தமிழன் என்று சொல்லடா! தலைகுனிந்து நில்லடா!

மாணவர்கள் காப்பாற்றிய தமிழ்ப் பண்பாட்டை, மந்திரிகள் காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள்!!

ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?”
ஆமா… அது இப்ப ரொம்ப முக்கியம்! 

ஜனவரி 18முதல் 22வரை லட்சக்கணக்கில் திரண்டு மாணவர்களும் மாணவியரும், இளைஞர்களும் பெற்றோர்களும் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள்! தமிழகம் மகிழ்ந்து நெகிழ்ந்து போனது!

ஒரு போராட்டத்தை -பண்பாட்டுப் போராட்டத்தை- எப்படி நடத்த வேண்டும் என்று பெரியவர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டுப் போனார்கள் இளையவர்கள்! ஆனாலும் பெரிசுகள் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை! (அந்த மேலோர்(?) சொன்னதை மறந்தார்!)ஆனால், ஜனவரி 23ஆம் தேதியே அதில் மண்ணைவாரிப் போட்டார்கள்! அது, அதைக்கையாண்ட அரசுக் காவல்துறையின் காட்டுமிராண்டித் தனத்தைத் தோலுரித்தும் காட்டி, விசாரணையில் விழுந்திருக்கிறது!

அந்தக் காட்டுமிராண்டித் தனத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், மக்கள் பிரதிநிதிகளின் அநாகரிக உச்சம் தமிழர்களைத் தலைகுனிய வைத்திருக்கிறது!

திருமிகு ஓ.பன்னீர் செல்வத்தின் சாதனைகள்!
“மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்” என்று திருமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களையும்,                        
“உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்” என்று, திருமிகு மு.கருணாநிதி அவர்களையும், “பொன்மனச் செல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்கள்” என்று திருமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களையும்         சொல்லக் கேட்டுக் கேட்டு, இவர்களுக்குச் சொந்தப் பேரே இல்லையோ என்று இன்றைய இளைஞர்களுக்குப் பெரிய சந்தேகமே இருக்கிறது!

46ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதல்வரைப் பெயர்சொல்லி அழைப்பதை திருமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அனுமதிப்பது மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிதான்!

ஊடகர் அனைவரும் அவரை “வணக்கம் திரு பன்னீர்செல்வம் அவர்களே!” என்று வரவேற்றதையும், அவரை வைத்துக்கொண்டே, “தமிழக முதல்வர் திரு ஒ.பன்னீர்செல்வத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோம்..” என்று சொல்வதும் வியப்படைய வைத்தது!

ஆனால்...
முன்னர் இவர்தான், பகிரங்கமாக, மேடைகளிலேயே ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர் என்பதை மறக்க முடியுமா என்ன?!
அவரது மறைவின் பின், அரசிலோ அரசியலிலோ நேரடி அனுபவம் ஏதும் இல்லாத வி.கே.சசிகலாவை அவர்கள் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்வு செய்த தீர்மானத்தை அவர் கையில் கொடுத்துவிட்டுக் காலில் விழுந்தவர் என்பதைத்தான் மறக்க முடியுமா என்ன?!!!

அவரையே முதல்வராகவும் முன்மொழிந்துவிட்டு, அவருக்கு அருகில் சிரித்துப் பேசிக்கொண்டும் இருந்துவிட்டு, 48மணிநேரத்தில் “மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மாவின் கருத்தின்படி” சசிகலாவை எதிர்த்து “தனிஆளாக” போராடத் தொடங்கிவிட்டார்!

அதன்பிறகு தொலைக் காட்சிகளின் வண்ணக் கோலங்கள்தான் என்ன என்ன என்ன?!!??
பிறகென்ன? 
“தமிழன் என்று சொல்லடா 
தலைகுனிந்து நில்லடா”தான்!

இந்தப் பக்கம் ஒருவர் இருவராக வந்துகொண்டிருக்கிறார்கள்!
அந்தப் பக்கம் அனைவரையும் கோழி அமுக்குவதுபோல அமுக்கி, வசதி வாய்ப்புகளை வாரி வழங்கி, -1988இல் ஒருநாவுக்கரசர் செய்ததை இப்போது பலநாவுக்கரசர்கள் செய்ய- சொகுசுப் பேருந்துகளில் ஏற்றப் பட்டு, சொகுசு பங்களாக்களில் அடைக்கப்பட்டுள்ளதாக எல்லாத் தொலைக்காட்சிச் செய்திகளும் எரிச்சலூட்டுகின்றன!

தப்பி வந்த திரு சண்முகநாதன் இதை பகிரங்கமாகப் போட்டு உடைத்தார்! (படம் -08-02-2017 இரவு10.35)
சசியிடமிருந்து “தப்பித்து”
பன்னீரிடம் வந்த,  

திருவைகுண்டம் எம்.எல்.ஏ.!
ஆடுகளா? மாடுகளா? 
அடைத்துப் போட்டு ஓட்டுப் பிடுங்க?!
இருதிறத்திலும் மாறிமாறி வீசிய, வீசப்போகும் வரலாற்றுச் சாணிகளில் நாறப் போவது தமிழரின் மானம், ரோஷம், வெட்கம், சூடு சொரணைதான்! 

“எற்றிற் குரியர் கயவர்? ஒன்று உற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து”  – திருக்குறள்

எல்லாம் சரி.. இரவு தூக்கம் வராது போலப் பாயைப் பிராண்டிக்கொண்டு கிடப்போர் பலர்!
ஆளுநர் என்ன முடிவெடுப்பார்? 
என்பது அடுத்த பெரிய கேள்வி!

அனேகமாக நாளைக் காலையில் தெரிந்துவிடும்!
அவர் என்ன முடிவெடுத்தாலும், 
காற்றில் பறந்த தமிழரின் மானத்தை 
இனிமேல் காப்பாற்ற முடியுமா என்ன?

ஓ.பி.எஸ். வருவதே தார்மீக நெறி எனும் கமலும்,
வி.கே.எஸ்.வருவதே சட்டவழி எனும் சு.சுவாமியும் சொல்வதெல்லாம் நிரந்தரத் தீர்வாகாது!

இனிமேல் இதுபோல் 
தமிழர்மானம் கப்பலேறாமல்
“இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்” – எனும் திருக்குறளை கோனார் நோட்ஸ் வைத்தாவது தமிழர்கள் படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய தருணமிது!

“ஒருவீர் தோற்பினும் தோற்பது நும்குடி!
இருவீர் வேறல் இயற்கையும் இல்லை” -புறநானூறு

விரைவில் தமிழகச் சட்டமன்றத் 
தேர்தல் வருவது உறுதி!!!
இதில் “மோடி வித்தை”யும் இருப்பதை மறுப்பதற்கில்லை!
அவர் –
வி.கே.எஸ் தலையில் கைவைத்து 
ஆசியும் காட்டுவார்!
ஓ.பி.எஸ். தலைமைக்கு 
ஆசையும் ஊட்டுவார்!
நன்றி - கருத்துப் பட ஓவியர் சுரேந்தர்
மக்கள் இந்த 
நடிப்புச் சுதேசிகளை யெல்லாம்
புரிந்துகொள்ளாத வரை 
விரல்கள் மட்டுமல்ல,
தமிழ்ப்பண்பாடும்
 கறைபடிவதைத்
தவிர்க்க முடியாது!

விதியே விதியே தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயடா! – பாரதி

26 கருத்துகள்:

 1. நான் தமிழன் இல்லை. ஆகவே தலை நிமிர்ந்து நிற்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஙே... (அய்யா மதுரைத் தமிழரே! அந்த உங்கள் அழகு விழிகளைக் கொஞ்சம் கடன் கொடுங்கள்!)

   நீக்கு
 2. உண்மைதான் ஐயா
  மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
  நிச்சயம் புரிந்து கொள்வார்கள்

  பதிலளிநீக்கு
 3. சிந்தனை என்று ஒன்று உண்டு
  சுய அறிவு என்று ஒன்று உண்டு
  தெரிந்து தெளிதல் உண்டு
  இன்னும் நிறைய உண்டு...
  ஆனால்...!!

  பதிலளிநீக்கு
 4. இதற்காக தான் அரசியலை சாக்கடை என்று கூறினார்கள் போல...புரியுது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி ஒதுங்கிப் போனால் பன்றிகள்தான் தொடரும் பரவாயில்லையா? சுத்தம் பண்ண வழியில்லாமல் இல்லை! நான் நம் இளைஞர்களை நம்புகிறேன். அப்ப நீங்க?

   நீக்கு
 5. பயனுள்ள பதிவு அப்பா. அரசியல் சாக்கடை என்பதை வெளிபடுத்திக் கொண்டு வருகிறார்கள். நாட்டில் நடக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றுதான் நிர்ணயிக்கப்பட்ட தலைவர்கள். ஆனால் இன்று அவர்களுக்குள் வரும் பிரச்சனைகளை தீர்க்கவே ஒரு தலைமை வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களால் எப்படி நாட்டை நல்லரசாக மாற்ற முடியும். ?? அப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியலைச் சாக்கடையாக்கி இருக்கிறார்கள்.
   இளைஞர்கள் நினைத்தால் சுத்தப்படுத்த முடியும். சுத்தமானவர் சிலரும் இருக்கிறார்கள். ஊடக வெளிச்சமின்றிக் கிடக்கும் அவர்களை அடையாளம் காணவேண்டியது அறிந்தவர் கடன்

   நீக்கு
 6. இப்போதைய நிலையில் இரண்டில் ஒன்று ஆட்சிக்கு என்று விரலை நீட்டினால் எங்கேனும் வரவே கூடாது என்று பெரும்பான்மையினர் நினைப்பதைத் தொட்டுவிடும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. கூவத்தில் எந்தக் கூவம் சிறந்த கூவம் என்பதுதான் முடிவு செய்ய வேண்டிய நிலை என்றானால்...???!!!

  இரண்டும் அல்லாமல் இரண்டுடன் மூன்றாவது விரல் ஒன்று நீட்டினால் அதை மக்கள் உணர்ந்து வரவேற்றால் நல்லது. நிறைய பேர் அதை விரும்புவது போலும் உள்ளது,. அதான் தேர்தல்! சட்ட மன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல். மூன்றாவதாக ஒரு நல்ல தலைமை தமிழ்நாட்டிற்கு அவசியம் அதுவும் இந்த இடைவெளியைப் பயன்படுத்தும் வகையில், பயன்படுத்திக் கொண்டு வருவதற்கான எல்லா சாத்தியக் கூறும் இருக்கும் நிலையில் அப்படி ஒன்று நிகழுமா நிகழாதா என்ற ஏக்கம் இருந்தாலும், கூடவே தேர்தல் நிகழ்ந்தால் நாம் எதிர்பார்க்கும் நல்ல தலைமை இல்லாமல் வேறு நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. தமிழகத்திற்கு இப்படி ஒரு நிலைமை வேண்டுமா....உங்களின் இறுதி வரியை நீல வரிகள் சரியே!!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  ஐயா
  தமிழ்நாட்டு தலைமைகளை நம்பி தமிழக மக்களும் வாழமுடியாது ஐயா படம்நல்ல கருத்தை சொல்லுகிறது

  பதிலளிநீக்கு
 8. கிழித்துத் தொங்க விட்டு விட்டீர்கள் ஐயா! சசிகலா, பன்னீர்செல்வம் இருவருமே மோசம்தான் என்பதுதான் என் கருத்தும். ஆனால் அதை இப்படி வெளிப்படையான பதிவாகவே வெளியிட்டுள்ள உங்கள் துணிச்சல் அபாரம்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. முக்கிய செய்தி :ஆளுநர் பெப்ரவரி 30ஆம் தேதி (?????) சசிகலாவை பதவியேற்க அழைப்பு...!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா நீர் தீர்க்க தரிசிதான்!
   அழைக்கவே போவதில்லை என்று இப்போது இரவு 10.30மணிச் செய்தி!
   (ஆனால் இந்த வருடம் 29ஆம் தேதின்னுல்ல நான் கேள்விப்பட்டேன்!)

   நீக்கு
 10. அறிவுரை கூறுவதற்கும் திருக்குறளை மேற்கோளாய் காட்டி வாய் கிழிய பேசுவதற்கும் நமக்கு நிகர் நாம்தான்.
  என்னதான் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்?

  சரி சட்டசபை தேர்தல் வருகிறது என்று வைத்து கொள்ளுங்கள்..உங்கள் ஓட்டு யாருக்கு?

  காமராஜரும் கக்கனுமா தேர்தலில் நிற்கிறார்கள்?

  திமுகவும் அதிமுகவும் பெயர் மட்டும்தான் வேறு வேறு..கொள்ளையிலும் கொள்கையிலும் ஒன்று..

  வைகோ,விஜயகாந்த் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை...

  கம்யூனிஸ்ட் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்கள்...

  எஞ்சி நிற்பது சீமானும் சில ஜாதி கட்சிகளும்தான்...

  யாருக்குத்தான் ஓட்டு போடுவது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்

   தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
   தீரா இடும்பை தரும்

   விடுபட்ட குறள்களை நினைவூட்டியமைக்கு நன்றிகள் அய்யா! வணக்கம்.

   நீக்கு
 11. சிறப்பாக அலசியுள்ளீர்கள்
  தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

  பதிலளிநீக்கு
 12. அங்கே நடப்பதைக் கேட்கும்போது வருத்தம் தான் மிஞ்சுகிறது.... இன்னும் என்னன்ன பார்க்க வேண்டியிருக்குமோ.....

  பதிலளிநீக்கு