க.நா.சுப்பிரமணியம் - ஒரு முழு விமரிசனம்


நன்றி திரு கோமல் சுவாமி நாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு  வெளிவந்த ‘சுபமங்களா’ மாத இதழ்
(மார்ச், எப்ரல், மே – 1994)
---------------------------------------------------------------------------------------
க.நா.சு.
என்கிற
க.நா.சுப்ரமண்யமும்
திலகாட்ட 
மகிட பந்தனமும் 
-- நா.முத்து நிலவன்
---------------------------------------------------------------------------------------

ஒரு பெரும் படிப்பாளி நாடு நாடாகப் போனான்.
நான் படிக்காத புத்தகமில்லை. என்னோடு வாதம் செய்து ஜெயிக்க
        யாருண்டு?” – என்று சவால் விட்டான் விஜய நகரத்துக்கும் போனான்.
  ராஜா கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனைத் தேர்ந்தெடுத்தார்.
“நீதான் அவனோடு வாதம் செய்து ஜெயிக்க வேண்டும்” என்றார்.

அவை கூடியது.
ராஜாவும் பெரிய பெரிய அறிஞர்களும் சூழ்ந்திருந்தனர்.
அந்தப் பக்கம் ‘படிப்பாளி’ அருகில் ஏராளமான புத்தக மூட்டைகள்,
இந்தப்பக்கம் தெனாலிராமன் - அருகில் ஒரே ஒரு – பெரிய புத்தகம்!
அந்தப் பெரிய அளவில் ஒரு புத்தகத்தை ‘படிப்பாளி’ அதுவரை
         பார்த்ததில்லை. சந்தேகம் வந்தது. ‘நாம் இதுவரை படிக்காத புத்தகமாக
         இருக்கிறதே!’ யோசித்தபின் கேட்டான். ”அது என்ன புத்தகம்?” தெனாலி
        சொன்னான் - “திலகாட்ட மகிட பந்தனம்”.
மேலும் சொன்னான் - “இதிலிருந்துதான் நான் கேள்விகளைக் கேட்கப்
        போகிறேன்.”

படிப்பாளி பரபரப்பானான்.
‘இது என்னடாது, வம்பாப் போச்சு, இப்படி ஒரு புத்தகத்தை இதுவரை நாம்
         படித்ததில்லையே! எல்லா நாடும் சுற்றி – ஏராளமான மொழி கற்று வந்த
         நமக்கு இன்று என்ன சோதனை?’ இருந்தாலும் சொன்னான்.
“திலகாட்ட மகிட பந்நதனம்தானே!” ஹஹ்ஹா! நான் படித்து விட்டேன்,
          ஆனால் இன்றைக்கு எடுத்து வரவில்லை நாம் நாளை சந்திப்போம்”
         என்றான்.

அவ்வளவுதான் -
அன்றிரவே சொல்லிக்கொள்ளாமல்; போய்ச் சேர்ந்தான் அந்த உலகப்புகழ்
         படிப்பாளி!

ராஜா கிருஷ்ண தேவராயருக்கு சந்தோசம்.
தனது நாட்டின் மானம் காப்பாற்றப் பட்டதற்கு நன்றிகூறி,
       தெனாலிராமனுக்கு பரிசுகளும் தந்தார். பிறகு ஆவலை அடக்க முடியாமல்
       கேட்டார். “அந்தப் புத்தகத்தைக் கொடு”.
‘பெரும் படிப்பாளிக்கே தண்ணி காட்டிய புத்தகமல்லவா?”
        திறந்து பார்த்தார்.
புத்தகத்தைச் சுற்றிச் கட்டியிருந்த மணிக்கயிற்றை அவிழ்த்தால், புத்தகம்
        போல செய்யப்பட்ட ஒரு மரப்பெட்டி அது! அதோடு ஒரு மாடுகட்டும் கயிறு
         கொஞ்சம் எள்ளு சில காய்ந்த குச்சிகள்! ஆவ்வளவுதான் உள்ளே இருந்தது!

        அது புத்தகமே அல்ல!
“என்ன இது?” என்பது போலத் தெனாலியைப் பார்த்தார். தெனாலி
          சொன்னான்:
“திலகம்(எள்) காட்டம் (விறகு) மகிடபந்தனம் (எருமை கட்டும் கயிறு)

கதை போதும்.
க.நா. சுப்ரமணியம் தெனாலிராமனா? படிப்பாளியா? ரெண்டு குணத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்த ஒரு புது மாதிரியா?
இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு நீங்களேதான் முடிவு கட்ட வேண்டும்.
இறந்து போன இலக்கியவாதியைப் பற்றி 1912 – ஜனவரி 21 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் வலங்கைமானில் கந்தாடை நாராயண ஸ்வாமி அய்யரின் மகனாகப் பிறந்தார் க.நா.சுப்ரமணியம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பாடத்தில் பட்டம் பெற்றும் வேலைக்கு போக முயற்சி செய்யாமல் தந்தை கொடுத்த உற்சாகத்தில் ஆங்கிலத்தில் ‘எழுத’ ஆரம்பித்தார்.
அவரது சிறுகதைகள், கட்டுரைகள் பல இந்திய-மேலைநாட்டு இதழ்களில் வெளியாயின.
‘சமயப்பிரச்சாரம் போல இலக்கியப் பிரச்சாரம் செய்கிறேன் என் வாழ்க்கையே இலக்கியப் பிரச்சாரம்தான்’எனச் சொல்லியவர் கடைசி வரை முழுநேர எழுத்தாளராக வாழ்ந்து மறைந்தார்.
தனது திருமணத்திற்குப் பிறகு இளம் மனைவியைப் பிறந்த வீட்டில் விட்டு விட்டு அப்பாவின் பென்ஷன் வரும் தைரியத்தில் 1934இல் சென்னைவாசியானார்.
1958 முதல் --‘சரஸ்வதி’யில் வெளிவந்த அவர் வார்த்தையில் சொன்னால்-- ‘இலக்கிய வாழ்வு பற்றிய தீர்மானத்தோடு, ஒரு டைப்ரைட்டருடன் சென்னை வந்து’ தங்கசாலைத் தெருவில் உள்ள ஹிண்டு ஹோட்டலில் ரூம் எடுத்துக் கொண்டு தங்கினார்.
இடையில் ‘மணிக்கொடி’ ‘சரஸ்வதி’ ‘எழுத்து’ போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதியதோடு
‘பசி’ தொடங்கி, ‘பித்தப்பூ’ வரை பன்னிரண்டு நாவல்கள் நான்கு சிறுகதை தொகுதி இரண்டு கவிதைத் தொகுதிகளுடன் ஏராளமான விமரிசனக் கட்டுரைகளும் சில மொழிபெயர்ப்புகளும் அவர் தந்தவை. அவரே சொன்னது போல ‘தமிழ் இலக்கியப் பண்பாட்டுத் தளத்தின் வீழ்ச்சியைக் காணச் சகிக்காமல்’ இருபது வருடம் டெல்லிக்கு ‘வனவாசம்’ போனார்.
என்றாலும் அது ‘அஞ்ஞாதவாசம்’ அல்ல. வடஇந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதி வந்தார். எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னை திரும்பி குமுதம் குங்குமம் தினமணி நாளிதழ் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதிக் தொண்டே ஞானரதம் முன்றில் போன்ற சிறு பத்திரிகைகளுக்கு கௌரவ ஆசிரியராகவும் இருந்தார்.
மீண்டும் பேத்தி, மகள்-மருமகனைப் பார்க்க டெல்லி போனபோது அங்கேயே  காலமானார்.

க.நா.சு.வின் மொழிபெயர்ப்புப் பணிகள்
சி.சு.செல்லப்பா (எழுத்து – மே’60) சொல்வது போல ‘க.நா.சு.வைச் சுற்றி வீசியது முழுக்க முழுக்க மேல்நாட்டுக் காற்று அதனால் தமிழுக்கு சில நல்லது நடந்தது. தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து வடஇந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் நிறைய எழுதினார். அதைவிடவும் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது நினைவில் நிற்கக் கூடியது.
அதே போல வெளிமாநில மேல்நாட்டு ஆங்கில இலக்கியங்களைத் தமிழர் படிக்க அறிமுகம் செய்ததுதான் அவர் தமிழருக்குச் செய்த பெரிய இலக்கியத் தொண்டு. உலகத்துச் சிறந்த நாவல்களை – 15 ஆசிரியர்களைப் பற்றிய அறிமுகத்தோடு-சுருக்கித் தமிழில் தந்ததும் ‘சிறந்த பத்து நாவல்கள்’ என ஆங்கிலத்தில் தந்ததும் மிக நல்ல காரியம்.
தான் படித்ததில் பிடித்த இலக்கியங்களைப் பற்றி ‘படித்திருக்கிறீர்களா’ என்று தொடர்ந்து எழுதினார். பின்னர் இது ஒரு தொகுப்பாகவும் வந்தது.
‘நோபல் பரிசு பெற்ற கண்டக்டர்’ என்றதும் ஆச்சரியமாக இருக்கும். நார்வே எழுத்தாளர் நட்ஹாம்சன், தான் எழுதிய ‘நிலவளம் நாவலுக்குப் பரிசு பெற்றதைத்தான் க.நா.சு. தன் பாணியில் அப்படிக் குறிப்பிடுகிறார். அதைவிட ஹிட்லரின் பாசிஸத்துக்கு நட்ஹாம்சன் ஆதரவு தெரிவித்த காரணத்தால் போர் முடிந்ததும் அவர் எழுதிய நாவல்களையெல்லாம் அவர் வீட்டில் கொண்டு போய் வீசியெறிந்து வாசகர்கள் எதிர்ப்பைக் காட்டிய செய்திகளையும் க.நா.சு எழுதிய பின்தான் தமிழ் வாசகர்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
எல்லாம் சரி. தனது ஆங்கில-பிறமொழி அறிவைக் கொண்டு மொழிபெயர்த்ததை விடவும், தமிழரை விமரிசனம் எனும் பெயரிலும், நாவல்-கவிதை-சிறுகதைப் படைப்பு எனும் பெயரிலும் அவஸ்தைப் படுத்தியதே க.நா.சுவை பற்றிய வடிவமாக நம் கருத்தில் பதிந்திருப்பதுதான் யோசிக்க வைக்கிறது.

மேல்நாட்டு ‘ஜம்பமே’ விமரிசனமா?
தமிழ்நாட்டின் நாலாந்தர மனிதன் ஒருவன். அமெரிக்காவுக்குப் போய் வரும் வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதன் பிறகு வாய் திறக்கும் போதெல்லாம் - ‘ளுநந.. றாநn ஐ  றயள in  யுஅநைசiஉய’ என்று ‘பந்தா’ காட்டுவது இயல்பு.
நிறைய ஆங்கில இலக்கியம் படித்த க.நா.சுவிடம் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக, அங்கே இருப்பதில் ஒரு சதவீதமும் தமிழில் இல்லை என்பது போலவே பெரும்பாலும் எழுதியது. அவர் படிப்புக்குத் தகுதியானது தானா?
‘வெற்றிகரமான --முழுக்க முழுக்க-- காந்திய நாவலைப் படிக்க வேண்டுமானால் நாம் அமெரிக்காவுக்குத்தான் போக வேண்டும்’ என்கிறார். தமிழில் இருக்கட்டும், இந்தியாவிலேயே எந்த மொழியிலும் இல்லையா?
‘உலக மொழிகளில் சிறந்த நாவல்கள் பட்டியல் போட்டால் இந்திய நாவல் ஏதும் அதில் இருக்குமா என்பதே சந்தேகம்தான். தமிழ் நாவலைப் பற்றி அந்தச் சந்தேகத்துக்கும் இடம் கிடையாது’ என்கிறார்.
இதுதான் க.நா.சு. என்றால் இதுதான் விமரிசனம் என்றால் இது சரிதானா? என்பதை விமரிசகர்களும் வாசகர்களும்தான் சொல்ல வேண்டும்.
தமிழில் மொழிப் பாடம் படித்த ஆசிரியர் - பேராசிரியர்களின் (யுஉயனயஅiஉயைளெ) இலக்கியப் பணி போதாது. மற்ற மொழியில் கலை இலக்கியங்களைப் படித்தவர்கள் வளர்த்திருப்பது போல நாம் சிரத்தை எடுக்கவில்லை என்பது நம் எல்லோர்க்கும் உள்ள கருத்துதான். ஆனால் இந்த விமரிசனத்தையும் ஆக்கபூர்வமாக நம் எதிர்பார்ப்பை உற்சாகமூட்டும் வகையில் எழுதமாட்டார்.
தமிழில் பெண் கவிஞர்கள் எனும் தலைப்பில் ஒருவர் ஆய்வு செய்தார். க.நா.சு அவரைப் பார்த்து ‘ஒளவையார் கிரோக்க ஸாஃபோ போன்றவர் என்று உங்களால் ருசுப்பிக்க முடியுமா? என்று கேட்டாராம். ஆய்வாளர் ‘ஸாபோவா யாரது?’ என்று கேட்டாராம். அவ்வளவுதான். ‘அவரிடம் பேச இனி ஏதும் இல்லை’ என்று வந்துவிட்டாராம் - தினமணியில் எழுதுகிறார்.
சுந்தர ராமசாமி சொல்வது போல அவர்படித்த அளவிலும் வகையிலும் முறையிலும் படிக்கக் கூடாது என்பதை அவரது ஒவ்வொரு விமரிசனத்திலும் வெளிப்படுத்துவது என்ன பயனைத் தரும்? அவர் எழுதிய விமரிசனக் கட்டுரைகள் பெரும்பாலானவற்றில் ஊடுபாவாக ஓடும் கருத்து என்ன? –
படிப்பவருக்குப் புதிய புதிய செய்திகளை அறிமுகப்படுத்தும் வகையில் ‘பயனுறுத்துவது (பயன்படுத்துவது) அல்ல, படிப்பவரைப் பயமுறுத்துவதே எனில் அது தேவையா?
‘1827 இல் எக்சர்பான் என்கிற தன் நண்பரோடு பேசும்போது ஜோஹன் வுகாங் கதே என்ற இலக்கியவாதி…’ – என்று ஒரு பெரும் கட்டுரையைத் தொடங்குகிறார். கவனியுங்கள் அந்த எழுத்தாளர் எழுதிய செய்தி அல்லவாம். ‘அவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த செய்து கூட எனக்குத் தெரியுமாக்கும்’ எனும் தொனி, பயன்படுவதா பயமுறுத்துவதா?
நமக்கு பாரதியைத் தெரியும் வ.வே.சு.வையும் தெரியும். ஆனால், இந்த இரண்டு பேரில் அதிகப் படிப்பாளி யார்? என்று யோசித்திருக்கிறோமா?
படிப்பு என்ன படிப்பு! நம் நாட்டில் படித்தவர்களின் லட்சணம் நமக்குத் தெரியாமலா இருக்கிறது? என்று சலித்துக் கொள்வோம். ஆனால் வ.வே.சு.வுக்கு பாரதியை விட அதிகப் படிப்பு இருந்தது என்கிறார் க.நா.சு. ஏன் இப்படிக் சொல்கிறார்? என்ன ஆதாரம்? இந்த ஒப்பீட்டால் இலக்கிய வளர்ச்சிக்கு என்ன பயன்?
இதையெல்லாம் அவர் யோசிப்பது கிடையாது. நாம் யோசிக்கவேண்டும்தானே?
‘எதுதான் நல்ல கவிதை! என்று கேட்டால் அதற்கும் உடனே வெளிநாட்டைத்தான் கை காட்டுவார் க.நா.சு. (ஊர்ஊருக்கும் அண்ணா சிலை மாதிரி க.நா.சுவுக்கும் சிலை வைக்க விரும்புவோர், மேல்நாடுகளை நோக்கி, ‘தூக்கியதிருக்கர’ பாவத்தில் சிலையைத் தேர்ந்தெடுக்கலாம்) எஸ்ரா பவுண்ட் என்ன? வால்ட் விட்மன் என்ன டி.எஸ்.எலியட் என்ன என்ன என்ன என்று சுந்தரம்பாள் பாணியில் சுதி நீட்டுவார். நாம் அந்த சுதியில் சொக்கிவிடுவோம்!

பொத்தாம் பொதுவாய் ஒரு போடு போடு!
‘இன்னின்ன காரணங்களால் இது இது சிறந்தது’ என்று எதையும் ஒப்பிடுவது நம் பழக்கம். எதையும் பொத்தாம் பொதுவாக ஒரு போடு போடுவதே க.நா.சு.வின் வழக்கம்.
இந்தியாவின் ‘சாதனை ஊர்கள்’ பற்றிய அவரது போடு ஒரு ‘தனீ’ போடு பாருங்கள் - அதற்கு முன்பு, இந்தியாவில் உள்ள நகரங்களில் விஞ்ஞானத்திலும் அரசியலிலும் சமூக விஞ்ஞானத்திலும் சாதனை புரிந்த ஊர்கள் எவையெவை என்று ஒரு சிறிது யோசித்து வைத்துக் கொள்ளுங்கள் என்ன? அப்படியெல்லாம் தனித்தனியாகப் பிரிக்க முடியாதே என்கிறீர்களா? சரி-க.நா.சு.வின் ‘சாதனை பூமி’ பட்டியலைப் பாருங்கள்.
1. கல்கத்தா – விஞ்ஞானம்
2. லக்னோ – அரசியல்
3. பம்பாய் - சமூக விஞ்ஞானம்
என்ன விழிக்கிறீர்கள்? ‘ஒன்றும் மூன்றும் இடம் மாறினால் தேவலையே’ என்று யோசிக்கிறீர்களா? க.நா.சு. ‘பரவாயில்லை அப்படியும் வைத்துக் கொள்ளலாம்’ என்பார். அதுதான் க.நா.சு. அதுதான் க.நா.சு.வின் விமரிசன பாணி. பொத்தாம் பொதுவாகச் சொல்லும் பொது காரணம் சொல்ல வேண்டியதில்லை. பின்னால் மாற்ற வேண்டியிருந்தால் சரி வைத்துக் கொள்ளுங்கள் என்பார்.
இந்தப் பொத்தாம் பொதுவான விமரிசன பாணியால்தான் ‘சி.சு. செல்லப்பா 1956 இல் தொகுத்த ‘புதுக்குரல்கள்’ தொகுப்பைத் தாண்டி ஒரு புதுக்கவிதைத் தொகுதியும் தமிழில் தேறவில்லை’ என்று 24.2.88 ல் கூட க.நா.சு.வால் எழுத முடிந்தது.
நவீன கவிதையில் மட்டுமல்ல க.நா.சு. தனக்கு அதிகப் பரிச்சயமில்லை என்று அவரே ஒத்துக்கொள்ளும் பழந்தமிழ் இலக்கியம் பற்றியும் இப்படித்தான்.
“சங்க இலக்கியம் என்று சொல்லப்படுவது சுமார் 27,000 வரிகள். இதில் 6,000 வரிகளாவது நல்ல கவிதையாகத் தேறும்” என்கிறார். (தினமணி 24.3.88)


 சங்க இலக்கியத்தை வரிக்கணக்கில் பிரிப்பவர் கவிஞராகவோ, விமரிசகராகவோ இருப்பது சந்தேகம். வேண்டுமானால் வருமான வரித் துறைஞராக இருக்கலாம். அதுவும் பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் ஆக 18 தொகுப்புகளின் தொகுப்பு இரண்டு. இதில் எது கவிதை நயமிகுந்தது? எது குறைவானது? என்று கூறும் பொறுமையோ, அதில் ஆங்கில இலக்கியத்தில் அவருக்கிருந்தது மாதிரியான – பரிச்சயமோ நிச்சயமாக அவருக்கில்லை. பிறகு ஏன் இப்படி பொத்தாம் பொதுவான ஒரு போடு?

இங்குதான் காலஞ்சென்ற இலக்கிய விமரிசகர் க. கைலாசபதி சொல்வது சரியாகப் போருந்துகிறது. வாழ்க்கையில் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வாழ்ந்த அவரது எழுத்திலும் செல்லப்பிள்ளைத்தனம் பிரதிபலிக்கிறது. குறும்பும் பொறுப்புணர்வு இன்மையும் மட்டு மதிப்பின்றி தூக்கியெறிந்து பேசும் மனோபாவமும் இவரது வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் காணப்பட்டன.

க.நா.சு. எனும் கவிஞர் - சிறுகதையாளர் -  நாவலாசிரியர்…..                          
இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர். கேரளாவின் குமாரன் ஆசான்’ நினைவுப் பரிசை கவிதைக்காகப் பெற்றவர். இவரது கவிதையில் இவருக்கே பிடித்ததாக இவரே கூறும் ஒரு கவிதையைப் படித்துப் பாருங்கள்.
இல்லை இல்லை இவர் கூறுவது போல கவிதை படிப்பதல்ல அனுபவிப்பது –
அனுபவியுங்கள்!
வைகுண்டம்

  வைகுண்டத்து      
                                  வாசல்                
                                  செல்லரித்தது  
                                  போக
                                  பாக்கி
                                  க்றீச்
                                 சிட்டுத்          
                                 திறந்து
                                 நிற்க
                                 சிங்க
                                ராச்சாரி
                                 யார் - யார்
                               அவர்?
                                அவர் யாரோ
                                 தெரு  
                                வெல்லாம்
                                மூ
                                 ணு
  வ
                                  ரி
                                 சை
                                 க்யூ
                                நிற்க
                               ஆண்
                               டொன்
                               றொன்
                               றொன்
                                றாகக்
                                கழிய
                                ஐம்
                                 பத்
                                திரண்டும்
                                போக
                                எஞ்சிய
                                 இரு
                                 பத்  
                                தெட்டும்
                                நீண்டு
                                 வை            
                                 குண்டத்து
                                 வாசல்
                                 செல்லரித்து
                                 போக
                                 பாக்கி
                                 கூட்டத்திலே
                                  அவளை
                                 கை
                                 விட்டுவிட்டேன்.
இந்த இடத்தில் இந்தக் கவிதை பற்றிய எனது கருத்தைச் சொல்வதை விடவும், க.நா.சுப்ரமண்யம் - புதுக்கவிதைகள் நூலுக்கு முன்னுரை எழுதிய ஞானக் கூத்தன் சொல்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது.
அவர் சொல்கிறார்:
“க.நா.சு. வகுத்துக் கொண்ட கோட்பாடுகளுக்கு ஏற்ற மாதிரியே அவரது கவிதைகள் அமைந்துள்ளன. தத்துவரீதியாகவும், தூய இலக்கியக் கோட்பாட்டு ரீதியாகவும்
இன்றைய (முழு அளவில் இல்லாவிட்டாலும் முக்கால் அளவில் இன்றைய) க.நா.சு. என்று மதிக்கத்தக்க சுந்தர ராமசாமி, க.நா.சு.கவிதைகள் பற்றி என்ன சொல்கிறார்? ‘இவரது கவிதைகளை இவரது சிறுகதைகளின் தரத்தில் சேர்க்கலாம்”. என்கிறார்.
ரொம்பசரி,
அப்படியானால் இவரது சிறுகதைகள் எப்படி? அவரே சொல்கிறார். ‘இவருடைய பெரும் பாலான கதைகள் நம் மனத்தைத் தொடுவதில்லை நினைவில் பற்றி நிற்பதும் இல்லை.’

சரி. சிறுகதைகள் - கவிதைகளை விட்டு விடுவோம் நாவல்களில் அவர் நிச்சயமாகச் சாதித்திருக்கிறார் என்கிறார்கள். ‘1940களில் வெளியான ‘சர்மாவின் உயில்’ என்ற நாவலில் காணப்படும் கட்டுக்கோப்பும் உணர்ச்சியும் வேகமும் 1988ல் வெளியான அவரது கடைசி நாவல்களின் ஒன்றான ‘தாமஸ் வந்தா’ரிலும் காணப்படுகிறது. அடக்கிச் சொல்வது சொல்லாமல் சொல்வது என்ற மரபுதான் அவர் மரபாக இருந்து வந்தது’ என்கிறார் சா.கந்தசாமி.
1986-நடுவில் ‘கணையாழி’ பத்திரிக்கையில் (க.நா.சு. அதில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த போது) தமிழில் சிறந்த பத்து நாவல்களைக் குறிப்பிடக் கேட்டு வாசகர் பட்டியல்களை வெளியிட்டது. சுமார் நாற்பது பட்டியல்களில் ஏறத்தாழ 350 நாவல்களை வாசகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இதில் க.நா.சு.வின்  ஒரே ஒரு நாவல் (பொய்த்தேவு) மட்டுமே இடம்;பெற்றதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.
மொழிபெயர்ப்பு நாவல்களையும் சேர்த்தால் இதுவரை க.நா.சு. வின் இருபது நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரும் தமிழ் நாவலில் சோதனை செய்த நாவலாசிரியர்கள் பட்டியலில் தன் பெயர் தவறாமல் இடம்பெறும்படி-(தனது பட்டியலில்தான்) பார்த்துக்கொள்வார். சுந்தர ராமசாமியும் இவரது கவிதை, சிறுகதைகளை விட நாவலில் ‘சாதித்திருப்பதா’கவே கூறுகிறார்.
தஞ்சை ப்ரகாஷ் ஒரு படி மேலேறி ‘இலக்கிய ஆசிரியப் பணியில் ஒரு கலைஞனாய்த் தனது நாவல்களின் மூலம் பலமுறை நிறுவியும் கூட அதனைப் போதிய அளவில் பாராட்டாத சாகித்ய அகாடமி, அவரது விமரிசனப் புத்தகத்துக்குப் பரிசு கொடுத்ததற்கு’ ரொம்பவும் வருத்தப்படுகிறார்.

பானைச் சோற்றுக்கு ஒரு பதம் பார்ப்போமா?
க.நா.சு.வின் கடைசி நாவல் ‘பித்தப் பூ’
ஒரு பைத்தியக்கார ஐ.ஏ.எஸ்.ஸைப் பற்றிய கதை! இதன் சுருக்கம் வேண்டுமானால் சின்னக் குழந்தைகள் சொல்லும் ஒரு சின்னக் கதைதான் - பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் பைத்திய வைத்தியருக்குப் பைத்தியம் பிடிச்சா, அந்தப் பைத்தியக்கார வைத்தியர், எந்தப் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் பைத்திய – வைத்தியர் கிட்டப் போயி, தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்துக்கிட்டு…
என்ன தலை சுற்றுகிறதா? சரி விடுங்கள்.
நடந்த சம்பவங்களை வைத்து தானே கதை சொல்பவராக வரும் க.நா.சு. தன் பெயரான ‘சாமா’ வை (பக். 9,13,33) மறந்து விட்டு கதையோடு அவரே ஒன்றிப் போய் சுப்ரமண்யம் என்றே (பக்.91,92) கூறிவிடுவது சிரிப்பு.
பக்கத்துக்குப் பத்து எழுத்துப் பிழை (உண்மை! வெறும் இகழ்ச்சியில்லை) என்றால் பத்து பக்கத்துக்கு ஒருமுறை கதை நிகழ்ச்சி திரும்பி வரும்! நடுவில் இரண்டு இடத்தில் (பக். 20), கதையை விட்டு விட்டு க.நா.சு. தன் வரலாற்றை ஆரம்பித்து பிறகு விழித்துக்கொண்டு இது இந்தக் கதைக்கு அவசியமில்லை என்று வேறு கூறிப் போகிறார்.
இவர் பேசும் ‘உலக இலக்கியத்தர’ நாவல் எங்கே? இவர் எழுதும் நாவலின் தரம் எங்கே? இப்படி இவர் எழுதும் விமரிசனத்திற்கு அர்த்தமேது?
க.நா.சு.வின் இலக்கிய நடை                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
வார்த்தைச் செட்டு, கலைத்தன்மை, தெளிவு, தரம் என்றெல்லாம் பேசி, அடிக்கடி மாறக்கூடிய தன் பட்டியல்களை வெளியிட்ட க.நா.சு.வின் இலக்கிய நடை மிகவும் செயற்கையானது போலியானதும் கூட.
‘எதையும் தைரியமாகச் சொல்லும் கறார் இலக்கியவாதி’ (‘முன்றில்’ க.நா.சு. நினைவு மலர்க் கட்டுரைகள்), எனும் பெயரை எப்படியோ அவருக்குச் சூட்டி விட்டார்கள்.
எனக்கென்னவோ அவரது இலக்கியம் பற்றிய கருத்தும் - இலக்கிய நடையைப் போலவே தெளிவில்லாமல் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
இலக்கியம் என்றால் என்ன? இந்த எளிய கேள்விக்கு க.நா.சு.வின் பதில் என்ன என்பதைப் படித்தாலே போதும் (தினமணி:25.6.88)
‘இலக்கியம் என்று சொல்லப்படுவது சுலபமாக இலக்கியத் தரத்தை எட்டியதாகவே என் படிப்பின் அளவில் என் இலக்கிய நினைப்புகளில் பூர்த்தி செய்வதாகவும் இருக்க வேண்டும். அறிவுத் தனமும் உணர்ச்சித் தனமும் ஒரு சமன நிலையில் செயல்பட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். நமது நினைவுகளையும் கற்பனைகளையும் அறிவுப் போக்கையும் ;அந்தப் போக்குக்குக் காரணமாக அமைத்து செயல்படுகிற உணர்ச்சித் தனத்தையும் ஒருங்கே ஆழப்படுத்தி விசாலப்படுத்தி, எட்டாததையும் எட்டுகிற மாதிரி தருவதைத்தான் நான் இலக்கியம் என்று எடுத்துக் கொண்டு பார்க்கிறேன்.’
இது மொழிபெயர்ப்பு அல்ல. அவரே தமிழில் எழுதியது.

வாக்கிய அமைப்பு பத்தி பிரிப்பதற்கான தேவை எளிய சொற்களின் தேவையெல்லாம் க.நா.சு.வுக்குத் தெரியாது என்று சொல்ல மாட்டேன். வார்த்தைச் செட்டு இலக்கியத்தில் எழுத்தில் எப்படி வரவேண்டும் என்று பெரியதொரு கட்டுரையே எழுதியவர் அவர்!
‘கவிதையிலும் சரி. வசனத்திலும் சரி. வார்த்தைகளை அளவோடு பயன்படுத்த பாரதிக்குத் தெரியவில்லை’ என்றவர் அவர்! கலிங்கத்துப் பரணியிலும், கம்பராமாயணத்திலும், நாயன்மார்-ஆழ்வார் பாடல்களிலும், ஆண்டாள் பாடலிலும் வார்த்தைகள் தாராளமாக இருந்தன என்று விமர்சித்தவர் அவர்! (தினமணி:4.5.88) அவர்தரும் இலக்கியம் பற்றிய விளக்கம் எத்தனை தெளிவாக இருக்கிறது பாருங்கள்.

க.நா.சு.வின் அரசியல்
‘அரசியல் பேசாதே!-என்பதற்குள் இருக்கும் அரசியல்’ எல்லார்க்கும் தெரிந்ததுதான். இதையே க.நா.சு. இலக்கியத் தரமாகச் சொல்லுவார்: “விமரிசகன், கலைத்தரமாகச் செயல்பட வேண்டுமானால், சித்தாந்தம் கொள்கை என்று தேடிப் போகக் கூடாது” (தினமணி:27.7.88).
ஆனால், இவர் அப்படி இருந்தாரா? எனில், யாரும் அப்படி இருக்க முடியாது என்பதே உலகளாவிய பதில், இருக்கக்கூடாது என்பதும் கூட. மனிதன் சாப்பிடுவது அவசியம்தான் எனில், அதைத் தீர்மானிக்கும் எதையும் - அரசியல் உட்பட- பேசித்தான் ஆக வேண்டும். ‘எதிலும் சார்ந்து விடாதே’ எனும் எழுத்தும், இவரது வாழ்க்கையைச் சார்ந்ததுதான். வாழ்க்கையில் எதிலும் சேராமல் (வேலையில்-கூட) சுதந்திர எழுத்தாளராகவே இருந்தவர். அதுகூட மேலைநாட்டு - இவரது ‘ஆதர்ஸ புருஷர்’களிடமிருந்து தெரிந்து கொண்டதுதான்!
இவர் அடிக்கடி, மேற்கோள் காட்டும் எஸ்ரா பவுண்ட் அமெரிக்காவில் பிறந்தாலும் ஊர் ஊராகச் சுற்றி ‘இலக்கியமே’ வாழ்வாக பாசிஸ்ட் ஆதரவாளராயிருந்தவர். அயர்லாந்துக்காரரான ஜேம்ஸ் ஜாய்ஸ் மனிதப் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு ‘தூய இலக்கிய’ வாழ்வு நடத்தியவர்.
இவர்களைப் போலவோ – வேலைக்குப் போகாத ‘சுதந்திர’ எழுத்தாளராக, பெரும்பாலும் ஹோட்டல்களில் தங்குபவராக, தனிமனிதவாதியாக, ‘தூய இலக்கிய’ விரும்பியாக, அரசியல் சாராதவராக வாழ்வும் எழுத்தும் பொருந்துவது சரிதானா?
“சுதந்திர எழுத்தாளராக, எத்தனை தியாகங்கள்.. நுஎநn வழ னயல” என்று (பித்தப் பூ பக்:61) அவரே கூறிக்கொண்டாலும், இந்த விஷயத்தில் அவரது ‘கலைத்தன்மை’ வெளுத்து, தனது சார்புத்தன்மையைக் காட்டி விடுகிறார்.
பாருங்கள்!
‘ஜனநாயகத்தின் இருப்பிடம் அமெரிக்கா. சமத்துவத்தின் பிறப்பிடம் பிரான்ஸ்’ என்கிறார் (தினமணி–13.7.88). ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’மாதிரி. “சித்தாந்தம் கொள்கை விமரிசகனுக்குக் கூடாது” என்பதும் ஒரு சித்தாந்தம்தானே? அது எப்படி ஒத்துக் கொள்ளும்? இதே ரீதியில்தான், “முற்போக்குவாதிகளுக்கெல்லாம் முற்போக்குவாதியான ஜே.கே. (ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி) தியாகம் செய்திருக்கிற அளவு, உலகில் ஏசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் தியாகம் செய்ததில்லை” என்கிறார்.
                                                                                                                                                                                                                                                                                                                                                            இன்னும் தெளிவாக – கறாராகக் கூறவேண்டுமானால் - “அரசியலிலும் கூட எத்தனையோ சித்தாந்தங்கள், கொள்கைள் என்று (இந்தியாவில்) ஆட்சி செலுத்தினாலும் கூட அவ்வளவும் அன்னிய மண்ணில் விளைந்தவை. இப்படிப் பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் ஒன்றுதான் நமது மண்ணில் விளைந்த சித்தாந்தமாகப் படுகிறது” என்கிறார் க.நா.சு. (தினமணி:17.10.87)

  அவ்வளவுதான் அங்கு சுற்றி, இங்கு சுற்றி ரெங்கனைச் சேவித்து விட்டார். எப்படி இருக்கிறது பாருங்கள் தூய – சார்பில்லாத - இலக்கியவாதம்! இதுபற்றி க. கைலாசபதி 1973-ல் எழுதிய நூல் இன்னும் பொருத்தமாகவே உள்ளது.
க.நா.சு.வின் முரண்பாடுகள்
தனது இலக்கிய முடிவுகளை – ‘சிறந்த எழுத்துப் பட்டியல்’ களை – அடிக்கடி மனம் போனவாறு மாற்றிக் கொள்வதில், பேர் போனவர் க.நா.சு!
‘இலக்கியத்தை எட்டுவதுதான் இலக்கியத்தின் இலக்கு’ (10.2.88) என்பார். உடனே முற்போக்கு இலக்கியவாதிகள் முறைப்பார்களே என்று யோசித்தோ என்னமோ, ‘கலை-கலைக்காக என்று ஒரு கட்சி இருக்க முடியாது’ என்பார் (தினமணி: 18.5.88)
‘தமிழைத் தமிழ் நோக்குடன் விமரிசனம் செய்ய வேண்டும்’ – என்பார். ஆனால் ஒவ்வொரு உதாரணத்துக்கும் மேல்நாட்டோடு கொஞ்சிக் கொண்டு நிற்பார்.
அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்த ‘எழுத்து’ பத்திரிக்கை பற்றி, “முதல் ஆறு மாத காலம் ‘ஸ்டர்’ இருந்தது, பின்னர் செத்துப் போயிற்று’ என்பார். யோசித்தால், அவ்வளவுதான் அவர் அதில் எழுதிய காலமாம்!
வெங்கட்சாமிநாதன் ‘யாத்ரா’–28.3.86--இதழ்க் கடிதத்தில் சொல்வது போல “அச்சில் வரும் க.நா.சு.வுக்கு நேர்மாறானவர் - நேர்ப் பேச்சில் வரும் க.ந.சு.!” எந்த விஷயத்திலும், அவர் மற்றவர்களிடம் இருப்பதாகச் சொல்லி கண்டனம் செய்யும் சுபாவம் அத்தனையும் அவரிடமே இருப்பதைக் காணலாம்.”
நவீன கவிதையில் ‘சோதனை’ (யாருக்கு) முயற்சிகளை வெற்றிகரமாகச் செய்து வருபவர் பட்டியலில் தன் பெயரோடு தருமு சிவராமுவின் பெயரையும் சேர்த்துப் போடுவார் க.நா.சு.
ஆனால் தருமு சிவராமுவோ, “இலக்கியம் தெரிந்த மாதிரி வேஷம் போடுவதில் வெற்றி பெற்றவர்களுள் ஒருவர் க.நா.சு” என்கிறார் (ஞானரதம், மார்ச்’73).
நவீன விமரிசனத்திற்கும், புதுக்கவிதைக்கும் பெரும் பங்காற்றிய பெரியவர் சி.சு. செல்லப்பாவை – விட்டு விலகிய காரணத்திற்காகவே – காய்ந்தவர் க.நா.சு. இதற்காக ‘தன்னை எடுத்தெறிந்து பேசுவது தகாத செயல்’ என்று கட்டுரையே எழுதினார் சி.சு.செ. (எழுத்து ஜுன்’63)

க.நா.சு.வின் முரண்பாடுளிலேயே முக்கியமானதும், பலரும் கவனிக்காததும் ஒன்றுண்டு. உலகப் புகழ்பெற்று நாவல்களை எல்லாம் மொழிபெயர்த்தார் என்று அவசரப்பட்டு பாராட்டிவிட முடியாது. நட்உறாம்சனின் ‘நிலவளம்’-நார்வே, ஸெல்மா லாகர் லோஃபின் ‘மதகுரு’வும், பேர் லாகர் குஸ்ட்டின் ‘அன்பு வழி’யும்-ஸ்வீடன், மார்டின் துகார்டின் ‘தபால்காரன்’- பிரெஞ்ச், தாமஸ்மானின் ‘மந்திர மலை- ஜெர்மன், ப்ளடிஸ்லா ரேமாண்டின் குடியானவர்கள் - போலந்து என தமிழில் அவர் அறிமுகப்படுத்திய இவர்கள் அனைவரும் நோபல் இலக்கியப் பரிசு பெற்ற எழுத்தாளர்கள்தான்.
ஆனால், மக்கள் போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று இலக்கிய நோபல் பரிசும் பெற்ற சிலிநாட்டு மக்கள் கவி பாப்லோ நெருடாவையும், ஷோலகாவ், மாக்ஸிம் கார்க்கி, செக்காவ், மாயகாவ்ஸ்கி போன்ற சோவியத்தின் மாபெரும் இலக்கியவாதிகளையும் ஞாபகமாக க.நா.சுப்பிரமணியம் ‘மறந்து’விட்டாரா? அல்லது மறைத்து விட்டாரா?
டால்ஸ்டாய், கோகால், டாஸ்டாவ்ஸ்கி போன்ற சோவியத் எழுத்தாளர்களை இவர் புகழ்ந்து ‘போனால் போகிறது’ என்று தனது ‘உலகத்துச் சிறந்த நாவல்’களில் அறிமுகப்படுத்தினாலும், இம்மூவரும் சோவியத்துப் புரட்சிக்கு மிக முந்திய எழுத்தாளர்களே என்பதைக் கவனிக்க வேண்டும்.

இதே போலத்தான் உள்நாட்டு விவகாரமும்.
‘இலக்கியத்தில் என்ன முற்போக்கு?” என்று எகத்தாளம் செய்வார். நாம் பாராட்டிப் புகழ வேண்டிய --‘ஓ! அமெரிக்கா!’வுக்கு முந்திய – ஜெயகாந்தனைக் கூட ஒத்துக்கொள்ளமாட்டார். சிறந்த தமிழ்ச் சிறுகதைகளுக்கான தொகுப்பில் ஜெயகாந்தனையும், சுந்தர ராமசாமியையும் மூன்றாம் பட்சமாகத்தான் வைப்பாராம்! (எழுத்து – ஜன’59)
இலக்கியவாதிக்கு ‘இஸம்’ கூடாது என்பவர், ‘ஜே.கே.யிசமும், ஆர்.எஸ்.எஸ்.-இந்து பழமைவாதமும் நல்லது’ என்பது மட்டும் என்ன இஸமோ?
ஒரு சமயம் கரைகடந்த உற்சாகமும், எழுச்சியும், கிண்டலும், கேலியும் இரவது எழுத்துக்களில் பொங்கிப் பிரவகிக்கும், பிறிதொரு சமயம் உலகமே உருப்படாது என்பது போல ‘இந்த ஜனங்கள் திருந்தமாட்டார்கள்’ என்று சோகமே உருவாக சோர்ந்து, தனித்து நின்று கொண்டு, புலம்புவார்.
தனது மகா சந்நிதானத்தில் சேர்ந்த சில இலக்கியவாதிகளை அவ்வப்போது தன் பட்டியலில் சேர்த்து கௌரவிப்பார். பிறகு அவர்களை நாலாந்தர நடையில் ‘மூத்திர வாடை அடிக்கும் கதைகளை எழுதியவர்’ என்றும் ‘விபச்சாரக் கதை எழுதுபவர்’ என்றும் மொத்துவார்.
ஏன் இந்த முரண்பாடுகள்? என்று கேட்க முடியாது. கேட்டால் ‘நான் சுதந்திர இலக்கியவாதி’ என்பார். ‘நாளை வேறு ஒரு மூடில் வேறு ஒரு பட்டியல் போடுவேன்’ என்பார் (கணையாழி-ஆகஸ்டு’86)
வெங்கட் சாமிநாதன் ‘யாத்ரா’வில் எழுதியது போல- “க.நா.சு. எழுதியுள்ளதை வாசிப்பவர் யாருக்கும் அன்றைய விவரங்கள் தெரியாது படிக்கக் கிடைக்காது என்ற தைரியத்திலா? எவன் தேடிப் போகப் போகிறான் - தன் புரட்டல் பேச்சுத்தான் நிலைக்கும் என்ற தைரியமா? அவருடைய நம்பிக்கை வீண் போகாது. அவர் பேச்சுத்தான் செல்லுபடியாகும் என்பது எனக்குத் தெரியும். மக்கள் சுபாவம் அது” என்று நாம் நம்பிக்கை இழக்க வேண்டியது இல்லை.
காலமாற்றத்தில் க.நா.சு.வின் சில நல்ல விஷயங்களே நிற்கும். அவரது இலக்கியம் பற்றிய தூப்;போதனைகளை அப்படியே ஏற்க மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

க.நா.சு.வுக்கு உரிய இடம்:                                                  
குண்டுச்சட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு க.நா.சு. ஒரு அட்சய பாத்திரம்தான். அதில்ஒன்றும் சந்தேகமில்லை. உலகின் முதல்நாவல், முதல் சிறுகதையிலிருந்து, இந்தியாவின் முதல் சிறுகதை ஆசிரியர் தாகூர், தமிழின் முதல் ஐந்து நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமாக மிகமிக அதிகமாகப் படித்து, அதுபற்றி எழுதியவர், ’88-இல் எழுதத் தொடங்கிய உதயசங்கரையும், கௌதம சித்தார்த்தனையும் படிப்பார் - பாராட்டி எழுதுவார்.
கண் பார்வை குறைந்த 76 வயதிலும், எங்கே போனாலும் நல்ல காபி, டிபன் ருசித்துச் சாப்பிட ஏங்குவது போலவே புதிய – பழைய நூல்களை தேடிப் பிடித்துப் படிப்பார். (அச்சு எந்திரம் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், எதைப் படிக்க வேண்டும் என்று தேர்வு செய்யத் தெரியாதவன் படிக்க, பல ஆயுளுக்கும் போதுமான போலிப் புத்தகங்கள் பெருகிவிட்டதையும் நாம் மறந்துவிடக் கூடாது)
இறந்து போகும் முதல் நாள் (15.12.88) அன்று கூட ‘கல்வி பற்றிய அடுத்த கட்டுரையை அனுப்புகிறேன்’ என்று தினமணிக்கும், தேவகி குருநாத்துக்கும் எழுதக்கூடிய அளவுக்கு அயராத எழுத்து அவருடையது!
இதெல்லாம் அவரது பலம்.
இதைக் கொண்டுதான், க.நா.சு.வுக்கென்று ஒரு தனிஇடம் தமிழ் இலக்கிய உலகில் நிரந்தரமாக உள்ளது. அவரைப் பின்பற்றக் கூடிய பெரும் எழுத்தாளர் - வாசகர் கூட்டமும் உள்ளது.
அவரது சகபாடியாக எழுதத் தொடங்கி இன்னும் எழுதிவரும் சி.சு.செல்லப்பா முதல், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, வெங்கட்சாமிநாதன், அசோகமித்ரன், ந.முத்துசாமி, நகுலன் எனும் டி.கே.துரைஸ்வாமி, தருமு சிவராமு, விக்கிரமாதித்யன், ஞானக்கூத்தன், ப்ரகாஷ், தேவதேவன், ஜெயதேவன், தேவரசிகன், நா.விச்வநாதன் வரை இன்னும் பலரும் அவர் வழியில் செல்வதால்தான் இறந்து போனவரைப் பற்றி எழுத வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
மாறவேண்டிய – மாறிவரும் சமூகச் சூழலில், மக்களுக்குத் தேவையானதை, அவர்கள் ரசித்து ஏற்கும் விதத்தில் எழுதுவதே மகத்தான இலக்கியச் சேவை.
இதற்காக, ஒவ்வொருவரும் படிக்க – எழுத வேண்டியவற்றைப் பட்டியல் இட்டுக் கையில் வைத்தருப்பதுதான் க.நா.சு.விடம் நாம் கற்க வேண்டிய கருத்து.
மற்றபடி, வைத்துக் கொண்டே, எழுதி – படித்துக்கொண்டே இருப்பதல்ல, எழுதுவது – படிப்பது - இயங்குவது - இயக்குவதுதான் இலக்கியத்தையும், சமூகத்தையும் அதன் மூலம் தனி மனிதனையும் உயர்த்தும் என்பது நிச்சயம்.
--------------------------------------------------------------------------------------------------------

வாசகர் கடிதம்
(சுபமங்களா மாத இதழ் ஏப்ரல் 1994)

க.நா.சு. தெனாலிராமனா?
முத்துநிலவன் கட்டுரைக்கு ஆதரவும் எதிர்ப்பும்…

காலஞ்சென்ற எழுத்தாளர் க.நா.சு. எழுதிய எழுத்துக்களின் தரத்தையும் - தன்மையையும் பற்றியும், அவரது கருத்துக்களில் நிலவிய முரண்பாடுகளைப் பற்றியும் முத்துநிலவன் தக்க மேற்கோள்களோடு நன்றாகவே அலசி ஆராய்ந்திருக்கிறார். ‘மெத்தப் படித்த மேதாவியான’ அவரது சுயரூபத்தைத் திறம்படத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
காலம் சென்ற ஒரு எழுத்தாளரைப் பற்றி இவ்வளவு காட்டமாக இடம் பெறுவதா விமரிசனம், செத்த பாம்பை அடிப்பதுவா வீரம் என்று சிலர் முகம் சுளிக்கலாம். ஆனால் அதன் வாரிசுகளான பாம்புக் குட்டிகள் சில இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றனவே. அவற்றுக்கேனும் இந்த விமரிசனம் உறைக்கும் அல்லவா?
  -தொ.மு.சி. ரகுநாதன், திருநெல்வேலி.
05-03-1994
-------------------------------------------------------------------------------------------------
க.நா.சு. குறித்து முத்துநிலவன் ஒரு கழைக் கூத்தாட்டம் நிகழ்த்தியிருக்கின்றார். க.நா.சு.விடம் விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளபோது, இவருக்கோ அவரின் ‘படிப்பு’ மட்டுமே பிரச்னையாகிப் போனது விந்தையான நகைச்சுவை. க.நா.சு.வின் படிப்புப் பிராபல்யத்தை, நேற்றைக்கு சிறு பத்திரிகைகளை வாசிக்கத் துவங்கிய கிலுகிலுப்பை வாசகன் கூட நன்கு அறிவான். அவர் என்றுமே தன் படிப்பைக் கொண்டு அடுத்தவரை மிரட்டியதில்லை. அது அவருக்காக அவரே விரும்பி மேற்கொண்ட தவம்.
லா.ச.ரா.வுக்கும், மௌனிக்கும் எழுத்து எப்படித் தவமானதோ அதுபோல க.நா.சு.விற்கு அவரின் வாசிப்பு. அந்த நெடிய தவத்தின் விளைவுதான் அவர் தந்த ‘தரப்பட்டியல்கள்!” அந்தப் பட்டியல்களுக்குக் கூட, இலக்கியத் தரம் மட்டுமே அடிப்படையானதே ஒழிய சாதி இத்யாதிகள் மையமாகவில்லை. கல்கிக்கும் ராஜாஜிக்கும் க.நா.சு. பட்டியலில் இடமில்லை. சொ.வி.யும்;, சண்முக சுந்தரமும் இவற்றின் நிரந்தர உறுப்பினர்கள். இதுதான் க.நா.சு.
கூட்டத்தில் பேசிவிட்டு கொடுத்த பணத்திற்குப் புத்தகமாக வாங்கி நடந்துபோன, பிழைக்கத் தெரியாத மனிதரவர். அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மரைப் போல், அந்திமக் காலத்தில் அவர் புதுவையில் இருந்தபோது, கண்கள் இரண்டும் பழுதான நிலையிலும் பூதக்கண்ணாடி கொண்டு எப்பொழுதும், புத்தகங்களுடன் மல்லாடிக் கொண்டிருந்ததைப் பலமுறை நான் கண்டிருக்கிறேன்.
எதையும் நேராகப் பார்க்கமால் திரித்து, கொச்சையாகப் பார்த்தே பழக்கப்பட்டுவிட்டு நமக்கு – முத்து நிலவன் கூற்றுகளில் ஒன்றும் வியப்பில்லை.
க.நா.சு.வின் அணுகுமுறைகளிலும் சில குறைபாடுகள் உண்டு. அவற்றுள் ஒரு சிலவற்றை உணர்ந்து, இறுதியில் அவர் திருத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறார். பண்டித பேராசிரியர்களைக் காரணமில்லாமல் இறுதிவரை தாக்கி வந்த க.நா.சு., இறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்குமுன் பேராசிரியர் எழில் முதல்வனைச் சந்தித்தபோது ‘எனது விமரிசனத்தில் பேராசிரியர்களைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்கி வந்திருக்கின்றேன். ஆனால் கடைசியில் எனக்குச் சோறு போடுவது தமிழ்ப் பேராசிரியர்கள்தாம்’ என்றாராம். அதுதான் க.நா.சு.
க.நா.சு. ஒரு சிறந்த படைப்பாளியா? இதனைக் காலம்தான் நிர்ணயிக்கும் இப்போது நாம் ஒன்று வேண்டுமானால் கட்டலாம் க.நா.சு.வின் படைப்புக்களில் பெரும்பாலானவை (கவிதை, நாவல்) சோதனையின் பாற்பட்டவை. அவரின் ‘ஒருநாள்’ ஆகட்டும், ‘அசுரகணம்’ ‘பித்தப்பூ’ வாகட்டும் எல்லாமே இவற்றுள் அடங்கும்! இலக்கியத்தில் சோதனை முயற்சிகளுக்கென என்றுமே தனித்த ஒரு இடம் உண்டு. சோதனைகளின் தன்மைகளை உணராதவர்களுக்கு வேண்டுமானால் அது ‘அவஸ்தைகளுக்கு உள்ளாக்கல்’ ஆக இருக்கலாம். நவீன தமிழ் இலக்கியத்தின் பரப்பினைக் க.நா.சு. தம் சோதனை முயற்சிகளின் மூலம் விஸ்தரிக்க முயன்றிருக்கின்றார்.
  - வ. நாராயணநம்பி, திருச்சி.
--------------------------------------------------------------------------------------------
கட்டுரையாளர், க.நா.சு.வின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையும், அவ்வப்போது தனது பட்டியலில் பெயர்களை மாற்றிக் கொள்ளும் இயல்புகளையும் சற்றுக் காட்டமாகவே சாடியிருக்கிறார் என்றாலும் ஒரு சொல்: க.நா.சு. என்று ஒரு விமரிசகர் தோன்றுவதற்கு முன்பு நமது அருமைத் தமிழ் நாட்டில் இலக்கியம் என்றால் அகநானூறும் புறநானூறும்தான் என்கிற பண்டித மனப்பான்மையே கோலோச்சி வந்துள்ளது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. அவரது ஆங்கில இலக்கியப் படிப்பு தமிழுக்கு ஆதாயமாகவே அமைந்ததையும் நாம் நினைவுகொள்ள வேண்டும்.
-ராஜாமணி, ஏ.ஆர். புதுடில்லி.
----------------------------------------------------------------------------------------------

1.6.88 தினமணி இலக்கியக் கண்ணோட்டப் பகுதியில், உலக இலக்கியம் பற்றிய கட்டுரையில், மகாகவி பாரதி பற்றி ‘பாரதியின் தேசியக் கவிதைகளில் கார்டுச்சி என்கிற இத்தாலியக் கவியின் பாதிப்பு இருப்பது கண்கூடு’ என்று தன் அபிப்பிராயத்தை க.நா.க கூறுகிறார். அதற்கு வாசகர் இரா. வீரராகவன் ‘இத்தாலி என்றாலே முகம் சுளிக்கும் நிலை இருந்த கால கட்டத்தில் ஒரு பிரஞ்சு மொழிபெயர்ப்பையோ’ ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பையோ படித்து, பாரதி தேசியம் பாடியிருக்க முடியாது பாரதியின் தேசிய உணர்வு இயல்பானது, சுயம்புவானது’ என்று பதிலளித்திருக்கிறார்.
விமரிசனத்திற்கு வரும் எதிர் விமரிசனத்திற்கு பதிலளிக்கும் விமரிசன நேர்மையோ இலக்கிய ஆதாரமோ இவரிடம் இல்லை. ஏனெனில் க.நா.சு.வின் விமரிசனபாணியே, முத்துநிலவன் கூறுவது போல, பொத்தாம் பொதுவில் போடுவதும், கைலாசபதி கூறுவதுபோல அபிப்பிராயங்களை அள்ளி வீசுவதுமே’யாகும்.
-ஜனநேசன், பொன்னமராவதி.
------------------------------------------------------------------------------------------------

வெகுநாட்கள் காழ்ப்பை அடக்கி வைத்திருந்துவிட்டு தளம் கிடைத்தவுடன் கொட்டுகிறார், முத்துநிலவன். தெனாலிராமன் கதையை – திலகாட்ட மகிடபந்தனம் - பாதியில் நிறுத்திவிடுவது எதில் சேர்த்தி, தெனாலிராமன் பதிலையும் சேர்ந்திருக்க வேண்டும்: ‘ஞானத்தை ஞானத்தால் சந்திக்க வேண்டும் போலிகளை விவேகத்தால் சந்தித்தால் போதும்’. க.நா.சு. சிலரை ஒதுக்கியது, அவர்கள் மீதுகொண்ட வெறுப்பினால் அல்ல. அவர்களின் அறிவுத்திறத்தின் அறிவினைத் துல்லியயமாகக் கணக்கிட்டதினாலேதான். இலக்கிய விமரிசனத்தில் இந்தப் போக்கு அவசியமானதே.
சிறிதளவாவது இலக்கிய அறிவை தமிழனின் மண்டையைப் பிளந்தாவது ஏற்றிவிட வேண்டும் என்று அவர் பிரளயத்தனப்பட்டதே உண்மை. இன்றைய விமரிசனப் பரவல் க.நா.சு. போட்ட பிச்சையே. படிப்பு முடிந்து வாழ்க்கையில் ஸ்திரமாகிவிட்ட பிறகு, நாலு பேர் சேர்ந்து கூடிக் கொண்டு தங்கள் பள்ளிக்கூட வாத்தியாரை, அவரது மூக்கு வளைசல், முதுகு கூனல், கால் நொண்டி என்று விமரிசனம் செய்வதும், புலம்புவதும் தமிழர்களுக்கு சகஜமே.
   -நா.விசுவநாதன், அரசூர்.
---------------------------------------------------------------------------------------------
முத்தனைய முத்துநிலவன் திறனாய்வுக் கட்டுரையைப் படித்து, பிரமிப்பிலிருந்து விடுபட வெகுநேரம் பிடித்தது. என் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், சூட்டுக்கோல் கொண்டு விமரிசனம் எழுதுபவருமான நண்பர் க.நா.சு. பற்றி இவ்வளவு தெளிவாக, நானறிந்த வரையில் எவரும் எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். இன்றைய இலக்கிய பூச்சாண்டிகளுக்கும் நாளைய முத்துநிலவன்கள் உதயமாவார்களாக.
      -கோவி.மணிசேகரன், சென்னை-93
04-03-1994
------------------------------------------------------------------------------------------------
க.நா.சு. விமரிசனம் விவகாரத்தில் மேலும் சில குரல்கள்
(சுபமங்களா மாதஇதழ் மே’1994)
க.நா.சு. வாசகரா? நிச்சயம் மாபெரும் வாசகர். ஆனால் வாசிப்பை வைத்துப் பயமுறுத்தியவர் என்ற வாதம் செல்லுபடியாகாது. தேவைக்கு மேல் எங்கும் அவர் நூல்களையும், நூலாசிரியர் பட்டியலையும் தூக்கி வைத்தவர் அல்லர். அவருடைய கட்டுரைகளை அவருக்கிணையாகக் கூறப்படும் பிற விமரிசகர்களின் கட்டுரைகளுடன் வெறுமே ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும். அவருடைய புத்தக அறிவின் ஓரத்தைக் கூட தொடமுடியாதவர்கள் இன்று, கட்டுரையை விடவும் பெரிய நூற்பட்டியலை வெளியிடுகிறார்கள்.
க.நா.சு.வின் பட்டியலில் ஊசலாட்டம் உண்டா? உண்டு. அவருடைய முடிவுகளில் பிழைகள் உண்டா? ஆம், உண்டு. அவர் பலவீனங்களும், தனிநபர் சார்ந்த பிரிவுகளும் உடையவரா? ஆம், நிச்சயமாக.
ஆனால் இதையெல்லாம் அவருடைய எதிரிகளை விட பரமசீடர்களே வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சீடர்களை தமிழில் உருவாக்கியதே அவருடைய சிறப்பு.
க.நா.சு.வின் முடிவுகளுக்குப் பின்னால் எந்த அழகியல் சித்தாந்தமும் இல்லை. எனவே அவரை விமரிசகர் என்று கூறலாகாது என்கிறார் சுந்தரராமசாமி. அது முற்றிலும் உண்மை. “அவற்றில் பெரும்பகுதி சுயரசனையின் வெளிப்பாடுகள். சிறுபகுதி நடைமுறைத் தந்திரங்கள் சார்ந்தவை” என்கிறார். இதுவும் வெளிப்படை.
ஆயினும் க.நா.சு. தமிழில் இன்றும் ஒரு சக்தி. அதற்கான காரணங்கள்: தாட்சண்யமின்றிக் கூறப்படும் கருத்துக்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். படைப்பு என்பது முதன்மையாக ஓர் அழகியல் நிகழ்வு. அதை அப்படியே அணுக வேண்டும் என்று அவர் வலியுத்தினார்.
அரசியல் - சமூக கருத்துக்களின் அடிப்படையில் இலக்கியத்தை மதிப்பிட்ட, மதிப்பிடுகிற தமிழ்ச் சூழலில், மெய்யான வாசிப்பனுபவத்திலிருந்து கிளைத்த இத்தகைய ஆணித்தரமான குரலுக்கு இன்றும் மதிப்புள்ளது. க.நா.சு.வின் இக்குரலையே இன்று பெரும்பாலான படைப்புலகவாதிகள் முன் வைக்கிறார்கள். இயக்கம் சாராமல், நிறுவனம் சாராமல், அதிகாரத்துக்கு தலைவணங்காமல், பல்லிளிக்காமல், கைநீட்டாமல் படைப்பாளி வாழமுடியும் என வாழ்ந்து காட்டியவர்.
படைப்பாளியாக க.நா.சு. ஒரு சக்தி அல்ல. அதை மதிப்பிட்டுக் கூறியதாக முத்துநிலவன் குறிப்பிடும் விமரிசகர்கள், க.நா.சு.வின் அளவுகோல்களை ஏற்று உருவானவர்கள் என்பது நினைவிருக்கட்டும். தன் அளவுகோல்கள் தன்னை நிராகரிக்குமளவு வளர்ந்தன என்றால், அது க.நா.சு.விற்குப் பெருமையே!
இன்றைய இலக்கிய விமரிசன உலகில் அவருடைய இடம் ஈடிணையற்றதாக இருப்பதற்கு ஒரே காரணம். தன் வாசிப்பனுபவத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை எந்த சித்தாந்தத்துக்கும், எந்த அமைப்புக்கும், எந்த நிர்ப்பந்தத்துக்கும் அவர் தராததுதான்.
   -கே. விஸ்வநாதன், நாகர்கோவில்.
----------------------------------------------------------------------------------------------
எனது குறிப்பு :
க.நா.சு.பற்றிய இந்தக் கட்டுரையும், ஜெயகாந்தன் பற்றிய --நமது வலைப்பூவில் உள்ள-- கட்டுரையும் சேர்ந்து ‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கியச் சிற்பிகள்’ எனும் சிறு நூலாக 1999இல் (அட்டைப் படம் காண்க) வெளிவந்த போது எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம் : (இந்தக் கட்டுரைகள் இரண்டையும் அந்தப் புத்தக அட்டை இருக்கும் பக்கத்தில் சேர்க்க எனக்குத் தெரியவில்லை. எனது இந்தத் தொழில் நுட்பக் கணினி அறிவுக்குறைவை அறிந்தவர் வழி சொன்னால் தெரிந்து செய்வேன்)

அன்பு நண்பர் முத்துநிலவன்,
வணக்கம்.
கோவையில் த.மு.எ.ச. மாநாட்டின்போது உங்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது மகிழ்ச்சியான விஷயம். ‘இருபதாம் நூற்றாண்டு இலக்கியச் சிற்பிகள்’நூலை நீங்கள் அன்புடன் அளித்ததற்காக நன்றி.
‘அதிகம் பேசப்பட்டவர்கள்பற்றி அதிகம் பேசப்படாதவிஷயம் கோணம்தான் என் நோக்கம்’ என்று குறிப்;பிட்டிருப்பது வரவேற்புக்கும் பாராட்டிற்கும் உரியது.
ஜெயகாந்தன்-கதைகள் க.நா.சு விமர்சனம் எனும் இரண்டு கட்டுரைகளும் இக்கோணத்தில் நன்கு அமைந்துள்ளன.
ஜெயகாந்தன் கதைகள் பற்றி அவர் படைத்துவிட்ட கதைமாந்தரே உரையாடுவதாக எழுதியிருப்பது புதுமையானது, சுவாரசியமானது.
ஜெயகாந்தன் சாதாரண நிலையிலிருந்து தனது உள் உந்துதலால் ஆர்வத்தால் ஆசையால் பெரும் உழைப்பால் தனது ஆற்றலை வளர்த்துக்கொண்டு வேக வளர்ச்சி பெற்றார். அவரது கூரிய பார்வையும் சுய சிந்தனைத் திறனும் கற்பனை வளமும் அவருடைய படைப்புகளுக்கு நல்ல ஆதாரமாகத் இருந்தன. அவருடைய வக்கிரத் தனங்களும் குதர்க்க புத்தியும் தான் எனும் அகந்தையும் குறுகிய காலத்தில் பெற்ற வெற்றிகளும் அவரைக் கோணல் பாதையில் நடைபோடச் செய்துவிட்டன.
அவருடைய பிறழ்ச்சிகளையும் சரிவுகளையும் பின்னடைதலையும் தேக்கத்தையும் சரியானபடி எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
க.நா.சு.சிறுகதையில் வெற்றிபெறவில்லை. நாவல்களில் அவருடைய முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியன. மொழிபெயர்ப்பு சாதனைகளும் வரவேற்புக்கு உரியனவையே. விமர்சனத்தில் அவர் காட்டிய வழி கோளாறானது குறைபாடுகள் உடையது. ஆரோக்கியத் தன்மைகள் இல்லாதது. அவர் காலத்திலம் பின்னரும் விமர்சனத்தில் ஈடுபட்டவர்களை கோளாறான தடத்திலேயே போகத் தூண்டியது. க.நா.சு.பற்றிய உங்கள் விமர்சனம் நியாயமானது.
இவ்விரு கட்டுரைகளையும் அவை வெளிவந்தபோதே அந்தந்த சமயங்களில் படித்து ரசித்திருக்கிறேன். இப்ப படித்தபோதும் புதுமை குன்றாத தன்மையில் ரசமாகவே உள்ளன.
உங்கள்  விமர்சனஈடுபாடும் விமர்சன முயற்சிகளும் வளர்ந்து செழிக்கட்டும். வாழ்த்துகள்.
அன்பு,
வ.க.
19-5-1999
--------------------------------------------------------------------------------------------------------

3 கருத்துகள்:

  1. well done my dear friend! A great effort! I thought you were wasting your time in Patimandrams. A piece of advice. Please concentrate more on poems, your home ground. Good wishes,
    Aswath

    பதிலளிநீக்கு
  2. ஐயா,
    விமர்சனம் என்பது ஒரு கலை என்பதை தங்கள் எழுத்து நிரூபித்திருக்கிறது

    பதிலளிநீக்கு