இன்றைய தமிழில் பெண்கவிகள்

                                 (தமிழகத்து ஔவை முதல் ஈழத்து அவ்வை வரை)

கவிஞர் இளம்பிறை

கவிதை எழுதும் ஆண்பெண் இருவரையும் குறிக்க, 'கவிஞர்' என்னும் பொதுவான ஒரு சொல் இருக்கும் போது, 'பெண்கவி' என்று தனியாகக் குறிக்க வேண்டுமா?' என்று நினைக்கலாம். 'எல்லாமே ஆண்களுக்காக' என்றாகிப்போன உலகில், 'பெண்'எனும் அடையாளத்தை, தற்காலிகமாகச் சேர்த்தே எழுதவேண்டியுள்ளது. எல்லாம் பொது என்றாகும் ஒரு பொற்காலம் வரும் வரை, தற்காலிகமான இந்தத் தனிஅடையாளம் தவறல்ல 


கவிஞர் குட்டிரேவதி

நமது பழந்தமிழ் இலக்கியக் கருவூலமாம் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெண்புலவர்கள் 30 பேர். இவர்களில், அதிகமான(59)பாடல்களை எழுதியவர் ஔவையார் என்பதில் ஒன்றும் பெருமையில்லை,  ஔவையார் எழுதியவற்றிலும் அதிகமாக இடம்பெற்றது புறப்பொருளே என்பதுதான் வியப்பும் மகிழ்ச்சியும் ஊட்டுவதாகும்.அவர் எழுதிய புறநானூறு மட்டுமே 33! அவரே, அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே நிகழவிருந்த போரைத் தடுத்து நிறுத்துகின்ற அளவுக்கு சொல்வாக்கும், செல்வாக்கும் மிகுந்தவராய் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதே. அந்த அளவுக்கு வெளிப்படையான அரசியல் ஈடுபாடு கொண்டிருந்த பிற்காலப் பெண் 'புலவர்'கள் யாரையும் காணமுடியவில்லை.

       பக்தியிலும், காதலிலும் அழியாப்புகழ்பெற்ற பெண்கள் தமிழிலும் உண்டு. ஆயினும், அரசியலில் சனநாயகம் மலர்வதும், அரசியலில் பெண்கள் ஈடுபடுவதும் ஒன்றுக்கொன்று தொடர்பு --டையதாக இருப்பதால், இவை ஒன்றைஒன்று வளர்த்தெடுத்து இருபதாம் நூற்றாண்டில்தான் இரண்டுமே வளரமுடிந்தது.
       ஔவையாரும் சரி, அதற்குப்பின் வந்த பெண்புலவர்களும் சரிபெண்களுக்காகப் பாடியதில் முற்போக்குக் கருத்துக்கள் மிகவும் குறைவே. இன்னும் சொன்னால் – இருபத்தோராம் நூற்றாண்டுவரையிலும் - ஆண்புலவர்கள் பாடிய அளவுக்குக் கூட பெண்கள் பெண்ணுரிமைக் கருத்துகளைப் பாடிவிடவில்லை
 "தையல்சொல் கேளேல்" என்றவர் ஔவை! நல்லவேளையாக அந்தத் தையலின் அந்தச் சொல்லைமட்டும் கேளாமல், அதற்கு மாறாக "தையலை உயர்வு செய்" என்றவன் பாரதி!. ஆயினும், பல பத்து நூற்றாண்டாகப் படைக்கப்பட்டுவரும் இலக்கியங்களைப்   படைத்தவர்கள் பெரும்பாலும் ஆண்களே என்பதால், மனிதசமூகத்திற்குச் சொல்வதாக அமைந்த பொதுவான நியாயங்கள் (Common justice to common gender) கூட பெரும்பாலும் ஆண்களுக்கான நியாயங்களாகவே இருந்ததில் வியப்பில்லை இதற்கு வள்ளுவரும் விதிவிலக்கல்ல!

கவிஞர் சுகிர்தராணி
முக்கியமாக, உலகப்புகழ் பெற்ற குறளான-"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்" என்பதும், "இல்வாழ்க்கை" அதிகாரம் முழுவதுமே இப்படி-ஆண்சார்ந்ததாகவே-இருப்பதும் வள்ளுவரின் பிழையல்ல, காலத்தின் வாழ்க்கையை ஒட்டித்தானே பெரும்பாலான சிந்தனையும் இருக்கமுடியும்? ('காதற்பரத்தை, காமப்பரத்தை, இற்பரத்தை, சேரிப்பரத்தை' என வகை பிரித்து, 'இவை யெல்லாம் ஆடவர்க்குப் பெருமையே' என்றிருந்த பழங்காலத்திலேயே, அந்தக்காலத்தையும் மீறி, 'இருமனப்பெண்டிர்' தொடர்பை இகழ்வது போன்ற -இக்கட்டுரைத்தலைப்பை மீறிய- வேறுபல புதுமைகளே குறளாரின் பெருமை! -ஆகவே அவரை விட்டுவிடுவோம்)
எனவேதான்,பெண்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கத் தாமே எழுந்தனர். அதன்பிறகே உண்மையான பெண்ணுரிமை வலிமைபெற்றது என்பதில் ஆச்சரியமென்ன?
இந்த நூற்றாண்டுதந்த எழுச்சியில் பெண்ணுரிமையே பெருவெற்றி பெற்றிருப்பதாக நான் கருதுகிறேன். சரியான அளவிற்கு நடந்திருக்கிறதா எனில் அந்தக் குறைகளைத்தான் இன்றைய சமூகம் அனுபவிக்கிறது என்பேன்.

ஒருபெரும்பட்டியலே நீளும் அளவிற்கு பெண்களின் உரிமைக் குரல்கள் அரசியல்-சமூக-இலக்கியத் துறைகளில் உயர்ந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கவிஞர்-எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி

"நாண மொன்றும் அச்ச மொன்றும் 
நாய்க ளுக்கு வேண்டுமாம்
 ஞான நல்லறம் வீர சுதந்திரம் 
பேணு நற்குடிப் பெண்டிர் குணங்களாம்" என்ற பாரதியை நினைத்து நாம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்க, ஆண்டாள் பிரியதர்ஷினி
"நாணும் அச்சமும் நாய்கட்கும் வேண்டாம்" என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஊட்டுகிறார்!





"கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்" என்று காலகாலமாய் முழங்கிவரும் மூடக்கருத்தை முடமாக்கிப்போட்டு,"கல்லானால் ரோட்டுக்கு, புல்லானால் மாட்டுக்கு" என்று கவியரங்கில் முழங்கிய சீ.நா.அனுராதா(திருச்சி-பொறியியல் மாணவி-2002) அதைவிட ஆச்சரிய மூட்டுகிறார்! இவைதாம் இன்றைய பெண்களின் உண்மையான உரிமைக்குரல்!

"உலகெங்கும் பெண்கள் சுரண்டப்பட்டும், அடக்கப்பட்டும் வருகின்றார்கள். பிற்போக்குத் தனமான சமூகக் கட்டுப்பாடுகளும், அடிப்படை மதவாதங்களும் ஆண்மேலாதிக்கத்துடன் சேர்ந்து பெண்களுக்கே புத்திமதிகளை உதிர்த்து வருகின்றன "("ஊடறு"-உலகப் பெண் படைப்பாளிகளின் தொகுப்பு -முன்னுரை) என்றிதனைத் தெளிவாகப்புரிந்து, எழுந்து வரும் பெண்களின் அண்மைக்காலப் படைப்புகள் வெகு சிறப்பாக வெளிப்படுவதைப் பார்த்து மகிழ்வோரில் நானும் ஒருவன்.

 இன்றைய இந்தியாவில் பெண்களுக்கென்று33%இடஒதுக்கீடுபற்றிய பேச்சு தேசிய அளவில் நடைமுறைக்கு வரவேண்டியதும் முக்கியம், அதனை நடைமுறைப்படுத்திய தமிழகத்தின் பல உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பதுபோல-கணவன்மார்களின் பினாமிகளாகிவிடாமல் தாமே 'வையத்தலைமை ஏற்று' நடத்தப் பெண்களே முன்வரவேண்டியதும் முக்கியம்.

       உலகக் கொடுமைகளின் நுனிமுனைக் கொழுந்தாகக் கிடக்கும் பெண்களின் பணிகள் அனைத்தையும் இலக்கியத்திலும் உற்சாகப்படுத்தவேண்டியது அந்தப் படைப்பாளியின் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் மிக அவசியமாகும்என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 'மிக நீண்ட வரலாற்று இடைவெளிக்குப் பிறகு, பெண்கவிகள் தங்கள் மொழியை உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள்.' – (மாலதி மைத்ரி-தீராநதி ஆக-04)
'இது பெண்களின் கவிதைக் காலம், ஸ்திரமான கவிதைகளைப் புதிது புதிதாகப் படைக்க முயல்கிறார்கள்' -- யுகபாரதி (புத்தகம் பேசுது-பிப்-'2004) "எண்பதுகள், தொண்ணூறுகளின் கவிதைப் போக்கில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று பெண்களின் பங்களிப்பு. முன்னெப்போதையும் விட இந்தக் காலகட்டத்திலேயே பெண்கள் அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதத்தொடங்கினர்" - ராஜமார்த்தாண்டன் (புதுக்கவிதை வரலாறு-)
கவிஞர்-பாலபாரதி M:L.A

இந்த வகையில், தமிழ்க் கவிதை வரிசையில், பெண்கவிஞர்களில்
'எழுத்து' இதழிலிருந்தே எழுதிவரும் மூத்தகவிஞர் மீனாட்சி,
கவிதை-சிறுகதை-நாவல் என்று பரிணாமம்காட்டிவரும் திலகவதி,
ஐக்கூக் கவிதைகளில் சாதனைகள் படைத்திருக்கும் மித்ரா,
மாதர் சங்கத்திலிருந்து, மக்கள்தலைவராகியிருக்கும் கவிஞர் பாலபாரதிMLA,
நெருப்பில்எரிந்து, கவிதைகளால் நம்மை வேகவைத்துப்போன பாரதிகண்ணம்மா,

புதிய 'கணையாழி'யிலும் கதை-கவிதை படைத்து வரும் உமா மகேஸ்வரி,
'சுயம்பேசும் கிளி'யாக இலக்கிய வகையெல்லாம்  தொடரும் ஆண்டாள் பிரியதர்ஷிணி,
எளிய-கூர்மையான நடையில் எல்லா வடிவங்களிலும் எழுதிவரும் அ.வெண்ணிலா,
நகரத்திலிருந்த புதுக்கவிதையை கிராமத்திற்கு  நகர்த்திவந்த இளம்பிறை, ஆர்.நீலா,
'கருவறை'யிலேயே தன்வாசம் தனிவாசம் என உணர்த்திவரும் கனிமொழி,
அரசியல்-மதக் குழறுபடிகளை அஞ்சாது எழுதிவரும் புதியமாதவி,
சுற்றுச்சூழலைப் பற்றியும் கவலைபாடும் வைகைச் செல்வி,
கவிதையிலும் - இயக்கமாக ஈடுபட்டுவரும் மாலதி மைத்ரி,
கவிதையிலேயே உத்திகளைச் சோதனை செய்துவரும் க்ருஷாங்கினி,
நான் பறச்சிஎன்று சொல்வேன் என்று நம் முகத்தில் அறையும் சுகிர்தராணி,
ஆணாதிக்கர்களுக்கு அதிர்ச்சியூட்டிவரும் நம்பிக்கை நட்சத்திரம் குட்டிரேவதி,
அழுத்தமான செய்திகளையும் அனாயாசமாகக் கவிதையாக்கிவரும் ப.கல்பனா,
கவிதை-நாவல்-அரசியல்பொறுப்பென சகலத்திலும் புகுந்துவரும் சல்மா,
குழந்தைகளோடும் குடும்பம் தாண்டியும் 'செம்மலர்'களைப் படைத்துவரும் வர்த்தினி,
திரையிலும் பெண்ணால் 'வசீகரக்கவிதைகளைத் தரமுடியும் எனும் தாமரை,
ஆடவும் தெரியும், கவிதை பாடவும் தெரியும் எனும் திலகபாமா,
'இலைகளுக்கும் இசையுண்'டென்று, திரைப்பட முயற்சியிலிருக்கும் தேன்மொழி,
தந்தையின் இழப்பிலிருந்து கவிஞராகப் பரிணமித்துவரும் தமிழச்சி,
 --என்று நம்பிக்கையோடு தொடரும் இந்தப் பெரும்பட்டியலோடு,
புலம்பெயர் கவிஞர்களாக இருந்தும், தமிழ்க் கவிதையில் சாதனைகள் பலசெய்திருக்கும் அவ்வை, செல்வி,  சிவரமணி, ஆழியாள், ஜெயந்தி, பாமதி, துர்க்கா, பிரதீபா, சுமதிரூபன், அருட்கவிதா, அனார், எனத் தொடரும் --இந்தத் தமிழ்ப் பெண்கவிஞர் பெரும்படையில் மிகப் பெரும்பாலோர் இளைய கவிஞர்களே என்பது மிகவும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே ---
தன் தந்தையிடமிருந்தும், கூடப்பிறந்த சகோதரனிடமிருந்தும் ஒரு பருவத்தில் அந்நியப்பட நேரும் அவலத்தை, பிறகு 'அந்நியன்' ஒருவனிடத்தில் 'அன்னியோன்னிய'ப்படுவதும் ஆண்களுக்குப் புரியாத -ஆண்களால் புரிந்துகொள்ள முடியாத- கடினமான உறவுகள் என்பதை இதுவரை யாரும் பாடியதாகத்தெரியவில்லை.

மும்பைக்கவிஞர் புதிய மாதவி பாடுகிறார்:
"தந்தை மகள் உறவில் ஒரு  தர்ம வேலி போட்டாச்சு-
தாவணி போட்டபின்னே - சொந்த  தமையன் கூட வேறாச்சு!
அந்நியமாய் வந்தவனே -இன்று அர்த்தமுள்ள உறவாச்சு!...
 ஆசையாய் வளர்த்த பிள்ளை - அய்யோ அந்நியனாய் ஆயாச்சு!" -('சூரியப் பயணம்' கவிதைத் தொகுதி) புதியமாதவி, பொங்கிப் பிரவகித்துப் பாடிவரும்- அரசியல்,சமூக இழிவுகளைச் சாடிவரும்-கவிதைகளை நான் பெரிதும் வரவேற்கிறேன். 'ஹே! ராம்'-தலைப்புக்கவிதையில்தான் கவிஞரின் அரசியல் சத்தியஆவேசம் பொங்கி எழுந்து, விவாதித்து, வென்றபிறகு நிதானப்பட்டு, நியாயம்சொல்லி முடிகிறது!
கவிஞர் எழுத்தாளர் புதியமாதவி

 "ஹே! ராம்!- / உனது ஜனனம் ஏன்
 சாபக்கேடானது?" என்று கோபமாகத் தொடங்கி,
 "ஹே! ராம்!- / உன் ராம ராஜ்ஜியத்தில்
 மனித தர்மம் ஏன் / வாலி வதையானது?" என்று தர்க்கரீதியாகத் தொடர்ந்து,
 "எங்களுக்கு இனி / அவதார புருஷர்கள்
 தேவையில்லை" என்று செல்வது மதுரை முடிந்துவந்த வஞ்சி போலத் தோன்றுகிறது!
இந்தக்கவிதையோடு கவிஞரின் " ஹே!ராம்" (இரண்டாவது கவிதைத் தொகுப்பு) நிறைவு பெற்றிருந்தால்,முழுமையடைந்திருக்காது என்பதைப் புரிந்துகொண்டு, அடுத்து'அல்லாகவிதையை இணைத்திருப்பதும் மிகச்சரியான பார்வையே! 'நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன?' என்பது நம் கிராமத்துப் பழமொழி! வெறி பிடித்து சகமனிதனை வெட்டிக் கொல்லும் மனிதன், மனித உணர்வே இல்லாதவன் என்று ஆகிவிடும்போது 'அவன் அந்த மதத்துக்காரன்', 'இவன் இந்தமதத்துக்காரன்' என்பது எப்படிச்சரியாகும்? 'கோத்ரா'வும் தவறு, 'குஜராத்'தும் தவறுதானே? ஒருவெறிக்கு மற்றொரு வெறியே தீர்வாகுமெனில் நாம் வாழ்வது நாடாக அல்ல காடாகத்தானே இருக்க நேரிடும்? இவ்வாறு ஆண்களுக்கு நிகராக, (இப்படிச் சொல்வதுகூடத் தவறுதான், எனினும் நிகழ் கால ஒப்புமைக்காகச் சொல்கிறேன்) பெண்கவிகள் அரசியல்கவிதை பாடுவது வரவேற்புக்கு உரியது மட்டுமல்ல, அப்படி அவர்கள் அரசியல் பாடுவதுடன், இறங்கி ஈடுபடுவதும் எந்த அளவிற்கு வெற்றிபெறுகிறதோ அந்த அளவிற்குத்தான் சனநாயக அரசியல் சாத்தியமாகும் என்பதே சத்தியமாகும்!

கவிஞர் திலகபாமா
 காலகாலமாய் மறுக்கப்பட்ட கல்வி இன்று ஓரளவிற்குக் கிடைத்தாலும் அதனால் பெரிதாக 'அறிவு'ம் பெண்ணுரிமையும் வந்துவிடாது என்பது கல்வியாளர்க்குத் தெரிந்தென்ன? அர்சியல்? 'பேடிக்கல்வி பயின்றுழல் பித்தர்கள்' என்று பாரதி சொன்னதையே இன்றும் சொல்லி வருந்துகிறார் பொன்மணி.'சூடுதணிக்காத நிழல்', 'கானல் நீர்', 'பசிக்கு உதவாத பொற்சோறு' என்று அவர்கூறுவது முற்றிலும்பொருத்தம்தானே?('பொன்மணிவைரமுத்துக் கவிதைகள்')

ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே ---
சமூகத்தால் பார்க்கப் படும் சாதாரணப்பார்வையே மாறிவிடுவதுதான் இன்றைய எதார்த்தமாய்(?) இருக்கிறது. பெண்களை ஆண்கள் இழிவு செய்வது ஒருபக்கம் இருக்கட்டும், முன்னேறிவரும் பெண்களை, பெண்களே கேலி செய்வதில் 'ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்' என்பதுதான் கொடுமையிலும் பெருங்கொடுமை! ஆணாதிக்க சிந்தையின் விளைவு, பெண்களையும் அப்படிப் பார்க்க/பேசப் பழக்கிவிட்டது என்பதன்றி வேறென்ன சொல்ல?
"நேற்று ஒருவன் பாரதியைக் காதலித்தான், / இன்று நான் காதலிக்கிறேன்.
அவனுக்குப் பெயர் பாரதிதாசன், / தாசனுக்குப் பெண்பால் எனில்
தமிழே என்பால் கல்லெறியும்" - எனும் வரிகள், அப்படிப் பட்ட 'பார்வைக்கோளாறு'களுக்கு எதிரான, நியாயமான கோபக்காரர் வைகைச் செல்வி என்பதைத் தெரிவித்துவிடுகின்றன.
"கருவில் பெண்ணை அழிப்போர்க்குக் / காட்டை அழித்தல் பெரிதாமோ? என்பதும்,
"ரயில்பெட்டி எரித்து / சவப்பெட்டி செய்யலாமோ?" --என்பதும் முத்தாய்ப்பான வரிகள்.

ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே ---
அவள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளப் பெரும்பாலும் வாய்ப்புத் தரப்படுவதே இல்லை.
'அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப' எனும் தொல்காப்பியத்திலிருந்து,
'பொட்டச்சியா, லட்சணமா, அடக்க ஒடுக்கமா இரு' எனும் வழக்குபதேசம் வரை அவளை ஒடுக்கி வைக்கும் உபாயங்கள்தான் எத்தனை எத்தனை!'என்னை வெளிப்படுத்திக்கொள்ள இதைவிட எளிய வழி தெரியாததால், கவிதை என்ற வடிவத்தைத் தேர்ந்தெடுத்தேன்' என்று கூறும் கனிமொழி, 'சட்டாம்பிள்ளையாய் அம்மா / சிறைக் காவலராய் அப்பா
அறிவுச்சலவைக்குப் படிப்பு / கைதட்டிச்சிரித்து அடக்கி வைக்க சுற்றம்
சிலுவையின் ஆணி தகர்த்து இறங்கிவந்தால் / கையில் தாலிக் கயிற்றோடு கணவன்
 உன் கருவறைக்குள் மற்றுமொரு அடிமை' - என்று எழுதும்போது, வாயதிறக்கவிடாத சமூகத்தில் 'வாராது போல்வந்த' வாய்ப்பான இலக்கியத்தை வாழ்த்தத்தானே வேண்டும்?

தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் புயலாய் அடித்தெழுந்த 'வானம்பாடி'களை அடுத்து ('75க்குப்பின்), எழுதவந்த பெண்கவிஞர்களில் ரோகிணி, தேவமகள்,மாலதி ஹரீந்திரன், கி.விஜலட்சுமி ஆகியோர் குறிப்பிடத்தக்க கவிஞர்கள்.இதிலும், தேவமகள் எழுதிய 'முரண்'கவனம்பெற்ற தொகுப்பு.
 'அமுதசுரபியின்றி / அலைந்து திரியும் மணிமேகலைகள்
 சாபம் இல்லாமல் / கல்லாகும் அகலிகைகள்' எனும் வரிகள் குறிப்பிடத்தக்கவை.
பின்வந்த பெண்கவிகளில், சே.பிருந்தா, ஆனந்தி, தேன்மொழியின் அழகியல் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை.

"நடுத்தர வர்க்கத்தைச்சேர்ந்த மனிதனுக்குக் காதல், வேலைவாய்ப்பு, வறுமை, வரதட்சணை, விலைவாசி,சம்பள உயர்வு என்று அவனுக்கு நேரும் உணர்வனுபவங்களை இன்றைய கவிஞர்கள் வெளியிடு கின்றனர்"-என்று கவிஞரும் விமர்சகருமான பாலா('புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை') சொன்னதற் கேற்ப, பெண்கவிகளும் தாம் உணர்ந்ததையே பெரும்பாலும் எழுதிவருகின்றனர்

காம்பிற்குத்தான் / பூவின் சுமை தெரியும்
கவிஞனுக்குத்தான் / கவிதையைப்பற்றித் தெரியும்
என்னைப்பற்றி உனக்குத்தான் தெரியும் / எஸ்.காஞ்சனா(தினமலர்- வாரமலர்)போன்ற ஜனரஞ்சக இதழ்களில் ஏராளமான புதுக்கவிதைகள் வருவதையும், அவற்றில் சிலவேனும் பெண்கவிகளால் எழுதப்படுவதையும் - அவற்றில் பெரும்பாலானவை காதல் கவிதைகளாக இருப்பதையும் பார்க்கமுடிகிறது.
காதல்! / அது தேகங்களை நினைப்பதன்று தேகங்களை மறப்பது -சுதா முருகேசன் (வானத்தின் கீழே ஒரு வண்ண நிலா) போன்ற அரிதான காதல் கவிதைகளும் உண்டு!

ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே ---
தாயின் பார்வையும் தந்தையின் பார்வையும்கூடத் தடுமாறித்தான் போய்விடுகின்றன.
வீட்டில்  : "தந்தை, சகோதரன், கணவன், போன்ற உறவுப் பாவனைகளில் திணிக்கப்படும் ஆணாதிக்கத்தில் நான் முற்றிலுமாகச் சிதைந்துவிடாமலிருக்க எழுத்து உதவிசெய்ய, என் மீதான அடக்கு முறைகளையும், உருக்குலைப்புகளையும் யாரோவாகி வேடிக்கைபார்த்து எழுதுகையில் இந்த வாழ்வைத் தாங்கும் திடம்பெறுகிறேனென நம்புகிறேன்." -உமா மகேஸ்வரி --('வெறும் பொழுது'-கவிஞரின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பு -2002-பின்னுரை) இதிலிருக்கும் 'உறவுப் பாவனை' என்னும் சொல்தொடரைக் கொஞ்சம் உணர்ந்து பாருங்கள்!  எத்தனை மனஅழுத்தம் அந்தச்சொல்லில் மறைந்திருக்கின்றது என்பதை உணர்வீர்கள்!
'தாவணியின் தலைப்பை / விளையாட்டாய் முறுக்கும்போதும்,
கோவிலுக்குப் போகும்போது / கூடுதலாய் அலங்கரிக்கும்போதும்,
தனியாக அமர்ந்து / பாடங்களை மனனம் செய்யும்போதும்,
அவனை நினைத்தே / அவ்வளவும் செய்வதாய்
அடித்துவிட்ட தந்தையே! / நீ அடித்தபிறகுதானப்பா
அவனை நினைத்தேன்' எனும் -ஆர். நீலா வின்(10.11.02-ஆ.விகடன்) கவிதைக்குள்ளும்,
'குமரியாய் நான் / உன்னைச்சுற்றிய நாட்களது
எல்லா அம்மாக்களையும் போல் நீயும் / என் 16 வயதை நம்ப மறுத்து
"யாரையடி காதலிக்கிறாய்? / யாரடி அவன்?" .. ..
"மாப்பிள்ளை கேட்குதோ உனக்கு?" / நாக்கூசாமல் நீ கேட்க
நெஞ்சில் இடிவிழுந்து நொறுங்க என்னிதயம்..-சாந்தி ரமேஷ் (ஜெர்மனி) கவிதைக்குள்ளும்
'பெற்றோர்மீது இந்தச்சமூகம் சுமத்தியுள்ள கண்மூடி வழக்கங்கள், மண்மூடிப்போகக் கடவது' எனும் ஒருயுகத்தின் சாபம்-பெற்றோர்மீதான பாசத்தையும் மீறி நிற்பதைப்-பார்க்கிறீர்கள்தானே?

ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே ---
வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமையாகக் கருதப்படுகிறாள் என்பதும், இன்றைய சமூகத்தின் முரண்பாடுகளில் முக்கியமானது.
உண்மையில் ஆண்களைப் போலவே (இரண்டு கைகளோடும் இரண்டு கால்களோடும் ஒரே ஒரு வயிற்றோடும்) பிறக்கும் பெண்ணுக்கு எப்படி அவளே சுமையாகிப் போகிறாள்? இந்தியாவில் - தமிழ் நாட்டில், பெண்ணாகவும் சற்றே கருப்பாகவும் பிறந்துவிட்ட பெண் குடும்பத்திற்கு மட்டுமல்ல சமூகத்திற்கே சுமையாகிப்போகிறாள்
 இதையெல்லாம் சிந்திக்கவைப்பவை, இரண்டுபெண்கவிகள் எழுதிய, இரண்டு ஐக்கூக்கள்:

ஊரைக்கூட்டிக் 
கொள்ளையடித்தனர்
கல்யாணம் - இளம்பிறை

ஆணாய்ப் பிறப்பது
இயற்கை தரும்
லாட்டரிப்பரிசு -நிர்மலா சுரேஷ் அதுவும் மேல்சாதி ஆணாய்ப் பிறப்பது பம்பர் பரிசு! என்பதை அவர் சொல்லவில்லை நாமாகப் புரிந்துகொள்ள வேண்டியதுதான்

"கிராமத்துப்பெண்களில் 90%பேர் கூலித்தொழிலாளிகளாக இருக்கிறார்கள். மற்ற மேல்தட்டுப் பெண்களைப்போல மாத விலக்காகும் நாள்களில்கூட அவர்கள் தனியே கொல்லைபுறத்தில் உட்கார்ந்து புத்தகம் படிக்க முடியாது" என்று கூறும் கவிஞர் இளம்பிறை, "ஆச்சாரம் பூச்சாரம் எல்லாம் அங்கு செல்லுபடியாகாது, ஏனெனில் தன் திருமணத்திற்குக் குறைந்த பட்சத் தேவையான தோடு, மூக்குத்தி, கொலுசு முதலியவற்றை கிராமத்துப்பெண் தானே சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்பதால். பயிர்கள்,நீர்பாய்ந்து விளைவது மட்டுமில்லை கூலித்தொழிலாளியின் வியர்வை ரத்தத்திலும் விளைவதை அவர்கள் மட்டுமே அறிவார்கள்" என்று தெளிவாக( கணையாழி - நேர்காணலில்) கூறியிருப்பதோடு, அந்த அவஸ்தைகளைத் தனது "அறுவடைக்காலம்" கவிதையில் அற்புதமாகச் சொல்லியுமிருக்கிறார்.

களத்துல கல்லுடைத்து / கச்சிதமா நெல்லுதிர்த்து/ காத்துவரும் நேரம்பார்த்து
தூத்தி முடிக்குமுன்னே/ கண்ணுல விழுந்த தூச / நின்னெடுக்க நேரமேது
அட - / ஒன்னுக்கிருக்கக் கூட/ ஒழியுதில்ல நேரமய்யா! - இளம்பிறை ('மௌனக்கூடு- இதையும் உள்ளிட்ட மொத்த்த் தொகுப்பாக “நீ எழுத மறுக்கும் எனதழகு“)

ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே ---
வேலை பார்க்கும் இடங்களில், பெண்கள் படும்பாடு- ஆண்களுக்கில்லாத பெரும்பாடு-('அதிகாரிகள் என்னும் ஆண்மாமியார்கள்'-எனும் வைரமுத்துவின் புகழ்பெற்ற கவிதையிற்போல) பெண்கவிகளின் பல்வேறு கவிதைகளில் அழுத்தமாகவே வந்திருக்கிறது. மேற்கண்ட கவிதை கிராமத்து நிலைமை என்றால், நகரத்தில் வேலைக்குப் போகும் பெண்களின் சிரமங்கள்- பெண் என்பதாலேயே படும் சிரமங்கள்- கிராமத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல 
அவசரமாய்/ அலுவலகக் கழிப்பறையில் நுழைந்து/ பீச்சிவிடப்படும்
பாலில் தெறிக்கிறது/ பசியைத் தின்றலறும்/ குழந்தையின் அழுகுரல் -அ.வெண்ணிலா

பகலில் வேறொரு குழந்தையின் / அம்மாவைப் பிடித்துக்கொண்டு அழுததாக
காப்பகத்தின் ஆயா சொன்னாள்..காலையில் போன நானா
மாலையில் வீடு திரும்புகிறேன்? -ப.கல்பனா ('பார்வையிலிருந்து சொல்லுக்கு')

பட்ஜெட் பற்றாக்குறைக்கு/ பொன்னகையோடு/ புன்னகையும் அடகாய்
மீட்க முடியாமல் மூழ்கியபடி - திலகபாமா (சூரியனுக்குக் கிழக்கே) எனும் கவிதை, வேலைக்குப் போனாலும் போகாவிட்டாலும் வீட்டுப் பொருளாதார நிலைமை பெரும்பாலும் பெண்களைச்சார்ந்தே இருக்கிறது என்பதைப் படம்பிடிப்பதாய் இருக்கிறது. அப்படி இருந்தும், பெண் என்பவள் வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமையானவளாகவும், பருவத்திற்கேற்ப ஆண் ஒருவனைச் சார்ந்தே எப்போதும் இருக்க வேண்டியவளாகவும் சித்திரிக்கப் படுவதை இன்றைய பெண்கவிகள் விடுவதாயில்லை! கண்ணுக்குத்தெரியாத உழைப்பை (unseen toil) ஏற்க மறுப்பவர்களிடம், 'வீட்டில் -சும்மா-இருக்கிறார்' ('house wife') என்று கூறப்படுவதை இனியும் அவர்கள் ஏற்பதாயில்லை!

சமைப்பதும் துவைப்பதும்/ அழுகிற குழந்தையை/ அள்ளியெடுப்பதும்
குடும்ப பாரம் தூக்கிச்சுமப்பதும்/ எனக்கு மட்டும் உரியதென்கிறாய்!
புரிகிறது - / நீ ஆணென்பதும்/ நான் பெண்ணென்பதும்
அதனாலென்ன மனிதர்கள்தானே/ என்
ற பதிலை
உன்னிடம் நான்/ கேட்டுப் பெறவில்லை என்பதும் --வர்த்தினி (செம்மலர்-ஏப்ரல்-2000)
இப்படி இவர்கள் வீட்டிலும் வேலைபார்க்கிறார்கள் என்பதை அங்கீகரிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். இவள் உழைப்பில் உண்டு, சுகித்து, மகிழ்ச்சியோடிருக்கும் ஆண்கள், தம்மோடு அவளை, அதாவது -தாயை, சகோதரியை, மனைவியை, மகளை- ஒரு 'உயிரி'யாக ஏற்றுக் கொள்ளவும் தயங்குவதைக் கேள்விகேட்கும் கவிதைகளைப் பாருங்கள்:

தகப்பன் பிள்ளைகளிடையே/ கிரிக்கெட்டும் கம்ப்யூட்டரும்
பேசப்பட்டு,பேசப்பட்டுக்கொண்டேயிருக்க/ அடுப்பங்கரையில் அனல் வீசும்
எண்ணையருகே நான்! /  எண்ணை அனல் சுடவில்லை/ என்னை அகற்றல் சுடுகிறது!  
-வர்ஷா(அவள் விகடன்)

நானோ சமைத்தபின்/ தனியிடம் செல்வேன்/ அவர்களெதிரே டி.வி.யில்
விளம்பரத்திற்காய் stay free யுடன்/ நடக்கும் சிரிக்கும் / பெண் -சுகந்தி சுப்ரமணியன்

ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே ---
காலையில் எழுந்ததுமுதல், இரவு படுக்கும் வரை காத்திருக்கும் வீட்டுவேலைகள் பட்டியலோ மிகப்பெரிது. அவள் ஒருநாள் தன் கணவனைப் போல - ஒரு ஆணாக - இருந்தால்...? ஆகா கற்பனையே சுகமாக இருக்கிறதே என்கிறார்..இன்றைய திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கவிஞருமான  கே.பாலபாரதி!
காலையில் கண்விழித்து/ தெருமுனைக் கடைசென்று/ தேநீர் அருந்தி
ஏழுமணிச் செய்திகேட்டு/ எல்லா நாளிதழும் வாசித்து/ அவசரமில்லாமல் குளித்து
அலுவலகம் செல்ல -(மகளிர் சிந்தனை-மாத இதழ்-ஜூன்'98)

ஆண்-பெண்ணிடையே ஆரோக்கியமான நட்பு நிலவுவது பற்றி ' நட்புக்காலம்' என்றொரு தனிக்கவிதை நூலே வெளியிட்டார் கவிஞர் அறிவுமதி. இது பற்றிப் பெண்கவிகளும் எழுதியிருக்கிறார்கள்.

நானும் என் நண்பர்களும்/ இறைவனிடம் வேண்டிக்கொள்வதெல்லாம்
எங்கள் ஆயுள் தொடர வேண்டும் என்பதையல்ல, / ஆயுள் உள்ளவரை
எங்கள் நட்பு தொடர வேண்டும் என்பதைத்தான்- என்கிறார், கிருத்திகாதேவி (+2 மாணவி)

ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே ---
ஆரோக்கியமான நட்பாக இல்லாமல் பெண்களை, 'சும்மா' கிண்டல்-கேலி என்னும் பெயரில் (eve-tease) செய்துவரும் சீரழிவையும்  கவிதையாக்கியிருக்கிறார்கள்!

படிதாண்டி குளம் சுற்றி/ உனைத்தரிசிக்க வரும் உன்மகளை
உன்மகனே கேலிசெய்கிறான்/ அழகி மீனாட்சி!
உன்காலத்தில்/ எப்படி நீ உலாப்போனாய்? -இரா.மீனாட்சி ('இரா.மீனாட்சி கவிதைகள்')

நட்பின் வழிப்பட்ட காதலைப்பற்றி எழுதாத கவிஞர் இல்லை (காதலைப் பற்றி எழுதாவிட்டால் அவர் கவிஞரே இல்லை என்கிறீர்களா? அதுவும் சரிதான்!) அதுவும் பெண்கவிஞர்களின் காதல், மிகுந்த நாகரிகமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது! தன் மனைவியைப் பற்றி ஓர் ஆண் கவிஞர் எழுதுவாரா? என்று யோசித்தால், பெரும்பாலும் எதிர்மறை பதிலே கிடைக்கும். ஆனால், தன் அன்புக்காதலனைப் பற்றியும், அவனே அருமைக் கணவனாக வந்தது பற்றியும் எழுதப்பட்ட கவிதைகள் ஏராளம்!

அ.வெண்ணிலா, தனது காதல் கடிதங்களைத் தொகுத்து- அதே காதலன் கணவனான பிறகு- புத்தகமாகவே வெளியிட்டிருக்கிறார்! அவரும் கவிஞர் மு.முருகேஷ¤ம்- திருமணத்தன்று ஒரு கவிதைத்தொகுப்பை வெளியிட்டனர்( 'என் மனசை உன் தூரிகை தொட்டு')
அ.வெண்ணிலா-மு.முருகேஷ்
'கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்கது இல்' என்ற பழந்தமிழ்க் குரலுக்கும் (குறள்:1137) மாறாக, ஆனால் மனித இயல்புக்கு ஏற்பவே தனது காதல் மிகுதியைப்பற்றி அழகாக வெளிப்படுத்தியுள்ளனர் தமிழ்ப்பெண்கவிகள் பலர்!

ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே ---
பெறும் மிகப்பெரிய பெருமை, தாய்மைதான் என்று சொல்வது எல்லார்க்கும் -குறிப்பாக ஆண்களுக்கு -எளிதுதான். பெற்றுப் பார்த்தால்தானே தெரியும் அந்தப் பேற்று வலி! அதை வர்ணிக்க வார்த்தை ஏது? ஆயினும் தன் உயிர்க் குழந்தையின் முகம் பார்த்தவுடன் அந்த வலி யெல்லாம் போய்விடுகிறதாம் பெண்களுக்கு - சொல்கிறார்கள்! ஆனால் அந்த நேரத்திலும் "பிறந்தது பெண் தானா ப்ச்சு" எனும் உதட்டுப்பிதுக்கம் தரும் அவமானம், பிரசவ வலியைவிடவும் பெரிது என்கிறார் கவிஞர்:
விறைத்த இரும்பு மேஜை அச்சுறுத்தும்/ வலி வந்தும் தலை தெரியல.. .. ...
முகம்காணத் தவிப்பாகி/ குருதி கழுவி நீட்டியதும்/ முதலில் ஆண்குறி கண்டு
அப்பாடா என்றபோது/ உணர்ந்தேன் -/ மகிழ்வின் எல்லைவிட்டு
மறுகணம் ஏனோ/ குறுகி அவமானமாய் -உமா மகேஸ்வரி (வெறும் பொழுது பக்:69)

அந்த நேரத்திய உணர்வுகளை, வேறொரு கோணத்திலும் நினைத்துப் பார்த்து குமைந்துபோகிறார் கவிஞர்:(இவையெல்லாம் ஆண்கள் உணர முடியாதது, ஆனால் தன் அவள் இப்படி நினைக்கக் கூடும் என்று ஒவ்வொரு ஆடவனும் உணர்ந்துவிட்டால் இந்த உலகம் இனிதாவது எளிது!). கவிதையைப் பாருங்கள்:

அம்மாவின் எதிரில்கூட/ ஆடைமாற்றிக்கொள்ளக்
கூசியிருக்கிறேன்....
..... பேற்றின் வலியொடு/ அலறும் குரலில்
இணைந்தே ஒலிக்கிறது/ என் நிர்வாணத்திற்கான/ அழுகையும் -அ.வெண்ணிலா ('ஆதியில் சொற்கள் இருந்தன'-2002)

இதேபோலவே,
'ரத்தப் பெருக்கோடும் உறங்க வேண்டியிருக்கு' ((நீரிலலையும் முகம்')எனும் இவரது கவிதையும் எண்ணத்தொலையாத சங்கடங்களை அந்தக்கவிதையைப் படித்த ஆண்களுக்குள் நிகழ்த்தி, தனது தாயை, மனைவியை, சகோதரியை, மகளை அந்த நேரங்களில் உள்ளத்தாலும் உடலாலும் அரவணைத்துக்கொள்ள வேண்டிய மனநிலைக்கு, உறுத்துவது நிச்சயம்.

ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே ---
தன் எதிர்பார்ப்பு உள்ளத்தளவிலோ உடலளவிலோ நிறைவேறாதபோது, அடங்காத புலிகளாகி, அந்த உணர்வுகளையும் கொட்டித்தீர்த்துவிடும் பெண்கவிகள், அண்மைக்காலமாகத் தமிழ்க் கவிதை உலகில் புயல்கிளப்பி வருவதுதான் - இதுவரை தமிழில் கேட்டிராத புதுக்குரல்!

விசாரணைகள்
குற்றப் பிரேரணைகள்
என்மீதான உன்
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
எல்லாமும் விவாதிக்க
படுக்கையறை - உன்
பாராளுமன்றமும் அல்ல! -அனார்(இலங்கை)

முடிவுகள் எடுத்து விலகிய போதும்
மீண்டும் மீண்டும் பிணமாய்ப் போனேன்
 .. .. .. .. .. .. .. ..
திருப்பமுடியாதபடி
கழுத்தில் கனம் -தான்யா(கனடா)

எஞ்சியிருப்பது
அடிமனசில் கனன்றெரியும் தழலும்
நீ இல்லாத் சமயங்களில்
குற்றவுணர்வின்றி
கட்டில்மேல் நான் கழற்றிவைக்கும்
நீகட்டிய தாலியும்தான் =வத்ஸலா

ஒரு பெண், அவள் பெண்என்பதாலேயே ---
வாழ்க்கையின் பிடிப்பே அவன்தான் என்னும் உணர்வோடு வாழ்ந்துவரும் பெண், எல்லா இழிவுகளிலும் கூடப் பொங்காமல் அடங்கியிருப்பவள், வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத வேதனையை அடையும் இடமாக அவளது 'தாம்பத்தியம்' இருந்து விடுமானால் ஏமாற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுவதை நமது பெண்கவிகள் கவிதை யாக்கியிருக்கும் முறை, ஆற்றொணாத் துன்பத்தின் அளவுகோல்களாய் அமைந்துவிடுகின்றன...

குருதியாய்க் கொப்பளிக்கிறேன்
முரண்பாடுகளே மிஞ்சிக்கிடக்கின்றன
எவனோ என்வாழ்க்கைக்கு
எழுதிவைத்த விடைகள் பொருந்தாமல்
கேள்விகளை நெருப்பாய் உமிழ்கிறேன்.. ..
கைகளில் கயிறில்லை
என்றாலும் நான் அடிமையாய் இருந்தேன் -பாமதி சோமசேகரம்(ஆஸ்திரேலியா)

என் கருவறையை நிறைப்பது
உன் குறியல்ல
என்ற புரிதலோடு வா!
ஒன்றாய்க் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்,
நான் உன் வீரியத்தோடும் -ஆழியாள்-(ஆஸ்திரேலியா-'உரத்துப் பேசு...')

யாரேனும் ஒருவர்
கொலையாளியாகும் சாத்தியங்களுடன்
ஒன்றாக உறங்குகிறோம்.. .. .. ..
உன்னிடமிருந்து
கலங்கலானதே எனினும்,
சிறிது அன்பைப் பெற.. .. ..
எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி -சல்மா (ஒரு மாலையும் இன்னொரு மாலையும்)

உடலாலும் உள்ளத்தாலும் சோர்ந்துபோனாலும் கூட, தொடர்ந்து வாழும் நம்பிக்கையை இழக்காத பெண்மையின் வீறு, அரிதாகவே ஆயினும் அழுத்தமாக வெளிப்படுவதையும் பெண்கவிகள் சிலரிடம் காணமுடிவது பெருமையளிப்பதாகவே உள்ளது!

அக்னிப்பிரவேசம்
என் சத்தியத்தை
நிரூபிக்க அல்ல,
நீ தொட்ட
கறைகளைக் கழுவ =கனிமொழி

என்னிடம் வந்தது
எனக்கானதே என்ற நம்பிக்கையில்
இழந்துபோன என் சுயங்களுக்காகவும்
தொலைந்ததுபோன என் சுகங்களுக்காகவும்
இப்போ நான் சிந்தும் கண்ணீர்
திரும்பவும் என்னிடம் கேள்வி கேட்கிறது -சந்திரா ரவீந்திரன்(ஜெர்மனி)

அழகியல், நிகழ்ச்சி-மறுஆக்கம், புதுப்புனைவுகள் என எத்தனை கோணங்களில் பெண்கவிகள் எழுதி வந்தாலும் இன்னும் அரசியலில் ஈடுபடுவது சிக்கலாக இருப்பது போலவே, பெண்கவிகள் அரசியலைப் புரிந்து கொண்டு எழுதுவதும், அரசியலைப் புரிந்துகொள்ள எழுதுவதும் தமிழ் நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளது.

சந்திரனில் வீடு!
சாதனை நாளில்கூட
பாட்டாளி மக்களுக்குக்
கொட்டாங்கச்சியில் காப்பி -மன்னைரத்திகா (தொகுப்பு: கோவை 'மகாகவியரங்கம்-2001')

போன்ற சமூகம் சார்ந்த கவிதைகளை, அறியப்பட்ட பெண்கவிகளைத் தவிர புதியவர்களிடம் காண்பது அரிதாகவே உள்ளது.அதே நேரத்தில், புதிதாக அறிமுகமாகும் ஆண்கவிகள் எடுத்த எடுப்பில் ஒன்று காதல் கவிதை எழுதுகிறார்கள், அதற்கடுத்து சமூகக் கோபத்தை வெளிப்படுத்தும் கவிதைகளையே அதிகமாக எழுதுகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

பெண்ணுரிமை இயக்கம் அரசியலை அல்லாமல் தனியே வளர்வது முடியாது எனும்போது, அதில் பெண்கவிகள் இன்னும் ஈடுபடுவது அவசியமும், அவசரமுமான தேவையாகும். அரசியல் பொருளாதாரக் காரணங்களையன்றி பெண்விடுதலை ஏது? இந்த வகையில் புலம்பெயர் பெண்கவிகளின் பங்களிப்பே கணிசமாக உள்ளது

போராட வந்தவள் மனைவியாய்
சமயலறையில் அடைபட்டிருக்கிறாள் -அவ்வை(இலங்கை)

கற்பு பற்றியும்
மழை பெய்யெனப்பெய்வது பற்றியும் கதைக்க
அவர்கள் எப்போதும்
எனது உடலையே நோக்குவர் -சங்கரி.
என்னும் வரிகளில் பெண்ணுரிமைக்குள் அரசியல் இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சங்கரி(சித்திரலேக மௌனகுரு)
ஊர்வசி-அவ்வை--பாலரஞ்சனி (இலங்கை)
மைத்ரேயி-தம்பா-அர்ச்சனா-(நோர்வே)
கௌரி-துர்க்கா-பிரதீபா-தான்யா-சுமதி ரூபன்-(கனடா)
நிருபா-பாமினி-மல்லிகா-றஞ்சனி-சாந்தி-உமா-(ஜெர்மனி)
ஜெயந்தி-(பிரான்சு)
ஆழியாள்-பாமதி-(ஆஸ்திரேலியா)
சந்திரா-(இங்கிலாந்து)
நளாயினி(சுவிஸ்)முதலான புலம்பெயர் தமிழ்ப்பெண்கவிகள் தத்தம் அரசியல் நிலைகளிலிருந்து, அருமையாக எழுதிவருவதைத் தனியாகவே எழுதலாம்.(இக்கட்டுரை அதற்கு இடம் தராது நிறைய விடுபடுதல் நிகழ்ந்துவிடும்) எனினும் மாதிரிக்கு மூன்று மட்டும்:

ஒரு மத குரு
அல்லது முக்காடணிந்த ஒரு மாது
ஒரு தாடிப் பிச்சைக்காரன்
இப்படி இன்னும் வேறு யாராவது
என் வீட்டு வாசலில்
கதவைத் தட்டலாம் -ஊர்வசி

 முகம் மறுக்கப் பட்டவர்கள்
ஆஸ்பத்திரி சவச்சாலையில்
அடையாளம் காணப்படாதவர்கள்,
உற்றாரால் பெற்ற தாயாரால்
அடையாளம் கண்டபின்னும்,
காட்டிக்கொள்ளப் படாதவர்கள்!
இதனால் இவர்கள்
முகமிருந்தும் மறுக்கப்பட்டவர்கள்! -மைத்ரேயி

 உனது நண்பன் சொன்னான்,
மீசை அரும்பாத இந்த வயதில்
நாட்டுப் பற்று வந்ததா உனக்கு?
அப்படியானால் கடமைகள் இருக்கும்
வீரனாய் வீடு திரும்பு! -அவ்வை – {மூன்று கவிதைகளும்"மரணத்துள் வாழ்வோம்"-1985}

இவர்களில் மைத்ரேயி, அவ்வை இருவரும் வயதில் இளையவர்கள் என்பதும் கருதத்தக்கது என்கிறார் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராக முன்னுரை தந்துள்ள சேரன்.

அதற்காகத் தமிழகத்தில், அரசியல் கவிதை எதுவுமே பெண்களால் எழுதப்படவில்லை என்றும் கூறிவிட இயலாது.

மறைமுக அரங்கம்:
காலம்: 24மணி நேரமும்
அரங்கம்: உங்கள் இல்லம், பொது இடங்கள்
வேலைபார்க்கும் இடம்
நீங்கள் இருக்கும் சூழல்
நாடகம்: உடல் அளவிலோ மன அளவிலோ
நீங்கள் வன்முறையைச்சந்திக்கும் போது
காட்சி1:
உங்கள் வட்டார வழக்கில் பேசிக்கொண்டோ
அல்லது பேசாமலோ அல்லது நீங்கள்
அழுதுகொண்டிருந்தாலும் கையை
சாதாரனமாக நீட்டி
தொடைகளுக்கு மத்தியில் வைத்து
வலுக்கொண்டமட்டும் அவன்
விதைகளைப் பிடித்து இழுங்கள்
காட்சி2:
உங்கள் காலடியில் மல்லாந்து துடிக்க
திரை விழுகிறது. -மாலதி மைத்ரி(சங்கராபரணி-2001)

கவிதையில் அரசியல் நிறைந்த பெண்ணுரிமைப் போருக்கு பெண்களைத்தூண்டும் உள்ளடக்கம் அறைந்து சொல்லப்பட்டிருக்கிறது.

உரத்தகுரலில் பேசக்கூடிய அரசியல், ஐக்கூவில் வரமுடியாது என்று முதலில் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், தமிழில் ஐக்கூ அடைந்திருக்கும் இன்றைய வெற்றிக்கு அதன் சமூக-விமர்சனப் போக்குத்தான் காரணம் என்பதையும் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டும் வருகிறார்கள்.

அடிபட அடிபட
அதிரும் பறை
தலைமுறைக் கோபம் -மித்ரா எனும் ஐக்கூக் கவிதை அப்படியொரு நல்ல அரசியல் கவிதை.

கயிறு திரிப்பவன் /
பறை அடிப்பவன்
தீய்ந்த மரக்கிளையாய் நிற்பவன்
நிமிர்ந்தால் -
தூக்குக் கயிறும் திரிப்பான்,
சாப்பறையும் அடிப்பான். -அரங்க மல்லிகா. என்பன போன்ற, பெண் எனும் வட்டத்தைத் தாண்டி எழுதிய சத்திய ஆவேசக்கவிதைகள் இன்னும் அதிகம் வேண்டும்.

யுகக் கொடுமையிலிருந்து வந்து, இப்போதாவது எழுதுகிறார்களே என்பதும் ஆறுதலாக உள்ளது. ஆண்கவிஞர் பலரையும் போலவே, சொற்புனை நல்ததிலும், கற்பனை வளத்திலும் இன்னும் முன்னேற வேண்டியிருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த பெண்கவிகள் தமிழுக்குக் கிடைத்திருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.

புராண-புனைகதை, மற்றும் இன்றைய ஊடகங்களால் பெண்ணடிமைச்சிந்தனை தொடர்ந்து ஊட்டப்பட்டுவரும் சூழலில், இன்னும் எச்சரிக்கையாகவும் எழுதவேண்டிய கடமை இன்றைய தமிழ்ப் பெண்கவிகளுக்கு உண்டென்று கருதுகிறேன்.

பெண்கவிகளில் மரபுக்கவிஞர் அதிகம் வெற்றிபெறவில்லை என்பது ஆச்சரியமான ஒரு தகவல்! (முதலில் மரபு எழுதிய திலகவதி பிறகு முற்றிலும் புதுக்கவிதையாளராகவே மாறிவிட்டார் என்பது போன்றசெய்திகளும் தனி ஆய்வுக்கு உரியவை!)

எனக்கு நிறைய நம்பிகை இருக்கிறது, இன்றைய தமிழ்ப் பெண்கவிகள் தமிழை மட்டுமல்ல தங்கள் சமூகத்தையும் முன்னேற்றுவதில் 'ஆணுக்குப் பெண் இளைப்பில்லைகாண்' என்று வெற்றிக் கவிபாடும் நாள் வெகுதூரத்தில் இல்லை! என்று நான் உறுதியாக நம்புகிறேன்

பெண்கள் தங்களைப்
பிணித்திருக்கும் தளைகளை
அணிகலன்கள் என்றே
ஆனந்திக்கிறார்கள்
தங்கள் கூண்டுகள்
தங்கத்தாலானவை என்று
தலைகனத்துப் போகிறார்கள்!
 இளைய நிலவுகாள்!
இனித் தேயாதீர்!
சூரிய வட்டமாய்ச்
சுடர்க!   -திலகவதி
-------------------------  * * * * * * ----------------------
(அமீரகத் தமிழிணைய நண்பர்களின் ஆண்டு மலரில் நா.முத்துநிலவன் எழுதியது-2005 )


19 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    தங்களின் பதிவின் ஊடாக பல கருத்துக்கள் கிடைக்கபெற்றது மிக்க மகிழ்ச்சி ஐயா அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஒரு ஆண் வெற்றிபெற்றால் அவன் அரசியல் செய்துவிட்டான் எனும் சமூகம் ஒரு பெண் வென்றால் அவள் பெண்மையை சற்று யோசியாமல் குறை சொல்லும் .ஆனால் இது போன்ற சூழலில் பெண்களுக்காக குரல் கொடுத்த பெரியார் வரிசை ஆண்களின் ஒட்டுமொத்த குரலாய் ஆழமான பதிவு அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. பதிவை இரண்டு பகுதிகளாக வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றியது. கடைசிக் கவிதைகளைப் படித்ததும் மீண்டும் மேலோட்டமாகப் படித்த முதல் பகுதிகளை மறுபடிப் படித்தேன். மறுபடியும் கூடப் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. பெண்களின் சிறப்பான பதிவுக்கு மகிழ்ச்சி.அனைவரின் வலைப்பக்க முகவரிகளையும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
  5. பொறுமைக்கே வெற்றி கிடைக்கும்...

    அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. அய்யா கட்டுரை மிக ஆழமான அறிமுகத்தை தருகிறது

    பதிலளிநீக்கு
  7. மிக நீண்ட பதிவு , இரண்டு பாகங்களாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    கவியுலகின் தாரகைகளை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி..

    எவ்வளவு எளிமையாக எழுதி நினைவு அலைகளை எழுப்புகிறார் கவிஞர் நீலா ,

    வெண்ணிலாவின் கவிதைகள் குறித்து உங்கள் தங்கை சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார்.. நல்லதோர் கட்டுரை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. பெண்கவிஞர்கள் அறிமுகம் அருமை. இவர்களில் இளம்பிறையை நான் நன்கு அறிவேன். ஒரே ஒன்றியத்தில் என்னுடன் பணியாற்றியவர்.
    நன்றி ஐயா எடுத்துக்காட்டுக் கவிதைகள் மிக நன்று

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் அய்யா
    பெண் கவிஞர்கள் பற்றிய தங்கள் ஆழ்ந்த பார்வையின் விளைவாக எழுந்த அற்புதமான கட்டுரை. முதலில் தொடங்கிய வேகம் இறுதி வரை குறையவேயில்லை கடைசியில் முத்தாய்ப்பை வைத்த தங்கள் கவிதை அருமை. எத்தனை எத்தனை மேற்கோள்கள், பெண்ணின் உணர்வுகள்.. உண்மையில் ஒரு பெண்ணின் சிந்தனையில் இவ்வளவு கருத்துகள் பிறந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.. இக்கட்டுரை சற்று நீண்டிருந்தாலும் ஒரே பதிவாக இருப்பதினால் தான் பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள், வேதனைகள், சாதனைகள், வலிகள் அனைத்தும் சிதறாமல் தர முடிந்துள்ளது என்பது எனது கருத்து. மிக ஆழமாக சிந்தித்த, எங்களை சிந்திக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றிகள் அய்யா..

    பதிலளிநீக்கு
  10. கருத்துரைத்த நண்பர்களுக்கு நன்றி. கட்டுரையின் கடைசிக்கவிதை என்னுடையதல்ல பாண்டியன், திலகவதி IPS எழுதியது!

    பதிலளிநீக்கு
  11. மிகவும் அருமை.பெரியாரை உணர்கிறேன்.தெளிவான பார்வையில் பெண் கவிஞர்களை விமர்சனம் செய்த வித அருமை.வீரியம் மிக்க விதைகளாய் ...மெளனப் புரட்சியாய் நிகழ்கிறது பெண்மையின் மேன்மை.இப்படி எழுத பெரியார் சிந்தனையாளரால் தான் முடியும் .நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் பக்கத்திற்கு மிகவும் தாமதமாக வந்தாலும்,
    இப்போதாவது வந்தோமே என்று இருக்கிறது அய்யா.....
    மிகச் சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வராமலே போவதைவிடவும் தாமத வருகை நல்லதுதானே சகோதரி? “லேட் இஸ் பெடடர் தேன் நெவர்” இல்லையா? நன்றி

      நீக்கு
  13. தையல் என்பதற்கு புனைவு என்ற பொருளும் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. ஆனால் நீங்கள் சொல்லவரும் கருத்து, புலப்படவில்லையே நண்பரே? சற்றே விளக்கினால் நல்லது.

      நீக்கு
  14. அற்புதக்கட்டுரை.சிந்தனையைத் தூண்டும் படைப்புக்களம்.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு