கவிதைப் பயிலரங்கம்

 ஒருசுங்கச் சாவடிக்குக் கடத்தல் பற்றித் தகவல் வந்துச்சாம். வந்தவண்டிகளை யெல்லாம் நிறுத்தி நிறுத்திச் சோதனை செஞ்சும் ஒன்னும் கிடைக்கலியாம். கடைசியில பாத்தா.. கடத்தப்பட்டதே அந்த வண்டிகள்தானாம்! அதுமாதிரி... கணினிப் பயிற்சி பற்றியே எல்லாம் பேசுறீங்களே? கவிதைப் பயிற்சி தரவேணாமா? எனும் கேள்விக்கு இந்தப்பதிவு சமர்ப்பணம் - நா.மு.        

சிவகங்கை மன்னர்துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியின் தமிழாய்வுத் துறையின் சார்பாக பாரதி விழா கொண்டாடப் பட்டது. காலை 10.00 மணி யளவில் மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன்  விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் மெ. பன்னீர் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார்.

   திருமதி தமிழரசி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு  நிகழ்ச்சி புகழ் திரு தேவகோட்டை ராமநாதன் அவர்கள் பாரதியின் படைப்புகள் குறித்துப் பேசினார்.  திருமதி மலர்க்கொடி அவர்கள் நன்றியுரையாற்ற காலை நிகழ்வு நிறைவுபெற்றது.

     மதியம் தமிழாய்வுத் துறையின் இரண்டாம் சுழற்சி மாணவர்கள் பங்குபெற இரண்டாம் நிகழ்ச்சி தொடங்கியது. முனைவர் அ.பாண்டி அவர்கள் வரவேற்புரையாற்ற மீளவும் திரு தேவகோட்டை இராமநாதன் அவர்கள் பாரதியும் மற்ற கவிஞர்கள் குறித்தும் அவர்களைப் பாரதியோடு ஒப்பிட்டும் பேசினார்.

கவிதைப் பயிலரங்கம்
  கவிதைப் பயிலரங்கம் திரு புதுக்கோட்டை நா.முத்துநிலவன் அவர்களால் தமிழாய்வுத் துறையில் நடத்தப் பெற்றது. இதற்குப் பேராசிரியர் சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
  காலை 11 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில்  கவிஞர் முத்துநிலவன் கவிதைகள் குறித்தும், எவை கவிதையாகும், எவை ஆகாது என்பது குறித்தும் பேசினார்.
  
இதன்பின் 

மாணவர்களுக்குத் தரப்பட்ட 
சில தலைப்புகள் - 

(1)மழை, 
(2)பெண்பாடும்-பண்பாடும், 
(3)ஏழாம் அறிவு 

  இதனுள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டுச் சிறப்புடன் கவிதை வரைந்தனர். அக்கவிதைகளில் சில பின்வருமாறு....
மேகத்தை யார் திட்டியது
இப்படிக்
கண்ணீர வடிக்கின்றது
-    ஆ. அய்யாச்சாமி

தாயிடம் கிடைத்தது பாசமழை
தந்தையிடம் கிடைத்தது அன்புமழை
நண்பனிடம் கிடைத்தது நட்புமழை
வானமே! உன்னிடம் இருந்து மட்டும்
கிடைக்கவில்லை தண்ணீர் மழை
விழுவதோ விவசாயிகள் கண்ணீர் மழை
-    ஜி. வாசுமுத்து
பெண்பாடும் பண்பாடும்
பத்துமாதம் சுமந்து
பெற்றெடுத்த என்
பத்தரை மாற்றுத் தங்கத்தை
பத்திரமாகப் பார்த்திருப்பாய் என்று
உனக்கு
என் பெண்ணை மணம் முடித்தேன்

ஆனால்……
பத்தாம் மாதம்
தாய்வீடு வந்தாள்
பிரசவத்திற்காக

தங்கத்தைச் சிகரெட்டால்
சுட்டு சுட்டு……
பத்துக் கூட போட இடமில்லை.
-    ம. கனிமொழி
வானத்துக் கணவன்
வரதட்சணைக் கொடுமையால்
பூமித்தாயிடம் ஓடிவரும்
மேகத்துப் பெண்களின்
கண்ணீர்த் துளிகள்.
-    ர. ஜான்சி ராணி
-    பிஎ. தமிழ் மூன்றாம் ஆண்டு.
மேகங்கள் மேடை போட
மின்னல் என்னும் விளக்கெரிய
இடி இன்னும் மத்தளம் கொட்ட
இன்பமாக பூமியை நோக்கி
ஆடி வருவதே மழை
ஆனந்தப் புன்னகையுடன்
மக்களை மகிழ்விக்கின்றது
-    என். முத்து மணிகண்டன்
-    பிஏ. முதலாம் ஆண்டு
மழை
 நீ
 வந்தபின்புதான்
உழவனுக்குக் கூடத் தெரிகிறது
 மண்ணின் வாசனை
-    மெ. பிரியங்கா


இக்கவிதைகளைப் படைத்த மாணவர்களுக்குப் பணப்பரிசு தந்து வாழ்த்தினர், 
பேராசிரியர்து.ஸ்டாலின், பேராசிரியர்தமிழரசி, பேரா.விஸ்வநாதன்,
பேரா மலர்க்கொடி ஆகியோர்.
இந்தப் பேராசிரியர் பெருமக்கள் வாழ்த்துக்குரியவர்கள். 

இதன்பிறகு மாணவர்களின் கவிதைகள் குறித்தும் கவிதைகளின் நற்பண்புகள் குறித்தும் மீளவும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் உரையாற்ற காலை அமர்வு சிறப்புடன் நிறைவுற்றது.

 மதியம் இரண்டாம் சுழற்சி மாணவர் களுக்கான கவிதைப் பயிலரங்கம் தொடர்ந்தது. இதுவும் மூன்று நிகழ்வுகளாக நடந்தது.
     இந்நிகழ்விலும் மாணவ மாணவிகள் கவிதைகள் பல படைத்தனர்
ஏய் மழையே
எங்கே சென்றாய்
மாதம் மும்மாரி பொழிந்த நீ
இப்போது மூன்றாண்டுக்கு ஒரு மாரி
பொழிய மறுக்கிறாய்
நீ ஒரு துளி தந்தாலும்
அதை வைரமாய்  ஏற்கும் எம்பூமி
நீ வந்தால்
பூக்கள் வரவேற்கும்
வயல் பசுமை காணும்
குளிர் காற்றுவீசும்
உன்னை எதிர்பார்த்து
எதிர்பார்த்து
கண்ணீர் முத்துகள் வீழ்கின்றன
மண்ணில்
 எப்போது நீ வருவாய் மழையே!
-    ச. ஜெயக்கொடி
மிகச்சிறப்பாக நடந்த இவ்விழாவில் முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
                        
 -- நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததோடு 
தொகுத்தும் வழங்கியவர் 
முனைவர் மு.பழனியப்பன் அவர்கள்,
தமிழ்த்துறைத் தலைவர்,
மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக் கல்லூரி,
சிவகங்கை. 
----------------------------------- 
நன்றி - 
எனக்கு வலைப்பக்கம் தொடங்கித் தந்த “என்இனிய வலைஆசிரியரும்“ சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியின் அன்றைய தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் எழுதி,இந்தச் செய்திவந்த வலைப்பக்கம் - 
http://rdmcollegetamilsivaganga.blogspot.in/2013/12/blog-post.html

பி.கு (1) இது பழைய செய்திதான். தற்போது கையில் சரக்கு ஏதுமில்லை. பதிவிட்டு நாளாச்சே என்று பழைய செய்தி ஒன்றை வெளியிடுகிறேன். நண்பர்கள் மன்னிக்க.
பி.கு. (2) வேறொரு புதிய பெரிய வேலையில் இறங்கியிருக்கிறேன்.அது என்னவென்று விரைவில் சொல்வேன் உங்களிடம் சொல்லாமலா..? நன்றி.)
---------------------------------------------------------------------------------------------------------

12 கருத்துகள்:

  1. வணக்கம் கவிஞரே மழையைக் குறித்த கவிதைகள் அனைத்தும் நன்று நானும் மழையைக்குறித்து கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறேன் இரண்டொரு நாட்களில் வெளியிடுகிறேன்

    தங்களது செய்தியை காண நானும் ஆவலுடன் - கில்லர்ஜி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. பெரிய வேலை...? உங்களை பொருத்தவரை ஜூஜூபி....

    எனது பங்கு எதுவும் இருக்குமா...? காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. புதிய வேலையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கள் ஒத்துழைப்பு என்றும் உண்டு!

    பதிலளிநீக்கு
  4. ஐயா .
    எனக்குக் கவிதைப் பட்டறைகளில் கலந்துகொள்ளவேண்டும் என ஆசையாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டியில் பரிசு பெற்று, கவிஞர் என்று பேர்பெற்ற பிறகும் இந்த ஆசை இருக்கிறதென்றால் நீங்கள் இன்னும் இன்னும் வளர்ந்து பெரும்கவிஞராவீர்கள் என்று பொருள். தேடல் தாகம் குறையாதவன்தான் தொடர் படைப்பாளியாக முடியும். வாழ்த்துகள் சுந்தர்.

      நீக்கு
  5. //மேகத்தை யார் திட்டியது
    இப்படிக்
    கண்ணீர வடிக்கின்றது//

    சூழலுக்கு ஏற்ற கவிதை. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. அண்ணா வாசுமுத்து ,கனிமொழி,ஜான்சிராணி கவிதைகள் மிக அருமை
    தாங்கள் சிறிய வேலை என்றாலே பெரிதாகத்தான் இருக்கும் ஆனால்
    பெரிய வேலை என்றதும் அதைக்காணஆவல் அதிகமாகிறது.

    பதிலளிநீக்கு
  7. நல்ல முயற்சி ஐயா இது....
    உங்களின் புதிய பணியும் விரைவாய் சிறப்பாய் முடியட்டும்...

    பதிலளிநீக்கு
  8. அண்ணா, நான் எப்படி பயில்வது? அங்க என்ன சொல்லிக்கொடுத்தீங்களோ அது எனக்கும் தெரிஞ்சாகனும் :-) உரிமையோடு கேட்கிறேன்.

    பெரிய வேலையா? அந்த பத்தாம் ஆசையா அண்ணா? :-)

    பதிலளிநீக்கு
  9. வேறொரு புதிய வேலையா
    என்ன ஐயா?
    அறியக் காத்திருக்கிறோம்
    கவிதை வரலாற்று நூல்தானே?
    தம +1

    பதிலளிநீக்கு
  10. மாணவர்கள் எழுதிய கவிதைகள் அனைத்தும் நன்று. பயிலரங்குகள் தொடர்ட்டும்.

    பதிலளிநீக்கு
  11. கவிதைகள் அருமை அய்யா... பெரிய வேலை... காத்திருக்கிறோம் அய்யா...

    பதிலளிநீக்கு