தமிழில் மாணவர் தோல்வியடையக் காரணமென்ன?கடந்த கல்வியாண்டில் பத்தாம்வகுப்புத் தேர்வில் நம் பிள்ளைகள் மதிப்பெண்களை வாரிக்குவித்து “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி” என்பதை நிலை நாட்டியிருக்கிறார்கள். 
மாநில முதல்மதிப்பெண் 500க்கு 499 என்பதும், அதையும் 19பேர் பகிர்ந்திருப்பதும், அடுத்த 498ஐ 125பேரும், 497ஐ 321பேரும் பெற்றிருக்கிறார்கள் என்பதும் மகிழ்வான செய்திதான்
இதுவரை இல்லாத அளவில்கடந்த கல்வியாண்டில் மாணவ-மாணவியர் மதிப்பெண்களை வாரிக் குவித்திருந்தாலும், பல்லாயிரம்பேர் கணித-அறிவியல் பாடங்களில் 100 விழுக்காடு பெற்றிருந்தாலும், தமிழ்ப்பாடத்தில் மதிப்பெண்கள் குறைவாகவே இருப்பதும், 10முதல் 15விழுக்காட்டினர் தோல்வியடைவதும் தொடர்கிறதே ஏன்? அதிலும் தேர்வெழுதிய சுமார் 11லட்சம் மாணவர்களில் 63,000பேர் தமிழில் தோல்வியடைந்திருக்கிறார்களே ஏன்? என்பது ஒரு முக்கியமான கேள்வி.

10ஆம் வகுப்பு மாணவர்தோல்வியில் முதலிரண்டு இடங்களில் கணிதத்திற்கும் ஆங்கிலத்திற்கும் தான் எப்போதும் போட்டி எனினும்,  அடுத்த இடத்தில் தமிழ்ப்பாடம் தொடரவே செய்கிறது. இந்த ஆண்டும் இப்படித்தான் தெரிகிறது. இது ஏன்?
இதை நண்பர்கள் பலரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதால், கடந்த 34 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணியாற்றியதாலும், தமிழனாக இருக்கும் உரிமையாலும், இதற்கான பதிலைத் தேட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் பணியாற்றிய அரசுப் பள்ளியில், என் வகுப்புகளில், பெரும்பாலும் 100 விழுக்காடு தேர்ச்சியே இதுவரை பெற்றிருந்தாலும், கடைசி ஆண்டு என்வகுப்பில்  படித்த 34 மாணவரில், மனோஜ்குமார் என்னும் மாணவர் 500க்கு 490 (தமிழில்99%)மதிப்பெண்களுடன், பத்துக்கும் மேற்பட்டோர் 90க்கு மேல் பெற்றிருந்தும், 34இல்ஒருவர் என்வகுப்பில் -தமிழில்- தோல்வி யடைந்திருப்பதை ஆற்றாமையுடன் தெரிவித்து, இந்தக் கேள்விக்கு விடைகாண முயல்கிறேன்.
காரணங்கள் பல இருந்தாலும் 
முக்கியமானவற்றைப் பட்டியலிடுவோம் –
1. மேல்நிலைக் கல்விக்குத் தமிழ்மதிப்பெண் தேவையில்லை எனும் மாணவர் உணர்வு -  பத்தாம் வகுப்பை அடுத்து, மாணவர் செல்லும் மேல்நிலைக் கல்வியிலும், தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்வியிலும் தமிழ்ப்பாடம் வெறும் உப்புக்குச் சப்பாணிதான் 11ஆம் வகுப்புச் சேர்க்கையின்போதே, தமிழை ஒதுக்கும் நிலை உருவாகிவிட்டது. தொழில்நுட்பக் கல்வியில் கணித-அறிவியல் பாடங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. எனவே, மொழிப்பாடம் வெறும் மனப்பாடச் சுமை என்பதாகவே மாணவர்கள் புரிந்து கொள்வதும் ஒரு முக்கியமான காரணமாகும்.

2.      தமிழ் உயர்கல்விக்கும் தேவையில்லை எனும் தெளிவு- தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்  அதற்குமேல் போகும் –தொழிற்கல்வி வகுப்புகளுக்கு -எந்தப் பயனையும் தரப் போவதில்லை. கணக்கில் கொள்ளப்படுவதும் இல்லை. “கட்-ஆஃப்“ எனும் உயர்கல்விக்கான அடிப்படை-மதிப்பெண் தகுதி தமிழுக்கில்லை. இயற்பியல், வேதியியல், உயிரியல் மதிப்பெண்கள் மட்டுமே மருத்துவக் கல்விக்கும், இயற்பியல், வேதியியல், கணித மதிப்பெண்கள் மட்டுமே பொறியியற் கல்விக்கும் கணக்கில் கொள்ளப்படும் நடைமுறையை நமது அரசுகள் கொண்டுள்ளன. பிறகு தமிழ் எதற்கு? சும்மா தேர்ச்சிபெற்றால் போதுமல்லவா? “தமிழைப் படிச்சு டைமை வேஸ்ட் பண்ணாதே!“ எனும் குரல்கள் “தமிழே வேஸ்ட்“எனும் மனநிலைக்கு மாணவரைத் தள்ளாதா? 

3. தமிழ்ப்பாட நூல்களின் தரம்,  நம் சமகாலத்திய வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யக் கூடியதாக இருக்கிறதா? எனும் கேள்வி மிகப்பெரிய ஆய்வை உள்ளடக்கியது. “அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழந்திருக்கும் கவியுளம் காண்கிலார்“-என பாரதி சொன்னது போல, இலக்கியச் சுவையை மாணவர் உணர்ந்து  படிக்கும் விதமாகவோ, இலக்கணத்தைச் சுமையாகக் கருதாமல் அது நம் வாழ்நாள் முழுவதும் தேவை என மாணவர் விரும்பிக்கற்கும்படியோ, வாழ்க்கை விழுமியங்களை உணரச்செய்து, மனித வாழ்வைப் பொருளுடையதாக்க வேண்டும் எனும் தேடலைத் தூண்டுவதாகவோ நமது தமிழ்ப் பாடநூல்கள் –பாடத்திட்டங்கள்- தற்போது இல்லை என்பதும் முக்கியம்.

4. தமிழகப் பண்பாட்டுச் சூழல்.  நல்ல தமிழ்ச் சொல் எதுவும் மாணவர்களின் கண்கள் காதுகளில் விழாதவாறு நமது தமிழ்நாட்டுச் சூழல் வளர்ந்துள்ளது. திரைப்படம், தொலைக்காட்சி, கணினி, செல்பேசி முதலான ஊடகங்களில் நுனிநாக்கில் அரைகுறை ஆங்கிலம் பேசுவோரை விவரமானவராகவும், நல்ல தமிழில் பேசுவோரை காட்டுவிலங்காண்டிகள் போலவும் பார்க்கும் பார்வை. இதை ஆங்கிலேயர் போனபின்னும் ஆங்கில மோகம் போகவில்ல என்றே சொன்னாலும், ஊடகங்களின் அலட்சியம் அடுத்த தலைமுறையில் தமிழ் என்னாகுமோ  என்னும் அச்சத்தை வளர்க்கிறது. தமிழால் என்ன பயன்? என்று கேட்பதும், “தாயால் என்ன பயன்? என்று கேட்பதும் ஒன்றல்லவா? இது நம் தமிழர்க்கு எப்போது புரியப்போகிறது? இந்த அலட்சியம் பள்ளி மாணவர்களிடம் வளர்வது எவ்வளவு ஆபத்து?  

5.    உலகமயச் சூழல்  கூரையேறிக் கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுந்தம் போனானாம் என்பார்கள். என்னவோ தமிழ்நாட்டில் படிக்கின்ற அவ்வளவு பிள்ளைகளும் அமெரிக்காவுக்கோ ஐரோப்பிய நாடுகளுக்கோ போய்விடப்போவது போல “எம்என்சி.கம்பெனிகள்“தான் வாழ்க்கையின் உச்சபட்ச வேலைவாய்ப்பு என்பதான எண்ணம் பெரும்பாலான தமிழ்நாட்டுப் பெற்றோர் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது. அதிலும் 9 (அ) 11ஆம் வகுப்பில் நாமக்கல், ஈரோட்டில் தம் பிள்ளைகளைச் சேர்க்க, லட்சங்களோடு கிளம்பும் போதே, பெற்றோரின் கண்களில் டாலர் கனவுகள்! இது நம் நாட்டின் நாளைய இறையாண்மைக்கே சிக்கலாகும் என்பது பற்றிக் கவலைப்படாத இன்றைய தமிழ்நாட்டின் அரசியல்-சமூகச் சூழல்தான் இதன் அடிப்படை.

6. கடைசியாக ஆனால் முக்கியத்துவம் மிகுந்த காரணங்கள் இரண்டு.  முதலாவது 26-05-2014தேதியிட்ட மதுரைப் பதிப்புத் தினமலரில் வந்த செய்தி. மதுரை ஒத்தக்கடை அரசுப்பள்ளியில் பத்தாம்வகுப்பில் 400 மாணவர்க்கு, தமிழாசிரியர் ஒருவர்தான் இருக்கிறார் என்பதோடு மதுரையில் பெரும்பாலான பள்ளிகளில் இதுதான் நிலையெனில் தமிழ்ப்பாடத்திற்கு அரசுதரும் முக்கியத்துவம் கேள்விக்கு உள்ளாவதையும் அது சுட்டிக்காட்டுகிறது. இரண்டாவது, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட மற்ற பாடக் கேள்வித் தாள்களைவிடவும் தமிழ்ப்பாடக் கேள்வித்தாளின் தெளிவின்மை இது, என்போலும் தமிழாசிரியர் பலரும் தொடர்ந்து சொல்லிவரும் குறைபாடு. கண்டு கொள்வோர்தான் இல்லை.


இவையெல்லாவற்றையும் கடந்து, தமிழாசிரியர்களின் புரிதல், அர்ப்பணிப்பு, ஊதியத்திற்கேற்ற உழைப்பு இவற்றிலும் குறையிருக்கலாம். அதுபற்றியும் பேசவேண்டும். ஆனால், அவர்களை மட்டும் குற்றம் சொல்வது, நல்ல விளைவுகளைத் தராது என்பதால்தான் இவ்வளவும் பேசவேண்டியுள்ளது.
           (படங்களுக்கு நன்றி - “கல்விச்சோலை“ மற்றும் கூகுள் )

பின் குறிப்பு – இதுதொடர்பான வேறு சில கட்டுரைகள் படிக்க -
(1)தமிழாசிரியர் கழகப் புதுகை மாவட்டச்செயலர் சி.குருநாதசுந்தரம் 
http://gurunathans.blogspot.in/2014/05/blog-post_28.html


(2)
தமிழாசிரியர்வலைப்பதிவர் மகா.சுந்தர் -http://mahaasundar.blogspot.in/2014/05/blog-post_29.html#more

இவைபோலும் சிந்தனைப் பெருக்கம் 
நல்ல தீர்வைத் தரட்டும்

(இக்கட்டுரை மீள்பதிவே எனினும், இந்த ஆண்டும் இதேபோல் மாணவர் நிலை தொடர்வதால் இதற்கான தேவை உள்ளது) ------------------------------------------------ 

12 கருத்துகள்:

 1. ஆண்டுகள் மாறினாலும் கட்டுரையின் தேவை மாறாமல் இருப்பது வருந்ததக்கது. நமது தாய்மொழி தொடர்ந்து எல்லா இடத்திலும் புறக்கணிக்கப்படுகிறது. பொறியியலில் சில பாடப்பிரிவுகள் கூட தமிழில் இருந்தாலும் அதை எடுக்க விரும்பாத நிலையே மாணவரிடத்து நிலவுகிறது. தமிழர்களை விட எண்ணிக்கையில் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகளெல்லாம் அவரவர் தாய்மொழியிலேயே மருத்துவம், உயர்கல்வி என அனைத்தையும் படிக்கையில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கிய தமிழ்நாட்டில் தமிழின் நிலையென்ன? அரசு திட்டமிட்டு தமிழை வளர்க்க ஆவண செய்ய வேண்டும், ஆனால் இங்கோ அரசும் ஆங்கில வழி கல்வியை அனைத்து பள்ளிகளிலும் கொண்டுவருகிறது.

  பதிலளிநீக்கு
 2. பொறியியல் மருத்துவம் இரண்டிற்கும் தமிழ்நாட்டில் தமிழ்ப் பாடம் சேர்க்கப் படவேண்டும். குறிப்பாக மருத்துவர்கள் சேவை செய்ய்ப்போது ஆங்கிலம் அதிகம் அறியாத மக்களுக்காகவும்தான்.
  மருத்துவ மனை சோதனை முடிவுகள், மருந்து சீட்டுகள்,நோயாளிகள் மருத்துவ மனையில் இருந்து விடுவிக்கப் படும்போது வழங்கும் மருத்துவம் செய்த குறிப்பிகள் போன்றவற்றை தமிழிலும் வழங்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முரளி:
   நல்ல யோசனை! இதில் சோகம் இப்ப [சென்னையில்] முக்கால் வாசி டாக்டர்கள் தமிழே பேசுவதில்லை...நான் ஹாஸ்பிடல்களில் உள்ளவர்களை சொல்கிறேன்! இதுல அவர்கள் எங்கே இருந்து தமிழில் எழுதப் போகிறார்கள்?

   இந்தியா ஒரு நாடே அல்ல; இது ஆப்ரிக்கா மாதிரி ஒரு கண்டம் (continent); அங்கு பல நாடுகள், பல மொழிகள். இந்தியா ஒரு sub-continent. அதைப்போய் ஒரு நாடு என்றால் எப்படி? உங்களுக்கும் அஸ்ஸாம்காரனுக்கும் என்ன சம்பந்தம்? மொழி? கலாசாரம்; அப்புறம் அவன் தமிழ்நாட்டுக்கு அதிகாரியா வந்தால்?

   அப்படி இருக்க...வட நாட்டில் இருந்து வந்தவன் ஏன் தமிழ் கற்றுக் கொள்ளப் போகிறான்: கோர்ட்டு அவனுக்கு தமிழ் கத்துக் கொள்ளாமல் இருக்க உதவி செய்யும். நம்ம கோர்ட்டு எப்பவும் தமிழுக்கு விரோதி! என்ன நீதி நமக்கு இங்கு கிடைக்கும்?

   தமிழ்நாட்டில் படிப்பவர்களை விடுங்கள்..கால் வாசி பெரிய specialists வடக்கத்திகாரனுங்க? அவர்கள் எங்கே தமிழ் பேசுகிறார்கள். ஆங்கிலமே ஒரு சிலரைத் தவிர குச் குச் தான்--தொழிலில் கெட்டிக் காரர்களாத்தான் இருக்கிறார்கள்! அது போதாது! மொழி அவசியம்!

   MBBS முடித்தவுடன் இருமுறை எனக்கு தமிழ்நாட்டில் TNPSC-selection, என் தம்பிக்கு ஒரு முறை TNPSC-selection வேலை கிடைக்கவில்லை; முதல் தோல்வியில் என் தம்பி அடுத்த விமானம் பிடித்து மேல் நாட்டுக்கு ஓடி விட்டான்.

   எனக்கு இங்கு இருக்கவேண்டிய சில நிர்பந்தங்கள். ஆனால், எனக்கு படித்து முடித்தவுடன் மத்திய சர்க்காரில் உடனே வேலை கிடைத்து; ஹிந்தி சுமாராவும் தெரியும். அது பத்தாது. ஒவ்வொரு மூணு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு மொழியை கற்றுக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அந்த மாகான மொழி தெரியாமல் டாக்டர்கள் தொழில் செய்வது மாபெரும் குற்றம் என்று கருதியதால்..வேலைக்கு சேரவில்லை!

   அதிகாரிகள், போலீஸ், நீதிபதிகள் டாக்டர்கள் மொழி தெரியாமல் தமிழ் நாட்டில் பிழைக்கிறார்களே என்றால்...அவர்கள் செய்வது தமிழர்களுக்கு அநீதி! அது சரி! இங்கு நம்மை ஆள்பவர்களே வேறு மொழிக்கார்கள் தானே! அப்புறம் என்ன?

   அவ்வளவு ஏன் சென்னை டான் பாஸ்கோ அல்லது சென்னை கிருத்தவ கல்லூரி பள்ளியில் ஆங்கில மீடியம் படித்து ஷேக்ஸ்யருக்கு தம்பியாக இருந்தாலும்...எல்லா மருத்தவர்களும் இங்கு வந்தால் ஆங்கில பரீட்சை எழுத வேண்டும்..Except Native speakers of England.

   பாமரர்கள் மொழி தெரியாமல் வைத்தியம் செய்வது அயோக்கியத் தனம். இந்தியா என்று ஏழைகளுக்கு அல்ல!

   முரளி கோபித்துக் கொள்வார்...education secretary-ஐ தமிழ் தெரியாதவனுக்கு கொடுத்தால் அவன் தமிழ்நாட்டில் என்னத்தை கிழித்து...இந்த அடிமை IAS-ஐ ஒழித்தாலே நாடு உருப்படும்

   நீக்கு
  2. முரளி:
   முக்கியமா ஒன்று சொல்ல மறந்து விட்டேன். மருத்துவர்களுக்கு TNPSC-ல் எழுத்து தேர்வு கிடையாது; only நேர்முகத் தேர்வு மட்டுமே!

   நீக்கு
 3. அருமையான மற்றும் உணர வேண்டிய பதிவு

  பதிலளிநீக்கு
 4. தமிழ்தானே எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அதீத நம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா? (நான் படித்தபோது சில பாடங்களில் அவ்வாறு அலட்சியமாக இருந்ததுண்டு)

  பதிலளிநீக்கு
 5. மீள் என்றே உணர்ந்தேன்
  பின் குறிப்பில் வந்துவிட்டது
  தம +

  பதிலளிநீக்கு
 6. மிக மிக அருமையான கட்டுரை அண்ணா. சொல்லியிருக்கும் கருத்துகள் அத்தனையுமே காரணங்கள் அதிலும் தற்போது 11, 12 ஆம் வகுப்புகளில் தமிழ் மொழி அவசியமில்லை அதாவது இரண்டாவது மொழிப்பாடமாக அவசியமில்லை என்பது போன்றும், தமிழில் மதிப்பெண் குறைந்தால் பரவாயில்லை என்பது எண்ணங்கள் இருக்கிறது இல்லையா அதுதான் முதன்மை வகிக்கின்றது. ஏனென்றால் 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு கலைக்கல்லூரியில் சேர்பவர்களும் பெரும்பாலோர் வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால்தான் தமிழ் இலக்கியம் எடுக்கின்றார்கள். அதனை விரும்பிச் சேர்பவர்கள் என்பது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே.

  வங்கிக்குச் சென்றாலும் கூட, தனியார் வங்கிகள் என்றால் அவர்கள் ஆங்கிலத்தில்தான் முதலில் பேசத் தொடங்குகின்றார்கள். நாம் தமிழில் பேசினால் சிலர் மட்டுமே தமிழில் பதிலுரைப்பார்கள் சிலர். சிலர் ஆங்கிலத்தில்தான் பதிலுரைப்பார்கள். (தமிழராகவே இருந்தாலும் குறிப்பாகப் பெண்கள் அதுவும் நுனிநாக்கு ஆங்கிலம் இல்லை என்றால் நுனிநாக்குத் தமிழ் - பெண்கள் தயவாக மன்னிக்கவும் நான் இப்படிச் சொல்லுவதற்கு)

  அரசு முனைந்தால் செய்யலாம். இடைப்பட்ட காலத்தில் எப்படி கணினித் துறை படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகம் என்று எல்லோரும் அதன் பக்காம் சாய்ந்தனரோ அது போல தமிழ் அறிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதும், தமிழ் படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகம் என்றும் அரசு கொண்டுவந்தால் நிச்சயமாக இந்த நிலைமை மாறும். ஏனென்றால் எல்லா துறைகளுமே வேலை வாய்ப்பு, வருமானம் இதைச் சார்ந்து இருப்பதாலும், மக்களின் கண்ணோட்டமும் அப்படி இருப்பதாலும்தான்..

  கீதா

  பதிலளிநீக்கு
 7. மாணவர்கள் இதை உணர்ந்தால்
  தமிழுக்கு முதல் மதிப்பெண்
  கிடைக்கும் என நான் நினைக்கிறேன்...
  அருமையான பதிவு நண்பரே...

  பதிலளிநீக்கு
 8. தாங்கள் கட்டுரையில் சொல்லி உள்ள தமிழ் பாட நூல்களின் தரம் என்ற தலைப்பில் சொல்லி உள்ளவைகள் மிக முக்கியமானவை. குறிப்பாக பாடநூல் நிறுவனம், பல்கலைக்கழகப் பாடத் திட்டக்குழு கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் என நினைக்கிறேன். பல்கலைக்கழகப் பாடத்தில் இலக்கண நூல்களின் தரத்தை உதாரணமாகச் சொல்லலாம். நான் பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தை முதன்மையாக எடுத்துப் படித்து வருகிறேன். அதில் “நெடுநெல்வாடை” குறித்து ஒரு பாடம் உண்டு. பல்கலைக்கழகப் பாட நூலில் சில பக்கங்களில் அது குறித்து எழுதி இருப்பதை வாசிப்பதே சிரமமாக இருந்தது. எல்லா ஆண்டுக் கேள்வித்தாளிலும் அது சார்ந்த கேள்வி இருப்பதால் சாய்சில் விடவும் முடியவில்லை. இணையத்தில் தேடியதில் ஒரு மின்னூல் கிடைத்தது. அதைத் தரவிறக்கி வாசித்தேன். வாசித்து முடித்ததும் அப்பொழுதே எழுதச் சொன்னாலும் அதில் இருக்கும் செய்யுள் தவிர்த்த உரைநடையை என்னால் எழுத முடியும் என்று தோன்றியது. அதை எழுதியவர் ஒரு மென்பொருள் வல்லுநர். உண்மையில் கல்லூரிப் பேராசிரியர்கள் மூல நூலை அப்படியே பாடநூலில் பதிவிறக்கம் செய்யும் வேலையை மட்டுமே செய்கிறார்கள், அதன் விளைவு பள்ளியில் மட்டுமல்ல கல்லூரியிலும் கூட இலக்கணத்திலும், பண்டை ,சங்க இலக்கியத்திலும் பார்டர் மதிப்பெண் வாங்கித் தப்பினால் போதும் என மாணவர்கள் நினைக்கும் சூழல் இருக்கிறது,. என்னைக் கேட்டால் இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் மாணவர்களைக் குறை சொல்வதைத் தமிழாசிரியர்கள் விடுத்து தமிழைச் சுவையாக வாசிக்கவும், எளிமையாக அணுகவும் பாடத்திட்டத்தை உருவாக்குங்கள், மதிப்பெண்களுக்காக இல்லாவிட்டாலும் அதன் சுவைக்காகவாது மாணவர்கள் தமிழை நோக்கித் திரும்புவார்கள், பேராசிரியர்கள் என அடையாளப்படுத்தும் பட்டங்களை தங்கள் பெயருக்குப் பின் நீள் வாக்கில் எழுதி வைத்திருப்பவர்களால் தமிழ் இலக்கணம், இலக்கியம் குறித்து சந்தையில் வந்து குவிந்து கிடக்கும் நூல்களை வாங்கி வாசித்தால் உண்மையில் கிறுக்குப் பிடித்து விடும் நிலை தான் இருக்கிறது, அதே இலக்கண, இலக்கியத்தை ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக இல்லாத பலர் சுவையாகப் புரியும் படியாக எழுதி வரும் போது ஏன் இவர்களால் செய்ய முடியவில்லை. மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு தேவை என்பதோடு இந்த வாசகம் முற்றுப் பெறவில்லை. ஆசிரியர்கள் கற்பித்தலிலும், அரசாங்கமும், பல்கலைக்கழகமும் பாடத்திட்டங்களை உருவாக்குவதிலும் முன்னேற்றம் கொள்ள வேண்டும். இந்த முன்னேற்ற நிலை இல்லாத வரை அரசு எத்தனை சட்டம் போட்டாலும் மாணவர்கள் தமிழுக்கு மாற்று எது எனத் தேடி ஓழுவதிலேயே கவனமாக இருப்பார்கள்.
  உங்களின் சில கட்டுரைகளுக்கு பின்னூட்டம் இடவே பயமாக இருக்கிறது. அது இன்னொரு கட்டுரை வடிவம் கொண்டு விடுமோ என்ற அச்சமே காரணம். இருந்தாலும் சொல்ல வேண்டியது அவசியமில்லையா?

  பதிலளிநீக்கு
 9. இக்காலத்துக்கேற்ற மிகவும் அவசியமான கட்டுரை. மு.கோபி சரபோஜி சொல்லியிருப்பது போல் ஆசிரியர்கள் இலக்கிய, இலக்கணத்தைச் சுவையாக பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதும் மிகவும் முக்கியம். தமிழ் மதிப்பெண் பொறியியல், மருத்துவம் சேர்வதற்குத் தேவையில்லை என்பது தான், மாணவர்கள் தமிழை அலட்சியப்படுத்துவதற்கு முக்கிய காரணம். மாணவர்கள் பலர் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருக்கும் போது, அவர்கள் தமிழில் வாங்கியிருக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் பொறியியல், மருத்துவத்துக்கான ராங்க் லிஸ்ட் என்று அரசு அறிவித்தால் போதும். மாணவர்கள் தமிழிலும் கவனம் செலுத்தத் துவங்குவார்கள். பெற்றோர்களும் தமிழைப் படி என்று வலியுறுத்துவார்கள். இப்போது தமிழில் பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்ற நிலை இருக்கிறது. தமிழ் மீது அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், இதை அவசியம் செய்தாக வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. நல்ல கட்டுரை அண்ணா...இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு! அனைவரும் சேக்ஸ்பியர் ஆகவேண்டியது போலவும், அமெரிக்கா செல்வது வாழ்நாள் பலன் போலவும் ...
  தமிழ் படிக்கச்சொன்னால் நக்கலாகப் பார்க்கும் 'பெரியவர்'கள் இருக்கிறார்கள் அண்ணா...
  உங்களுக்கு நிறையத் தெரியும்..களத்தில் பணியாற்றுகிறீர்கள்.. உங்கள் குரல் கேட்கப்படவில்லை என்றால்..நான் என்ன சொல்றது.. :-(

  பதிலளிநீக்கு