கவிஞர் நா.முத்துநிலவன்
பேச்சு!
(நன்றி – தினமணி திருச்சிப் பதிப்பு, & புதுகை
வரலாறு நாளிதழ்-26-10-2016)
பள்ளியில் படிக்கும் ஐந்து பாடங்களை மீறியது பொதுஅறிவு!
அதுதான் நிலைத்த புகழையும் தரும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
புதுக்கோட்டை
வடக்குராஜ வீதியில் உள்ள நகர்மன்றத்தில் நடந்த அப்பல்லோ கணினிப் பயிற்சி மையத்தின்
“மாணவர் தனித்திறன் விருதுகள் வழங்கும் விழா”வில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்து
நிலவன், மேற்கண்டவாறு பேசினார்.
மருத்துவர்
இராமதாஸ் விழாவிற்குத் தலைமையேற்க, அப்பல்லோ கணினிப் பயிற்சி மையத்தின் நிர்வாகி செந்தில்குமார்
வரவேற்றார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்க்கு விருதுகளை வழங்கிப்பேசினார். நாகராஜன், மச்சுவாடி சமூகஆர்வலர் சுமன் ஆகியோர் வாழ்த்துரையாற்ற, துரை.சரவணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்க்கு விருதுகளை வழங்கிப்பேசினார். நாகராஜன், மச்சுவாடி சமூகஆர்வலர் சுமன் ஆகியோர் வாழ்த்துரையாற்ற, துரை.சரவணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இராணியார்
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவெங்டேஸ்வரா
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, டிஇ.எல்.சி. மேல்நிலை, நடுநிலைப்பள்ளிகள், இருதய மகளிர்
மேல்நிலைப்பள்ளி, பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி, குத்தூஸ் மெட்ரிக் பள்ளி, குலபதி பாலையா
மேல்நிலைப்பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மாணிக்கம் மெட்ரிக் பள்ளி, நிஜாம்
ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி, ஆர்.சி. நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட புதுக்கோட்டை நகரத்தைச்
சேர்ந்த பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள்,
மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட விழாவில் விருதுகளை வழங்கி, கவிஞர் நா.முத்துநிலவன்
பேசும்போது மேலும் தெரிவித்ததாவது-
பள்ளியில்
படிக்கும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்கள் மட்டுமே
அறிவின் அளவுகோலல்ல! அவற்றின் மதிப்பெண்களைத் தாண்டியது அறிவு! இது, வேலைக்கான முயற்சியில்
இருக்கும்போதுதான் அனைவருக்கும் புரிகிறது. வேலைக்கான நேர்காணலின் போது, பள்ளியிலும்
கல்லூரியிலும் வேலைக்கான சிறப்புத் தேர்வுகளிலும் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் அவர்களின் கூடுதல், சிறப்புத்
தகுதிகளைப் பற்றிக் கேட்கும்போதுதான் முகத்தில் அறைவாங்கியதுபோல் இது புரியவருகிறது.
இன்னும்
சொல்லப்போனால், முதல்மதிப்பெண் வாங்கிய மாணவர் பலரை விடவும்
நல்ல மதிப்பெண்களோடு, பாடநூலறிவோடு பொதுஅறிவு மிகுந்த மாணவர்களே நல்ல வேலை வாய்ப்பைப்
பெறுகிறார்கள்!
சரி, இந்தப் பொதுஅறிவை எங்குபோய்க் கற்பது?
வெறும் நூலறிவு தாண்டிய பொது அறிவை உலகம் முழுவதும் கற்றுக்கொள்ளலாம்! பார்க்கும் பழகும்
மனிதர் அனைவரிடமும் இதைக் கற்றுக்கொள்ளலாம்! அதுதான் வாழ்க்கையைப் பற்றிய அறிவு! இன்றைய
இளைஞர்கள் பலரும் மிதிவண்டி ஓட்டவும், செல்பேசியைப் பயன்படுத்தவும் தெரிந்துள்ளனர்.
இதை எந்தப் பள்ளிக்கூடம், கல்லூரி கற்றுத் தந்தது? அவர்களின் வாழ்க்கைத் தேவையை உணர்ந்து,
அவர்களே கற்றுக்கொண்டனர். இப்படி வாழ்க்கையில் முன்னேற மற்ற திறன் அறிவு என்பது முக்கியமான
அறிவு
இன்றைய
இளைஞர்கள் பலரிடமும் நல்ல அறிவுக் கூர்மையும் பாட நூலறிவும் நிறைந்திருக்கிறது. முந்திய
தலைமுறையை விடவும் நல்ல வாய்ப்புகளையும் நல்ல வேலை வாய்ப்பையும் உயர்ந்த ஊதியத்தையும்
பெற முடிகிறது! ஆனால் வாழ்க்கை பற்றிய புரிதலை அவர்கள் எப்படி எங்குபோய்க் கற்க முடியும்?
மனிதர்களிடம் தான் கற்க முடியும்!
“எழுதிவைத்த
புத்தகத்தில் முழுகிப் போவாய்,
எதிரிருக்கும்
மானிடரைப் படிக்க மாட்டாய்,
கழுதைகளும்
புத்தகத்தை மேயும், பின்னர்
கால்முட்டி
இடித்திடவே நடக்கும்”- இது “அறிவியக்கம்” எனும் இதழாசிரியரும் மிகப்பெரும் தமிழறிஞருமான
சாலய் இளந்திரையன் எழுதிய வாழ்வியல் கவிதை!
நமது
தமிழ்நாட்டு முதலமைச்சர்களாக இருந்த காமராசர், அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். இன்றும்
புகழோடு இருக்கிற ஜெ.ஜெயலலிதா முதலான அனைவருமே பள்ளி கல்லூரிப் படிப்பைத் தாண்டிப்
பொது அறிவில் சிறந்திருந்த காரணத்தால்தான் பெரிய தலைமைப் பொறுப்புக்கு வரமுடிந்தது!
இதில் எம்.ஜி.ஆர். காமராசர், மு.கருணாநிதி ஆகியோர் பள்ளிப்படிப்பையே முடிக்காதவர்கள்!
இவர்கள் முதல்வராக இருந்தபோது பெரும்படிப்புப் படித்தவர்கள்செயலாளர்களாக
இருந்தனர்! எனில், முதல்வர் பெரியவரா? அவரின் செயலாளர் பெரியவரா? எனில், பெரும் படிப்புப்
படித்த செயலாளரை விட, பொதுஅறிவு பெற்ற முதல்வரே பெரியவர் என்பதைச் சொல்லாமலே புரிந்து
கொள்ள முடியும்!
மிகப்பெரும் சாதனையாளர்களாகப் போற்றப்படும்
வள்ளுவர், கம்பர், பாரதி, கலிலியோ, எடிசன், சாக்ரடீஸ், காரல் மார்க்ஸ், அம்பேத்கர்,
தந்தை பெரியார் எனும் மாமேதைகள் கல்லூரிப் படிப்பால் அறியப்பட்டவரல்ல! மாறாகப் பெரும்
அறிவால் உலகில் இன்றும் என்றும் புகழ்பெற்றவர்கள்! உலகில் எங்காவது அவர்கள் தினம்தோறும்
நினைக்கப்படுகிறார்கள் எனும்போது, இவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டு தானே இருக்கிறார்கள்?
இவர்களைப் போலும் பேரறிவாளர்க ளுக்கு மரணமே கிடையாதல்லவா?!
உலகின் முதல்பெரும் பணக்காரராகப் பத்தாண்டுக்கும்
மேலாகத் திகழும் பில்கேட்ஸ், கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டு வந்தவர்தான்! இன்று
அவரது நிறுவனத்தில் “பல்கலைக் கழகத்தின் முதல் மாணவர்” ”தங்கப்பதக்கம் பெற்றவர்” பலரும் பணியாற்றி வருகிறார்கள்
எனில், பட்டம் பெறாத ஒருவர், பல்கலைக் கழகத்தில் உயர்பட்டம் பெற்றவருக்கு சம்பளம் கொடுக்கும்
அளவிற்கு எப்படி உயர்ந்தார் எனில் அவரது துறை சார்ந்த அறிவில் உச்சத்தை எட்டினார்!
உலகம் அவரை நிமிர்ந்து பார்த்தது! கூடுதலாகப்
பொதுஅறிவு அவரை உச்சத்தில் கொண்டுபோய் அமர்த்தியது
இதுதான் இன்றைய இளைஞர் முன்னேற்றத்திற்கு
அவசியமாகிறது! இன்று எப்படிக் “கற்றவர் - கல்லாதவர்” எனும் வேறுபாடு இருக்கிறதோ இதைவிடவும்
அதிகமாக, இன்னும் 5,6ஆண்டுகளில், “கணினி அறிவு பெற்றவர்- கணினி அறிவற்றவர்” எனும் வேறுபாடு
வரப்போகிறது! இன்று மகனின் பள்ளி வயதில் அவர் பெற்ற விருதுகளைப் பார்த்து மகிழ்ந்துள்ள
பெற்றோர், இன்னும் பத்தாண்டுகளில் தாத்தா பாட்டி ஆகும்போது, “என்ன உனக்குக் கணினி தெரியாதா?
போ தாத்தா போ பாட்டி” என்று பேரர்கள் சொல்லும் காலம் வரப்போகிறது! எனவே ஐம்பது வயதுக்கு
மேலான பெரியவர்களும் கூடக் கணினி அறிவைக் கூடுதலாகப் பெற்றுக்கொள்ளப் பயிற்சி பெறுவது
அவசியமாகிறது! அது பள்ளிப்பாடங்கள் ஐந்தோடு ஆறாவது பாடமாக --அனைவரும் கற்றே ஆகவேண்டிய
பாடமாக-- வரப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை!
மனித குல வரலாற்றில், பல்லாயிரம் ஆண்டுக் காலமாக உடல்பலம் மிகுந்த மாவீரர்களே புகழ்பெற்றிருந்தனர், பின்னர் பணப் புழக்கம் வந்தபிறகு கடந்த
இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பணபலம் மிகுந்த அரசர் மற்றும் பெரும் செல்வந்தர்களே உலகத்தை
ஆட்டிப் படைத்து வந்தனர். ஆனால் இப்போது அப்படி அல்ல! உடல்பலத்தை விடவும் பணபலத்தை
விடவும் கணினி அறிவு கொண்டவரைப் பார்த்துத்தான் உலகே அஞ்சுகிறது!
எனவே, இளைஞர்கள் என்ன படிப்புப் படித்தாலும்,
கூடுதலாகக் கணினி அறிவு பெற்றிருப்பது வாழ்வில் முன்னேற அவசியமாகி விட்டது!
நான்
எழுதி, விருதுகள் பல பெற்று ஏராளமாக விற்றுக்கொண்டும் வருகிற “முதல்மதிப்பெண் எடுக்க
வேண்டாம் மகளே!” எனும் நூலிலும் இதைத்தான் சொல்லியிருக்கிறேன். முதல்மதிப்பெண் எடுப்பதை விடவும்
–பாடநூலைத் தாண்டிய பலதுறை அறிவும் முக்கியமாக உலக மனிதரைப் படித்துக் கொள்ளும் பொது
அறிவும்தான் மனிதரை முன்னேறச் செய்கிறது
இவ்வாறு
கவிஞர் நா.முத்துநிலவன் பேசினார். பயிற்சி மைய ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும்
பரிசு பெற்ற மாணவ-மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்பல்லோ
கணினிப் பயிற்சி மைய நிறுவனர் நாகராஜன், இயக்குநர் செந்தில் குமார், முதன்மைக் கல்வி
ஆலோசகர் டேவிட், ஒருங்கிணைப்பாளர் துரை.சரவணன், அலுவலக மேலாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட
அப்பல்லோ குழுவினர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்
------------------------------------------------------------------------------------------------------
-நன்றி-
தினமணி நாளிதழ் திருச்சிப் பதிப்பு (சுருக்கம்) &
புதுகை வரலாறு நாளிதழ் (முழுமையும்)
(26-10-2016
புதன் கிழமை)
--------------------------------------------------------------------
“புதுகை வரலாறு” நாளிதழின் இன்றைய சுவரொட்டி |
----------------------------------------------------------------------
“புதுகை வரலாறு” நாளிதழின் 6ஆம் பக்கம் |
பள்ளிப்பாடங்கள் என்பது வாழ்க்கைக்கோ பொருந்துவனவாக அமையவில்லை என்பது உண்மையே. அறிவு என்பதானது இதற்கு அப்பாற்பட்ட நிலை. தவிரவும் பள்ளிக்கல்விக்கு அப்பாற்பட்ட அறிவே ஒருவரை முன்னுக்கொண்டு வரும்.
பதிலளிநீக்குஇன்றைய சூழலுக்கேற்ப ஒரு பயனுள்ள சிறந்த தொகுப்பு அப்பா.எல்லா கல்லூரிகளிலும் பள்ளியிலும் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதிலேயே மாணவர்களை அடைக்காக்கும் முட்டை போல் வளர்த்து வருகின்றனர்.இந்நிலையில் எப்படி பாடம் சாராமல் அறிவை பெறுவார்கள்.ஒரு சிலரே இதன் உண்மை நிலையை உணர்ந்து துறைசாரா அறிவையும் பெற்று வருகிறார்கள் என்பதில் மகிழ்ந்துக் கொள்ளலாம்.நல்லதொரு தொகுப்பு.
பதிலளிநீக்குவாழ்த்துகள் அப்பா.நன்றி நேரம் பயனுள்ளதாக அமைந்தது.
சொல்லவும் வேண்டுமா? செறிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா...மிகவும் தேவையான பதிவு. பொது அறிவும் அனுபவ அறிவும் மதிப்பெண்களை விடவும் சிறந்தவை.
பதிலளிநீக்குவாழ்வில் வெற்றி பெற, பாடநூல்களோடு பொது அறிவும் பெற வேண்டும் என்பதை மாணாக்கர்களின் மனதில் படுமாறு நல்ல எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கியிருக்கிறீர்கள். நல்ல பயனுள்ள கட்டுரை!
பதிலளிநீக்கு