எனது ”முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” நூலின் இரண்டாம் பதிப்பு



முதல்பதிப்புப் படிக்காதவர்களுக்காக, நூலில் இடம்பெற்ற கட்டுரைகளின் தலைப்புகள் – (வெளிவந்த விவரம்)


(1)  ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்? (கீற்று)

(2)  கல்வி புகட்டுவது சரியா? ( எனது வலைப் பக்கக் கட்டுரை)

(3)  சமச்சீர்க் கல்வி அரசும் ஆசிரியர்களும் (ஜனசக்தி நாளிதழ்)

(4)  சமச்சீர்க் கல்வி -வாராது போல்வந்த மாமணி (ஜனசக்தி)

(5)  விண்ணப்பித்து வாங்குவதா விருது? (தினமணி நாளிதழ்)

(6)  முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே! (தினமணி இணையம்)

(7)  தனியார் பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன?(வலைப் பக்கம்)

(8)  தமிழ்ப்பாட நூல்களில் தமிழ் (தீக்கதிர் செம்மொழி மாநாட்டு மலர்)

(9)  கல்வியில் ஜனநாயகம், மறுமதிப்பீடு தேவை (தினமணி)

(10)     தமிழாசிரியர் செய்யும் தமிழ்நடைப் பிழைகள்(வலை)

(11)     9,11ஆம் வகுப்புகள் தேவையில்லையா? (சிந்தனையாளன் மலர்)

(12)     தமிழில் அதிகத் தோல்விக்குக் காரணம் என்ன? (வலை)

(13)     பழங்கதைகள் மறுவாசிப்பு அவசியம் (வலை)

(14)     எனது ஆசிரியப் பணியில் சில நல்ல நாள்கள் (வலை)

(15)     எனக்கு என் மாணவன் தந்த நல்ல ஆசிரியர் விருது (வலை)

(16)     பாடத்திட்டத்தில் ஊடகம் (தினமணி)

(17)     தமிழ்வழிக் கல்வியில் இருமுனைத் தவறுகள் (என் மகள் திருமணத்திற்கு வந்தோர்க்குத் தரப்பட்ட சிறுநூல்)

(18)     தமிழ்வழிக் கல்விக்குத் தடையென்ன? (என் மகன் திருமணத்திற்கு வந்தோர்க்குத் தரப்பட்ட சிறுநூல்)
-------------------------------------------------------------------------------- 

இரண்டாம் பதிப்பின் பின்னுரையாக என்னுரை -
எனது நூல் தந்த மகிழ்ச்சியும், கவலையும்!
இந்தநூல், இரண்டாண்டுகளில் நன்றாக விற்றிருக்கிறது. பிரதிகள் முடிந்தது மட்டுமல்ல, அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அமைப்புகள், சமூகஆர்வலர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள் எனப் பலரும் 50, 100 பிரதிகளாக வாங்கியது எனக்கு மகிழ்ச்சியளித்தது!
சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஒருவரும், திருச்சி பெல் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும், விடுதியில் படிக்கும் தம் மகளுக்கு / மகனுக்கு இந்த நூலை அனுப்பி வைக்க முகவரிதந்து, பணமும் அனுப்பியது மகிழ்ச்சியளித்தது!
இதுபோல நிறைய நிகழ்வுகள்!...
தூத்துக்குடியிலிருந்து மீனவர் ஒருவர் பேசினார், ”நா அதிகம் படிக்கலிங்க, ஆனா நிறையப் புத்தகம் படிப்பேன். உங்க புத்தகத்தை வாங்கிப் படிச்சிட்டு, பக்கத்திலுள்ள பள்ளி ஆசிரியர்கள்ட்ட குடுத்தேன். அவங்க சுற்றுக்கு விட்டிருக்காங்களாம். இப்ப எனக்கு அதன் பிரதி கிடைக்கலிங்க… மதுரை, நெல்லை, தூத்துக்குடியில எங்க கிடைக்கும்?” என்று கேட்டார்.
ஈரோடு அருகிலுள்ள கிராமத்திலிருந்து, போக்குவரத்து ஊழியர் ஒருவர் பேசினார். கல்லூரியில் படிக்கும் தன் மகளுக்கு அந்த நூல் மிகவும் பிடித்திருப்பதாகவும், நானெழுதிய மற்றநூல்கள் கிடைக்குமா என்று கேட்டார்.
இவைபோலும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தந்த நிகழ்ச்சிகள் பல!
ஆனால்…
“தொலைக்காட்சிப் புக”ழோடு, என்னைப் பேச அழைத்த சில இடங்களில், என்னை “அறிமுகம்”  செய்தவர்கள், நான் எழுதிய நூல்பட்டியலை வாசிக்கும்போது,  இந்தநூல் தலைப்பை மட்டும் கவனமாக விட்டுவிட்டதையும் கவனித்தேன்!
பெற்றோரும் ஆசிரியருமான சிலர் “ஆசிரியரே மதிப்பெண் எடுக்க வேண்டாம் என்பது எந்தவிதத்தில் சரி?” என்று என்னிடம் சண்டைக்கே வந்தார்கள்!
இதுபோலும் குழப்பத்திலிருந்த சிலரைக் கண்ட நம் கோவை, அவிநாசி தமுஎகச நண்பர்கள், “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” என்றே என்னைப் பேச அழைத்து, நான் பேசியதை கவனமாகக் கேட்டு மகிழ்ந்து போனார்கள்!
நமது நாளிதழ், வார, மாத, இணைய இதழ்களில் இந்த நூலைப்பற்றி விரிவாக ஆய்வு செய்து பாராட்டியவர்களே அதிகம். தனிப்படப் பேசி, கடிதம் எழுதி, மின்னஞ்சல் வழிப் பாராட்டிய பலநூற்றுவர் பட்டியலை இணைத்தால் விளம்பரம் போலாகும், அவர்கள் அனைவர்க்கும் என் நெஞ்சு நெகிழும் நன்றி.
சரி, மருந்து அதிகமாக விற்கிறது என்றால் என்ன பொருள்? மாற்றுத் தேவைப்படும் அளவிற்கு நம் கல்விமுறையில் பிரச்சினைகள் உள்ளன என்பது பொருள், மாற்றுக் கல்வியைத் தேடுகிறார்கள் என்று பொருள்!
இப்போது, புதிய கல்விக்கொள்கை வருகிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, “வரைவு தேசியக் கல்விக்கொள்கை– சில உள்ளீடுகள்” எனும் 199பக்க அறிக்கையை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இதைப் படித்துப் பார்த்தால், “குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை”தான் நினைவுக்கு வருகிறது. “ஏற்கெனவே வாய் கோணலாம் இதுல கொட்டாவி வேறயாம்” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
நமது கல்விமுறையில் ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளைக் களையவே பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. இப்போது, கிராமத்துப் பள்ளிகளை, அரசுக்கல்லூரிகளை, உயர்கல்வி நிறுவனங்களை அரசே கைகழுவும் நிலை வருகிறது! எனவே நமக்கு இன்னும் வேலை உள்ளது என்னும் கவலை எழுகிறது. அடுத்த நூலோடு விரைவில் சந்திக்கிறேன்.
நூலை வெளியிட்ட அன்னம் பதிப்பகம் மீரா.கதிர் அவர்களுக்கும், அர்த்தமுள்ள அட்டைப்படம் வரைந்தளித்த ஓவியத் தோழர் ட்ராட்ஸ்கி மருது அவர்களுக்கும்,  நூலைப் படித்து, கருத்துத் தெரிவித்த, பாராட்டிய, வாங்கி ஆதரவளித்த, மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திய  அனைவர்க்கும் எனது நன்றியும், வணக்கமும்.
புதிய கல்விக் கவலையுடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை -622 004. 22-9-2016
மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com
செல்பேசி – 94431 93293
------------------------------------------------------------
நன்றி -
இந்நூலுக்கு விருகள் தந்தும், நூல்விமர்சனம், நூலறிமுகம், நூலாசிரியர் நேர்காணல் எனப் பெருமை செய்த தமிழறிஞர்கள், ஆசிரிய அமைப்புகள், கல்விநிறுவனங்கள் தமிழ் அமைப்புகள், இதழ்கள், இணையம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நன்றி.
0 கடிதம் எழுதிப் பாராட்டிய கவிஞர் சிற்பி அவர்கள்,
0 தொலைக்காட்சியில் அறிமுகம் செய்த பேரா. சுப.வீ.அவர்கள்,
0 நேர்காணல் வெளியிட்ட பொதிகை, கலைஞர் தொலைக் காட்சிகள்
0 நூலாசிரியர் நேர்காணல் வெளியிட்ட அமுதசுரபி, மஞ்சரி இதழ்கள்,
0 விருதளித்த சென்னை “கவிதை-உறவு”, சேலம் “சிகரம்”,
கம்பம் பாரதிதாசன் பேரவை, திருப்பூர் தமிழ்ச்சங்கம்
0 விமர்சனங்கள், நூலறிமுகம் செய்த கல்கி-வாரஇதழ், புதிய தலைமுறைக் கல்வி வாரஇதழ், செம்மலர், உங்கள் நூலகம், உண்மை ஆகியமாத இதழ்கள்,
0 இந்து-தமிழ், தினத்தந்தி, தினமலர், தீக்கதிர், ஜனசக்தி, நாளிதழ்கள்
0 அழைத்து கௌரவித்த ஆசிரியர் , சமூக இயக்கங்கள்.
0 படித்துவிட்டு நூலாசிரியருடன் பேசிய அனைவருக்கும்
நன்றி நன்றி நன்றி
---------------------------------------------------------------------------------------
விமர்சனம் – நூலறிமுகம் மற்றும் பாராட்டுத் துளிகள் ...
அன்பார்ந்த முத்துநிலவன்,
ஒரு கல்வியாளரின் கடமையை மிகப் பொறுப்பாகச் செய்திருக்கிறீர்கள்! … முன்னர் சில ஆண்டுகள், தமிழ்வழிக் கல்வி இல்லாத தமிழகத்தை நினைத்து பல இரவுகள் உறக்கமின்றித் தவித்திருக்கிறேன். இன்று என் முதுமைக் காலத்தில், தமிழ்வழிக் கல்வி, ஆசிரியர் நிலை, மாணவர் எதிர்காலம், என எண்ணி எண்ணி நொந்து சலித்துப் போய்விட்டேன்.
இந்நிலையில், காயம்பட்ட என்மனதுக்கு உங்கள்நூல் மருந்தாக இருக்கிறது. உங்கள் சிந்தனைகளை, இயன்ற வழிகளிலெல்லாம் பரப்புங்கள். இன்றில்லா விட்டாலும் நாளை நல்லது நடக்க அது உந்துவிசையாக இருக்கட்டும்!
மிக்க அன்புடன்,
சிற்பி பாலசுப்பிரமணியம்,
(16-6-2015 கடிதம்)
---------------------------------------------------------------
“பேசும் எழுத்துகள் எப்போதும் ஈர்க்கின்றன! திரு.வி.க.தொடங்கிவைத்த மரபு. அந்த மரபின் விளைச்சலாக இருக்கிறது “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” முத்துநிலவன் எழுத்து, உள்ளொடுங்கிய எழுத்தல்ல, கணீரென்று சத்தமிட்டு, ஒலிக்கும் எழுத்து ஆம்! எழுத்து பேசுகிறது! முத்துநிலவனின் புத்தகம் பேசுகிறது! பேசும் எழுத்து நிச்சயம் நடக்கும்! இந்நூல் அந்த நம்பிக்கையின் தொடக்கம்!”
--பேராசிரியர் ச.மாடசாமி (தீக்கதிர்-25-01-15)
---------------------------------------------------------------
“நூலாசிரியர் முத்துநிலவனின் என்னுரை, இன்னொரு கட்டுரையாகவே அமைந்துள்ளது. ஆனால், அது ஒரு குறையில்லை என்பதாக, மற்ற கட்டுரைகளில் இடம்பெறாத தகவல்கள் இதில் உள்ளன. குறிப்பாக, சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, இந்த ஊறுகாய்களைக் கனிய வைக்க முடியாது என வெறுத்து வெளியேறியதிலேயே அவரின் அறச்சீற்றம் தொடங்கிவிடுகிறது. இது நூலின் இதர கட்டுரைகளிலும் விரவிக்கிடக்கிறது. ... அதிக மதிப்பெண் பெறும் எந்திரங்களாக மாணவர்களை மாற்றாமல், மனித நேயம் கொண்டவர்களாகவும், சமூக அக்கறை உள்ளவர்களாகவும் வளர்ப்பதற்கான கல்வியை உருவாக்க வேண்டும் என்றும், இதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும், அரசு நிர்வாகமும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அல்லது செயல்பட வைப்பதற்கான இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்ற விவாதத்திற்கு இந்நூல் பெரிதும் உதவும்”
--- மயிலை பாலு (செம்மலர் பிப்.2015 மாத இதழ்)
-------------------------------------------------------------------------------
“ஒரு கவிதைப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிடலாம். ஒரு கதைப் புத்தகத்தைக் கூட கைமாற்றாமல் படித்து முடித்துவிடலாம். ஒரு கட்டுரைத் தொகுப்பைப் படிக்கத் தொடங்கியதிலிருந்து கீழே வைக்க மனமின்றிப் படித்து முடித்த பின்னும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் ஒரு வாரமாக அவதிப்பட முடியுமா? முடியும் என்கிறது கவிஞர் நா.முத்துநிலவனி்ன் கட்டுரைத் தொகுப்பான “முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” நூல்!”
--ஆர்.நீலா (உங்கள் நூலகம் மாத இதழ் ஜூலை,2015)
-------------------------------------------------------------------------------
“தமிழகத்தில் கல்விபற்றி விவாதங்களும் கருத்தாடல்களும் சமீப காலங்களில் கூடுதலாய் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. இது நல்ல தொடக்கமே! அத்தகைய முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் வெளிவந்துள்ள நூல் இது. ஒவ்வொரு கட்டுரையும் எளிமையாகவும், தெளிவாகவும் பலப்பல கேள்விகளை வாசகனுக்குள் எழுப்புகின்றன. கல்வியாளர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என சகலரும் வாசிக்கவேண்டிய மாற்றுக் கல்விக்கான சிந்தனை விதைப்பு”
– மு.முருகேஷ் - (தமிழ் இந்து – நாளிதழ் 27-12-2014)
--------------------------------------------
சுவையாக இருக்கவேண்டிய கல்வி, சுமையாக மாறிப்போகக் காரணம்என்ன? என்பது குறித்து, ஆசிரியத் தொழிலில் தாம்பெற்ற அனுபவத்திலிருந்து விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். சிந்தித்து, நாட்டு முன்னேற்றத்தில் பங்கேற்கும் செயல்வீரர்களை உருவாக்குவதற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்பதுடன், தேர்வு முறையில் செய்ய வேண்டிய மாற்றங்களை எடுத்துரைத்திருப்பது சிறப்பு
--ஜி.மீனாட்சி (புதிய தலைமுறை கல்வி -08-ஜனவரி, 2015)
---------------------------------------------------------------------------
விடுதலைபெற்று 68ஆண்டுகள் ஆனபின்னும் சுய சிந்தனைக்கான கல்வி இன்னும் எமது மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை எனது 34ஆண்டுக் காலக் கற்பித்தல் அனுபவத்தில் கண்டேன்என்கிற சுயவிமர்சனத்தோடு இந்த ஆழமான சிந்தனைகளுக்குரிய நூலை வெளியிட்டிருக்கிறார் நா.முத்துநிலவன். நடுத்தர வர்க்கத்தின் ஆடம்பரத்தில் கல்வியும் அகப்பட்டுத் தவிக்கிறதே?“ என்கிற  ஆதங்கத்தோடு, பழுத்த அனுபவமுள்ள ஒரு ஆசிரியரே கேள்வியெழுப்புவது வேதனைக்குரியதுதான்.
-- சுப்ரபாலன், (கல்கி வாரஇதழ்–04-01-2015)
--------------------------------------------------
இத் தொகுப்பின் ஆசிரியரான நா.முத்துநிலவன் உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், கவிஞர், கட்டுரையாளர், சமூகச் சிந்தனையாளர், வலைப்பதிவாளர், கருத்தரங்குகளில் மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முழங்குபவர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் பள்ளி ஆசிரியர் என்ற அவரின் தகுதி தான் இந்த நூலை இன்னும் வேகமெடுத்து உண்மை நிலையை உரக்கப் பேச வைக்கிறது. பொதுவாக மதிப்பெண்களை நோக்கி ஓடவைக்கும் பற்சக்கரங்களாக இருக்கும் ஆசிரிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் என்று வந்த குரல் தான் இத்தொகுப்பை நோக்கி என்னை நகர்த்திப் போனது.
மு.கோபிசரபோஜி - (http://puthu.thinnai.com/?p=29893)இணைய இதழ்
-------------------------------------------------------------------------------
“புத்தகத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருந்தது. அப்படி என்ன தான் இப்புத்தகத்தில் உள்ளது என சில பக்கங்களைப் புரட்டினால் ஏற்படும் பாதிப்புகள், கண்ணீர் சிந்த வைக்கும் சில உண்மை சம்பவங்கள், நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள் மற்றும் 159 பக்கத்தில் கல்வி முறையில் நாம் காண வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்நூல் வெவ்வேறு தளங்களில் நின்று பேசுகிறது.
தமிழகத்தில் கல்வித் தளத்தில் செயல்படும் பல அமைப்புக்கள் இந்நூலை வாசித்து அதற்காக அங்கீகாரம் அளித்து வரும் செய்திகளை காணும் போது ஒரு நல்ல மாற்றத்தை நோக்கிய பயணத்திற்கான வழிகாட்டியாக இந்நூல் இருக்கின்றது என்பது மகிழ்ச்சியே
--மு.சிவகுரு (http://maattru.com/ இணைய இதழ்)

----------------------------------------------------------------
முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!”
நூல் பிரதிகள் பெற
அன்னம் பதிப்பகம்,

மனை எண்-1, நிர்மலா நகர்,

தஞ்சாவூர்-613007,

தொலைபேசி-04362 229289
--அல்லது--
நூலாசிரியர் செல்பேசி எண் - 94431 93293
மின்னஞ்சல்- muthunilavanpdk@gmail.com
-------------------------------------------------------------------------------  

31 கருத்துகள்:

  1. கவிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவகையிலும் நன்றிகள் நண்பரே. தங்களின் அடுத்த வருகையை எதிர்பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  2. வணக்கங்களும் வாழ்த்துக்களும் ஐயா!

    படிப்போர் மனதில் தங்களின் நூற்கருத்து அதிர்வலைகளையும் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

    ஓர் எழுத்தாளனுக்கு இதைவிட நற்பேறு ஏதுளது?

    தங்களின் ஆக்கங்கள் மென்மேலும் தொடரவேண்டும்.

    த ம

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் விஜூ! எழுத்துகளும் பேச்சுகளும் யாரை நோக்கி என்பதில் எனக்குத் தெளிவுண்டு.அவை சரியாகச் சென்று சேரும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. தங்களின் மீள்வருகை வலையுலகினர் அனைவர்க்கும் தனிப்பட எனக்கும் மிக்க மகிழ்ச்சி. தங்கள் தமிழ் தொடர வேண்டுகிறேன் (நான் இப்படித்தான் அவ்வப்போது தொழில்நுட்பச் சிக்கலில் மாட்டி விடுபட்டு வருகிறேன்)

      நீக்கு
  3. மகிழ்ச்சியான செய்தி. உங்களின் எழுத்துகள், உங்களின் பேச்சைப் போல ஆழமிக்கவை, பொருள் பொதிந்தவை. மென்மேலும் பல பதிப்புகள் காண வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றியும் வணக்கமும் அய்யா. தமிழ்ப்பல்கலைக்கழகக் கட்டட அமைப்பே “தமிழ்நாடு” என்னும் எழுத்துகளோடு உள்ளதாமே அய்யா! இப்போதுதான் அறிந்தேன். இதுபற்றித் தாங்கள் விரிவாக எழுத வேண்டுகிறேன். நன்றி

      நீக்கு
  4. ஐயா/அண்ணா மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் சொல்லி வருவது போல் மற்றும் பல நல்லாசிரியர்கள், மக்கள் விரும்புவது போல் நமது கல்வி முறை மாற வேண்டும். மாறுமா...நம்புவோம்.உங்கள் எழுத்து அந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். நம்புவோம். மீண்டும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் ஒன்றே மாறாதது! ஒரு காலத்தில் முழுஆண்டுத் தேர்வு முடிந்தவுடன், அடுத்த வகுப்புக்கான புத்தகங்களை -பயல்களுக்குக் கடலை மிட்டாய் வாங்கிக்கொடுத்து அரைவிலைக்கு வாங்கியது இப்ப மாறி, மே மாதத்தில் அடுத்த வகுப்பு நூல்களை அரசே இலவசமாகத் தருவது உள்ளிட்ட மாற்றங்கள் நடந்த கல்வித்துறையில் இன்னும் மாற்றங்கள் வரும், கல்விமுறையிலும் வரும் வரணும்! அதற்குத்தானே எழுதுகிறோம்! பேசுகிறோம்! தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி, வணக்கம்.

      நீக்கு
  5. முழுமையாக வாசித்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டாவது பதிப்பு அத்துடன் முக்கியமானவர்களின் வார்த்தைகள் என்பது உண்மையான விருது கிடைத்த மகிழ்ச்சி போல உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. நான் மதிக்கும் நல்ல எழுத்தாளரான தங்களின் மதிப்புரையை அடுத்த பதிப்பில் சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன். நடக்குமா நண்பரே?

      நீக்கு
  6. அருமையான சிந்தனைகளைத் தெளித்த
    சிறப்பான எண்ணங்களைப் பகிர்ந்த
    தங்கள் நூலின் இரண்டாம் பதிப்பு
    வெளிவந்த செய்தி - எல்லோருக்கும்
    மகிழ்வைத் தந்திருக்கலாம் - ஆனால்
    இந்நூல்
    மேலும் மேலும் - அடுத்தடுத்த
    பதிப்புகளாக வெளிவர வேண்டும் - அதுவே
    எனது விருப்பமாகும்!
    பாராட்டுக்கள் ஐயா!

    வலைப்பதிவர் சந்திப்பு
    இந்த ஆண்டு இடம்பெறவிட்டால்
    அடுத்த ஆண்டு - தாங்களே
    புதுக்கோட்டையில்
    வலைப்பதிவர் சந்திப்பை நடாத்தி உதவுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை, மதுரை, வேலூர், தஞ்சை உள்ளிட்ட நம் முன்னோடிப் பதிவர்களுடன் கலந்து பேசியபின் பதிலுரைக்க வேண்டிய கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். நானாக அல்லது நாங்களாக எப்படி முடிவெடுக்க முடியும் நண்பரே?

      நீக்கு
  7. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா
    மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றியும் வணக்கமும் அய்யா. புதிய மரபுகள் நூலுக்கான உங்கள் அறிமுகம் மறக்க முடியாதது அய்யா நன்றி கலந்த வணக்கம்.

      நீக்கு
  8. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் அய்யா

    www.raboobalan.blogspot.in

    பதிலளிநீக்கு
  9. இரண்டாம் பதிப்புக்கு வாழ்த்துக்கள் அண்ணா! இன்னும் பல பதிவுகள் இது காண வேண்டும். விரைவில் இந்த நூலை வாங்கிப்படித்து என் கருத்துக்களைப் பகிர்வேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புத் தங்கைக்கு, உன் முகவரியை எனக்குக் குறுஞ்செய்தி வழியே தெரிவிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  10. மகிழ்ச்சி... மூன்றாவது பதிப்பிலாவது படித்து விடுகிறேன்....

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள் அண்ணா...
    வரலாறு படைக்கும் இந்த நூல்
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மது. தங்கை மைதிலியின் பதிவுகளைக் காணாமல் வருந்துகிறேன். விரைவில் எழுதுவார் என நம்புகிறேன். இல்லன்னா... அதுபற்றியே ஒரு பதிவு எழுதப்போறேன்...சொல்லிவையுங்க!

      நீக்கு
    2. வலையுலகில் பட்டாம் பூச்சி போல சிறகடித்த மைதிலி டீச்சர இல்லாமல் இருப்பது வருத்ததைதான் அளிக்கிறது

      நீக்கு
  12. இரண்டாம் பதிப்பு காண்கிறது நூல் என்பது பெருமகிழ்ச்சியைத் தருகிறது.
    ஆனாலும், ஒருபக்கம் மாணவன் தற்கொலை, இன்னொரு பக்கம் ஆசிரியர் கொலை போன்ற செய்திகளைக் கண்ணுறும் போது, இன்னும் பல பதிப்புகள் காண வேண்டிய கட்டாயம் நேருமோ என்றொரு கவலையும்(??!!) வருகிறது அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்குறளுக்கே இன்னும் புதிய புதிய உரையெழுதிப் படித்துக்கொண்டேஏஏஏஏ இன்னொரு பக்கம் அநியாயங்களைச் செய்து குவிக்கும் சமூகத்தில்தானே நாம் வாழ்கிறோம்..என்றாலும் மறந்துவிடுவது மக்கள் இயல்பு, நினைவூட்டுவது நம் கடமையல்லவா? ஆறு குளங்களில் தூர்வாராவிட்டால் வரும் வெள்ளமும் வீணாகிவிடுமல்லவா நண்பா?

      நீக்கு
  13. இரண்டாம் பதிப்பு வெளிவந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இன்னும் அடுத்தடுத்த பதிப்புகளின் தேவை இருக்கிறது. மாற்றத்திற்கான மடக்குப் படிகள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சார். நலமா? நேரத்தை வேறு சில வேலைகளுக்காக செலவிட வேண்டிய சூழலும், அலைபேசியில் நேரம் கிடைக்கும் போது வாசிப்பதும் வலைப்பக்கங்களில் தொடர்ந்து உரையாடல் வழி பங்கேற்க இயலாது போய் விட்டது. மீண்டும் வலைப்பக்கம் நோக்கி நகர வேண்டும். நிற்க -
    மிக முக்கியமான நூல் மறு பதிப்பு காணாவிட்டால் தான் என்னளவில் ஆச்சர்யம். இந்த நூலைப் பொறுத்தவரை அது சென்றடைந்த இடமும், சென்றடைந்த நபர்களும் தான் எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. இன்னும் அரசு, ஆசிரிய, பெற்றோர்கள் மட்டத்தில் இந்நூல் வாசிப்பிற்கு வர வேண்டும். அதை தொடர் பதிப்புகள் சாத்தியமாக்கும் என்றே நம்புகிறேன்.
    இந்நூல் குறித்து ஆளுமைகள் பேசிய வெளியில் என்னையும் நிலைத்தகவலாக்கி இருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. மேலும் பல பதிப்புகள் வர வாழ்த்துகிறேன் அய்யா

    பதிலளிநீக்கு
  16. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அதுமட்டும்தான் என்னால் இப்போதைக்கு சொல்லமுடியும் ஏனென்றால் அந்த புக்கை படிக்காமால் நான் ஏதும் சொல்ல முடியாது அல்லவா ஆனால் ஒன்றுமட்டும் இப்போது சொல்ல முடியும் அதில் நல்ல பயனுள்ள விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று

    பதிலளிநீக்கு