இடதுசாரித் தத்துவத்துக்கு வலுச்சேர்ப்பவை கவிஞர் முத்துநிலவனின் படைப்புகள்: ஜி.ராமகிருஷ்ணன்

இடதுசாரித் தத்துவத்துக்கு வலு சேர்ப்பவை கவிஞர் முத்துநிலவனின் படைப்புகள் என்றார் இந்தியக் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்.
முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே” - நூல்வெளியீடு
விழா ஒருங்கிணைப்பாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி, நூல்களைப் பெற்றுக்கொண்ட
மருத்துவர் சலீம், பேக்கரிமகராஜ் சீனு.சின்னப்பா,  தலைமையேற்ற நந்தலாலா,
வெளியிட்ட ஜி.இராமகிருஷ்ணன், நூலாசிரியர் நா.முத்துநிலவன், மா.சின்னத்துரை,
மதுக்கூர் இராமலிங்கம், திண்டுக்கல் எம்எல்ஏ பாலபாரதி, “ஸ்ரீபாரதி”குரு.தனசேகரன்
மற்றும் புதுகை நகரப் பிரமுகர்கள்,  தமுஎகச நிர்வாகியர் உள்ளனர்.
------------------------------------------------------------------------
   புதுக்கோட்டையில் நகர்அரங்கில்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவிஞர் நா.முத்துநிலவனின் மூன்று நூல்களின் வெளியிட்டுவிழாவில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
   கவிஞர்  முத்துநிலவன் மார்க்சீயப் பார்வையில் எழுதியுள்ள கட்டுரைகள் தமிழ் சமூகத்தைப் பற்றியும், இன்றைய கல்வி முறைகள் பற்றியும் ஆழமான ஆய்வை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக சங்க இலக்கியமும், சமூக வரலாறும் என்ற கட்டுரை மிகப்பெரிய முயற்சி. இத்தகைய ஆய்வுகளை அவர் தொடர வேண்டும். அண்மைக்காலமாக தமிழகத்தில் பெரும்பாலான அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், கல்விச் சிந்தனை குறித்த அவரது கட்டுரைகள் இக்காலகட்டத்தில்  மிகவும் தேவையானதாக இருக்கிறது. முத்துநிலவனின் படைப்புகளும், செயல்பாடுகளும் அவர் எங்கள் இயக்கத் தத்துவத்துக்கு வலுசேர்க்கிறது  என்பதில் பெருமை கொள்கிறோம்.
   சென்னை மாநகரத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கம் அதிகமான பிள்ளைகள் படித்து வருகின்றனர். அதில் 85 சதம்பேர் தலித், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும், குறிப்பாக 70 சதம் பேர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய பள்ளிகளை நான் நேரில் ஆய்வு செய்தபோது, அவர்களின் பெற்றோர்கள்  சுமை தூக்கும் தொழிலாளர்களாக,, கட்டடத்தொழிலாளியாக, காவலாளியாக, ஆட்டோ ஓட்டுநர்களாகவும் உள்ளது தெரியவந்தது.
   திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையிலுள்ள வேளாண் பண்ணை பள்ளி மூடப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைகள் இனி படிக்க வேண்டுமென்றால் 5 கி.மீ. தொலைவுக்கு  நடந்து சென்றுதான் படிக்க வேண்டும். இது போல தமிழகத்தில் ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வருகிற ஆண்டிலும் 20-க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள ஏராளமான பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைக்குழந்தைகளின் எதிர்காலம் இருண்டுபோகும். பெரிய  நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்து நிற்கும் தனியார் பள்ளிகளில் இத்தகைய குழந்தைகள் படிக்கும் வாய்ப்புகிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
   இச்சூழ்நிலையில், சமூக சிந்தனையுள்ள ஆசிரியர்களின் முயற்சியால் அரசுப் பள்ளிகளைநாடிச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம், ராமம்பாளையத்திலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 27 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் தீவிர முயற்சியால் இரண்டே ஆண்டுகளில் 62 மாணவர்கள் சேர்ந்துள்ளன். எங்கிருந்தோ வந்த ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக தனது சொந்தப் பணத்தை செலவழிப்பதைப் பார்த்த பொதுமக்கள் தாங்களாகவே உதவ முன்வந்ததால், நல்ல கட்டடம், கணினி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் சிறப்பாகச் செயல்படுகிறது.
   புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் குயவர் இனத்தைச் சோ்ந்த சுமார் நூறு குடும்பங்கள் உள்ளன. அந்தப் பள்ளியிலும் ஆசிரியர், கிராமமக்களின் முயற்சியால் சகல வசதிகளோடும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோல ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இத்தகைய முயற்சிகள் தொடர்கின்றன. உரிய கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டால் அரசுப் பள்ளிகளை நோக்கி பெற்றோர்களின் கவனம் திரும்பும் என்பதற்கு இதைவிடச்சிறந்த எடுத்துக்காட்டு இல்லை. குழந்தைகளின் கல்வி தடைபட்டால்  ஒரு தலைமுறையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்.
நூல்களை ஏந்திநிற்போர் -இடமிருந்து- மதுக்கூர் இராமலிங்கம், ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, ஜி.ராமகிருஷ்ணன் இவர்களின் இடையே நந்தலாலா, அடுத்து நா.முத்துநிலவன்,  திண்டுக்கல் பாலபாரதி, மா.சின்னத்துரை மற்றும் விழாக்குழுவினர்
       விழாவுக்கு, தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா தலைமை வகித்தார்  முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளேஎன்ற கட்டுரை நூலை   ஜி.ராமகிருஷ்ணன், கம்பன் தமிழும் கணினித் தமிழும்என்ற கட்டுரை நூலை பத்திரிக்கையாளர் மதுக்கூர் ராமலிங்கம், புதிய மரபுகள்என்ற கவிதை நூலை ஞானாலயா நூலக நிறுவனர் பா.கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் வெளியிட்டனர்.முதல் பிரதியை  மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் சீனு.சின்னப்பா, மருத்துவர் கே.எச்.சலீம்கல்வியாளர் ஜி.தனசேகரன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சண்முக பழனியப்பன்,மருத்துவர் ச.ராம்தாஸ், கல்வியாளர் ஆர்.எம்.வி.கதிரேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  முன்னதாகதிண்டுக்கல் தொகுதி எம்எல்ஏ-  கே.பாலபாரதி,  மார்க்சிஸ்ட்கட்சி மாவட்டச் செயலர் மா.சின்னத்துரை ஆகியோர் அறிமுகம்செய்தனர்.
    தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பொதுச்செயலர்  இரா.காமராசு, கவிஞர்கவிவர்மன், தமுஎசக மாநில துணைத் தலைவர் ஆர்.நீலா, மாவட்டப் பொருளர் சு.மதியழகன், தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலர் கவிஞர் ஜீவி, மாவட்டச் செயலர் கவிஞர் ரமாராமநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் நா. முத்துநிலவன் ஏற்புரையாற்றினார். கவிஞர் தங்கம்மூர்த்தி தொகுத்தளித்தார்.  நிறைவாக திருமதி மல்லிகா நிலவன் நன்றி  கூறினார். முன்னதாக நெல்லை கிருஷ்ணசாமியின்  இசை நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்  சார்ந்த இலக்கியவாதிகளும்,  கல்வியாளர்களும் கலந்து கொண்டனர்.
---------------------------------------------  By மோகன்ராம், புதுக்கோட்டை
First Published : 06 October 2014 05:49 PM IST –தினமணி நாளிதழ் இணையப் பக்கம்
--------------------------------------------------------------------------- 
வலைச்சரத்திலேயே அறிமுகப்படுத்தி வரவேற்று
விழாத்தொகுப்பையும் பதிவிட்ட சகோதரி மு.கீதா-

படங்களோடு பதிவுசெய்த சகோதரர் மணவை ஜேம்ஸ்-

விழாவின் செய்திப்படங்களை வெளியிட்டிருக்கும்
திருச்சி சகோதரர் தமிழ் இளங்கோ -

வலைப்பதிவர்களின் “மினி“ சந்திப்பு பற்றி 
எழுதியிருக்கும் தங்கை மைதிலி -
ஆகியோரின் பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.. 

நிகழ்ச்சிக்கு பெங்களுரில் இருந்து தம்பதியராக வந்து சிறப்புச் செய்த தங்கை தேன்மதுரத்தமிழ் கிரேஸ், அவரது கணவர் காட்டிய அன்பில் என் மகளும், துணைவியாருமே நெகிழ்ந்து நின்றனர் எனில் என் உணர்வைச் சொல்ல வார்த்தைகள் ஏது? நன்றிம்மா...
அடுத்து விரைவில்-
புகைப்படங்களுடன் விழாத் தொகுப்புப் பதிவை இடுவேன்.
-------------------------------------

6 கருத்துகள்:

 1. விழா வெகு சிறப்பாக இருந்தது அண்ணா. விழாவிற்கு வந்து உங்களையும், அண்ணி மற்றும் இலச்சியாவையும் சந்தித்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அண்ணா. விழா நேரத்திலும் எங்களை அன்புடன் கவனித்ததில் நானும் மகிழ்ந்து நெகிழ்ந்தேன், மனங்கனிந்த நன்றி அண்ணா. விழாவில் கஸ்தூரி அண்ணா, மைதிலி, கீதா, ஸ்டாலின், இளங்கோ ஐயா, ஜெயக்குமார் அண்ணா, மற்றும் இன்னும் சில பதிவர்களையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 2. உங்களுடைய படைப்புகளை உங்கள் வலைத்தளத்தில் மட்டுமே நான் படித்து வருகிறேன். இப்போழுது வெளியான உங்கள் மூன்று நூல்களையும் வாங்கி இருக்கிறேன். இனிமேல்தான் படிக்க வேண்டும். உங்கள் படைப்புகளை தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் இடதுசாரி கருத்துக்களோடு ஒப்பிட்டாலும், நான் அவற்றை மனிதநேய படைப்புகளாகவே காண்கின்றேன்.

  இந்த விழாவினைப் பற்றிய தங்களின் தொகுப்பினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. அண்ணா,
  ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இத்தனை கூட்டம் என்பது உங்கள் நட்பின் பாங்கினை தான் பறைசாற்றுகின்றது அண்ணா!! விழா மிக சிறப்பாக இருந்தது:) மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. தங்கள் இலக்கிய ப்பணி அந்த சான்றோர்கள் சொன்னதைப்போல இனி வெகு சீரும் சிறப்புமாக அமையும் அல்லவா!! தங்கள் அடுத்த அடுத்த படைப்புக்களுக்காக காந்திருக்கிறோம் அண்ணா!

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள திருமிகு.கவிஞர் நா.முத்துநிலைவன் அய்யா அவர்களுக்கு,

  வணக்கம். சகோதரர் மணவை ஜேம்ஸ் என்று தங்களின் உடன்பிறப்பாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விழா முடிந்த பிறகு எங்களைச் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டதையும், விருந்தோம்பலில் சிறந்து விழங்கிய தங்களின் பாச உணர்வையும் எண்ணி நெகிழ்கின்றேன்.

  விழா நிகழ்வுகள் அனைத்தும் அருமையிலும் அருமை....!அது தங்கள் வாழ்வின் பெருமையிலும் பெருமை! மூன்று நூல்கள் ஒரே நேரத்தில் வெளியிட்டது...புதுகை மன்னின் சாதனை...!அரங்கு நிறைந்து வெளியில் மக்கள் வெள்ளம் வழிய வழிய..
  சாதனை சரித்திரம் படைத்து விட்டீர்கள்!.


  ‘நீ (கவிஞர் முத்துநிலவன்)
  அரைத்து வைத்த
  மாவுகூட
  பொங்குகிறதே!


  பெண்ணே! (அண்ணி)
  நீ பொங்குவது
  எப்போது?
  -‘என்றா கேட்கிறீர்கள்...?அண்ணி என்றைக்கும் பொங்கியதே இல்லையா?நீங்கள் தானே பொங்குவது! ’ (சோறு பொங்குவதைக் கேட்கவில்லை)
  தமாஷ்க்காக...

  உண்மையில் தங்களின் கவிதை பெண்களைப் பொங்கி எழ அறைகூவல் விடுகிறது...அற்புதமான கவிதை...! தங்கள் விழாவில் எங்கள் ஊர்க்காரர் சகோதரி மைதிலி, கஸ்தூரி அய்யா, கீதா போன்ற அன்பர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிட்டியதை எண்ணி பெருமைப்படுகின்றேன்.
  தங்களின் நூல்களைப் படித்து பார்த்துக் கருத்துகள் கூற வேண்டும்...படிக்காமலே ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!’ பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்... இனி தமிழகம் விழித்துக் கொள்ளும்...!

  பாராட்டுகளும்...வாழ்த்துகளும்!

  நன்றி.

  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  பதிலளிநீக்கு
 5. விழா வெகு சிறப்பாக நடந்திருக்கிறது என்பது தங்கள் பகிர்வில் இருக்கும் புகைப்படம் பார்க்கும் போதே தெரிகிறது ஐயா... மற்றவர்கள் விழா குறித்து எழுதியதை பணிச்சுமை காரணமாக இன்னும் படிக்கவில்லை... படிக்கிறேன்... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 6. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! ” முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! - நூல் விமர்சனம்” என்ற தலைப்பில்
  http://tthamizhelango.blogspot.com/2014/11/blog-post_26.html உங்களுடைய நூலைப் பற்றிய எனது கருத்துரையை எழுதி இருக்கிறேன். ஆங்காங்கே உங்களுடைய நூலின் வரிகளையும் மேற்கோளாக காட்டியுள்ளேன். கட்டுரையில் ஏதேனும் பிழை இருப்பின் சுட்டிக் காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

  பதிலளிநீக்கு