பெரியாரின் சிந்தனையும்!
அண்ணாவின் செயல்பாடும்!
பெரியார்-அண்ணா விழாவில் கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு!
(நன்றி - தினமணி நாளிதழ், புதுகை வரலாறு நாளிதழ்-21-9-2016)
புதுக்கோட்டை, செப்.21 புதுக்கோட்டை
அருகிலுள்ள சத்தியமங்கலம் கீரை தமிழ்ச்செல்வன் கல்வியியல்கல்லூரி மற்றும்
செவிலியர் கல்லூரியில் நடந்த பெரியார்-அண்ணா பிறந்தநாள் விழாவில்,
சிறப்புரையாற்றிய கவிஞர்நா.முத்துநிலவன் “தந்தை பெரியாரின் சிந்தனைகளைத்
தனயனாகிய அண்ணா தமிழக முதல்வராகிச் செயல்படுத்தினார்” என்று புகழாரம் சூட்டினார்.
கீரை
தமிழ்ச்செல்வன் கல்லூரிக்கலையரங்கில் நடந்த பெரியார்-அண்ணா பிறந்த நாள்
விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் கீரை தமிழ்ராஜா தலைமை ஏற்றார். கல்வி
நிறுவனங்களின் செயலர் பீட்டர் முன்னிலை வகித்துப் பேசினார்.
கல்வியியல்
கல்லூரி முதல்வர் சி.கேசவன், செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.தெரஸ்,
புதுக்கோட்டைக் கவிஞர் மீரா.செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவிப்பேராசிரியர்
பி.தீபா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்தார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா
உருவப்படங்களுக்கு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்
சிறப்புரையாற்றிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு
உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் பேசியதாவது-
“தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையைப்
புரட்டிப் போட்ட சிந்தனையாளர் தந்தை பெரியாரின் பிறந்த நாளையும், தந்தை பெரியாரின்
சிந்தனைகளை தமிழ்நாட்டு முதல்வராகிச் செயல்படுத்திய தனயனாகிய அறிஞர் அண்ணாவின்
பிறந்தநாளையும் சேர்த்துக் கொண்டாடுவது மிகப் பொருத்தமே! அதுவும் அவரது
சிந்தனைகளும் செயற்பாடுகளும் சென்றடைய வேண்டிய இளைஞர்கள், அதிலும் கல்லூரி
மாணவியர் இணைந்து கொண்டாடுவது மிகவும் பொருத்தமாகும்.
பிற்பட்ட,
சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் படித்து தாமும் முன்னேறி,
தம் சமூகத்தையும் முன்னேற்ற விரும்பியே தந்தை பெரியாரும், அண்ணாவும் “இரட்டைக்
குழல் துப்பாக்கி”யாகச் செயற்பட்டனர்.
1940களின் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் ஒரு
பாடம் இருந்தது. படம் போட்டு விளக்கம் சொல்லும் ஆரம்பக்கல்விப் பாடம் அது! நான்கு
படமும் அதற்கான ஒருவரி விளக்கமுமாக ஒரு பாடம்! மரவேலை செய்யும் தொழிலாளி ஒருவர்,
துணி வெளுக்கும் தொழிலாளி ஒருவர், உழவுப்பணிபுரியும் உழவர் ஒருவர் மூவரின் படங்களை
அடுத்தடுத்துப் போட்டு, அந்தந்தப் படங்களின் கீழ் வரிசையான விளக்கம் என்ன
போட்டிருந்தார்கள் தெரியுமா? “இவன் தச்சன், மரவேலை செய்கிறான்” “இவன் வண்ணான்,
துணி துவைக்கிறான்”, “இவன் உழவன், விவசாயம் செய்கிறான்”என்று போடப்பட்டிருந்தது.
கடைசியாக பூணூல் குடுமியுடன் ஒரு படத்தைப் போட்டு, “இவர் ஐயர், நல்லவர்” என்று
இருந்ததாம்.
தந்தை பெரியார் கேட்டார்,
“உழைப்பாளிகளின் படங்களை அவன் இவன் என்று ஏகவசனத்தில் போட்டதோடு, உடல்உழைப்புச்
செய்யாத ஒருவரின் படத்தைப் போட்டு இவர் நல்லவர்” என்று போட்டால் மற்றவர்
கெட்டவர்களா? அல்லது, ஐயர் மட்டும் உடலுழைப்பு இல்லாமலே நல்லவராகிவிட்டாரா?” என்று, போராட்டம்
நடத்தி, அந்தப் பாடத்தையே மாற்றியவர் தந்தை பெரியார்.
பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளர்
என்று மட்டுமே சொல்லி, அவரது சாதிஒழிப்பு, பெண்ணடிமைஒழிப்பு,
மூடநம்பிக்கைஎதிர்ப்பு, சமத்துவ உலகிற்கான போராட்டங்களை மறைக்கிறார்கள். அவர் ஏன்
கடவுள் இல்லையென்றார்? அவரே சொன்னார், “கடவுளுக்கும் எனக்கும் எந்தப்
பிரச்சினையும் இல்லை. நான் ஏன் கடவுள் இல்லையென்கிறேன் என்றால், சாதிகளை ஒழிக்க
வேண்டும். சாதியைத் தனியாக ஒழிக்க முடியாது. நம்நாட்டில் மதம் மாறலாம், ஆனால்
சாதிமாற முடியாது! எனவே சாதியை ஒழிக்கவேண்டுமானால் மதங்களை ஒழிக்க வேண்டும்.
மதங்களைத் தனியே ஒழிக்க முடியாது. மதங்கள் எல்லாமே அந்தந்த மதக் கடவுள் வழிபாட்டு
முறைகளில் கட்டப்பட்டவை. ஆமினாவின் நெற்றியில் முகமது அவதரித்தார், கன்னி
மேரியிடம் ஏசு பிறந்தார், சிவனின் நெற்றிக்கண்ணில் முருகன் பிறந்தான் என்பது
எப்படி உண்மையாக இருக்க முடியும்? எனவே நான் கடவுள் ஒழிந்தால், மதம் ஒழியும், மதம்
ஒழிந்தால் சாதி ஒழியும், சாதி ஒழிந்தால் சமத்துவம் பிறக்கும் உண்மையான உழைப்பாளி
மக்கள் சமத்துவம் பெறவேண்டுமானால் இவை ஒழிய வேண்டும் எனவே கடவுள் ஒழிக என்றேன்“
என்று பெரியார் சொன்னதை நாம் சிந்திக்க வேண்டும்.
தந்தை பெரியார் காண விரும்பிய சமத்துவ
உலகிற்கான முதல்படியாக, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் தந்து
ஆணையிட்டவர் அண்ணா அவர்கள்! தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு வந்தபோதும் கூட
அதை நாகரிகமாகச் சொன்ன அண்ணா, தம்மை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த தந்தை
பெரியாருக்குத்தான் தமது அமைச்சரவையை சமர்ப்பணமே செய்தார். முதலமைச்சராகப்
பொறுப்பேற்கும் முன், சென்னையிலிருந்து திருச்சி வந்து, தந்தை பெரியாரின்
வாழ்த்துகளைப் பெற்ற பண்பாட்டின் அடையாளம் அண்ணா
தந்தை பெரியாரின் சிந்தனைகளை இன்றைய
பெண்கள் அறியவேண்டும். அவரது பெண்ணடிமைப் போர்கள், சாதி ஒழிப்புப் போராட்டங்கள்,
சுயநலமற்ற அரசியல்-பொருளாதார மாற்றங்களுக்கான போராட்டங்களைப் புரிந்து கொண்டு
அவற்றைச் செயற்படுத்த பெரியார் – அண்ணா வழியில் வாழ்வதே நமது தமிழ்ச் சமூக
முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல தனிப்பட்ட சுயமரியாதையான வாழ்க்கை வாழ
விரும்புவோர்க்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகும்” என்று பேசினார்.
கீரை தமிழ்ச்செல்வன் ஆசிரியர் கல்லூரி, செவிலியர் கல்லூரி விழாவில்.. |
விழவில், கீரை தமிழ்ச்செல்வன்
கல்வியியல் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி மாணவியர் ய.சர்புநிஷா, ஆ.ஆனந்தி,
ரேவதி, சு.ரவீனா, சரண்யா, ரபேக்கா, அனுசுயா, ஹேமா, மேகலா, மோனிஷா, காவேரி, விமலா, லாவண்யா, ஆகியோர்
பெரியார் அண்ணா பற்றிய கவிதைகளை வழங்கியும் அஞ்சலி உரையாற்றியும் சிறப்பித்தது
குறிப்பிடத்தக்கது.
450
மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக கீரை தமிழ்ச் செல்வன் கல்வியியல் கல்லூரித்
துணைமுதல்வர் எம்.சாமிநாதன் வரவேற்க, நிறைவாக உதவிப் பேராசிரியர் என்.மைதிலி நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுபெற்றது.
--------------------------------------------------------------------------------
நன்றி நன்றி நன்றி
----------------------------------------------
எனது
உரையை நல்லபடியாக வெளியிட்டிருந்த நாளிதழ்கள்
தினமணி
– 21-09-2016- திருச்சிப் பதிப்பு,
புதுகை
வரலாறு – 21-9-2016 கடைசி வண்ணப்பக்கம்.
நன்றி
நன்றி நன்றி!
---------------------------------------------------
நன்றி - தினமணி - திருச்சிப் பதிப்பு (பக்கம்-2, நாள்-21-9-2016) |
நன்றி - “புதுகை வரலாறு”(நாளிதழ் 21-9-2016) |
இதைப்
படித்தபின், எனது நெருங்கிய நண்பர் ஒருவர் குறுஞ்செய்தியில் கேட்ட கேள்வி –
“சாதிகளே
இல்லையென்று நடைமுறைப்படுத்த வேண்டும். முடியுமா?”
இதற்கு
எனது பதில்-
“ஏன்
முடியாது?
அவரவரும் சொந்தச் சாதியில் திருமணம் செய்யக் கூடாது என்றொரு சட்டம்
கொண்டுவர வேண்டும்.
பாதிச் சாதி ஒழிந்துபோகும்!”
பாதிச் சாதி ஒழிந்துபோகும்!”
விவாதங்கள்
தொடரட்டும் நண்பர்களே!
சதிக்குக்
கால் முளைத்த சாதிச் சனியன் ஒழியட்டும்!
--------------------------------
இந்த நிகழ்ச்சியில்
மாணவியர் வாசித்த கவிதைகள் சில
நெஞ்சைத்தொட்டன
அங்கேயே அவற்றைப் பாராட்டினேன்
-------------------------------------------------------------------
“அண்ணா குள்ளமானவர்தான்!
ஆனால், அறிவுலகமே
அவரை அண்ணாந்து பார்த்தது!
-- ரா.ரவீனா,
(ஆசிரியர் பயிற்சி முதலாமாண்டு)”
--------------------------------------------------------------
“அவர் மேடையேறினார்,
பள்ளத்தில் கிடந்தவர்கள் மேலேறினர்!”
--எஸ்.சரண்யா
(ஆசிரியர் பயிற்சி முதலாமாண்டு)
-------------------------------------------------------------
“சாதியில் சேறோடு,
சங்கத் தமிழன் பேரோடு,
பிணைத்திருந்த அசிங்கத்தை வேரோடு
பிடுங்கி எறிந்தவர் எங்கள் ஈரோடு”
-- எம்.ஆனந்தி,
(ஆசிரியர் பயிற்சி இரண்டாமாண்டு)
---------------------------------------------------------------------
இளைஞர்கள் இளைஞர்கள்தான்!
அதிலும் பெண்கள் புலிப்பாய்ச்சல்தான்!
அவர்கள் வாழ்க!
கீரை.தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனங்கள் வளர்க!
---------------------------------------------------------------------
--------------------------------
இந்த நிகழ்ச்சியில்
மாணவியர் வாசித்த கவிதைகள் சில
நெஞ்சைத்தொட்டன
அங்கேயே அவற்றைப் பாராட்டினேன்
-------------------------------------------------------------------
“அண்ணா குள்ளமானவர்தான்!
ஆனால், அறிவுலகமே
அவரை அண்ணாந்து பார்த்தது!
-- ரா.ரவீனா,
(ஆசிரியர் பயிற்சி முதலாமாண்டு)”
--------------------------------------------------------------
“அவர் மேடையேறினார்,
பள்ளத்தில் கிடந்தவர்கள் மேலேறினர்!”
--எஸ்.சரண்யா
(ஆசிரியர் பயிற்சி முதலாமாண்டு)
-------------------------------------------------------------
“சாதியில் சேறோடு,
சங்கத் தமிழன் பேரோடு,
பிணைத்திருந்த அசிங்கத்தை வேரோடு
பிடுங்கி எறிந்தவர் எங்கள் ஈரோடு”
-- எம்.ஆனந்தி,
(ஆசிரியர் பயிற்சி இரண்டாமாண்டு)
---------------------------------------------------------------------
இளைஞர்கள் இளைஞர்கள்தான்!
அதிலும் பெண்கள் புலிப்பாய்ச்சல்தான்!
அவர்கள் வாழ்க!
கீரை.தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனங்கள் வளர்க!
---------------------------------------------------------------------
பெரியாரின் நினைவினைப் போற்றுவோம்
பதிலளிநீக்குமுதலில் தங்களுக்கு வாழ்த்துகள் ஐயா.இன்றைய சூழலுக்கு ஏற்ற நல்லதொரு தலைப்பில் பேசியமைக்கு வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குஉண்மையே சாதி ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் மதம் அழிய வேண்டும் என்ற கருத்து ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று தான் ஐயா.
சாதி மற்றும் மதவெறிப் பிடித்து அலையும் மூடர்களுக்கு சென்றடைய வேண்டிய கருத்துகள் ஐயா.பள்ளியில் சாதி சான்றிதழ் கேட்டு ஆரம்பித்தது தான் இன்று எல்லாவற்றிலும் சாதி சாதி என்ற பேய் தலை விரித்தாடுகிறது ஐயா.
பாரதியின் எழுச்சி ஊட்டும் கவிதைகளில் ஒன்றான,சாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரிகளை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளில் இருந்து தான் சாதி வளர்கிறது ஐயா.
மேலும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியனின் வார்த்தைகளுக்கும் பொருள் தெரியாமல் நமது (மக்கள்) மாக்களாக சென்று கொண்டியிருக்கிறார்கள் ஐயா.
தங்களின் இப்பதிவு சிந்திக்க வைத்தது நன்றி ஐயா.
உங்களின் தெளிவான,திடமான உரையும்,மாணவர்களின் செறிவான கவிதை வரிகளும் கூர்மையாக இருக்கின்றன அய்யா!
பதிலளிநீக்குஅதுவும் ஆனந்தி அவங்களின் கவிதை, காசி ஆனந்தன் அவர்களின் நெருப்பு வரிகளை நினைவுபடுத்துகின்றன.
"மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
வேரோடு பெயர்க்கும் கடப்பாரை!
வானம் உள்ளவரை வையம் உள்ளவரை
யார்தான் மறப்பார் தந்தை பெரியாரை?!"
வாழ்த்துக்கள் ஐயா! கவி வரிகள் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குசிந்தனையைத் தூண்டும் பேச்சு. நன்றி.
பதிலளிநீக்குநல்ல கருத்துகள்! சிறப்பான உரை! கவிதை வரிகள் அருமை! ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்றோம் ஆனால் இப்போதுதான் வெறி கூடிக் கொண்டு வருகின்றது...
பதிலளிநீக்குஅற்புதமான உரை. மாணவர்களின் கவிதைகள் அட்டகாசம்
பதிலளிநீக்குஅருமையான உரை ஐயா...
பதிலளிநீக்குசிறப்பான உரை. இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குஇளைய தலைமுறைக்குத் தந்தை பெரியார், அண்ணாவைப் பற்றிச் சிறப்பாக அறிமுகம் செய்யும் உரை! பெரியார் கடவுள் மறுப்பாளர் என்று தான் பெரும்பாலோர் அறிந்திருக்கிறார்கள்; அவருடைய பெண் முன்னேற்றம், சாதிமறுப்பு, சமூகநீதி ஆகிய கருத்துக்கள் பற்றியும், இளைய தலைமுறை தெரிந்துகொள்ளும் வண்ணம் சிறப்பாக அமைந்த உரைக்குப் பாராட்டுக்கள் அண்ணா! கவிதைகளும் சிறப்பாக உள்ளன!
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா. பெரியாரின் சிந்தனைப் பதிவிற்கு நன்றி. பாடப்புத்தகத் தகவலுக்கும் நன்றி. சாதி ஒழிய வேண்டும்...அது ஒவ்வொருவர் மனதில் வர வேண்டும்..கடவுள் இல்லை என்று சொல்பவர் அனைவரும் சாதி மறுக்கவில்லை...மக்கள் புரியாமல் தான் வாழ்க்கை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். விழிப்புணர்வும் அன்பும் அதிகரிக்க வேண்டும்.
பதிலளிநீக்குகன்னி மரியிடம் இயேசு பிறந்தார்..அவர் அனைவருக்காகவும் தான் பிறந்தார்..வேற்றுமை அவர் சொல்லவில்லை..மனிதன் செய்யும் செயலுக்குக் கடவுளை நொந்து என்ன ஆகப்போகிறது? அவரும் நொந்துதான் போகிறார்.
முதலில் கவிஞருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஜாதி ஒழிப்பு என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு ஒழிவது போலவே வந்தது உண்மையே....
ஆனால் தற்போது முகநூல் மற்றும் திருமணவாழ்த்து சுவரொட்டிகள் எங்கும் ஜாதியை முன்னிலைப்படுத்தியே எழுதி வருகின்றார்கள் இதை எழுதுவது பெரும்பாலும் பால்குடி மறக்காத பாலகர்கள் போலவே இருப்பதுதான் மேலும் கொடுமை.
த.ம. 2
மனுதர்ம சாஸ்திரத்தில் எவ்வளவோ உள்ளன. ஜாதி அபிமானிகள், அவற்றை எல்லாம் (உதாரணத்திற்கு பிராமணர் வேதம் ஓத வேண்டும், வைசியர் வாணிபம் செய்ய வேண்டும்) விட்டு விட்டு உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனுதர்மம் ஒழிந்தால் இவர்கள் கீழே விழுந்து விடுவார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் உரை நன்று கவிதைகளும் நன்று! நலமா!
பதிலளிநீக்கு//வைசாலி செல்வம்புதன், செப்டம்பர் 21, 2016
பதிலளிநீக்குசாதி மற்றும் மதவெறிப் பிடித்து அலையும் மூடர்களுக்கு சென்றடைய வேண்டிய கருத்துகள் ஐயா.பள்ளியில் சாதி சான்றிதழ் கேட்டு ஆரம்பித்தது தான் இன்று எல்லாவற்றிலும் சாதி சாதி என்ற பேய் தலை விரித்தாடுகிறது ஐயா.
பாரதியின் எழுச்சி ஊட்டும் கவிதைகளில் ஒன்றான,சாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரிகளை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளில் இருந்து தான் சாதி வளர்கிறது ஐயா. //
மிகவும் முக்கியமானஅருமையான கருத்துக்கள். ஆரம்ப பள்ளிகளிலேயே ஜாதி சான்றிதழ் கேட்டு ஆரம்பிக்கிறது இந்தியாவில் ஜாதி வேற்றுமைகள், ஏற்ற தாழ்வுகள்.