“ரெமோ” -சிவ.கார்த்தியின் அவகீர்த்தி!


வருத்தப் படாத வாலிபக் கதையின்
      வணிகம் தொடரும் அநீதி இது
திருத்தப் படாத சிவ.கார்த்தி பாணி
      தெரிந்தே படரும் வியாதி இது!

வேலைவெட்டி இல்லா விடலையும்
பெண்ணைக் கவர்ந்து விடுவானாம்!
சேலையில் வந்தால் தெரியாதாம்
      சிறுபெண் அவளோ மருத்துவராம்!

நிச்சய தார்த்தம் செய்திருந்தாலும்
      நீதான் எனக்கெனச் சொல்வானாம்
அச்சோ நீதான் வேண்டும் என்றே
      அவளும் இவன்பின் செல்வாளாம்!  

பெண்ணைக் கேவலப் படுத்தும் போது
      பெரிதாய் எழுகிற கூச்சலெது?
விண்ணைத் தொடுகிற வசூலே எனினும்
      விடலையைச் சுரண்டும் சூழ்ச்சியது!

பொழுது போக்கும் திரைதான் எனினும்
      பொருந்தும் படியாய் வாழ்க்கையினை
பழுது பார்த்த மேதையர் உண்டே!
      பச்சைப் பிள்ளையா சிவகார்த்தி?

தண்ணி யடிக்கும் காட்சியில் நடித்துத்
      தரங்கெட மாட்டேன் என்றே நீ
சொன்னதை எடுத்துப் போட்டு மகிழ்ந்தேன்

      சொன்னதை மறந்தாய் சிவ.கார்த்தி! (*)

படங்கள் ஓடலாம், பணமும் சேரலாம்
      பற்றிப் படரும் அவகீர்த்தி!
விடலை களுக்குக் கெடுவழி சொன்னால்,
      வீழ்ச்சியும் உறுதி சிவ.கார்த்தி!
-------------------------------------------------------------------------- 
 “திரைப்படக் கதாநாயகன் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது, என்படங்களில் நான் தண்ணியடிக்க மாட்டேன், 
தம் அடிக்க மாட்டேன்” என்று சிவ.கார்த்தி தினமணிக்குத் தந்த நேர்காணலைப் பாராட்டி நான் எழுதிய பதிவு - 
“சபாஷ்! சிவ.கார்த்திகேயன்! அப்படிச் சொல்லுங்க! 
அப்படியே நில்லுங்க!” (*) - பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2014/04/blog-post_6.html

அது அப்போ!... இது இப்போ!...?

17 கருத்துகள்:

  1. ஆதங்கம் சொன்ன கவிதை. ஏனோ அவருக்கு இத்தனை வரவேற்பு. சினிமாவுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் இருக்கும்வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

    பதிலளிநீக்கு
  2. நச் சென கவிதை வடிவில் குட்டு. இந்தக் கவிதையை சிவ கார்த்திகேயனுக்கு நிச்சயம் அனுப்ப வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. அழகான ஒரு கவிதையை சிவ.கார்த்திக்காய் வீண்டித்ததை மென்மையாக கண்டிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் என்னதான் கூறினாலும் நாங்கள் திருந்துவதாக இல்லை என்றிருக்கும்போது உங்களால் என்ன செய்யமுடியும் ஐயா? வேதனையாகத்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. சினிமாவின் இந்த தந்திரம் புரியவில்லை. விருப்பமில்லாத பெண்ணிடம்கூட திரும்ப திரும்ப காதல் டார்ச்சர் கொடுத்துக்கொண்டே இருந்தால் அவள் காதலியாகிவிடுவாள் என்பதும், ஆண் கேடுகெட்டவனாக இருந்தாலும் பொறுக்கியாக இருந்தாலும் முரடனாக இருந்தாலும் பெண் காதலிப்பாள் என்பதும் கொஞ்சம் கூட நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராத ஒன்று. ஆனாலும் இந்தக் கருவைத்தான் சினிமாக்கள் கொண்டாடுகின்றன. இதை உண்மையென்று நம்பும் இளைஞர்கள் பெண்ணை அடாவடியாக விரும்பாத தொடங்குகிறார்கள். பெண் காதலை மறுக்கும்போது ராம்குமார்களாக மாறுகிறார்கள்.

    இப்படியேதான் மதுவையும் அளவுக்கதிகமாக சினிமாவில் ப்ரொமோட் செய்து இளைஞர்களையெல்லாம் (பெண்கள் உட்பட) மதுவின் பக்கம் இழுத்த்துவிட்டார்கள். இதனால்தான் சினிமாவே வெறுப்பு தட்டுகிறது.

    த ம 4

    பதிலளிநீக்கு
  6. தூங்குபவர்களை எழுப்பமுடியும்.. ஆனால் தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை எழுப்பமுடியாது அண்ணா.. பணத்துக்காக எதையும் இழக்கத்துணியும் இவர்போன்ற இளைஞர்கள் தாமாகவே மனந்திருந்தி பாதை மாறினால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  7. this siva karthikeyan had cried in the distributors meeting...
    a perfect drama
    soon he will return to compering job...

    பதிலளிநீக்கு
  8. இது தமிழ்த்திரையுலகைப் பீடித்திருக்கும் வியாதி. ரவுடிகளையும், பொறுக்கிகளையும் பெண்கள் விரும்புவதாகத் திரும்பத் திரும்பக் காட்டி இன்றைய இளைஞர்களை மூளைச் சலவை செய்கிறார்கள். நடைமுறை வாழ்விலும் அது உண்மையென நம்புவதால் பெண்ணொருத்தி காதலை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் கொலை செய்யும் அளவுக்குத் துணிகிறார்கள். தங்கள் கவிதை வேதனையை நன்கு வெளிப்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  9. நமது கண்டனத்தை வன்மையாகப் பதிவு செய்ய வேண்டும் அண்ணா..

    பதிலளிநீக்கு
  10. அருமையான வரிகள்
    சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
  11. அருமையான கருத்து.
    மக்களை சினிமா மோகத்தில் இருந்து மீட்க வேண்டும். அப்போது தான் சிவகார்த்திகேயன் மற்றும் சமுதாயத்தை பற்றி சிறிதும் அக்கறை இல்லாத நிழல் ஹீரோக்கள் திருந்துவார்கள்.

    பதிலளிநீக்கு
  12. சமுதாயத்தில் விஷ கருத்துக்களை பரப்பும் விஷ கிருமிகள் இவர்கள்.

    பதிலளிநீக்கு
  13. உண்மையை உரக்கச்சொல்லி உள்ளீர்கள் அண்ணா..

    பதிலளிநீக்கு
  14. தரமான / பயனுள்ள பதிவுகளை தருபவர் என்று உங்களை பற்றி பொதுவான ஒரு அபிப்பிராயம் உண்டு . இவர்களை பற்றி எல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன் .

    பதிலளிநீக்கு