ஒளிதோன்ற ஒளியிலிருந்து
உயிர்தோன்ற (1) உயிருடம்பில்
உணர்வும் தோன்ற
உணர்வொன்றி உயர்-இழிவும்
ஒன்றின்றி உளம்ஒன்றி
உரையா உண்மைக்
களிதோன்ற களிமாறிக்
கவல்தோன்றக் கணக்கின்றிக்
கறங்கி நின்ற
கருத்தில்லா முன்னோரின்
கருத்தறிய முதன்முதலில்
கடுநா நின்றும்
விளிதோன்ற விளியுணர்த்தும்
மொழிதோன்ற தமிழின்வழி (2)
விளக்கம் தோன்ற
விளங்கியபின் மாந்தர்உளம்
விலங்கிலிருந்து உயர்ந்தோங்கி
வேறாய்த் தோன்றும்
அளிதோன்ற அனைத்துயிரின்
அகத்திருளை அகற்றுதமிழ்
அறிவை வேண்டி
அழகுதமிழ்ப் பழகுமறை
மலையடிகள் தமைக்காக்க
அழைப்பாம் அன்றே!
------------------------------------------------------------------------
(1)- இக்கருத்து அடிகளின் கருத்தே :
‘ஒளியுருவில் ஒலியுருவுதோற்றுவித்த தொன்னாளில்’:
‘அம்பிகாபதி அமராவதி’ நாடகக்கடவுள் வாழ்த்து -வரி:6
(2)- ‘தமிழ் இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று கட்டுரைத்துச் சொல்ல இயலாது’ என்று அடிகள்தம் ‘உரைமணிக் கோவை’ (பக்கம் 64) கூறியதால்,
தமிழின் தோற்றக் காலத்தைக் குறிப்பிடக் கூடவில்லை
------------------------------------------------------------------------
முத்துநிலவர்
பதிலளிநீக்குமேடைக்குப் போகாமல் இருந்திருந்தால் காப்பியப்புலவர் ஒருவர் இருபதாம் நூற்றாண்டில் கிடைத்திருப்பார்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
வணக்கம் அய்யா முனைவர் மு.இ.,
பதிலளிநீக்குஇன்றைய நிலையில் ‘காவியப் படுதாக்களை விடவும் கைக்குட்டைகளே அவசியம்’ எனும் வைரமுத்துவுடன் உடன்பாடு கொண்டவன் நான்… அவரது பழைய பனையோலை போலத்தான் நானும் இந்த பிள்ளைத் தமிழை வெளியிடுகிறேன்.. என்ன செய்ய.. ‘இது கற்பூர வாசனை தெரிந்த கழுதைதான்’ என்றும் வெளிப்பட வேண்டியுள்ளதே!