நடிகர் சிவகுமாருக்கு 75வயது! வாழ்க்கையே ஒரு செய்தி!

திரு சிவகுமார், குடும்பத்தினருடன்
----------
அன்றைய நிகழ்வால் எனக்குத் தேதி மறக்கவில்லை!
அந்த நாள் 18-05-2010 மாலை...                                 நானும் என் துணைவியாரும் புதுக்கோட்டை வீதியில் எனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எனது செல்பேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. நான் எனது வண்டியின் மிதவேகத்தை இன்னும் குறைத்து, செல்பேசியை எடுத்து என் மனைவியிடம் தந்து, “யாரென்று கேள்பா..ஏதும் அவசரம்னா சொல்லு, இல்லன்னா பத்து நிமிடம் கழித்துப் பேசச்சொல்லு” என்று சொல்கிறேன். அவரும் பேசிவிட்டு,  “யாரோ சிவக்குமாராம். சென்னையிலிருந்து பேசினார். பிறகு கூப்பிடச் சொல்லியிருக்கிறேன்” என்று சொன்னார்.

நானும் மற்ற வேலைகளில் மறந்துவிட்டேன்.
சரியாகப் பத்து நிமிடம் கழித்து மீண்டும் அழைப்பு. இப்போது நான் எடுத்து “வணக்கம் நான் முத்து நிலவன். யாரு பேசுறதுங்க?” என, “வணக்கம் முத்துநிலவன், நான் சிவக்குமார் பேசுகிறேன்” என, எனக்குக் குரல் பரிச்சயமானதாகவும் ஆனால் யாரென்று பிடிபடாத தாகவும் இருக்க, “எங்கிருந்து பேசுறீங்கய்யா?“ என்று கேட்டவுடன், சற்றும் குரல் மாறாத இயல்பான தன்மையுடன்  “சென்னையிலிருந்து நடிகர் சிவக்குமார் பேசுறேன்..” என, நான் பரபரப்பானேன்..“அடடே அய்யா வணக்கங்க! சொல்லுங்கய்யா” என..அவர் இயல்பாக “ஜனசக்தி பத்திரிகையில “செம்மொழி மாநாடும் கம்பனும்” எனும் உங்க கட்டுரையைப் படிச்சேன். நல்லா எழுதியிருக்கிங்க... “கம்பன் என் காதலன்” னு 3மணிநேரம் கம்பன் பத்தி நா பேசின பேச்சைப் பார்த்திருக்கீங்களா?“ என்று கேட்க, “ஆமாங்க விஜய் டி.வி.யில ஒளிபரப்பாச்சுல்ல.. ஆனா முழுசாப் பாக்க முடியல… கேட்ட வரைக்கும் எந்தக் குறிப்பும் இல்லாம, கம்பராமாயணப் பாடலுடன் அழகாப் பேசியிருந்தீங்க” என்று சொல்லி முடிப்பதற்குள், “உங்க முகவரிய எனக்கு மெஸேஜ் பண்ணுங்க அனுப்பறேன் பாருங்க பிறகு பேசுகிறேன்” 


அடுத்த ஓரிரு நாளில் அவர்கள் பேசிய “என் கண்ணின் மணிகளுக்கு” மற்றும் “கம்பன் என் காதலன்” எனும் இரண்டு குறுவட்டுகளுடன், “சிவக்குமார் டைரி” நூலையும் அனுப்பியிருந்தார். பிறகும் ஒருவாரம் கழித்து அந்தப் படைப்புகள் பற்றிய எனது கருத்துகளை ஆர்வமாகக் கேட்டு, மகிழ்ந்தார்! நான் வியந்தேன்!


அற்புத மனிதர் ஆற்றல்மிகு ஓவியர், திரையுலக மார்க்கண்டேயர், இலக்கியவாதி, எழுத்தாளர், பேச்சாளர், திரு சிவகுமார் அவர்களுக்கு, 
27-10-2016இன்று, 75ஆவது பிறந்த நாள்!                 வாழ்த்தி வணங்குகிறேன் அய்யா! 

தமிழ்த் திரையுலக மார்க்கண்டேயன்; 1965-இல் இருந்து 192 திரைப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். சென்னை கவின்கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்ற ஓவியக் கலைஞர்; எழுத்தாளர், பேச்சாளர். தனது அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறவர்.
கலையியல் மாணவர் என்ற வகையில், இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியங்கள் தீட்டியவர். அஜந்தா, எல்லோரா, எலிபண்டா குகைகள், டெல்லி குதுப்மினார், பம்பாய், திருப்பதி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, செஞ்சிக் கோட்டை, கன்னியாகுமரிஉட்பட பல வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களை நேரில் கண்டு அங்கங்கேயே தங்கி கோயில்களையும், இயற்கை எழில் மிகுந்த நிலவெளிக் காட்சிகளையும் அற்புத ஓவியங்களாய்த் தீட்டியவர்.

திரைப்பட உலகில் நுழைந்தது:1965 – ஆம் ஆண்டு முதல்  மொத்தம் 192 திரைப்படங்களில் நடித்தவர்:                              அவற்றுள் கதாநாயகராகப் பாத்திரமேற்றவை:170.

பெற்ற விருதுகள்: தமிழ்நாடு அரசுசிறந்த நடிகர்விருது இரண்டுமுறை; வாழ்நாள் சாதனையாளர் விருது. ஃபிலிம் ஃபேர்சிறந்த நடிகர் விருதுஇரண்டுமுறை. ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.

சிவகுமார் கதாநாயகராக நடித்தமறுபக்கம்’, அகில இந்திய அளவில் சிறந்த படத்திற்கான தங்கத்தாமரை விருது பெற்றது.

இவர் எழுதிய நூல்கள்:இது ராஜபாட்டை அல்ல.’ – சிவகுமாரின் 50 ஆண்டுகால தமிழ்த் திரையுலக அனுபங்களின் வரலாறு.சிவகுமார் டயரி-1946-1975 – தனது டயரியில் அன்றாடம் இவர் பதிவு செய்திருக்கும் ஞாபகங்களின் தொகுப்பு இவரது ஆரம்ப கால வாழ்வையும், ஓவியராயிருந்து நடிகரானது வரையிலான வாழ்க்கைப் பயணத்தையும் விவரிக்கிறது.
பேச்சுக்கலைச் சாதனைகள்
கம்பன் என் காதலன்’ – கம்பனின் விருத்தப் பாக்களை, அவற்றுள் மிகச்சிறந்த நூறு பாடல்களைத் துளியும் பிறழாமல், ஏற்ற இறக்கங்களுடன் சொல்லியவாறே விளக்கங்களைப் பேச்சுத் தமிழில் அற்புதமான உணர்ச்சி பாவங்களுடன் விளக்கும் உரை வீச்சு. இராமனின் கதை முழுவதையும், தனக்கு முன் ஒரு துண்டுக் காகிதக் குறிப்பைக் கூட வைத்துக் கொள்ளாமல் நினைவிலிருந்து சொல்லிய பாங்கு சாதாரணச் சாதனையல்ல. இதை அவர் நிகழ்த்திய நாள்வரை கம்பராமாயண விரிவுரை வித்தகர்களோ, ஆன்மீகச் சொற்பொழிவாளர்களோ கூட இராமாயணக் கதை முழுவதையும் ஒரே நாளில் சொன்னதில்லை. இவரோ, ஒரு நாள்அரை நாளில் அல்ல, வெறும் இரண்டரை மணி நேரத்தில் இந்த உரையை நிகழ்த்தி முடித்ததன் மூலம் ஓர் உலக சாதனையை நிகழ்த்தியவர்.

தொடர்ந்து  பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் முன் பேருரை நிகழ்த்தி, அவை அனைத்தும் ராஜ் TV, விஜய்டிவி மூலம்  ஒளிபரப்பாகி, சி.டி.யாக வந்துள்ளன
அவை
  1. பெண்
  2. என் கண்ணின் மணிகளுக்கு
  3. என்னைச் செதுக்கியவர்கள்
  4. நேருக்கு நேர்
  5. தவப் புதல்வர்கள்
  6. என் செல்லக் குழந்தைகளுக்கு
  7. அறன் செய்ய விரும்பு
  8. வாழ்க்கை ஒரு வானவில்
  9. கம்பன் என் காதலன்
யோகக் கலை அனுசரிப்பவர். / எவ்விதத் தீய பழக்கங்களும் இல்லாதவர்.
சூர்யாவும், கார்த்தியும் இன்று திரையுலகில் புகழ் பெற்ற நடிகர்கள். சூர்யா தன்அகரம்ஃபவுண்டேஷன் மூலம் மிகப் பின் தங்கிய, ஆதரவற்ற மாணவர்களுக்கு  மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விப் படிப்புகளுக்கு உதவி செய்து வருகிறார்.
நன்றி - http://sigaramias.com/sivakumar 
----------------------------------------------------------------  
இனி அவரது “தமிழ்மணம்” இணைய நேர்காணலிலிருந்து...
“நான் முழுமை அடைந்துவிடவில்லை. இந்த வயதில் இன்னமும்கூட ஆரோக்கியமாக இருந்திருக்கலாம். இன்னும் மிகச்சிறந்த ஓவியங்கள் தீட்டியிருக்கலாம். இன்னும் ஆழமான வேடங்கள் ஏற்று அற்புதப் படைப்பு களைத் திரையில் தந்திருக்கலாம். ஆக நானே என் முதுகைத் தட்டிக் கொள்ளக்கூடிய சாதனை எதையும் நான் செய்துவிடவில்லை”
இந்த வீடு, வாசல், குடும்பம், குழந்தைகள் அவர்கள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி, உன்னுடைய ஓவியங்களாலும் உன்னுடைய சிறந்த படைப்புக்களாலும் கிடைக்கின்ற பெருமிதம் இதெல்லாம் மாயை அல்ல, இதுதான் உண்மை.
பிறவிகளில் மகத்தானது, முழுமையானது, உயர்வானது, மனிதப்பிறவிதான். தேவர்கள், கடவுளர் எல்லாம் நம் முன்னோர் சிருஷ்டித்த கதாபாத்திரங்களே.  வானுலகம் சென்று தேவர்களுடன் கைகுலுக்கி கடவுள் பாதத்தில் பூப்போட்டு வணங்கிவிட்டு வந்தேன் என்றெல்லாம் யாரும் இங்கு சொல்லிவிட முடியாது. சென்ற பிறவியில் என்னவாக இருந்தோம், என்னவெல்லாம் செய்தோம் என்பதையோ, அடுத்த பிறவியில் யாராகப் பிறக்கப்போகிறோம் என்ன செய்யப்போகிறோம் என்றோ யாரும் சத்தியமாகச் சொல்லிவிட முடியாது.
மகத்தான இந்த மனிதப்பிறவியில் மண்ணுலக வாழ்வில் மக்கள் போற்றும் மனிதனாக, சமுதாயத்திற்குப் பயன்படும் சத்தியவானாக அன்பு கருணை வடிவமாக விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போவோம் என்பதை சொல்லிக்கொள்ள விழைகிறேன்” 
- திரு சிவகுமார் அவர்கள்


தந்தை சிவகுமாருக்கு, மகன் கார்த்திக்கின் ஆகச் சிறந்த பிறந்தநாள் பரிசு அவரது ஓவியங்களை காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்தது!
தந்தையின் விருப்பம் உணர்ந்து மகன் தந்த சிறந்த பிறந்தநாள் பரிசாக இந்த நெகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி பார்க்க – ஓவிய இணைப்புகளுடன்

சான்றாதாரங்கள் -

https://en.wikipedia.org/wiki/Sivakumar ( தமிழிலும் உள்ளது)
------------------------------------------------------------------- 
திரு சிவகுமார் அவர்களின்
அப்பழுக்கற்ற வாழ்க்கையே
இன்றைய இளைஞர்களுக்கு 
ஒரு நல்ல செய்திதான்!
வாழ்ந்து வழிகாட்டும் மாமனிதர்,
வாழ்க பல்லாண்டு! வளர்க உம் கலைகள்!
-------------------------------------------------------------

9 கருத்துகள்:

  1. அவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர் நான் பலமுறை கேட்டு இருக்கிறேன் எமது வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  2. நல்ல மனிதர். மிக எளிமையானவர். அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்ற..

    பதிலளிநீக்கு
  3. ayaa ariya thagaval vaalthukal. // ithu elam maayai ala ithu than unmai // ivai elam nilayaga irukuma aya? // manitha piravi patri // oru yogien suiasaritham :yoganantha.

    பதிலளிநீக்கு
  4. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. சிவக்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்/ திரையுலகைச் சேர்ந்தவர்களும் ஒழுக்கமுடன் பண்புடன் வாழமுடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர். கம்பன் பற்றிய அவர் உரையைக் கேட்டிருக்கிறேன். அருமையான பேச்சு. அவரைப் பற்றி மேலும் சில விபரங்கள் அறிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  6. திரையுலகின் எந்தச் சறுக்கலிலும் விழுந்து விடாமல் பயணித்த மாமனிதர். பன்முகத் திறனாளர் .

    பதிலளிநீக்கு
  7. திரை உலகம் எனும் சேற்றில் மலர்ந்த செந்தாமரை!

    பதிலளிநீக்கு