நூல் திறனாய்வு :

அன்பினிய நண்பர் ஆசிப் மீரான் அவர்களுக்கு,
''அமீரகத் தமிழிணைய நண்பர்கள்ஆண்டுவிழா மலர்-2002''

(I)கட்டுரைகள் பற்றிய என் கருத்துக்கள்:
--------------------------------------------------
க.எண்.தலைப்பு/எழுதியவர்-நாடு/பக்கம் (எனும் வரிசையில்...)
--------------------------------------------------
1.கிழக்குக் கடற்கரையோரம்/முகம்மது பசீர்-அமீரகம்/8-10.
2.தமிழர் சமயம்/திரு நாவுக்கரசு-ஷார்ஜா/11-12.
3.வெற்றியின் ரகசியம்/முகம்மது முஸ்தபா-துபாய்/17.
4.சார்ஜா/சத்திய காந்தன்-அமீரகம்/23-26.
5.நெருங்கோப்பு.../மா.பரமேஸ்வரன்-அமீரகம்/28-32.
6.தொடப்பத்துக்கு../இசாக்-அமீரகம்/36-37.
7.சங்க இலக்கியத்தில் அறிவியல்/கிருஷ்ணன்-சிங்கை/52-57.
8.ரசவாதம்/டாக்டர்ஜேபி-மலேசியா/59-61.
9.இஞ்சி/சி.குமாரபாரதி-aaஸ்திரேலியா/63-65.
10.தமிழ்அமெரிக்கர் வாழ்க்கை/இராம்.ரவீந்திரன்-அமெரிக்கா/75-77.
11.சமயம்/இராம.கிருட்டிணன்-சென்னை/79-87.
12.நண்பனும் திருக்குறளும்/ரெ.கார்த்திகேசு-மலேசியா/89-92.
13.சிலை வீழ்ந்தது/மணி.மு.மணிவண்ணன்-அமெரிக்கா/94-96.
14.திரும்பிப்பார்க்கிறேன்/செல்லையா.திரு-கனடா/105-106.
15.தேன்/'லாவண்யா'-சென்னை/111-115.
16.E.Com.மின்வணிகம்/உமர்-சென்னை/124,125.
17.கவிதை என்பது/வெங்கட்-கனடா/137,138.
18.தமிழ்க்குமுகாயம்/நாக.இளங்கொவன்-சென்னை/139,140.
          --------    --------    --------
இவற்றோடு--
அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் தலைவர்   திரு முகம்மது பஷீர் அவர்கள், தனது முன்னுரையில்(பக்கம்-3)"என்ன செய்திருக்கிறோம் என்பதைப் பட்டியலிடுவதைவிடவும் தமிழுக்காக இன்னும் என்னென்ன செய்யலாமென்ற எண்ணத்தோடு எமது பயணம் தொடர்கிறது"என்பது,அடக்கமான-தெளிவான வார்த்தைகள்.
செயலாளர் திரு ஆசிப் மீரான் அவர்கள்,(பக்கம்-4,5இல்)
"ஒரு அமைப்பு,எந்த நோக்கங்களுக்காக தனது பயணத்தைத் துவங்கியதோ அந்த நோக்கத்திலிருந்து விலகிவிடாமல் பயணம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதேஅளவு தனது கொள்கைகளை நன்னோக்கோடு சீர்திருத்திக்கொள்வதும் மிக அவசியம்." என்பது, அவரது-மற்றும் அமீரகத் தமிழிணைய நண்பர்களது-
"புதியன விரும்பு"என்ற பாரதிவழியை  நினைவுபடுத்துகின்றது.
இனி, கட்டுரைகளைப் பற்றி...
1.கிழக்குக் கடற்கரையோரம்/முகம்மது பசீர்-அமீரகம்/பக்:8-10:
இவர் தினமும் பயணம் செல்லும் 'கொர்பக்கான் முதல் தாத்னா வரை'யான அழகான காட்சிகளைக் கட்டுரையாக்கி, அமீரகம் வருவோர் காணவேண்டிய ஊர்களைப்பற்றி எழுதி படிப்பவர்க்கு அமீரகத்தின் மீதான காதலை மிகுவிக்கிறார்.
அருகிலுள்ள ஒட்டகம்,கடற்கரை(?),தென்னைமரப் படங்கள் கட்டுரையோடு தொடர்புடைய ஊர்கள்தானா என்று தெரியவில்லையே.
2.தமிழர் சமயம்/திரு நாவுக்கரசு-ஷார்ஜா/பக்:11-12:
"தெய்வங்களுக்குத் தோற்றமும், கடவுளுக்கு அது கூறப்படாமையும், நோக்கினால்,பிறவா வாழ்க்கைப் பெருமையுடையது கடவுள் என்பதும்,பிறந்து வேறு நிலைகொண்டு இயங்குவன தெய்வங்கள் என்பதும் பழந்தமிழரின் சமயக்கொள்கைகளாகின்றன"-என்கிறார்.
இதற்கு தொல்காப்பியம்,சங்க இலக்கியம் போன்ற பழந்தமிழிலக்கியங்களில் இருந்து சான்றுகளைத் தருகிறார்.சரிதான்.
ஆனால்,'சங்க காலம்' பெருந்தெய்வ வழிபாட்டுக் காலமல்ல.
அப்போது சிறு தெய்வங்களே இருந்தன.பெருந்தெய்வங்களை ஒட்டிய சமயங்கள்" நிறுவனம்"ஆனபிறகே, இன்றைய (சாதிகளைக் காப்பாற்றும்) மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.இன்றைய சிறுதெய்வங்கள்-குலதெய்வங்கள் எல்லாமும் மதங்களுடன் தொடர்புடைய பெருந்தெய்வங்களின் 'கிளை'யாக்கப்பட்டது பெருஞ்சோகம்!(இது பற்றி மேல் விவரம் வேண்டுவோர் அவசியம் படிக்கவேண்டிய நூல்:அறிஞர் ராகுல சாங்கிருத்தியாயன்(ராகுல்ஜி) எழுதிய-"வால்காவிலிருந்து கங்கை வரை")
'சங்க கால'த்தில்=
"கல்லே பரவின் அல்லது,
 நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே"-(புறம்:335)
அந்தக் கல்லும் எதுவோ எனில்,
"பலர் என்ஐ,முன் நின்று கல் நின்றவர்" கல்!(இது குறள்=771)
ஆனால் இக்கட்டுரையாசிரியரின் கடைசி ப்பத்திப்பொருள் மிகச்சரியானது எனும் அதேவேளையில்,சொல்லில் இன்னும் நயமிருந்திருக்கலாம் என்பதும் என் கருத்து.
        -----------     ----   -------------
3.வெற்றியின் ரகசியம்/முகம்மது முஸ்தபா-துபாய்/பக்:17.
நம்பிக்கைஊட்டும் கட்டுரை-குறிப்பாக கிராமத்து இளைஞர்களுக்கு.
        ----------     ----    -----------
4.சார்ஜா/சத்திய காந்தன்-அமீரகம்/23-26
நினைவிலுள்ள மனிதற்கெல்லாம் கனவிலுள்ள  நகரமான 'ஷார்ஜா'வைப் பற்றிய அருமையான,வரலாற்று-பொருளாதார-விளையாட்டு வளர்ச்சியுடன் இன்றைய நிலைகூறும் விபரமான கட்டுரை.
5.நெருங்கோப்பு.../மா.பரமேஸ்வரன்-அமீரகம்/28-32
கணினிப் பயனாளர்க்கு Win-zip(நெருங்கோப்பு)பற்றிய அரிய தகவல்களை-படங்களுடன் நல்லதமிழில் விளக்கும்  நல்ல கட்டுரை.
6.தொடப்பத்துக்கு பட்டுக்குஞ்சம்../இசாக்-அமீரகம்/36-37
இன்றைய தொலைக்காட்சி 'மெகாத்தொடர்', நம் கலாச்சாரத்தை மட்டுமல்ல,மொழியை, நேரத்தை,பணத்தை, பெண்களின் மன நலத்தை,எல்லாவற்றுக்கும் மேலாக நம் குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் பாழடிக்கிறது என்று கிண்டலாக கனவாக 'கதை'பாணியில் கட்டுரைத்துள்ளார்.
7.சங்க இலக்கியத்தில் அறிவியல் கோட்பாடுகள்/-கிருஷ்ணன்-
சிங்கப்பூர்/பக்கம்:52-57.
மலரில் நான் திரும்பவும் படிக்கநேர்ந்த-சிக்கலான-கட்டுரை இது.
"சங்க இலக்கியத்தில்" என்று தலைப்பு இருந்தாலும்,அதைவிடவும் 'இந்து மதத்தில்,பழைய இந்துப்புராண நூல்களில்' அறிவியல் கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக நிறுவுவதே கட்டுரைசிரியரின் நோக்கமாகப் படுகிறது.உதாரணங்களெல்லாம் அப்படித்தான் உள்ளன .குறளிலும் (திருவள்ளுவமாலையிலும்), கம்பராமாயணத்திலும் வரும் உதாரணங்கள் அணுவைப்பிளக்கும் 20 ம் நூ.ஆ.அறிவியலுடன் எப்படிப்பொருந்துமென்று தெரியவில்லை.
அணுவைப்பற்றித் தெரிந்திருந்த அளவில் அது நமக்குப் பெருமை உடையதே.ஆனால் அதைத் தொடர்ந்து கொண்டு செலுத்தாத நம்மவரின் நிலையைப் பற்றி ய்வுசெய்தாலாவது இனிமேல் அவ்வாறு நிகழாமல் தடுக்க உதவும்.
     இன்றைக்குச் சரியாக 1000 ஆண்டுக்கு முன், சுற்றிலும் 50 கல் தொலைவில் மலை இல்லாத தஞ்சையில்,அவ்வளவு பெரிய ஒற்றைக்கல்லை, அவ்வளவு உயரத்திற்கு (Grane இல்லாத காலத்தில்)
ஏற்றிய தமிழனின் பரம்பரைக்கு-'தமிழில் பொறியியல் இல்லை,தமிழ் பொறியியலைக் கற்பிக்கும் ஆற்றல் உடையதில்லை'எனும் இழி நிலை எப்படி உண்டானது?
     5ஆள் உயரத்திற்கு மதில் சுவரும், தட்டினால் நாதமெழும் தூண்களும், ஒரே கல்லில் 25 சங்கிலிகளை (கல்லாலேயே ஆன சுமார் 1000 கண்ணிகளை), உலகில் வேறு எங்கும்- இன்றும், 'செய்யமுடியாது' என்று தட்டிக்கழிக்கும் கொடுங்கை(கல் கூரை)யும், செய்து பொறியியலையும் அழகியலையும் ஒன்றாக்கி அந்தக்காலத்திலேயே அற்புதங்கள் செய்த தமிழனுக்கு...
    என்றெல்லாம் கூறுவதை-கூறவேண்டியதை விட்டு,
   
    "உயிர்களின் வளர்ச்சியைப் பரிணாமப் படிகளாக உலகுக்கு அறிவித்த டார்வின் சித்தாந்தம் இந்துமத இதிகாசங்கள் பொருந்தியிருப்பதைக் காணலாம்" (பக்:53 இறுதிக்கு முந்திய பத்தி) என்பதும்,
   
    " இன்றைய விஞ்ஞானப்படி தண்ணீரில் ஹைட்ரஜன் வாயு இரண்டு பங்கும் பிராண வாயு ஒரு பங்கும் உண்டு (H20)என்கிறோம்.இந்த உண்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது"(பக்:55 கடைசி3வரிகள்)என்பதும்,
   
    "முதல் நேரடி  நேரடிஒளிபரப்பு மகாபாரதப்போர்,முதல் வருணனையாளர் சஞ்சயன்"என்று(பக்:58 ஈற்றயல் பத்தி) கிண்டலாக அல்ல,'serious tone' வரும்படியாகவே கூறுவதும்,
    எந்த நோக்கத்தில் என்பது புரிந்தவர்க்குப் புரியும்.
    புரியாதவர்(plain paper)களைக் குழப்பும் வேலை எதற்கு?
   ( நம்ம தம்பி சுலைமானின் கிண்டல் பாணியில சொல்றதுன்னா, டி.வி. கம்பெனிகிட்ட  நம்ப மகாபாரதம் எழுதுன கவிஞர் சார்புல 'கண்டுபிடிப்புரிமை'(patent right) கேட்கலாமோ?)
     சிலப்பதிகார வாழ்த்துப் பாடலும்,பெரியபுராணப் பாடல்களும் (எழுத்துப் பிழை அதிகமில்லாத மலரில்) பற்பல பிழைகளோடு வந்திருப்பதும் வருத்தமளிக்கிறது.
    "கொங்கு தேர் வாழ்க்கை" எனும் குறுந்தொகைப் பாடல்,மற்றும் கண்ணப்பர் பற்றிய பெரிய புராணக்கதை போன்ற வரலாற்றாசிரியர் யாரும் ஒத்துக்கொள்ளாத புராணக்கதைகளை அறிவியல் பார்வையுடன் பார்ப்பதாக கட்டுரை ஆசிரியர் கூறினாலும், அவை புராணப் பார்வையுடனே இங்கு கையாளப்பட்டிருப்பதும் கண்கூடு.
    கவிஞர்,கலைஞர்களுக்கு எப்போதும் எந்த நாட்டிலும் 'அதீத'கற்பனை செய்து எழுத உரிமை உண்டு. அப்படியே எழுதியும் வருகிறார்கள்
.இதெல்லாம் அந்தந்தப் படைப்பாளிகளின் அற்புத-அழகு-கற்பனை என்று எடுத்துக்கொள வேண்டுமேயன்றி, அதில் 'அப்போதே எங்களிடம் அறிவியல் பார்வை இருந்தது' என்னும் வம்படிவாதம் இன்றைய வளர்ச்சிக்கு உதவுமா என்ன?.
    இதைக்காணும் மேலை நாட்டு விஞ்ஞானி யாராவது,"சரி சரி, வச்சுக்கோ, இப்ப என்ன பண்றாப்ல?" என்று கேட்டால் நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்?
    இந்தியா நம் பெருமைக்குரிய நாடு.
    இதன் வளர்ச்சிக்கு எல்லாத் தத்துவங்களும்,எத்தனையோ சித்த்ர்களும், ஏராளமான தியாகிகளும்,(இந்து-முஸ்லிம்-கிறிஸ்துவர் போன்ற) எண்ணற்ற மதவாதிகளும் பங்களித்திருக்கிறார்கள் என்பதையே ஒத்துக்கொள்ளத் தயங்கும் மத அடிப்படைவாதிகளால்தானே 
இன்று, காந்தி மகான் பிறந்த மண்ணே சாந்தியின்றித் தவிக்கிறது?
   "எல்லாம் எங்கள் வேதத்தில் இருக்கிறது"-
   என்று கூவுவோரைக் கேட்கிறேன்,
   "சதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்"என்றதும் உங்கள் வேதம்தானே?
நான்கு வேதத்தையும் மட்டுமல்ல-நான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்தேன்' என்று சொல்லும் சாதிவெறிபிடித்த மதவழியில் இந்த நாடே சுடுகாடாய்ப் போய்விடும் எனில்,அந்த மதமே எனக்கு வேண்டாம் என்று சொல்லும் ஒடுக்கப் பட்டவரைப் பற்றி உங்கள் வேதம் என்ன சொல்கிறது?
       அனைத்து உலக மனிதர் களையும்'சகோதரர்'என்று அன்பால் அணைத்துக்கொண்ட
விவேகானந்தரின் அன்பு மதம்தான் இன்றைய தேவையே அன்றி, அடுத்தவன் பேரைக்கேட்டு அடி, அவன் வீட்டை இடி எனும், வம்பு மதமல்ல என்பது என் தாழ்மையான கருத்து.
     "எனவே,பழைய நம் நாட்டை-மொழியை-பண்பாட்டைப் பற்றிய ஆய்வு எதுவாயினும் அது இன்றைய நம் வளர்ச்ச்சிக்கு உதவுவதாக ,உண்மையிலேயே அறிவியல் பார்வை உடையதாக இருக்கிறதா? என்று கண்காணிப்பது தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனின் கடமை"
     என்று பண்டித ஜவாஹர்லால் நேரு அல்ல...
இந்த புதுக்கோட்டை நா.முத்து நிலவன்தான் சொல்கிறேன்.
இல்லாவிடில்,எரிகிற கொள்ளியில்(அல்லது,குஜராத்தில்)மேலும் எண்ணெய் (அல்லது,மதவெறி)ஊற்றுகிற வேலையில்தான் போய் முடியும் என்கிற எச்சரிக்கையோடுதான் சொல்கிறேன்.
    இலக்கியம், நாடு-மொழி-இனம் கடந்து,
    இதயங்களைஇணைக்கட்டும்.

நன்றி,வணக்கம்.   
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை
-------------------------------------------------------------------------------------------------
மலர் தொகுப்பாளரும் அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பின் செயலாளருமான திரு ஆசீப் மீரான் அவர்களுக்கு நா.முத்துநிலவன் எழுதிய நூல் திறனாய்வுக் கடிதம் - 2003
-------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக