மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் - நா.முத்துநிலவன்

‘முத்துநிலவன்’ “பிறந்த” கதையும் 
‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’ 
எழுந்த கதையும்...

                   திருவையாறு அரசர் கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்தபோது,-(19வயது) ‘தமிழ் இலக்கிய - இலக்கணக் கடல் அய்யா தி.வே.கோபாலர் அவர்கள் முதல்வராக இருந்தார்கள்.
                 அவர் ஏற்றியிருந்த பழந்தமிழ் வெறி வேறொரு முனையில் ‘தமிழியக்கம்’ என்னோடு நெருங்கக் காரணமானது. தற்போது கோவை அருகில் உள்ள சூலூர் பாவேந்தர் பேரவையின் செயலர் புலவர் செந்தலை ந.கவுதமன் அண்ணா அப்போது அதே கல்லூpயில் இறுதியாண்டு படித்துவந்தார் அவர்தான் எனது இயற்பெயரை  மாற்றி ‘முத்து நிலவன்’ எனப் பெயர் சூட்டினார். 
                  அப்போது தமிழியக்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர் பின்னாளில் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த பேரா. தமிழ்க்குடிமகன் அவர்கள்.  பொதுச்செயலராகத் தஞ்சைப் பேரா.இரா.இளவரசு அவர்களும், மாநில நிர்வாகக் குழுவில் திருச்சி ஈவெரா கல்லூரிப் பேராசிரியர் கு.திருமாறன் அவர்களும் தற்போது ‘முதன்மொழி’ இதழாசிரியராக இருக்கும் திரு அரணமுறுவல் அவர்களும் இருந்தார்கள்.
                   எனக்கு நெருக்கமான திருக்காட்டுப்பள்ளித் தோழர் ஞானசேகரன் ‘அறிவுறுவோன்’ ஆகவும், தோழர் பெ.மணிராஜ் ‘மணியரசன்’ஆகவும், திருவையாறு நீதிமன்றத்தில் பணியாற்றிய தோழர் நா.விஜயரங்கன் ‘மன்னைமறவன்’ ஆகவும், செந்தலை ந.கவுதமன் அவர்களுடன் அப்போது படித்து -தற்போது கரந்தைக் கல்லூரியில் பணியாற்றும் - பாலசுப்பிரமணியன் ‘இளமுருகன்’ ஆகவும் என் கூடப் படித்த சு.துரை ‘கோவை வாணன்’ ஆகவும், சீ.விஜயகுமார் வெற்றிச்செல்வனாகவும், செந்தலையாருக்கும் முன்னே அதே கல்லூரியல் படித்த ஜெயபால் -தற்போது சென்னையில் ‘பொன்னி பதிப்பகம்’ நடத்திவரும் - ‘வைகறை வாணன்’ ஆகவும்  என, பற்பலரும்; இவ்வாறே பெயர் மாற்றம் பெற்றனர்.
                    சூழலே தனித் தமிழ்மயமாக இருந்த நேரம் அது. ‘தனித்தமிழ், பகுத்தறிவு பொதுவுடமை’ எனும் முப்பெரும் கொள்கை முழக்கோடு தமிழ் மறவர்களாய்த் திரிந்த காலம்!

                  கண்டஇடத்திலும் வெண்பா ஈற்றடி கொடுத்து விரைந்து முடிப்பவர் பாராட்டப்படும் இனிய சூழல் ! (திருவையாறு காவிரியாற்றில் ஆடிப்பெருக்கின் பெருவெள்ளத்தில் நட்டாற்றில் குதித்து -பெண்கள் விடுதிப்பக்கமாக- முழுகி நீந்திக் கொண்டிருக்கும் போது,  வந்த ‘வசமாக மாட்டினேன் வந்து’ எனும் ஈற்றடியை நான். ‘நிசமாகச் சொல்கிறேன், நீச்சலறி யாமல் வசமாக மாட்டினேன் வந்து’ என வெகுவிரைவில் முடித்து காவிரியோடு தமிழில் நீச்சலடித்த பருவம்! 
  அதே ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப்படும்  ‘மறைமலையடிகள்’ அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கான ‘மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்ப் போட்டி அறிவிப்பும் வந்தது. 
                  அப்போது– எனது பத்தொன்பதாம் வயதில், இரண்டாமாண்டுக் கல்லூரி விடுமுறையில்- எழுதிய நூல்தான் ‘மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்’

இதில், இப்போதைய முத்துநிலவனைத் தேடாதீர்கள்!!!

இது எனது ‘பழைய பனையோலை’!

இனி ஒவ்வொரு பாடலாகப் பார்ப்போம்…

உங்கள் கருத்தை அறிந்து தொடர எண்ணம் …
அன்புடன், 
நா.முத்துநிலவன், 
30-03-2011

3 கருத்துகள்:

  1. தோழமைமிகு நிலவன் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் வலைப்பூவில் 30.03.2011 இடுகையில் “மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்-காப்புப்பருவம் பாடல் கண்டேன்.மரபுக் கவிதையாக மலர்ந்து மணம் வீசியது. முத்துநிலவன் பிறந்த கதையும் மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் எழுந்த கதையும், 19 வயதினிலே “பாசுகரன்” “நிலவனா”கிப் பக்குவமாய்ப் பாவியற்றிய் பாங்கினை உணர வைத்தது. அன்று உளங்கொண்ட தனித்தமிழ்,பகுத்தறிவு, பொதுவுடமைக் கொள்கைகள் இன்றளவும் வழுவாது வாழ்வியலில் கடைப்பிடித்துவரும் தங்களின் தடம்மாறாத் தன்மைக்கு மனதார்ந்த பாராட்டுகள். பழைய பனையோலைகள்தான் இன்று பலமிக்க உத்திரங்களாக உரம்பெற்று நிற்கின்றன. தொடருங்கள் தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளின் பிள்ளைத் தமிழின்; எஞ்சிய 9 பருவங்களை.. அது தமிழை இழந்து தடுமாறும் இளைய தலைமுறைகளுக்கு பயனளிப்பதாக இருக்கும். நன்றியுடன் பாவலர் பொன்.கருப்பையா புதுக்கோட்டை.

    பதிலளிநீக்கு
  2. "தனித்தமிழ்,பகுத்தறிவு, பொதுவுடமைக் கொள்கைகள் இன்றளவும் வழுவாது வாழ்வியலில் கடைப்பிடித்துவரும் தங்களின் தடம்மாறாத் தன்மைக்கு மனதார்ந்த பாராட்டுகள்"


    அன்பினிய தோழர் பாவலர் பொன்.க.அவர்களுக்கு, வணக்கம்.
    தங்களின் கடிதம் ஊக்கமூட்டுவதாக இருக்கிறது.
    ‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்று மேடையில் முழங்கும் பலர் பலநேரம் சொல்லாத “பலவற்றை”யும் செய்வதுடன், சொன்ன பலவற்றைச் செய்யாமலே செய்ததாகச் சொல்லி சமர்த்தாகப் பேர்வாங்கும் தமிழகத்தில், என்னுடன் 5ஆண்டுகள் முன்பின்னாகச் சேர்ந்து–கல்லூரிக்காலத்தில்-‘வாழ்ந்த’ பலரும் இட்ட வித்து என்வாழ்நாள் முழுவதும் நன்றாகவே வேரோடியிருப்பதுதான் உங்கள் வாழ்த்துகளைப் படித்தபோது என் நெஞ்சில் ஓடியது!
    எங்கள் கல்லூரிக்காலத்தில், பாவாணர், கி.ஆ.பெ.வி., குடந்தை சுந்தரேசனார் (‘பண்ணாய்வான் பசு’), தமிழண்ணல், இளவரசு,ஆகியோரை அழைத்துப் பேசவைத்தோம் இன்றைய கல்லூரிகளில் திரைக்கலைஞர்கள்; அல்லவா ஆடிப்பாடுகிறார்கள்…

    "தொடருங்கள் தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளின் பிள்ளைத் தமிழின்; எஞ்சிய 9 பருவங்களை.. அது தமிழை இழந்து தடுமாறும் இளைய தலைமுறைகளுக்கு பயனளிப்பதாக இருக்கும்"

    தங்கள் வாழ்த்துக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. நான் இப்போது அன்றிருந்தது போலும் ‘முரட்டு’மரபுக்காரனல்லன். எனினும் இன்று வரும் மரபுக்கவிதைகளுக் கிடையில் எனது ‘பனையோலை’ ஒன்றும் ‘அறதப்’பழசாகிவிடவில்லை என்பதாலேயே இந்த முயற்சி.
    ‘வருகைப் பருவம்’ மற்றும் ‘அம்புலிப் பருவ’ பாடல்களின் சந்தங்களை இன்றும் சுவைக்க முடியும் என்று நம்பியே இதை வலையேற்றி வருகிறேன்… பார்க்கலாம்…
    இணைந்து முயல்வோம்… தங்கள் பாடல்களையும், உரைகளையும் வலையேற்றும் முயற்சி என்ன ஆனது பாவலரே! விரைந்து செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  3. முத்துநிலவரின் பெயரில் இவ்வளவு வரலாறு பொதிந்துள்ளது அறிந்து மகிழ்ச்சி. இன்று இதுபோன்ற சூழல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகத்திலும் காண இயலாது.
    தங்கள் தனித்தமிழ் ஈடுபாடு போற்றுகின்றேன்.
    மறைமலையடிகள் பிள்ளைத்ததமிழை இணையத்தில் ஏற்றுங்கள். அது உலகத்தமிழரின் சொத்தாக அமையட்டும்.

    தம்பி
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

    பதிலளிநீக்கு