்லாம் ஆய்தஎழுத்துகள் வந்துள்ளன? அவற்றில் மாத்திரை வேறுபாடுகளோடு வந்துள்ள இடங்கள் எவைஎவை என்று பார்க்க வேண்டுமே என்னும் தாகம் மேலிட, குறட்பாக்களுக்குள் ஒருசுற்றுச் சுற்றி வந்து குறிப்பெடுத்து முடித்தேன். கணினிப் பொறியியல் படிக்கும் என் மகள், எனது அலைபேசியில் திருக்குறளைத் தான், பதிவிறக்கம் செய்து தந்ததை நினைவூட்டி,  அதில் ஆய்த எழுத்தை மட்டும் தேடுபொறியில் இட்டால் எந்தெந்தக் குறளில் ஆய்த எழுத்து வந்திருக்கிறது என்று, குறள் எண்ணோடு காட்டிவிடுமே அப்பா! இதற்காகவா அனைத்துக் குறள்களையும் பார்த்தீர்கள்?“ என்று கேட்டதும்......  ஆகா.......“எனச் சற்றுநேரம், வைகைப் புயல் வடிவேலு போல ஆகிவிட்டேன்! ஆனாலும் சளைக்காமல், குறட்பயணம் எனக்குள் வேறு சில இலக்கணச் சிந்தனைகளை எழுப்பியிருப்பதையும், எடுத்த குறிப்பைச் சரிபார்ப்பதற்கு நமது அலைபேசிப் பதிவிறக்க உதவியை நாடலாம் என்பதையும் எண்ணி ஆறுதல் கொண்டேன்.
இதோ அந்தப் பயணப் பயன் -
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்    (குறள் எண்-38)
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று  -(குறள் எண்-49)
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை     -(குறள் எண்-76)
என்றிவ்வாறு, குறள் எண்கள் -38, 49, 76, 80, 132, 162, 170, 171-180, 220, 226, 236, 242, 262, 363, 368, 414, 427, 459, 476, 541, 556, 572, 575, 591, 600, 621, 759, 773, 971, 943, 1001, 1014, 1032, 1037, 1093, 1161, 1166, 1279, 1308 என, மொத்தம் 48 குறட்பாக்களில்  51 ஆய்த எழுத்துகளை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார். ஒருவேளை இந்த எண்ணிக்கை மாறுமெனில் அது எனது கவனக்குறைவே அன்றி வள்ளுவரை எந்த வகையிலும் பாதிக்காது என்பதையும் முன்கூட்டியே சொல்லி வைக்கிறேன் (வெஃகாமை அதிகாரத்தின் பத்துக் குறள்களிலும் 13 ஆய்தஎழுத்துகள்! அதாவது, குறள்கள் 175,176,178 ஆகிய மூன்றிலும் இரண்டிரண்டு ஆய்த எழுத்துகள்!)  
ஆக, திருக்குறளில் ஆய்த எழுத்துகள் ஆளப்பட்டுள்ள 48 குறள்களில்,  226, 363, 414, 943 ஆகிய குறள்கள் தவிர்த்த மற்ற குறள்களை அலகிடும்போது, ஆய்த எழுத்திற்கு அரைமாத்திரை தந்து பிரித்தால் வெண்டளை சரியாகவே வருகிறது.
சரி. இப்போது, பிரச்சினைக்குரிய அந்த 4  குறட்பாக்களின் ஆய்த எழுத்துகள்?
      அவற்றிற்கும் மேற்கண்டவாறு அரைமாத்திரை தந்து பிரித்தால் மா முன் நேர் எனும் வாய்பாட்டின்படி நேரொன்றாசிரியத் தளை வந்து –குறட்பாவில் வெண்டளை தவிர்த்த வேறுதளைகள் வரக்கூடாது எனும் இலக்கணப்படி, இக்குறட்பாக்கள் தளைப்பிழைக்கு ஆளாக்கிவிடும்!பொதுவான –எழுத்துகளுக்கான மாத்திரைகள் பற்றிய -விதிகளின் படிப் பார்த்தால் இந்த 4 குறட்பாக்களும் இடறும்.  எனில், பார்ப்போமே.!
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி    (குறள் எண்-226)
      இக்குறளில் “தீர்த்தல்“ எனும் மூன்றாவது சீரில் –நேர்நேர்- தேமா வந்துள்ளது. அடுத்த சீரில் இடம்பெற்றுள்ள ஆய்த எழுத்திற்கு (மேற்கண்ட 44 குறள்களில் வரும் ஆய்த எழுத்துகளுக்குத் தந்தது போல) அரை மாத்திரை கொடுத்து அலகிட்டால் “அஃதுடம்பு“ என்பதை -நேர் நிரை நேர் எனும் வாய்பாடாக்கினால்- மாமுன் நேர் என நேரொன்றாசிரியத் தளை பெற்று வெண்டளை பிழைத்து, குறள் பிழையாகிவிடும்.
      இவ்வாறே ஏனைய 3குறளில் வரும் ஆய்த எழுத்துகளையும் பார்ப்போம் –
          
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல்     (குறள் எண்-363)

கற்றிலன் ஆயினும் கேட்க   அஃதொருவற்கு               
ஒற்கத்தின் ஊற்றாம் துணை    (குறள் எண்-414)
            
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு                 
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு   (குறள் எண்-943)
 
ஆக இந்த நான்கு குறட்பாக்களிலும் வரும் ஆய்த எழுத்துகளை வள்ளுவர் எப்படிக் கையாண்டிருக்கிறார் என்று பார்ப்பதுதான் இந்த நம் விவாத்த்தின் மையம் -
இந்த நான்கு குறட்பாக்களில் மட்டும் ஏன் இப்படிச் செய்தார் வள்ளுவர்? (இப்படி நான்கு குறள் என்று எண்ணை அறுதியிட்டுத் திரும்பத் திரும்பச் சொல்வதற்கும் தயக்கமாக இருக்கிறது, ஏனெனில் விக்கிபீடியாவில் இப்படியான குறள் 3தான் என்பதுபோல ஒரு குறிப்பு உள்ளது. என் ஆய்வில பிழையிருந்தால், நண்பர்கள் தெரிவித்தால்  திருத்திக்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்.)   (பின்னர்  பிரான்சு நாட்டுக் கம்பன்கழகத் தலைவரும்  நல்ல மரபுக்கவிஞருமான திரு கி.பாரதிதாசன் அவர்கள் நமது பின்னூட்டதில் தெரிவிததிருப்பது போல குறள் எண்-1166இலும் இவ்வாறு வருவதைக் காணமுடிகிறது. அய்யா அவர்களுக்கு நன்றி-16-08-2013 அன்று நா.மு.குறிப்பு)

இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்துக்கு ஒருமாத்திரை தந்து உயிரெழுத்தைப் போல் அலகிட்டுகொள்கிறோம்  -  என்று விக்கிபீடியாவிலிருந்து ஆதாரம் காட்டி நண்பர் வேணு அவர்கள் தெரிவித்த கருத்தும் ...
“ஒருவேளை குறட்பாக்களில் ஒற்றளபெடை இருந்திருக்குமோ என்ற ஐயப்பாடு எழுகிறது..  இது ஒற்றளபெடை குறித்த இலக்கணப் புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது – என்றும், “எப்படியோ திருக்குறளில் வந்துள்ள அந்த ஆய்த எழுத்து அலகு பெற்றுவிட்டது. அக்குறட்பாக்கள் இலக்கணம் கடந்து காலம் கடந்து கோலோச்சி நிற்கின்றன. 
ஆய்த எழுத்தே ஒருசில வேளை 
அலகு பெறுதல் அறி என்றும்  ஆய்த எழுத்திற்காகவே தான் எழுதிய ஒரு குறள்வெண்பாவின் வழியும் பலப்பல இலக்கண நூல்களிலிருந்தும் தம்பி தமிழ்க்கோ (கோபிநாத்) தெரிவித்த கருத்தும் ...  சிந்தனையைத் தூண்டுவனவாகவே உள்ளன.

ஆனாலும் என் கருத்து –
வள்ளுவர் காலத்தில் ஆய்த எழுத்தின் வரிவடிவத்தின் மீதான ஐயமாக விரிகிறது. மெய்யெழுத்தின் மேல் வரும் ஒரு புள்ளிக்கே தடுமாறிய ஓலைச்சுவடிக் காலத்தில் மூன்று புள்ளிகளை எப்படி வைத்திருப்பார்கள்? ஆய்த எழுத்திற்கு முப்பாற்புள்ளி என்றொரு பெயர் இருப்பதாக இலக்கண நூல்களும் எடுத்துக் காட்டுகின்றன.

எனவே, ஒரு–ஓர் போல, அது–அஃது எனும் சொற்களும் ஒன்று போல ஆளப்பட்டு இருக்கலாமோ என்று என் ஐயம் விரிகிறது. இரண்டும் வருமொழி முதலில் உயிர் வந்தால் மாறிவரும் என்பது உரைநடை அளவிற்குச் செய்யுளில் பார்க்கப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளலாம். (இதுபற்றிய விரிவான  ஆய்வுகள் பலவும் இந்தியத் தமிழாசிரியர் மன்ற மாநாட்டுச் சிறப்பு மலர்களில் வந்திருப்பதாகத் தம்பி கோபிநாத்தும் தொலைபேசிச் செய்தியில் சொன்னார்)

இக்கருத்திற்கு அரண் செய்வதுபோல, திருக்குறளுக்கு உரையெழுதிய பழம்பெரும் புலவர் பெருமக்கள் பதின்மருள் ஒருவராகிய காளிங்கர் நமக்கு ஒரு குறிப்புத் தருகிறார். குறள் எண்-363, 414 இரண்டிலும் ஆய்த எழுத்து வருமிடங்களை மட்டும் பாடபேதமாக இருக்கலாம் என்று சொல்லியிருப்பதுதான் அது!(ஆதாரம் - திருக்குறள் உரைக்கொத்து- தருமபுரம் ஆதீன வெளியீடு)
அதாவது –
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை   யாண்டும் அஃதொப்பது இல் (குறள் எண்-363) என்னுமிடத்திலும்,
கற்றிலன்  ஆயினுமகேட்க அஃதொருவற்கு                   ஒற்கத்தின் ஊற்றாம் துணை. (குறள் எண்-414) என்னுமிடத்திலும் வரும் ஆய்த எழுத்துகளை எடுத்துவிட்டு –அஃது என்னும் சொல்லிற்குப் பதிலியாக- அது எனும் சொல்லையே இட்டு, பின்னர் உடம்படுமெய் (வ்) சேர்த்து, முறையே “அதுவொப்பதுஎன்றும் “அதுவொருவற்கு”  என்றும் இருந்திருக்கலாம் எனும் கருத்தைக் காளிங்கர் சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது.
“இது என்ன புதுக்கதையாக இருக்கிறது?என்று என்மேல் பாய நினைப்போரை மீண்டும் நான் வள்ளுவப்பெரியாரின் துணையோடுதான் சந்திக்க வேண்டியிருக்கிறது.
ஆமாம், குறள் எண் 996 இந்த எனது கருத்திற்கு அரண் சேர்ப்பதாக உள்ளது. (என்மகள் சொன்னதுபோல அலைபேசியில் ஆண்ட்ராய்டு துணையோடு பதிவிறக்கிய புள்ளிவிவரத்தை எடுத்துப்பார்க்கும் ஆய்விற்கும் நாமே நேரடியாக அலசிப் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டின் பலன் இது!) குறள் எண் 996 ஆய்த எழுத்து வர வேண்டிய இடம்தான், ஆனால் என்ன காரணத்தினாலோ வள்ளுவர் இக்குறளில் ஆய்த எழுத்தைத் தவிர்த்து -நான் முன்னர்க் குறிப்பிட்டது போல- “அஃது“ என்று சொல்ல வேண்டிய இடத்தில் “அது“என்றே போட்டு எழுதியிருக்கிறார். பாருங்களேன்!

பண்புடையார்ப் பட்டுண்டு  உலகம  அதுவின்றேல்                                    மண்புக்கு மாய்வது மன்   (குறள் எண்-996)
நல்லவேளையாக, திருக்குறளின் அனைத்துப் பதிப்புகளிலும் மட்டுமன்றி, உரையெழுதிய மு.வ., கலைஞர், சுஜாதா, சாலமன் பாப்பையா, புலியூர்க் கேசிகன் உள்ளிட்ட பெருமக்கள் அனைவரின் பதிப்புகளிலும், விக்கிபீடியா வெளியீட்டிலும், மதுரைத் திட்டம் இணையத்திலும் இவ்வாறே உள்ளது. பாடபேதம் ஏதும் இல்லை. (பின்னர்16-08-2013அன்று பார்த்த, ஐயா ச.வே.சு.அவர்கள்  பதிப்பில் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் பதினெண்கீழ்க்கணக்கு நூலில் உள்ள திருக்குறள் பகுதியிலும் இக்குறட்பாவை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அதிலும் இக்குறளில் பாடபேதம் இல்லை என்பதையும் கண்டேன்)

      மற்ற இடங்களில் ஆய்தஎழுத்தைப் பயன்படுத்திய வள்ளுவர் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டிய இவ்விடத்தில் ஏன் தவிர்த்தார்? என்று சிந்தித்தால்,  அவர் அதைத் திட்டமிட்டுத்த தவிர்க்கவில்லை, சுவை கருதியோ, (அஃது எனும்) முன்னர் ஆண்ட சொல்லையே மீண்டும் ஆள்வதைத் தவிர்க்க எண்ணியோ ஒரே பொருள் தரும் பல சொற்களில் வேறொன்றைப் போட்டுப்பார்க்கும் கவிநோக்கில் (அது என்று) செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இதையே வள்ளுவர் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தியிருக்கும் பிற இடங்களில் பெரும்பாலான வற்றிற்கும் பொருத்திப் பார்க்கலாம். முப்பதிற்கு மேற்பட்ட இடங்களில் சரியாகத்தான் வருகிறது.

ஆக, மாச்சீரை அடுத்து ஆய்தம் வரும் நான்கு இடங்களில் காளிங்கர் சொன்ன இரண்டு மட்டுமல்லாமல், நான்கு இடங்களுமே பாட பேதமாக இருக்கலாம். மற்ற 44இடங்களில்  பெரும்பாலானவை –தளை தட்டாத அளவிற்கு- அஃது என்பது அது என்று,  உடம்படுமெய் சேர்த்துக்கொண்டும் இருந்திருக்கலாம். (எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்னும் பழமொழிப் பயன்பாடுதான்!)
வெஃகாமை அதிகாரம் முழுவதும் பத்துக்குறளிலும்- ஆய்த எழுத்தைப் பயன்படுத்திய வள்ளுவர், 3குறள்களில் இரண்டிரண்டு இடங்களில் ஆள்வதும் வியப்பளிப்பதாக உள்ளது. அந்த இடங்களில் பாடபேதம் பார்க்க வேண்டிய அவசியம் எழவில்லை. மெய்யெழுத்துப் போல அரைமாத்திரை கொடுத்து அலகிட்டால் எந்தச் சிக்கலும் எழவில்லை என்பதையும் அறியலாம். 

சுஜாதா வெஃகாமை என்பதை வெகாமைஎன்றும், அஃதிலார் என்பதை அதிலார் என்றும் எழுதியிருப்பது எழுத்துப் பிழையா எழுத்துருப் பிழையா என்று தெரியவில்லை. திருக்குறளை இப்படி எழுதும்போது தளைப்பிழை வரும் என்பதை வெண்பா இலக்கணமறிந்த சுஜாதா ஏன் கவனிக்கவில்லை என்றும் தெரியவில்லை. அவரது திருக்குறள்-புதிய உரைகாண்க தோன்றின் புகழோடு தோன்றுக அதிலார் தோன்றலின் தோன்றாமைநன்று-எங்கேயாவதுதோன்றினால்புகழோடு தோன்ற வேண்டும்.  இல்லையேல் சும்மா இருக்க வேண்டும் (சுஜாதா உரை) http://koottanchoru.wordpress.com/2010/03/04/ 

கடைசியாக –
எனவே, ஆய்த எழுத்திற்குத் தம் குறட்பா முழுவதும், அரைமாத்திரை அளவிட்டுத்தான் வள்ளுவர் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த நான்கு இடங்களில் -குறள் எண் 996 போல- உடம்படுமெய் சேர்த்துப் பார்த்தால் ஆய்த எழுத்து இல்லை என்பதே நான் காணும் முடிவு. மற்றபடி தளை, ஓசையில் எல்லாம் –அரைமாத்திரையும் இருக்கலாம், கால்மாத்திரையும் இருக்கலாம், ஓசைபற்றியும் தளைபற்றியும் அப்படியும இருக்கலாம், இப்படியும் இருக்கலாம் என –விக்கிபீடியாவில் யாரோ எழுதிச்சேர்த்த “லாம்“ குழப்பமெல்லாம் வள்ளுவரிடத்தில் இல்லை. இயல்பாகவே தமிழ் மரபு இலக்கண நெறிநின்றே எழுதியிருக்கிறார்.

இலக்கண ஆதாரம் -
ஒற்றெழுத்தியற்றே குற்றிய லிகரம் தொல்-நூற்பா 1265                நால்எழுத்துஆதியாகிஆறெழுத்து  ஏறிய நிலத்தே குறளடி என்ப தொல்-நூற்பா 1293
உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ தொல்-நூற்பா 1301 (உயிரில்லாத மெய், சார்பெழுத்துகள், உயிர்த்திறனும், இயக்கமும் இன்மையால் எண்ணப்படா)

நான் நமது வலைப்பக்கக் கட்டுரையில் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல,  (http://valarumkavithai.blogspot.in/2011/02/blog-post_8301.html வள்ளுவப் பெருந்தகையின் அறிவை அளக்க நமக்குத் தகுதியேது?

அலைபேசி வைத்திருக்கும் இளைஞர் எல்லாரிடமும் சொல்லுங்கள் – “உன் அலைபேசியில் வள்ளுவரும் பாரதியும் இருக்கிறார்களா?“என்று கேளுங்கள். இல்லை யென்றால் உடனடியாகப் பதிவிறக்கம் செய்து தினமும் பார்க்கச் சொல்லுங்கள். அது ஒன்றால் நிகழும் மாற்றம் நிச்சயமாக சமூக மாற்றத்தை நிகழ்த்தும்.  

------------------------------------------------ 

12 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.

    தங்களின் கட்டுரை முழுவதும் படித்தேன். மிகவும் அருமையாக, அதிக நேரம் எடுத்து, யோசித்து எழுதி இருக்கிறீர்கள். உண்மையில் உங்களைப் பாராட்ட வேண்டும்.

    எனக்கும் இப்படியான சந்தேகம் வந்தது. அதை என் ஆசிரியர் கவிஞர் கி. பாரதிதாசனிடம் கேட்டேன்.

    அவர் அப்பொழுதே எந்த புத்தகத்தையும் பார்க்காமல் உடனடியாக பதிலைச் சொல்லிவிட்டார்.

    அவர் சொன்ன பதில் இது தான்.

    திருக்குறளில் நீங்கள் சொன்னது போல்
    48 குறள்களில் 51 ஆய்த எழுத்து வருகிறது.

    அதில் உள்ள 44 குறள்களில் உள்ள ஆய்தத்தை அரை மாத்திரையாகவே கொள்ள வேண்டும். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள குறளில்களில் உள்ள ஆய்தத்தை “முற்றாய்தம்“மாகக் கொள்ளவேண்டும். அதனால் அது ஒரு மாத்திரை பெரும் என்றார்.

    அதாவது மற்ற 44 குறள்களில் வந்துள்ள ஆய்த எழுத்தை அடுத்து வந்துள்ள எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள். மற்ற நான்கில் (நீங்கள் குறிப்பிட்ட) குறள்களின் வந்துள்ள ஆய்தம் அடுத்து வந்த எழுத்து உயிர் என்பதால் அந்த ஆய்தம் முற்றாயிதமாகக் கொள்ளவேண்டும்.

    அதாவது...

    அஃதொப்பை -அது ஒப்ப - அஃது ஒப்ப என்றும் விரித்துப் பொருள் கொள்ளும் பொழுது அங்கே வரும் ஆய்தம் முற்றாயிதம் ஆகும். அதனால், அங்கே நிரைநேர்நேர் என்ற வாய்ப்பாட்டில் அடங்கிவிடும்.

    “வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    யாண்டும் அஃதொப்பது இல்.

    யாண்டும் அஃ(து)தொப்ப தில்.
    இதில் நேர் முன் நிரை வந்துவிடுவதால் திருக்குறளில் தளைப்பிழை இல்லை. என்று எனக்கு விளக்கமாகச் சொல்லிக்கொடுத்தார்.

    இது குறித்து மேலும் விளக்கம் தேவை என்றால் http://bharathidasanfrance.blogspot.fr/இந்த வலையில் அவருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

    அன்புடன்
    அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
  2. ஆரம்ப காலத்தில் தமிழ்ப் படித்த நான் இப்போது கவியாழி என்ற தளத்தில் கவிதை எழுதிவருகிறேன்.உங்களின் இந்த முயற்சியையும் உண்மையையும் தெரிய நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியைக் காணும்போது நான் இன்னும் சிறப்பாக எழுத இலக்கணம் தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறது.தங்களின் ஆலோசனை எனக்கு தேவை

    பதிலளிநீக்கு
  3. வள்ளுவரையும் பாரதியையும் அனைவரும் அறிந்தால் நிச்சயம் சமூக மாற்றம் ஏற்படும். நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. அய்யா வணக்கம். திருக்குறளில் தளை தட்டவில்லை. பாடபேதம் உண்டு என்று கூறியது சரியாக உள்ளது. இந்த ஆய்வில் ஆய்த எழுத்து பற்றிய வரிவடிவச் சிந்தனை எழுகிறது. மேலும், திருக்குறளில் பாடபேதம், பதிப்புகள் குறித்த ஆய்வுகளும் நன்கு விரிய வாய்ப்புக் கிட்டியுள்ளது. ஆய்த எழுத்துக்கு "முப்பாற் புள்ளி" என்ற பெயர் உண்டு. தொல்காப்பியரின் " குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோர் அன்ன" என்ற நூற்பாவை இதற்கு எடுத்துக் காட்டுவர். ஆனால், முப்பாற் புள்ளி என்பது குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற மூன்றுமே. "என்ற" எனும் சொல் இதனைப் பிரித்துக் காட்டுகிறது. "மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்" (தொல்)," குற்றியலுகரமும் அற்றுஎன மொழிப" என்ற நூற்ப குற்றியலுகரம் புள்ளி பெற்றிருந்ததை ஒருவாறு உறுதி செய்கிறது; காரணம் ஓர் எழுத்து மாத்திரை அளவில் குறையும் போது புள்ளி பெற்றது. சான்று மகரக் குறுக்கம். ஆக,எழுத்துகளின் வளர்சிதை மாற்றமாக இருந்த வரிவடிவ மாற்றம் தான் பல குழப்பத்தில் நம்மை ஆழ்த்துகின்றன. "தளைப்பிழை இல்லை குறளில் எழுத்து வனைபிழை என்றே வடி",
    கொ. சுப. கோபிநாத், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் - 624620. அலைபேசி; 8870034950.

    பதிலளிநீக்கு

  5. வணக்கம்!

    226, 363, 414, 943, ஆகிய நான்கு குறட்பாக்களோடு 1166 ஆம் குறட்பாவும் தன் ஓசையில் உயா்ந்து ஒளிக்கிறது.

    இன்பங் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால் - குறள் 1166

    ஆய்தத்தை நேராகவும் நிறையாகவும் கையாளப்பட்டிருக்கும் இடங்களில் நுண்ணிய நுட்பம் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

    தமிழில் அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயராய் அது, அஃது என்ற இரண்டு சொற்களும் உள்ளன. அஃது என்பது அது என்பதின் திரிபு அன்று.

    அது என்பதன் பன்மை அவை என்பது, அஃது என்பதின் பன்மை அவ் என்பது. அது என்பது போலவே இது, உது, என்பனவும் அஃது என்பது போலுவே இஃது, உஃது என்பனவும் பண்டு அஃறிணை ஒருமைச்சுட்டு பெயராகவும், இவை, உவை என்பன போல இவ், உவ் என்பனவும் பண்டு அஃறிணைப் பன்மைச் சுட்டுப் பெயராகவும் இருந்தன!

    வள்ளுவா் முறையாகவே அது, அஃது ஆகிய இரண்டு சொற்களை ஆண்டிருக்கிறார் என்பது என் எண்ணம்.

    தளை தட்டுவதற்கும் இடமில்லை, பாடபேதத்திற்கும் இடமில்லை!

    இக்கட்டுரையைக் குறித்து மேலும் ஆய்வுசெய்து என் வலையில் எழுதுகிறேன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  6. தமிழ் மொழி நான் அதிகம் படிக்க வேண்டியிருக்கிறது என்பதை அடையாளப்படுத்துகிறது. உங்களின் செயல்பாடு காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  7. நன்றி நண்பர்களே, இதில் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சில புதிய கருத்துகளை முன்வைத்திருப்பதோடு எனது கட்டுரையில விடுபட்டிருந்த குறள் எண் 1166ஐயும் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்த எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களிடம் நமது ஆய்த எழுத்துப் பற்றிய இரண்டு கட்டுரைகள் மற்றும் பின்னூட்டங்கள் உட்பட அனைத்தையும் அச்செடுத்துக் காட்டினேன். மிகவும் மகிழ்ந்த அவர்கள், தான் முதுகலைத் தமிழாசிரியராக இருந்தபோது, தமிழில் ஆய்த எழுத்துக்கான மாத்திரை தொடர்பாகத் தான் மேற்கொண்ட ஆய்வுக்குறிப்புகளைக் காட்டி, இப்போது அதையே ஒரு கட்டுரையாக்கித் தருவதாகவும் கூறியிருககிறார். அதுவரை சற்றே பொறுத்திருப்போம். நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி. தொடரட்டும் நமது விவாதம்.

    பதிலளிநீக்கு
  8. இதில் நண்பர் அருணா செல்வம் அவர்கள் முற்றாய்தம் ஒரு மாத்திரை பெறும் எனும் ஒரு புதிய கருத்தை முன்வைத்திருக்கிறார். என் சந்தேகம் , ஆய்தத்துக்கே அரை மாத்திரை தானே? பிறகு முற்றாய்தம் மட்டும் எப்படி ஒரு மாத்திரை பெறும்? அதை எப்படி உச்சரிப்பது? என அதிகரிக்கிறதே தவிரக் குறையவில்லை. எனினும் எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அய்யாவும் திருக்குறள் தவிரவும், சங்கப்பாடல்கள், நாலடியார், பழமொழி, நேமிநாதம் மற்றும் கல்வெட்டுகளில இருந்தெல்லாம் சான்றுகள் காட்டி ஆய்தம் மெய்யெழுத்தாக மட்டுமன்றி, உயிராகவும் வந்திருக்கிறது என்கிறார். பார்க்கலாம். இணையத்தில் அக்கப்போர்களையே பார்த்த நமக்கு இதுபோலும் ஆய்வுப்போக்குகளைப் பார்க்க மகிழ்ச்சிதானே?

    பதிலளிநீக்கு

  9. வணக்கம்!

    ஆய்தக் குறுக்கமாக வருகின்ற இடங்களைத் தவிர மற்ற இடங்களில் வருகின்ற ஆய்தம் முற்றாய்தம் எனக் கொள்க!

    முற்றாய்தம் அரை மாத்திரை பெறும்.
    ஆய்தக் குறுக்கம் கால் மாத்திரை பெறும்

    226, 363, 414, 943, 1166 ஆகிய குறள்களில் முற்றாய்த ஓசையில் மேலும் ஓங்கி ஒளிக்கிறது என்பதே என் கருத்து! அதனால் அவ்விடங்களில் நிறையசையாகக் கொள்ளப் புலவா்களுக்குச் சுதந்திரம் உண்டு.

    இதுபோன்றே ஐகாரத்தை நம் முன்னோர்கள் மூவழியும் குறிலாகவே கணக்கிட்டு எழுதியுள்ளனா்.

    தன்சுட்டு அளபுஒழி ஐம்மூ வழியும்
    நையும் - நன்னுால் 95

    ஆனால்

    யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியா்
    ஐகாரம் தன் அளவில் சுருங்கி ஒன்றரை மாத்திரையும் ஒரு மாத்திரையுமாகக் குறுகுமெனக் கொள்க என் உரை வடித்துள்ளார்!

    ஐகாரம் மொழிக்கு இடையில் கடையில் தன் மாத்திரையில் குறுகும்! ஐயம் இன்றித் தெளிவாக தெரிகிறது.

    மொழிக்கு முதலில் ஒரு மாத்திரையாகவும், ஒன்றரை மாத்திரையாகவும் ஒலிக்குமெனக் கொள்க!

    பைங்கொடி என்பதில் உள்ள ஐ ஒரு மாத்திரை பெறும்.
    பையன் என்பதில் உள்ள ஐ ஒன்றரை மாத்திரை பெறும்.

    மெய்யெழுத்தை இணையாகப் பெற்றவரும் ஐ குறிலாகவும்

    மெய்யெழுத்தைப் தன்னிணையாகப் பெறாத ஐ நெடிலாகவும் கொள்க[ஒன்றரை மாத்திரை]

    நீண்ட நாள்கள் செய்த ஆய்வின் முடிவாக இதைக் கண்டுணா்ந்தேன்.

    இதுபோன்றே ஆய்தத்திலும் நுண்ணிய நுட்பம் இருக்க வேண்டும்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் அய்யா,ஆய்வின் ஆழம் அருமை ”மெய்யெழுத்தின் மேல் வரும் ஒரு புள்ளிக்கே தடுமாறிய ஓலைச்சுவடிக் காலத்தில் மூன்று புள்ளிகளை எப்படி வைத்திருப்பார்கள்?”... உங்களின் தமிழ் மொழியின் மீதுள்ள காதலும், திருக்குறளின் மீதானப் பற்றும், ஆய்விற்கான அகன்ற அறிவும் இத்தனை நூல்களை மேற்கோள் காட்டியிருப்பதன் மூலம் தமிழ் உலகம் அறியும் (காளிங்கர் உரை, திருக்குறள் உரைக்கொத்து- தருமபுரம் ஆதீன வெளியீடு, மு.வ., கலைஞர், சுஜாதா, சாலமன் பாப்பையா, புலியூர்க் கேசிகன்,சுஜாதா-திருக்குறள் புதிய உரை)

    பதிலளிநீக்கு
  11. ஒரு வாரமாக இணைய இணைப்பு சிக்கல் காரணமாக வலைப பக்கம் வரமுடியவில்லை. சிறப்பான ஆய்வு தெரியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன், வியக்க வைக்கும் தமிழார்வம் எங்களுக்கும் பயனளிப்பதாக உள்ளது

    பதிலளிநீக்கு
  12. அய்யா வணக்கம்.
    புலவர் கோபிநாத் அவர்கள் இக்கட்டுரை குறித்துக் கூறிப் பார்க்கச் சொல்லி இருந்தார். இப்பொழுதுதான் காணக்கிடைத்தது. சார்பெழுத்துக்களின் தொடர்ச்சியாக முப்பாற் புள்ளி என்னும் கட்டுரையைத் தொடர்ந்து நான் ஆய்தம் என்ற ஓர் பதிவினை இட்டுள்ளேன். அருள்முருகன் அய்யா, ஆய்வதாக இருந்தால் இப்பதிவினை நிச்சயம் இட்டிருக்க மாட்டேன். ஆனால் அவரது கட்டுரை நிச்சயம் மிகச்செறிவாக அமையும். என் வலையில் நீங்கள் கருத்திடாத பதிவுகளின் தரம் குறித்து ஐயப்படுகிறேன்.
    முன்பே இப்பதிவைக் கண்டிருந்தால் இவ்வளவு விரிந்த தேடலும், ஆய்வும் நிச்சயம் என் பதிவுக்குப் பேருதவியாய் இருந்திருக்கும்.
    ஆய்தம் குறித்த என் பதிவில் இந்தப் பிரச்சனையைக் கோடிட்டுக் காட்டி இருக்கிறேன்.
    கண்டிப்பாய் உங்களின் கருத்தெதிர் பார்க்கிறேன்.
    நன்றி!

    பதிலளிநீக்கு