“பீ வருது” என்று நம் குழந்தை சொல்லக்கூட நாம் அனுமதிப்பதில்லை.
அதுக்கு, “ஆய்” அல்லது மராட்டி மொழியிலிருந்து வந்த, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கும்
“கக்கா” என்று தான் சொல்லப் பழக்கிவிடுகிறோம்! (கக்கன் எனும் நம் தமிழகத் தலைவர் ஒருவரின் பெயர் இதிலிருந்து வந்ததுதான் என்றும் ஒரு குறிப்புண்டு!)
அல்லது தமிழிலக்கணம் சொல்லும்
“இடக்கரடக்கல்” முறைப்படி “ரெண்டு” என்று ஒரு எண்ணின் பெயரைச் சம்பந்தமில்லாமல் வைத்து
நாம் மட்டும் நாகரிகமாகிவிடுகிறோம்!
ஒன்னுக்கு- மூத்திரம், ரெண்டுக்கு – பீ என்று
“நாகரிகமாக” சொல்லப் பழக்கியிருக்கிறோம்தானே?
என்ன அசிங்கமாப் போகுதேன்னு
பாக்குறீங்களா?
ஓரிரு நிமிடம் படிக்கவே முடியாம
மூக்கப் பொத்திக்கிறீங்களே.........?
அதுவும் நம்ம குழந்தையோட கழிவையே
சொல்லத் தயங்குறோமே? அள்ளத் தயங்க மாட்டமா?
ஆனால்...
ஊரார் பீயெல்லாம் அள்ளும்
ஒரு மனிதக் கூட்டம் நம்மைச் சுற்றிச் செத்துச் செத்துப் பிழைக்கிறதே அதுபற்றி யாராவது
யோசித்தோமா?
இத்தனைக்கும் “மனிதக் கழிவை
மனிதனே எடுக்கும், சுமக்கும்” இந்த அசிங்கத்தைச் சட்ட ரீதியாகத் தடுத்துவிட்டதாகப்
பீற்றல்வேறு!
அந்தச் சின்னப் பெண் திவ்யாபாரதி (வயது-25!)
ஓர்ஆவணப்படம் எடுத்திருக்கிறார்-
படத்தின் பெயர் “கக்கூஸ்”!
என்ன அதிர்ச்சியா? அருவெறுப்பா?
ஒன்றரை மணிநேரம்
நம்மை முடியைப்
பிடித்திழுத்துச்
சப்சப்பென்று அறைந்து தள்ளி
மூச்சுத் திணர வைத்து விடுகிறார்!
இப்படி என்னை
உலுக்கிய படத்தை
இதுவரை நான் பார்த்ததில்லை!