வகுப்பறையில் ஆசிரியர் குத்திக் கொலை ! என்று தணியும் இந்தக் கொலைவெறி?


புதுடெல்லி நங்லாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், இந்தி ஆசிரியர் முகேஷ் குமார்

28-9-16 மாலை 5 மணியவில் வகுப்பறையில் தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் தன்னை ஏன் தேர்வு எழுத விடவில்லை என்று ஆசிரியர் முகேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போதிய வருகை பதிவு இல்லாததால் தேர்வு எழுத அனுமதியில்லை என்றார் ஆசிரியர்

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர், நண்பனுக்கு ஆதரவாக மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென ஆசிரியரைக் குத்தினார். அதைத்தொடர்ந்து வாக்குவாதம் செய்த மாணவரும் ஆசிரியரை கத்தியால் குத்தினார். சகமாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து 3 முறை ஆசிரியரை சரமாரியாக குத்திய மாணவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனே மற்ற வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிரியர் முகேஷ் குமாரை உடனடியாக பள்ளி அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் முகேஷ் குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆசிரியரை கத்தியால் குத்திய 2 மாணவர்களையும் போலீசார் சில மணி நேரத்திலேயே கைது செய்தனர். இறந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர் கொலைச் செய்திகளும், மாணவர் கைதுச் செய்திகளும் ஏற்கெனவே 20102இல் சென்னையில் நடந்த “ஆசிரியர் உமா மகேஸ்வரி கொலை, ஒன்பதாம் வகுப்பு மாணவர் இர்ஃபான் கைது” என்னும் செய்தியின் மறுபதிப்புத் தான்!
தமிழக அரசோ, டெல்லி அரசோ, மத்திய அரசோ கூட இதுபற்றிச் சிந்தித்து, இந்தக் கேடுகெட்ட தேர்வுமுறையை, கல்விமுறையை மாற்றாத வரை ஆசிரியர்கள் கொலை வழக்கமான செய்தியாகவே பார்க்கப்படும்! 
-----------------------------------------------------
இதன் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும்!

ஆசிரியரால் மாணவர் தற்கொலை!

ஆசிரியர் பாலியல் கொடுமையால் மாணவி தற்கொலை!

இவையெல்லாம் ஏன் நடக்கிறது? இதை எப்படித் தவிர்ப்பது?
இதுபற்றி நான் முன்னர் எழுதிய கட்டுரையைத்தான் மீண்டும் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது…
-----------------------------------------------------------------
நான் இதற்கெல்லாம் தீர்வுசொல்லியிருக்கிறேன் என்று பெருமை பேசிக்கொள்வதற்காக இதனை மீண்டும் பதிவிடவில்லை
மறப்பது மக்கள் இயல்பு, நினைவூட்டுவது நம் கடமை!
தீர்வு தெரிந்தும் செயல்படுத்தாமல் இருக்கும் அரசுகளைப்பற்றி நாம்தான் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதே நான் சொல்லவிரும்பும் செய்தி. வேறென்ன சொல்ல?
----------------------------------------------------------------------------------------
ஆசிரியர் உமா மகேஸ்வரியைக் கொலைசெய்தது யார்?
(இந்த எனது பழைய பதிவு இணையத்தில் ஏனோ கிடைப்பதில்லை, என்ன தொழில்நுட்பக் கோளாறென்றும் தெரியவில்ல. எனவே இங்கும் மீளப்பதிவிடுகிறேன்)
------------------------------------------------- 
chennai_teacher_umaஅருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலை உயிரும் ஆகிவிட்டான். ஆனால், சாகவில்லை. அவனால், சாக முடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளை யெல்லாம் மலர்மாலையாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள் 
அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த தன் தாய் குந்திதேவி, "அய்யோ மகனே!என்று கர்ணனைப் பார்த்துக் கதறித் துடிப்பதைப் பார்த்து, மேலும் அருச்சுனன் குழம்ப, கண்ணன், கர்ணன்தான் குந்திதேவியின் மூத்தமகன் எனும் கதையைச் சொல்ல, சிறிது நேரம் கழித்துக் கர்ணன் உயிர்விடுகிறான்
 இப்போது அருச்சுனனும் கதறியவாறு கர்ணன் அருகில் ஓடிச் சென்று "அய்யோ அண்ணா! நானே உன்னைக் கொன்று விட்டேனே! நானே உன்னைக் கொன்று விட்டேனே" என்று சொல்லி அழுதபோது, கண்ணன் அவனைக் கிண்டலாகப் பார்த்துச் சொன்னானாம்
 "நான் கொன்றேன் நான் கொன்றேன் என்கிறாயே! அருச்சுனா! நீ மட்டுமா கர்ணனைக் கொன்றாய்? அவனது குருநாதர் "சரியான நேரத்தில் உன் அம்புக்குறி தவறட்டும்" என்று கொடுத்த சாபம்தான் முதலில் அவனைக் கொன்றது. பின்னர், மாறு வேடத்தில் சென்ற இந்திரன், கவச குண்டலங்களைத் தானம்கேட்டு வாங்கிக்கொண்ட போது கர்ணன் மீண்டும் கொல்லப்பட்டு விட்டான். பிறகு உங்களின் தாய் குந்தி, "போரின்போது இரண்டாவது முறையாக நாகபாணத்தை அருச்சுனன் மீது ஏவுவதில்லை" எனும் வரத்தைக் கேட்டு அவனை இறுதியாகவும் கொன்று முடித்தாள். பிறகுதான் இந்த பாரதப் போரே தொடங்கியது. போதாத குறைக்கு இதோ நானும் இப்போது அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாகக் கேட்டு வாங்கிய பிறகே அவனது உயிரைத் தரும தேவதை விட்டுத்தந்தாள். இப்படி ஏற்கெனவே மாதா-பிதா-குரு-தெய்வம் ஆகிய நான்குபேருமே அவனைக் கொன்று முடித்த பிறகுதான் உன் அம்பு அவனைத் துளைத்தது. என்னவோ நீயே உன் வீரத்தால் அவனைக் கொன்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு, "நான் கொன்றேன் நான் கொன்றேன்" என்று பிதற்றுகிறாய்! செத்தபாம்பை அடித்த உன்னாலா அவன் கொல்லப்பட்டான்?" என்று சொன்னதாக ஒரு பாரதக் கதை உண்டு.

இப்போது சொல்லுங்கள்
ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
 இர்பான் வெறும் அருச்சுனன் மாதிரி செத்த பாம்பை அடித்தவன் தான்!

  அந்தச் சகோதரியின் உடலில் கத்திக் குத்து மீண்டும் மீண்டும் விழ விழக் கத்திக் கதறிய கதறலில், பொங்கிப் பெருகிய ரத்தத்துளியின் கறைபட்டு யார் யாரெல்லாம் குற்றவாளி களாகி நிற்கிறார்கள் தெரியுமாநாம் எல்லாரும்தான்! இது, உண்மை வெறும் இகழ்ச்சி இல்லை!
 இந்தக் கட்டுரையை எழுதுகிற நானும், இதை வெளியிடும் இதழாசிரியரும், படிக்கும் நீங்களும் என இந்தச் சமூகத்தில் வாழும் நாமெல்லாருமே ஆளுக்கு ஒரு வகையில் குற்றவாளிகள் தாம்"யு டூ புரூட்டஸ்?"  என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளத்தான வேண்டும். ஏனெனில் -
அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும், அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத புதுக்கோட்டை ஆசிரியர் சாரதாவை முதல் களப்பலியாக்கி, தமிழகம் முழுவதும் 36 ஆசிரியர்களை இழந்து பல லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர் அதிகபட்சமாக 56 நாள் வரை சிறையிருந்து, --1986இல் "ஜேக்டீஎன்றும் 1989இல் "ஜேக்சாட்டோ" என்றும்-- கத்திக் கதறிப் பெற்றதுதான் இன்று கைநிறைய வாங்கும் மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று, இன்று வேலைக்கு வரும் எத்தனை பேருக்குச் சொல்லியிருக்கின்றன நம்ஆசிரியர்-அரசுஊழியர் இயக்கங்கள்
 வரலாற்றை மறந்தவர் அதில் திரும்பவும் வாழ சபிக்கப்படுவர் என்பது உண்மைதானே? நாம் சபிக்கப்பட்டு விட்டோம்! இப்போது சம்பளம் கிடைக்கிறது! மரியாதை போய்விட்டது!
 போராடக் கற்றுத்தந்த சங்கம், பாடம் நடத்தவும் பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நம் சொந்தப் பிள்ளைகளாகப் பார்த்துக் கொள்ளவும், அலுவலகத்திற்கு வரும் பாமரனை மரியாதையாக நடத்தி அவனது நியாயமான கோரிக்கைகளைப் பரிவோடு பரிசீலிக்கவும் கற்றுத் தந்திருந்தால் இன்றைய ஆசிரியர்கள் மதிப்பிழந்து, வெண்ணிறஆடை மூர்த்தி, லூசுமோகன்களாக நமது ஊடகங்களால் கிண்டலாகவும் கேலியாகவும் சித்திரிக்கப்படும் நிலைக்கு ஆளாகி யிருப்பார்களா என்ன? "பணிப் பண்பு" (work culture) பற்றிய கவலை எந்த ஆசிரியர்-அரசு ஊழியர் அமைப்புகளுக்கு இருக்கிறது
 பதவி உயர்வின்போதும், புதிய புத்தகம் வரும்போதும், பணியிடைப் பயிற்சியை அரசு மேற்கொள்வதை விட, அந்தந்தச் சங்கங்களே மேற்கொள்வது தானே சரி? இதை ஏன் எந்த ஆசிரியர் சங்கமும் செய்வதில்லை? புதிய புதிய விஷயங்களில் அது பாடப்பகுதியாக இருந்தாலும் சரி, மாணவர் உளவியல் சார்ந்ததாக இருந்தாலும் சரி- ஆசிரியர் களுக்குச் சந்தேகம் வந்தால் கேட்டு, பொறுப்பான பதில்பெறும் இடம் என்று ஏதாவது உண்டா? உமாவுக்கு இரங்கல் ஊர்வலம் நடத்தினால் மட்டும் போதாது, இனி உமாக்கள் கொல்லப்படாமல் தவிர்க்கவும் யோசிக்க வேண்டும்.
 அதிகாரிகளைக் கால்கை பிடித்தால் போதும், பாடங்களைப் பள்ளிக்கூடத்தில் நடத்துவதை விட ஏழை மாணவர்களானாலும் தன் வீட்டில் நடத்தும் தனிப்பயிற்சிக்கு எப்படியாவது இழுத்து மாணவனின் தன்மானத்தை சிதைத்து, எதையும் செய்து கொள்ளலாம் எனும் துணிச்சலை வளர்த்ததும் சங்கங்கள் தானே?
 கடமை பற்றிப் பாடம் நடத்தும் ஆசிரியர், தன் கண்ணெதிரில் நடந்து கொள்வதைப் பார்த்துத் தானே மாணவர் கற்றுக் கொள்வர்? மனச்சாட்சிக்கு மட்டுமே பயந்து பணியாற்ற வேண்டிய ஆசிரியர்களுக்குள் சாதி-மத-குழுபேதம், பணிமூப்பு-பதவிபேதம், பள்ளிக்கு வந்தும் சொந்தவேலை பார்ப்பது, வகுப்பு நேரத்தில் கதைபேசுவது, பெரிய இடத்துப் பழக்கம் தரும் துணிவில் பொறுப்பின்றி நடந்துகொள்வது, புதிதாக வந்திருக்கும் கல்வி முறை தொடர்பான செய்திகளைப் பேசும் "பிழைக்கத் தெரியாத" ஆசிரியரை அணிசேர்ந்து கொண்டு கிண்டல்செய்வது இவ்வளவையும் மாணவர் முன்பே அரங்கேற்றுவது என எத்தனை எத்தனை அசிங்கம்! இவற்றைக் களைவதில் ஆசிரியர் அமைப்புகளுக்குப் பொறுப்பில்லையா?
இவ்வளவு ஏன், ஏதாவது ஒரு செய்தித் தாளையாவது காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஆசிரியர் எத்தனை பேர்? என்று புள்ளிவிவரம் எடுத்தால் கதை கந்தல்தான்! இதில் நல்ல மனசோடும், ஈடுபாட்டோடும் தன் கைக்காசு போட்டுப் பணியாற்றும் ஆசிரியர்களை நீண்ட நாளாகவே அரசுகள் கண்டு கொள்வதில்லை. ஆசிரியர் அமைப்புகளோ தவறு செய்பவரைக் காப்பாற்ற மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது!
 நூறு விழுக்காடு தேர்ச்சிக்காகப் பல தனியார் பள்ளிகளும் சில அரசுப்பள்ளிகளும் கூட எடுக்கும் நடவடிக்கைகளை மனச்சாட்சியுள்ள ஆசிரியர் எவரேனும் தட்டிக் கேட்டால் கல்வித்துறை பேரைச் சொல்லியே அவர்களை ஓரங்கட்டி விட்டு மாணவர்களைப் படுத்தும்பாடு கொஞ்சமா நஞ்சமா? காலை 4மணிக்கே எழுப்பி விட்டு வீட்டுப்பாடம், பிறகு தனிப்பயிற்சிக்கு ஓடி, பிறகு வந்து பள்ளிக்கூடம் ஓடி, பிறகு மாலை பள்ளியிலிருந்து வந்ததும் எதையோ வாயில் கொட்டிக் கொண்டே உடைமாற்றிக் கொண்டு, மீண்டும் தனிப் பயிற்சிக்கு ஓடி, இரவு 8மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மீண்டும் மாடுபோல அன்று நடந்த, முந்திய நாள்களில் படிக்க விட்டுப்போன பகுதிகளை அசைபோட்டு- இரவு படுக்க 11மணி யாகிவிடும் குழந்தைக்கு வயது 15! "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாரதி பாட்டைப் படித்து ஒப்பிக்காமல் விளையாடப்போன குழந்தைக்கு கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மனஅழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப் படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியரால்- அதிகமாகாதா என்ன?
 இதில் பெற்றோர் வந்து பார்க்கக் கூட அனுமதி கேட்டு அரை மணிநேரம் நின்றபின் அனுமதி மறுக்கப்படும் "ஸ்ட்ரிக்ட்"ஆன பள்ளிக்கூடம்தான் சிறப்பான பள்ளிக்கூடம் என்று பெற்றோரே பீற்றிக்கொள்ளும் மனநிலையை எங்குபோய்ச் சொல்வது? கவிஞர் நந்தலாலா சொல்வதுபோல- "மாணவர்களிடம் வெளியே விட்டுவிட்டு வரச்சொல்லும் தின்பண்டத்தையும் தண்ணீர் பாட்டிலையும் எப்போது உள்ளே மாணவரோடு வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே அவர்கள் சுமக்கும் புத்தகக் கட்டைத் தூக்கி வெளியே வீசுகிறார்களோ அப்போது தான் மாணவர்கள் சுதந்திரமாய் உணர்வார்கள்" என்பது நூறு விழுக்காடு உண்மை அல்லவா?
 நான் ஒருமுறை மாணவரிடம் பேசும்போது, "புத்தகம் நோட்டே இல்லாத, வீட்டுப் பாடம் இல்லாத, பரிட்சை இல்லாத பள்ளி வகுப்பறை எப்படி இருக்கும்?" என்று கேட்க, அவர்கள் ஓவென்ற சத்தத்துடன் "ரொம்ப நல்லா இருக்கும் சார், ஆசிரியரும் இல்லை என்றால் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் சார்என்றது இன்னும் காதில் ஒலிக்கிறது! பள்ளி விடுமுறை என்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒருவகையில் கல்விமுறை மீதான மாணவர் விமர்சனம்தானே?
 பாடத்திட்டத்தில் மதிப்பெண்ணை மட்டுமே விரட்டும் போட்டியில், மாணவரின் மற்ற பல திறமைகள் கண்டுகொள்ளப் படாததில் விரக்தி அடைவது இயல்பு அல்லவா? "மாணவர் முன்னேற்ற அறிக்கை" (Progress Card) இல் அவனது பாடும் திறமை, பேசும் திறமை, ஓவியத் திறமை, விளையாட்டு, சேர்ந்து செயலாற்றுவது, முக்கியமாக அடுத்தவருடன் அன்பாக இருப்பது என, இதர பல பண்பு-திறமைகளையும் பாராட்டி அவற்றுக்கும் மதிப்புப் போட்டு, பெற்றோர்க்கு அறிக்கை தருவதாக இருந்தால், "இதில் நான் இல்லை, இதோ இதில் நான் இருக்கிறேன்" என்னும் நிறைவு மாணவர்க்குக் கிடைக்கும். இப்போது மதிப்பெண்ணை மட்டும் காட்டும் முறையை நிச்சயமாக மாற்றியாக வேண்டும். அங்கீகாரம் தரப்படும் ஒவ்வொரு திறமையும்-பண்பும் மற்ற திறமைகளையும் வளர்க்கும் என்பதைக் கல்வித்துறை நிச்சயமாகப் பரிசீலிக்க வேண்டும்!
 நமது தேர்வுமுறை தோல்வியடைவதை மையமாகக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. தாள் திருத்தும் மையங்களில் தரப்படும் மாதிரி விடைத்தாள் (key)களைக் கட்டிக்கொண்டு அழாமல், சிந்தித்து எழுதும் மாணவர்க்கே சிறந்த மதிப்பெண் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கும் பயிற்சிதர வேண்டும். மாணவர் எழதியதை தரப்பட்ட விடைக்குறிப்போடு ஒப்பிட்டு "சரியாக இருக்கிறது" என்று எந்தவித சிந்தனையும் இல்லாமலே திருத்தப்படும் தேர்வுக்குத்தான் நோட்ஸ் தேவைப்படும். சிந்தித்து எழுதப்படும் விடைக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றால் ஆசிரியர்களையே அசர அடிக்கும் விடைகளை மாணவர் தருவார் என்பதில் நம்பிக்கை வேண்டும்.
 தேர்வு முறை மட்டுமல்லாமல், திருத்தும் முறையும் மாறவேண்டும். அல்லது, ஒவ்வொரு மாணவருக்கும் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வினாத்தாள்களில் ஒன்றைத் தந்து, அவரே விடையை இட்டு, கணினியால் உடனுக்குடன் திருத்தப்படும் விடைத்தாள் மதிப்பெண் படியை அவரே எடுத்துக்கொண்டு செல்லும் தேர்வு முறையை அறிமுகப் படுத்தலாம். இப்போது நடக்கும் தேர்வுகளால் மனித உழைப்பு விரயம் மட்டுமல்ல, மனஅழுத்தம், தேர்வு அறைக் கண்காணிப்பாளர்-மாணவர் மோதல் களையும் தவிர்க்கலாம். இதில் தனியார் பள்ளி நிர்வாகங்களின் நேரடிப் பங்களிப்பும் உண்டு! சொல்லும்விதம் நடந்துகொண்டால் தனிக்கவனிப்பும், நேர்மையுடன் நடந்து கொண்டால் அவரது வாகனம் சேதப்பட்டுக் கிடக்கும் பரிதாபத்தையும் தவிர்க்கலாம்.
தாய்-தந்தை இருவரில் ஒருவராவது தன் குழந்தையின் மீது அன்பு செலுத்த நேரம் ஒதுக்கி அதை வெளிப்படையாகக் காட்டவும் வேண்டும். இரண்டுபேரும் கண்டிப்பாக இருக்கும் இடம் குழந்தையின் கல்வி குறித்தே என்பதை மாற்றியாக வேண்டும். மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்குரைஞராகவும் வரவேண்டும் எனும் கனவில் அவன் மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்களே! பணம் கறக்கும் படிப்பாகப் பிள்ளை படிக்கவேண்டும் என்ற ஆசையில் 9ஆம் வகுப்பிலிருந்தே அந்தக் குழந்தையின் தலையில் தன் பேராசையை ஏற்றிவிட்டு, பாடாய்ப் படுத்தும் பெற்றோர், என்ன சம்பாதித்தாலும் அவன் வாழும் முறையைக் கற்றுக்கொள்ளாமல் எப்படி வாழ்வான் என்பதை எப்போதுதான் யோசிப்பார்கள்?
 குழந்தை பள்ளிக்கு வருவது நல்ல மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல. இதை வீட்டிலிருந்து தனிப்பயிற்சி வழியாகவும் கற்றுக்கொள்ள முடியும். பலருடன் பழகி இந்த உலகத்தோடு ஒட்டி வாழக் கற்பதுதான் உண்மையான கல்வி!
ஆசிரியர்கள்- பள்ளியில் இருக்கும் பெற்றோராகவும், பெற்றோர்- வீட்டிலிருக்கும் ஆசிரியராகவும் நடந்து கொள்வதுதான் ஒரு குழந்தையை அறிவோடும் பண்போடும் வளர்க்கும் ஒரே வழி!
கண்டிப்பும் கனிவும் சரிவிகித்த்தில் காட்டவேண்டிய பெற்றோர் இரண்டில் ஒன்றை மட்டுமே காட்டுவதில் குழந்தையின் மன அழுத்தம் நிச்சயமாகப் பாதிக்கப்படும். இது வெளிப்படும் இடமாக வகுப்பறை இருக்கும்போது, மனப்பிறழ்ச்சி அதிகமாகி தோல்விகளைத் தாங்காத மனநிலை இயல்பாகச் சிந்திக்க விடுமா?
அரசுகளின் முதல்பார்வை படவேண்டிய கல்விக்கு ஓரப்பார்வையே கிடைக்கிறது! ஒவ்வோராண்டும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி விழுக்காடு குறைந்துகொண்டே வருவதை கல்வியாளர் மட்டுமல்ல, நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்ட யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் பலனை முதலில் கல்வித்துறைக்கல்லவா வழங்க வேண்டும்? அதுதானே உடனடித் தேவை! ஆனால், நமது நாட்டில் தலைகீழாக அல்லவா நடக்கிறது?
சுவையாக இனிக்க வேண்டிய பாடம் கசப்பதும், வெறுக்கத் தகுந்த சீரழிவு ஊடகங்கள் பலவண்ணத்திலும்-பலமடங்கு முன்னேறிய வாய்ப்பு-வசதிகளோடும் பல்லை இளிப்பதில் பலியாவது நம் சந்ததிகள் தானே என அரசுகள் கவலைப்பட வேண்டாமா?
மக்களுக்கு இலவசமாகத் தரப்படவேண்டிய கல்வியும் மருத்துவமும்தானே நம்நாட்டில் ஏழைக்கு எட்டாக் கனியாக இருக்கிறது?! மற்ற இலவசங்களையெல்லாம் நிறுத்திவிட்டு அனைவருக்கும் உயர்கல்வி வரை இலவசம், அனைத்து மருத்துவமும் இலவசம் என்று கொண்டுவரட்டும், கல்விவள்ளல்கள் கடையை மூடி-ஓடிவிட மாட்டார்களா? மற்றவற்றை இலவசமாகக் கொடுக்க முன்வரும் அரசுகள், ஏழைக்கு எட்டாக் கனியாகிவிட்ட கல்வி-மருத்துவம் இரண்டையும் எப்படியாவது வாங்கிவிடும் போட்டியில்தான் இளைய தலைமுறை பலியாகிறது என்பதை உணர வேண்டாமா?
திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடரிலும் வரும் குழந்தைகள் "பிஞ்சிலே பழுத்தது"போலப் பேசும்பேச்சுகளைப் பார்த்தால், வியப்புக்குப்பதிலாக நமக்கு வேதனை தான் மிஞ்சுகிறது. அதிலும் சில காட்சிகளில் நகைச்சுவை எனும் பெயரில் குழந்தைகள் பேசும் சிலவசனங்கள் எரிச்சலையும் ஆற்றாமையையும் அல்லவா எழுப்புகின்றன?
"தமிழகத்தின் தங்கக் குரல்” "செல்லக்குரல்" "குட்டிக்குரல் தேடல்" என்று ஒவ்வொரு தொலைக்காட்சியும ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டாலும் போட்டிக்கு வரும் குழந்தைகள் பாடும் பாடல் குழந்தைள் பாடக் கூடியதாக இருக்கிறதா என்று எந்த நடுவராவது கவலைப் படுகிறாரா? 5வயதுக் குழந்தை முக்கி முணகிப் பாடும் காமரசப் பாடல்களைப் பாடும் குழந்தையின் வயதுக்கு இது சரிதானா என்று யோசிக்க வேண்டாமா? இவர்களின் வணிக நோக்கத்திற்கு, பாடிக்கொண்டிருக்கும் சில நூறு குழந்தைகள் மட்டுமல்லாமல், பார்த்துக் கொண்டிருக்கும் பல கோடிக் குழந்தைகளும் பலியாகி ஒரு தலைமுறையே "குழந்தைமை"யை இழந்து பிஞ்சிலே பழுத்து உதிரவேண்டியதுதான் விதியா?பேச்சு பாட்டு நடிப்பு மூன்றையும்தான் கேட்கிறேன்.
 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், "வாடா மாப்பிள வாழப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா?” என்பன போலும் பாடல்களை ஏராளமான முகபாவங்களுடனும் தாராளமான இடுப்பாட்டத்தோடும் ஐந்து வயதுக் குழந்தை அனுபவித்துப் பாடுவதைப் பார்வையாளர்கள் பார்த்து பரவசப்படுவதும், நடுவர்கள் பார்த்துப் பாராட்டுவதும் சரியானதுதானா? இர்பான் கூட இப்படி ஒரு இந்தி திரைப்படம் பார்த்த்தாகச் சொன்னானே?
 ஒரு சிலர் மிகச் சரியான விமரிசனங்களோடு அந்த 'மீத்திற'க் குழந்தைகளின் அபாரத் திறமையை மனம்விட்டுப் பாராட்டும்போது நமக்கும் ஏற்படும் மகிழ்ச்சி, இதுபோன்ற வயதை மீறிய விஷயங்களோடு வரும்போது அதற்குப் பயிற்சி கொடுக்கும் பெற்றோரிடம் "இப்படிச் செய்வது தவறு, இது குழந்தைகளுக்கும் நல்லதல்லஎன்று எடுத்துக் கூறித் திருத்துவதல்லவா கலைத் தாய்மையின் கடமையாக இருக்கும்? அவர்களே இதைப் பாராட்டிவிட்டால் பிறகு பெற்றோர்களின் குழந்தைப் பயணம் அந்தத் திசையில் தானே அதிவேகமாக இருக்கும்!
இப்போது சொல்லுங்கள்
 ஆசிரியர் உமாமகேஸ்வரியை  
வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்?
கல்விமுறை, ஆசிரியர்கள்,  
பெற்றோர்கள், ஊடகங்கள், அரசுகள்  
ஆகிய நாம் எல்லாரும்தானே?
செத்துப் போன உமாவை உலகம் தெரிந்து கொண்டது.
குற்றுயிரும் குலை உயிருமாகத் திரியும் ஆயிரக்கணக்கான உமாக்களும் இர்பான்களும் சாகுமுன், நாமெல்லாரும் ஏதாவது செய்தாக வேண்டும். அதுதான் உமாவின் ரத்தம் நமக்குச் சொல்லியிருக்கும் செய்தி.
----------------------------------------------------------------- 
நன்றி,  கீற்று இணைய இதழ்  
http://www.keetru.com/ ஞாயிறு, 11 மார்ச் 2012
--------------------------------------------------------------- 
இக்கட்டுரையை விரும்பி எடுத்து வெளியிட்ட அறந்தாங்கி மண்வாசம்சிறப்பு மலர்க்குழுத் தோழர்கள்  குறிப்பாக அதன் தலைவர்-கவிஞர் கவிவர்மன் அவர்களுக்கு எனது நன்றி. 
 இதே நிகழ்வு  தொடர்பான  எனது கவிதையைப் படிக்க
----------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

10 கருத்துகள்:

 1. இன்றைய கல்விமுறை மாணவர்களை தேர்வெழுதும் இயந்திரமாக மாற்றிவிடட நிலையில், இந்த மாதிரி கொலைகள் இன்னும் நடக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. பெருங்கவலையாக இருக்கிறது அய்யா

  பதிலளிநீக்கு
 2. வேதனையான பதிவு மட்டுமல்ல நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விடயமும்கூட....
  த.ம. 1

  பதிலளிநீக்கு
 3. தங்களின் வேதனையை உணர்கிறோம் ஐயா. அனைத்திற்குமே நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு. எப்போது திருந்தப் போகின்றோமோ? வரவர மிகவும் மோசமான நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறோம். விளைவை நினைத்துப் பார்க்கமுடியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. வேதனை ஐயா
  வேதனை
  இன்றைய கல்வி முறை முற்றாய் மாற வேண்டும் ஐயா

  பதிலளிநீக்கு
 5. இது அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம். எவ்வுளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இன்னும் நம்மால் பழைய கல்விக் கொள்கையை மாற்ற முடியவில்லை.வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களையே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 6. ஐயா வணக்கம்..தொடரும் வேதனைகள் முடிவதெப்போது..?
  பணம் தேடும் மனிதர்கலின் நுகர்வு வெறி,மதிப்பெண் பெறும் எந்திரமாக மாற்றப்படும் மாணவர்கள்,சக மனிதனை நேசிக்கக் கற்றுக்கொடுக்க வாய்ப்பில்லாத கல்விமுறை,பொறாமையை வளர்க்கும் தேர்வு முறை...இவற்றின் அழுத்தத்தினால் தொடரும் கொலைகள், தற்கொலைகள்..பாதிக்கப்படுவது ஆசிரியர்களும்,மாணவச் செல்வங்களுமே! மதிப்பெண் தாண்டி, அன்பையும்,அறவுணர்வையும் போதிக்கும் ஆசிரியர்களை ஊக்குவிப்போம். கல்விமுறை சீராக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

  பதிலளிநீக்கு
 7. வேதனையும்... வெட்கமும்...
  சமூகம் எதையோ நோக்கிப் பயணிக்கிறது.
  அது நல்லதுக்கு இல்லை என்பது மட்டும் உறுதி ஐயா...

  பதிலளிநீக்கு
 8. இன்றைய கல்வி முறையில் நிச்சயம் மாற்றம் ஏற்பட வேண்டும் ஐயா.தாங்கள் குறிப்பிட்ட கருத்துகளை நானும் ஒப்புக் கொள்கிறேன்.நாம் அனைவருமே சூழ்நிலை கைதிகளே ஐயா.கல்வி முறை கோழி வளர்ப்பு மையமாக இல்லாமல் இருந்தால் இதுப் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கலாம் ஐயா.

  பதிலளிநீக்கு
 9. மாணவர்- ஆசிரியர் உறவுகள் மேம்பட, மாணவர் மையக் கல்வி முறை, செயல்வழிக்கல்வி அடிப்படையில் புதி்ய கல்விக்கொள்கை உருவாக வேண்டும்.

  பிஞ்சு மனங்களில் நஞ்சினைக் கலக்கும் சின்னத் திரை, வண்ணத்திரைகளில் பாலுணர்வு, வன்மங்களைத் தூண்டும் நிகழ்ச்சிகள் இடம்பெறாதிருக்க வேண்டும்.

  மதுக்கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

  பதிலளிநீக்கு