எனது ஆசிரியப்பணியில் ஒரு நல்ல நாள்...நிறைவுப் பகுதி

 25-02-2012, 
எனது ஆசிரியப்பணியில் ஒரு நல்ல நாள்... நிறைவுப் பகுதி
     காலை எழுந்ததும், யார்யாரிடமிருந்து குறுஞ்செய்தி எத்தனை மணிக்கு வந்திருக்கிறது என்று பார்த்தேன்.கோமதி(4.05), தினேஷ்(4.15), கணேஷ்(4.27), அபி(4.37), நாகலட்சுமி(4.40), இணையதுல்லா(4.40), பாண்டி-சித்ரவேலு(இருவரும் அண்ணன்-தம்பிகள் ஒரேவகுப்பு-(4.52)) என்று பட்டியல் நீண்டது. இன்னும் சிலர் 5மணிக்கு மேல் எழுந்து படித்தால் குறுஞ்செய்தி தரவேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை.
     நேற்றிரவு, இவர்களோடு நிவேதிதா(10.47) சுவாதி(10.42) தமிழ்ச்செல்வி (10.35)என்று மாணவியர் அளவிற்கு மாணவர்கள் இரவு10மணிக்கு மேல் படிப்பதாகக் குறுஞ்செய்தி ஏதும் சொல்லவில்லை. அவர்கள் 37பேருக்கும் “நன்று. விடிகாலையில் எழுந்து படித்துவிட்டு எழுதிப்பார், இரவு வணக்கம்“ என்று (ஆங்கிலத்தில்தான்) பதில்செய்தி அனுப்பும் போது மணி இரவு 11.12. மணிகண்டன் விடுதியில் இருப்பதால் செய்தி தரமுடியவில்லை என்று வருத்தப் பட்டுக்கொண்டது ஞாபகத்திற்கு வந்தது.(இதற்காகவே அவன் 3நாள் விடுமுறையில் ஊருக்குப் போயிருந்த நாள்களில் இரவு 10மணிக்குப் பிறகும் விடிகாலை 5மணிக்கு முன்னதாகவும் குறுஞ்செய்திகள் அனுப்பியிருந்ததை வகுப்பில்  பாராட்டியிருந்தேன்.)
     பிறகு, நாளை மறுநாளைக்கு மறுநாள் (28.02.2012) புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமுள்ள -9,10ஆம்வகுப்பு நடத்தும்- தமிழாசிரியர்களுக்கு அனைவர்க்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தவுள்ள 5நாள் பயிற்சி முகாமில் உரையாற்ற, யார்-யாரையெல்லாம் அழைக்கலாம் என்று நேற்றுப் போட்டு வைத்திருந்த திட்ட வரைவை மீண்டும் எடுத்துச் சரிசெய்து, விட்டுப்போனவர்களைத் தொலை பேசியில் பிடித்து, உறுதி செய்து கொண்டு, செய்தித்தாளை மேய உட்காரும் போது காலை மணி 7.
     காலை 10 மணிக்கு பள்ளிக்கூடம் போனேன். நேற்றைய நிகழ்வுப் படி நான் போக வேண்டியதில்லை என்றாலும், பள்ளிக்கு அருகிலேயே என்வீடு என்பதால், விடுமுறை நாளில் வேறு முக்கிய வேலை இல்லை என்றால் பள்ளிக்கூடப் பக்கம் வந்துவிடும் வழக்கப்படிப் போய்விட்டேன். முதல்வர், “நல்லவேளை வந்தீர்கள், கணினிஆசிரியர் மருத்துவவிடுப்பு.“என்று சொல்லி, நாளை(26-02-2012) நடக்கவுள்ள உதவிக் கல்வி அலுவலர் அரசுத் தேர்வுக்கு கொஞ்சம் “தேர்வுஎண் அறை ஒதுக்கீட்டுப் பட்டியல் அடித்துத் தரமுடியுமா?“ என்று கேட்க, அதை அடித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்தால் மணி 11.
     ள்ளியில் இருந்து, 10-இ தினேஷை அலைபேசியில்  அழைத்தேன்.
“அய்யா வணக்கம்யா. சொல்லுங்கய்யா
“வணக்கம் பா. எங்கய்யா இருக்கே?
அய்யா வீட்ல ங்கய்யா
“சரி நீ வீட்லயே இரு நா உங்க வீட்டுக்கு வர்ரேன்
என்னங்கய்யா சேதி? எங்கய்யா இருக்கீங்க? நான் வரட்டுங்களாய்யா?
“இல்லப்பா நானே வர்ரேன்என்று பேச்சைத் துண்டித்தேன்.
அவன்வீடு ரெண்டுதெரு தள்ளித்தான் இருக்கிறது என்று அவன் அப்பா மனோகரனும் சொல்லியிருந்தார்.  நான் இரவு நேரத்தில் 10மணிக்கு மேல் 10.30க்குள் பேசுவேன், “அய்யா படிக்கிறேன்யாஎன்ற பதிலைத் தவிர அப்பா அம்மா எடுத்தால் பேசமாட்டேன்“ என்று வகுப்பில் சொல்லி, எல்லாருடைய அலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு என் எண்ணையும் தந்திருந்தேன். ஒருநாள் இரவு 10.20க்கு நான் தினேஷை அழைக்க, அவன் அப்பா எடுத்து, “அய்யா வணக்கம்யா. அவன் படிக்கிறான் யா. இப்பல்லாம் என்னடா இரவு 10மணிக்கு மேலயும் படிக்கிற மாதிரி இருக்கு?னு கேட்டப்ப தான் யா நீங்க போன் பண்ணுவீங்கன்னு சொன்னான், ரொம்ப நன்றிங்கய்யா. ஒருநாள் வீட்டுக்கு வர்ரதா சொன்னீங்களாம், அவசியம்  வாங்கய்யா, இந்தா இருங்க அவன்கிட்ட குடுக்கிறேன்என்று சொல்லியிருந்த்து நினைவுக்கு வந்தது..
எல்லாருக்கும் பேச முடியாதென்றாலும், வேறுவேறு பத்துப்பேருக்கு அவ்வப்போது இரவு 10மணிக்கு மேல் பேசுவதால் நல்ல பலன் கிடைத்த்து. குறுஞ்செய்தி அனுப்ப நூறு ரூபாய்க்கு ஏற்றினால்தான் மாதம் 3000 பேருக்கு அனுப்பலாமே! இதில் நான்கு பிரிவுப் பத்தாம்வகுப்பின் - 192 பேரையும்  கொஞ்ச நேரம் கூடுதலாகப் படிக்க வைக்க முடிகிறதே!
தினேஷ் வீட்டுக்குப் போனால், அவன் தம்பியும் அம்மாவும் திருவப்புர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அப்பா வெளியில் போய்விட்டாராம். அய்யா வாங்கய்யா இருங்கய்யா டேய் ஓடுரா  பாய் கடையில போயி ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கிட்டு வாடா என அவன் அம்மா பரபரப்பாக, நான் அன்போடு மறுத்து  விட்டு, ஒரு குவளை தண்ணீர் கொண்டுவரச் சொல்லிக் குடித்துவிட்டு, தினேஷை வெளியில் அழைத்துப் போக அனுமதி கேட்டேன்.
எனது ஆக்டிவா வண்டியில் பின்னால் ஏறிக்கொண்ட தினேஷ் புரிந்து கொண்டான். அய்யா யார் வீட்டுக்கய்யா போறோம்?“ “இணையதுல்லா வீடு“ என்றதும் “இங்க தான்யா ஆசாரி காலனி (விஸ்வகர்மா நகர்)“ என்றான்.
அண்டக்குளம் வழியில் சாலையோரத்தில் இருந்த தேநீர்க்கடை வாசலில் கூட்டித் தள்ளிக்கொண்டிருந்தது நம்ப பத்தாம் வகுப்பு இ கவிதா மாதிரி இருந்தது. தினேஷிடம் கேட்டேன்.
“ஆமாங்கய்யா கவிதா தாங்கய்யா.. இது அவங்க கடைதான்–தினேஷ்.
வண்டியை நிறுத்தி இறங்கும் போதே கையில் இருந்த விளக்குமாற்றை மறைத்துக் கொண்டு, “அய்யா வாங்கய்யாஎன்ற கவிதாவின் முகத்தில் திகைப்பு. அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் வாசலுக்கு வந்து, கடை பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள். “நான் கவிதாவோட தமிழய்யா, கவிதா வீட்ல எப்டிப் படிக்குது? எவ்வளவு நேரம் படிக்குது?“ என்றதும் “படிக்குது. பாஸ் பண்ணீரும்ல?“ “என்ன அப்படிக் கேட்டுட்டீங்க? 400க்கு மேல வாங்கும். மேல நல்லா படிக்க வையுங்கஎன்று சொல்லிக் கிளம்பப் போக, “காபி சாப்பிடுங்கய்யா“ என்று போர்ன் விட்டாவை நீட்டினார். அந்தக் கடையில் அது 10ரூபாய் இருக்கும்ல என்று நினைத்துக் கொண்டே தயக்கத்துடன் வாங்கி பாதியை தினேஷிற்குக் கொடுக்கக் குவளை கேட்டேன். அதை கவனிக்காத மாதிரி கவிதா “அப்பா அவன் அய்யா கூட வந்திருக்கான் என் கிளாஸ்தான்“ என்று மெதுவாகச் சொல்ல, அதற்குள் அவனுக்குப் போட்ட தேநீரை கவிதாவிடமே கொடுத்துக் கொடுக்கச் சொன்னார் அவர்.
“இன்னும் 36நாள்தான்“ என்று அரசுப் பொதுத்தேர்வுக்கு மீதம் உள்ள நாள்களைச் சொல்லி, நல்லாப் படிக்கச் சொல்லுங்க என்று கிளம்பினேன். கவிதா முகத்தில் மகிழ்ச்சியும் பெருமையும். அதுதானே எனக்கு வேண்டும்!
அடுத்த வீதிக்கு அடுத்த திருப்பத்தில் திரும்பிக் கடைசியில் இருந்த இணையதுல்லா வீட்டு வாசலில் வண்டிய்யை நிறுத்தி இருவரும் இறங்கினோம். ஒற்றைக் குடிசை. வீட்டில் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அப்பா அம்மா இரண்டு பேரும் வேலைக்குப் போய் விட்டார்களாம். இவன்தான் சமைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவன் என்னை உள்ளே அழைக்காமலே நான் போய்விட்டேன்.
அவன் எழுத்து மணிமணியாய் இருக்கும். எல்லாப் பாட வகுப்பிலும் ஆசிரியர்கள் தருவதைக் கரும்பலகையில் எழுதிப் போடுவது அவன்தானே! நான் கேட்காமலே ஒரு சொம்பு தண்ணீர் கொண்டுவந்து தந்தான் இணையா. அப்போதுதான் கழுவிச் சுத்தமாக்க் கொண்டுவந்திருந்தான். நல்ல பய!
அலைபேசி அழைத்தது. சித்ரா டீச்சர். ஆர்எம்எஸ்ஏ யில் தமிழகச் சுற்றுலா செல்லக் கடைசி நேரத்தில் ஒருசிலர் வராததால், கடைசி நேர வாய்ப்பை இரவு 8மணிக்கு என்னிடம் அவர்கள் சொல்ல, நான் இவர்களுக்குச் சொல்ல, சித்ரா போயிருந்தார்கள். இதனால், எனக்கு நன்றி சொல்ல, என்னிடம் சொன்னது சரி. நம் பள்ளி முதல்வரிடம் சொல்லி என்னைப் போட்டுக் கொடுத்துடாதீங்க என்று சிரித்துக் கொண்டே சொல்லி வைத்தேன். இப்படி நான் சொல்லி அனுப்பி வைத்த ஓவிய ஆசிரியர் புகழேந்தியைக் காலையிலிருந்து நான் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் எடுக்கவில்லை!
ணையதுல்லா,தினேஷ் இருவரையும் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை நகர எல்லையில் வந்து, தஞ்சைச் சாலையில் வண்டியைத் திருப்பினேன்.
“அய்யா முள்ளுர் தானே போறோம்?“
“ஆமாம்பா, பத்தாம்ப்பு பிள்ளைங்க யார் யார் வீடு அங்க இருக்கு?“
“நிறைய பசங்க இருக்காங்கய்யா... ஆனா நாங்க அங்கல்லாம் போனது இல்லங்கய்யா...“ “ஓகோ! அவுங்க தாழ்த்தப்பட்டவுங்க..ங்கிறதாலயா?“ “அப்படில்லாம் ஒன்னும் இல்லய்யா..“ இணையதுல்லா சொல்ல, தினேஷ் இதற்கு ஒன்றும் சொல்லவில்லை. “அய்யாகூட போறதுனால அப்பா ஏதும் சொல்லமாட்டாங்க இல்லடா“
எங்கள் பள்ளியிலிருந்து தஞ்சைச் சாலையில் 4கி.மீ.சென்று இச்சடிக்கு முன்னாலேயே சடக்கென்று திரும்பியது முள்ளுர். கப்பிச்சாலையில் ஒரு கி.மீ. சென்றதும் முன்பு இதேபோல -4வருடங்களுக்கு- முன் பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பார்ப்பதற்காகவும், அதற்கு முன் 1990இல் அறிவொளி இய்க்கக் கலை நிகழ்ச்சிக்காகவும் இங்கு வந்தது நினைவுக்கு வந்தது.
எங்களைப் பார்த்துவிட்ட எங்கள் பள்ளியிலேயே பதினோராம் வகுப்புப் படிக்கும் மாணவர் சிலர் – மதியம் தேர்வுக்காக வந்துகொண்டிருந்தவர்கள் – எங்களைப் பார்த்த்தும் நின்று “அய்யா என்னங்கய்யா இங்க?“ என்றார்கள். சிலர் பார்த்துக்கொண்டே வண்டியை வேகவேகமாக மிதித்துப் பறந்தார்கள்....!
“சும்மா தாம்பா... பத்தாம்ப்பு படிக்கிற பசங்க-புள்ளைங்க வீடுகளுக்கு பரிச்சைக்குள்ள எப்பவாச்சும் வருவேன்னு சொல்லியிருந்தேன்... இன்னைக்கு நேரம் கிடைச்சுது...என்றதும், யார்யார் வீடு எந்தெந்தப்பக்கம் என்று அடையாளம் சொன்னது ஒன்றும் புரியவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டு, கிளம்பினோம். “கோவில் மடத்துல கொஞ்சம் பசங்க உக்காந்து கல்லாங்காய் ஆடிக்கிட்டிருக்காய்ங்க... இப்பப் போனா படிச்சுரலாம்“ என்று சொல்லியவாறு சில 11ஆம் வகுப்பு மிதிவண்டிகள் பறந்தன...!
கோவில் முக்கத்தில் திரும்பும்போது, எதிரே வந்த விஜயலட்சுமி (11ஆம் வகுப்பு) நின்று, “வணங்கங்கய்யா... என்னங்கய்யா... இவ்ளோ தூரம்?என்று கேட்டு விட்டு, “அய்யா வீட்டுக்கு வாங்கய்யா... அப்பா உங்கள பாக்கணும்னு சொன்னாங்கய்யா... வீட்டுக்கு வாங்கய்யா... இல்லன்னா இங்க எங்க போறீங்கன்னு சொல்லுங்க நான் அப்பாவ அங்கக் கூட்டியாறேன்என்று சொல்லவும், “இல்லப்பா இன்னொரு நாள் வர்ரேன்.. அப்பா கிட்ட சொல்லு“ அந்த மாணவி, நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் (அண்டர்-19) மாநில அளவில் 2,3ஆம் இடங்களை சில முறை வென்று வந்திருந்தார்! ஒருமுறை என்னைப் பேச அழைத்திருந்த புதுகை-ரோட்டரி சங்கத்தினரிடம் சொல்லி இவரோடு பத்துப்பேருக்கு “ஸ்போர்ட்ஸ் ஷீவாங்கித் தர ஏற்பாடு செய்திருந்தேன்...
கோவில் முக்கத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் செய்தி அந்தச் சின்னக் கிராமத்தில் உடனடியாகப் பரவி விட்டது போல... எங்கள் பள்ளியில் படிக்கும் 20,30 பயல்கள் வந்து கூடிவிட்டார்கள்... வண்டியைத் தள்ளிக் கொண்டு ஊர்வலம் போவது போலப் போக நேர்ந்தது சங்கடமாக இருந்தது.
மரத்தடியில் வண்டியை நிறுத்தினேன்.
பத்தாம் வகுப்புப் படிக்கும் அந்த ஊர் மாணவர்களை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு மற்ற -6,7,8.9 வகுப்புகளில் படிக்கும் பசங்களை அவரவர் வீடுகளுக்குப் போகச் சொன்னால் அவர்கள் போனால் தானே...?
சரி விஷ்ணு உங்க வீடு எங்கடா“ 
“ந்தா அதுதாங்கய்யா வாங்கய்யா“
“சரி நீங்கள்ளாம் போங்க நாங்க போய்க்கிறோம்“ யாரும் போகவில்லை
விஷ்ணுவின் அம்மா 1989-90இல் புதுக்கோட்டைமாவட்ட அறிவொளிக் கலைக்குழுவில் இருந்தவர். பள்ளியில் இவனைச் சேர்க்க வந்தபோதே சொல்லியிருந்தார்.  அவர்கள் வீட்டுக்கு முதலில் போனோம். வீட்டுக்குள் ஓடி சட்டையைப் போட்டுக்கொண்டு சிட்டாய்ப பறந்து வெளியில் வந்த விஷ்ணு சைக்கிளை எடுக்க ஓடினான். நான் புரிந்து கொண்டு, “அம்மா அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவனக் கூப்பிடுங்க எப்டிப் படிக்கிறான்?“ “நீங்க தான் சொல்லணும்... வீட்ல படிச்சிக்கிட்டேதான் இருக்கான்“ “விஷணு நல்லாப் படிக்கிறான்மா  அவன்தானே ரெண்டாவது மார்க்? முதல்மார்க்கே எடுக்கலாம் இன்னும் நல்லாப் படிக்கச் சொல்லுங்க அதச் சொல்லிட்டுப் போகத்தானே இப்ப வந்தேன். சங்கீதா நல்லாப் படிக்குதா?“ அதற்குள் விஷ்ணுவின் சித்தி எல்லாருக்கும் காப்பி போட்டு எடுத்துக்கொண்டு வந்துவிட்டது.
அடுத்தடுத்து 10ஆ ரெங்கராஜ், 10அ கோகிலா வீடுகளில் இல்லை. காட்டு வேலைக்குப் போய்விட்டார்களாம்... அவர்களின் சின்னத்தம்பி தங்கை விவரம் சொன்னார்கள். தூண்டிலில் மாட்டிய மீனைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு சிங்கவேட்டைக்குப் போய்வரும் ராஜா மாதிரி நடை அவர்களின் பெருமித்த்தில் தெரிந்த்து. எல்லாம் பெர்முடாசில் திரிந்தார்கள்- சட்டையின்றி! கிராமத்துப் பசங்களிடம் கூட, கைலி இருந்த இடத்தை இப்போது மெல்ல மெல்ல பெர்முடாஸ் பிடித்து விட்டது புரிந்தது.  
“சார் அதான் சார் 10 சி அபி வீடு“ ஒரு பயல் கத்தினான். ஊர்வலம் அந்தப்பக்கம் திரும்பியதும் கடையில் இருந்தவர்கள் ஒருமாதிரி பார்த்தார்கள். வாசலில் நைட்டியைப் போட்டுக்கொண்டு ஒரு சிறுமி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள் கும்பலைப் பார்த்து அதில் என்னைப் பார்த்த்தும் கையைக் கழுவி உதறியவாறே உள்ளே ஓடினாள். போன வேகத்தில் –மேலே ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு- வெளியேவந்து வாய்நிறைய “அய்யா வாங்கய்யா“ என்றதும் எனக்கு ஒரே சிரிப்பு “அட நம்ம அபியாடா இது?“
கூரைக் கொட்டகை வாசலில் ரெண்டுபக்கமும் வாசமலர்ச் செடிகள்! நான் ஒன்றும் சொல்லாமலே ஊர்வலம் கொஞ்சம் எட்டி நின்று கொண்டது! இணையதுல்லா, தினேஷ் இருவரையும் மட்டும் அழைத்துக் கொண்டு  போனேன். “வீட்ல யாருப்பா இருக்கா?“ “நானும் அக்காவும் தான்யா இருக்கோம் அம்மா வேலைக்குப் போயிருக்காங்க..“ என்று சொல்லும் போதே அபி அக்கா வெளியில் வந்து “அய்யா வாங்கய்யா...“ என்றது. அதுவும் எங்கள் பள்ளியில்தான் பன்னிரண்டாம் வகுப்பு! “நீ எப்படிப் படிக்கிற? அம்மா பள்ளிக்கூடத்துக்கு வந்தப்ப நீதான் அபி மாதிரிப் படிக்கிறதில்லன்னு வருத்தமாச் சொன்னாங்க“ என்றதும் அருகில் நின்றிருந்த வால் ஒன்று
“சார்...அபிமாதிரி இது ரேங்க் வாங்காது...ஆனா பாஸ் பண்ணீரும்“ “இதுயாரு,“
“என் தம்பிங்கய்யா.. ஏழாம்ப்பு படிக்கிறான்... ரொம்ப நல்லாப் படிப்பான்“
அபி, அவனிடம் காசுகொடுத்து கூல்டிரிங்க்ஸ் வாங்கிவரச் சொல்ல  -
“நான்தான் குடிக்கமாட்டேன்னு தெரியும்ல ஏன்பா இதெல்லாம்.. ஒருடம்ளர் தண்ணி கொடு“ என “அய்யா நீங்க கோக், பெப்சி தான குடிக்கமாட்டேன் னு சொல்வீங்க இது நம்ம ஊரு கலரு சும்மா குடிங்க... முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க...“ இவ்வளவு விவரத்தோடு அபி சொல்லவும் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.. வீட்டிலிருந்து ஒரு குவளை எடுத்து வரச்சொல்லி அதில் பாதியை ஊற்றி நான் எடுத்துக் கொண்டு, மீதியை அபி தம்பியிடமே கொடுத்தேன் தினேஷ் இணையா இருவரும் ஆளுக்கொரு கூல் டிரிங்ஸ் பாட்டிலை அண்ணாத்திக் கொண்டிருந்தார்கள்!
அபி அக்காவை அழைத்து, “அப்பா கிட்ட சொல்லுப்பா அபி நல்லா படிக்கும் நல்லா படிக்க வைக்கணும்னு நா சொன்னதா சொல்லு என்ன?“ என்று சொன்னதோடு அபி கையை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, “டாக்டரம்மா வரட்டுமா?“ என, “இருங்கய்யா அம்மா வந்துருவாங்க மதியானம் சாப்பிட்டு போகலாம்யா“ “ஆமா... உங்க ஊர்ல டீ காப்பி கலரு எல்லாம் அடுத்தடுத்து குடிச்சிருக்கேன் மதியச்சாப்பாடே முடியாது வரட்டா..“
அடுத்து கனகராஜ், நாகலட்சுமி, மாரிமுத்து, வீடுகளில் அப்பா அம்மா
இருவருமே காட்டு வேலைகளுக்குப் போய்விட இவர்கள் படித்துக் கொண்டிருந்த்தாகவும் நான் வந்தது கேள்விப்பட்டு வந்ததாகவும் சொல்ல அவர்களின் வீடுகளின் திண்ணைகளில் ஒரு நிமிடமாவது உட்கார்ந்துவிட்டு வந்தேன். இருந்த பெரியமனிதர்கள் தான் என் பின்னால் சுற்றுகிறார்களே!
     “அய்யா வினோதாவித்யா (அக்கா-தங்கை) வீடு அந்தக் கம்மாக்கரைல தான்யா இப்டியே குறுக்க போயிடலாம்..“  மணியைப் பார்த்தேன் 12.30
நாலைந்து சைக்கிள்கள் இதற்குள் தயாராகிவிட்டன...
அபி தம்பி குரங்கு பெடலுடன் நின்று கொண்டிருந்தான்.  
“நீ அடுத்த வருசம் எட்டாம்ப்புக்கு எங்க பள்ளிக்குடத்துக்கு வந்துரு என்ன?“ “இங்கதான் ஒம்பதாம்ப்பு வந்திருச்சே... டீசி யெல்லாம் தரமாட்டாங்களாம்“
“சரி சரி இங்கயே நல்லா படி... பன்னண்டாம்ப்புக்கு மாடல் ஸ்கூல் வரலாம்“ “நா அங்க தான் பத்தாம்ப்புக்கே வரலாம்னு நினைச்சேன்...“
அட என்னபேச்சு பேசுறான் இவன் என  நான் அவனைப் பார்க்க --
“இல்ல நா பத்தாம்ப்பு படிக்கும்போது நீங்க ரிட்டையராகிடுவீங்களாம்ல?
அபி சொன்னிச்சு அதான் நா இங்கயே படிச்சுக்கிறேன்னு சொல்ட்டேன்“
சைக்கிள் பறந்தது குரங்கு பெடலில்தான் என்ன வேகம்!
இந்தா பக்கத்துலதான்...பக்கத்துலதான் என்று சொல்லியே குளத்துக்கரை, வயக்காட்டு நடுவில் கிடந்த பாதை, கிராமத்திலிருந்து தப்பித்து ஓடிய வண்டிப் பாதை என எல்லா வழியிலும் பசங்களின் சைக்கிள்கள் வழிகாட்ட எங்கள் வண்டியும் பின் தொடர்நதது...  பின்னால் இருந்த இணையதுல்லா சொன்னான்... “அய்யா இந்த ரோட்டுல எல்லாம் போனா பஞ்சர்தான் இங்க பஞ்சர் பாக்க்க் கூட கடை கிடையாது... புதுக்கோட்டையிலர்நதுதான் ஆள் வரணும்...“ “டேய் சும்மாவாடா அதெல்லாம் ஒன்னும்ஆகாது“ ஊர்ப்பாசத்தில் சைக்கிளில் வந்த பசங்க சொல்லிக்கொண்டே முன்னால் வழிகாட்டினார்கள்...
“தம்பி இது என்ன ஊர்ரா?“
அய்யா இதாங்கய்யா பழைய ராசாப்பட்டி நம்ம கிளாஸ் வினோதா வித்யா ரெண்டு பேரு அப்பறம் அருண், கார்த்தி, சுந்தராம்பாள், சீனி, அப்பறம் அக்கா கல்யாணம்னு ஒரு வாரமா வரலயில்ல அந்த ரஞ்சனி எல்லாம் இந்தப் பக்கந்தாய்யா“
அதற்குள் சின்ன சைக்கிள் ஊர்வலம் போறதைப் பார்த்துட்டு ஊர்ப்பெரியவர் ஒருத்தர் நிறுத்தி விவரம் கேட்டார். சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.
“எல சார ஏண்டா வயக்காட்டு ஒத்தயடிப் பாதையில போட்டு இழுக்கிறீங்க இங்கனயே வண்டிய நிப்பாட்டிட்டு குறுக்க நடந்தா டக்குனு போயிறலாம்ல?“
பசங்க மௌனமாக இருக்க நான்தான் தொடர்ந்தேன்... “இல்லிங்க அய்யா அப்படியே போனம்னா புதுராசாப்பட்டி போயி அண்டக்குளம் ரோட்டப் புடுச்சி புதுக்கோட்டை போயிரலாம்ல...“ “ஓகோ அப்பிடியின்னா போங்க“
     போகும் வழியில் வந்த ஒரு அம்மாவைக் காட்டி ரகசியமாக என்னிடம் வந்த பயக “இதான்யா ரஞ்சனி அம்மா“ நான் திரும்பி அவர்களை நிறுத்தி அறிமுகம் செய்துகொண்டு, “ஏம்மா ரஞ்சனி அக்கா கல்யாணம்தான் முடிஞ்சிருச்சில்ல பரிச்சை நேரத்துல லீவு எடுக்கச் சொல்லாதிங்கம்மா“ என, “ரஞ்சனி இனிமே பள்ளிக்குடம்லாம் வரமாட்டா நீங்க போங்க“ என்று வெடுக் கென்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டது... நான் திகைத்தேன். கிராம மக்களிடம் பிரச்சினைகளை நாம் புரிந்துகொண்டு உதவி செய்ய முடியாத நிலையில் அவர்களிடம் என்னபேசி எப்படிப் புரிய வைக்க...?
புளிய மரத்து நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு மணி பார்த்தேன் 1.00! திரும்பும்போதே வினோதா–வித்யாவின் (இரட்டையர்) அப்பா ஓடிவந்தார். “அய்யா வாங்கய்யா உங்களப் பத்தித்தான்யா புள்ளய்ங்க சொல்லிக்கிட்டே இருக்கும் டீவி யில நீங்க பேசுறத எல்லாருக்கும் போன் போட்டு எங்க அய்யா பேசுறாங்கனு சொல்லி வச்சிப் பாக்கச் சொல்லும் ரொம்பச் சந்தோசம்யா.“ என்னைப பேச விடாமல் வீட்டிலிருந்தவர்கள் எல்லாரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். “எப்படிய்யா இதுல வந்திங்க... ரோடு போடுறதா சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டு இருக்காங்கய்யா.. இதுலதான் எங்க புள்ளைக நடந்தே வந்து ரோட்டப் புடுச்சி பள்ளிக்குடம் வருதுங்கய்யா நேரமாயிட்டா சைக்கிள்ல நான் கொணாந்து விடணும்யா அடுத்த வருசம் பதினொன்னாம் வகுப்புக்கு சைக்கிள் தருவீங்களாம்...”  என்னால் ஒன்றும் பேச முடியாமல் போனது.
ஓட்டு வீட்டில ஒருபக்கம் கூரை போட்டிருந்தது.
எல்லாருக்கும் நீர்மோர் வந்தது. எட்டிநின்ற பசங்களிடம் ஒரே சத்தம்.
“மாங்கா பறிச்சுத் தரவாய்யா கொண்டு போறீங்களா?“ என்ற ஒரு பாட்டியின் அன்பை மெதுவாக மறுத்துவிட்டு  பிள்ளைகளை அழைத்தேன் வினோதா-வித்யா இருவரும் எனக்குமட்டும் போட்டிருந்த நாற்காலிப் பக்கத்தில் வந்து எனக்கு மட்டும் சிலவர் சொம்பில் தந்த மோரில் இஞ்சியும் கறிவேப்பிலையும் கிடந்தது! அவர்கள் இருவரும் ஒரு வார்தையும் பேசவில்லை. “என்ன உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்... எல்லாரும் பேசுறாங்க நீங்க ரெண்டு பேரும் ஒன்னுமே பேசல? நல்லாப் படிக்கிறீங்களாடா“ 
வித்யா மெதுவாகச் சொன்னது “ரொம்ப நன்றிங்கய்யா
எதுக்கு? எனக்கு எதுவும் சொல்லத்தெரியவில்லை. எந்த மேடையிலும் தடுமாறாத எனக்கு வார்த்தைகள் தடுமாறின.
இரவுமுழுவதும் தூக்கமில்லை.
ஒருமடங்கு அன்பு காட்டுவோரிடம் பல மடங்கு அன்பைப் பொழியும் கள்ளமில்லாப் பிள்ளைகள், கிராமத்து மக்களின் தீராத பிரச்சினைகளின் மத்தியிலும் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று வந்திருக்கும் விழிப்புணர்வு! மேற்படிப்புக்கு வழியில்லாத தவிப்பு ...
வருடம் தோறும் பத்தாம் வகுப்புப் பிள்ளைகளின் வீடுகளுக்கு நானும் சகஆசிரியர்களும் சென்றுவருவது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு நான்மட்டும் சென்றது எனக்கு மறக்க முடியாத வாழ்க்கைப் பாடமாகவே இருந்தது. பார்த்தது என்னவோ பத்து-இருபது குழந்தைகளைத்தான் ஆனால் படித்த்தென்னவோ பல புத்தகங்களில் கிடைக்காத வாழ்க்கைப் பாடம்!
--------------------------------------------------  

4 கருத்துகள்:

  1. சார் தங்கள் பணி மகத்தானது. மாணவர்களின் வீட்டிற்கே சென்று அவர்களை ஊக்கப்படுத்துகிறீகள். இந்த ஐடியா நல்லாயிருக்கு. இது மாணவர்களுக்கு உற்சாகத்தினைத் தரும் என்பதில் ஐயமேயில்லை.

    பதிலளிநீக்கு
  2. தங்களது பதிவினை தமிழ்மணத்திலும் இணைத்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  3. ஒருநாள் உலா.... உருக வைத்த ஊர்ப்பாசம்.. ஊருக்கு ஒருவர் இப்படி இருந்தால் எப்படிக் கல்வி இழப்பை நாடும்?
    To: நா.முத்து நிலவன்
    From: pavalarponka@yahoo.com

    பதிலளிநீக்கு