பசங்க-2, பாடம் நடத்தும் படம்!

ஃபைட் இல்ல, டுயட் இல்ல... ஹீரோவுக்கு என்ட்ரி சாங் இல்ல.. பஞ்ச் டயலாக் இல்ல ஆனாலும் சில வசனங்கள் சூப்பர் நாயகர்களின் “பஞ்ச் டயலாக்கு”களை விடவும் பார்ப்போரின் கைத்தட்டலை அள்ளுகின்றன!

“பசங்க பேசுறது 
கெட்ட வார்த்தை இல்லிங்க, 
கேட்ட வார்த்தை

“பள்ளிக்கூடத்துல பாடமா நடத்துறாங்க? 
பரிட்சை மட்டும்தானே நடத்துறாங்க

“மதிப்பெண்ணைத் தாண்டிய 
குழந்தைகளுக்கான மதிப்பு ஒன்னு இருக்கு..
அதைப் பத்திக் கவலைப் படணுமே தவிர 
மதிப்பெண்ணைப் பத்தியே 
கவலைப்பட்டுப் பசங்களப் 
பாடாப் படுத்தக் கூடாதுஎன்பவை அவற்றில் சில!


“அரசுப்பள்ளியின் ஆசிரியர்கள் 
எல்லாரும் தன்பிள்ளைகளை 
அரசுப் பள்ளியில்தான் 
படிக்க வைக்கணும் னு 
சட்டம் போடணும்“ என்று போகிற போக்கில் சொல்லிப் போகும் இயக்குநர் சமுத்திரக்கனியின் வசனத்தை, அப்படியே அதிகாரிகள், பொதுவாழ்வில் இருப்போர் அனைவர்க்கும் கூட விரிவு படுத்தியிருக்கலாம்..?

ஏற்கெனவே “பசங்க“ படத்தின் வசனத்துக்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் பாண்டிராஜ், அதற்குத் தகுதியானவர்தான் என்பதை  உறுதிப் படுத்தியிருக்கிறார்.

தாயின் கருவறை பற்றி அழகான ஒரு அறிமுக அட்டை போட்டவர்கள், தாயின் கருவறையில் இருக்கும்போதே அது எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள.த் துவங்கிவிடுகிறது என்று லெக்சர் அடிக்கும் சூர்யா, எங்கே அபிமன்யூவைப் பற்றிச் சொல்லிவிடுவாரோ என்று அஞ்சியபடி இருந்தேன், நல்லவேளையாக அப்படி ஏதும் வசனம் பேசவில்லை!

அனைத்து வசனங்களும் அவ்வளவு எதார்த்தம், கூர்மை!

பெற்றோர்கள், தன் கனவை –தன்னால் முடியாததை- தன் குழந்தைகள் மேல் திணிக்கிறார்கள் என்பதைப் படம் நெடுகச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு விருந்துக்குப் போகும்போது, தனக்கும் தன் மனைவி, குழந்தைகளுக்கு இன்னின்ன வேண்டும் என்று பட்டியலிடுவதிலும் அதே..

ஒருகட்டத்தில் எதிர்பார்த்த்தைப் போலவே கொஞ்சம் “டாக்குமெண்ட்“ நெடிவீசும் வசனங்களைச் சூர்யா பேச, வேறு வழியில்லை என்றே பார்த்த எனக்கும் தோன்றியது.

சூர்யா, தனது கதாநாயக இமேஜ் பற்றிக் கவலையே படாமல் அமலா பாலும் அவருமாக பத்துவயதுக் குழந்தைக்குப் பெற்றோராக நடித்திருப்பது மற்ற கதாநாயக வசூல் மன்னர்களுக்கு அவர்நடத்திய பாடம்! அதிலும் அவர் அட்ட கோண சேட்டைகள் செய்து காட்டுவது அட்டகாசம்!

இப்படி, பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நடத்துவோர், மாணவர்கள் என, பலதரப்பினருக்குமான பாடமாகவே பசங்க-2 படம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

தரே ஜமீன் பர்என்கிற ஹிந்தி படத்தின் கதைச்சாயல் என்று சொல்கிறார்கள். நல்ல விஷயங்களை இப்படித் தழுவிக்கொள்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது! 

தமிழ்மண்ணில், கல்வியாளர்கள் ச.மாடசாமி,ஆயிஷா நடராசன், ச.சீ.இராசகோபாலன், வசந்தி தேவி முதலானோர் நீண்டகாலமாகக் சொல்லிவரும் குழந்தை களுக்கான அறிவியல் மற்றும் உளவியல் வழியான கல்வியை முன்வைத்திருக்கும் முதல் தமிழ்ப்படமிது!

வைஷ்ணவி, நிஜேஷ் ஆகிய அறிமுகச் சிறுவர் சிறுமியின் பேச்சும் நடிப்பும் அள்ளுகிறது! கிளைமாக்ஸில் சொன்ன “குட்டிக்குருவி“ சொன்ன குட்டிச்சிறுமி அழகு!

முனீஸ்காந்த், அறிமுக வித்யா-பிரதீப்கார்த்திக் குமார் பிந்து மாதவி இணையிரண்டும் அளவாக அழகாக நடித்திருக்கிறார்கள், டிபிகல் உயர்தமிழ்க் குடும்பம்!

இசையமைப்பாளர் ஆரோல் கொரெல்லியின் பின்னணி இசைய ரசிகர்களைக் கதையோடு கட்டிப்போடுகிறது. பாடல்கள் ரசிக்கும்விதமாக இருக்க.. எடுக்கப்பட்ட காட்சிகளோ குழந்தைகளுக்கு மட்டுமின்றி  ஃஹய்டெக் கிராஃபிக்சில், எல்லார்க்கும் பிடிக்கும்வகையில் இருக்கிறது. 

அவசியம் குழந்தைகளோடு, குடும்பத்தோடு, பெற்றோர்களும் ஆசிரியர்களும் அனைவரும் 
திரையரங்கில் போய்ப் பார்க்க வேண்டிய படம். 

குழந்தைகளின் அறிவை அந்த ஐந்து பாடங்களில் மட்டும் தேடாதீர்கள்.. அதைத் தாண்டி உலகியலில் அவர்களின் ஆர்வத்தில், தேவையில் தேடுங்கள் என்று நான் ரொம்ப நாளாகச் சொல்லி வருகிறேன்...! (எனது “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தின் சாரமும் இதுதான்!)

“புத்தகங்களே,
சமர்த்தாயிருங்கள்!
குழந்தைகளைக் 
கிழித்து விடாதீர்கள்!” என்று அப்துல் ரகுமான் பாடியது எத்தனை உண்மை என்று அறைந்து சொல்கிறது படம்!

கடந்த முறை பசங்க படம் வந்தபோது, அந்த ஆண்டின் தமுஎச விருதை வென்றது. சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் படத்தைப் பாராட்டி நான் பேசியபின் விருதைப் பெற்றுக் கொண்ட இயக்குநர் பாண்டிராஜ், எனது பேச்சில் சிலவற்றை நான் அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று மேடையிலிருந்தே கேட்டார். “நல்லா நல்லாஎன்று நானும் அப்போதே சொன்னேன்.., இப்போது என் “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!நூலின் சாரத்தை அவரது பாணியில் அழகாகச் சொல்லியிருக்கிறார்! இதற்குப் பயன்படாமல் வேறெதற்கு நாம் எழுதுகிறோம் நண்பாகளே?

தயாரித்து, நடித்திருக்கும் சூர்யா,

வசனமெழுதி இயக்கிய பாண்டிராஜ்

இருவருக்கும் மனநிறைவோடு

நன்றிசொல்லி, பாராட்டிக் 

கைகொடுக்கத் தோன்றுகிறது!


குழந்தைகளை மையப்படுத்தும் நல்ல கல்விக்கான உங்கள் கலையால் தமிழ்ச் சமூகம் நல்ல கல்வி பற்றிய விழிப்புணர்வு பெறுமானால், கோடிக் கணக்கான குழந்தைகளின் நன்றிக்கு உரியவராவீர்! கோடிநன்றி!

2 கருத்துகள்:

  1. வணக்கம் தோழர்
    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில்
    இருமாத கல்வி இதழாக விழுது வெளிவந்துகொண்டிருக்கிறது..
    ஜன-பிப்.2016 இதழுக்கு
    பசங்க-2 திரைப்படம் குறித்து இருபக்க அளவில் வருமாறு
    இதே கட்டுரையினைக் கொஞ்சம் திருப்பி வைக்க இயலுமா?
    தேனி சுந்தர், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்: tnsf.vizhuthu@gmail.com

    பதிலளிநீக்கு
  2. நான் மதிக்கும் நல்ல கல்விக்கான இதழ் விழுது தோழர். டிசம்பர் மாத இதழில்கூட எங்கள் உஷா எழுதிய மாங்குடிப் பள்ளியைப் பற்றிய இரண்டுபக்கக் கட்டுரை பார்த்து மகிழ்ந்தேன். அதில் என் கட்டுரையைப் போட என் அனுமதி தேவையில்லை தோழரே! தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதோ அனுப்பி வைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு