மக்களின் தேர்தல் அறிக்கை –தொடர் பதிவு (கல்வி – நா.முத்துநிலவன்)

அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் உள்ள அனைத்தையும் நிறைவேற்றிய கட்சிகள் மட்டுமே அடுத்த தேர்தலில் நிற்க முடியும் என, சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது முதல் கோரிக்கை... 

அதுவரை, நமது தமிழ்நாட்டு அரசின் செயல்பாடுகளில் என்னென்ன மாற்றம் தேவை என்பது பற்றிய நம் கருத்துகளை –அதாவது நமது மக்களின் தேர்தல் அறிக்கையை நாமே பகிர்ந்து வெளியிடலாமே?

பதிவுலக நண்பர்கள், அவரவர்க்கும் விருப்பமான துறைகளில் தம் கருத்தை முன்வைக்க அழைக்கிறேன் –
-----------------------------------------------------------------------------------------  
இதோ கல்வி பற்றிய எனது அறிக்கை-
(1)  கல்வி (அடிப்படை உரிமையாகச் சட்டமியற்றப்படும்)
கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார் மயம் முற்றிலும் ஒழிக்கப்படும். இவற்றில் அரசுக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் உதவுவோர் பெயர்  அந்தந்த இடங்களில் வைக்கப்படும். ஆரம்பக் கல்விமுதல் உயராய்வு, தொழிற்கல்வி மருத்துவ, விஞ்ஞான, வேளாண் கல்வி வரை அனைத்து நிலைக் கல்வியும் மாணவர் ஆர்வத்தின் அடிப்படையிலும் சமூகநீதி அடிப்படையிலும் அரசுச் செலவில் விடுதியுடன் தருவது அரசின் பொறுப்பாகும்.


ஐந்துவயதில்தான் பள்ளியில் சேர்க்க முடியும். 3முதல் 5வயதுக்கான கேஜி வகுப்புகளுக்குப் பதிலாக பள்ளியோடு இணைந்த “மழலைப் பூங்கா” அமைக்கப்பட்டு பாடல், விளையாட்டுடன் கூடிய பழக்க-வழக்க பயிற்சிகள் ஊட்டச்சத்துடன் உரிய பயிற்சியாளர்வழி வழங்கப்படும்.

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், தனியார் உதவி பெறும் பள்ளி எனும் பிரிவுகள் அனைத்தும் அரசுப்பள்ளி எனும் ஒருகுடைக்கீழ் அவரவர் தாய்மொழிவழிக் கல்வியாக, இலவசக் கல்வியாக, அருகமை பள்ளிகளாக மாற்றப்படும். பள்ளிப் பிள்ளைகள் காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி வழங்கப்பெறுவர். 10வயது வரையான குழந்தைகளை அழைத்துவர வாகன ஏற்பாடு செய்யப்படும். 6ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்க்கும் மிதிவண்டி வழங்கப்படும். எனினும் ஒரு கல் தொலைவுக்கு மேல் பள்ளி வாகனம் செல்வது சட்ட விரோதமாக்கப்படும். தத்தம் ஊரைத் தாண்டி பள்ளியில் சேர்ப்பது சட்டவிரோதமாக்கப்படும்.
சென்னை முதல் சிற்றூர் வரை ஒரேமாதிரி கட்டமைப்பும் கல்வித்திட்டமும், பயிற்றுமுறையும் வழங்கப்படும். 
சீருடை, பயிற்சி உபகரணங்கள் பள்ளியில் வழங்கப்படும்.

ஆரம்பக் கல்விக்கூடம் பூங்காவின் நடுவில் அமையும். ஒவ்வொரு பள்ளி கல்லூரிக்கும் இரண்டு அரசுப் பேருந்துகள், பருவத்திற்கொருமுறை சுற்றுலா. கிராம, நகரத் தொழில் மற்றும் வரலாறு இயற்கைத் தளங்களை நேரில்காண.
மற்ற மாவட்ட மாநில, வெளிநாட்டுப் பள்ளிக்குழந்தைளை வரவழைத்தும், இங்கிருந்து அனுப்பியும் மாணவர் உலகம் அனுபவப் பகிர்வு பெறலாம்.

புத்தகமூட்டை ஒழிக்கப்பட்டு அனைத்து நிலை மாணவர்க்கும் உரிய வகை ஐ-பேடு, மடிக்கணினி, குறுவட்டுகள் தரப்படும். இணைய நூலகம் இலவசம்.
(இதற்கென்று தனி மையம் ஏற்படுத்தப்பட்டு, குழந்தைகள் அறிவுத்திறன் வளர்ச்சிக்கான பதிவுகள், படங்கள், தகவல்கள் தொடர்ந்து வழங்கப்படும். பள்ளியிலிருந்தும் இவற்றை மாணவர்-ஆசிரியர் வழங்கலாம்)

பருவத்தேர்வு “வினாவங்கி”வழி கணினி மயமாகும். தேர்வு முடித்த அடுத்த நிமிடமே திருத்தப்பட்ட தாள் நகலை மாணவரே எடுத்துச் செல்லலாம். வெற்றி-தோல்வி கிடையாது, திறள்-திறன் அடிப்படையில் அடுத்த வகுப்பு வாய்ப்புகள் மாணவர் ஆர்வ அடிப்படையில் தொடரும்.

ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளுக்கும் பெரியவர்க்குமான மின்-நூலகம் மற்றும் குறும்பட, உலகப்பட வரிசைகள் பாடப்பிரிவில் சேர்க்கப்படும்.

ஆரம்பக்கல்வி ஆசிரியர்க்கே அதிகச் சம்பளம் அன்பும் பண்பாடும் நிறைந்த கலை-அறிவியல்-மொழித்திறன் பெற்ற புதியன காண்பவர்க்கே ஆசிரியப் பணிகள் தரப்படும். 

கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் மகளிர்குழுப் பங்கேற்புடன் அவ்வப் பகுதி பற்றிய சிறப்புப் பாடத்துடன் ஊடக - கணினிக் கல்வி கட்டாயமாகும்.

மேல்நிலைப்பிரிவில் விருப்பப்பாடத்தில் விளையாட்டு, கலைப்பிரிவுகள், ஊடக, வேளாண்மை, தொழில் மற்றும் சமூகசேவைப் பிரிவுகளில் இரண்டு இணைக்கப்படும். இவற்றுக்கான தொழில்சார் கல்லூரிகள் அந்தந்த மாவட்டத்திலேயே பள்ளி-இணைப்புடன் ஏற்படுத்தப்படும்.

மாநிலக் கல்வி இயக்ககத்தின் இணைஇயக்ககம் அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்படும். ஆசிரியர் தேவைகளை 3நாளில் நிறைவேற்றத் தவறும் அரசு அதிகாரிகள் விளக்கம் கேட்டுத் தண்டிக்கப்படுவர். கடமைகளில் தவறும் ஆசிரியரும் விளக்கம் கேட்டு தண்டிக்கப்படுவர். 

கல்வித் துறைமுழுவதும் தாள் பயன்பாடு ஒழிக்கப்பட்டு, கணினி மயமாகும். கையெழுத்துப் பயிற்சிக்கு மட்டும் தேவைக்கேற்ப தாள்களும் ஏடுகளும் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்களின் படைப்புகள் இணையத்தில் வெளியிடப்படும். இதற்கு வகைவாரி விருதுகள் தரப்படும்.

தேவையான மாற்றங்கள் பெற்றோர்-மாணவர்-ஆர்வலர் கருத்துகளைப் பெற்று செய்துதரப்படும். விருதுகள் பெறும் பள்ளிக்குக் கூடுதல் தேவைகள் தரப்படும்.

ஊடகங்களில் பள்ளிச்சீருடையில் மாணவர் வருவதாக இருந்தால் அது மாணவர் முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்படுவதாக இருக்க சட்டமியற்றப்படும். விழாக்களில் சொந்தமாக ஆசிரியரோ மாணவரோ இசைக்கும் பாடல்-ஆடலன்றி திரைப்படப் பாடல் ஆடல் தடைசெய்யப்படும் -தொலைக்காட்சிக்கும் இந்த வயதுக் கட்டுப்பாடு உண்டு.

தொலைக்காட்சி-திரைப்படம் இவற்றில் கல்விக்கென்று 25விழுக்காட்டு நிகழ்ச்சிகள் கட்டாயமாக்கப்படும். இதற்கு முற்றிலும் வரிவிலக்குடன் விருதுகளும் வழங்கப்படும்.
இதனைத் தொடரவேண்டும் என நான் நமது நண்பர்கள் – பின்வரும் வலைப்பதிவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் –

இவர்கள் “நம்பர்களில்“ அடங்காத நண்பர்கள், எனவே வரிசைஎண்களைப் பார்த்து வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டாம் இதில் இருப்பவரோடு, இல்லாத நண்பர்களும் கலந்துகொண்டு கலக்கலாம்…

தொடர விரும்பும் நண்பர்கள், பின்வரும் தலைப்புகளில் தங்களுக்கு ஆர்வமான துறைகளுக்கான வளர்ச்சி யோசனைகளை வைக்கலாம்.. விடுபட்டதாக நீங்கள் நினைக்கும் துறைகளையும் தேர்வுசெய்துகொள்ளலாம்.

நான் கல்விபற்றி எழுதியதைத் தவிர்த்து… (ஒருவேளை அதில் ஏதும் சேர்க்க திருத்த வேண்டுமெனில் எழுதலாம்) 
வேளாண்மை
சிறு தொழில்
பெருந்தொழில்
விலைவாசி
சட்டம் மற்றும் சமூகநீதி
குழந்தைகள் நலம்
இளைஞர் நலம்
பெண்கள் நலம்
தொழிலாளர் நலம்
இயற்கை வளப் பாதுகாப்பு
மின்துறை
போக்குவரத்து
மருத்துவம்
வேலைவாய்ப்பு
தொழில்நுட்ப வளர்ச்சி
நூலகத் துறை
நிதி வரவு-செலவு
கலை-பண்பாட்டுத் துறை
தமிழ் மொழிவளர்ச்சி
வீட்டு வசதித் துறை
காவல் பாதுகாப்புத் துறை
ஊரக வளர்ச்சித் துறை
நகர்ப்புற வளர்ச்சித் துறை
சுற்றுலாத் துறை
தேர்தல் சீர்திருத்தத் துறை
தொகுதி சீரமைப்புத் துறை
நீர்நிலை பாதுகாப்பு மற்றும் குடிநீர்த் துறை

பொதுப்பணிகள் துறை

இவற்றில் ஒன்றை எடுத்துக் கொண்டு, அவரவர் பாணியில் (சீரியசாகவோ, நகைச்சுவையாகவோ)
எழுத வேண்டுமாய் நான் கேட்டுக்கொள்ளும் நம் வலையுலகப் பெரியோர்கள்...
முனைவர் கந்தசாமி அய்யா,
புலவர் இராமாநுசம் அய்யா,
திருச்சி வை.கோ.அய்யா,
நண்பர் தி.ந.முரளிதரன்,
மதுரை ரமணி அய்யா,
திண்டுக்கல் தனபாலன் அய்யா,
கரந்தை ஜெயக்குமார் அய்யா,
நண்பர் வெங்கட் நாகராஜ்,
நண்பர் கில்லர்ஜி
நண்பர் பரிவை சே.குமார்,
நண்பர் மீரா.செல்வக்குமார்
நண்பர் எஸ்.பி.செந்தில்குமார்
நண்பர்கள் தில்லையகத்து துளசி-கீதா
நண்பர் மதுரைத்தமிழன்
நண்பர் மகா.சுந்தர்,
நண்பர் மது கஸ்தூரிரெங்கன்,
பசி பரமசிவம் அய்யா,
எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்,
சகோதரி ஞா.கலையரசி
சகோதரி மு.கீதா,
சகோதரி கிரேஸ் பிரதிபா,
சகோதரி அருணா செல்வம்,
சகோதரி கீதமஞ்சரி கீதா,
சகோதரி தேனம்மைலக்ஷ்மணன்,
நண்பர் ராமன், வேலூர்,
முனைவர் இரா.குணசீலன்,
தி.தமிழ்இளங்கோ அய்யா,
நண்பர் விசு ஆசம்,
நண்பர் ஆல்ஃபி,
நண்பர் பகவான்ஜி,
நண்பர் யாதவன் நம்பி
தம்பி ரூபன்,
தம்பி அ.பாண்டியன்.
நண்பர் மு.கோபி சரபோஜி.


ஒருவரே இரண்டு துறைகளுக்கும், ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒருதுறை பற்றியும் எழுதலாம்.. 
எழுதாத துறைகளை மற்றவர் பார்வைக்குப் 
பெயர் சுட்டி இழுத்து விடலாம்.. 
ஐந்து முதல் பத்து நண்பர்களைச் சுட்டலாம்
நம் கொள்கையே 

-சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம் தானே?!! 
------------------------------------------------------------------
ஒரு முக்கியமான பின்குறிப்பு (M.V.?)

நமது “இணையத் தமிழ் எழுத்தாளர் நேர்காணல் - 3உடன் நிறைவு பெற்று விட்டதா?” என்று கேட்கிறார்கள்.. 
கேள்விகளை அனுப்பி 10நாளாக பதில் அனுப்பாமல் வைத்திருக்கும் 2 நண்பர்கள்தான் இதற்குப் பதில்தர வேண்டும். சரி அடுத்தடுத்த நண்பர்களுக்கும் அனுப்பி வாங்கி வைத்துக் கொண்டு இனி வரிசையாக வெளியிட வேண்டியதுதான். என்றாலும் இது தேர்தல் நேரம் என்பதால் இந்தப் பதிவிற்கு முன்னுரிமை தருவோம்..

அடடா... “பதிவர் ஒற்றுமை ஓங்குக”ன்னு யாருப்பா அங்க முழக்கம் போடுறது..? ஓகோ தேர்தல்னு வந்தா இதைத் தவிர்க்க முடியாதில்ல..? சரி..சரி..

8 கருத்துகள்:

 1. உங்கள் கோரிக்கை தான் எனது ஆசையும்! உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிக அருமை! உங்களை கல்வி அமைச்சராக்க நான் முன் மொழிகிறேன்!

  பதிலளிநீக்கு
 2. தங்களின் முதல் கோரிக்கை மிக அருமை.

  கல்வி பற்றிய தங்களின் ஆலோசனைகள் அதைவிட அருமை.

  பலரையும் இதுபோல பல தலைப்புகளில் எழுத அழைத்துள்ளது மிகவும் சிறப்பு.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

  பதிலளிநீக்கு
 3. சகோதரி மனோ சாமிநாதன் அவர்களே! என்மேல் கோபமேதும் இருந்தால் நன்றாகத் திட்டுங்கள்...இப்படியெல்லாம் கடுமையான தண்டனை தராதீர்கள்... தாங்க முடியாது தாயே!

  பதிலளிநீக்கு
 4. அய்யா வை.கோ.அவர்களுக்கு வணக்கம். தங்கள் கருத்துக்கு நன்றி, தங்கள் அறிக்கையை எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு அண்ணா...என் கனவில் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று எனது அமெரிக்க 9 மாத வாசத்தின் போது மகனின் பள்ளியையும் வேறு சில பள்ளிகளையும் கூர்ந்து நோக்கியதில் வந்த நம் நாட்டில் வராதா என்று ஏங்கிய கருத்துகள் அனைத்தும் இந்த உங்களதுப் பதிவில் வந்துவிட்டன....உங்கள் கருத்துகளில் ஒரு சில என் கனவில் இல்லாதவை. மிகச் சிறப்பான கருத்துகள்.

  எழுதுகின்றோம். துளசியும் வந்தவுடன். இல்லை என்றால் நான்...ஆனால் மே 12 தேதிக்கு மேல்தான் இனி இணையம் பக்கம் வர இயலும். அதுவரை திருமண விழா, உறவினர் வருகை, பயணம் என்று திட்டங்கள் மே 12 ஆம் தேதிவரை.

  மிகவும் ரசித்து, கண் முன் நடப்பது போன்று கனவு கண்டு வாசித்தேன் அண்ணா. மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டும் தங்கள் பதிவினை...

  கீதா

  பதிலளிநீக்கு
 6. என்னைப் பொருத்தவரை முதலில் கல்வி, கல்வித்துறை சீரானால் நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்புகள்/துறைகள் எல்லாம் சீராகும் என்பது என் கருத்து. நீங்கள் தொடங்கி வைத்துவிட்டீர்கள்...தொடர்கின்றோம்..நிறைய தோன்றுகின்றது. ஆனால் அவற்றை வரிசைப்படுத்தி எழுத வேண்டும்...முயற்சி செய்கிறோம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 7. தேர்தல் வாக்குறுதி என்பதே ஒரு பம்மாத்து என்று இப்போதுதான் ரமணி ஸார் பதிவில் பின்னூட்டம் இட்டு விட்டு வருகிறேன்! இங்கு வந்து பார்த்தால் பம்மாத்து பண்ணச் சொல்லி எனக்கும் அழைப்பு!!! ஹிஹிஹி... முடிந்தால் செய்கிறேன்.

  நாங்கள் ஏற்கெனவே ஒரு தேர்தல் பதிவுக்கு எண்ணம் வைத்திருந்தோம். எதிர்பாராத துக்கத்தால் அது சாத்தியப் படாமல் போயிற்று. என்னால் இயன்ற அளவு ஏதாவது எழுத முயற்சிக்கிறேன். என்னையும் பட்டியலில் சேர்த்ததற்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. கல்வித்துறை குறித்த சிறப்பான கருத்துகளை முன்வைத்துள்ளமைக்குப் பாராட்டுகள் அண்ணா. பொறுப்பானவர்கள் எல்லோரும் பொறுப்பினைத் தட்டிக்கழிக்கும் வேளையில் பொறுப்புகளை நம் கையிலெடுத்துக் கருத்துகளைப் பகிர்வதென்பது சிறப்பான முன்னடத்தல். இப்பட்டியலில் என்னையும் இணைத்திருப்பதற்கு மிக்க நன்றி. முயற்சி செய்கிறேன்.

  பதிலளிநீக்கு