நா.முத்து நிலவன் பேச்சு!

இளைஞர்களுக்கு உரிமையும் உண்டு! கடமையும் உண்டு!
கல்லூரி விழாவில் கவிஞர் நா.முத்து நிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-மார்ச் 17
 இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்களுக்கு, உரிமையும் உண்டு கடமையும் உண்டு இந்த இரண்டையும் உணர்ந்து தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோரே தன்முன்னேற்றத்தில் மட்டுமல்ல இந்தியமுன்னேற்றத்திலும் வெற்றிபெறப் போகிறார்கள் என்று கவிஞர் முத்து நிலவன் கூறினார்.
 இங்குள்ள மாமன்னர் கல்லூரியின் ‘குடிமக்கள் நுகர்வோர்மன்ற’ துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்; சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் பிரபல பேச்சாளருமான கவிஞர் நா.முத்துநிலவன் மேற்கண்டவாறு பேசினார்.
வுpழாவிற்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் பெ.சேதுராமன் தலைமையேற்றார். மாவட்ட வழங்கல் அலுவலரும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான அ.ராஜசேகரன் ‘குடிமக்கள் நுகர்வோர்மன்ற’ கல்லூரிக் கிளையின் பெயர்ப்பலகையைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். கவிதை, கட்டுரை பேச்சு, பாடல் மற்றும் கோலப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்க்குப் பரிசளித்து ‘நல்லாசிரியர்’ மு.மெய்யர் வாழ்த்துரை யாற்றினார். வழக்குரைஞர் மு.ரெங்கசாமி, பேராசிரியர்கள் சா.விஸ்வநாதன், ச.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இவ்விழாவில் பேசிய கவிஞர் முத்து நிலவன் மேலும் கூறியதாவது:
‘இன்றைய இளைஞர்- மாணவர்களுக்குப் பொறுப்பே கிடையாது’ என்பது போலப் பலரும்; நினைக்கிறார்கள்.. ஒரு சிலர் அப்படி இருந்தாலும் பெரும்பாலான மாணவர் அப்படிஇல்லை என்பதே உண்மை! சமுதாயம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் இளைய-மாணவர் சமுதாயமும் இருக்கும்
இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், உலகில் நடந்த சமுதாய-அரசியல் புரட்சிகளிலும் அந்தந்த நாட்டின் அத்தனை பேரும் பங்கேற்றதில்லை. மூன்று முதல் ஐந்து விழுக்காடு மக்களே அதுபோன்ற போராட்டங்களில் நேரடியாக பங்கேற்றதாகத்தான் வரலாறு சொல்கிறது. மற்றவர்கள் அந்த முன்னணி வீரர்களை நம்பி பின்னால் சென்றார்கள். நீங்கள் அந்த பின்னணி வீரர்களாக இருப்பதும், நேரடிக் களம் காணும் வெற்றி வீரர்களாக இருப்பதும் உங்கள் உரிமைகளையும் கடமைகளையும் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.
நுகர்வோர் உரிமை இரண்டு தன்மைகளைக் கொண்டது. ஒன்று தன்னலம் சார்ந்தது, இரண்டாவது நம் தேசநலம் சார்ந்தது. ஒரு பொருளை வாங்கும்போது நட்;டம் அடைவதும், பொருள் இழப்பு நேர்வதும் தன்னலம் சார்ந்தது என்றாலும் அந்தப் பொருளின் தன்மை சார்ந்து தேச நலமும் அதற்குள் அடங்கியிருக்கும். இந்த இரண்டையும் நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களிடம் ‘நாம் கருப்பாக இருக்கிறோம் அதனால் அழகாக இல்லை’ என்னும் தாழ்வு மனப்பான்மையை விளம்பரங்கள் விதைக்கின்றன. அழகுசாதனப் பொருளால் கருப்பான நிறம் சிவப்பாக முடியுமா என்பதை சிந்திப்பதோடு, உழைப்பின் நிறமே கருப்புத்தான் என்பதையும் சேர்த்து சிந்தித்துப் பார்க்கவேண்டும். பன்னாட்டு வியாபாரிகள் நம் மனநிலையை மாற்றுவதற்காகச் செலவழிக்கும் தந்திரமே இதுபோன்ற விளம்பரங்கள். இதுபோலவே ஐம்பது காசு மிட்டாய் விளம்பரம் ஒன்றும், ஒரு பற்பசை விளம்பரமும் பெண்களைக் கேவலப்படுத்துவதை புரிந்துகொண்டு, அதுபோலும் பொருள்களை பயனற்ற பொருள் என்பதால் மட்டுமல்ல மட்டமான விளம்பரத்தின் காரணமாகவும் ஒதுக்கித் தள்ளவேண்டும்.
அதேபோல, இளநீரையும், பதநீரையும், கம்பங்கூழையும், நீராகாரத்தையுமே பருகிப் பல்லாண்டுகள் வாழ்ந்த நம் முன்னோர்களிலிருந்து விலகி, ‘கோலா’ குடிப்பதை ஒரு நாகரிகம் போல மாற்றிய வியாபாரத் தந்திரத்தையும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த விளம்பரங்களில் நடிக்கும் ‘பிரபலங்கள்’ பல லட்சம் வாங்கிக் கொண்டு, நம்மைக் குடிக்கச் சொல்லி ஆடிப்பாடிச் சிரிக்கிறார்கள்.
கோலிசோடா, குண்டுசோடாக்களை கிட்டத்தட்ட விழுங்கி ஏப்பமிட்டு விட்;ட ‘கோலா’ பானங்களைக் குடிக்கிறபோது நமது பண்பாடும் கேவலப்படுத்தப் படுகின்றது. புhரம்பரிய உணவுப்பழக்க மாற்றத்தால் நம் உடல் நலக்கேடும் உடன் நிகழ்வாகிறது. இதுபோன்ற பன்னாட்டுக் கொள்ளை வியாபார உத்திக்குள்; நம் நாட்டு சிறுதொழில் நசிவு போன்ற பொருளாதாரச் சிக்கலும் இருக்கிறது.
நாகரிகம் எனும் பெயரில் இந்த வியாபார விளம்பரங்களுக்கு நாம் விலைபோனால், நாளை நம் நாடே பொருளாதார அடிமைத் தனத்தில் வீழ்ந்து விடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல உணவு, நல்லநீர், நல்ல சுற்றுச்சூழல் போல நல்ல பண்பாடும், நல்ல அரசியலும் கூட நம் ஒவ்வொருவரின் உரிமை. அதற்காகத்தான் நம் தலைவர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்து சுதந்திரப் போரில் குதித்தார்கள், தம் இன்னுயிர்களைப் பலியிட்டார்கள்.
தியாகிகள் விட்டுச் சென்ற நம் தேசத்தாயைக் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் -குறிப்பாக இளைஞர்களின்- உரிமை. அதற்கான பணியில் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதும், மக்களைத் தயார்ப் படுத்துவதும் நம் கடமை. இதுதான் நுகர்வோர் மன்றத்தின் நுட்பமான பணியாக இருக்க வேண்டும்’
இவ்வாறு பேசிய முத்துநிலவன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்ததோடு, அனைத்துத் துறை மாணவ உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்த மன்ற ஒருங்கிணைப்பாளர் பேரா.சு.மாதவன் செயல்திட்டங்களையும் வெளியிட்டுப் பேசினார்.
சேகர்,மு.பழனியப்பன், கா.காளிதாஸ், லூகாஸ் உள்ளிட்ட பேராசிரியர்களுடன் அனைத்துத் துறைகளையும் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும் விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவர்தலைவர் மா.சுந்தரராஜ் வரவேற்க, முனைவர் பட்ட ஆய்வுமாணவரும் மன்றச் செயலாளருமாகிய கி.கோவிந்தன் நன்றி கூற, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவெய்தியது.
-----------------------------------------------------------------------
நன்றி: ‘தினமணி’ – நாளிதழ் 17-03-2011-வியாழன் (திருச்சி பதிப்பு) பக்கம்-2.

8 கருத்துகள்:

  1. நுகரும் தன்மை ஆதிகாலம் தொட்டு இருப்பதுதான். வருமானம் அதிகரித்து வாங்கும் திறன் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் நம்புகிறது (ஓரளவிற்கு உண்மைதான். ஆனால் அதன் எதிர்மறையான - வருமானம் இல்லாத கூட்டமும் சத்தமில்லாமல் அதிகரித்து வருவது சமூகத்திற்கு நல்லதல்ல). ஆனால் படிப்பறிவு வளர்ந்துள்ளது என்பதை பொதுவாக ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் அந்தப் படிப்பின் பலன் அவர்கள் சிந்தனையில் தெரியவில்லை என்பதே நீங்கள் கூறிய இந்த அவலங்களுக்கு எல்லாம் காரணம். கோலா குடிப்பது 100 சதம் தப்பு என்று கொண்டால் - அதில் 20 சதம் அனுமதித்த அரசாங்கம் செய்திருக்கிறது. 10 சதம் நடிகர்கள் செய்திருக்கிறார்கள். மீதிமிருக்கும் 70 சதம் காசு கொடுத்து குடிக்கும் நுகர்வோர் தவறே. நீங்க சொல்லுங்க. இந்த 70 சதத்தில் எத்தனை பேர் படிப்பறிவு அற்றவர்கள்? இப்ப சந்தேகம்.. அதில் உள்ள அதீகப்படியான நுகரும் திறனைப் பார்த்தால் படிப்புக்கும் அறிவு வளர்ச்சிக்கும் தொடர்பு இல்லையோ!!! அடிப்படையிலேயே சந்தேகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  2. பாதிப்படைந்திருக்கிறது என்பதை பதிக்க வேண்டிய இடத்தில் பதித்துள்ள பாங்கு பாராட்டிற்குரியது. கூழ்குடித்து தங்கள் உடல்நலத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பண்பாட்டையும் காக்கக் குரல் கொடுத்த தலைமுறைகள் மாறி, கோலா குடித்து பொருளாதாரத்தையும் பாரம்பரியப் பண்பாட்டையும் இழக்கக் காரணமாயுள்ள ஊடக விளம்பரத் தாக்கங்களின் மீதான தாக்குதல்கள் இளைய தலைமுறையினரிடம் பீரிட்டெழ இத்தகு களங்களில் தங்களைப் போன்றவர்களின் உரசல்கள் பலனை வெல்லும்.. தொடரட்டும் இத்தகு உரசல்கள்.. வாழ்த்துகளுடன் பாவலர் பொன்.க புதுக்கோட்டை.

    பதிலளிநீக்கு
  3. அய்யா பாண்டியன் அவர்களே வணக்கம்
    என் இப்படி முகம் காட்டாமல் மின் முகவரியும் தராமல் எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை.
    "படிப்புக்கும் அறிவு வளர்ச்சிக்கும் தொடர்பு இல்லையோ!!! அடிப்படையிலேயே சந்தேகம் வருகிறது" என்று சொல்கிறீர்கள் இதில் என்ன சந்தேகம் பாண்டியன்?
    படிப்பு 'தன்னை' வளர்த்துக்கொள்ளத்தான் என்றாகி பல ஆண்டுகள் ஆயிற்றே!
    தெரியாதா உங்களுக்கு? என்ன போங்க இப்படி அப்பாவியா இருக்கீங்களே?
    நாங்க பட்டிமன்றத்தில் சொல்வோம்: 'நாங்க படிக்காதவுங்கோ காடை சுடுவோம், கவுதாரி சுடுவோம் நீங்க படிச்சவுங்கோ காந்தி சுடுவீங்கோ இந்திரா காந்தி சுடுவீங்கோ ராஜீவ் காந்தி சுடுவீங்கோ' வேறென்ன சொல்ல?
    இதைத்தானே பாரதி சொன்னான் :
    "பேடிக்கல்வி பயின்று உழல் பித்தர்கள்" என்று?
    இதைத்தானே அதே பாரதி,
    ' நெல்லையூர் சென்று
    அவ் ஊணர் கலைத் திறன்
    நேருமாறு எனை
    எந்தை போக்கினன்,
    செலவு தந்தைக்கு
    ஓராயிரம் சென்றது,
    தீது எனக்குப்
    பல்லாயிரம் சேர்ந்தது
    நலம் ஓர் எள்துணையும்
    கண்டிலேன் , இதை
    நாற்பதினாயிரம்
    கோவிலில்
    சொல்லுவேன்'
    என்றான்?
    ஆங்கில வழிக் கல்வியால் தமிழ்வழிக் கல்விக்கும் நேர்ந்த
    பக்க விளைவு இது என்றே நான் நினைக்கிறேன்.
    நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பாண்டியன்?
    உங்கள் கருத்தை முகம் காட்டி - முகவரி தந்து- எழுதுங்கள்
    அன்புடன்,
    நா.முத்து நிலவன்
    புதுக்கோட்டை - 4
    ௧௯ - ௩ - ௨௦௧௧ (அட இது நல்லா இருக்கில்ல? தமிழ் எண்கள்?
    கூகுள் நிறுவனத்திற்கு உள்ள அக்கறை கூட நம்மவர்க்கு இல்லை பாருங்க!)
    19 - 03 - 2011 இரவு 10-45
    (பி. கு.: எனது கணினித் தொழில் நுட்ப அறிவுக் குறைவு காரணமாக உங்கள் அஞ்சலை நான் பார்க்கவும், நண்பர்கள் பார்க்கக் காட்டவும் தாமதமானதற்கு மன்னியுங்கள் இனி இவ்வாறு நேராது)

    பதிலளிநீக்கு
  4. பாவலர் பொன்.க. அவர்களுக்கு வணக்கம்.
    வலை 'தொழில் நுட்பம்' கற்று வருகிறேன் (சுய கல்வி தான்)
    எனவே என முந்திய தவறுகளை நானே திருத்தி இருக்கிறேன்
    இனி உங்கள் மின்னஞ்சல் அவ்வப்போதே வலை ஏறும்
    கணித்தமிழ் கற்போம், முன்னேறுவோம்...

    பதிலளிநீக்கு
  5. //மூன்று முதல் ஐந்து விழுக்காடு மக்களே அதுபோன்ற போராட்டங்களில் நேரடியாக பங்கேற்றதாகத்தான் வரலாறு சொல்கிறது//

    உண்மைதான் ஐயா, இப்போது நாங்கள் முன்னெடுத்துச் செல்லும் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கத்திலும் மிகச்சிலரே இணைந்துள்ளனர், ஆனால் நிறையபேர் தொலைபேசி வழி ஆதரவு தருகின்றனர்..

    பதிலளிநீக்கு
  6. மிகக்குறைந்த சதவீதத்தின்ரே சமூக அக்கறையின்பால் ஈர்க்கப்பட்டு தொண்டாற்றுகின்றனர். நம்மில் உள்ள பிரபலமானவர்கள் பெரும்பாலும் சினி நட்சத்திரங்கள்,விளையாட்டுவீரரகள் எல்லாம் பன்னாட்டு நிறுவனக்களுக்கு விலைபோய் விட்டனர், இல்லையென்றால் IPLலில் வீரர்கள் அடிமைகள் போல் ஏலம் போவார்களா? எழுத்தாளர் பிரபஞ்சன் நாவலில் புதுச்சேரி மேட்டுக்குடி தமிழர்கள் எப்படி பிரெஞ்சுகாரர்களுக்கு வியாபாரம் பண்ண உதவி செய்தார்கள் என்று சொல்லும் போது ‘சொந்த மண்ணின் செல்வங்களை அந்நியர் கொள்ளை கொண்டு போகும் ஒரு சமூக வீழ்ச்சியை, அமைச்சுப்பணியிலிருந்த தமிழர் யாரும் உணர்ந்தார்களா எனில் இல்லை’ என்றார்.அதே நிலைமை இன்றும்.

    நல்ல கட்டுரை.

    பதிலளிநீக்கு
  7. அன்பினிய திரு. ஹரிஹரன், அவர்களுக்கு வணக்கம்.
    தங்கள் கருத்தை வெளியிட்டமைக்கு நன்றி.
    இதைத்தானே பாரதி பாடினான் :
    'பொழுதெலாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு
    போகவோ - நாங்கள் - சாகவோ?' அப்போது அது அரசியல் போராட்டத்துடன் சேர்ந்திருந்த பொருளியல் பார்வையாக இருந்தது. இப்போது 'சுதந்திரமாக' கொள்ளையடிக்கும் அரசியலாக இருக்கிறது!
    என்ன செய்யலாம்?
    உங்கள் மின் முகவரி தரவில்லையே ஏன்?
    இன்னும் எதிர்பார்ப்புடன்,
    நா.முத்து நிலவன்

    பதிலளிநீக்கு
  8. ஐயா.. வணக்கம். நான் ரவி ஆசிரியர். அறந்தாங்கி. 17 ஆண்டுகள் தனியார் பள்ளியில் வேலை பார்த்து விட்டு
    (மன்னிக்கவும்..சேவை அல்லது பணி என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் தனியாரில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.அதனால் தான் வேலை பார்த்தேன் என்று எழுதினேன்.)

    2020 ஆம் ஆண்டு அடியேன் துவங்கிய தியா5 டியூசன் சென்டர் DTC ன் நிர்வாக ஆசிரியராக முழு நேர சேவையாக செய்து வருகிறோம்.
    நான் ஒரு மாற்றுத்திறனாளி. சலவைத் தொழில் கிராமத்தில் செய்து என்னுடைய பெற்றோர்கள் MA. BEd
    படிக்க வைத்து வழிகாட்டினார்.

    தற்போது 120 மாணவ மாணவிகள் படிக்கும், 13 ஆசிரியர்கள் பணியாற்றும் தியா5 டியூசன் சென்டருக்கு நிர்வாக ஆசிரியர்.

    ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுத்தேர்வுகள் எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் சொற்பொழிவு நிகழ்வு நடத்துவது வழக்கம்.. சென்ற ஆண்டு எங்கள் அறந்தாங்கி மண்ணின் மைந்தர் GV அவர்கள் இங்கு வந்து பேசினார்கள்.

    இந்த ஆண்டு நீங்கள் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
    உங்களை தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

    தயவுசெய்து 975327143 8248483680 என்ற
    அலைபேசி எண்களுக்கு அழைக்கவும்.

    தங்களின் பட்டிமன்ற பேச்சு ராம்ஜி கேசட் காலத்தில் இருந்து தொடங்கி தற்போது தொலைக்காட்சி சிறப்பு பட்டிமன்றங்கள் வரை பார்த்து கேட்டு வருகிறேன்.


    தயவுசெய்து உங்கள் வருகைக்கு எதிர்பார்த்து காத்திருக்கும்..
    ஆ. ரவி ஆசிரியர்.
    அறந்தாங்கி.

    பதிலளிநீக்கு