இன்றைய “நீயா நானா“வில் பாராட்டுக்குரிய இளம்பெண்கள்!

நீயா நானா - கோபிநாத்   சபாஷ்! சரியான கேள்வி!
மதுரை வலைப்பதிவர் திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்தபோது இரவு மணி பத்து. விஜய் தொலைக்காட்சி யில் நீயா நானா ஓடிக்கொண்டிருந்தது

ஏழாண்டுகளுக்கு முன் இதே நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு 25இல் 3பேர் தான் தங்கள் பெண்ணின் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது அதே கேள்விக்கு அதே 25இல் 3பேர்தான் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்... நாங்கள் இதை ஒரு சமூகநிலையின் மாற்றமாகக் குறிப்பில் எடுத்துக் கொள்கிறோம்“ - என்ற கோபிநாத்தின் குரலில் மகிழ்ச்சி பொங்கியது! நமக்கும்தான். இருக்காதா பின்னே? 

அது என்ன மகிழ்ச்சியான மாற்றம்- கோபியின் கேள்வி-

யார்யாரெல்லாம் தனக்கு வரும் கணவன், படித்த நல்ல சம்பளம் வாங்குகிற தலித்தாக இருந்தால் அதுபற்றிக் கவலை இல்லாமல் திருமணம் செய்துகொள்வீர்கள்?”

பெரும்பாலான இளம்பெண்கள் கைஉயர்த்தினார்கள்...!!!
மகிழ்ச்சியோடு அவர்களைப் பாராட்டி, அப்படியே திரும்பிய திரு.கோபிநாத், அந்த இளம்பெண்களின் எதிரில் அமர்ந்திருந்த அவர்களின் தந்தையர் முன் இந்தக் கேள்வியை வீசினார் -
உங்கள் பெண் எடுக்கும் இம்மாதிரியான முடிவை யார்யார் ஒப்புக்கொள்வீர்கள் ” 

வந்திருந்த 25பேரில், இந்தக் கேள்விக்கு  என் பெண்ணின் முடிவுக்கே விட்டுவிடுவேன்என்று சொன்னவர்களின் எண்ணிக்கையைப் பார்த்துவிட்டுத்தான் நாம் முதலில் சொன்ன கருத்தை மகிழ்வோடு சொன்னார் திரு கோபிநாத்.

எப்படி இந்த மாற்றம்? என்பதை ஆய்வு செய்யவேண்டும்!
ஆய்வு செய்வதற்கு முன் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிப் பதிவு செய்ய வேண்டும் என்றே பதிவிடுகிறேன்...

மதுரையில் வலைப்பதிவர் திருவிழா அற்புதமாக நடந்தது!
(அதுபற்றிய பதிவுகள் இன்னும் ஒருவாரம் தொடரும்ல..?) அதைவிட மகிழ்ச்சி... அடுத்த ஆண்டு வலைப்பதிவர் திருவிழாவைப் புதுக்கோட்டையில் நடத்துவது என்று ஒப்புக்கொண்டு வந்திருக்கிறோம்.............உங்களை நம்பித்தான்!!!

வேலை நிறையக் கிடக்கு..
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தைக் கூட்டி
2015ஆம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழாவை
அனைவரும் பாராட்டும்படி சிறப்பாக நடத்த வேண்டும்.... 
என்றாலும்.... 
கோபிநாத்தின் நியாயமான இந்த மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்து இன்றைய இளம்பெண்களின் இனிய மாற்றத்தை முதலில் பாராட்டிவிடுவோம் என்றுதான் இந்தப் பதிவு!
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லைகாண் என்று கும்மியடி!” - பாரதி.
---------------------------------------------------------------------------- 
இதோ அந்த விஜய் தொலைக்காட்சியின்
நீயா நானா 26-10-2014 இணைப்பு - 
(வெட்டி ஒட்டுக) நன்றி யு-ட்யூப் -
https://www.youtube.com/watch?v=8Tinea4QOgY
------------------------------------------------------------------ 
கூடுதல் இணைப்பாக, தூத்துக்குடி நண்பர் குருநாதன் அவர்களின் இந்தப் பழைய பதிவையும் பாருங்கள் - இந்தப்பெண் எவ்வளவு தெளிவாகத் தனது “சாதிபற்றிய பார்வை”யை முன்வைக்கிறார் -
(வெட்டி ஒட்டுக) இணைப்பிற்கு - நன்றி யு-ட்யூப்
http://rsgurunathan.blogspot.in/2014/10/blog-post_27.html 
------------------------------------------------------------------------------- 
(நீண்ட நாளைக்குப் பிறகு, பதிவிட்ட அடுத்த நாளில், தமிழ்மணத்தில் முதலிடமும், தமிழ்வெளியில் இரண்டாமிடமும் பிடித்திருக்கிறது இந்தப் பதிவு (27-10-2014 மாலை 7 மணிமுதல், இரவு 11.30 வரை )
“நல்ல செய்திகளை  எப்போதும் வரவேற்போம்” என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய வாசகர்களுக்கும், வாசகர்களிடம் இதனைக் கொண்டு சேர்த்த தமிழ்மணம், தமிழ்வெளி திரட்டிகளின் அன்பான நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் பெருமை திரு கோபிநாத் அவர்களையே சேரும். அவருக்கு ந்ன்றி. பணிதொடர்வோம்)

18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி தோழரே! மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் நீங்கள் கலந்துகொண்டு, கரந்தையாரின் “கரந்தை மாமனிதர்கள்“ நூலை வெளியிட்டு -நேரம் கருதி- ரத்தினச்சுருக்கமாகவும், தேவையான செய்திகளை அழகாகவும் பேசியது சிறப்பாக இருந்தது.

   நீக்கு
 2. மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்வாகவும் இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் குரு. நல்ல மாற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன... நம்பிக்கையோடு நடைபோடுவோம். ஊடகங்களில் திரு கோபிநாத் போலும் நம்பிக்கையூட்டும் இளைஞர்கள் இன்னும் பெருகவேண்டும்.. நன்றி குரு.

   நீக்கு
 3. 1. இன்று பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே காதல் மணங்கள் சகஜமாக நடந்து வருவது.
  2. சொந்தககாரர்கள் இடையே வசிப்பது குறைந்து விலகி இருப்பது அதிகரித்துள்ளது. எனவே ஒதுக்கி வைத்தல் போன்ற பிரச்சினைகள் அதிகம் எழுவது இல்லை.
  3. ஒடுக்கப்பட்ட சாதியினரிடத்தில் படித்த, நல்ல வேலையில் இருக்கும் வாலிபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது (attained the critical mass), முன்னேறிய தலித் குடும்ப உறவுகள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இது மற்ற சாதியினரிடையே தலித்துகள் பற்றிய எண்ணப் போக்கினை மாற்றுகிறது.
  4. பொருளாதார ரீதியல் முன்னேற்றமடைந்த தலித் குடும்பங்கள் நவ-பிராமண பழக்கவழக்கங்களை ஏற்றுக கொள்வது.
  5. சிறு/பெரு நகரங்களில் வசிக்கும் இளைஞர்களின் சாதி பற்றிய அறியாமை. அதாவது தன் அந்தஸ்தில் உள்ள நண்பர்கள் எந்த சாதியாயினும் ஓக்கே எனும் மனப்பாங்கு.
  6. இவையெலாம் கொண்டு வந்த புதிய பொருளாதாரக் கொள்கைகள் யாராயிருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் கல்வி கற்றால் முன்னேறிவிடலாம் என்ற தன்னம்பிக்கை.

  இவைதான் இந்த மாற்றத்திற்கு காரணிகள் என நான் கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியான ஆய்வுக்குரிய கருத்துகள் தான். ஏன் அனானிமஸ் எனும் பெயரில் எழுதுகிறீர்கள்? இதையெல்லாம் அந்தப் பெண்களே வெளிப்படையாகச் சொல்லும்போது நீங்கள் என் மறைந்து நின்று நல்ல் கருத்துகளைச் சொல்ல வேண்டும் நண்பா!?

   நீக்கு
 4. அருமையான மாற்றம் அண்ணா..
  நேற்று இரவு ஒன்று முப்பது மணிக்கு பெங்களூரு வந்துசேர்ந்தோம். அடுத்த பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் - ரொம்ப மகிழ்ச்சி அண்ணா..வர முடியுமா என்று தெரியவில்லை..பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 26-10-2014 மறக்க முடியாத நாளாகிவிட்டது கிரேஸ்! உன்னை, குழந்தைகளை, வினோத்தைப் பார்க்க இனி ரொம்ப நாள் காத்திருக்கவேண்டும் என்பதுதான் வருத்தமாக இருந்தாலும், உன் தமிழில் பார்த்துக்கொண்டே இருப்போம். உனது அன்பான குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தது விழாவையே சிறப்பித்துவிட்டது, மதுரை ரமணி அய்யா இதுபற்றி எழுதியே மகிழ்ச்சி தெரிவித்துவிட்டார் பார்! உன் தமிழ் வாழ்க! வளர்க!

   நீக்கு
 5. Good Analysis, Mr Anonymous. But one more point may be mentioned.

  பட்டணங்களில் வாழும் பெண்கள் எதிர்பார்ப்பது தமக்கேற்ற ஆணைத்தான். அதாவது அவனுடன் துணையாக, அடிமையாகவன்று. மேலும்,, கணவன்-மனைவி குடும்ப உறவை தனியே அனுபவிக்க விழைகிறார்க்ள். இதற்கு, தானே தேர்ந்தெடுக்கும் துணையென்ன்னும்போது சாத்தியக்கூறுகள் நிறைய.

  இதற்கு மாறாக, சாதிக்குள் மணமென்றால் அங்கு பழைய வழமைகளுக்குக் கட்டுபட்டாகவேண்டும். சாதிக்குள் பலபல காம்பரமைஸ்கள் செய்துகொண்டுதான் வரண் தேடவேண்டும். You will have to go for 'better'or 'good', never the 'best'. வலையை குறுக்கி விரிப்பதைப்போல, சாதிக்கட்டுக்களுக்க‌ப்பால் வரும்போது choices unlimited. பெண்ணே பிரதானம் இங்கே. அங்கே பெண் கடைசியில்தான், சாதி சனங்கள் உறவுகள் சாதிச்சடங்குள் முறைகள் முதலில். சாதி வளர தழைக்க பெண் கருவிதான். இந்த உணர்வு இங்கில்லை.

  இப்படிப்பட்ட நிலையில், சாதிக்கப்பால் தேடும்போது, கிடைப்பது பெஸ்ட். அது எவராயிருந்தாலென்ன? தனக்கு வேண்டிய குணங்களையும் சாத்தியங்களையும் கொண்டிருந்தால் போதும்.

  காட்டாக, வசதியாக வாழ ஆசைப்படும் பெண், ஒரு பெரிய உத்தியோகத்தில் இருக்கும் தலித்து மாப்பிள்ளையை விட்டு, தன் சாதிக்குள் பஞ்சாயத்துப்போர்டு கிளார்க்கையா விரும்புவாள்? மேலைநாட்டில் சென்று வாழவிரும்புவள், அங்கு நல்ல வேலையில் இருக்கும் ஒரு தலித்த்ப்பையனை விட்டுவிட்டு, தன் சாதிக்குள் ஒரு ரயில்வே கிளார்க்கையா கட்ட விரும்புவாள்? சாதிக்குள்ளேயே அப்படி பெஸ்ட் மாப்பிள்ளையும் கிடைப்பான் என்கிறீர்களா? அய்யே அப்படிப்பட்ட மாப்பிள்ளைக்கு விலை அதிகம். அதே வேளையில் அப்படிப்பட்ட தலித்து மாப்பிள்ளை மலிவாக கிடைப்பாள். இங்கே பெண் உயர்வு. அங்கே ஆண் உயர்வு.

  இதனால் இன்றைய பெண்கள் தலித்து மாப்பிள்ளாயினும் தயங்கேன் என்கிறாள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆக, திருமணம் “சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது” போய், இப்போது “ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” என்றாலும் அது பெண்களுக்குச் சாதகமாகி வருவதையும் குறிப்பாகப் படித்த பெண்களே இதைச் சாதிக்க முடிகிறது என்பதும் முக்கியம். (அந்த அனானிமசுக்கு இந்த அனானிமஸ் பதிலா? ஏன் இப்புடீ?

   நீக்கு
 6. உங்களை தொந்திரவு செய்யும் ஆண்களை என்ன சொல்லி திட்டுவீர்கள் என கோபி கேட்டதற்கு ஒரு பெண் "shut the fu*k up " என்று சொல்லுவேன் என சொல்லியதற்கு அவர் அப்பா தலையில் கையை வைத்த படியே சிரித்தார். துணிச்சலைத் தருவது கல்வி மட்டுமே...!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அய்யா. ஆனால், ரொம்பப் படித்த பெண்ணும், ஆணும் கோழையாகிக் கிடப்பதே பெரும்பான்மை என்பதையும் மறந்து விடமுடியாது! சிலருக்கு தைரியம் தந்திருக்கிறது என்பதே சரி.

   நீக்கு
 7. ஒரு மனித இனத்தை தலித் என்று பெயறிட்டு, அவர்களை தாழ்த்தி வந்த சமூகம், தற்போதுதான் சற்றே கண் திறந்து பார்க்கிறது!. தலித்தை ஏற்றுக் கொள்வீர்களா என்று பகிரங்கமாக கேட்கும் நிலையில்தான் இந்த சமூகம் இருக்கிறது என்பதை நினைத்தாலே, இன்னும் எவ்வளவு தூரத்தை நாம் கடக்க வேண்டுமே என்ற பிரயாசை ஏற்பட்டது?!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படியில் பெண்கள் ஏறிவருகிறார்கள் என்றால் விரைவில் அச்சமின்றி உச்சம் அடைவா் என்று நம்பலாம் தோழரே! ஆண்களை விடப் பெண்கள் பிடிவாதமாகத் தனது கருத்தில் வெற்றிக்காகப் போராடுவார்கள் என்பதுதான் உலகறிந்ததாயிற்றே

   நீக்கு
 8. ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி . ஆனால் கை தூக்கியவர்களில் எத்தனை பேர் நிஜ வாழ்க்கையில் செயல்படுத்துவார்கள் என்பது கேள்விக்குறியே.
  தாங்கள் என் வலைக்கு வந்ததில் புத்துணர்ச்சி பெற்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்து விழுக்காடு என்றாலும் அதுவும் முன்னேற்றமே! அடிமேல் அடிவைத்தால் அம்மிக்கல்லும் தகரும் (இந்தப் பழமொழியை நகரும் என்று தவறாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்)

   நீக்கு
 9. இனம், மதம், சாதி போன்ற அர்த்தமற்ற பிரிவுகளில் பொதுவாகவே பெண்களுக்கு ஆண்களைவிட ஈடுபாடு குறைவு. பெண்களுக்கு திறந்த மனதும் உண்டு.

  White girl -black guy marriage is common but the other case (white-guy - black girl marriage seldom happens)

  Brahmin girl marrying a non-brahmin guy has also been happening a lot. But a brahmin boy marrying a non-brahmin girl are happening hardly.

  Men generally feel insecured and are STUPID! They get involved (as a father or brother or of that kind) and stop when such things happening in their family. பொதுவாக பெண்கள் எப்போதுமே இந்த விசயத்தில் உயர்வானவர்கள்தான்.

  முழுமையான பெண் சுதந்திரம் என்பது இவ்வகையிலும் சமத்துவம் கொண்டு வர உதவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “இனம், மதம், சாதி போன்ற அர்த்தமற்ற பிரிவுகளில் பொதுவாகவே பெண்களுக்கு ஆண்களைவிட ஈடுபாடு குறைவு” முற்றிலும் உண்மை வருண்! ஆனால், மதச்சின்னங்கள் யாவும் பெண்களின் உடலில்தான் சுமத்தப்படுகின்றன. பூ, குங்குமம், தாலி, மெட்டி கருகமணி, பர்தா, பொட்டில்லா நெற்றி என்று... வீட்டில் சடங்குகளைக் கொண்டு நடத்துவதும் அவர்களே என்று சொல்லப்படடாலும் விரும்பிச் செய்யப்படுகிறதா என்பதும் ஆய்வுக்குரியதே! ஆண் உலகம், வீடும் ஆண்வீடுதானே? எனினும் இதுபோலும் கருத்து வீச்சுக்கும் ஒருகணிசமான விளைவு வருமல்லவா? வரும், வரட்டும், வரவேண்டும்! நன்றி.

   நீக்கு