எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து...

எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து... கவிதை எண் - 4

          எல்லாச் சாமியும் ஒண்ணு தான்!

ஒண்ணை ஒண்ணு இழுத்துக்கிட்டு
                  உருண்டக் கிரகம் போகுது - இதை
உணராத மனுசக் கூட்டம்
                   உருண்டு பெரண்டு சாகுது!

ரம்சான் பண்டிகை பிரியாணி
                  ரத்தினம் வீடு போகுது! – அந்த
ராமு வீட்டுப் பொங்கச் சோறு
                   ராவுத்தர் வீடு போகுது!


சாகுலோட சங்கரனும்
                 ஜானும் போறான் பாருங்க – ஆகா
சாகும் வரைக்கும் இப்படியே,
                 சார்ந்திருந்தா போறும்ங்க!

கையக் கோத்து திரியிது பார்
                 கள்ளமில்லாப் பிள்ளைக – பின்னே
பையப் பைய பிரிச்சு வச்ச
                 பாவிகயார் சொல்லுங்க? (ஒண்ணை…)

நாகூர் ஆண்டவர் மண்டபத்துல
                  நல்லக்கண்ணு கிடக்குது – சீக்கு
போகணுமின்னு வேண்டி அந்த
                  வேண்டுதலும் நடக்குது!

அம்மைப் பாத்த கொடுமை போக
                 அவுலுகலாம் பொஞ்சாதி – மாரி
அம்மனுக்கு நேந்துக் கிட்டு
                 உப்புக்கடன் செஞ்சாக! (ஒண்ணை…)

இருக்கும் நொம்பலம் தாங்கலய்யா
                 எந்தச் சாமி தீர்த்தது? – அட
எது வாச்சும் செய்யட்டுமேனு
                 ல்லாத்தையும் பார்த்தது!

ஏழ பாழ சனங்களுக்கு
                எல்லாச்சாமியும் ஒண்ணுதான் - இதுல
ஏற்றத் தாழ்வ சொல்லிக் கெடுத்தது
               ஏவன்டா? அவன் மண்ணுதான்.!(ஒண்ணை…)

(1993 - “புதிய மரபுகள்” -- சிவகங்கை - மீரா வின் “அன்னம்“ பதிப்பக வெளியீடு)

2 கருத்துகள்:

  1. ஏற்றத் தாழ்வ சொல்லிக் கெடுத்தது
    ஏவன்டா? அவன் மண்ணுதான்.!

    கனமான சிறப்பான ஆக்கம்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. ஊருச்சோத்தில் ஒடம்ப வளக்கும்
    ஒழைக்கத் தெரியாப் பயகதான்
    ஒன்னா இருந்தா ஆபத்துன்னு
    ஒடைச்சுப் புட்டான் சாதியை
    - பாவலர் பொன்.க

    பதிலளிநீக்கு