இன்று 25-02-2012
எனது ஆசிரியப் பணியில் ஒரு நல்ல நாள்!
தொடர்ச்சியாகப் பெரும்பாலான சனிக்கிழமைகள் பள்ளி நாளாகவே கடந்து போனதில் நம் மாணவர்களுடன் ஆசிரியர்களும் பெரிதும் வருந்தியிருக்கின்றனர் என்பது நேற்றுத்தான் எனக்குத் தெரிந்தது!(“எந்த வேலையை எடுத்துக்கிட்டாலும் “மாங்கு மாங்கு“ன்னு அவன் பாட்டுக்கு மாடுமாதிரி வேலை பார்ப்பான்“என்ற என்மீதான குற்றச்சாட்டு சரிதான் போல! மற்றவர்களின் கருத்தைக் கேட்டே செய்வதாக நினைத்துக்கொள்ளும் நினைப்பு வேறு!)
நேற்று மதிய உணவுக்குப் பின், மெதுவாக எனது –துணை முதல்வர்- மேசையின் முன்னால் வந்து உட்கார்ந்தனர் எமது –புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி- ஆசிரியர்கள் மூவர். நான்கு பிரிவுப் பத்தாம் வகுப்புகளில், மூன்று வகுப்பாசிரியர்கள் அவர்கள். ஆங்கிலவழி வகுப்பாசிரியர் லலிதா வரவில்லையே என அந்தப் பக்கம் எட்டிப்பார்த்தேன் அவர் எப்போது பார்த்தாலும் மாணவர்களுடனேயே இருப்பார். இப்போதும் அப்படித்தான் போல! சனிக்கிழமைகளில் மட்டுமல்லாமல், காலை 8.30-9.30 சிறப்பு வகுப்புகளோடு, அன்று யாராவது ஆசிரியர்கள் விடுப்பு என்றால் அந்த வகுப்பையும் சேர்த்து எடுத்துக் கொண்டு சலிக்காமல் நடத்தும் அந்தச் சகோதரிகள் மேல் எனக்கு எப்போதுமே நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.
“சொல்லுங்கம்மா என்ன எல்லாரும் சேர்நத மாதிரி வந்திருக்கீங்க...!” என்றேன்.
அறிவியல் ஆசிரியரும் பத்து அ பிரிவு வகுப்பாசிரியருமான கே.எஸ்(சுசிலா) டீச்சர்தான் சொல்ல ஆரம்பித்தார்கள்... “இல்லங்கய்யா.. காலையில பசங்க உங்க கிட்ட “நாளைக்கு (சனிக்கிழமை) சிறப்புவகுப்பு உண்டுங்களாய்யா?“னு கேட்டப்ப “ஆமாமா“ன்னு சொன்னீங்களாம்.. அவிங்க கேக்க வந்தது பள்ளிக்கூடம் உண்டாங்கிறத்ததான்.. முன் முழு ஆண்டுத் தேர்வுக்கு தேர்வுஉள்ள வகுப்பு மாணவர்கள் மட்டும் வந்தாப் போதும்னு சுற்றறிக்கை வந்துதுல்ல..?நாளை பத்தாம்வகுப்புக்குத் தேர்வுஇல்ல..அதான் வரணுமா னு...?”
“பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியர் மட்டும் தேர்வு இல்லாவிட்டாலும் வகுப்புக்கு வரணும்“னு சுற்றறிக்கை –கட்டம்கட்டி- எழுதி, முதல்வரிடம் கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்ததே நான்தான் என்பது என் கையெழுத்திலேயே அவர்களுக்குத் தெரிந்திருந்தது புரிந்தது!
இப்போது புரிந்து விட்டது. தமிழாசிரியர் கலா மெதுவான சிரிப்போடு என்னைப் பார்த்தது நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்பதைப் புரிந்துகொண்டது போல இருந்தது! அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டுதான் வந்திருப்பார்கள் போல! இது புரிந்தும் புரியாதது போல, “இல்லம்மா... விட்டா, நாளைக்குத் திருவப்புர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா... ஊரெல்லாம் கூடிரும்... அங்க போயிட்டு விடியவிடிய நின்னு கரகாட்டத்த வேடிக்கை பார்த்துட்டு திங்கக்கிழமை இங்கவந்து பரிச்சைய எப்படி எழுதுவாங்கெ? அதான் யோசிக்கிறேன் எதுக்கும் முதல்வர் கிட்ட கேட்டுடுங்களேன்“ என்று பட்டும் படாமலும் சொல்லிப் பார்த்தேன்.
“அது தெரியாமத்தான் உங்ககிட்ட வந்தமாக்கும்“ என்று உடன் பதில் வந்தது!
அனேகமாக எல்லா சனிக்கிழமையும் வேலை பார்த்தாகி விட்டதும் அதில் பெண்கள் படும் சிரமமும் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. வேலைக்குப் போகும் பெண்களுக்கு “இரண்டு ஷிப்ட் வேலை“ என்ற கந்தர்வனின் சிறுகதை நினைவுக்கு வந்தது.
பிறகு முதல்வரிடம் பேசி நாளைவரவேண்டாம் என்றதும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.
ஆனால், நான் ஒரு திட்டத்தோடுதான் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தேன் என்பது என் மாணவப் பிள்ளைகளுக்கு இன்றுதான் தெரிந்ததாம்! இன்று -25-02-2012- எனது 32 ஆண்டுக்கால ஆசிரியப் பணியில் எனக்கு மட்டுமல்ல, என் பிள்ளைகளுக்கும் தம் வாழ்வில் மறக்க முடியாத நாள்களில் ஒன்றாகப் போகிறது என்பது நேற்றே எனக்குத் தெரியும்!
அது நல்ல படியாக இன்று நடந்தது என்பதில்தான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!
அதுதான் என்ன...? உடனே சொல்லிவிட்டால் எப்படி? என் மாணவ-மாணவிகளைப் போல ஒரு நாள் பொறுத்திருங்களேன்...! நாளை விரிவாகச் சொல்கிறேன். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் முகத்தில்தான் என்ன ஒரு மகிழ்ச்சி! என்னையும் அவர்கள் அன்பில் திக்குமுக்காட வைத்த இந்தப் பணியில் நல்லாசிரியர் விருது என்னங்க பெரிய விருது...
இதுமாதிரி ஒரு அனுபவம் போதும் போங்க...!
நாளை பார்ப்போம்.
-------------------------------------------------------------------------
சீக்கிரம் சொல்லுங்க அப்புறம் அழுதிடுவன் .........
பதிலளிநீக்குநானும் ஒரு ஆசிரியர் சார், உங்க அனுபவத்தை சொல்லுங்க ஆவலுடன்........
சார் எதுக்கு சஸ்பென்ஸ்? ப்ளீஸ் என் காதுக்குள்ளே மட்டும் சொல்லிடுங்க. சனிக்கிழமை வேலை நாள் என்றால் மாணவர்களும் ஆசிரியர்களும் கொஞ்சம் சுணக்கம் காட்டுவது உண்மைதான்(நானும் ஆசிரியர்தான்..அதான் உண்மையை சொல்லிட்டேன்)
பதிலளிநீக்குவர்ரேன்... வர்ரேன்..
பதிலளிநீக்குவந்துகிட்டே இருக்கேன்...
நண்பர்கள் யாழ்.நிதர்சன், விச்சுவைப் போலவே நமது தமிழகத் தமிழாசிரியர் கழக மாநில இணைச்செயலரும், மணப்பாறை அரசு மேநிப முதுகலைத் தமிழாசிரியருமான அருமை நண்பர் முனைவர் திரு அண்ணா.இரவிச்சந்திரன் அவர்கள் காலையிலேயே தொலைபேசியில் அழைத்துக் கேட்டுவிட்டார்...
நண்பர்களின் அன்புக்கு நன்றி.
இன்று தொடர்வோம்,
அன்புடன்.
நா.மு.