நான் எழுதிய நான்காம் சிறுகதை - நா.மு.


மாமா  கையில குப்பை - சிறுகதை
                            
     “மாமா…! மாமாவ்…”
     பள்ளிக்கூடத்திலிருந்து வந்த வாக்கில் புத்தக மூட்டையைக் கடாசிவிட்டு மாமனைத் தேடினாள் பத்து.
     “என்னடீ! நான் இங்கிருக்கேன்..”
     “ம்.. வந்து…மாமா ‘பொங்கல்’னு சொல்லேன்.”
     “ஓகோ! இன்னிக்குப் பள்ளிக்கூடத்திலேர்ந்து புது விளையாட்டு கத்துக்கிட்டு வந்திருக்கியாக்கும்..ம்..சரி ‘பொங்கல்.”
     “உங்க வாயில செங்கல்…ஹய்யா… மாமா வாயில செங்கல்…”
     குதித்துக் குதித்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டே கொல்லைப் பக்கம் ஓடினாள்.
     கொஞ்சநேரத்தில் ராஜசேகர் ஆபீஸில் இருந்து வந்தார். பத்துவின் அப்பா. அவர் கைலியில் நுழைந்து கால்கை கழுவி முகத்தைத் துடைத்துக் கொண்டே சாம்புவிடம் “என்னடா சி.சி. கிடைச்சிதா?” என்றார்.
     தற்காலிக வேலைகளில் அங்கங்கே ஓட்டிக் கொண்டிருக்கும் சாம்பு சர்வீஸ் கமிஷன் குரூப்-டூ எழுத விண்ணப்பம் போடவே இரண்டு நடத்தைச் சான்றிதழ் தேவைப்பட்டது. அதுவும் நாளை தான் கடைசித் தேதி.
     ஒன்று கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வரிடம் வாங்க வேண்டும் - அது ஏற்கனவே இருக்கிறது. இன்னொரு சான்றுதான்…
     “என்னடா சாம்பு! சி.சி. கிடைச்சுதான்னு கேட்டேன் பேசாம இருக்கே!”
     “இல்லத்தான்… காலேஜ்ல ‘ஃபேர்’ன்னு போட்டதுனால வெளியில ‘நோட்டட் பர்ஸன்’ கிட்ட வாங்குறதாவது ‘குட்’ன்னு இருக்கணுமாம்.  சொல்றாங்க. என் ஃபிரண்டு அவனுக்குத் தெரிஞ்சவர் மூலமா வாங்கலாம்னு இப்ப ஆறு மணிக்கு வரச் சொல்லியிருக்கான்.
     சாம்புவும் ராமுவும் ஒளவையார் சிலையில் திரும்பி எலியட்ஸ் ரோடில் சைக்கிளை மிதித்தார்கள். மீன் மார்க்கெட்டைத் தாண்டி பாலத்து முக்கில் வரும்போது தன்னையறியாமல் கன்னத்தில் போட்டுக் கொண்டான் ராமு. அனுமார் கோவில் தெரிந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் டீக்கடை ஸ்ரீதரன் நினைவும் அவர் சொன்ன இந்த அனுமார் கோவில் ‘தல புராணமும்’ சாம்புவுக்கு நினைவுக்கு வரும்.
     “டேய்! சாம்பு! சைக்கிளை வேகமா மிதிடா. மணி ஆறாகப் போகுதுடா.” சாம்புவும் கேரியரில் ஃபைல் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சைக்கிளை வேகமாக மிதித்தான்.
     அந்தக் காலனியைத் தாண்டி முத்தையா தோட்டத்தெரு முக்கில் இவர்கள் முன்பு குடியிருந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே போன போது கொஞ்சம் தள்ளியிருந்த சாராயக்கடையைப் பெருங்கூட்டம் கவிந்து கிடந்தது. இரண்டு பேரும் சைக்கிளை நிறுத்தி எட்டிப்பார்த்தபோது ஒரு ஆள் நோஞ்சலான ஒருத்தனைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான். அந்த நோஞ்சலான் கும்பிட்டுக் கீழே விழுந்து தீனமான குரலில் கத்தக் கத்த அடியும் உதையும் கண்மண் தெரியாமல் விழுந்தது. கூட்டத்தில் யாரும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.
     சாம்புவின் கண்களில் நெருப்பு எரிந்த போதும் காதுகளில்-‘உனக்கு எதுக்குடா சாம்பு இதெல்லாம்” என்று சொல்வது வந்து விழுந்து அடக்கியது.
     ராமுவோ எந்த உணர்ச்சியுமில்லாமல் அடி வாங்கியவனின் சட்டையும் சதையும் கிழிந்து தொங்குவதை-ஏதோ சினிமாப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான் - எல்லாரையும் மாதிரியே.
     சாம்புவும் ராமுவும் வேறு பக்கமாக சைக்கிளை வேகமாக மிதித்தார்கள்.
     சாம்பு மீண்டும் மெதுவாக ஆரம்பித்தான். பக்கத்திலிருந்த பெரிய லாட்ஜைக் காண்பித்து ரகசியமான குரலில் “இந்த லாட்ஜ்லதாண்டா என் ஃபிரண்டு ஒருத்தன் மெடிக்கல் ரெப்ரசண்டேடிவ் தங்கியிருந்தான். ஒருநாள் நான் அவனைப் பார்க்கப் போனப்ப சும்மா மூனாவது மாடிக்கு மேல இருந்த மொட்டை மாடிக்குப் போனோம். சாந்திரம் அஞ்சு மணியிருக்கும் லாட்ஜீக்கு பின்பக்கத்துல ஒரு ரெட்டை மாடி வீடு பெரிசு. நாங்க பாத்திட்டிருக்கும் போதே அந்த வீட்டு மாடி வராண்டாவுல ஒரு பொண்ணு புடவையும் ரவிக்கையுமில்லாம வெறும் பாவாடை பாடியோட கையால மார மூடிக்கிட்டு தடதடன்னு ஓடியாந்தா…பின்னாலயே ஒருத்தன் ஓடி வந்து அவ முடியப் பிடிச்சு தரதரன்னு இழுத்துக்கீழே தள்ளி அந்த மாடி வராண்டாவுல அவளை இம்சை பண்ண ஆரம்பிச்சான். அதுக்குள்ள இன்னொரு ஆளும் வந்து ரெண்டு பேருமா ரூமுக்குள்ள கொண்டு போயிட்டாங்க… பட்டப் பகல்லேயே… பாவம் யாரு வூட்டுப் பொண்ணோ? வேலைக்கு வந்ததோ… இல்ல ஏதாச்சும் உதவி கேட்டு வந்த புள்ளையோ தெரியல…
     “சரி சரி… சாவன்னா வீடு வந்திருச்சு பேசாம வா!” ராமு சைக்கிளிலிருந்து இறங்கினான்.
     ராமுவுக்குப் ‘பக்’கென்றது. இந்த வீடா? பெரிய மாளிகை மாதிரி இருந்தது. அந்த லாட்ஜிலிருந்து பார்க்கும்போது பின்பக்கம் இந்த அளவுக்கு இல்லையே!
     கூர்க்காவிடம் ராமு பேசிக் கொண்டிருக்கும்போதே சும்மா உள்ளே பாhத்த சாம்புவுக்கு அந்தச் சூழ்நிலையே ஒருவித பயங்கலந்த மரியாதையைக் கொடுத்தது.
     பெரிய கேட்டுக்குள் இருந்த சின்னக் கதவை கூர்க்கா திறந்து விடவும் சைக்கிளை வெளியே வைத்துப் பூட்டிவிட்டு பூ வளைவின் ஓரமாக இருவரும் நடந்து உள்ளே போனார்கள்.
     பாலிஷ் போட்ட சிமெண்ட்டில் வாசல் பரந்து கிடந்தது - இவர்கள் குடியிருந்த வீட்டை விடப் பெரிய அளவுக்கு.
     இவனைக் கையமர்த்திவிட்டு உள்ளே போனான் ராமு.
     எத்தனையோ தடவை இந்தப் பக்கமாகப் போய் வந்தவன்தான் சாம்பு. இப்போது தன் வேலையாக சாவன்னாவுடன் வீட்டுக்குள் வரும்போதுதான் ஒவ்வொன்றும் இவனைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பது போலப் பட்டது.
     வாசலில் தடதடவென்று புல்லட் சத்தம் கேட்கவும் வெளியே பார்த்தான் சாம்பு. மறைவாக நின்று இழுத்துக் கொண்டிருந்த பீடியை அவசரமாக அணைத்துத் தூர வீசிவிட்டு ஓடிவந்த  கூர்க்கா பெரிய கதவைத் திறந்து விட்டான் புல்லட் அடிக்கடி இங்கே வரக்கூடியதாக இருக்க வேண்டும். பூ வளைவில் நுழைந்ததும் இஞ்சினை ஆஃப் பண்ணிவிட்டு வாசலில் வந்து சத்தம் போடாமல் நின்ற புல்லட்டிலிருந்து இறங்கியவனைப் பார்த்ததும் ஆடிப் போனான் சாம்பு.
     வரும் வழியில் அவர்கள் சாராயக் கடை வாசலில் கண்ட நிகழ்ச்சி கண்முன் விரியவும் கால்கள் தாமாக ஒதுங்கிக் கொண்டன.
     இவனை ஒரு கருடப் பார்வை பார்த்தபடி புல்லட் படியேற அதே நேரத்தில் ராமு பக்கத்து அறையிலிருந்து வெளியே வந்தான்.
     கண்டு கொண்டு வணக்கம் போட்ட ராமுவைக் கண்டு கொள்ளாமலே போனான் அவன்.
     படியிறங்கி சாம்புவிடம் வந்த ராமு மெதுவான குரலில் “சாவன்னா இருக்காரு. யாரோடவோ பேசிட்டிருக்காரு போல. கூட ஒரு கார் நிக்கிதில்ல. மேனேஜர் நமக்குத் தெரிஞ்சவரா இருந்தது நல்லதாப் போச்சு. கொஞ்சம் இருக்கச் சொன்னார்” என்றான்.
     முகத்தில் சலனமில்லாமலிருந்த சாம்புவைக் கவனித்த ராமு “என்னடா ஒரு மாதிரி இருக்க! சும்மா ரிலாக்ஸா இரு” என்று சொல்லிவிட்டு மீண்டும் குரலைத் தாழ்த்தி “புல்லட்ல வந்தது யாருன்னு கவனிச்சியா… எல்லாம் சாவன்னாவோட ஆளுதான். இவுங்க மாதிரி ஆளுங்க தன்கிட்ட வந்துட்டா எவனுக்கும் எதுவும் செய்வாங்க. வரலயின்னாதான் வம்பே வரும். சட்டம்கிட்டமெல்லாம் இங்க இருந்துதான்ன” என்று சொல்லிவிட்டு அதிகமாகப் பேசிவிட்டது போலச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சட்டென்று நிறுத்தி சத்தமில்லாமல் சிரித்தான் ராமு.
     உள்ளே மேனேஜர் ரூமுக்குள் மணியடித்தது. ஒரு ஆள் வேகமாய்ப போய்விட்டு மேனேஜரிடம் வந்து “உங்கள அய்யா கூப்பிடறாங்க” என்றதுமே வெளியே வந்த மேனேஜர் ராமுவைப் பார்த்து “கொஞ்சம் உள்ள உக்காரு தம்பி இதோ வந்திர்றேன்” என்று கூறிவிட்டுப் போனார்.
     சாம்புவையும் அழைத்துக் கொண்டு மேனேஜர் ரூமில் போய் உட்கார்ந்தான் ராமு. சாம்புவுக்கு ஏதோ புதுவேலைக்குச் சேர்ந்த இடத்தைப் பார்ப்பது மாதிரி படபடப்பாய் இருந்தது. சுற்றும்முற்றும் பார்த்தவாறு பேசாமலே இருந்தான்.
     மேனேஜர் வந்ததும் எழுந்து வணக்கம் சொன்னான்-“ இவரை எங்கியோ…?’ சாம்புவைப் பற்றி விசாரித்தார் ராமு சொன்னான். “ஓகோ! நம்ப ஹைவே ஆபீஸர் ராஜசேகரனோட மச்சினனா நீ?’ என்று ரொம்பத் தெரிந்தது போல சொல்லிவிட்டு. “சி.சி. நெயைப் வந்து கேக்குறாங்கன்னு எங்கிட்டே கையெழுத்துப் போட்டு நெறையக் குடுத்திருந்தார்ப்பா. நாந்தான் ஊர் பேர் ஃபில் அப் பண்ணித் தர்றது. இன்னிக்கு காலையிலதான் தீர்ந்தது. உனக்கு இன்னிக்கே வேணுமா?”
     “ஆமா சார்” மொட்டையா சொன்னான் சாம்பு. “நாளைக்குள் குரூப்-டூ அப்ளிகேஷன் போடணும் சார். அதான்” என்று முடித்ததான் ராமு.
     “சரி சரி… செக்ரடேரியட்லேர்ந்து ஒரு ஆபீசர் வந்திருக்காரு. போனதும் அய்யாட்ட நேர்ல வாங்கித் தர்றேன்…ம்?” மேஜைக்கு எதையோ தேடுவதும் எடுப்பதும் வைப்பதுமாக இருந்தார். ‘இவரை எங்கியோ ஒரு இடத்துல…’ சட்டென்று நினைவு வரவில்லை சாம்புவுக்கு.
     கொஞ்ச நேரத்தில் வாசலில் கார் கிளம்பியதும் “அந்த கலெக்டர் போட்ட ஆர்டர் பர்ட்டிகுலர்ஸ்..” என்றவாறே மானேஜர் அறைக்குள் வந்தவரைக் கண்டதும் மேனேஜரும் ராமுவும் எழுந்தார்கள். சாம்புவும் எழுந்து கொண்டான். ராமு வணக்கம் சொன்னான். “யாரு?” என்றார் அவர்.
     “ஒண்ணுமில்லிங்கய்யா… கான்டக்ட் சர்ட்டிபிகேட்டுக்காக வந்தாங்க. நம்ம பையன்தான். இவன்  காண்ராக்டர் நாகராஜனோட தம்பி. அந்தப் பையன் ஹைவேஸ் ஆபிசர் மச்சினன். அய்யா கையெழுத்து போட்டுக் குடுத்திருந்த சி.சி.யெல்லாம் தீந்துருச்சு. அதான் இருக்கச் சொன்னேன்…”
     சாவன்னா இவர்களின் கைக்கும்பிட்டுக்குத் தலை அசைத்தவாறு மேனேஜரை உள்ளே வரச் சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
     சாம்புவுக்கு இப்போது ஞாபகத்துக்கு வந்துவிட்டது. இந்த வீட்டுக்குப் பின்புறமாக அடுத்த வீதியிலிருக்கும் லாட்ஜிலிருந்து பார்த்தபோது… சே! சாவன்னாவும் மேனேஜரும்தானா அந்த…?
     உடனடியாக இவர்களை அனுப்புவதற்கென்றே வந்தது போல சி.சி. வந்துவிட்டது. நன்றி சொல்லிவிட்டு சாம்புவின் பர்ஸிலிருந்து பத்து ரூபாயை எடுத்து மேனேஜரிடம் கொடுத்துவிட்டு நடந்தான் ராமு. மேனேஜர் ‘ராமுவோடு வந்ததால்தான் கிடைத்தது. இல்லாவிட்டால் நாளைக்கு வரச் சொல்லியிருப்பேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
     வெளியில் வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பும்போது ராமு என்னென்னவோ சொல்லிக் கொண்டு வந்தான். சாம்பு பேசாமலே வந்தான். ராமுவை அவன் வீட்டில் விட்டுவிட்டு சாம்பு திரும்பியபோது கேரியரில் இருந்த சான்றுகள் ஃபைல் மலை மாதிரி கனத்துக் கொண்டு சைக்கிள் மிதிக்கவே சிரமப்பட்டான்.
     வீட்டுக்குள் நுழைந்து சான்றுகளோடு அத்தானைத் தேடிய சாம்புவை ஓடிவந்து கட்டிக்கொண்டாள் பத்து.
     மாமா… மாமா… தொப்பைன்னு சொல்லேன்…”
     “தொப்பை.”
     உங்க கையில குப்பை… அய்யா… மாமா கையில குப்பை…”
     குதித்துக் குதித்துச் சந்தோஷப்பட்டாள் பத்துக்குட்டி.
--------------------------------------------------------------- 
நான் எழுதிய நான்காவது சிறுகதை இது. “சாவி“ வார இதழில் வந்தது. 

மன்னர் கல்லூரி பாரதி விழாவில் எனது பேச்சு

புதுக்கோட்டை மாமன்னர் அரசுக் கலைக்கல்லூரியில் நடந்த “மகாகவி பாரதி பிறந்தநாள் விழா”வில் சிறப்பு விருந்தினராக கவிஞர் நா.முத்துநிலவன்...
மேடையில், இடமிருந்து- வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் விஸ்வநாதன், கல்லூரி முதல்வர் பேரா.சி.வடிவேலு மற்றும் மாணவபிரதிநிதிகள் -எம்.ஏ., இறுதியாண்டு- ஜகுபர் நிஷா, செபாஸ்டின்.
-----------------------------------------------------------------------------------------------------------

இன்றைய இளைஞர்க்கும் 
வழிகாட்டுகிறார் மகாகவி பாரதி!
மன்னர் கல்லூரி பாரதி விழாவில் 
கவிஞர் நா.முத்து நிலவன் பேச்சு
புதுக்கோட்டை-டிச.12 புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடந்த மகாகவி பாரதி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞர் நா.முத்து நிலவன், இன்றைய கல்லூரி மாணவர்-இளைஞர்களுக்கும் பாரதி வழிகாட்டியாகத் திகழ்வதாகக் கூறினார்.
      வெறும் முப்பத்தெட்டே முக்கால் ஆண்டுகளே வாழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நூற்றுமுப்பதாவது பிறந்தநாள் விழா, டிசம்பர் 11ஆம் தேதி அன்று, தமழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதற்குக் காரணம் அவரது சாகாத படைப்புகளே எனறவர் மேலும் கூறியதாவது -
      வெறும் கவிஞர் மட்டுமல்ல பாரதி, சிறுகதை, நாவல் முயற்சி, புதுக்கவிதையின் முன்னோடியான வசனகவிதை, பத்திரிகை ஆசிரியர், 1905ஆம் ஆண்டே பத்திரிகையில் காரட்ட்டூன் எனப்படும் கருத்துப்படம் வெளியிட்டவர் என, வளர்ந்துவந்த அனைத்துத் துறை வளர்ச்சியிலும் அவர்தான் முன்னோடியாகத் திகழ்கிறார்.
      பற்பலர் வரலாற்றைப் படிக்கிறார்கள், பலரும் வரலாற்றைப் புத்தகமாகப் படைக்கிறார்கள், சிலர் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள், ஆனால் வெகுசிலர்தாம் வரலாறாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள்! அப்படித்தான் மகாகவி பாரதியின் வரலாறு, இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றின் தொடக்கமாகத் திகழ்கிறது. இதை வரலாற்று மாணவர்கள் சமூகப் பாடமாகவே படிக்கவேண்டும்.
      பாரதி நினைத்தது போல அரசியல் விடுதலை வந்துவிட்டது, ஆனாலும் அவர் நினைத்த பொருளாதார விடுதலையும், சமூகவிடுதலையும் இன்னும் வரவில்லை என்பது இன்றும் நேரடி அந்நிய முதலீட்டிலும், தர்மபுரி சாதிவெறியிலும் வெளிப்படுகிறது! எனவே பாரதி இன்றும் தேவைப்படுகிறார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சங்கப் புலவரும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருவள்ளுவனும் “சாதிமதங்களைப் பாரோம்” என்ற பாரதியும் ஒரே நோக்கில்தான் சொன்னார்கள், நாம்தான் அவர்களை எடுத்தெடுத்துப் பெருமையாகப் பேசிப்பேசியே பொழுதைக் கழித்துக்கொண்டே அவர்களைப் போற்றுவது அவர்களுக்குச் செய்யும் பெருமையல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பின்பற்றுவதற்கு உரியவர்களே அன்றி, வெற்றுப் பெருமைக்கு உரியவர்கள் அல்லர்!
      மக்களின் சுய அடிமைத்தனம் போனாலன்றி அரசியல் விடுதலையை முழுவதுமாக சரியாகப பயன்படுத்த முடியாது என்பதோடு, இதைக் களையவேண்டித்தான் “என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்”  என்றதையும், தேசப்பற்றாளர் போல நடிப்பவரிடம் ஏமாந்துவிடக் கூடாது என்பதைத்தான் “நடிப்புச் சுதேசிகள் என்றும் பாரதி பாடியதை நாம் புரிந்துகொண்டால் இன்றைய இந்தியப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்!
      தமிழ்நாட்டுத் தாய்மார்கள் “மம்மி” என்று அழைக்கப்படுவதில் மகிழ்ந்துபோகிறார்கள், மம்மி என்றால் “பதப்படுத்தப்பட்ட பிணம்” என்று பொருள்.மம்மி-பகுதி1,2 என்று ஆங்கிலப்  படங்களே வந்தன! இந்த சுயமனஅடிமைத் தனத்தைத்தான் பாரதி “என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்” என்று அன்றே பாடியது இன்றும் பொருந்துவதாகவே உள்ளது.
      இளைய பாரதத்தை நம்பிய பாரதி, இளைஞர்களை அழைத்து, “இளைய பாரதத்தினாய் வாவா” என்றும், குழந்தைகளை அதிலும் குறிப்பாகப் பெண்குழந்தையை அழைத்து, “சாதிகள் இல்லையடி பாப்பா” என்றும், பெரியவர்களை அழைத்து, “சாதிமதங்களைப் பாரோம்” என்றும் பாடியது போதாதென்று, சாதி-மதம் கடந்த இந்தியர் அனைவரையும் அழைத்து, “நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்று புதிய பாரதம் காணப் புறப்பட்டான். அவனது கனவை நனவாக்குவதற்கு அவனைப் போற்றுவதல்ல, பின்பற்றுவதே இன்றைய தேவை”
      இவ்வாறு பேசினார் கவிஞர் முத்துநிலவன். விழாவிற்கு மாமன்னர் கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு) முனைவர் சி.வடிவேலு தலைமை தாங்கினார். வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் விஸ்வநாதன் அறிமுகவுரையாற்றினார். முனைவர்கள் செல்வராசு, மாதவன், உள்ளிட்ட தமிழ்த்துறை, வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் பங்கேற்றனர். முன்னதாக எம்.ஏ.இறுதி யாண்டு மாணவி ஜகுபர் நிஷா வரவேற்புரையாற்ற, மாணவர் செபாஸ்டின் நன்றியுரை யாற்றினார்.  விழாக்கூடத்தில் நிகழ்நத இந்த பாரதிவிழாவில் மாமன்னர் கல்லூரியில் பயிலும் ஏராளமான மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். 


(செய்தி ஆசிரியர்கள் “தினமணி“-திரு மோகன்ராம், “தீக்கதிர்“-திரு மதியழகன் புகைப் படம்-“தினமலர்“திரு.ராஜ்குமார் -12-12-2012)

விடிகாலையில் மாணவர் வீடுகளுக்குச் சென்று வந்தேன்...

             











 இன்று விடிகாலையில், கடந்த ஆண்டு போய்வந்தது போலவே -பத்தாம் வகுப்பு படிக்கும் -என் பிள்ளைகளில் சிலர் வீடுகளுக்குப் போய் வந்தேன்.
நேற்று இரவு -வழக்கம்போல- பத்து மணிக்கு, “இன்றோ நாளையோ விடிகாலையில் வீட்டுக்கு வருவேன், படித்துக்கொண்டு இருக்கவேண்டும்” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அதில், எங்கள் பள்ளியிலேயே  கணித ஆசிரியராக இருக்கும் நித்யா டீச்சரின் தங்கை மகன் ஜெயராம் “வெல்கம்சார்“ என்று பதில் அனுப்பியிருந்தான். (கடந்த வாரம் காலை 5.30க்கு அவன் வீட்டுக்குப் போனபோது, நான் வந்திருப்பதாகச் சொல்லி எழுப்பிய பிறகு அடித்துப் பிடித்து எழுந்ததை நினைத்துக் கொண்டேன்).  அந்த டீச்சர் வந்து, “படிக்கிறான், காலையில எழுப்பிவிட்டாலும் எழுந்திருக்க மாட்டான் சார்... நீங்க வருவீங்கன்னு சொல்லி கொஞ்சம் எழுந்திருக்கிறான் ரொம்ப நன்றிசார்“ என்று சொல்லியிருந்தார்.
                முகிலன், நமீஸ்,விக்ரம் மூவரும் வந்ததும் கிளம்பினோம்.
                 முதலில் ஜெயராம் என்றதும், பயகளுக்கு ஒரே சிரிப்பு “அவன் குப்பற அடிக்க கிடப்பான்ங்கய்யா..“ என்று ஒருவன் சொல்ல, “இல்லங்கய்யா, இப்பல்லாம் சீக்கிரம் எழுந்திருச்சிடுறான்...” என்று சொன்னவனுக்கு ஏமாற்றம்தான்... அவன் எழுந்திருக்கவே இலல... வீடும் இருட்டாகவே இருந்தது. மின்சாரம் அப்போதுதான் போயிருந்தது என்றாலும், இவர்கள் வீட்டில் இன்வெர்ட்டர் இருப்பதாகவும் பயலுக சொன்னார்கள்...
             அடுத்து, சந்தோஷ் வீடு.
              பயலுக போய் கூப்பிட்டதும், அவன எழுப்பிக்கொண்டே, “நீங்க போங்கப்பா.. நா அவன எழுப்பி வரச்சொல்றேன்..” என்று சொல்ல, “ட்யு’ஷனுக்கு இல்லம்மா எங்க அய்யா வந்திருக்காங்க“ என்றதும்தான் என்னைக் கவனித்த சந்தோஷ் அம்மா “அய்யா வாங்கய்யா“ என்று அழைத்து, “கரண்ட் போயிருச்சில்ல.. அதான் தூங்குறான்..“  என்று சமாதான்ம் சொல்லிக்கொண்டே “டே சந்தோசு அய்யா வந்திருக்காங்கடா“ என்று எழுப்பிவிட... அவன் திருதிருன்னு முழிச்சிக்கிட்டே எழுந்து வந்தான்...மணி-விடிகாலை-5.17.
             அடுத்து விக்ரம், ஜெகதீஸ்வரி, லெட்சுமி, கார்த்திக் என எனது மாணவர் பலர் வீடுகளுக்குப் போய் வந்தாலும்,காமராசபுரம் 33ஆம் வீதியில் இருக்கும் மெகராஜ்பானு, மற்றும் பாலாஜி நகர் வினோத் வீடு இரண்டும் மறக்க முடியாததாக இருந்தது. வினோத் வீடு சின்னக் கு டிசை. ஆனாலும் அரிக்கேன் விளக்கை வைத்துக்கொண்டு அவன் படித்துக்கொண்டிருந்தான்...    
             மெகராஜ்பானு அண்ணன் வீட்டு வாசலில் நின்று கொண்டு, எங்களை வரவேற்றான்.. வீடு தெரியாமல் அருகில் நின்றுகொ்ண்டே தொலைபேசியில் வீட்டு அடையாளத்தைக் கேட்டுச் சென்றதன் விளைவு! அவங்க அப்பா டீக்கடையில் வேலை என்பதால் 4மணிக்கே எழுந்து போய்விட்டாராம்...

              “அப்பா என்கூட பேசறதில்லங்கய்யா... நீங்க சொல்லிப் பேசச் சொல்லுங்கய்யா“ என்று என்னிடம் தனியாகச் சொல்லியிருந்த பானுவின் முகத்தில் துடைக்க முடியாத சோகம் எப்போதும் இருக்கும்... ஆனாலும் வகுப்பின் அனைத்து வேலைகளிலும் முன்னின்று செய்யும் குணத்தை நான் வகுப்பிலேயே பாராட்டியிருந்தேன். மலாலாவைப் பற்றி வகுப்பில் நடந்த விவாதத்தில் மெகராஜ் நிறைய விஷயங்களைச் சொன்னது நினைவுக்கு வந்தது. அப்பாவைப் பார்க்க முடியாத ஏமாற்றம் எனக்கு... எப்படியும் கேட்டு பார்த்துப் பேச வேண்டும்...
             சில பிள்ளைகள் மேம்போக்காக இருந்தாலும், எங்கள் வீட்டுக்கும் பேப்பர் போட்டுக்கொண்டே படிக்கும் சிலம்பரசன், ரவி டீக்கடையில் கிளாஸ் கழுவிக்கொண்டே பத்தாம்வகுப்பு இ பிரிவில் படிக்கும் தமிழ்ச்செல்வன் என என் மாணவர்கள் விதம் விதமாய் வாழ்ந்து கொண்டே எனக்கு நிறையக் கற்றுக் கொடுக்கிறார்கள்...
            தொலைக்காட்சியில் பேசுவது, கருத்தரங்கங்களில பேசுவது, கட்டுரைகள் எழுதுவது எல்லாவற்றையும் விட என் பிள்ளைகளின் வீடுகளுக்குப் போய் வருவதுதான் எனக்கு ரொம்பவும் நெஞ்சைத் தொடும் நிகழ்வாக இருப்பதுதான் உண்மை!
             அவர்கள், நான் வருவதால் விடிகாலையில் எழுந்திருக்கிறார்கள் என்று சில பெற்றோர்கள் நன்றிசொல்வது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை சில பெற்றோரகள் அவ்வளவாக விரும்பவில்லை என்பதும்... என்றாலும் கடந்த ஆண்டு போய்வந்ததுபோல அரையாண்டு விடுறையில் கிராமங்களிலிருந்து வரும் பிள்ளைகளின் வீடுகளுக்குப் போகவேண்டும்.
--------------------------------------------------------
கடந்த ஆண்டு சென்று வந்த அனுபவம் பார்க்க http://valarumkavithai.blogspot.in/2012_02_01_archive.html

கம்பனும் காரல் மார்க்சும் - ஒரு முன்னோட்டம்




இந்தத் தலைப்பில் 
ஒரு நீண்ட கட்டுரை    எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக நெஞ்சுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.   இப்போதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது. கட்டுரை எழுது முன் பேசிவிடும் ஒரு வாய்ப்பைக் காரைக்குடிக் கம்பன் கழகத்தார் எனக்குத் தந்திருக்கிறார்கள். வரும் 01-12-2012 சனிக்கிழமை மாலை, காரைக்குடிக் கம்பன் மணிமண்டபத்தில் என்னை இந்தத் தலைப்பில் பேச வரும்படி அழைத்திருக்கிறார்கள்.
     எத்தனையோ –நூற்றுக்கும் மேற்பட்ட- கட்டுரைகள் எழுதியாயிற்று, எத்தனையோ –மூவாயிரத்திற்கும் மேற்பட்ட- மேடைகளில் பேசியாயிற்று. இதில் என்ன “முன்னோட்டம்“ என்கிறீர்களா? தலைப்புத்தான் காரணம்.
     தமிழ் இலக்கிய வரலாற்றைக் கம்பனை விட்டுவிட்டு எழுத எந்தக் கொம்பனாலும் இயலாது. போகிற போக்கில் –சேக்கிழார் போலும் மதவெறி பிடித்த புலவர்களை- தட்டிவிட்டுப் போவதுபோலக் கம்பனையும் தட்டிவிட்டுப் போகலாம் என்று எண்ணுகிறவர்கள்தாம் ஏமாந்து போவார்கள்.
     கம்பனை-  “தீ பரவட்டும்” என்று கொளுத்தியதும் தவறு.
தேரெழுந்தூரில் அவனைத் தெய்வமாக்கியதும் தவறு. இரண்டையும் செய்தவர்கள், சென்னை உலகத் தமிழ் மாநாட்டின்போது கம்பனுக்குச சிலையும் வைத்தார்கள்!
வள்ளுவன், கம்பன், பாரதி மூவரும் தமிழின் முப்பெரும் மகாகவிகள். இதை நான் பல மேடைகளிலும் எனது கட்டுரைகளிலும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் கம்பனைப் பற்றிய ஆய்வுகள் இடம்பெற வேண்டும் எனக் கோரி நான் எழுதிய கட்டுரை 17-05-2010 “ஜனசக்தி“ நாளிதழ் கடைசி முழுப்பக்கம் வெளியானது.   இந்த வலைப்பக்கத்திலும் பார்க்கலாம்  http://valarumkavithai.blogspot.in/2012/01/blog-post.html
நண்பர் பட்டிமன்றப் பேச்சாளர் இனியவனும் தனது வலையில் அதை எடுத்து இட்டிருக்கிறார். http://iniyavanin.blogspot.in/2010/05/blog-post_26.html
கம்பனை ஒப்பிட்டு ஏராளமான ஆய்வுநூல்கள் வந்திருந்தாலும், “கம்பனும் கார்ல்மார்க்சும்“ எனும் தலைப்பில் இதுவரை வரவில்லை என்றே நினைக்கிறேன். நாம்தான் தொடங்க வேண்டும். இது மார்க்சிய வாதிகளுக்கு மட்டுமல்ல, கம்பனின் தமிழை உண்மையாக நேசிப்பவர்களுக்கும் நல்லதுதான் என்று நான் நம்புகிறேன்.
இது ஒரு புதியவம்புதான்.... கலகம்பிறக்காமல் நியாயம் இல்லையே!
ஆனாலும் நமக்குச் சரியென்று பட்டதைச் சரியென்று சொல்லித்தானே பழக்கம்? அதைத்தானே மார்க்சும், பெரியாரும் நமக்குச் சொல்லித்தந்திருக்கிறார்கள்? அவர்கள் வழியே இயங்குவோம்.
    ”மானுடம் வென்றதம்மா!” - என்று மன்னராட்சிக்காலத்திலேயே  பாடிய மகாகவி கம்பனின் தமிழ் சரியான பார்வையோடு புரிந்துகொள்ளப் பட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
-------------------------------------- 
கட்டுரை உள்ள நம் வலைப்பக்க இணைப்புக்குச் சொடுக்குக -
http://valarumkavithai.blogspot.in/2013/03/blog-post_754.html
-------------------------------------------------------------------

”கேடி பில்லா கில்லாடி ரங்கா” - வேண்டாம் பாண்டிராஜ் இந்த விபரீத தலைப்பு!


                      
       பசங்க, வம்சம், மெரினா படங்களைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும்  படம் “கேடி பில்லா கில்லாடி ரங்கா”. விமல், சிவகார்த்திகேயன், பிந்துமாதவி, ரெஜினா, சூரி, சுஜாதா நடிக்கின்றனர்.
                                            (இணையத்தில் கிடைத்த செய்தி
                                       ( http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1731)

                   “பசங்க“ படத்தை எடுத்த இளம் இயக்குநர் பாண்டிராஜ் அதன் மூலம் பாராட்டுகளை அள்ளிக் குவித்தார். அவர் பிறந்த எங்கள் மாவட்டமான புதுக்கோட்டை மட்டுமல்ல ஊர்-உலகமே புகழ்ந்தது.
                   புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப் பட்டிப் பள்ளியில் படித்த அனுபவத்தை அப்படியே திரை மொழியில் கொண்டுவந்து கல்வி உலகத்தை மட்டுமின்றித் திரைஉலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
                   அந்தப் படத்திற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்து, பரிசளித்துப் பாராட்டியது. சங்கத்தின் தலைவர் பேரா.அருணன், பொதுச்செயலர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், மற்றும் துணைப்பொதுச்செயலராக இருந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் பரிசளித்துக் கௌரவிக்க, சென்னையில் நடந்த அந்தவிழாவில் அந்தப் படத்திற்கான பாராட்டுரையை அப்போது சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த நான்தான் ஆற்றினேன்.
                  அப்போது நான் பேசிய பேச்சின் இடையே, ஆசிரியர்கள் என்பவர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள், பெற்றோர்கள் என்பவர்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் என்பதாகப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மட்டுமல்ல, மாணவர்களும் புரிந்துகொண்டால் கல்வி கற்கணடாகும். என்று பேசினேன். 
                    இது நான் எப்போதும் பேசுவதுதான். இதை எடுத்துத் தனது “ஈஸியாக ஜெயிக்கலாம், ஜாலியாகப் படிக்கலாம்“ எனும் நூலில் முதல் பக்கத்தில் மேற்கோள் போலக் கட்டம் கட்டிப் போட்டுக் கொண்ட என் மாணவர் கிருஷ்ண.வரதராஜன், இது பற்றி எனக்கு நன்றி கூடத் தெரிவிக்க வில்லை என்பதும், இதை அறியாத “புதிய தலைமுறை“ வார இதழ், அந்த நூலைப் பற்றிய அறிமுகத்தில் இதே வாசகத்தைத்தான் பக்க நடுவில் கட்டம் கட்டிப் போட்டிருந்தது என்பதும் தனி ஒரு சோக நகைச்சுவை!
                  மேடையில் இருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த இயக்குநர் பாண்டிராஜ். தனது அடுத்த படமும் கல்வியைப் பற்றியதுதான் என்றும், “கவிஞர் முத்துநிலவனின் இந்த வரிகளை அந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ள அவர் அனுமதிக்க வேண்டும்“ என்றும் பேசினார். நானும் “நல்லாப் பயன்படுத்திக்கங்க இயக்குநரே!“ என்று அப்போதே தெரிவித்தேன்.
                   ஆனால் அவரது அடுத்தடுத்த வம்சம், மெரினா படங்களில் அந்த வரிகளைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. சரி, போகட்டும்.
                   இப்போது அந்த அறிமுகம் தந்த உரிமையில் கேட்கிறேன் -
                   
                    அடுத்த உங்கள் படத்திற்கு “கேடி பில்லா கில்லாடி ரங்கா” என்று பெயர் வைத்திருப்பதாகப் பத்திரிகையில் படித்தேன், வேண்டாம் பாண்டிராஜ் இந்த விபரீத தலைப்பு! 
                     என்னதான் நகைச்சுவையாகப் படமோ, படத்தலைப்போ இருந்தாலும் இந்த இருவரும் யார் என்ற செய்திப் பின்னணி தெரியாமல் தலைப்பு வைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
                    யார் இந்த பில்லாவும் ரங்காவும்- 
                    இந்த இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்...           
                    http://www.leadandhra.com/News/4180
பார்க்க நேரமில்லாதவர்களுக்குச் சொல்கிறேன் - 1978இல் இந்தியத் தலைநகராம் டெல்லியில் பள்ளிச் சிறுவன் சிறுமியான சஞ்சய் மற்றும் கீதாவைக் கடத்திக்கொண்டுபோய் படுகொலை செய்த பாவியர்தாம் அந்த இருவரும். அதிலும் பச்சிளம் குழந்தையான கீதாவைக் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற படுபாவிகள்தாம் அந்த இருவரும். பின்னர் 1982இல் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை தரப்பட்டது என்பதை அன்றைய ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.
                   அந்தச் செய்தி தந்த வெளிச்சத்தில்தான் அமிதாப்பச்சன் “டான்” என்று படம்எடுத்துக் கல்லாக் கட்டினார். உடனே அந்தப் படத்தைத் தமிழில் எடுத்து, அதற்கு “பில்லா“ என்று பெயர் சூட்டினர் பெருங்குணத்தார். வசூலில் பெரும் போடு போட்ட அந்தப் படம்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக உறுதிப்படுத்தியது என்பார்கள் கோலிவுட் வரலாறு தெரிந்தோர்.
                    மீண்டும் இதே பெயரில் அஜீத் நடித்த படம் வெற்றிபெறவே அதன் இரண்டாம் பாகம் தயாராவதாகவும் கேள்வி. இவர்களிடம் நாம் போய் இந்தக் கேள்வியைக் கேட்கமுடியாது, ஏனெனில் இவர்கள் யாரும் “பசங்க“ படம் எடுத்த பாண்டிராஜ் போல மாணவர் உலகத்தைப் பற்றிக் கவலைப்பட்டுப் படம் எடுத்தவர்கள் இல்லை.
                      பசங்க, மெரினா போல, குழந்தை உளவியலும், குழந்தைகளுக்கான கல்வியின் அவசியத்தையும் அறிந்து, புரிந்து படம் எடுத்து வெற்றியும் பெற்ற பாண்டிராஜ் அதற்கு நேர் எதிராக பில்லா ரங்கா என்று படம் எடுப்பதைத்தான் தாங்க முடியாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
                       திரைப்படங்களுக்குப் பெயர் வைக்கும்போது காரணமில்லாமல் தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் இயக்குநர்கள் உண்டு. (ப்ச்.. மெஸேஜ் சொல்லியிருக்கிறார் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் எவ்வளவு தெளிவு பாருங்கள்...
                       இப்படித்தான் இரட்டையாகப் பிறந்த தந்தைக்கு மீண்டும்இரட்டைக் குழந்தைகள் எனும் கதைக்கு “ஜீன்ஸ்”(GENES) என்று அறிவியல் படிப் பெயரிட்டிருக்கும் சங்கர் எனும் இயக்குநரை என் போன்றவர்கள் சிந்தித்துப் பாராட்டி விடுவார்களோ என்று அஞ்சித்தான் அந்தப் பட விளம்பரத்தில் ((JEANS) என்று போட்டுவிட்டார் சங்கர் ! தெளிவு! தெளிவு! )
                      எத்தனையோ தியாகத் தலைவர்கள், தத்துவமேதைகள், அறிவுலக மற்றும் கலையுலக மேதைகள் வாழ்ந்து சாதித்து மறைந்த நம் நாட்டில் இப்படி சமூகப் பொறுப்பில்லாமல் கேடிகளின் பெயரைத் தன் திரைப்படத்திற்கு வைக்கும நிலை --அவர் முன்னர் கவலைப்பட்டு எடுத்த பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சைக் கலக்கும் செயல்தான் என்பதை உணர்ந்து-- நலல இயக்குநரான பாண்டிராஜ் அவர்களுக்கு எப்போதும் வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - “கீற்று” இணைய இதழ் - http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21956:2012-11-12-10-37-24&catid=10:cine-news&Itemid=130
எடுத்து வெளியிட்ட  மாத இதழ் ”மணிப்புறா” புதுக்கோட்டை - ஏப்ரல்,2013
------------------------------------------------------------------------------------------------------------

தீபாவளி 13-11-2012 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் நான்...

என்ன பண்ணச் சொல்றீங்க...? 
அல்லது தரிசு நிலம் பரிசு! 
(படைப்புக்கு ஒரு தலைப்புத்தான் வைக்கணுமா என்ன?)

1980கள் தொடங்கி, நான் எத்தனையோ கட்டுரை-கவிதைகளைத் தினமணி, ஜனசக்தி, செம்மலர், கணையாழி உள்ளிட்ட பல அச்சிதழ்களிலும், பதிவுகள், திண்ணை, கீற்று முதலான இணைய இதழ்களிலும் எழுதியிருக்கிறேன். இப்போதும் எழுதிவருகிறேன்.

கவிஞர் மீரா அவரது “அன்னம்“ பதிப்பகத்தின் வழியாக 1993இல் வெளியிட்ட எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பு அந்த ஆண்டின் கலைஇலக்கியப் பெருமன்றப்பரிசை வென்றதோடு, கடந்த ஆண்டுவரை -பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ தமிழிலக்கிய வகுப்புக்குப் பாடநூலாக இருந்தது.

“பாரதிதாசன் இணையம்“ நடததிய உலகளாவிய கவிதைப் போட்டியில் முதல்பரிசு தந்தார்கள். கவிஞர் பாலாவும் கவிஞர் மு.மேத்தாவும் சேர்ந்து புதுக்கோட்டை நகரில் எனக்கு “பாரதிதாசன் விருது“ தந்தார்கள்...
1989இல் “புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கப் பிரச்சாரத்திற்காக நான் எழுதிய “சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி“ பாடல் மாநிலம் தாண்டியும் பல மொழிகளில் -எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமிகு ஷீலா ராணி அவர்களால் வெளிவந்து புகழ்தந்தது.

எல்லாம் சரி...
ஏன் இந்த சுய தம்பட்டம் என்கிறீர்களா?
சுய ஆற்றாமைதான்!
இவற்றையெல்லாம் விடவும் நான் சமீப காலமாக தொலைக்காட்சிப் பட்டிமன்றங்களில் திண்டுக்கல் திரு.ஐ.லியோனி அவர்களின் குழுவில் அணித்தலைவராகப் பேசுவதுதான் உலகம் முழுவதும் அறியப் பட்டிருக்கிறது!
எனவே நான் பட்டிமன்றப் பேச்சாளராகவே அறியப்பட்டுவிட்டேன்...

இதனால் நன்மை-விமர்சனம் இரண்டையும் எதிர்கொண்டு வருகிறேன்.
நண்பர்கள் -மின்சாரத் தேவதையின் அருள்பெற்ற இடங்களில் வாழ்வோர், நேரமும் மனமும் இருந்தால் பார்க்கலாம்.

வரும் தீபாவளி (13-11-2012) அன்று காலை 9-00மணிக்கு கலைஞர் தொலைக்காட்சிப் பட்டிமன்றத்தில் முதல் பேச்சாளனாக நான் பேசியிருக்கிறேன்.

நண்பர்களையும் பார்க்கச்சொல்லி, குடும்பத்தினருடன் நீங்களும் பார்த்துவிட்டு என்னிடம் தொலைபேசியில் பேசுவோர்க்கு தஞ்சாவுரில் தண்ணிபாயாத நிலம் பத்து நூறாயிரம் காணி தரிசாக -மன்னிக்கவும் பரிசாக- வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேனுங்கோவ்... - ---உங்கள் நா.முத்து நிலவன்.
Cell - +91 94431 93293


அருணன் எழுதிய ”காலந்தோறும் பிராமணியம்” – நூல் அறிமுகம்.


சமூக ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய ஆகச் சிறந்த ஆய்வு நூல்!
 
நான் எத்தனையோ ஆயிரம் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். சில ஆயிரம் புத்தகங்களை என்வீட்டில் சிறு நூலகமாகவும் வைத்திருக்கிறேன் – அதற்காகவே என்வீட்டில் ஒரு மாடி கட்டி அதில்தான் இப்போது குடியும் இருக்கிறேன். (மூத்தமகள் ”வால்கா” – தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன்- துபையில் இருக்கிறாள், மகன் ”நெருடா” – தன் மனைவி, குழந்தைகளுடன்- சென்னையில் இருக்கிறான். மூன்றாவதாகப் பிறந்த மகள் ”லட்சியா” இப்போதுதான் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினிக்கல்வி படித்து வருகிறாள் –எனவே, நூலகம் இருக்கும் மாடிப்பகுதியை வாடகைக்கு விடமுடியாமல், கீழ்வீட்டை வாடகைக்கு விடலாம் என்ற முடிவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறோம்...)
என் மனைவி முதன்முறையாகக் கருவுற்றிருந்த போது நான் படித்த “வால்காவிலிருந்து கங்கை வரை” எனும் வங்காள எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயனின் நூல் என்னைப் பெரிதும் பாதித்தது. பலநாள்கள் என்னைத் தூங்க விடவில்லை! அதன் காரணமாகவே என் முதன் மகளுக்கு “வால்கா“ என்று பெயரிட்டேன்.
இப்போதும் “என்னைப் பாதித்த நூல்” வரிசையில் “வால்காவிலிருந்து கங்கை வரை” நூலைத்தான் முதல் நூலாக வைத்திருக்கிறேன். அதன் பிறகு ஆர்.பி.டி எனும் ரஜினி பாமிதத் எழுதிய “இன்றைய இந்தியா” மொழிபெயர்ப்பு நூல் ஆய்வு நூல் எப்படி இருக்க வேண்டும் என்று தடம் போட்டுத் தந்தது. தமிழில், வையாபுரியாரின் “காவிய காலம்”,  “தமிழ்ச் சுடர்மணிகள்” நூல்கள் அவற்றின் ஆய்வுப் பார்வையில் என்னைப் பெரிதும் கவர்ந்தன.
இடையில் “பாரதி-காலமும் கருத்தும்” எனும் ரகுநாதன் அவர்களின் நூலும், கோ.கேசவன் எழுதிய “பள்ளு இலக்கியம்- ஒரு பார்வை” முதலான நூல்களும், பின்னர் “பாரதி-மறைவு முதல் மகாகவி வரை” எனும் -அ.மார்க்சும் கா.சிவத்தம்பியும் சேர்ந்து எழுதிய- நூலும் என்னைப் பெரிதும் ஈர்த்தன.
இலக்கியத் தகவல் தரும் நோக்கில் உ.வே.சா. தொடங்கி பெ.சு.மணி தொடர, வீ.அரசு வரை பலரும் எழுதிய மற்றும் தொகுத்தளித்த நூல்கள் நமக்குப் பயன்பட்டாலும், ஆய்வு நோக்கில் நம்மை வியக்கவும் தொடரவும் வைத்த நூல்கள் அவற்றில் வெகு சிலவே.
கார்த்திகேசு சிவத்தம்பியின் ஆய்வுகள் என்னை வியக்க வைத்தாலும் அவரது நடை அலுப்படித்ததையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உள்நுழைந்து சொல்வதாகச் சொல்லி அவர் இழுக்கும் இழுவை நடையை என்னால் ரசிக்க முடியவில்லை, ஆனாலும் அவரது “தமிழ் இலக்கணம் காட்டும் தமிழ்ச் சமூக நிலை”(?)  மற்றும் “சங்க காலம் – வீரயுகம்” முதலான நூல்களின் ஆய்வுச் சாரம் தந்த மகிழ்ச்சியையும மறுக்க இயலாதுதான்.
இவ்வாறே சமகால ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா இருவரும் எழுதிய “இந்து-இந்தி-இந்தியா”முதலான- சில ஆய்வு நூல்கள் மலைக்க வைத்தாலும் தேவைக்கு அதிகமான சான்றுகள் கொஞ்சம் அச்சுறுத்திவிட்டன.
“சங்க காலம்“ பற்றிய தலித்தியப் பார்வையில் எழுதப்பட்ட நூல்கள் சில மகிழ்ச்சியளித்தாலும் ஆய்வுப் போதாமைக்கும் சான்றாக நிற்கின்றன.
இவற்றைக் கடந்து வந்தபிறகு –
அருணன் எழுதிய ஆய்வுநூல் தொகுதிகளை அவ்வப்போது பார்த்து, வியந்திருந்தாலும் அதை அவர் சமகாலம் வரையும் நீட்டியிருப்பதுதான் மிக மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுக்கால இந்தியாவின் நீண்ட வரலாற்றைச் சமூகவியல் பார்வையில் யாரேனும் தரமாட்டார்களா? (அல்லது நாம்தான் எழுத வேண்டுமோ?) எனும் மயக்கத் தயக்கத்தில் நான் இருந்தபோது இந்த நூல்கள் வந்து பெருமகிழ்வு தந்திருக்கின்றன.
இந்த “இந்தியா பற்றிய சமூக ஆய்வு நூல்கள்“ பற்றிய விமர்சனத்தைத் தனியே வைத்துக்கொள்ளலாம். இப்போது மகிழ்ச்சியோடு அறிமுகம் செய்வதையே பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.
எட்டுப் பாகங்கள் – ஏழு நூல்கள் –  3236 பக்கங்கள்!
பாகம் 1 –வேதகாலமுதல் சோழர்காலம் வரை-பக்கம் -384
பாகம் 2,3–சுல்தான்கள் காலம், முகலாயர் காலம்-பக்கம்-588
பாகம் 4 –கிழக்கிந்தியக் கம்பெனி காலம் –பக்கம்-264
பாகம் 5 –பிரிட்டனின் நேரடி ஆட்சிக் காலம் – பக்கம் - 552
பாகம் 6 –நேரு காலம் – பக்கம் – 396
பாகம் 7 –இந்திரா காலம் – பக்கம் - 416
பாகம் 8 –ராஜிவ், ராவ் காலம் – பக்கம் – 636

இதனை எழுதிய பேராசிரியர் அருணன் அவர்களுக்குத் தமிழர்களும், இந்திய ஆய்வாளர்களும் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
இலக்கியம் – வரலாறு – மார்க்சியம் ஆகிய இந்த மூன்றிலும் தெளிவாகத் தேர்ந்த ஒருவர்தான் இந்தமாதிரியான ஆய்வுகளைச் சரியாகச் செய்யமுடியும் என்பதை இந்த நூல்களைப் படிப்பவர்கள் உணர முடியும்.
எட்டுப்பாகங்கள் அடங்கிய ஏழு நூல்களின் விலை ரூ.2,000. ஆனால், இருபது விழுக்காடு கழிவு தந்து அஞ்சல் செலவையும் பதிப்பகமே ஏற்றுக்கொள்கிறது.

நூல் கிடைக்குமிடம் –
வசந்தம் வெளியீட்டகம்,
69-24ஏ அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை-625 001
தொலை பேசி-0452 2625555,
நூலாசிரியரின் அலைபேசி- 9443701997
மின்னஞ்சல் – vasanthamtamil@yahoo.co.in
--------------------------------------------------------------------------------------------------