பெண்களைக் கேவலப்படுத்தும் இந்த விளம்பரத்தைத் தடைசெய்ய வேண்டாமா?

“இந்த வண்டி உங்களிடமிருந்தால் எந்தப் பெண்ணும் ஓடிவருவாள்” 
என்றொரு விளம்பரம் அண்மைக்காலமாக அனைத்துத் தொலைக்காட்சி களிலும் தொடர்கிறது! எந்தத் தனிப்பட்ட நபரோ, பெண்ணிய, ஊடக அமைப்புகளோ எதிர்ப்புத் தெரிவித்து இதை நிறுத்த முயன்றதாகக் கூடத் தெரியவில்லையே! ஏன்?

ஒருவேளை நாமே இதை ஒப்புக்கொண்டிருக்கிறோமோ? என்றே எனக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது சிலநேரம்!

'பெண்ணுக்கு சொந்த புத்தி கிடையாது, அதனால் அவள் ஆணாகப் பிறந்து பிறகுதான் இறைவனை அடையமுடியும்' என்றது இந்து மதம். மற்ற மதங்களும் பெண்ணை இரண்டாம் பட்சமாகவே வைத்திருக்கின்றன (இந்தவகைளில் -பெண்ணை இழிவுபடுத்துவதில்- எம்மதமும் சம்மதம்!)



பெண்ணுரிமை பாடிய பாரதி கூட, “வீணையடி நீ எனக்கு” என்று சுவைபடு பொருளாகவே பாடினான், எமது பெருமைக்குரிய தாத்தன் வள்ளுவன், அன்றைய சமூகத்தில் இயல்பாயிருந்த (தொல்காப்பிய இலக்கணம்) காமப்பரத்தை, காதல்பரத்தை, இற்பரத்தை, சேரிப்பரத்தை என்றிருந்த ஆணுக்கான உலகின் அடையாளச் சொற்களைக் கடிந்து பாடினாலும், கடைசியில்  “பெண்வழிச் சேறல்” என்றொரு அதிகாரமும் செய்தான்

பெண்ணின் குழந்தைப் பேறுக்கான அடையாளமான தொப்புளில் பம்பரம் விட்டார் சின்னக் கவுண்டர் விஜய்காந்த், பொண்ணுன்னா அடக்கமா இருக்கணும் என்று பலபடங்களில் அறுவுறுத்தி, “ஃபிகரு ஃபிகருதான் நீ சூப்பர் ஃபிகருதான்! ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி” என்று கவிப்பேரரசுகள் எழுத, “சூப்பர்ஸ்டார்” கட்டிப்பிடித்துப் பாடுவார்! 

ஒரு பெண்ணைப் பார்த்து  “ஐய் ஐய் திமுசுக்கட்டை” என்று (படம் நினைவில்லை, ஜோதிகாவைப் பார்த்து) “இளைய தளபதி” விஜய் பாடுவார்! நாமும் பார்த்து ரசித்துப் படத்தை ஓட்டினோம்!

“எவன்டீ உன்னைப் பெத்தான்  பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்  கையில கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்” என்று “லிட்டில் சூப்பர் ஸ்டார்” சிம்பு அலம்புவார்! நாமும் பார்த்தோம்!

இவர்களை  உச்சியில் வைத்து வாரி வழங்குகிறார்கள் தமிழகமக்கள்!

“மீட்டிய வீணையின் நரம்பும் மானம் மானமென்றே முழங்கும் மறத்தமிழர் கூட்டம்” என்ற வீரத்திராவிட வசனம் வீணாய்ப்போனது!

அன்றாடமும் பெண்கள் தலைநகர்முதல் கடைக்கோடிக் கிராமம் வரையிலும் அவலத்திற்கு உள்ளாகிறார்கள், நாமும் செய்தியாகப் பார்த்து, ஷேர்செய்து, லைக்கோ டிஸ்லைக்கோ போட்டு வருகிறோம்!

ஆனால், 
“இந்த வண்டி உங்களிடமிருந்தால் எந்தப் பெண்ணும் ஓடிவருவாள்” என்று சொல்லும் இந்த விளம்பரம் பெண்களைப் படுமோசமாகச் சித்தரிப்பதை தினமும் தொலைக்காட்சியில் பார்க்கிறோம்! 
ஒருவேளை நாமே அப்படி நம்புகிறோமோ என்றுகூட எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது! நீங்களே பாருங்கள்..

ஒருபெண் தன் காதலனுடன், ஒரு பெண் தன் வேலையிடத்தில்...
ஒரு பெண் தன் கணவனுடன் சாலை வாகனப் பழுதில் சிக்கி...
மற்றொரு பெண் அப்போதுதான் திருமணமாகி மணமகனுடன்..

எல்லாரும் இந்த வண்டியைக் கண்டதும் தன் காதலனை, புதுக்கணவனை விட்டுவிட்டு ஓஓஓஓஓடி வருகிறார்கள்.. அடடா என்ன வேகம்!

பெண்களைப் பற்றிய எவ்வளவு கீழ்த்தரமான நினைப்பிருந்தால் இந்த விளம்பரத்தை இப்படித் தயாரித்திருப்பார்கள்... 

நீங்களே பாருங்கள்-


இவர்களை என்ன செய்யலாம்? 

இந்த முட்டாள்கள் தினத்தில் ஏதாவது செய்யலாமே?

இன்று ஒருநாள்தான் முட்டாள்கள் தினமாம்! நம்புவோம்!

----------------------------------------------------------  

15 கருத்துகள்:

  1. வாசனை திரவிய விளம்பரங்கள் இன்னும் மோசம். நம்பி வாங்கி ஏமாந்ததுதான் மிச்சம். :)

    பதிலளிநீக்கு
  2. பெண்ணிய வாதிகள் எங்கே போனார்கள்? ஒரு பீப் பாடலுக்கு எத்தனை ஆர்ப்பாட்டங்கள் போட்டார்கள்? அவர்களெல்லாம் இப்போது எங்கே?

    பதிலளிநீக்கு
  3. பெண்களை இழிவுபடுத்துவதில் எல்லா மதமும் ஒன்றே என்ற உங்க கருத்தில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனா இந்த விளம்பரம் நல்ல நகைச்சுவையாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. இப்படிப்பட்ட விளம்பரங்கள் ஏற்கனவே சில வந்திருக்கின்றன. ஒரு வாசனை திரவத்தை பூசிக்கொண்டால் அந்த வாசனையில் மயங்கி சாலையில் செல்லும் இளம் பெண்கள் எல்லாம் பின்னாலே வருவார்கள். அதேபோல் ஒரு சாக்லேட் விளம்பரத்தில் அந்த ஒரு சாக்லெட்டுக்காக மொத்தப் பெண்களும் அந்த ஆணைப் பின்தொடர்வார்கள். இத்தகைய விளம்பரங்களில் எல்லாம் இளம் பெண்கள் மட்டுமே பின்தொடர்வார்கள். வயதான பெண்கள் யாரும் தப்பித்தவறிக் கூட வரமாட்டார்கள். இவையெல்லாம் கற்பனைக்கு மிஞ்சிய பேண்டஸி ரக விளம்பரங்கள். இவற்றை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. பெண்ணுக்கும் தெரியும் இது அதீத கற்பனை என்று. இதன்மூலம் பார்வையாளர்களை ஈர்க்கவேண்டும் என்பதுதான் அவர்கள் இலக்கு.

    பதிலளிநீக்கு
  5. ஐயா ,ஆணின் உள்ளாடை விளம்பரம்கூட பெண்ணை வைத்துத்தான் இங்கு செய்யப்படுகிறது!.பெண் சந்தைப்பொருள்,சதைப் பொருளாகவே பார்க்கப்படும் அவலம் இன்னும் எத்தனை நாள் தொடருமோ?!பெண்களும் புகழ்ச்சியில் மயங்குதல்,புற அழகில் கவனம் செலுத்துதல்,.ஓட்டுக்குள் ஆமையென ஓர் வட்டத்துக்குள் சுருங்குதல்,.போன்ற தளைகளிலிருந்து வெளியேறுகிறவரை இந்த அவலங்கள் தொடரும்.!

    பதிலளிநீக்கு
  6. i wonder why women are accepting this act offer. if they reject who cares.... no logic in your angle....

    பதிலளிநீக்கு
  7. எந்த விளம்பரம் என்றாலும் அதில் பெண்தான்... பெண் காட்சிப் பொருளாக்கப்படுவது விளம்பரங்களில் மட்டுமல்ல... சினிமாவில் கூட குத்துப்பாட்டு என்று ஒன்றும்... பாடல்காட்சிகளில் குளிர், பனி பிரதேசம் என்றாலும் ஹீரோ கை, கால் என எல்லாம் மறைத்திருக்க பெண்ணோ... இதுதான் இன்றைய நிலை ஐயா...

    நமது போராட்டங்கள் எல்லாம் அதனால் லாபமிருக்கும் என்றால் மட்டுமே...

    மற்றபடி இது பத்தோடு பதினொன்று அவ்வளவே...

    பதிலளிநீக்கு
  8. இதுபோன்ற விளம்பரங்களையும், பாடல்வரிகளையும் பெருமையாக நினைக்கும் பெண்கள் இருக்கம் வரை இந்த நிலை நீடிக்கும் ஐயா. இந்த எதிர்ப்புக்குரல் பெண்களிடமிருந்து வருவதில்லையே... என்ற எண்ணம் எனக்கும் உண்டு. கவிதைக்குப் பொய்யழகு என்று சொல்வதுண்டு அந்த பொய்யை மெய்யாக நம்புவது பெண்களின் பலவீனம் போலும்..

    பதிலளிநீக்கு
  9. இது நம்மை முட்டாளகளாக்கக் கூடியது....நாம் தான் ஏமாந்து போகின்றோம்....முட்டாள்கள் தினம் வருடம் முழுதும் நமக்கானது அய்யா...

    பதிலளிநீக்கு
  10. கட்டாயம் தடை செய்யப் பட வேண்டிய விளம்பரம்தான்.ஒரு ஆவேசமான சொற்பொழிவை கேட்டது போல் அமைந்துள்ளது பதிவு. பெண்கள் பொங்கி எழத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் எல்லாம் இப்படி இந்த கானொளியை பகிர்ந்து பிரபலப்படுத்துவீர்கள் என்று நம்பித்தான் இப்படி எடுக்கின்றார்கள் என்று தெரியலையா?
    அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை :(

    பதிலளிநீக்கு
  12. நம் ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எல்லாமே அபத்தமானவை தாம். வண்டியைப் பார்த்து சென்ட் வாசனையைப் பார்த்து, உள்ளாடையைப் பார்த்து ஆண்களைத் தேடி ஓடுகிறார்களாம் பெண்கள்! எந்தப் பெண் இப்படி ஓடுகிறாள் என்று தெரியவில்லை. மடையர்கள்! இவர்களைப் பொறுத்தவரை பெண்களுக்குச் சுயபுத்தி கிடையாது. நகை, புடவை என்று அலைபவர்கள். தமிழ்ச்சினிமாவிலோ கதாநாயகிகள் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அரை லூசுகள்! இதையெல்லாம் எதிர்த்துப் பெண்ணுரிமை இயக்கங்கள் போராட ஆரம்பித்தால், ஆண்டு முழுக்கப் போராடிக்கொண்டே இருக்க வேண்டியது தான். பெண்ணுக்கு வாழ்க்கைத் துணை என்ற விருது தந்தவர் திருவள்ளுவர். பெண்வழிச்சேரல் திருக்குறளின் இடைச்செருகலாக இருக்கவேண்டும் என்பது இலக்கியச்சாரலின் கருத்து. பெண்ணை மட்டந்தட்டும் அந்த அதிகாரம், 'உயர்ந்தவனாகிய கணவன், தாழ்ந்தவளாகிய
    மனையாளை, அடக்கி ஆள வேண்டுமே தவிர, அவள் பேச்சைக் கேட்டு ஒழுகுவது ஆண்மைக்கு
    இழுக்கு' என்ற கருத்து கொண்ட ஆணாதிக்கவாதி ஒருவரின் சரக்குதான்."பார்க்க இணைப்பு:- திருக்குறளின் உள்ளடக்கம் http://sgnanasambandan.blogspot.in/2016/03/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  13. பெண் என்னால் என்றால் பேயும் இறங்கும் ( இரங்கும் அல்ல ) ..பெண்களை காட்டித்தான் ஆண்களை ஏமாற்ற வேண்டி இருக்கிறது ...ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்று பவனும் இருப்பான் ..............பெண்களை கவர்ச்சி பொருளாக த்தான் இதுவரைகாட்டுகிரார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றித்தான் உலகம் உருண்டு கொண்டு இருக்கிறது

    பதிலளிநீக்கு
  14. அண்ணா பெண்ணியவாதிகள், பெண்கள் அமைப்பு இதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதெல்லாம் சும்மா...உப்புச் சப்பில்லாதவற்றிற்குக் கொடி பிடிப்பார்கள்...

    நானும் உங்களைப் போல முதலில் இப்படிச் சொல்லியதுண்டு. அப்புறம் எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் பெண்ணீயம் பேசுபவரே கூட விளம்பர அழைப்பு வந்த போது சொன்னது "என் கருத்து, கொள்கை எல்லாம் தனிப்பட்டது. இது வியாபாரம். அது வேறு இது வேறு" என்று சொன்னார்.

    நீங்கள் சொல்லும் இந்த விளம்பரங்களில், பாடல்களில், திரைப்படங்கள் எல்லாம் நடிப்பவர்களும் பெண்களே. அவர்களே அதை எதிர்க்காத போது?

    இது ஒரு வியாபார உலகம். அளவுக்கு மிஞ்சிய கற்பனை உலகம். அவர்களுக்குத் தேவை பொருள் சந்தையில் பலரையும் சென்றடைய வேண்டும். அவ்வலவே. அவர்கள் ஏற்று நடிக்கும் வரை இது இப்படித்தான் இருக்கும் அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஐயா.பெண்களை அவமானப்படுத்தும் வகையில் இந்த விளம்பரம் அமைகிறது குறித்து தங்கள் கருத்தை கூறியுள்ளீர் ஐயா.நானும் இதுப் போன்ற விளம்பரங்களை பார்க்கும் போது ஆவேசம் அடைவதுண்டு.எனது அம்மா கூறுவார்கள் பணத்திற்காக இந்த பொண்ணுங்க விளம்பரத்தில் நடித்துவிடுகிறார்கள்.இதில் தானும் ஒரு பெண் என்ற ஒரு உணர்வும் இது ஒட்டு மொத்தமான பெண்ணினத்தையே அவமானம் அடைய செய்யும் என்று நினைத்து பார்க்காமல் நடித்துவிடுகிறார்கள் என்று கூறினார்.இது மட்டுமா ஐயா,இல்லையே அந்த பற்பசை விளம்பரம்,வாசனை திரவியம் போன்ற விளம்பரங்கள் பார்க்கும் போது நான் சில நேரங்களில் ஆவேசப்பட்டு விளம்பரத்தார்களையும் அதில் நடித்தவர்களையும் திட்டுவேன்.ஆனால் இது பார்த்து கொந்தளிக்க கூடியப் பெண்கள் இதனை பார்த்த உடன் அந்த வாசனை திரவியத்தை உடனே கடைகளுக்கு சென்று வாங்கிக் கொண்டு வருகிறார்கள் ஐயா.இதுக் குறித்து பெண்கள் தான் குமுற வேண்டும் ஆனால் இங்கு நடிப்பதே ஒரு பெண் என்பதால் என்ன செய்வது ஐயா..??

    இதனால் ஒவ்வொரு பெண்களும் விளம்பரத்தை கூட தன்னுடைய சகோதர்கள் மற்றும் தந்தை போன்றோரோடு இருக்கையில் பார்க்கும் போது கூச்சமாகவும் கேவலமாகவும் இருக்கிறது ஐயா.

    திரைப்பட பாடல்கள் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை ஐயா.இதனையும் இரசிக்கும் பெண்ணினங்கள் அதிகம் உள்ளன நம் நாட்டில்.அவர்கள் முன் வந்தால் நிச்சயம் இதுப்போன்ற விளம்பரத்தை தடைச் செய்யலாம் ஐயா.

    இந்த தலைமுறையினர் முழுவதுமாக வேறுப்பட்டுள்ளன ஐயா.ஆடையில் இருந்து எல்லாவற்றிலும் மாற்றம் தான் ஐயா.இன்னும் இதுப் பற்றி நான் கூறினால் கருத்து நீண்டு செல்லும் என்பதால் முடித்துவிடுகிறேன் ஐயா.
    நன்றி.

    பதிலளிநீக்கு