நா.முத்துநிலவன் பேச்சு


திருமணத்திற்குப் பின் பெண்களின் திறமைகள் முடக்கப்படுகின்றன!

கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு 


(செய்திகளை அவரவர் கோணத்தில் படத்துடன் எழுதி அனுப்பிய செய்தியாளர்கள் தீக்கதிர் மதி, தினகரன் கண்ணன், தினமணி சுரேஷ். ஆகியோருக்கும் வெளியிட்ட நாளிதழ்களுக்கும் நன்றி. ஆனால், அந்தப் படங்களை நமது வலையில் ஏற்றும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியவில்லையே! -விரைந்து அதையும் கற்போம்.)

புதுக்கோட்டை -பிப்.4.
              அரசு ஊழியராக இருக்கும் பெண்கள் கூட திருமணத்திற்குப் பிறகு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்துவதில்லை.இந்த நிலை மாறவேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்

              புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக் கிழமையன்று நடந்த இலக்கியமன்ற ஆண்டுவிழா வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர் மேலும் பேசியதாவது

            படிக்கும் காலங்களில் பெண்கள் கல்வியிலும், ஏனைய தனித் திறமைகளிலும் ஆண்களை விடவும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால்  திருமணத்திற்குப் பிறகு இவர்களின் திறமைகள் மதிப்பிழக்கச் செய்து முடக்கப்படுகின்றன. அரசு வேலைக்குச் செல்லக் கூடிய பெண்களுக்கும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. அவர்களின் திறமையான பங்களிப்புகள் இந்தச் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும்.
          ஒரு கருத்தை ஆண்கள் எதிர்த்துப் பேசினால் அவர்களைத் தைரியசாலி என்கின்றனர். அதையே பெண்கள் பேசினால், வாயாடி என்கின்றனர்.அதையும் பெண்களை விட்டே பேசவைக்கின்றனர். பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பது அழிவையே தரும். எனவே பெண்கள் இந்தத் தடைகளை முறியடித்து முன்னுக்கு வரவேண்டும் என சமூகம் எதிர் பார்க்கிறது.
         சமூகத்தை உயர்த்தும் பொறுப்பு ஆண்-பெண் என இரு பாலருக்கும் உள்ளது. இதற்குப் படிப்பே அடித்தளமாக இருக்க முடியும்
         இவ்வாறு பேசிய கவிஞர் நா.முத்து நிலவன் முன்னதாக நடத்தப்பட்ட ஆண்டுவிழா இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், தேர்ச்சி விழுக்காட்டில் திறமை காட்டிய ஆசிரியர்களுக்கும் பரிசுப் புத்தகங்களை வழங்கினார்.

         விழாவிற்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.ஞான சேகரன் தலைமை ஏற்றார்.முன்னதாக உதவித் தலைமை ஆசிரியர் எம்.சின்னத்தம்பி வரவேற்க. ஆசிரியர் பி.வெள்ளைச் சாமி நன்றி கூறினார். மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளோடு விழா இனிது நிறைவேறியது. ஆண்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவியரும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  

- செய்தியாளர் -சு.மதியழகன் தீக்கதிர்மதுரைப்பதிப்பு பக்கம்-6,  05-02-2012 - 
                            --------------------------------------------------------- 
ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில்
கவிஞர் முத்துநிலவன் பேச்சு.
ஆலங்குடி பிப் 5.
     புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். முதுகலைத் தமிழாசிரியர் பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியை கேசவி அனைவரையும் வரவேற்றார். ஓவியர்கள் கருப்பையாபுகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இந்நிகழ்ச்சியில் பட்டி மன்றப் பேச்சாளர் கவிஞர் முத்துநிலவன் சிறப்புரையாற்றினார். அப்போது "பள்ளிப் படிப்பில் தேர்ச்சி விகிதம் மட்டுமல்லாது அதிக மதிப்பெண்கள் பெறுவதிலும் பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள். அதே நேரத்தில் கல்வியில் முன்னணியில் இருந்தபோதிலும் பிற்காலத்தில் அந்தப் பெண்கள் இருக்குமிடம் தெரியாத அளவிற்கு தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வருவதிலும் தங்களை சமூகத்தில் நிலைப் படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்தாமல் இருந்து விடுகிறார்கள். இது மாணவிகள் மட்டுமில்லை. ஆசிரியர் பணிக்குச் சென்று விட்ட பெண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் கணவர்பிள்ளைகள்சமையல்பணி என்று தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு இருந்து விடுகிறார்கள்.
     உலகிலேயே மிகவும் அழகான பெண்மணி அன்னை தெரசாதான். அவர் இறந்தபோது உலகமே அவருக்காகக் கண்ணீர் சிந்தியது. அவரது இறுதி ஊர்வலத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றார்கள். பெண்வர்க்கம் எப்போது எதிர்த்துப் போராடத் துவங்குகிறதோ அப்போதுதான் ஆண்களின் கொடூரக் குணம் குறையும். தாக்குதலும் குறையும். பிற்போக்குத் தனங்களைக் கைவிட்டு விட்டு முற்போக்காகச் சிந்தக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
     தனது பள்ளிப் பருவத்தில் ஒன்பதாம் வகுப்பில் படிப்பு ஏறாததால் வகுப்பறையிலிந்து ஆசிரியர்களால் வெளியேற்றப் பட்டார். அவர்தான் இசையுலகில் இருமுறை ஆஸ்கார் விருதினைப் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.  இந்தச் சமூகம் பெண்கள் நிறையக் கற்றிருக்க வேண்டும் என்று பெண்களிடமிருந்து நிறையவே எதிர் பார்க்கிறது.
     ஆண்கள் பேசினால் திறமை என்கிற சமூகம் பெண்கள் பேசினால் வாயாடி என்கிறது. பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும். பேசாமல் இருந்து விட்டால் அதுவே முழுதாக அழித்து விடும். குழந்தைகளை வளர்ப்பதில் ஆண்களுக்கும் சமமாக கடமை உள்ளது. நியாயமும் உரிமையும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டுமெனில் பெண்கள் படிக்க வேண்டியது அவசியமாகும். சமூக சிந்தனையும் அக்கறையும் பொறுப்பும் உள்ளவர்கள் மட்டும்தான் சமூகத்தில் உயர்ந்து நிற்க இயலும். பெண்கள் படிப்பில் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்." இவ்வாறு பேசினார்.
            ------------------------------------------ 
செய்தியாளர் - கண்ணன்,“தினகரன்05-02-2012-திருச்சிப்பதிப்பு பக்கம்-15 
              -------------------------------------------


“குறுகிய வட்டத்தை விட்டுப் பெண்கள் வெளியே வரவேண்டும்“ 
ஆலங்குடி-பிப்-5.
   குடும்பத்தில் கணவர், பிள்ளைகள், சமையல், பணி என்பதுதான் வாழ்க்கை என்ற குறுகிய வட்டத்தை விட்டுப் பெண்கள் வெளியேங வரவேண்டும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன்.
  ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டி அவர் பேசியது - 
   பள்ளி கல்லூரிக் காலங்களில் சிறப்பிடம் பெறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதன் பிறகு அந்தத் திறமைகளைச் சமூகத்தில் நிலைப்படுத்திக் கொள்வதில் தவறவிடுவதால் இளமையில் முயன்று பெற்ற திறமைகள் வீணாகி விடுகின்றன.
  ஆகையால், தனக்கான உரிமைகளைப் பெறவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் சமூக நலன் சார்ந்த கல்வி அவசியம் என்பதால் பாடப்புத்தகங்களோடு பிற புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என்றார் அவர். 
   விழாவுக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை வகித்தார். ஓவியர்கள் கருப்பையா, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலைத் தமிழாசிரியர் பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியர் கேசவி வரவேற்றார். 
   -- செய்தியாளர்-சுரேஷ், 
தினமணி- நாளிதழ் பக்-2, 06-02-2012 -திருச்சி பதிப்பு
-------------------------------------------------------------- 
                  


            

2 கருத்துகள்:

  1. வீட்டுக்குள்ளே பெண்ணைப் புட்டிவைக்க நினைக்கும் வேதனை மனிதர் மாறவில்லையே. பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காண்பீர் என்ற முண்டாசுக் கவிஞனின் கனவு மெய்ப்படும் காலம் விரைவில்... பாவலர் பொன்.க

    பதிலளிநீக்கு
  2. நன்றி பாவலர் அய்யா,
    நான்கு நாள்களாக வெளியூர்ப்பயணம்.
    நமக்குப் புதிய பணிஒன்றை கல்வித்துறை வந்திருக்கிறது.
    உங்கள் துணையோடு அதைச் சிறப்பாகச் செய்வோம்.
    புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர்களுக்கு நாம் சில -புதிய கற்பித்தல் உத்திகளைச் சொல்லித்தர பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது ஆர்எம்எஸ்ஏ வழியாக... விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வேன்.

    பதிலளிநீக்கு